Friday, March 11, 2011

சுற்றிக் கிடக்கும் சந்தோஷம்.

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா"என்று பாடினான் பாரதி.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம் அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?

நித்தமும் எத்தனை பேரை வேலை இடங்களில் தெருவில் என்று நிறையப்பேரைச் சந்திக்கிறோம்.எதிர்ப்படும் முகங்களில் குறைந்த அளவு சந்தோஷப் பூக்களே சிரிக்கிறது.மிகுதிப்பேர் எல்லாமே மிகுந்த சிந்தனையும் கேள்விகளும் கவலைகளும் நிரம்பிய முகமாய் அல்லவா தெ(தி)ரிகிறார்கள்.இதில் எல்லோருமே சந்தோஷத்தைத் தேடுபவர்களாக இருக்கிறார்களே தவிர பெரியவன் சின்னவன் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே தெரியவில்லை.எங்கே வாங்கலாம்.என்ன விலை.எங்கு தெரிகிறது.கிடைக்குமா சந்தோஷம்.

இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று.முல்லா வெளிச்சமான இடத்தில் எதையோ தேடிக் கொண்டு இருந்தார்.அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டு உதவ முன் வந்தார்."ஒரு தங்க நாணயம் தொலைந்துவிட்டது" என்றார் முல்லா.அவரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார்.தங்க நாணயம் கிடைக்கவில்லை.நண்பர் முல்லாவைக் கேட்டார்."சரியாகச் சொல்லுங்கள்.இங்கே தான் நாணயத்தைத் தொலைத்தீர்களா?"முல்லா சற்றுத் தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு "அங்கே தான்" என்றார்.நண்பருக்குக் கோபம் வந்து விட்டது."அட முட்டாளே.அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்!" என்று முல்லாவைத் திட்டினார்.பதிலுக்கு முல்லாவும் நண்பரைக் கோபித்துக் கொண்டார்."நீ தான் முட்டாள்.இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா...எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்.அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன் "சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

முட்டாள்த்தனமாக நமக்கு சிரிப்பைத் தந்திருந்தாலும் சந்தோஷத்தைத் தேடும் நாமும் அப்படித்தானே.மனதில் தொலைத்துவிட்டு மற்ற இடங்களில் தேடினால் எப்படி.நாட்டில் போர் என்று ஓடி வந்தோம் உங்களுக்குள் சிலர் பொருள்தேடி ஓடி வெளிநாடுகள் வந்திருப்பீர்கள்.கிடைத்ததா?என்னைக் கேட்டால் இல்லையென்பேன்.எல்லாம் இருந்தும் சந்தோஷம் என் தேசத்தில்தான்.அங்குதான் தொலைத்ததாய் மனம் சொல்கிறது.

சிலசமயங்களில் மனதோடு கதைத்தும் பார்த்திருக்கிறேன்.என்ன வேண்டும் உனக்கு ஏன் அலறுகிறாய்.என்ன கிடைத்தால் சந்தோஷப் பாடல் பாடுவாய்.கஸ்டப்பட்டு கொடுக்க முயற்சியும் செய்திருக்கிறேன்.கொடுத்தால் சிரிக்கிறது.சிரிப்பு சில நாட்களுக்கு மட்டுமே.ஒன்றை நிறைக்க மனம் மற்றொன்று கேட்கும்.அது மட்டும் கிடைத்து விட்டால்....என்று திரும்பவும் புலம்பும்.

அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான்.எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது சந்தோஷம்."மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும் நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது".

மனதிற்கு ரசாயன வித்தை தெரிகிறது.மகிழ்ச்சியாய் இருக்கவும் தெரியும்.அழுது குளறவும் தெரியும்.ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் விஞ்ஞான வித்தை தெரியும்.பிறகு ஏன் இந்த மனம் சோகமாகவே இருக்கிறது?ம்...காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறக்கிறோம்.தவறான செய்திகளை மனதிற்குக் கொடுத்து தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதைத் தவறாகவே வழி நடத்துக்றோம்.

அலமாரி நிறையச் சேலையும் நகையும் இருந்தால்,விடுமுறை என்றால் ஊர் சுற்றினால்,மூக்கு முட்டத் தண்ணியடித்தால்,உன்னால் முடியாவிட்டாலும் கடன் வாங்கியாவது வாழ்வை உயர்த்தினால்,உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழும் உச்சியில் இருந்தால்...இவையெல்லாம் முடியாவிட்டாலும் சந்தோஷமென்று தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால்....!

பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.

100% சந்தோஷம் தாங்கியபடி பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.பிரச்சனையைத் தீர்க்க முடிவதுதான் முடிவில் சந்தோஷம்.தடங்கலே இல்லாமல் கடந்திருக்கிறோமா வாழ்வை.தடங்கலைத் தாண்டி முன்னேறுவது முயற்சியின் சந்தோஷம்.எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும் எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும்தான் திருப்தியான சந்தோஷமாகும்.

எம் பார்வையிலும் வித்தியாசம் வேண்டும்.ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம்.மனமே காரணம்.ரோஜாவில் முள் என்றும்,முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம்.பாதிக்குவளை காலியாக இருக்கிறது என்றும்,பாதிக்குவளை நிறைந்திருக்கிறது என்று திருப்திப்பட்டும் கொள்ளலாம்.இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும் எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை எங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் சந்தோஷமே மகிழ்ச்சியே !

நெஞ்சே நெடுநாளாய்
ஒரு நெருடல் எனக்குள்.
என்னதான் நடந்தது உனக்கு
தனித்துவிடப்பட்ட
கடலின் இரைச்சலாய் ஒரே கூச்சல்.

எனக்கு மட்டுமே கேட்கிறது.
என்னதான் நேர்ந்தது
தனிமையின் வேதனையா
முதுமையின் அவதியா
எதுவானால்தான் என்ன
உனக்கு நீயேதான் துணை
பிறகென்ன தனிமை
நேற்றைய நினைவுகளே
இன்றைய எண்ணங்களின் பலம்.

தனிமைக்கு அது இனிமையே
தனிமை என்ன புதிதா உனக்கு
உறவாய்ப்போன ஒன்றுதானே
உறவென்று உன்னோடு
உள்ளிருந்து உறவாட
உனக்கென்று உயிர்வாழ
பிறந்தவர் யாருமில்லையே
தெரிந்திருந்தும் பிறகேன் அலறல்.

சல்லிக் கற்களைப்போல
தனித்துவிடப்பட்ட குயிலின் சோகம்போல
நாளெல்லாம் பொழுதெல்லாம்
பெரும்குரலெடுத்து ஒப்பாரியாய்
உன் ஓலம் ஓயாமல் ஒலிக்கிறது.

எதைக் கொண்டு வந்தாய்
எதை இழந்தாய்
எதை உனதென்பாய்
எல்லாம் இரவல்தானே
உறவுகளும் இதன்வழியே
யாரோடு இணைந்திருந்தாய்
யாரைவிட்டுப் பிரித்தெடுக்கப்பட்டாய்
பயப்படுகிறாய் வாழ்க்கையைப் பார்த்து
அதனாலேயே அழுகிறாய்.

வேதனைப்படுகிறாய் விரக்தியடைகிறாய்
இரத்தம் சொட்டச் சொட்ட
உன்னைப் பிய்த்து
பதனிட்டுப் பார்த்தனரோ
மௌனத்தின் அம்புகளால்
துளைத்தெடுத்தனரோ
இல்லையென்றால்
சொற்களால் கொன்றனரோ.

சொல்லியழு நெஞ்சே
பாரம் கொஞ்சம் குறையுமே
அப்பா அம்மா அண்ணா அக்கா
பின்பு கணவன் குழந்தைகள் யார்
இவர்கள் தங்கிப் போன வழிப்போக்கரே
உனக்கென்று உன் ஊணோடு உயிரோடு
உள்ளுருகி இன்பத்திலும் துன்பத்திலும்
அன்பு தர யார் என்று அரற்றுகிறாயா
அழு நன்றாய் அழு...
அழ உனக்கு நிறையச் சுதந்திரம் உண்டு
ஆனால் சொல்லியழு.
உன் இதயத்து நரம்பை அறுத்து
வீணைக்குத் தந்தியாக்கிப்
பின் வாசிக்காமல் போனது யார் சொல்லியழு.

நன்மையோ தீமையோ விதி என்ற பெயராலே
எமக்கு வேட்டு வைக்கும் காலமே
கொஞ்சம் நின்று போ.
இதயத்து நரம்புகளை அறுத்த பின்னும்
தன் உறவு தேடியலையும்
நெஞ்சின் சோகம் கேள்.
அகிலத்தின் அத்தனை அவலங்களின்
ஓலங்களை கேட்டலையும் உனக்கு
இந்த நெஞ்சின் நீள் அழுகையும் கேட்கட்டுமே!!!
(2000/01/07)

எட்டிப் பறந்த சந்தோஷத்தை எட்டிப்பிடிக்க ஒற்றை வழி !

Tuesday, March 01, 2011

ததரினன தாத்தா.

ஐந்து நாட்கள் தொடர் லீவு.வெளில குளிர்ப்பூக்களின் சிதறல்.கணணியும் இந்த நேரம் பாத்து பிச்சுக்கொண்டு போய்ட்டுது.புதுசு புதுசாக் கிடக்கு.இன்னும் சரியாக் கையாளவோ அதுக்கு என்னென்ன செய்யவேணுமோ அரைகுறையா...எதுவும் விளங்கேல்ல.வெளில பார்த்தா அமைதியான இலையில்லா மரங்கள்.பூனையொன்று குறுகி நடந்தபடி.வேற என்ன செய்ய நான்.வானொலியில் "பொட்டு வைத்த முகமோ...".கூரையில்லா வீட்ல முகடு பாத்துப் படுத்துக்கிடக்கிறன்.அப்போ என்ன ஆகும்.ஒரே ஊர் ஞாபகம்தான்.

அதோட போன கிழமை தமிழ்நதி அக்கான்ர ஒரு பதிவும் வாசிச்சன்.அதுதான் இந்த ஞாபகச் சிதறல்கள்.சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.
சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்.ஆனால் அத்தனைபேரும் ஞாபகத்தில் அடிக்கடி வந்துபோகும் உறவுகள்.நம்மவர்கள்.சொந்தங்கள்.யார் எங்கு.இப்போ இருப்பார்களா இல்லையா என்றும் தெரியவில்லை.பெருமூச்சில் கரையும் அவர்கள் முகங்கள்.சிலசமயங்களில் ஒருவேளை செத்திருந்தால்.....இனிக் காணவே முடியாதே.எத்தனை வருடங்களின் வேகப் பாய்ச்சல்.

அந்தக் கதை வாசிச்ச பிறகு வந்துபோகும் ஒருமுகம் எங்கள் கிருஷ்ணமூர்த்தித் தாத்தா.நாங்கள் அவருக்கு வச்சிருக்கும் பெயர் என்ன தெரியுமோ..."ததரினன தாத்தா".ஏனென்றால் ஏதோ ஒரு இராகம் சத்தமாய் முணுமுணுத்தபடிதான் எந்த நேரமும்.நாய்க்கு பூனைக்கும் அதே ராகம்தான்.அந்த வயதில சந்தோஷ ராகமா துக்கமா தெரியாது.நாயை அடிச்சுக் கலைக்கவும் ராகம்தான்.

அவரை எல்லாருக்கும் தெரியும்.அவர் பெரிய பேர் புகழான மனுஷன்மாதிரித்தான் எங்கட ஊர்ல.இத்தனைக்கும் அவர் ஒரு சாதரண கோயில் தவில்காரர்தான்.ஆனால் குஞ்சு குருமான்ல இருந்து பெரிய பெரிய மாடிவீட்டுக்கார மகேஸ்வரி அக்கா,தாவடிச்சந்தி தாண்ட வரும் தவறணைச் சின்னத்தம்பியண்ணை,றோசாப்பூக்கடை தயா,கொக்குவில் பள்ளிக்கூட அதிபர், சந்திப்பிள்ளையார் கோயில் ஐயர் வரைக்கும் அத்துப்படி இந்தப்பெடி ததரினானானா.

காக்கா வருது...இந்தாபூனை...பிள்ளைபிடிகாரன் வாறான்...அங்கபார் நிலாவில பாட்டி சம்பல் அரைக்கிறா....எந்தப் பூச்சாண்டிக்கும் மசியாத சாப்பிட மறுக்கும் சின்னனுகள் இந்தா வாறார் ததரினனா தாத்தா என்றால் கண்ணை உருட்டித் தேடியபடியே எப்பிடி என்றே தெரியாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.அதற்காக குழந்தைகளுக்கு வில்லன் இல்லை அவர்.எப்போதும் வேட்டி மடிப்பில் ஏதோ ஒரு இனிப்பு வகை இருந்துகொண்டேயிருக்கும்.கோயிலால் கொண்டுவரும் பொங்கலோ மோதகமோ வடையோ வழியிலேயே கொடுத்துக் கொண்டாடிவிடுவார் தாத்தா.வீட்டிலே சின்னாச்சிக் கிழவி சமைக்காம இவர் சாப்பிடக் கொண்டு வருவாரென்று பாத்துக்கொண்டு பட்டினியாக் கிடக்கும் பாவம்.

தாத்தா ஒரு தண்ணிக்காக்கா.தண்ணியடிக்காத பகல் நேரங்களில் நிறையக் குழந்தைகள் சுற்றிய றாட்டினம்மாதிரித்தான் அவர்.ஒரு ஆள் தலையிலயும் முதுகிலயுமாய் யானை விளையாட்டெல்லாம் நடக்கும்.இருக்கிற கடைசிச் சில்லறை வரைக்கும் ஏதோ எல்லாம் வாங்கிக் குடுத்திடுவார்.சின்னாச்சி திட்டினா..."சும்மா இரடி உதுதான் எங்களுக்கு ஒரு குஞ்சு இல்லாமல்போச்சு...."என்று முடிக்கும்போது தனக்கொரு குழந்தையில்லாத ஆதங்கம் வெடித்துச் சிரிப்போடும் ஏதோ ஒரு இராகத்தோடும் சின்னாச்சியின் காதிலயும் பட்டுப் பறக்கும்.

பகல் நேரங்களில சின்னாச்சியைத் தூக்கி வச்சுக் கொண்டாடுவார்.அம்மா ஆச்சி எணை எண்டபடி பூனைக்குட்டிபோல பின்னுக்கும் முன்னுக்கும் திரிவார்.சின்னாச்சியும் எல்லாம் மறந்து அவருக்கு என்ன பிடிக்கும் எண்டு தேடித் தேடி வாங்கிச் சமைப்பா.மீன் இறைச்சி எண்டு வாங்கிக் கொண்டு வந்து குடுத்திட்டு தானும் உதவிகள் செய்து குடுப்பார்.

சமையல் முடியிற கட்டத்தில இஞ்சாரப்பா..... எண்டு சைக்கிளோட வெளிக்கிடுவார் தாத்தா."சரியாப்போச்சு துலைவான் வெளிக்கிட்டிட்டான் இண்டைக்குச் சாப்பிட்டமாதிரித்தான்"....எண்டு ஆச்சி தலையில அடிச்சுக்கொள்ளாத குறையா புலம்பத் தொடங்குவா.

"ச்ச....சும்மா கத்தாத...நான் இப்ப வந்திடுவன் நீ சாப்பாட்டைப்போடு"... எண்டபடி போனாரெண்டா பிறகென்ன சைக்கிளையும் ஆளையும் ஆராச்சும் தூக்கிக்கொண்டு வருவினம்.இல்லாட்டி தானே சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வேட்டி அவிழ்றதும் தெரியாம இடுப்பில பெல்ட்தான் மானத்தைக் காப்பாத்தும்.

இதுக்கிடையில சின்னாச்சி கறி சோறெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வேற இடத்தில பக்குவப்படுத்திடுவா.அவவுக்குகெல்லோ தெரியும் என்ன சன்னதம் ஆடுவாரெண்டு.

"ஓமடி ஓமடி உன்ர கொம்மா கோழி சமைச்சு ஒளிச்சுவச்சல்லோ மூத்த மருமோனுக்கு குடுத்தவ.எனக்கு வெறும் குழம்பும் ரசமும் ஏனோதானோவெண்டு தட்டில போட்டுத் தள்ளிவிட்டவ.ஆனா கடைசில நான்தான் ஆசுப்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சனான்".

இது மட்டும்தான் எப்பவும் பல்லவியாய்த் தொடங்கும்.அப்பத்தான் அவருக்கு எப்பவோ ஆச்சி சொன்னது அவவின்ர அப்பா சொன்னது எல்லாம் ஞாபகத்தில வரும்.

ஆச்சியையும் எப்பிடியெண்டாலும் கோவப்படுத்திடுவார்.உன்ர கொப்பர்...கோச்சி எண்டு அங்கால நல்ல நல்ல செந்தமிழ் எல்லாம் கலந்து கட்டி ஆடத் தொடங்குவார்.

ஆச்சியும் "என்ன சொன்னவர் என்ர அப்பா.அவரும் இல்லையெண்டா ரோட்டிலதான் பாய் போட்டுக்கொண்டு பிச்சை எடுத்திருப்பியள்.வந்திட்டார் பெரிசா பீத்திக்கொண்டு....."எண்டு அவர் ஆரம்பிக்க எடுத்துக் கொடுத்திடுவா.பிறகு கேக்கவும் வேணுமே.

"என்னவோ என்னவோ....ஓமடி நான் ராணிமாதிரியெல்லோ உன்னை வச்சிருக்கிறன்.ஏன் உனக்கெல்லாம் மறந்துபோச்சோ.""நான் மறக்கேல்ல...அப்ப சொல்லுங்கோவன்.தெய்வமா போனதுகளை ஏன் இப்ப இழுக்கிறியள்.நானெல்லோ அதுகளைத் திட்டவேணும்.உங்கட தலையில என்னைக் கட்டிப்போட்டுப் போய்ட்டுதுகள்....." எண்டு ஆச்சி அழத்தொடங்க.எணை எணை...அழாத எண்டு சமாதானப்படுத்தி முடியாமப்போக முடிவில சமைச்சு வச்ச கறி சோறெல்லாம் மண்பானை சட்டியோட உடைபடும்.அதோட கேள்வியும் போச்சு பதிலும் போச்சு.அடுத்த தண்ணியடி வரைக்கும் சத்தமே இருக்காது.இரணடு மாசத்தில ஒருக்காவெண்டாலும் இப்பிடி நடக்கும்.நடுநடுவில சின்னச் சின்ன அலங்காரங்கள் மட்டுமே.

ம்ம்ம்...ஆச்சி எல்லாம் பொறுக்கித் துப்பரவாக்க தாத்தா அப்பிடியே நித்திரையாயிடுவார்.ஆச்சியும் திட்டினாலும் சாப்பிடாமப் பாத்துக்கொண்டிருப்பா.பிறகு சூரியன் சரியத்தொடங்கத்தான் எழும்புவார்.பிறகும் அரைகுறை வெறியில் ஆச்சி தாயே...நீயேதான் தெய்வம்.நீதானடி என்ர கடவுள்.உன்ர அப்பாபோல ஒரு மனுசனை உலகத்தில காணமுடியுமோ.நான்தான் அவையளுக்கு ஒண்டும் சரியாச் செய்யேல்ல எண்டெல்லாம் புலம்பினபடி வாய் கோணக்கோண புகழ்ந்து தள்ளுவார்.

"சரியப்பா....சரியப்பா இப்ப சாப்பிடுங்கோ..." எண்டு ஆச்சியும் வாய் ஓயாமச் சொல்லிக் கேக்கும்.அவவுக்குப் அக்கறையோட அடுத்த நிகழ்வுக்குப் பயம்.சாப்பிட்டாத்தான் மற்றத்தரம் தவறணைக்குப் போகமாட்டார்.இல்லாட்டி ராத்திருவிழாவும் தொடரும்.

தாத்தா நல்லாக் குடிச்சு பெரிய கலாட்டா செய்தாரெண்டா பிறகு ஒரு கிழமைக்கு சாமிதான்.
ஆளைப்பாக்கவேணுமே.ஆச்சிக்கு விறகு கொத்திக்கொடுப்பார்.உதவி செய்றன் எண்டு அவவின்ர தோச்சு வச்ச சீலையெல்லாம் திருப்பி எடுத்துத் தோய்ப்பார்.ஆச்சி குளிக்க தொட்டி நிறைய தண்ணி இறைச்சுவிடுவார் .இப்பிடி வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கும்.

ஆனா ஆச்சி கடுகடுவெண்டு முறைச்சுக்கொண்டு திரிவா.தேத்தண்ணி சாப்பாடெல்லாம் "டொம்" எண்டுதான் கொண்டு வந்து வைப்பா.அதுக்கும் கிண்டல் விடுவார்."ஏனப்பா இப்பிடிச் சுடச் சுடத் தாற ஆத்தித் தா...."எண்டு வேணுமெண்டு திருப்பிக் குடுப்பார்.அதுவும் நாங்கள் ஆரும் கிட்ட இருந்தால் அவரின்ர கிண்டல் கூடுதலா இருக்கும்.ஆச்சியும் அவருக்குத் தெரியாம கொடுப்புக்க சிரிப்பா.காதலும் கலாட்டாவாவும் இருக்கும்.

இப்பிடித்தான் ஒருக்கா மலைநாட்டுப்பக்கம் 10 நாள் ஒரு கோயில் சேவுகத்துதுக்காக போனவர்தான் ஆளையே காணேல்ல.அது சிங்கள ஆட்கள் இருக்கிற இடம்.ஆச்சி அழுது புரளத் தொடங்கிட்டா.சொந்தக்காரர் தேடிபோச்சினம்.ஆள் 10 நாள்முடிய திருவிழா முடிய அங்கயிருந்து உடன் போனவர்களோட சேராம தான் தனிய வருவன் எண்டு தனிய வெளிக்கிட்டு இருக்கிறார்.எவ்வளவோ சொல்லியும் அவர் கேக்காம தனியாகவே போய்ட்டாராம்.

பிறகென்ன.தேடி ஓய்ஞ்சு போன ஒரு 10-15 நாளுக்குப்பிறகு கையில ஒரு நெசவு சீலையும் ஆளுமா செம்பாட்டுப் புளுதியும் பல்விளக்காத முகமுமாய் வாறார்.கழுத்தில போட்டிருந்த சங்கிலி தவில் எல்லாம் போச்சு.என்னப்பா எண்டா ஆச்சிக்கு சீலை தேடி வாங்கிக்கொண்டு வாறாராம். தனக்குச் சிங்களமும் தெரியால்லையாம்.சரியாக் கஸ்டப்பட்டுப் போய்ட்டாராம்.
பிறகென்ன ஆச்சி அழ தாத்தா அழ நாங்களும் அழ அழுது முடியத்தான் ஆச்சி ஓடி முழிப்பா.

"எங்கயப்பா....சங்கிலி,தவில்..." எண்டா அங்க இஞ்ச எண்டு எத்தனை புளுடாக் கதை எல்லாம் விடுவார்.ஆச்சி "நாசமாப் போக....எண்டு தொடங்கித் திட்டி அழுது முடிப்பா.தெரிஞ்ச யாரிட்டயாவது வித்திருந்தாரெண்டா அவர்களே கொண்டு வந்து கொடுப்பார்கள். ஆச்சியின் அக்கா மகன்தான் இவர்களுக்கு ஆதரவு.அவர் அதற்குண்டான பணத்தைக் கொடுத்தனுப்புவார். கொஞ்ச நாளைக்கு இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்கிறமாதிரி வீபூதிப்பட்டையும் ஆளுமா சின்னப்பிள்ளைகளோட விளையாடிக்கொண்டும் ஆச்சிக்கு உதவியாயும் இருப்பார்.எப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறுமோ எண்டு ஆச்சி சொல்லிச் சிரிப்பா.

தாத்தா சின்னனில சரியான குழப்படியாம்.கலைச்சுக் கலைச்சு தவில் வாராலதான் அடிவிழுமாம்.ஆனாப் பிடிபடமாட்டாராம்.கிணத்துக்குள்ள இறங்கிநிண்டு கூத்துக்காட்டுவாராம்.இல்லாட்டி பிடியுங்கோ பாப்பம்...எண்டு துலாக்கட்டில ஏறி இருப்பாராம்.இரவிலயும் வரமாட்டாரம்.அம்மாவை வெருட்டி தூர இருந்தபடியே சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவாராம்.ஆனா கடைசில அடி வாங்கித்தான் வீட்டுக்குள்ள வரமுடியுமாம்.தான் தவில் பழகின தன் குருவுக்கு மட்டும்தானாம் பயம்.அதனால மூன்றாம்வகுப்பு மட்டும்தான் படிச்சவராம்.அதுக்குப்பிறகு தன் குருவின் வீட்லயே வளர்ந்தவராம்.

இப்பிடி அவர் ஓய்வா இருக்கிற காலத்தில தன்னைப் பெட்டையள் சுத்தினதும் தான் பெட்டையளுக்கு கச்சான் கடலை வாங்கிக் கொடுத்ததும்,ஐஸ்கிரீம் காரனோட சண்டை போட்டதும் எண்டு தன் இளைமைக்காலக் கதையெல்லாம் சொல்லுவார்.ஆச்சியும் ரசிப்பா.

ஏனெண்டா அவ இவரை காதலிச்சுத்தானாம் கல்யாணம் செய்துகொண்டவ.இவர் கொஞ்சம் குழப்படி எண்டாலும் தொழில் சுத்தமாம்.அதனால ஆச்சியிண்ட அப்பா இவரைத் தனக்கு தவில்காரனா வீட்ல வச்சிருந்தவராம்.அந்தக்காலத்தில வீட்டோட ஒரு வெளி ஆண் இருந்தால் வீட்டிலுள்ள பெண்புரசுகளைக் காணேலதாம்.எல்லாரும் பின்பக்கமாகவே புழங்கிக்கொள்வார்களாம்.

இவர் அடிக்கடி கிணத்தடிக்குப் போவாராம்.ஏனெண்டா அங்கதான் வாழைமரத்தடில சின்னக்கா....அவதான் சின்னாச்சி பாத்திரங்கள் கழுவுவாம்.இவர் செருமுவாராம். இருமுவாராம்.சின்னக்கா பாக்கவே மாட்டாவாம்.இவவைக் கேக்காமலே வாளி நிறையத் தண்ணி நிரப்பி வச்சிட்டு வருவாராம்.அவவும் அதிலதானாம் பாத்திரம் கழுவுவாவாம்.

பிலாமரத்தடிலதான் பாய் விரிச்சு தவில் வேலை எல்லாம் செய்வாராம்.அது காத்தாட என்கிற பொய்யோட கருக்குமட்டைக்குள்ளாள ஆச்சியப் பாக்கலாமெல்லோ அதுக்குத்தான்.ஆச்சியும் பாக்கிறா எண்டு நினைச்சுக் கொள்ளுவாராம்.ஆச்சியை நாங்களும் கிண்டிக் கிளறிக் கேட்டுப் பாத்தம்.நீங்களும் பாத்தனிங்களோ எண்டு.அவ கடைசி வரைக்கும் சொல்லவேயில்ல.ஆனா வெக்கப்பட்டுக்கொண்டு உள்ளுக்க போய்டுவா.

இப்பிடி ஒரு நாளுமே நேருக்கு நேர கதைக்கவோ பாக்கவோ இல்லையாம்.ஆனா இவருக்கு வீட்ல கல்யாணம் பேசத் தொடங்க இவர் தன்ர வீட்ல சொன்னவராம்.ஆச்சி வீட்டுக்காறார் நல்ல பேர்புகழனா நாதஸ்வரக் குடும்பமாம்.அதோட பெரிய பணக்காரருமாம்.அதனால வீட்ல சிக்கலாம்.இவர் என்ன செய்திருக்கார் தெரியுமோ.தான் சின்னாச்சி நினைவோட அவவுக்காக காத்திருந்த பிலா மரத்திலயே தூக்கு மாட்டி சாகவேண்டு கயிறு மாட்டிட்டாராம்.

அப்பத்தானாம் மெல்லமா ஆச்சி அழுத்தவ.அவவின்ர அம்மாவுக்கும் விளங்கினதாம் ஆச்சிக்கும் விருப்பமெண்டு.அப்பத்தானம் இரண்டு வீட்டுக் காரரும் கல்யாணப் பேச்சுக்கள் பேசினதாம்.ஆனாலும் சாதகம் பொருத்தமில்லையாம்.எண்டாலும் நாங்கள் இவ்வளவு காலம் சந்தோஷமா வாழ்ந்திட்டம்தானே எண்டு பெரிய சந்தோஷமாச் சிரிச்சு தோழில சால்வையை உதறிப்போடுவார் தாத்தா.

அப்ப நான் சின்னனா இவையளை பாக்கிற நேரமே அவையளுக்கு 60-65 வயசு இருக்கும்.இணுவிலிலதான் இருந்தவை.இப்ப நிச்சயமா இருக்கமாட்டினம்.
என்றாலும் அடுத்தமுறை அப்பாவோட கதைக்கேக்குள்ள கேக்கவேணும். கிருஷ்ணமூர்த்தி தாத்தாவையும் சின்னாச்சி அம்மாச்சியையும் ஞாபகப்படுத்தின தமிழ்நதி அக்காவுக்கும் நன்றி.

"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".

ஹேமா(சுவிஸ்)

Monday, February 07, 2011

நீங்கள் எந்த வழி ?

ல்லவனுக்கும் ல்லவனுக்கும் மூன்று வழி.

ல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இரண்டு வழி.

கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி.

இது ஒரு விடுகதைபோல இருந்தாலும் இதற்கு அர்த்தமுள்ள நாடோடிக் கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு ஒற்றையடிப்பாதையில் நல்லவனும் நல்லவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.அவன் செல்லட்டும் என்று ஒருவன் பாதையை விட்டு இடப்புறம் இறங்குகிறான்.அதே எண்ணத்துடன் மற்றவனும் பாதையை விட்டு வலப்புறம் இறங்கி விட்டுக்கொடுக்கிறான்.இங்கே மூன்று வழி தெரிகிறது.இதைத்தான் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் மூன்று வழி என்றார்கள்.

அதே ஒற்றையடிப் பாதையில் ஒரு நல்லவனும் கெட்டவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.கெட்டவனோ நான் ஏன் வழி விட்டுக் கொடுக்கவேண்டும் என்று பாதையை விட்டு இறங்காமல் நடக்கத் தொடங்க நல்லவனோ பாதையை விட்டு இறங்கி வழிவிட்டு இறங்கிப் போகிறான்.எனவே இதைத்தான் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இரண்டு வழி என்றார்கள்.

அதே ஒற்றையடிப் பாதையில் கெட்டவனும் கெட்டவனும் எதிர் எதிராக வருகிறார்கள்.இருவருமே விட்டுக்கொடுக்காமல் நீயா நானா என்று மோதிக்கொள்கிறார்கள்.இதைத்தான் கெட்டவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே வழி என்றார்கள்.

எனவே விட்டுக்கொடுத்தால் எல்லோருக்குமே வழி உண்டு!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, January 16, 2011

தாய் தேசத்தின் சார்பில் நன்றி.

இன்றுதான் நேரம் கிடைத்திருக்கிறது.இப்போதான் பார்க்கிறேன்.இந்த வருடமும் 2010ன் ஈழம் பிரிவுக்கான விருது ஒன்று இரண்டாம் பிரிவில் உப்புமடச் சந்திக்குக் கொடுத்திருக்கிறார்கள். கிடைத்திருக்கிறது.சந்தோஷமாய் உணர்கிறேன்.என்னை ஊக்குவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.அதேநேரம் தமிழ்மணம் நடுவர் குழுவுக்கும் மிக்க நன்றி.

கவிதை என்கிற பெயரில் கிறுக்கிற அளவுக்கு தொடராக என் எண்ணங்களை எழுதமுடிவதில்லை.என்றாலும் மனதின் சில வேதனைகளை நான் எப்படி நினைக்கிறேனோ அப்படியே எழுதி வைக்கிறேன் என் ஊரின் பெயர்கொண்ட உப்புமடச் சந்தியில்.அப்பா அம்மா சொன்ன விஷயங்களும் நினைவோடு கலந்திருக்கும்.அதன் நினைவுச் சாயலே இந்த வெற்றிக்குப் பதிவான "யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு".

குழந்தைநிலாவில் ஈழம் பதிவில் "உயிர்த்தளம்"கவிதை வெற்றிபெறும் என்று நினைத்திருந்தேன்.அது என் உள்ளத்து ஓலம்.அத்தனை பிடிக்கும் என் தேசத்தை.என் மக்களை.

இப்போதுகூட மழை வெள்ளத்தால் அவதிப்படும் என் உறவுகளைச் சொந்தங்களை நினைத்து கொஞ்சம்கூட சந்தோஷமில்லாத மனநிலையிலேயே செத்தபிணமாகக் கடமையே என நாளையும் நொடியையும் போகச்செய்தபடி இருக்கிறேன்.நேற்றைய பொங்கல்கூட வானொலியில் கேட்டே அறிந்துகொண்டேன்.அதன்பிறகுகூட குளித்துச் சாமிகும்பிடக்கூட மனமற்று என்ன பொங்கலும் பூசையும் என்று மனவேதனையுடனேயே பொங்கல் பொங்காமல் போனது.

போரினாலும் அடிக்கடி இயற்கையாலும் அரசியலாலும் அவர்களின் வாழ்நாட்காலம் முழுதுமே அவலம்...அவலம்.கொடுத்தே கை தேயந்த தமிழன் இன்று உதவி...உதவி என்ற ஓலத்தோடு வேறு வழியேயில்லாமால் கை நீட்டி ஒல்கிக் குறுகியபடி,கிடைத்ததைச் சாப்பிட்டு,கிடைத்த இடத்தில சரிந்து,தூக்கம் நிம்மதி கெட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

தராசின் நிலையானது வாழ்வு.ஒருப்பக்கம் தாள மறுபக்கம் கொஞ்சம் எழும்பிவருவதாய் தமிழ்மணத்தின் அறிவிப்பு.அங்குகூட என் ஈழம்.மனம் அழுகிறது.ஈழத்தாய்....என் தேசத்தாய்... இப்போதெல்லாம் பேசுபொருளாகிவிட்டாள்.அவளின் கஸ்டங்கள் வேதனைகளே ஒரு சினிமாவில்,மேடைப்பேச்சுக்களில்,எழுத்துக்களில் எல்லாம் வியாபாரமாய் பேர் புகழ் தேடிக்கொடுக்கும் பொருளாய் ஆகிவிட்டது.

என் தாய் தேசம் தந்த பரிசாகவும் மனநெகிழ்வோடு கண்ணீரோடு இந்தப் பரிசை கையேந்திக்கொள்கிறேன்.நன்றி நன்றி !

அன்போடு நட்போடு ஹேமா.

Monday, January 10, 2011

திரும்பிப் பார்க்கிறேன்.

பாதை சீராக இல்லை
குறுக்கும் கோணலுமாய்
நினைத்த இடத்தில் திரும்பியும்
நுழைந்து நடந்தும்
சறுக்கியும்
தடுமாறியபடி முடியாமல்
திரும்பிப் பார்க்கிறேன்.
வளைந்து வளைந்து
அழகான
ஒரு பாதையொன்றின்
ஆரம்பமாய் புதுப்பாதை!!!


தொடர்பதிவு எழுதவென்று கௌசி அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்.நன்றி தோழி.நான் 2010தை நான் திரும்பிப் பார்க்கவேணுமாம்.பழையவைகள மறப்பவள் அல்ல நான்.ஆனால் திரும்பிப் பார்க்க ஒரு பயம்.எப்போது கலங்கிய பாதைதான் என்னுடையதாகிறது. துணிச்சலும் தைரியமும் தந்தவிட்டு போராடிக்கொண்டேயிரு என்றும் ஒரு வரியில் முடித்துவிடப்பட்டிருக்கிறது வாழ்வு.

முழு வாழ்வையும் திரும்பிப் பாத்தால் சொல்ல முடிந்தவையும் சொல்ல முடியாதவையுமாய் நிறையவே கதை பேசிச் சிரித்து அழும்.2010 ல் பெரிதாக சொல்ல இல்லை.நாடும் என் மக்களும் இரத்தமும் போரும் முள்வேலியுமாய் முடிவைடந்து இன்று சத்தமில்லா யுத்தத்துக்குள் என் மக்கள்.

போனவருடத்தில்தான் ஊர் போய் வந்தேன் என் மலையடிவாரத்துத் தோழியைக் கண்டேன்.அவளின் மனம் என்னைப் புரிந்துகொண்டாலும் வெறும் புன்னகையோடு மட்டும் என்னை வழியனுப்பி வைத்தது அவள்மேல் எனக்குப் பெருத்த கோவம்.ஆனாலும் அவளை நினைத்து வருந்தாத நாள் இல்லை.

மற்றும் அந்தச் சமயத்தில் போரின் கோரங்களால் நிறைந்த என் தேசத்தைக் காணமுடியாமல் அவதிப்பட்டேன்.அதனால் யாழ் போகவில்லை.என் இரத்த உறவுகள் எல்லோருமே அங்குதான்.தூர இருந்தாலும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டுதான் இருப்பது மட்டும் நின்மதியாக இருக்கிறது.

புலம் பெயர்ந்த எங்களுக்கு இன்னொரு சங்கடமும்.10 - 15 வருடங்களுக்கு மேலாக உறவுகளை விட்டுத் தள்ளியிருக்கும் ஒருவருக்கு ஊரில் தலைமுறை மாற்றங்களால் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொளவதும் நிறைந்த அன்போடு நெருங்கிக்கொள்வதும் கஸ்டமான விஷயம்.எனக்கும்கூட அது மனச் சங்கடத்தையே தருகிறது.அதோடு ஊரிலே புலம் பெயர்ந்து யார் யார் எங்கிருக்கிறார்கள் என்றுகூடத் தெரிவதில்லை.இந்தக் கதை சொல்லத் தொடங்கினால் சொல்லிக்கொண்டே போகலாம்.
விடுங்கள்.

முக்கியமான ஒன்று.அப்பா அம்மாவுக்கு 60ம் கல்யாணம் செய்து பார்த்துச் சந்தோஷப்பட்டோம்.அதன் பிறகு சில என் பிடிவாதகுணத்தால் தற்சமயம் அம்மா என்னோடு கதைப்பதை நிப்பாட்டியிருக்கிறா.இது மிகவும் கஸ்டமாயிருக்கு.காலம் சரிசெய்யும் என்ற நம்பிக்கையோடு நகர்கிறது அகதி தேசத்து வாழ்வு.

சுவிஸ் வாழ்வும் வேலையும் தனிமையும் ஒற்றைச் சிநேகமும் என் அன்புக்காதலன் சச்சின் தரும் முத்தமும் அன்பும் அப்பிடியே மாறாமல் நிறைவோடு.என்ன...அவன் இப்போ கொஞ்சம் வளர்ந்திருக்கிறான்.என்னைக் கவனிப்பது குறைந்து தன் வயதுச் சிநேகிதர்களோடு மட்டுமே விளையாடுகிறான்.ஆனால் புதுமாதிரியான கார் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறான்.அவனுக்காகக் காத்திருக்கிறேன்.

இணையம்...நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஏதோ என் கவிதைகளைச் சேமிக்க ஒரு இடம் என்று மட்டுமே சொல்லித் தந்தார்கள்.
ஆனால் அதுவே ஒரு குட்டி உலகமாய் இருக்கிறது இப்போ.இங்கும் நான்,
நீ,ஊழல்,போட்டி,பொறாமை,ஒதுக்கிவைப்பு,முகஸ்துதி,குழுப்போராட்டம் இப்படி ஒரு அரசியலாகவே காண்கிறேன்.

இதற்குள்ளும் நல்ல சில உள்ளங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கிறேன்.குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாருடனும் நெருங்காவிட்டாலும் பின்னூட்டங்கள் அவர்களின் மனங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது.

எனக்கு இங்கு எல்லோருமே சமம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு.அவரவர் திறமை.எனக்குக் கவிதை என்று வார்த்தைகள் கோர்க்கும் அளவுக்கு ஒரு கட்டுரை எழுதவோ நகைச்சுவையாக எழுதவோ வராது.முயற்சி செய்தும்கூட முடியாமல் போகிறது.எனவே எல்லோர் எழுத்துக்களையும் வாசிப்பேன் ரசிப்பேன்.

இந்த இடத்தில் ஒரு குற்றச்சாட்டும் ஒன்று.நான் தரம்பார்த்து பின்னூட்டம் இடுகிறேனாம்.எனக்கே சிரிப்பாயிருக்கிறது.இயல்பாகவே என்னிடம் அந்தக் குணம் இல்லை.குழந்தையோ பெரியவர்களோ திறமையைப் பாராட்டவும் என் தப்பு ஏதுமென்றால் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன்.இங்கு திறமையே தவிர எல்லோருமே சமம்.சிலசமயம் அந்தப் பதிவுக்கேற்றபடி கொஞ்சம் கொண்டலாகச் சொல்லியிருப்பேன்.நல்லதொரு கவிதைக்கு கிண்டலாய் பின்னூட்டம் கொடுக்கமுடியாதுதானே.

இணையம்தான் என் உறவாய் இப்போதெல்லாம்.ஆனால் அதையே நம்பியும் அல்ல வாழ்வு.இதில் ஒன்றை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும்.போன வருடத்திலும்(2010)தமிழ்மண விருது இரண்டாம் இடத்தில் கிடைத்தது.இப்போதும் மூன்றாம் கட்டத் தேர்வு வரைக்கும் என் நான்கு பதிவுகள் வந்திருக்கு.இந்த இடத்தில் மனம் நெகிழ்கிறது.என் சார்பில் என் ஒரு ஓட்டைத் தவிர எல்லாமே யார் என்றுகூடப் பார்க்கமுடியாத என் இணைய உறவுகள்தான்.இந்தச் சமயத்தில் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.

அன்பு என்பது எல்லோருக்குமே பொது.அவரவர்களுக்கேற்றபடி அதன் வடிவம் மட்டுமே மாறியிருக்கும்.ஒன்று கரிசனம்.அடுத்தது கனிவு.பின் பாசம்.மற்றது காதலாய்.

இங்கெல்லாம் சம்பளத்திற்காக வேலை செய்வது தவிர வேலை இடங்களில் நிறைவான அன்பையெல்லாம் எதிர்பார்க்கமுடியாது.என்னிடம் எங்கள் பண்பாடு இங்கும் தொடர்கிறது.
ஏதாவது வீட்டில் பழுதுபட்டால் பார்க்க வருபவர்கள் விளம்பரங்களோடு (தொலைபேசி அட்டை முதல் முட்டை வரை)வந்து வீட்டில் அதைப் பற்றிச் சொல்லிக் களைப்பவர்கள் என்று இந்த நாட்டவர்கள் பள்ளிச் சிறுவர்கள்கூட வருவார்கள்.அவர்களுக்கு ஏதாவது குடிக்கிறீர்களா என்று கேட்பதும் கொடுப்பதும் என் பழக்கம்."தமிழர்களைத் தவிர வேறு யாரும் இப்படிக் கேட்பதில்லை" என்று சொல்வார்கள்.

இதில் என்ன இருக்கிறது.ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானம்.இந்தப் பழக்கம் இல்லாத ஒருவரைக்கூட யோசிக்க வைத்து நாமும் இப்படி இருக்கவேண்டும் என்று சிலசமயம் மாற்றி வைக்கும்.எமக்காக யார் எம்மை எதிர்பார்த்து யார் என்று மனம் சோர்ந்து இருக்கும் சிலரிடம் காட்டப்படுவதே கரிசனமாகிறது.

தெருவில் வைத்தியசாலையில் மற்றும் பொது இடங்களில் நாங்கள் காட்டும் சிறு சிறு உதவிகள் அன்பு வார்த்தைகள் அந்த இடத்தில் சம்பந்தப்பட்டவரை மகிழ்விக்கும்.மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

இங்கெல்லாம் வயது போனவர்கள் தங்களால் முடிந்தவரை தனியாகவே வாழ்கிறார்கள். முடியாத நிலை வரும்போதுதான் வயோதிப மடங்களுக்குப் போய் இருப்பார்கள்.கைகளில் பொருட்களைக் காவியபடி வருபரைக் காண மனம் என் பெற்றோர்களையே நினைத்துக்கொள்வேன்.நேரமிருக்கிற நேரங்களில் வீடுவரை கொண்டுபோயும் கொடுத்திருக்கிறேன்.சிலர் மறுத்தும் போவார்கள்.மறுத்தாலும்கூட என் மனம் முழுத்திருப்தியாகிவிடும்.அவர் பார்வையில் காணும் அன்பு நெகிழ்ச்சியூட்டும்.

எனவே எல்லோரிடமும் அன்பாய் இருப்போம் !

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது இதயத்தின் ஓசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது சக்தியின் பிறப்பிடம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள்.அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்.அது வெற்றியின் விலை.

கௌசி ஏதோ சொல்ல நான் ஏதோ புலம்பி முடித்திருக்கிறேனோ !

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP