அதுசரி ...உங்கட பிள்ளைக்கு ஒண்டெண்டா உடன வந்திடுவியள்.அதுவும் துண்டை முறுக்கித் தோள்ல போட்டுக்கொண்டு.
நீ இஞ்ச வாடாப்பு ராசா...ஏன் கொம்மா இப்பிடிப் போட்டுக் கும்முறா உன்னை?
ஓம்...ஓம்...அப்பிடியே சொல்லிக் கிளிக்கத்தான் போகுது குரங்கு.வாய் மட்டும்தான் வங்காளம்போல...அதுவும் என்னட்ட மட்டும் !
சரி..சரி...இப்ப என்னப்பா நடந்தது அதைச் சொல்லன் நீ .
ஓம் ஓம்....கால் முளைச்சிட்டுதெல்லோ உங்கட நோஞ்சானுக்கு.உங்கால இஞ்சாலயெண்டு அந்த வளைவு மூலை வளவு வரைக்கும் வெளிக்கிட்டுடார் இப்பல்லாம்...துலைஞ்சவன்.
அதுக்கேனப்பா இப்பிடி அலம்புற.சின்னதுகள் எண்டா வீட்டுக்குள்லயே புளுக்கை போட்டுக்கொண்டு உன்ர சீலைக்குள்ளயே கிடக்குமோ.வெளில போய்க் கீய்த்தானே வருங்கள்.நீ ஏன் இந்தப் பாடு படுறயப்பா.
ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது.
சரி...விடு விடு...அவன் கெட்டிக்காரன்.சரியாயிடுவான்.
ஓம்...ஓம் உப்பிடியே சொல்லிச் சொல்லித்தான் கழுதை குட்டிச்சுவர்ல ஏறி நிக்குது.பிறகு உதே வாய் என்னைத்தான் குற்றம் சொல்லும்.வளத்த வளப்பைப் பார் எண்டு.அப்ப கேட்டுக்கொள்றன் உங்களை.
யேய்...கொஞ்சம் சும்மா இரு பாப்பம்.சும்மா முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுற.புத்தி இருக்கோ உனக்கு.நீ ஒரு சென்மம்.
அதெண்டாச் சரிதான்.நான் புத்தி கெட்டவளெல்லோ.இஞ்ச வாருங்கோ.
சொல்லித் தாங்கோவன்.
என்ன....நானும் பாத்துக்கொண்டிருக்கிறன்.சத்தம் உச்சத்தில ஏறிக்கொண்டேல்லோ போகுது.கவனமாயிரு...சொல்லிட்டன்....ஓம்.
சும்மா இருங்கோப்பா.ஏதோ நான் சத்தம் போட்டா அடங்கிற ஆள்மாதிரி.பேசாமப் போங்கோ பாப்பம்.
யேய்...இப்ப வாய் மூடப்போறியோ இல்லையோ.இல்லாட்டி...!
ஓம்...ஓம் என்னத்தைச் சொன்னாலும் அடக்கிப்போடுவியளே...இது உங்கட குடும்பத்துக்கே பழக்கிப்போன ஒண்டெல்லோ...
யேய்....இப்ப என்ன உனக்கு....என்னண்டாலும் என்னோட இருக்கட்டும்.தேவையில்லாமலுக்கு என்ர குடும்பத்தை இழுத்தியெண்டா...
சொல்லிட்டன் ஓம்...
அடப் போங்கோப்பா...உங்கட கும்பத்தைப் பற்றித் தெரியதோ.உலுத்துக் கெட்ட குடும்பம்.என்ர அப்பர் சொன்னதைக் கேக்காம உங்களுக்குப் பின்னாலதான் துலைவன் எண்டு அழுங்கு பிடிச்சுக்கொண்டு வந்த எனக்கு வேணும்....வேணும்....இதுவும் வேணும்.....இன்னமும் வேணும்.
ஓமடி நானும் அப்பிடித்தான்.என்ர தலையெழுத்து.எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக் கிடக்கு.
ஓம்...ஓம் என்னவோ சும்மா கூட்டிக்கொண்டோ வந்தனியள் வந்த மாதிரியல்லோ.எங்கட அப்பரிட்ட விடாப்பிடியா நண்டுபோல நிண்டு 15 பவுண் நகை வாங்கேக்க உங்கட மார் அடிக்கேல்லையோ.
இஞ்ச பார்...சும்மா எல்லாத்துக்கும் எதிர்த்துக் கதைக்காத.வாய் காட்டாத.ஒண்டு வச்சனெண்டா உனக்கு.நல்லா வாங்கப்போற...
ஓம்..ஓம்....அதுக்குத்தானே அப்பர் என்னைப் பெத்து உங்களிட்ட வாய்க்கரிசி போட்டவர்.அடிப்பியள் நீங்கள்.
(ப்ப்ப்ளார்.............)
என்ர ஐயோ...கடவுளே அடிச்சுப் போட்டியளெல்லோ..இவ்வளவு காலமும் இல்லாம கை நீட்ற அளவுக்கு உங்கட கை வளந்திட்டுதெல்லோ.இனியும் இந்த விசரி உங்களோட இருந்தாளெண்டா....நான் போறன் என்ர வீட்டுக்கு.
போடி...போ என்னவோ உவ இல்லாட்டி உலகமே இல்லையாக்கும்.வாழ ஏலாதோ...பெரிய இவவெண்டு நினைப்பு இவவுக்கு.
ஓம் ...இப்ப உங்களுக்குத் தெரியாது.கொஞ்சம் பொறுங்கோ.நாளைக்கு றோட்டில நிப்பியள்...யாரடா ஒரு சொட்டுக் கஞ்சி ஊத்துவினம் எண்டு கிளிஞ்ச சாரத்தோட நிப்பியள் பாருங்கோ...அப்ப தெரியும்.
ஓமடி போடி...நீ இல்லாட்டி ஒரு ஆண்டி மடம்...அரச மரம்...சந்தி மடம்...
கிடைக்காமலே போகும்.
சரி சரி நான் வெளிக்கிடுறன்.ரெண்டொருநாள் செல்ல எங்கட வீட்டுப் பக்கம் "இஞ்சாரப்பா".... எண்டுகொண்டு வருவியள்...சமாதானம் பேசிக்கொண்டு...அப்ப பேசிக்கொள்றன் உங்களை.
ஓ...அப்பிடி ஒரு நினைவிருக்கோ உனக்கு.என்னவோ பூனை கண்ணை மூடிக்கொண்டா பூமியே இருண்டு போகுதெண்டு நினைப்பாம் அதுக்கு.....விளங்கிச்சோ... ஒருக்காலும் நான் உன்ர வீட்டுப்பக்கம் வரன் தெரியுமோ.
அதையும் நான் பாத்துக்கொள்றன்...கொப்பரும் பிள்ளையுமாக் கிடந்து காயுங்கோ....வாறன்.
*******************************************
அம்மா.....அம்மா....அம்மாய்..அம்மா வேணும் எனக்கு.அப்பாய்....அம்மாய்
என்னடா இப்ப உனக்கு.அம்மாய் கொம்மாய் சும்மாய்...அதான்
போட்டாளெல்லோ....உன்னாலதான் எல்லாம் ....இனிமேல்பட்டு அந்தப் பக்கம் அந்தப் பெடியளோட போவியே....எங்கயடா அந்தத் தடி.அறுந்தவள் அதையும் எடுத்து ஒளிச்சுப்போட்டுப் போட்டாளே.இரு....கிளுவங் கம்புதான் உனக்குச் சரி.
டேய் நில்லடா....ஓடினா இன்னும் உதைப்பன்....
(அடி...1...அடி2 3 4 5 6 )
ஐயோ....அம்மா.....அப்பா....அடிக்கிறார்.
பாலாஜி கிட்ட இருந்து என் மொழி அசைவில் எடுத்துப் போட்டது.
ஹேமா(சுவிஸ்)
47 comments:
இரண்டு பேருக்கும் ஒரு பெரிய சபாஷ்... "சின்ன கல்லு பெத்த லாபம்" மாதிரி - சின்ன சின்ன நிகழ்வுகள்/சச்சரவுகள் - அதன் பெரிய பெரிய விளைவுகள் - அருமை.
உங்களோட மொழியில் வரும் வார்த்தைகள் அழகு.. யாழ் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு கைகூடி வருகிறது.. ’அலங்காரம்’ நான் ரசித்தது...
கணவன் மனைவியை கைநீட்டி அடிக்கமுடியுமா? நடக்கற விஷயமா எழுதுங்க... ஹேமா :)
சின்ன பேச்சு எப்படி பெரிய சண்டையாகிரது விளக்கம் அருமை
அதுசரி, ஹேமா!! இந்த விசயத்தில நீங்க எப்படி ?
//வாய் மட்டும்தான் வங்காளம்போல...//
நல்லா இருக்கு வங்காளம்:)
என் மொழி அசைவில் எடுத்துப் போட்டது.
உங்கள் மொழி அசைவை விரும்பி படித்தேன்.
எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக் கிடக்கு"
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் பின்னோடு...என்பார்கள். அது போல..
ஹா!உங்கட மொழிக்கு ஒரு சலாம் ஹேமா. எத்தனை இயல்பாக-நேர்த்தியாக!அடிக்கடி இதுபோல எழுதுங்கோ என் சந்தோஷம் பொங்க.
அருமைங்க ஹேமா... உங்களின் மொழியும் மனதோடு அசைபோடுகிறது... என்னைவிட சிறப்பாகவே வடித்துள்ளீர்கள்... படித்து முடித்தபிறகும் இந்த தமிழின் வடிவம் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...
சிங்களத்தமிழ் உங்களின் நடையுடன் அழகு....
//க.பாலாசி said...
சிங்களத்தமிழ் உங்களின் நடையுடன் அழகு....//
ஈழத்து தமிழ் தம்பி
வங்காளத்த தான் அலங்காரம்ன்னு போட்டுடேன்... மாற்றி படித்துக்கொள்ளவும்
தயவுசெய்து background போட்டோவை மாற்றிவிடவும்... உங்கள் போட்டோ உங்களுக்கு பிடித்துயிருக்கலாம்... ஆனால் படிக்கறவங்க பயப்படறாங்கயில்ல...
கொஞ்சம் ஆவண செய்யவும்...
(சரியாக படிக்கவும் அது ’கொஞ்சம்’ தான் ’கொஞ்ச’ அல்ல)
என்னடா இப்ப உனக்கு.அம்மாய் கொம்மாய் சும்மாய்... அதான் போட்டாளெல்லோ... உன்னால தான் எல்லாம்... இனிமேல்பட்டு அந்தப்பக்கம் அந்தப் பெடியளோட போவியே...ஆஹா இதுக்குத் தானே அம்மாவும் அடிச்சவா.ஐயோ நீங்களுமா அப்பா.....
எங்கயடா அந்தத் தடி.அறுந்தவள் எடுத்து ஒளிச்சுப்போட்டுப் போட்டாளே..இல்லையப்பா பக்கத்தில தான் கிடக்கு அம்மா அங்கால போனதும் பக்கதில கிடக்குற கம்பு கூட கண்ணுக்கு தெரியலையா இந்தாங்கோ கிளுவங் கம்பு வேண்டாம் இந்தக்கம்பாலையே அடியுங்கோ...
சின்னப் பிரச்சினையை பெரிசு பண்ணிக் கடைசியிலை பையன் தான் பாவம்.......ஹேமா ஊர் ஞாபகம் அப்படியே கண் முன் வந்து போனது.
யாழ் தமிழில் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழி.....
இரண்டு படங்களும் கதைக்கு பொருத்தம்.
இதுக்கு கமென்ட் போடாட்டி அறைவீன்களோ
//இரண்டு படங்களும் கதைக்கு பொருத்தம். //
ஒரு படம் பாலாசி கிட்டயிருந்து லவுட்டியதுங்க :)
ஹேமா அவர்களே.... இதோட நாலாவது கமெண்டு போட்டுயிருக்கேன்.. தனியாக paymentடை அனுப்பி வைக்கவும்
நல்லதொரு பகிர்வு ஹேமா
ம்ம் நல்லா இருக்கு :)
என்னுடன் பணியாற்றும் 'ஸ்ரீ' அண்ணனை பேச வைத்து கேட்டுக் கொண்டிருந்தது போல இருந்தது ஹேமா. லீவிற்கு ஊருக்கு போயிருந்த சமயம், அழை பேசுவார் இந்த ஸ்ரீ அண்ணன். மனைவி, "ஏங்க தெனாலி கமல் பேசுவது போல ஒருவர் போன் பேசினார்" என்று சொன்னாள்.
இப்ப எங்களுக்கு தெனாலி கமல் ஆகிப் போனார் ஸ்ரீ அண்ணன். :-)
ரசித்தேன் "உங்கட மொழியை..கேட்க சுகமாய்தான் இருக்கு."
"அருமைங்க, எப்படி யாழ் நடையை இப்படி எழுத்துல கொண்டுவரமுடியுதோ. வாழ்துக்கள்"
//ஏனப்பா....ஏன் என்ர குஞ்சைப் போட்டு அடிக்கிற //
ஹேமா,
இது சரியில்ல. சொல்லிட்டேன் ஆமா.!
ஹேமா,
யாழில் இசைப்பட்ட நாகைச் சண்டை.!
ரசிச்சேன் ஹேமா.
(யாழ் தமிழில் நாகையில்(பாலாசியின் ஊர்) நிகழ்ந்த சம்பவம்.)
அதே கதைதான்னாலும், பழமொழிகள், சொல்லாடல்கள் ரசித்துச் சிரிக்க வைத்தன!!
குழந்தையை திரு திருவென முழிக்க வைத்து விட்டீர்கள்..
{சிங்களத்}தமிழ் உங்களின்
நடையுடன் அழகு....\\\\
பாலாசி,........ம்ம்ம்ம.......இல்லை,இல்லவே
இல்லை தப்பு ஏற்க முடியவில்லை.
ஹேமா எடுத்து விடு
ஈழத்து தமிழ் தம்பி\\\\
நன்றி கதிர்
ஆம்,ஆம்,ஆம்...
ஈழத் தமிழ்,இலங்கைத் தமிழ்
தாய்த் தமிழ்.
ஹேமா,
இது குடும்பச்சமாச்சாரம் நான்
தலையிடவே மாட்டேன்
இன்னைக்கு அடிச்சுகுவாங்க நாளைக்கு
“கட்டி” ப் புடிச்சுக்குவாங்க
இது கணவன்,மனைவி சண்டை பாரு!!
யாழ் தமிழ் நடை அருமை பேசிக் கேட்டு
பல வருடங்களாகிறது படிக்கும் போது
சில மறந்து போன சொல்கள் ஞாபகம்
வந்தது ...
நன்றியடி மோளே
ஹேமா,
இது சரியில்ல. சொல்லிட்டேன் ஆமா.!\\\\\\\
இந்தப் பொடியன உறிக்கி வை இல்லாட்டி ....
பேந்து நல்லா குடுத்திருவன்,பெடியிற்ற உது
சரியாட மோனே எண்டு கேளு!
எங்கடை மண் வாசனை கலந்து எழுதியிருக்கிறியள். அப்படியே ஈழத்து முற்றத்திலையும் சேர்த்திருக்கலாம் தானே?
நன்றாக இருக்கிறது.
அது சரி... வேறை என்ன புதினம்?
ராஜேஸ்வரி சண்முகமும் ,g h அப்துல் ஹமீதும் இலங்கை வானொலியில் நடாத்திய ஒரு நிகழ்வு போல அருமை ஹேமா. அவர்கள் நிகழ்ச்சியெல்லாம் கேட்டிருபீர்களோ என்னவோ .அதெல்லாம் எங்கள் வாழ்வோடு ஒன்றிப்போன ஒன்று .
அழகு தமிழ் ஹேமா இருவருக்கும் வாழ்த்துக்கள்
Hello, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady bloggers. we planned to publish your blog in this issue. i want just your o.k. and a recent photograph.
my mobile no is. +91 9500019222
thanks
Navaneethan
முதலில் பாலாஜிக்கு என் மனம் நிறைந்த அன்பின் நன்றி.பாலாஜி
எங்கள் தமிழ் ஈழத்தமிழ் என்று பொதுவாகச் சொல்லலாம் இல்லையேல் யாழ்ப்பாணத் தமிழ் என்றும் சொல்லலாம்.
எங்களுக்குள்ளும் பிரதேச வழக்குத் தமிழ் வித்தியாசமாகவே இருக்கும்.
யாழ்,திருகோனமலை,மட்டக்களப்பு,
மலையகம்,கொழும்பு என்று.அங்கும் சில சொல் வழக்குகள் எனக்கும் விளங்காது.
எனவே நான் எழுதியிருப்பது ஈழம்/யாழ் தமிழ்.கொழும்பில் சிங்களவர்கள் சிலர் மலையகத் தமிழ் யாழ்தமிழ் எல்லாம் கலந்து கட்டித் தமிழ் கதைப்பார்கள்.
தமிழ்நாட்ட்வர்கள் கொழும்பில் நிறையவே இருக்கிறார்கள்.அவர்கள் அந்தச் சிங்களவர்களது தமிழை மட்டுமே கூடுதலாகக் கேட்டிருப்பார்கள்.அந்தத் தமிழுக்குச் சில தமிழ் நாட்டவர்கள் வைத்த பெயராயிருக்கலாம் "சிங்களத் தமிழ்".
நான் இணையம் தொடங்கிய பிறகே அறிகிறேன் எங்கள் தமிழை இப்படியும் சொல்கிறார்கள் என்று !அதற்காக நந்தா,தெனாலியில் வரும் தமிழும் முழுதாக நாங்கள் கதைக்கும் தமிழ் அல்ல.
கதிர் சரியாக அறிந்து வைத்திருக்கிறார்.அநேகமாக அவர் உங்களுக்கு விளக்கமாய்ச் சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன்.
நன்றி கதிர்.
ரவி....வாங்கோ வாங்கோ.கும்மி பலமாயிருக்கும்ன்னு கணக்குப் போட்டேன்.பிழைச்சுப் போச்சு.
திருந்தீட்டீங்களோ !
நசர் கூடத் திருந்திட்டாராம் !
ரவி...சின்னக் கல்லு பெருத்த லாபமா...பெத்த லாபமா ?
பாருங்கோ ஒரு சொல்லு எப்பிடித் தமிழைப் பிரட்டிப்போடுது !
***********************************
அஷோக்...எங்கட தமிழைச் சரியாப் பாத்துப் பழகிக்கொள்ளுங்கோ.
அப்பத்தான் நல்லாச் சண்டை பிடிக்கலாம் என்னோட.
வீட்ல வாய்காட்டினா "பார் வாய் மட்டும் வங்காளம் மாதிரி"எண்டுதான் பேச்சு விழும்.
கணவன் மனைவியை அடிக்க முடியுமான்னு கேட்டிருக்கீங்க.அடிக்க முடியும் ஆனா அடிக்கக் கூடாது.
எங்களுக்கும் கை இருக்கிறதை அடிக்கடி ஆண்கள் மறந்துபோகினம் !
உப்புமடச் சந்தி டெம்ப்லேட் நான் ஆசையா விரும்பிப் போட்டது.
அவையள் எல்லாம் எங்கட உங்கட சொந்தக்காரர்கள்தானே.ஏன் பயப்பட வேணும்.அவையளோட இருந்துதானே கதை பேசலாம் வாங்கோ எண்டு சொல்லியிருக்கிறன்.
என்னைக் கிண்டல் அடிச்சு பின்னிப் பின்னி நாலு பின்னூட்டம்.அதுக்கு நான் காசு தரவேணுமோ.சரி ஹேமா காசு குடுத்துத்தான் பின்னூட்டம் வாங்குறா எண்டு எல்லாரும் சொல்லட்டும்.
ஜெய்..சின்னப் பேச்சு.பெரிய சண்டை.பாலாஜிதான் உருவாக்கம்.நான் வெறும் ரீமேக் மட்டும்தான்.அவர்கிட்டயே கேட்டுக்கோங்க அவர் இந்த விஷயத்தில எப்பிடின்னு !
நடா...."வங்காளம்" நீங்களும் ஞாபகத்தில வச்சுக்கோங்க.
வீட்ல அம்மணிகிட்ட சொல்லிப் பாருங்கோ ஒருக்கா !
தமிழ்....என் மொழி அசைவை இசைவோடு ரசித்தமைக்கு நன்றி.
ஸ்ரீராம்.//எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக்கிடக்கு"//ஓ...
"ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் பின்னோடு"நீங்கள் இப்பிடிச் சொல்லுவீங்களோ ?இரண்டின் கருத்தும் ஒன்று
போலத்தான் இருக்கு ஸ்ரீராம்.
சுந்தர்ஜி...வாங்கோ வாங்கோ.
உங்களுக்கும் எங்கட தமிழ் பிடிக்கும் போல.சரி...எழுதிடலாம் இனி.
கவிதைப் பகுதியிலகூட 2-3 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
கவனிச்சீங்களா சுந்தர்ஜி ?
ஜெயா...அந்தாளே மனுசி போன கோவத்தில கண் தெரியாமத் தடி தேடுது.அதோட அடிக்கவேண்டாம் எண்டு மனுசியோட சண்டை போட்டவர் இப்ப அடிக்கிறார் பெடியை.
இதில நீங்க வேற தடியை எடுத்துக் குடுக்கிறீங்களோ.பாவமப்பா பெடியன்.
இரண்டு பக்கமுமெல்லோ
அடி வாங்குறான்.
இன்னும் சில சம்பவங்களையோ சொற்களையோ சேர்த்திருப்பேன்.
பாலாஜியின் பதிவை அப்படியே தரவென்றே பெரிசாகக் குழப்பவில்லை ஜெயா.
படம் ஒன்று இணையம் உதவி.ஒன்று பாலாஜி தந்தது.பாருங்கோ அஷோக் அழகான தமிழ்ல சொல்லியிருக்கிறார்.
/லவுட்டியதுங்க/
இதுவும் ஒரு விதத் தமிழோ !
ஜெயாக்குட்டி எப்பிடி ?யாழ் தமிழோ இல்லை ஜேர்மன் தமிழோ !
நன்றி அக்பர் அன்பான வருகைக்கு.சொல்ல ஒண்ணுமில்லையா உங்களுக்கு !
நேசனுக்கு விளங்கேல்லையாக்கும்.நல்லாருக்கு மட்டும் சொல்லிட்டார் !
ராஜாராம் அண்ணா .... தெனாலி ஸ்ரீ அண்ணா....சிரிப்புத்தான் போங்கோ !
தலைவன் குழுமத்திற்கும் நன்றி.
ருத்ரவீணை....வாங்க.ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப் பக்கம்.இது என்ன புதுமையா.பிறந்த மண் தந்த மொழியைப் பேசவும் எழுதவும்.நன்றி வீணை ரசித்தமைக்கு.
நன்றி ஜெரி....அதேபோல நாங்களும் ரசிக்கிறோமே உங்கள் தமிழை.சில சமயங்கள் புரியாமல் தடுமாறவேண்டியும் இருக்கு.ஆனால் திரைப்படங்கள் உதவி செய்யுது.
சத்ரியா.....சரில்ல சொல்லிட்டேன் !ஓ...பாலாஜி நாகையா ?/யாழில் இசைப்பட்ட நாகைச் சண்டை.!/அழகாயிருக்கு.
வாங்க ஹுஸைனம்மா.
விளங்கிச்சா இந்தத் தமிழ் !
தாராபுரத்தான் ஐயா வாங்க வாங்க.அன்போட வரவேற்கிறேன் ஐயா உங்களை.உங்கள் பதிவுகள் வாசிப்பேன்.நிறையப் பிடிக்கும்.
இன்றைக்குத்தான் வந்திருக்கீங்க நன்றி ஐயா.
ஐயா ...குழந்தையை திரு திருவென முழிக்க வைத்து விட்டீர்கள்..
என்றிருக்கிறீர்கள்.எந்தக் குழந்தையை ?ஒருவேளை தாராபுரத்தான் குழந்தையையோ ?என் தமிழ் விளங்காமல் முழித்தீர்களோ !
கலா...சிங்களத் தமிழுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி.உங்கட மட்டக்களப்புத் தமிழும் ஒரு அழகுதான்.சில சொற்கள் எனக்கு விளங்குறதில்லை.
ஓமக்கா உந்த சத்ரியப் பெடியை என்ன செய்யலாம்.எனக்கும் தெரியேல்ல.உங்களுக்குக் கோவம் வாற அளவுக்கு எனக்கு வாறேல்ல.
அதாலதான் பேசாம இருக்கிறன்.
கோவம் வந்தா அந்தக் கன்ணுக்குள்ள கொஞ்ச நேரம் விளக்கெண்ணை விட்டு ஆளை வீட்டுக் கப்பில கட்டிப் போடுவம்.இனி வரட்டும் !
எனக்கும் முதல்ல விளங்கேல்ல அவர் எதுக்கு ஏன் என்ன சொல்றார் எண்டு !
கமல்...நன்றி.பிரபாட்ட இண்டைய பதிவிலதான் கேட்டிருக்கிறன்.இங்க போட்ட பதிவை ஈழத்துமுற்றத்தில போடலாமோ எண்டு.ஓம் எண்டால் போடலாம்.என்னத்தை....புதினம்.
எப்பவும் போலத்தான்.
ஓ...பத்மா வானொலி அறிவிப்பாளர்களைப் பற்றிச் சொல்கிறீர்கள்.நன்றி நன்றி வணக்கம்.
நவநீதம் அவர்களுக்கு நன்றி.என் புகைப்படம் வேண்டாம்.ஆனால் என் பதிவுகள் எடுத்துப் போடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
ஆனால் பதிவிடும்போது எனக்கு அறியத் தாருங்கள்.நன்றி மீண்டும்.
Hai Hema how are you and your beloved dougheter?. Is she in Canada now?.
கலக்குறீங்க...!
ஓ ... ஓ ... ஓ...
ச - பதிவ படிச்சு எனக்கும் நாக்கு இழுத்துகிச்சு....
ஓமம் (ச) ஆமாம் ஹேமா... திருந்திட்டேன்.... திருந்திட்டேன்.... திருந்திட்டேன்....
அது சரி ஆமாம் ம ஓமம் னு சொன்னா..... ஓமத்த என்னனு சொல்லுவீங்க???
அந்த பெத்த - தெலுங்கு பெத்த... இதுக்கு தான் சொல்லுவாங்க.. திருந்த செய் னு..
(பஞ்சதந்திரம்)படம் பாத்தா போதாது... அதுல இந்த வரி வரும் - திரும்ப பாருங்க.
//கணவன் மனைவியை அடிக்க முடியுமான்னு கேட்டிருக்கீங்க.அடிக்க முடியும் ஆனா அடிக்கக் கூடாது.
எங்களுக்கும் கை இருக்கிறதை அடிக்கடி ஆண்கள் மறந்துபோகினம்//
எவ்வலவோ மறக்குறானுங்க... இது ஒரு விஷயமா...
அது சரி... (சின்ன சந்தேகம்) உங்க கைய்ய ச பொன்னுங்க கைய்ய அடிச்சு ஒடச்ச பிறகு- உங்க கிட்ட ச பொன்னுங்க கிட்ட எப்டி கை இருக்கும்???
(இது யாறோ - என் லோகின் ல இருந்து போட்டிருக்கினம் - சதிவேலை னு நினைக்கிரேன் ) - இதுக்கு நான் எந்த வகையிலும் பொருப்பல்ல.
//(இது யாறோ - என் லோகின் ல இருந்து போட்டிருக்கினம் - சதிவேலை னு நினைக்கிரேன் ) - இதுக்கு நான் எந்த வகையிலும் பொருப்பல்ல.//
இது தனி கமென்ட் - முன்ன கமென்ட் கூட சேத்து படிக்க வேனாம்.
நன்றி ஜீவன்.பாலாஜி பதிவை எடுத்து ஒரு யாழ் கலக்கல்.சந்தோஷம்தானே !
ஹாய்...சுதா சாமியாரே இன்னும் லீவிலயா இருக்கீங்க சாமி.வந்திடுங்க சீக்கிரமா.
ம்...நிலா 15 ம்திகதி கனடா போய்ட்டா.எல்லாரையும் விட்டுப் போனதில ரொம்பக் கவலையா இருக்க.கிண்டர் கார்டன் போக மாட்டாளாம் !
ஓ...இரவீ....ரவி பேர்ல யாரோ கும்மியடிச்சிருக்காங்க.இவங்களுகெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்.சொல்லுங்க.
(ஓமம் இல்ல.ஓம்+ஓம்=ஓமோம்)ஓமோம்...இவங்க கையை ஒடிக்கிற வரைக்கும் எங்க கை மாங்கா பிடுங்கிட்டு இருக்குமாக்கும் !
ஓமோம்! ஓமோம் :))))
வெற்றி பெற வாழ்த்துகள் ஹேமா
//ஹேமா said...
முதலில் பாலாஜிக்கு என் மனம் நிறைந்த அன்பின் நன்றி.பாலாஜி //
நன்றி ஹேமா தங்களின் விளக்கத்தை இன்றுதான் படிக்கிறேன். எதோ இந்த பதிவை மீண்டும் படிக்கவேண்டும் என்று தோன்றியது. எனது பின்னூட்டம் தவறென்பதை கதிர் அவர்கள் சொன்னபோதே உணர்ந்துவிட்டேன். மேலும் அவர் அலைபேசியிலும் சொன்னார்.. தங்களின் விளக்கம் இப்போது தெரிந்துகொண்டேன்.. மிக்க மகிழ்ச்சி..
மேலும் தமிழ்மணத்தின் விருது போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஹேமா..
பாலாஜி...சிரித்துக்கொண்டேன்.இத்தனை காலத்துக்குப்பிறகும் உங்கள் பதிவை ரசித்திருக்கிறீர்கள்.எனக்கும் மிகவும் பிடித்த பதிவு இது.
புரிந்துகொண்டமைக்கு நன்றி.
Post a Comment