Thursday, May 26, 2011

சிரிக்கவும் சிந்திக்கவும்.


நான் உனக்குக் கூறும் அறிவுரை."எப்போதும் உனக்கு நீயே எஜமானனாக இரு" என்பதுதான் என்கிறார் நெப்போலியன்.நம்மையே நாம் உயர்த்திக்கொள்ளும்போது உயர்வான வார்த்தைகளும் வெளிவரும்.

பயப்படும் சொற்களோ பதைபதைக்கும் வார்த்தைகளோ வராது.உறுதியான நம்பிக்கையான் வளமான சொற்கள் வெளிப்படும்.நமுடைய எண்ணம் திடமாக இருந்தால் பேச்சும் திடமாக இருக்கும்.

ஒருதடவை ஜூலியஸ்சீசர் படகில் சென்றுகொண்டிருந்தார்.படகு புயலில் சிக்கியபோது படகோட்டி நிலை குலைந்து தடுமாறிய நேரத்தில் "பயப்படாதே நீ சீசரையும் அவருடைய நம்பிக்கையையும் சேர்த்தே கொண்டு செல்கிறாய்"என்றார்.படகோட்டிடியிடம் சீசர்.தன்னைப்பற்றி உயர்வாக எண்ணியபடியால்தான் இந்த வார்த்தையைச் சொல்ல சொல்ல முடிந்தது அந்தச் சமயத்தில் அவரால்.

அதேபோல அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ருஜாக்சன் படகில் போய்க்கொண்டிருந்தபோது படகில் விபத்துக்குண்டான் அறிகுறி ஏற்பட்டது.எல்லோரும் பயந்து அஞ்சி அரற்றினர்."ஏன் இப்படி அமைதியில்லாமல் அலை மோதுகிறீர்கள்.என்னோடு இதற்கு முன்பு நீங்கள் பிரயாணம் செய்ததில்லை போலிருக்கிறதே"என்று தன்னுடைய உறுதியை வெளிக்காட்டினார். எனவே தைரியத்திற்கு நாமே நமக்கு எஜமானர்களாக இருக்கவேண்டும்...என்னைப்போல !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளர் ஒருவரிடமிருந்து ஒரு தீப்பெட்டிக் கம்பனிக்கு கடிதம் ஒன்று வந்தது.அதில் தன்க்கு ஒருதொகையான சன்மானம் தந்தால் நெருப்புப் பெட்டியில் தடவப்பட்டிருக்கும் மருந்தின் அளவைப் பாதியாகக் குறைக்க வழி சொல்லுவதாகக் குறி்ப்பிடப்பட்டிருந்தது.லாபமடையலாம் என்கிற நோக்கில் தீப்பெட்டிக் கெம்பனி ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு அனுப்பி வைத்து மருந்தைக் குறைக்கும் முறையை எழுது அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.

1)தீ்ப்பெட்டியில் மருந்தை ஒரு பக்கத்தில் மாத்திரம் தடவுங்கள்

2)அல்லது இரண்டு பக்கத்திலும் தற்போது தடவப்படுவதில் பாதிப் பாகத்தில் மாத்திரம் தடவுங்கள்.

என்று பதில் வந்தது.கம்பெனி வழக்கும் போட்டதாம்.விஞ்ஞானிக்கேதானாம் வெற்றி.

ஒருவர் இதேபோலவே மூட்டைப்பூச்சி மருந்து பற்றிப் படித்துவிட்டு அதற்குரிய செலவை அனுப்பிவிட்டுக் காத்திருந்தபோது ஒரு பெரிய பார்சல் வந்ததாம்.அதில் இரண்டு தட்டைக்கற்கள் இருந்ததாம்.அதில் மூட்டைப்பூசியை எப்படிக் கொல்வது என்றும் சொல்லப்பட்டிருந்ததாம்."மூட்டைப்பூச்சியைப் பிடித்து அந்த இரண்டு கற்களுக்கும் நடுவில் வைத்து நசுக்க வேண்டியதுதான்.அது செத்துவிடும் நீங்களும் மூட்டைப்பூச்சித் தொல்லையில் இருந்து தப்பிக்கொள்ளலாம்"என்றும் எழுதியிருந்ததாம்...இது எப்பிடியிருக்கு !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முல்லா ஒருநாள் குதிரையில் வெளியூர் போய்க்கொண்டிருந்தார்.திடீரென்று பெருமழை.மரத்தடியில் ஒதுங்கி சட்டையை மடித்துக் கீழே வைத்து அதன் மீது உட்கார்ந்துகொண்டார்.மழை விட்டதும் சட்டையைப் போட்டுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.சற்றுத் தொலைவில் எதிரில் வந்த அவர் நண்பன் ஆச்சரியப்பட்டுப்போனான்.

என்ன முல்லா இவ்வளவு மழையில் எப்படி சட்டை நனையாமல் தப்பியது ?

எல்லாம் என் குதிரைதான்...அது வேகமாக ஓடியதே என்றார் முல்லா !

அப்படிப்பட்ட குதிரையை விலைபேசி எப்படியாவது வாங்கிவிடுவது என்று தீர்மானித்து வாங்கியும்கொண்டார் அந்த நண்பர்.

மறுநாளும் மழை வந்தது.முல்லாவின் நண்பன் குதிரையை விரட்டினான்.குதிரை என்னதான் வேகமாக ஓடினாலும் சட்டை முதல் முழுவதுமாக நனைந்தார் அவர்.

நேராக முல்லாவிடம் வந்தார் அவர்.என்ன முல்ல குதிரை என்ன வேகமாக ஓடியும் சட்டை எல்லாம் நனைந்துவிட்டதே என்றான்

அதற்கு முல்லா."உன் மண்டையில் மூளையா இல்லை களிமண்ணா என்று கேட்டு...மழை வந்தால் ஒதுங்கவேண்டும் என்கிற அறிவுகூட உனக்கில்லையா"என்று கேட்டார்....நீங்க எல்லாரும் என்னைப் பார்த்து இப்ப கேக்கிறமாதிரி !

Friday, May 20, 2011

கொஞ்சம் ரிலாக்ஸ்.

Addictive of CAR !Nice to leave your nerdy husband !
Its the college clock, till the course completion who cares time?
This Habit make me live longer… Never Give it UP !
Straight Edge !
Busy Programming?????
Wife may need money this time!!
Grandpa in a childhood mood of playing with toys !

Free U TURN !
At every stage man needs bottle !
I too Love Ice Cream !
Tooo Carefulllllllllll !

நன்றி ரவீவீவீவீ !

Monday, April 18, 2011

பெண் எழுத்து.

அதென்ன பெண் எழுத்து ஆண் எழுத்து.பிரித்து வைத்துச் சொல்லும்போதே கவனமாய் எழுது என்று கொஞ்சம் அதட்டி மிரட்டிச் சொல்வதாகவே இருக்கிறது.எழுத்து என்பதைப் பொதுவாகப் பார்த்திருந்தால் பெண் எழுத்து ஆண் எழுத்து என்கிற பிரித்துச் சொல்லவே வந்திருக்காதே.இந்தத் தலையங்கங்கத்தை ஆமோதித்து எழுத வந்தபோதே எங்கள் பலஹீனத்தை ஓரளவு ஒப்புக்கொண்டமாதிரித்தான்.

பெண் ஆண் என்று பிரித்துச் சொல்வதே பிடிக்கவில்லை.முட்டாள் தனம்.ஆனால் என்ன செய்ய...எங்காவது ஒரு சில விதிவிலக்குகள் தவிர வேத காலம் முதலாக பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.

நன்றி ஆயிஷா.தொடர் பதிவுகளில் அவ்வளவு நாட்டமில்லை என்றாலும் அன்பான அழைப்புக்கும் சொல்லவேண்டிய சில விஷயங்களுக்காகவுமே எழுத நினைக்கிறேன்.எழுதத் தந்த தலைப்பிற்கும் என் மனஆதங்கமும் ஒத்துப்போகிறதோ தெரியவில்லை.என்றாலும்......நன்றி தோழி.

பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.அதாவது ஆண் பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம்.பெண் எழுத்துக்கு தனிப் பண்பு உண்டு.பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.

ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.இதை எழுத ஆண் பெண் என்கிற பேதம் எதற்கு.நடந்ததை நடந்ததாக எழுத உணர்வே முக்கியம்.எதையாவது ஒரு நிகழ்வை எழுதும்போது அகத்தோற்றம் மட்டுமல்ல.புறத்தோற்றத்தையும் தேடுதல் அவசியம்.அங்கு ஒரே இருளாகத்தான் இருக்கும்.அந்த இருள்தான் ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்தி நிற்கிறது.

வாழ்க்கை கொடுக்கும் புதிர்களுக்குப் பதில் தேட இருக்கும் நிறைய வழிகளில் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது. இருளுக்குள் பயங்கரமும் இருக்கலாம்.பாலுணர்வும் இருக்கலாம். பயமும் சரி பாலுணர்வும்சரி பெண்ணின் எழுத்தைக் கொஞ்சம் பின்னிழுக்க வைக்கிறது.ஒரு ஆண் இரத்தமும் சதையுமாய் பிண்டமாய்க் கிடக்கும் கலந்து கதை பேசி துணிச்சலாய் எழுதக்கூடியவன்.பெண்ணாலும் முடியும் என்றாலும் ஓரளவோடு சோர்ந்துபோகிறாள். பாலுணர்வை சில அசிங்கங்களை எழுத நினைத்தாலும் எழுதிவிட்டு அதைப் பகிர்ந்துகொள்ளாமலே இருக்கிறாள்....இருக்கிறேன்.

ஆயிஷா சொன்னதுபோல ஆண்கள் எதையும் கூச்சமில்லாமல் துணிச்சலோடு எழுதும் உரிமை சுதந்திரம் எனக்கில்லை.இங்குதான் பெண் எழுத்து அடிபட்டுப்போகிறது.சின்னச் சின்னச் சொற்களைச் சேர்த்தாலே விரசமாகக் கவனிக்கப்பட்டு "ஐயோ ஏன் ஹேமா இப்படி எழுதவேணாம்" என்று அன்போடு அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்.ஆனாலும் சொல்லவேண்டியதைச் சொல்லியே ஆகவேண்டும் என்று குட்டி ரேவதி,லீலா மணிமேகலை போன்றவர்கள் சொல்லிகொண்டேதான் வருகிறார்கள்.

முதலில் ஒரு படைப்பை வைத்து எந்தப் பொதுப்படையான தீர்மானத்துக்கும் வரமுடியாது வரவும்கூடாது.கருவும் சிந்தனையும் எண்ணப் போக்குகளும் உலகப்பொதுவானவை.பெண்கள் முழுக்க முழுக்க பலவீனமானவர்கள் மட்டுமே அல்ல.எல்லா மனிதர்களுக்கும் உள்ள பலவீனங்கள்தான் இவர்களுக்கும்.ஆனால் அவற்றிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறோம்.அதற்கான பாதையைத் தேடுகிறோம் முடியும் என்கிற நம்பிக்கையோடு.

மரணம் என்பது கொடுமை.ஒரு இழப்பு.தன் வாழ்வில் ஒரு மரணத்தைத் தொடர்ந்த அடுத்த நாள் வாழ்வுக்கு ஒரு பெண் தயாராகும் போதும் துளியளவான நம்பிக்கை அரும்புவதை பார்க்க முடியும்.பெண்களின் கண்ணீர் வெறும் சோகத்தின் அடையாளமாக மட்டும் இருந்துவிட முடியாது.ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கும்.சுயம் இருக்கும்.வாழ்க்கையும் வாழும் சூழலும் சமூகமும் அந்தச் சுயத்தையும் இயல்பான அடையாளங்களை மெல்லச் சிதைக்கின்றன.அல்லது சிதையச்செய்கின்றன பயத்தால் சிலநேரங்களில் நாமே அழித்துக்கொள்கிறோம்.

வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென ஏதும் இருப்பதில்லை.உணர்ச்சி என்பதே மாறக்கூடியதுதான்.என் சிறுவயதுத் தோழி ஒரு போராளியின் தங்கை.அண்ணா அடிக்கடி காணாமல் போகிறார்.அம்மா அழுகிறா.என்று நிறையச்சொல்லுவாள். விருப்பமில்லாவிட்டாலும் அவளின் சிநேகம் தொடர்ந்தது.ஆனாலும் நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.ஏனென்றால் அந்த வீரம் பயந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

இந்தப் பயத்தில் புதைந்துள்ள சின்ன தைரியம்தான் நான்.என் எழுத்துக்கள்.ஆனாலும் இன்னும் துணிச்சல் போதாது.இதுபோல இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும்,புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும்,அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் தேவை வாழ்வின் வளர்ச்சிக்கு.எங்களுக்கு முன்னால் ஒரு சிறு கோடு போட்டுக்கொண்டு சொல்ல வேண்டியதை எழுத்தில் சொல்வோம்.முரண் இல்லாமல் சொல்வோம்.வக்கிரமில்லாமல் மென்மையாகச் சொல்வோம்.ஆண்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது.இது பாஸ்கலின் தத்துவம்.மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது.அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள்.இங்கு நான்(ம்) எழுத்தில்...!

"ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்."

Thursday, March 31, 2011

வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் திருமணம்.


திருமணம் என்பது இன்று அனைத்து மனித சமூகத்தினரின் வாழ்விலும் மகத்துவம் மிக்க புனிதமானதோர் சடங்காகத் திகழ்கிறது.ஆனால் திருமணச் சடங்கை நிறைவேறும் முறைதான் சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது. சமூகங்களில் நாகரீக வளர்ச்சி தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் " திருமணம் " என்பது தொடர்பான எண்ணக்கருவோ சம்பிரதாயங்களோ காணப்படவில்லை.

வேடுவனாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியின் பிற்பாடு ஓரிடத்தில் நிலையாக தன் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட காலகட்டத்தில்தான் திருமணம் பற்றிய சிந்தனை மனித சமுதாயத்தில் தோற்றமெடுத்தது. அந்த வகையில் தொன்மையான காலத் தமிழர்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற சடங்கே இருந்திருக்கவில்லை."களவு" வாழ்க்கையே நடைமுறையில் இருந்தது.

களவு வாழ்க்கை என்பது அன்பு அறிவு அழகு முதலியவற்றில் ஒத்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு உலகத்தார் அறியாத வண்ணம் மனமொப்பி வாழும் வாழ்க்கையாகும். காலப்போக்கில் இக்களவு வாழ்க்கையில் ஆண் மகன் தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு மற்றாள் ஒருத்தியுடன் வாழ்க்கை நடத்தும் நிலை தோன்றியது.இவ்வாறு களவு வாழ்க்கையில் பொய்யும் பித்தலாட்டமும் தோன்றிவிட்டமையால் அறிவில் சிறந்த பெரியவர்கள் ஒன்றுகூடி திருமணம் என்கிற சடங்கை உருவாக்கினார்கள்.

 பெண்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு உடைமைகள் சொத்துக்கள் சம்பந்தமான பேணுகையை உறுதிப்படுத்தல் குடும்பக் கட்டுக்கோப்பை சீர்குலையாமல் கட்டிக்காத்தல் போன்ற தேவைப்பாடுகள் திருமணம் பற்றிய எண்ணக்கரு தோற்றமிட்டன எனலாம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தல் ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்தல் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான திருமணம் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கிடையேயான திருமணம் சட்டப்படியான திருமணம் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளல் எனப் பல்வேறு வகையான திருமணங்கள் வெவ்வேறு சமூகங்களில் தோற்றமெடுத்தன.இன்றைக்கு சுமார் 2 ,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் தான் இயற்றிய தொல்காப்பியத்தில் எட்டு வகையான திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

* பிரம்மவிவாகம் :> நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம் காத்த ஆண்மகனுக்கு பன்னிரண்டு வயதுடைய கன்னியை ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரித்துக்கொடுப்பது.

 * பிரசாபத்திய விவாகம் :> மைத்துனன் உறவுடையவனுக்கு பெண்ணின் விருப்பத்திற்கமைய புனிதச் சடங்குகள் மூலம் கொடுப்பது.

 * ஆரிட விவாகம் :> தகுதியுடைய ஒருவனுக்கு பொன்னால் பசுவும் காளையும் செய்து அவற்றின் நடுவே பெண்ணையும் நிறுத்தி அணிகலன்கள் அணிவித்து நீங்களும் இவைபோல வளமுடன் ஒற்றுமையாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி நீர் வார்த்துக் கொடுப்பது.

 * தெய்வ விவாகம் :> வேள்வி நிகழ்த்தும் குருவுக்கு வேள்வித் தீயின் முன்வைத்து கன்னிப் பெண்ணைக் குருதட்சணையாகக் கொடுத்தல்.

 * கந்தர்வ விவாகம் :> ஆண்மகனும் கன்னிப்பெண்ணும் யாரும் அறியா வண்ணம் சந்தித்து கணவன் மனைவியாகக் உறவு கொண்டாடுதல்.

 * அசுரா விவாகம் :> மணமகனிடம் ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.

 * இராட்சஸா விவாகம் :> தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக பலவந்தமாகக் கடத்திச் சென்று அடைவது.

 * பைசாக விவாகம் :> தன்னை விடவும் வயதில் மூத்தவளிடமும் உறங்குகிற வளிடமும் கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவளிடமும் கூடி மகிழ்வது.

 தமிழர் வரலாற்றில் திருமணச்சடங்கு உருவாக்கப்பட்ட காலத்தில் அது மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதாய் இருந்தது.பின்னர் அனைவருக்கும் இச்சடங்கு பொருத்தமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கும் உரிய சடங்காக மாறியது. பண்டைய காலம்தொட்டு இன்று வரையிலான காலப் பகுதியை எடுத்து நோக்கினால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரால் கலந்து பேசி ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களே செல்வாக்குச் செலுத்தி வகின்றமையை அவதானிக்க முடியும்.பெரும்பாலான திருமணங்கள் காதல் அடிப்படையிலன்றி பொருளாதாரம் குடும்ப கெளரவம் போன்ற இதர புறக்காரணிகள் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
மேலைத்தேய பாரம்பரிய திருமணங்களிலே திருமண மோதிரம் அணிவது கட்டாயமானதாக உள்ளது.மோதிரத்தின் வட்ட அமைப்பானது திருமணத்தால் ஏற்பட்ட பந்தம் என்றென்றும் முடிவுறாமல் நீடித்து நிலைக்கவேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும் மோதிர விரலிலுள்ள நரம்பு ஒன்று இதயத்துடன் நேரடியாக தொடர்புறுவதால் திருமணமானது இரு இதயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் நம்பிக்கை நிலவுகிறது.


 1500 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் வைபவரீதியாகவோ சாட்சியாளர்களை சாட்சி வைத்தோ நடாத்தப்படவில்லை.1563 ம் ஆண்டுப் பகுதியில் குறைந்தது இரண்டு சாட்சிகளுடன் வைபவரீதியாக திருமணம் நடத்தப்பட வேண்டுமென்பது நடைமுறைக்கு வந்தது. "தம்மி ஸ்பிறோட் என்ற மதபோதகர் திருமணமானது ஆண்களையும் பெண்களையும் பாவங்களிலிருந்து தடுக்கிறது எனக் கூறியுள்ளார்.


 லௌரா ரெனோல்ட்ஸ் என்பவர் 8 - 14 நூற்றாண்டு காலப்பகுதியிலான திருமணம் பற்றி பின்வருமாறு சொல்கிறார். திருமணம் என்பது ஆண் பெண் ஆகிய இருவரையும் இணைத்து வைக்கின்ற புனிதச் சடங்காகும்.ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலாலோ அன்றி வேறேதும் காரணங்காலாலோ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தில் இணையும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இருவரும் தனித்தனியாக பாரியளவிலான திருமணப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாகிறார்கள்.


பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலைமையிலும் இடையிடையே மகிழ்ச்சிகரமான பொழுதுகள் அத்தம்பதிகளுக்கு கிடைக்கவே செய்கின்றன.அவ்வினிய பொழுதுகள் திருமண வாழ்வின் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்ப உதவுவனவாக உள்ளன. திருமணம் என்பது காலங்காலமாக பல்வேறு பரிணாம நிலைகளைத் தொட்டு வளர்ச்சி கண்டபோதும் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள் பாரம்பரியமனவை.ஒவ்வொரு சமூகத்தினது திருமண முறையும் வேறுபட்ட நிலைமையிலும் அத்திருமணச் சடங்குகளில் பொதிந்திருக்கும் உட்கருத்துக்கள் அர்த்தம் நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.




எந்தச் சஞ்சிகையில் வந்தது.எப்போ வந்தது என்றும் தெரியவில்லை.பார்த்தி என்று எழுதியவர் பெயர் மட்டும் இருக்கிறது.இந்தப் பக்கம் மாத்திரம் என்னிடம் எப்போதோ பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது.பகிர்ந்துகொள்கிறேன்.

Friday, March 18, 2011

கணவன்/கணணி/வீடு.

வீட்டில் கணணியே கதியாய்க் கிடக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான உரையாடல் அல்லது சண்டையெண்டே வச்சுக்கொள்ளுவம்.

ஸ்டார்ட்...மியூசிக்...

மனைவி....
கோதாரில போன(கோதாரி....எனக்கும் தெரியேல்ல) மனுஷனுக்கு விடிஞ்சிட்டுது.வேலைக்கும் போய்த் துலையாது....அயந்து (தன்னை மறந்து) நித்திரை கொள்ளவும் மாட்டுதாம் இப்பல்லாம்.......உந்தாளை(இந்த+ஆளை) ....!

இஞ்சாருங்கோப்பா பல்லு விளக்கியட்டியளே.குளிச்சுக் கிளிச்சு கொட்டிக்கொண்டீங்களே. ஒண்டுமில்லையேப்பா.உண்ணாணை(சத்தியம்)கடவுளே இந்த மனுஷனைக் காப்பாத்து.அயந்து நித்திரை கொள்ளுதுமில்ல.சாப்பிடுதுமில்ல.குளிக்குதுமில்ல.விடிஞ்சாப் பொழுதுபட்டா இதுக்குள்ளயே கவுண்டு கிடக்கு.....!

அப்பா.... (கணவனை) இதே பொழுதாப்போச்சு உங்களுக்கு.வீட்டில இருக்கிறமோ செத்தமோ உங்கட குரங்குக் குட்டியள் என்ன செய்து துலைக்குதுகள் அதுகளோட நான் படுற பாடு...பாட்டு எல்லிப்போல(மிக மிகச் சிறிது)ஏதும் ஒண்டெண்டாலும் தெரியுமோ.....!

உங்களுக்கு இந்தக் குடும்பம் குட்டி மட்டும் அண்டாதோ(போதாதோ).அதோட உங்கட கண்ணுக்கும் கையுக்குமெல்லோ நாசம் வரப்போகுது.பேந்து (பிறகு)இரவைக்கு வந்து கையப் பிடி காலைப் பிடியெண்டு சொல்லுங்கோ குண்டு வைக்கிறன் உந்தப் பெட்டிக்கு.சொல்லிப்போட்டன் குண்டு கிடைக்காட்டிலும் உலக்கையால உடைப்பன் ஓம்....!

கணவன்...
ஏனப்பா....விடியக்காத்தால அரியண்டம்(கரைச்சல்)தாற.அண்டக்காக்கா மாதிரி கத்தித் துலைக்கிற.கெதியில(சீக்கிரமா)உனக்கு விசர்(பைத்தியம்)பிடிக்கபோகுது பார்.சின்னதுகளை அடிச்சாவது இருத்தி வைக்கலாம்.எதுக்கும் அடங்கவும் மாட்டாத சென்மம் ஒண்டு நீ.....!

எடியே...ஏனடி..இப்ப எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதும் சொல்லி நான் செய்யாம இருக்கிறனே.நொய் நொய் எண்டபடி.....உன்னைச் சொல்லிக் குற்றமில்ல.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.உன்ர கொப்பரைக்(அப்பா)கூப்பிடு முதல்ல.வந்திட்டாள் சும்மா குளறிக்கொண்டு...அவளுக்கு எப்பவும் ஏதோ ஒரு விண்ணாணம் (புதுமை/மாசாலம்) இருக்கும் என்னோட கொழுவ(சண்டை) ......!

மனைவி...
ஏன் அந்த ஆளை இங்க இப்ப.கருப்பு (சாராயம்) அடிச்சுப்போட்டு ஊரெல்லாம் பம்பலா விடுப்புக் (வம்பு அளத்தல்/கிசுகிசு) கொண்டு திரியும்.அந்தாளை இழுக்காமச் சரிவராது உங்களுக்கு....!

என்னப்பா நீங்கள் வேலையெண்டு எங்கயோ போறியள்.அங்கயும் என்ன செய்யிறியள் எண்டும் தெரியேல்ல.அதுவும் ஒழுங்காப் போறேல்ல.சரி போறியள் எண்டு நான் கண்மூடி முளிக்க திருப்பி வந்து நிக்கிறியள்.சரி எல்லாத்துக்கும் கத்தக்கூடாதெண்டு நான் ஒண்டும் கதைக்காம இருந்தா குந்திவிடுவியள் இந்தக் கொள்ளைல போறதுக்கு முன்னால......!

உதை (அதை)அடுப்பில வச்சு எரிக்கிறன் ஒரு நாளைக்கு.இருங்கோ.கத்திக் கத்தி எனக்கு மூலம்தான் வந்ததுதான் மிச்சம்.வீட்டில காஸ் இல்ல.அடி வளவுக்கு அந்தத் தென்னை மரம் பாறிக்கிடக்கு.பின்பக்கச் சிவரெல்லாம் பாசி பிடிக்குது எத்தினை வேலை கிடக்கு வீட்ல.இதுக்கு நான் ஆரைப் பிடிக்கிறது.எனக்கு வாற ஆத்திரத்துக்கு(கோவம்)கோடாலி எடுத்துக்கொண்டு வரவே இப்ப...!

உங்க பாருங்கோவன்......உது பெரிய பகிடியாவெல்லோ(நகைச்சுவை)கிடக்கு.என்னவோ இதில இவர் கருத்துச் சொல்லேல்ல எண்டா உலகமே பிரண்டுபோமாம் (புரண்டு).என்னமோ இதுக்குள்ளாலதான் வருமானம் வாறமாதிரியெல்லோ.இருங்கோ உந்தக் கதிரையைக் கொத்தி மூலைக்க போடுறன் முதல்ல....!

கணவன்....
கவனமாக் (நிதானமா)கேள்.விசர்க்கதை கதையாதை.உனக்குத் தெரியுமோ நாங்கள் உதுக்குள்ளால அதான் இணையத் தளத்துக்குள்ளால தமிழ் வளக்கிறம்.ஏன் அதுவும் வயித்தெரிச்சலே உனக்கு.உதுக்கு முதல் கத்திக்கொண்டிருந்த...உதில வாற இழவுப் படங்கள் நல்லதோ கெட்டதோ அதை டவுண்லோட் பண்ணிப்போட்டு அதைப் பாத்துக்கொண்டிருக்கிறன்.
அதே உலகமாக் கிடக்கிறியள்....எங்களை பற்றிக் கவலைப்படமாட்டியள் எண்டு.அது உனக்குப் பிடிக்கேல்ல எண்டுதானே புளொக்கர் எழுதி அப்பிடியே தமிழையும் வளப்பமெண்டு வெளிக்கிட்டன்.இதுக்கும் ஆக்கினை (கரைச்சல்)தாற.நீ ஒரு நச்சுப்பலியடி.....!

மனைவி...
ஏனப்பா உந்தத் தமிழ் இவ்ளோ நாளும் வளந்துதானே இருந்தது.ஏன் தேய்ஞ்சுபோச்சே...நீங்கள் வளக்கிறன் வளக்கிறன் எண்றியள் புளுடா விடாதேங்கோ.படம் பாக்கிறயளோ...தமிழ் வளக்கிறியளோ....வளவளத்த ஆக்களோட எல்லாம் வம்பளக்கிறியளோ என்னண்டாலும் உதுக்குள்ளதானே கிடக்கிறியள்.எல்லாம் ஒண்டுதான்.....!

என்ன.....எப்பிடி....எப்பிடி....ஓம்...ஓம்...நான் நச்சுப்பல்லிதான்.அதுதான் கட்டிக்கொன்டு அழறன்.உங்கட சாப்ப்பாடுக்குள்ளதான் ஒரு நாளைக்கு விழுவன் பாருங்கோ.அது கிடக்கட்டும்.

ஏனப்பா தெரியாமத்தான் கேக்கிறன்.வீட்ட வந்தால் எங்களோட எல்லாம் கதைச்சுச் சிரிக்கவேணும் எண்ட எண்ணம் வராதோ உங்களுக்கு.
இண்டைக்கு என்னென்ன வேலைகள் செய்தனீ.ஆரெல்லம் வந்தவையள்.உங்கட குரங்குக்குட்டி என்ன செய்து வைக்குது....ஏதாவது உங்கட மண்டைக்குள்ள கவலை கிவலை கிடக்கோ இல்லாட்டிக் களிமண்ணோ.

வடிவாச் சாப்பிடக்கூட (நிறைவாக சாப்பிட) மாட்டியளாம்.வண்டிகூட(வயிறு) வத்திப்போச்சு பாருங்கோ.ஏதாவது காதில எப்பன்(கொஞ்சம்)எண்டாலும் விழுதேப்பா உங்களுக்கு.நான் ஒரு விசரியாக் கத்துறனெல்லே....!

கணவன்.....
ஹும் ...என்னப்பா சொன்னனீ இவ்வளவு நேரமும்.இவன் நசர் ஏதோ கேட்டவன் அதையே யோசிச்சுக்கொண்டிருந்திட்டன்.திருப்பி ஒருக்காச் சொல்லு.இனிக் கவனமாக் (அவதானமா) கேப்பன்...!

மனைவி...
ஹும்...தூரம் துலைல(காது கேக்கேல்ல).நான் மாரித் தவளைமாதிரிக் கத்திக்கொண்டிருக்கிறன்.சோத்தில உப்பு இல்லையெண்டு சொன்னனான்.நிப்பாட்டுங்கோ கொம்யூட்டர.இப்ப நீங்கள் எழும்பி வாறியளோ இல்லையோ இப்ப உடைப்பன் இப்ப உடைப்பன் சொல்லிட்டன்.மூண்டு தரம் சொல்றதுக்கிடையில எழும்பிடுங்கோ....ஓம்.....!

கணவன்...
இஞ்சாரப்பா எப்பவாலும் சொல்லியிருக்கிறனே நான் உன்னை மண்டூகம் மாரித்தவளையெண்டு.நீயாச் சொல்ற ஆனாச் சரியாச் சொல்ற.....!
சரி.....சரி ஆறுதலாச் (சாவகாசம்) சொல்லு ஏன் கத்துற.என்னெண்டு ஒருக்கா கேக்கிறன்...!

மனைவி.....
சும்மா சாட்டுக்குக் (சாக்குப் போக்கு)
கொஞ்சாதேங்கோ.இஞ்சருங்கோப்பா...நீங்கள் குடும்பம் நடத்திற லட்சணம் இப்பிடியோ.இனி என்ன புத்திமதி கல்லில உரச்சுத் தீத்தியே (ஊட்டு) விடுறது நான்.உங்கட கொப்பரும் கொம்மாவும் எங்களை ஏமாத்திப்போட்டினம்.

உங்களைப் பற்றிப் புளுகோ(பொய்) புளுகெண்டு புளுகிச்சினம் கல்யாணம் செய்து தரேக்க.இப்ப என்னட்ட தள்ளிவிட்டிட்டு....
வரட்டும் அவையள் இரண்டு பேரும்...!

வீடல் சீனி தொடக்கம் துணி தோய்க்கிற பவுடர் வரைக்கும் எப்பனும்(கொஞ்சமும்) இல்ல..பாத்ரூம் நாறுது.இதெல்லாம் ஆரப்பா செய்ற வேலை....!

கணவன்....
ஏனப்பா எல்லாம் முடிச்சிட்டியே.உன்ர ஆக்கள்தானே வந்து வந்து போய்க்கொண்டிருக்கினம்.அதுக்கு நானே பொறுப்பு.....!

மனைவி....
உடன.....உடன் பார் எங்கட ஆக்களை வம்புக்கு இழுக்கிறதை.
என்ர வாயைக் கிளறாதேங்கோ.நாங்கள் கடையளுக்குப் போய் சாமான்கள் வாங்கி இரண்டு மாசமாகுது.நீங்கள் கொம்யூட்டருக்கேப்பா தாலி கட்டினீங்கள்.இவன் சின்னவனையும் வச்சுக்கொண்டு என்னால என்ன செய்ய ஏலும்......!

வர வர உங்களுக்கு ஏத்தம்(திமிர்).ஏனப்பா...கொம்யூட்டர் வீட்ல இருக்கிறது பொழுது போகாத நேரத்தில ஏதாச்சும் பாக்கப் பயன்படத்தானே.சமையல் சாப்பாடு இல்லாம வெளில எங்கயும் போகாம யாரையும் பாக்காம அதுக்குள்ளயே கிடந்தா என்னப்பா ஞாயம் இது ....!

இண்டைக்கு எனக்கொரு முடிவு தெரிஞ்சாகவேணும்.சொல்லிப்போட்டன் ஓம்.இந்த வீடல் நான் இருக்கோணும்.இல்லாட்டி கொம்யூட்டர் இருக்கவேணும்.நானோ இல்ல அதோ எண்டு பாத்துக்கொள்றன் இண்டைக்கு....!
கணவன்....
எடியே ஏனடி...லூசுத்தனமா கொலை வெறியா மல்லுக்கட்டிக்கொண்டு(வீண் வாதம்)அரிகண்டம்(கறகறவெண்டு அரிக்கிறது)தாற.இப்ப நான் என்ன செய்துபோட்டன்.வெளுவை (அடி) வாங்கப்போற....ஓம் சொல்லிப்போட்டன்.விசர் (இதில் விசர் எரிச்சல்/கோபம்) வருது எனக்கு.ஏதெண்டாலும் சொல்லு பாப்பம்.கொலைக் குற்றம் செய்தனான் மாதிரி இருத்தி வச்சுக் கேள்வி கேக்கிற......!

மனைவி....
எனக்கு வாற வரத்துக்கு உங்களை...உங்க தமிழ் வளத்தவை வளத்துக் கொண்டிருக்கிறவை எல்லாரும் இப்பிடியே குடும்பம் நடத்தினவையள்.ஒருக்காச் சொல்லுங்கோ கொஞ்சம்....!

கணவன்.....
உந்த இடக்குமுடக்கா கேள்வி கேட்டு என்னோட கொழுவிக்கொண்டிருக்காத(சண்டை போடாத).என்னட்ட பதில் இல்ல.இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லித் துலை(கோவமா....சொல்லி முடி) ......!

மனைவி.....
ஓஓ....அதுசரி.நான் கேட்டதுக்கெல்லாம் அப்பிடியே டக் டக் எண்டு பதில் சொல்லிக் கிளிச்சுப்போட்டார்.உங்க சனங்களெல்லாம் (ஆட்கள்) நாக்கு வளைக்குதுகள் (கிண்டல்/எள்ளி நகைத்தல்) பிறகு கதைக்கிறியள்......!

கணவன்.....
ஆரப்பா கதைச்சவை.அவையள் எரிச்சல்ல கதைச்சிருப்பினம்.
ஏனெண்டா அவையளின்ர மனிசன்மாருக்கு (கணவன்) கொம்பியூட்டர் தெரியாதெல்லோ.சனங்களை விடு.

பாவம் அப்பா நீ.சரியா வயக்கெட்டுத்தான் (மெலிஞ்சு) போன.சரி நான் இனி ஒழுங்காச் சாமானெல்லாம் வாங்கித்தாறன்.செல்லமெல்லே அலட்டாதையப்பா....தேத்தண்ணி ஒண்டு தா....நல்லபிள்ளைபோல.
இண்டைக்கு முழுக்க கதைச்சுக்கொண்டேயிருக்கலாம் சரியோ......!

மனைவி....
தேத்தண்ணியும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.எல்லாச் சாமான்களும் முடிஞ்சுபோச்சு.முதல்ல சொல்லுங்கோ.உங்க சபை சந்தில தான் என்ர மனுஷன் நல்லவர் பெரி....ய இவரெண்டு நான் விட்டுக்குடுக்காம சொல்லிகொண்டு திரியிறன்.வீட்டுக்கு உதவாத மனுசனை என்ர தலைல கட்டி விட்டுப்போட்டு அவையள் நிம்மதியா இருக்கினம்.....!

கனக்கக் கதைக்கவேண்டாம்.எனக்குத் தெரிஞ்சாகவேணும் இண்டைக்கு நானோ கொம்பியூட்டரோ எண்டு.....ஓம்......!

கணவன்....
அடி...குரங்கு வர வர உனக்கு எள்ளளவும் (கொஞ்சம்கூட) அறிவில்லாமப் போச்சு.ஆரோட ஆர் போட்டி போடுறது.அது வாயில்லா சென்மமெல்லே....!

மனைவி....
என்னை விசராக்காதேங்கோ.உந்தச் சனியனால நான்தான் வாயில்லாப் பூச்சியா அடைபட்டுப்போனன்.

இஞ்சப்பா....இஞ்சப்பா நான் இஙக புலம்பிக்கொன்டிருக்கிறன்.திரும்பவும் அங்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு உங்களுக்கு.உங்களை...உங்களை....!

அப்பா....அப்பா எங்க போறியள்.....!

கணவன்....
கொஞ்சம் பொறடி வாறன்.பிறத்தால கூப்பிடாத (பின்னுக்குக் கூப்பிடாத) ....தீர அயத்துப்போனன் (முழுசா மறந்து). புதுமொடல் கொம்யூட்டர் ஒண்டுக்கு ஓடர் பண்ணினனான் வரச்சொன்னவங்கள்.நசர் பாத்துக்கொண்டு நிப்பான்.சரி வரேக்க ஏதும் வாங்கிக்கொண்டு வரவோ.கெதியா வந்திடுவன்.....!

( தன்பாட்டுக்கு மனைவி புலம்புறா....)

அய்யோ....அய்யோ...இப்பிடிக்கொத்த (இப்பிடியான) மனுசனை வச்சுக்கொண்டு நான் கட்டியழுறன்.உங்கட வீடுகளிலயும் இப்பிடித்தானோ.
ஒருக்காச் சொல்லுங்கோ.புளுகத்தைப் (புளகம்/சந்தோஷம்) பாருங்கோவன்
புதுசொண்டு வரப்போகுதெண்டு.கரந்தை (மாட்டு வண்டில்) இழுக்க விடாம உந்தாளை ஏன் படிப்பிச்சவையோ தெரியேல்ல.

புதுக் கோதாரியோ.கொண்டு வரட்டும்.உந்தப்பெடி (அந்தப் பெடியன்) நசர்
கும்மியடிச்சுக்கொண்டு இந்தப் பக்கம் வரட்டும்......இருக்கு அவருக்கும்.....!

நசரேயனின் ஒரு பதிவின் சாரத்தோடு.....என்னுடைய மொழிக்கலவையும்.

முக்கிய குறிப்பு.....>நசர் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியிருக்கிறார்.அதனால் தற்சமயம் கும்மியைக் குறைச்சு வீட்ல பொறுப்பான அப்பாவா அம்மாவுக்கு உதவியா இருக்கிறாராம் !
ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP