கையைப் பிடியுங்கோ கண்ணகி.பதின்மத்தில் சில அலைகளை அலையவிட்டதுக்கு.போதும் அடங்கு(யாரோ திட்டுகினம் என்னை).அழ அழத்தான் என்ர நினைவுகள் எண்டு !
அப்ப முந்தி நடந்ததெல்லாம் நடக்கிறதெல்லாம் நல்லதுக்கு எண்டுதான் சந்தோஷமாய்த் திரிஞ்சம்.எதுக்கும் சும்மா சும்மா அழுதம்.விசருகள் போலச் சிரிப்பம் தேவையில்லாம.அடம் பிடிப்பம்.அதுவும்...குதிச்சு குதிச்செல்லோ அழுவம்.பாவம் நிலத்துக்கு நோகும் எண்டு ஆர் நினைச்சது.
ஜானகி அத்தை வரேக்க ஏதாச்சும் வாங்க்கிக்கொண்டு வராட்டா அண்டைக்குச் சரி.பாவம் 50 சதத்துக்கொண்டாலும் கச்சான் கடலையோடதான் வருவா.பள்ளிப் பாடமெல்லாம் முடிச்சப்பிறகு விளையாட விடாட்டித் துலைஞ்சுது.அப்பா லீவில வீட்ட வந்து நிக்கேக்க படத்துக்குக் கூட்டிக்கொண்டு போகாட்டி,கொத்து ரொட்டி போட்டுத் தராட்டி,மலாயன் கபே ல வடையும் சம்பலும் வாங்கித் தராட்டி கையைக் காலை அடிச்சுக் குழறி.என்னவெல்லாம் செய்திருப்பம்.ஆனாக் கொஞ்ச நேரம்தான்.எதுவும் மனசில நிலையாய் நிண்டதில்ல.அந்த நேரம் மட்டும்தான்.அடுத்த அடம் பிடிக்கத் தொடங்க முதல் அடம் மறந்து போகும்.நித்திரை கொண்டு எழும்பிட்டா எல்லாமே போய்டும்.கவலையெண்டு தெரியாமலே இருந்தது.மாமரக் குரங்குகளாய் பனம்பாத்தி அணில்களாய் அரிசிமூட்டை எலிகளாய்....
எப்பாச்சும் பிச்சைக்காரரைக் கண்டா இல்லாட்டி அம்மா அப்பா இல்லாதவையளைக் கண்டா மட்டும் ஒரு மாதிரி இருக்கும்.அப்பிடி எங்காலும் யாராவது எங்கயாச்சும் ஒருசிலர்தான் இருப்பினம்.எங்கட பக்கத்துவீட்டு தங்கமணி அக்காக்கு கௌரி அக்காக்கு கணேசண்ணைக்கு அப்பா அம்மா இல்ல.அவையளுக்கு அவையளே அப்பா அம்மாவா இருப்பினம்.ஆனாலும் சந்தோஷமா இருப்பினம்.எங்கட அம்மா பின்னேரங்களில போய்க் கொஞ்சநேரம் இருந்து கதைச்சிட்டு வருவா.நானும் கணேசண்ணை இல்லாட்டிப் போவன்.ம்ம்ம் ..இப்பிடித்தான் நாங்கள் எல்லாரும் ஊர்ல சந்தோஷமா இருப்பம்.எங்கட கிணறுகூட பங்குக் கிணறுதான். அங்கால தங்கமணி அக்கா குளிக்க நான் இஞ்சால குளிப்பன்.
எப்பவும் நிரந்தரமான கவலைகள் எங்களைச் சுத்தி இருக்கேல்ல.சமூகச் சகதி சிலசமயம் யோசிக்க வைக்கும்.கோயிலிக்குள் போகவிடாததுக்கு,வெளில நிப்பாட்டி கிளாஸில தேத்தண்ணி குடுத்தா,திருப்பி அடிக்கமாட்டினம் எண்டு தெரிஞ்சுகொண்டு அடிக்கிற ஆக்களைக் கண்டா அதுவும் எனக்கு பெஞ்சாதியை(மனைவி) அடிக்கிற புருஷனைக் கண்டா நல்லாக் கோவம் வரும் என்ன செய்ய.
இப்பிடி இப்பிடி சின்னச் சின்னதாத்தான் கவலை இருக்கும்.எல்லாம் நல்லாத்தான் நடந்துகொண்டிருந்தது.நடக்குது எண்டும் நம்பிக்கொண்டுதான் வாழ்க்கையின்ர பாரம் தெரியாம கிணத்துக் கட்டில இருந்து குயிலுக்கு எதிர்க்குரல் குடுத்துக்கொண்டிருந்தம்.
யாருமே கத்திக் குழறியழமாட்டினம்.அப்பிடி அழுதா ஒண்டு அங்க யாரோ செத்திட்டினம் எண்டுதான் அர்த்தம்.அதுவும் எப்பாலும்தானே எங்காலும் ஒரு செத்தவீடு நடக்கும். இல்லாட்டிக்கு நல்லாக் குடிச்சுப்போடு சித்தப்பா சித்திக்கு அடிப்பார்.அப்ப ஒருக்கா நாங்கள் குழறுவம்.
ஒருநாள் இப்பிடித்தான் என்னையும் தம்பியையும் தங்கச்சியையும் படிக்கச் சொல்லிப்போட்டு அம்மா படுத்திருக்க நாங்கள் பேப்பரில என்னவோ ஒரு விளையாட்டு.பேரும் மறந்திட்டன். மிருகங்களின்ர பேர் எழுதியிருக்கும்.அந்த விளையாட்டுக்கு கதைக்கத் தேவேல்ல. சத்தம்போடாம விளையாடலாம்.எண்டாலும் அம்மாட்ட பிடிபட்டுப்போனம்.
பிறகென்ன அவ்வளவும்தான்.அம்மா எங்கள வெளிவிறாந்தைல விட்டுப்போட்டு அவ உள்ளுக்குள்ள படுத்திட்டா.எனக்கெண்டாப் பேய்ப்பயம்.ஒருத்தரையொருத்தர் நீதான் விளயாடலாம் எண்டு சொன்னனீ சொல்லிச் சொல்லி அழ ,அதுக்கும் பெரிசா
அழக்கூடாதெண்டு பயம்.ஏனெண்டா அம்மா அடிப்பா.நிலவு வெளிச்சத்தில வேலிப் பூவரசு அசைய நான் குழற வெளிக்கிடுவன்.அம்மா "என்ன அங்க" எண்டுவா.அடக்கிப்போடுவன்.
இப்பிடி 2 மணித்தியாலம் ஒருமாதிரி அழுதழுது போயிருக்கும்.நேரம் 10 மணியாகும்போல. சித்தப்பா நல்லா தண்ணியடிச்சிட்டு வந்து சித்தியை அடிக்க ஆனந்தாவும் ஜெயாவும் குழற சித்தி வந்து எங்கட மேல்கட்டுக் கட்டாத கிணத்துக்குள்ள விழ சித்தப்பாவும் சேர்ந்து விழ மாரிமழை பெய்ஞ்சு முக்கால்கிணற்றில முட்டின தண்ணி.ஐயோ....கடவுளே அப்ப குழறி அழுதம்.
ஆனா அந்தக்கையோட நாங்கள் மூன்று பேரும் ஓடிப்போய் படுத்திட்டமெல்லோ.ஆனாலும் அடுத்தநாள் பெரி....ய கடிதம் ஒண்டு அம்மா அப்பாவுக்கு எழுதினவ.பிறகு அப்பா வந்து ஒண்டுமே கதைக்கேல்ல.
நான் ஊர்ல இருக்கிற வரைக்கும் இப்பிடி எங்கயாவது எப்பவாவதுதான் குழறிக் கேக்கும்.இன்னொருநாள் குழறி அழுதவ இந்திரா அக்கா.அங்கதான் ராசன்ர அம்மம்மா இருந்தவ.இந்திரா அக்கான்ர அம்மா.அவவுக்கு வடிவாக் கண்தெரியாது பாவம் அவ.
ஆனா இவன் ராசன் செல்லமா விளையாட்டா அவவோட எப்பவும் சொறிஞ்சபடிதான் இருப்பான்.அவ வெளிலதான் படுப்பா.கண் தெரியாம அவ பட்ட கஸ்டம் நிறைய.அப்ப அது விளங்கேல்ல.இப்ப அவ இருந்தா அவவுக்கு நானே எவ்வளவு உதவி செய்திருப்பன்.
இவன் ராசன் அவவின்ர வெத்திலை பைக்குள்ள பூவரசமிலையை வச்சிடுவான் வெத்திலையை எடுத்துப்போட்டு.அவ ஒரு உரல் வச்சிருக்கிறா.தாளம் பிசகாம இடிப்பா வெத்திலை.அவ வெத்திலையைக் கிழிச்சு எடுத்து சுண்ணாம்பு பூசி எல்லிப்போல(மிக மிகச் சிறிது) போயிலை எடுத்து இடிக்கிறதை நான் ரசிச்சிருக்கிறன்.
அப்பிடி இடிச்சிட்டுப் போடேக்க அவவுக்குத் தெரியும்.இவன் தான் பூவரசமிலையை வச்சிட்டான் எண்டு.ராசன் நிண்டு நக்கலடிக்க அவன்ர பக்கம் உரலைத் தூக்கியெறிஞ்சு "சனியன் பிடிச்சவன்...கோதாரில போறவன்...பாழ்பட்டுப் போவான்.அடியேய் இந்திரா உந்தப் பெடியைப் பார்"எண்டு கத்துவா.அவவிட்டுக் கலைப்பா.அவன் எங்க ஓடுற ஓட்டத்தில நாய்க்கும் உதைஞ்சுபோட்டு ஓடுவான்.அதுவும் சேர்ந்து குழறிக்கொண்டு ஓடும்.
அவ பிறகு சுகமில்லாம படுத்திட்டா.அப்ப அவன் ராசன் தானாவே வெத்திலை இடிச்சுத் தரட்டோ அம்மம்மா எண்டு கேட்டு இடுச்சுக் குடுப்பான்.வெளிக்குப் போக கை பிடிச்சுக் கூட்டிப் போவான்.எச்சில் துப்ப சிரட்டைக்க மண் போட்டு எடுத்துக் குடுப்பான்.அவ அப்ப எல்லாம் "என்ர ராசா நீ நல்லா இருக்கோணும்.குழப்படி செய்யாம அம்மாக்கு உதவியா இருக்கோணும்"எண்டு சொல்லுவா.பிறகு கொஞ்ச நாளேல அவையளின்ர வீட்லயும் குழறிக் கேட்டது ஒருநாள்.அம்மம்மா செத்துப்போனா.
அதுக்குப் பிறகு இரவெண்டாலே பயம்.பேய் எண்டா இரவில மட்டும்தானோ எண்டு எனக்குள்ள இப்பவும் கேள்வி.அதுவும் செத்தவீடு நடந்தபிறகுதானோ!அம்மம்மா செத்தே இருக்க வேண்டாம் போல இருக்கு எண்டான் ராசன்.நானும் அழுதிட்டன்.அம்மம்மாவுக்கு செலவோ அந்தியேட்டியோ எண்டு எல்லாம் படைச்சினம்.ராசன் தான் வெத்திலை இடிச்சு வச்சவன்.நானும் வெத்திலைக்கு சுண்ணாம்பு பூசிக் குடுத்தனான்.எண்டாலும் அந்தச் செத்தவீட்டு மணம் இன்னும் போகாம இருக்கெண்டு பயம் பயமா வரும்.
அதுக்குப் பிறகு நான் இருக்கேக்க யாரும் பெரிசாக் குழறேல்ல.செத்தவீடும் நடக்கேல்ல. அம்மா சொல்றா எல்லா வீடுகளிலயும் இப்போ செத்தவீடாம்.ஆனா ஆரும் குழறி அழமாட்டினமாம்.ஏனெண்டா எப்பவும் எல்லா ஆக்களும் சாகினமாம்.அதனால பேய்ப் பயமும் இல்லையாம்.(தொடர விருப்பமில்லை)
நான் இன்னும் பதின்ம ஞாபகங்களை கிளறக் கேக்கிறது கலா,ஸ்ரீராம்,
தமிழுதயம்,அரங்கப்பெருமாள்.ஆறுதலா எழுதுங்கோ.நான் ஊருக்குப் போய் வந்து பாக்கிறன்.கலா என்ர மெயிலுக்கு அனுப்புங்கோ.நான் பதிவில போடுறன் விருப்பமெண்டா.சரியோ !
இது என் யாழ்ப்பாண வழக்கு மொழியில எழுதியிருக்கேன்.பின்னூட்டங்கள் வராமலிருக்கிறதைப் பார்த்தா என்ன சொல்லியிருக்கேன்னு புரியலயாக்கும்.
நண்பர்களே...புரியாட்டி சொல்லிடுங்க !
ஹேமா(சுவிஸ்)