அடர்காடு.மரங்களின் கிளைகளைக் காற்றுத் தடவும் சத்தமின்றி வேறு எதுமற்ற பேரமைதி. சொல்லப்போனால் செத்த தெரு அது.பூச்சி புழுக்களுக்கும் போரின் அழுத்தமும் அவஸ்தையும் இருக்குமோ.காக்கை குருவிகள் கூட புலம் பெயர்ந்திருக்கலாம்.
அங்கு அமைதி கிழித்து ,ஆனாலும் அமைதியாகவே சத்தமில்லாமல் பரபரப்பாக எதையோ செய்துகொண்டிருந்தார்கள் குமரனும் ஈழவனும்.ஈழவன் தெருவுக்கும் பற்றைக்குமாய் பறந்து பறந்து மிதிவெடி வைக்கும் வேலையைத் துரிதமாய் செய்து முடித்துவிட்டு பற்றை பிரித்து பாம்பாய் ஊர்ந்து வந்து சேர்ந்தான் தனக்காய் காவல் காத்துக்கொண்டிருந்த குமரன் அருகில்.
"களைச்சுப் போய்ட்டாயடா மச்சான்.சரியா வேர்க்குது.இந்தா தண்ணி குடி"கொடுக்கிறான் குமரன்.
"பரவாயில்லையடா.பாரன் உவையளை.தங்கட சென்றிக்குப் பக்கதிலயே இப்பிடி மிதிவெடி வெடிக்கும் எண்டு கனவுகூடக் காணாயினம்.சனங்களைக் கொன்று குவிச்சுக் கொண்டிருக்கிறாங்கள் படுபாவியள்.இவங்கட உடம்பில ஒண்டும் மிஞ்சக்கூடாது.எங்கட உயிரை மதிக்காதவங்களுக்கு ஏன் நாங்கள் மட்டும் மதிக்கவேணும்.எங்கட எத்தினை சனங்கள் ஊனமாய்ப் போச்சுதுகள்.படிப்பில்ல பாடமில்லையெண்டு எங்கட பிள்ளையள் காடுவாசாரியாப் போகுதுகள்.போடா....போ.இதில எங்கட உயிர் போனாலும் பரவாயில்லை."
மிதிவெடிகள் - ஆக்கிரமிப்பாளர்களின் அடிமனதைக் கலக்கிடும் போராளிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம்.
டேய்...மச்சான் ஏதாலும் சிலமன்(சத்தம்)கேக்குதோ ?வா போவம்.இனி இதில நிக்க வேணாம்.
வா....வா போயிடுவம்.மழையும் வாறமாதிரிக் கிடக்கு.
அண்ணாந்து பார்த்தான் ஈழவன்.நிலவின் வெளிச்சத்தை மழை மேகம் மறைக்க முயற்சிக்க, முண்டியடித்து தன் வெளிச்சத்தை ஓரளவாவது கொடுப்பேன் என்று அடம் பிடித்ததாக நிலவு மறையாமல் வட்டமாய் தெரிந்துகொண்டிருக்கிறது.ஆனால் இன்னும் முழு நிலவாய் பௌர்ணமியாய் இல்லை.முகில் கூட்டங்கள் இறுக்கிய கைகளாய் ஒன்றையொன்று கெட்டியாய்ப் பிணைந்திருந்தது.எனவே மழை அடர்த்தியாய் அடித்து ஊற்றப்போவதில்லை இப்போதைக்கு.
இருவரும் சற்று வேகமாய் நடந்து பிறகு அமைதியாய் நடக்கத்தொடங்கினர்.
டேய் இனி இவ்விடத்திலயே படுத்திட்டுப் போவம்.அறிவிச்சுவிடு ஒருக்கா.
சரியே.
ம்ம்....சரி எனக்கும் அசதியாக் கிடக்கு என்றான் குமரன்.
அசந்து போனார்கள் அந்தக் குளக்கரையிலேயே இருவரும்.
விடியலின் இனிய இசைகள் மெதுமெதுவாய் கருக்கல் மேடையில் அரங்கேறத் தொடங்கியது. புள்ளினங்கள் பூக்கள் பூக்கும் அழகைத் தாங்கள் மட்டுமே கண்டதாய் தம்பட்டம் அடிகிறதோ கதம்பக் குரலில்.அவ்வளவு மகிழ்ச்சி குரலில்.குளத்தின் அமைதி கலைக்கும் கொக்குகள் படபடவென எங்கோ ஒருமித்துப் பறந்தபடி.
ஈழவன் உசுப்பினான் குமரனை."டேய் மச்சான் எப்பிடித்தான் இப்பிடி நித்திரை கொள்ளுவியோ.எனக்கெண்டா வராதடா.கனவு வந்து வந்து நிம்மதியா படுக்கேலாதடா.அது எப்ப வீட்ல இருந்து வந்தனோ அப்பவே போச்சு.எழும்பு போவம்.பெடியள் பாத்த்துக்கொண்டெல்லே இருப்பாங்கள்."
அது ஈழவன் பிறந்து வளர்ந்த கிராமம்.தன் மண்ணை ரசித்தபடியே நடக்கிறான் ஈழவன். எங்காவது ஒன்றிரண்டு மனித அசைவுகள் தெரிகின்றன.அதுவும் அவசர அவசரமாய்த்தான். அமைதி தொலைத்து அழவே பிறந்த தமிழராய் ஆக்கப்பட்டு கனகாலமாச்சு.
வயசு 18-19 தான் வரும் ஈழவனுக்கு.நம்ப மறுக்கும் உடல்வாகு.O/L படிக்கேக்கையே ஏதோ மன உறுதியோட வந்திட்டான் வீட்டை விட்டு.கடின உழைப்பு.காய்த்த கைகள்.நடு நடுவில கவிதையும் வரும் அவனுக்கு.
அரசியல்வாதி வாறார்
புர்ர்ர்ர்ர் எண்டு காரில
ஏனெண்டு கேக்கிறாய்
பெற்றோல் விலை
ஏறினதைக் கண்டிக்கவாம் !
அம்மா வயோதிபர் மடத்தில
வீட்டு மாடியில
வெளிநாட்டு மீனோட
பேசிக்கொண்டிருக்கிறாராம் மகன்!
ஆனால் பார்வையில் ஒரு தீர்க்கம் கூர்மை.மறைந்தும் மறையாமலும் !
சயனைட்குப்பி...சட்டைக்குள்.இப்போகூட தொட்டுப் பார்த்துக்கொள்கிறான் ஈழவன்.சிரிக்கிறான் குமரன்.
ஏண்டா தொட்டுப் பாக்கிறாய்.நீ விட்டாலும் அது விட்டுப் போகாதடா மச்சான் இனி உன்னை.
சயனைட் - அது அவர்களின் ஆன்மா.உன்னத ஆயுதம்.உயிர் கொடுத்து உத்வேகம் ஊட்டித் தரும் வீர மறவர்களின் தோழன்.
தன் ஊரை ரசித்தபடி நடந்தபடி ஈழவனைக் கடிவாளமிட்டுத் தடுக்கிறது ஒரு நாயின் குரைப்பும் வால் ஆட்டலும்.ஓ....அது அவன் வளர்ந்த வீடு.அவன் வளர்த்த நாய்.அதற்குகூட ஈழவன் என்றே பெயர் வைத்தான்."டேய் எப்பிடியடா உன்னையும் நாயையும் ஈழவன் எண்டு கூப்பிட" என்று அம்மா கூடப் பகிடி பண்ணியிருக்கிறாள்."ஏன் அப்பா சிலநேரம் "ராசாத்தி" எண்டு கூப்பிடுறார்.அது சித்தியின்ர பேரெல்லோ" எண்டு ....வாழ்வின் குடும்ப ஊட்டலில் எவ்வளவு சந்தோஷங்கள்.இழந்தேனா இல்லை இன்னொன்றை இழக்காமல் இருப்பதற்காக ஆயுதம் ஏந்தினேனா!
வீட்டு ஞாபகம் தொண்டை அடைத்து வர கூடவே அம்மாவின் தங்கை அண்ணாவின் ஞாபகமும்.தன்னைப் பெயர் சொல்லாமல் "ராசா" என்றழைத்தபடி மெலிந்த கையால் தலை தடவி உணவு ஊட்டிவிடும் அன்பு கண்ணுக்குள் நிறைய...
குமரன்...அம்மாவைப் பாத்துக் கனகாலமாச்சு.ஒரு சொட்டு நேரம்தான் 5 நிமிஷம் பாத்திட்டு வந்திடுறன்.இதில கவனமா நிண்டு பாத்துக்கொள்ளு.இப்ப வந்திடுவன்.
குமரனைப் பற்றிச் சொல்வதென்றால் ஈழவனின் சிறுவயது சிநேகம்.நாட்டுப் பற்றுள்ள ஆதரவாளன்.தூரத்து உறவினனும் கூட.நம்பிக்கை மிகுந்தவன்.
கருக்குமட்டைப் படலை தள்ளி வீட்டின் முற்றத்தில் கால் வைக்கவே வாழை மரத்தடியில் பாத்திரங்களைச் சாம்பல் போட்டுத் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா "என்ர ராசா" என்றபடி ஓடி வந்து அணைத்துக்கொண்டு "என்ர செல்லம் எவ்வளவு நாளாச்சடா.எப்பிடியணை இருக்கிற" என்றபடி அழத்தொடங்கினாள்.
இதுக்குத்தான் நான் இங்க வாறேல்ல.வந்தா சந்தோஷமா ரெண்டு வார்த்தை பேசிப்போட்டு எல்லாரையும் பாத்திட்டுப் போகவேணும்.
இது ....!
சரி....சரி நான் அழேல்ல.இரு தேத்தண்ணி தாறன் குடி.
இல்லையம்மா நான் ஒரு அவசர அலுவலாய் வந்தனான்.உதால போகேக்க உங்களையும் பாத்திட்டுப் போகலாமெண்டுதான் வந்தனான்.
"இல்லையப்பு என்ர தேத்தண்ணி நான் இன்னும் குடிக்கேல்ல.தங்கச்சியும் அண்ணாவும் குடிச்சிட்டுப் போய்ட்டினம்.நான் பிறகு குடிக்கிறன்.இந்தா இதைக் குடி" என்று ஒரு பித்தளைப் பேணியை தன் முந்தானைத் தலைப்பால் துடைத்தபடி கொண்டு வந்தாள் அம்மா.
அம்மா....உவன் குமரன் வாசலில நிக்கிறான்.அவனுக்கும் குடுங்கோ.என்றபடி அண்ணா, தங்கையைத் தேடத் தொடங்கினான்.
ஈழவன் அப்பா சிறு வயதிலேயே அப்பாவைப் பலி கொடுத்தவன்.அதற்கும் எங்கள் நாட்டுப் பிரச்சனைதான் காரணம்.ஈழவன் இருக்கும் இடத்துக்கும் நகர வைத்தியசாலைக்கும் 10-15 கி.மீ தொலைவு.போவதற்குத் தடை.பாஸ் கிடைக்கவில்லை.பாஸ் கேட்டு ஓடித் திரியவும் அப்பா உயிர் பிரியவும் சரியாக இருந்தது.அப்போ ஈழவனுக்கு 10 வயதுதான் இருக்கலாம்.அண்ணா வேலை தேடிப் போனதாகவும் ,தங்கை பள்ளி போனதாகவும் சொன்னாள் அம்மா.ஏனம்மா படிப்பு ஒரு கேடோ.இருக்கிற நிலைமைல என்று புறுபுறுத்தான் ஈழவன்.
எந்தப் போராட்ட நாடுகளிலும் மனிதத்தை மதிப்பவன் பெரிதும் போராளிகள்தான்.பாசம் நீதி மனிதாபிமானம் நிறைந்தவர்கள்.அதனால்தான் நிராகரிப்பும் ஒதுக்குதலும் ஒவ்வாமையாகிறது. தங்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உயிரையே பணயம் வைத்து தங்களது சுதந்திரந்திற்காகப் போராடுகிறார்கள்.அவர்களும் குடும்பம் பாசம் எனும் பிணைப்புக்குள் கட்டுப்பட்டவர்கள்தான்.உறவுகளைப் பிரிந்து தங்கள் விடுதலைக்காக எத்தனை எத்தனை காலங்கள்...
தேநீர் கொடுக்கப் போன அம்மா கையோடு திரும்பி வந்தாள்.
எங்க தம்பி அங்க குமரன் இல்லையே...
அருகில அங்கால இஞ்சால பாத்தனீங்களே அம்மா...
நீங்க சரியாக் கவனிகேல்லப் போல.அவன் அங்கதான் நிப்பான்.
சரி....சரி நான் வாறன்.இன்னொரு நாளைக்கு வாறன்.தங்கச்சி வந்தோடன சொல்லுங்கோ நான் கேட்டனான் எண்டு.
ராசா ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போவனடா.இப்ப சமைச்சிடுவன்.எத்தினை காலமாச்சு என்ர கையால சாப்பிட்டு நீ !
இல்லையம்மா...எனக்கு நிறைய வேலை கிடக்கு.இதால போகேக்குள்ள உங்களையும் பாத்திட்டுப் போகலாமெண்டுதான் ஒரு எட்டு வந்தனான்.பேந்து ஒரு நாளைக்கு வருவன் தானே.
ஈழவன் சொல்லிக்கொண்டு நிற்கும்போதே அதிர்ந்து திரும்புகிறான்.
இரைச்சலுடன் இராணுவ வாகனம் நிற்கும் கணத்தில் பாரமான பதிவுகளின் கனத்தில் பூவரசச் சருகளின் இறப்பு. துள்ளியெழும்பிய ஈழவனால் சிந்தனை தொடுக்கமுன் கொல்லை,கிணற்றடி என்று பின்வேலி முன்வேலி செத்தைகளுக்கூடாக கண்ணுக்கெட்டிய திசையெல்லாம் இராணுவ நிறங்கள்.அவனையே குறி வைக்கும் ஆயுதங்களும் ஆழப் பார்வைகளும்.
குரனைக் காணேல்ல அம்மா சொன்னதின் விளைவு புரிந்தது ஈழவனுக்கு.
இனத்தையே இனம் காட்டிக்கோடுக்கும் கோடரிக் காம்பு அவனாய் இருந்திருக்கிறான் எங்களோடயே.
குமரன் நல்லதே செய்திருக்கிறாய் என் நண்பா....இனத் துரோகி.
தப்பி ஓடவோ ஒளியவோ இடமுமில்லை நேரமும் இல்லை.
ஓ...இங்கயும் ஒரு கொடுப்பனவு எனக்கு.தீர்மானித்துக் கொண்டே "அம்மா இங்க வாணை.சாப்பிடவெல்லே கேட்டனீங்க.இப்ப கொஞ்ச நேரம் உங்கட மடியில படுத்துக் கொள்றன்."
தாய்க்கு புரியவில்லை."வாடா அப்பு...ஏன் திடீரெண்டு இப்பிடி ஒரு ஆசை".
மடியில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அடங்கவும் இராணுவம் "டோய்"என்றபடி நெருங்கவும் தாயின் வயிற்றைக் கட்டிப்பிடித்தபடியே உடைந்த சயனைட் குப்பியின் ஒருபகுதி கயிற்றில் தொங்க வாயெல்லாம் நீலநிறத்துடன் சுதந்திர தாகத்துடன் மீளாத்துயிலில் ஈழவன்.
மாவீரனின் தாய் யாருக்கும் கிடைக்காத பாக்யத்துடன்...மாவீரன் இறந்தால் செய்தியும், அவனது உடையுமே காணக் கிடைக்கும் தாய்க்கு அந்த மாவீரனே முழுமையாக அவளது பெற்று வளர்த்த மடியிலேயே....
"ஐயோ....ஓ....என்ர ரா.....சா"
இராணும் எதிர்பார்க்காமல் அவர்களைக் கடந்து அந்த அபலைத் தாயின் ஓலம் ஊரை நிறைத்து அடங்குகிறது.ஆனால் சுதந்திர ஓலம் அடங்காமல் இன்னும் வீராவேசத்துடன் !
[போர் முடிந்த கட்டத்தில் ஏன் பழையதைக் கிளறுவதுபோல இப்படி ஒரு கதை என்று கேட்பது புரிகிறது தோழர்களே.இது என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.அடுத்து எதிர்காலத்திற்குச் சேமித்து வைக்கும் ஆவணங்களில் இப்படியான நிகழ்வுகளும் ஒன்று.அடுத்து "ஜெகா" வின் சயனைட் கவிதையும் இந்த நிகழ்வை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.இன்னும் ஒன்று...தமிழ்மணத்தில் சென்ற சில வாரங்களாக் ஈழத்துப் பதிவுகளுக்கு யாரோ மைனஸ் ஓட்டுப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் யாராயிருந்தாலும் நம்மவர்கள் நம் இனம்தானே.அவர்கள் செய்யும் இந்தச் செய்கையும் இந்த நிகழ்வை ஞாபகப்படுத்தி இதை எழுதத் தூண்டியது.இன்னும் போர்க்கால ஞாபகங்கள் இருக்கிறது.இடைக்கிடை வருவதில் தப்பில்லைத்தானே ?]
ஹேமா(சுவிஸ்)
33 comments:
//எந்தப் போராட்ட நாடுகளிலும் மனிதத்தை மதிப்பவன் பெரிதும் போராளிகள்தான்.பாசம் நீதி மனிதாபிமானம் நிறைந்தவர்கள்.அதனால்தான் நிராகரிப்பும் ஒதுக்குதலும் ஒவ்வாமையாகிறது. தங்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உயிரையே பணயம் வைத்து தங்களது சுதந்திரந்திற்காகப் போராடுகிறார்கள்.அவர்களும் குடும்பம் பாசம் எனும் பிணைப்புக்குள் கட்டுப்பட்டவர்கள்தான்.//
இந்த உண்மை “ஐ. நா.” குழுவில் உள்ள ஜந்துகளுக்கு புரியாமல் போனதுதான் இந் நூற்றாண்டின் மிகப்பெரிய வியப்பு.
ஹேமா,
குமரன் தமிழர்க் கடவுள். அவன் பெயரில் துரோகியின் பாத்திரம் படைத்திருப்பதில் உடன்பாடில்லை எனக்கு.
ஹேமா காட்டிக் கொடுக்கும் பழக்கம்
இன்று வந்ததில்லை ,அதற்கு முடிவும்
இல்லை.
நடந்ததை,நடந்துகொண்டிருப்பதை
பார்த்துக் ,கேட்டு இரணமாய் இருக்கும்
போது நீங்களும் மீட்டுச் சொல்கிறீர்கள்
மீண்டுமா???
அம்மா இதெல்லாம் படிக்கும் மனபக்குவம்
எனக்கு இல்லையம்மா
இருக்கும் கொஞ்ச மகிழ்சியும்
போய்விடும் ...
கொஞ்ச நேரம் மனம் கனத்துப் போனது...அந்த வீர மரணம் நிகழ்ந்த பின்னும்
அங்கு யாரையும் விட்டு வைத்திருக்க மாட்டான்கள்..
என்ன வாழ்வடா எம் தமிழனுக்கு ....
//குமரன் தமிழர்க் கடவுள். அவன் பெயரில் துரோகியின் பாத்திரம் படைத்திருப்பதில் உடன்பாடில்லை எனக்கு//
வக்கற்ற தமிழ் கடவுள்..... முதலில் உம் கடவுளை தூக்கி குப்பையில் போடுமையா..
உண்மை சம்பவம் என்ற போது வலி அதிகமாகிறது :(
இப்படி எத்தனையோ உண்மை சம்பவங்கள் அறியப்படாமல்
கோடரிக் காம்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
//இது என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.//
அங்கு நடப்பது எதுவும் பொய்யில்லையே !! உண்மைதானே நடந்தது . அதனாலயே இத்தனை துயரங்கள் துன்பங்கள்...உங்கள் எழுத்தின் வலி புரிகிறது.
ஹேமா...
”காடுவாசாரியா” என்றால் உருப்பிடாமல்... அப்படியோ ??
மிக கடினமான... விடயதை மிக இயல்பாய்... ஆனா உண்மைக்கதை என்னும் போது வலிக்கிறது.
சத்ரியன் said...
ஹேமா,
குமரன் தமிழர்க் கடவுள். அவன் பெயரில் துரோகியின் பாத்திரம் படைத்திருப்பதில் உடன்பாடில்லை எனக்கு.//
தீ யென்றால் சுட்டுவிடாது மாம்சு.
நீ மட்டும் கடுவுளை “அவன்” என்று எழுதலாமோ??? கேள்வி கேட்போமில்ல.....!!!
கொடுத்து வைத்த தாய்?!
தவறில்லை.... இது போன்றவற்றை எதுத்தில் பதிந்து விடுங்கள் ... ஹேமா.
ஈழத்தவர்கள் எழுதும் எல்லாக்கதைகளும் உண்மைதானே. கனத்துப்போச்சு
இந்த உண்மை “ஐ. நா.” குழுவில் உள்ள ஜந்துகளுக்கு புரியாமல் போனதுதான் இந் நூற்றாண்டின் மிகப்பெரிய வியப்பு.//
இதிலென்ன் வியப்பு.... நீ ஐ நா வைப்பற்றி தவறான எண்னத்தில் இருக்கிறாய்.... ஐ நா சில நாடுகளுக்கு சொம்பு தூக்கும் வேலையை சரியாத்தானெ செய்கிறது???
இழந்தேனா இல்லை இன்னொன்றை இழக்காமல் இருப்பதற்காக ஆயுதம் ஏந்தினேனா!//
மிக அழுத்துமான வரிகள்... ஹேமா.
உண்மைகள் சுடுவதோடு மட்டுமல்ல!வலிக்கவும் செய்கிறது.
மரணத்தை விட துரோகமே வலிக்கிறது.!
///அடுத்து எதிர்காலத்திற்குச் சேமித்து வைக்கும் ஆவணங்களில் இப்படியான நிகழ்வுகளும் ஒன்று///
இது மிகவும் அவசியமானது ...!
சரி ஹேமாவின் மெயில் ஐடி கிடைக்குமா..?
jewaa123@gmail.com
படிப்பதற்கே பதறுகிறது..
ஒரு பதிவில் வாசித்தேன். அதுவே இங்கு பின்னூட்டமாக. தமிழ்த்தாய் மாவிரர்களோடு, துரோகிகளையும் அல்லவா இரட்டை குழந்தையாக பெற்றுள்ளாள்.
மனம் நிறைய வலி ஹேமா.......
ஈழவிடுதலைப் போராட்டம் சிங்களவனால் அல்லது மற்றைய நாடுகளினால் ஒடுக்கப்படவில்லை.
தமிழனின் துரோகத்தினாலேயே ஒடுக்கப்பட்டது.
எமக்குள் இருக்கும் துரோகிகளை களையெடுத்தால் தானாகவே ஈழம் மலர்ந்துவிடும்.
எப்படி இருக்கீங்க ஹேமா
உண்மைச்சம்பவம் வலிக்கிறது.....மீண்டும் மீண்டும் கீறபட்டு ...வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல.
இப்பதிவாவது மக்களை ஒன்று சேர்க்கட்டும்...
மனம் வலிக்கச் செய்யும் நிகழ்வுகள். நட்பே காட்டிக் கொடுக்குமா?
மனம் வலிக்கிறது ஹேமா. வருந்துகிறேன்.
தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி என்பது நிஜம் தானே? காலங் கடந்தாலும் இப்போது ஒரு சில இடங்களில் இன்னமும் கோடரிக் காம்புகள் நடந்து கொண்டே இருக்கிறது.
அதெப்படி ஹேமா. உங்களாலை மட்டும் இப்படியொரு பதிவைக் கொடுக்க முடிகிறது?
ஹேமாவுக்குள்ளும் ஒரு கதாசிரியரா?
கண்ணீரால் நனைத்த கதை..ஒரு காவியம்.
சத்ரியா...நன்றி.முதலா ஓடி வந்து கருத்துச் சொன்னதுக்கும்.கருத்துகள் மாறுபடுமோ என்ற பயத்திலேயே பதிவிடக்கூடத் தயங்கியிருந்தேன்.
தோள் கொடுத்தான் தோழன்.
ஐ.நா ஜந்துன்னு நீங்களே சொல்லிப்போட்டீங்கள்.பிறகென்ன ஐந்தறிவெல்லோ அவையளுக்கு.தெரியாதோ !
குமரன் பெயர்....நீங்கள் சொன்னபிறகுதான் யோசிச்சேன்.ஆனா சாமிப் பெயர் வைச்சவையெல்லாம் சாமியாரோ !கீழ எல்லாம் வாங்கிக் கட்டியிருக்கிறியள் பாருங்கோ.
பதிலைச் சரியாச் சொல்லுங்கோ.
கலா...எனக்குத் தைரியம் சொல்லும் பயந்தாங்கோழியோ நீங்கள்.கலா நினைவுகளை அழிவுகளை மீட்கவேணும் எங்கள் துயரங்களை.
அப்போதான் இன்னும் இன்னும் கோவம் வரும்.எங்களால் என்ன செய்யமுடியும் என்கிற ஒரு ஓர்மம் வரும்.மகிழ்ச்சி போய் எவ்வளவோ காலமாச்சு.இப்போ சிரிக்கிறதெல்லாம் சும்மா...சும்மா.எங்கே சொல்லுங்கோ பார்ப்போம் மனம் விட்டுச் சிரிச்சு எவ்வளவு காலம் எண்டு !
செந்தில்...இன உணர்வுக்கு நன்றி தோழனே.நீங்கள் சொன்னது உண்மை.இது அந்த நிமிடச் சம்பவம்.அதைத் தொடரும் சம்பவங்களால் ஊரே அதிர்ந்திருக்கும்.இப்போ நினைத்தாலும் அந்தச் சத்தமும் பயமும் உடலைக் குறுகவைக்கும்.
ஜமால்...ஜீம்பூம்பா மாதிரி எங்கேயோ இருந்து அப்பப்போ ஓடி வந்திடுவீங்கள்.நன்றி ஆரம்ப காலம் தொட்ட அன்புக்கு.இன்றும் எப்பவும் தொடரும் கோடரிக் காம்புகள் எங்கள் இனத்தில் மட்டும்.
ஜெய்...உண்மையும் உணர்ந்ததும்தான் வலி அதிகமாய் இருக்கிறது.ஆறாத காயங்களோடுதான் அத்தனை தமிழனும்.
அரசு...காடுவாசாரி என்பது வேறு சொல்லிலிருந்து உருமாறியிருக்கோ தெரியவில்லை.வீட்டிலே திட்டும்போது உருப்படாமல்-படிப்பில்லாமல் காட்டுமிராண்டித்தனமாய் ஊர் சுற்றினால் திட்டுவார்கள்.
சரியாய்ச் சொன்னீங்க ஐ.நா செம்பு தூக்கும் பதவியையும் வச்சிருக்கெண்டு.உங்கட மாம்ஸ் க்கு சாமி பக்தி அதிகமோ !
சின்ன அம்மிணி...நன்றி நன்றி கையோடு கை சேர்த்தமைக்கு.
நடா...எத்தனை அவஸ்தைகள் எத்தனை அவதிகள் பட்டோம்.
இழப்பது என்பது சுலபமான ஒன்றல்ல.
அமுதன்(ஜீவன்)...நிச்சயம் அப்பபோ சில பதிவுகள் வரும்.பதியப்படும்.
பிரசன்னா...எங்கள் உணர்வை மதிக்கிறீர்கள்.அதுதான் இன உணர்வு.நன்றி தோழா.
தமிழ்...சரியாய் யாரோ சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்த்தாய்க்கு இரு பிள்ளைகளோ !ஒன்று மாவீரர்கள்.ஒன்று கருணா போல எட்டப்பர் கூட்டமோ !
சரிதான்.
ஜெயா...வலியோடு வாழப் பழகியிருக்கிறோம்.
ஆனால் மறந்தல்ல !
மாயாவி....சரியாகச் சொன்னீர்கள்.களைகளை எடுக்க எடுக்க இன்னும் இன்னும் என்பதாய் இருக்கிறதே.இவர்களெல்லாம் தானாய் உணர்ந்தாலே ஒழிய இல்லாமல் போக வழியில்லை.
மகா...ஹாய் ஹாய் ஹாய்.தோழி சுகம்தானே.அப்பப்போ மேவீயிடம் கேட்டுக்கொள்வேன்.படிப்பில் அதைக நேரம் எடுக்கிறீர்கள் என்று சொல்லுவார்.கண்டிப்பாய் எதிர்காலம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள் மகா.என்னை ஞாபகம் வச்சிருக்கிறதுக்கே சந்தோஷம்.
இப்பிடி அடிக்கடி தலை காட்டிப் போங்கோ !
நிலா....வலிதான்.வலிக்குது வேணாம் என்று விட்டுவிட
முடியாது தோழி.எங்கள் வலி.
நாங்கள்தான் மருந்தும்
போட வேணும்.
ரவி...என்னமோ நிறையக் கேள்வி எண்டெல்லாம் சொன்னமாதிரிக் கிடக்கு !ஒன்றாய் ஒற்றுமையாய் இருப்போமா நாம் !
ஸ்ரீராம்....இது ஒரு நிகழ்வு மட்டுமே.இதுபோல பல நட்பின் துரோகம் !
ஏன் கருணா செய்தது என்ன ?
அக்பர்...என் துன்பத்தில் பங்கெடுக்கிறீர்கள்.நன்றி.
கமல்...இது எழுத ஒரு பயிற்சி தேவையா எங்களுக்கு.சோகம்தானே சோறு போடுகிறதாய் தானே ஈழத்தவன் கதை !
ஓத்துக்கரேன்... இது ஹேமாவுக்கான வெற்றியாய்...
\\"மகா...ஹாய் ஹாய் ஹாய்.தோழி சுகம்தானே.அப்பப்போ மேவீயிடம் கேட்டுக்கொள்வேன்.படிப்பில் அதைக நேரம் எடுக்கிறீர்கள் என்று சொல்லுவார்.கண்டிப்பாய் எதிர்காலம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள் மகா.என்னை ஞாபகம் வச்சிருக்கிறதுக்கே சந்தோஷம்.
இப்பிடி அடிக்கடி தலை காட்டிப்
போங்கோ !"//
thanks hema. ungala marakka matten
\\"மகா...ஹாய் ஹாய் ஹாய்.தோழி சுகம்தானே.அப்பப்போ மேவீயிடம் கேட்டுக்கொள்வேன்.படிப்பில் அதைக நேரம் எடுக்கிறீர்கள் என்று சொல்லுவார்.கண்டிப்பாய் எதிர்காலம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள் மகா.என்னை ஞாபகம் வச்சிருக்கிறதுக்கே சந்தோஷம்.
இப்பிடி அடிக்கடி தலை காட்டிப்
போங்கோ !"//
thanks hema. ungala marakka matten
கோடரியின் பின்னிருந்து உதவும் காம்பு கோடரியையும் சமயத்தில் இரண்டில் ஒன்று பார்த்துவிடும். துரோகிகள் எல்லா இடங்களிலும் ஒன்று போலவே இருக்கிறார்கள் ஹேமா.கனத்தது மனது.தாமதித்து வாசித்தமைக்கு ஒரு வருத்தம்.
Post a Comment