Friday, November 27, 2009

தமிழ் தேசிய தலைவனின் அன்பும் கொக்கரிக்கும் சிங்களமும்.

இந்தியாவுக்கும் எதிரான சிங்களம்.



2008 ம் ஆண்டில் தலைவரின் உரை.



காப்புரிமை கொண்ட www.youtube.com இற்கு நன்றி.


உப்பு கரிக்கும் கண்ணீரில் மினரல் வாட்டர் பொரொஜக்ட்.


இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை
முடியாத வரலாறாக வாழும் என தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். நேற்று எழுதியுள்ள கடிதம் ஒன்றில் முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முரசொலியில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த பாயும்புலி பண்டாரக வன்னியன் என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், நானும் தமிழன் தானே என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, நீ தமிழன் தான் இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான் ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன் பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன் பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன் என்று சினந்து கூறுவதாக அமையும்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான் என கூறுவதாக அமையும்.இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார்.

இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982‐ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பாயும் புலி பண்டாரக வன்னியன் தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது விளக்கமான பதில் வீரம் கொப்பளிக்கும் பதில் அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டார வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டார வன்னியனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள் அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என முடியும்.

காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை பண்டாரக வன்னியன் ஒருவனல்ல் அவனைப் போல பலர் உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் என்பது குறிப்பிடதக்கது.

www.dmktamilnaadu.com

Monday, November 23, 2009

நான் ஒரு படம் பாத்தன்.

நானும் அப்பாவும் அம்மாவும் ஒரு பென்குயின் படம் பார்த்தம்.அது ஒரு நல்ல படம்.பென்குயின்ஸ் எல்லாம் தஙக்ளுக்குக் குஞ்சு வேணுமெண்டு கன தூரம் நடந்து நடந்து போகினம்.நிறையத் தூரம் நடக்கினம்.அங்க போய் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துணையைத் தேடி விரும்பிக் கல்யாணம் செய்திச்சினம்.

பிறகு அம்மாப் பென்குயினுக்கு முட்டை வந்தது.அவையள் நிறைய நாள் சாப்பிடாமல் இருந்தவை.அங்க நல்ல குளிரும் இருந்தது.பிறகு முட்டையை அப்பாட்ட குடுத்துட்டு அம்மா எல்லாம் சாப்பிட போயிட்டினம்.சாப்பிடுறதுக்கு திருப்பியும் நிறைய தூரம் நடந்து நடந்து போனவை.அப்பா எல்லாரும் முட்டையையும் வைச்சுக் கொண்டு நல்ல குளிருக்குள்ள நிக்கினம்.பாவமாயிருந்தது.அப்பாட்டை இருகேக்கையே முட்டையும் பொரிஞ்சுட்டுது.
அந்த குஞ்சுக்கு அப்பா வாயில இருந்து ஏதோ சாப்பாடு கொடுத்தார்.

பிறகு கொஞ்ச நாளில அம்மா எல்லோரும் திரும்பி வந்தவை.குஞ்சு அம்மாட்டை போய் வாயில இருந்து பால் வாங்கி குடிச்சுது. பிறகு குஞ்சை அம்மாக்களோட விட்டுட்டு அப்பா எல்லாரும் சாப்பிட நடந்து போயிட்டினம்.அவையளும் திருப்பி நிறைய தூரம் நடந்து நடந்து போகினம்.

சில குஞ்சு குளிரில செத்துப் போச்சுது.செத்துப்போன குஞ்சோட அம்மா பாவம்.வேற அம்மாட்டை இருந்து மற்ற குஞ்சை பறிக்க பார்த்தது.ஆனால் அந்த அம்மா குடுக்கேல்லை. சில குஞ்சை பருந்தும் வந்து கொத்திச்சுது.பாவம் குஞ்சுகள்.பிறகு அப்பாவும் அம்மாவும் மாத்தி மாத்தி குஞ்சை பார்த்துக் கொண்டினம்.மாத்தி மாத்தி சாப்பிடப் போச்சினம். ஒவ்வொரு முறையும் நிறைய தூரமாக நடந்து நடந்து போகினம்.

கடைசியில அந்த குஞ்சு எல்லாத்தையும் தனியா விட்டுட்டு அப்பா அம்மா எல்லாருமே போயிட்டினம்.எனக்கு அழுகை அழுகையா வந்தது.அந்த குஞ்சுகள் எல்லாம் பாவம்தானே? அவையளுக்கு தனியா இருக்க பயமா இருக்கும்தானே? அவையள் தனிய போனால் பருந்து எல்லாம் பிடிச்சு சாப்பிட்டுடும்தானே? அவையளுக்கு பருந்திட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதெண்டு தெரியாதுதானே? நான் அழத் தொடங்கிடன்.

பிறகு அம்மாவும் அப்பாவும் சொல்லிச்சினம் அவையளாவே எப்படி தப்பிக்கிறதெண்டு பழகிடுவினம் எண்டு.பிறகு பார்த்தால் ஒருத்தரும் சொல்லிக் குடுக்காமலே அந்தக் குஞ்சுகள் எல்லாம் தாங்களாவே தண்ணியில போய் கைகளை விரிச்சு விரிச்சு அடிச்சுக் கொண்டு நீந்தி நீந்தி போச்சினம்.அது பார்க்க நல்ல வடிவாயிருந்தது.ஆனா நான் அவையள்போல என்ர அப்பா அம்மாவை விட்டிட்டு போகமாட்டன்.எனக்குப் பயம்.அதோட நான் பெரிசா வளந்தப்பிறகுகூட நான் தான் தான் உழைச்சு அப்பாவையும் அம்மாவையும் பாத்துக்கொள்ளுவன்.எனக்கு நீந்தத் தெரிஞ்சாலும் போகமாட்டன்.

ஆனால் இப்ப எத்தனயோ மைல்கள் தாண்டித்தான் என்ர அப்பா அம்மாவை விட்டிட்டு வந்திருக்கிறன்.

யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது.கற்பனையாகவும் இருக்கலாம்.எனக்கு மெயிலில் வந்தது.நான் என்னை அக்குழந்தையாக்கி அதை மெருகேற்றிக்கொண்டது இப்பதிவு.

ஹேமா(சுவிஸ்)

Monday, November 16, 2009

இப்படியும் நடக்கிறது.

நான் இந்த வாரத்தில் அனுபவித்த நிகழ்வொன்று.அது அதிர்வுபோல்.அதற்குள்ளிருந்து இன்னும் மீளவில்லை.அதுதான் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

நான் ஒரு 8 மாத்திற்கு முன் என் தோழி அதாவது வேலை செய்யுமிடத்தில் ஒரு வருடச் சிநேகம் மட்டுமே.அவள் ஏதோ தன் கஸ்டம் சொல்லித் தனக்கு 200 Sfr பணம் தரும்படியும் மாத இறுதியில் தந்துவிடுவதாகவும் சொல்லிக் கேட்டாள்.கொடுத்தும் விட்டேன்.யாருக்கும் சொல்லவும் வேண்டாம்.தனக்கு அதனால் வெட்கம் என்றும் கெஞ்சாத குறையாய் கேட்டும் இருந்தாள்.அதன் பிறகு எங்கள் வேலை நேர மாற்றங்களாலும் என் விடுமுறை அவள் விடுமுறை என்று பிறகு சுகயீன விடுமுறை இப்படி இப்படியே ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் கிட்டத்தட்ட 4-5 மாதங்களாகிவிட்டது.அவள் போன் பண்ணிக்கூட உன் பணம் தரவேண்டும் எங்கு எப்படி என்ற கேள்வியே இல்லை.அதன் பிறகு போன மாதத்தில் ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு.அன்று கண்டபோது ஒரு வார்த்தை மட்டும் பணம் பற்றி வந்தது."ஐயோ உங்களை நான் காணவேயில்லை.காசு வச்சிருந்து வச்சிருந்து பாத்திருந்து செலவாயிட்டுது.இனி இந்த மாசம்தான் தருவேன்"என்றாள்.நான் தலையை மட்டும் ஆட்டினேன்.எனக்கோ கொடுக்கல் வாங்கல் என்பது சரியாய் இருக்கவேணும் என்பதில் உறுதியாய் இருப்பேன்.அவளை நிறையவே ஏதாவது சொல்ல வேணும்போல இருந்தது.
என்றாலும் வேண்டாம்.இனி எப்போதும் கொடுக்காமல்விட்டால் சரிதானே தரட்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.

சரி அந்த மாத இறுதிவரை திரும்பவும் இடைவெளி.காணவில்லை.சரியென்று பார்த்தால் வேலை நேர அட்டவணையில் திரும்பவும் ஒருமாத சுகயீன விடுமுறை போட்டிருந்தது.சரி அப்போ இந்த மாதமும் பணம் வரப்போவதில்லை என்றிருந்தேன்.யாரிடமும் சொல்லவில்லை இதுவரைக்கும்.இப்படியிருக்க என் நெருங்கிய தோழி மனதை அடக்கமுடியாமல் ஒரு நாள் சொன்னாள்.நான் அவவுக்கு 200 Sfr பணம் கொடுத்து 6 மாதமாகிவிட்டது.2-3 தடவைகள் கேட்டும்விட்டேன்.இப்போ இல்லை இல்லை என்கிறாவாம் என்று.எனக்குச் சிரிப்பாய் போய்விட்டது.சிரித்துவிட்டுச் சொன்னேன் நானும் கொடுத்திருக்கிறேன் என்று.என்னிடம்போலவே யாருக்கும் சொலவேண்டாமென்று சொல்லியே வாங்கியிருக்கிறாள்.சரி பார்க்கலாம் எப்போ தருவாள் என்றுவிட்டு இருந்துவிட்டோம்.

சரி சென்ற 5 ம் திகதியிலிருந்துதான் சுகயீன விடுமுறை.அதற்கு இரண்டு நாள் முன்னதாகவே தனக்கு முடியவில்லை என வராமல் நின்றுவிட்டாள்.பணம் தரவில்லையே தவிர எங்களோடு எப்பவும் போலப் பேசிச் சிரித்து சகஜமாகவேதான் இருந்தோம்.சரி 7 ம் திகதி எனக்குப் போன் பண்ணி எப்போ வரைக்கும் தனக்கு விடுமுறை போட்டிருக்கு என்று கேட்டாள்.அதற்கு நான் நாளை பார்த்து வருகிறேன்.நாளை நான் வேலை முடிந்து வர மாலை 3 மணியாகும் என்றும் வேலை இடத்திற்குப் போன் எடுக்கவேண்டாம் என்று சொல்லி வைத்தேன்.ஏனென்றால் காலை நேரங்களில் வேலை கூடவாயும் வெளித்தொலைபேசி அழைப்பு வந்திருக்கு என்று கவனத்திலும் இருக்கும்.

பார்த்தால் அடுத்தநாள் காலை 8.45 க்கு போன் எடுக்கிறாள்.என் நேர அட்டவணை பார்த்தீர்களா என்று.எனக்கோ நல்லாய் ஏறின கோவம் வந்துவிட்டது.நான் முதலில் கேட்டது."ஏன் இப்போ போன் எடுக்கிறீங்கள்.
உங்களுக்கு நேற்று என்ன சொல்லிட்டு வந்தேன்.வையுங்கோ போனை.நான் இன்னும் வேலை அட்டவணை பாக்கேல்ல.பாத்திட்டு வந்து வீட்ல இருந்து சொல்றேன்" என்றுவிட்டுப் போனை அணைத்துவிட்டேன்.

என் பக்கத்தில் இன்னொரு எங்கள் அண்ணா ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.நான் இன்னும் கோபம் முடியாமல் திட்டிக்கொண்டிருந்தேன்.போனவாரம் சுகயீனம் என்று அறிவிக்க இன்னொரு சிநேகிதியின் வீட்டுக்குக் காலை 4.30 Am மணிக்கு போன் பண்ணியிருக்கிறாள். "வேலையிடத்துக்கு போன் பண்ண வேணும் என்னிடம் போன் நம்பர் இல்ல தாங்கோ" என்று கேட்டு.குழந்தைகள் கணவன் எல்லாரும் தூக்கம் கலைந்து எழும்பியிருக்கிறார்கள்.ஒரு வருடமாக வேலை இடத்து போன் நம்பர் இல்லாமல் இருந்திருக்கிறாள்.இதுவும் ஒரு செய்தி.

அப்போ அதையும் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தேன் நான்.பக்கம் இருந்த அண்ணா என்னைப் பேசினார்."ஏன் இப்போ இவ்வளவு கோபம் உங்களுக்கு உங்களுக்குத்தான் உடம்புக்குக் கூடாது.சத்தம் போடாதேங்கோ என்று.அதோட அவர் சொன்னார் அவ ஆள் சரில்ல. கவனமாய் இருங்கோ.சரியான சுயநலக்காரி.பழக்கவழக்கங்களும் சரில்ல.கொடுக்கல் வாங்கல் ஏதும் வச்சுக்கொள்ளவேண்டாம்" கவனம் என்றார்.எனக்கு மூளையில் பொறி தட்டியது.ஏன் அப்பிடி சொல்றீங்கள் என்று அவரை நோண்டத் தொடங்க அவரும் 100 Sfr பணம் கொடுத்துப் பத்து மாதங்களாம்.

அவள் எங்களைவிடக் கொஞ்சம் வித்தியாசமாகவே எல்லோருடனும் பழகியும்வந்தாள். ஆண்கள் பெண்கள் பேதமில்லாமல் எல்லோரிடமும் எந்தக் கதையும் அரட்டை அடிப்பாள். ஆண்களை டேய் அத்தான் என்பாள்.மச்சான் அங்கிள் என்றென்றாள் பகிடியாய் கதைச்சுக் கொள்வாள்.எங்களுக்குத் தேவையில்லாத விஷயம் இல்லாவிட்டாலும் "கவனம் சரில்ல நாங்கள் இருக்கேக்க கதைகளைக் குறைச்சுக்கொள்ளுங்கோ" என்று மட்டும் சொல்லி வச்சிருக்கேன்.

சரி என்று நான் சாப்பிட்டுக்கொண்டிருக்க என்னோடு வேலை பார்க்கும் பிரேசில் பெண் மெலானி என்பவள் "ஏன் கோபமாய் இருக்கிறாய்" என்று கேட்க ஏன் எங்கள் பல்லைப் நோண்டி நாங்களே மணக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் சிநேகிதி போன் பண்ணினதால் கோபமாய் இருக்கிறேன் என்று மட்டும் சொல்லி விட்டுவிட்டேன்.அதற்கு அவள் பிறகு "நீ அவளுக்குப் போன் பண்ணினால் அவள் எனக்கு ஒரு பரிசுப் பொருள் ஒன்று தரவேணும்.
காத்திருக்கிறேனாம் ,என்றும் கோபமாய் இருக்கிறேன் என்றும் சொல்லிவிடு அவளுக்குப் புரியும்" என்றாள்.நானும் சரி என்று வேலையில் மூழ்கிவிட்டேன்.

ஆனால் மண்டையில் ஏதோ ஒன்று குடையத் தொடங்கியது.மத்தியானம் சாப்பாட்டு வேளை மெலானி ஏன் அப்படிச் சொன்னாய்.அவள் ஏதாவது பணம் தரவேணுமா உனக்கு என்று கேட்க அவளும் 200Sfr பணம் கொடுத்து 6 மாதங்களாம்.எனக்கு அதன் பிறகு அடக்க விருப்பம் இல்லை.இப்போ நான்கு பேர் கடன் கொடுத்திருப்பதை உடைத்தேன் கோபத்தோடு.அவளுக்கு அதிர்ச்சி.அவள் உடனேயே போன் பண்ணிக் கேட்க சமாதனமாய் "சரி 22 ம் திகதி வந்துவிடுவேன்.உன் பணம் தந்துவிடுவேன் நீ எங்கிருந்து பேசுகிறாய் ஹேமா இருக்கிறாவா, சத்தம்போடாதே என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்தவும் அவள் சரி தராவிட்டால் மேலிடத்தில் சொல்லுவேன்" என்றபடி முடித்தாள்.

சரியன்று இருக்க எங்கள் பின்னாலிருந்து சாப்பிட்ட ஆபிரிக்கத் தோழர் "ஏன் மெலானி சத்தம் போடுது என்று கேட்க அவளும் சொல்ல நானும்" என்றான் அவன்.இன்னும் வேலை விட்டு விலகிய இருவரது பெயரையும் சொன்னான் இன்னும்.இப்பொழுது பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவர் சொல்லச் சொல்ல 19 - 20 பேராக கடன் கொடுத்தவர்கள் பட்டியல் உயர்ந்திருக்கிறது.கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரைக்கும் கை நீட்டப்பட்டிருக்கிறது.

பிறகு என்னைக் கேட்க வேணுமா.போன் எடுத்துப் பெரிய பிரசங்கமே வைத்துவிட்டேன்.உண்மையில் வெட்கமாயிருக்கிறது.ஒருவன் கேட்டான் உண்மையாய் "அவள் இலங்கைப் பெண்தானா.நான் 12 வருடமாக வேறு இலங்கையர்களோடு பழகுகிறேன். அவர்களுக்கும் இவளுக்கும் நிறைய வித்தியாசம்" என்று.எல்லாம் சொல்லித் "திரும்பி வருவதற்கிடையில் எங்கள் பணங்கள் இல்லாவிட்டாலும் அடுத்த நாட்டுக்காரன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவர்கள் முகத்தில முழியுங்கள்.எங்களைப்போல அவர்கள் அடக்கி வாசிக்க மாட்டார்கள்.இப்போதே கிட்டத்தட்ட 400 பேருக்கும் கதை பரவிட்டிருக்கு.இதனால் உங்கள் வேலைக்கும் ஆபத்து" என்று சொல்லி விட்டிருக்கிறேன்.நானும் 8 வருட காலமாய் வேலை செய்கிறேன்.இப்படி ஒரு தமிழ்ப் பெண்ணை நான் கண்டதில்லை.
வெட்கமாயிருக்கிறது.

கொடுக்கல் வாங்கல் என்பதில் மனிதனுக்கு நேர்மை இல்லாவிட்டால் அவனைப் போல ஒரு போக்கிரி உலகில் வேறு யாருமில்லை.இதைவிடச் சந்தியில் நின்று பிச்சையெடுத்துச் சாப்பிடலாம்.உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வெட்கப்படுகிறேன்.என்றாலும் வாழ்வின் அனுபவம் இது.இன்னும் வாழ்க்கையில் கவனமாயிருக்கலாமே !

ஆனால் சுவிஸ்காரனின் நல்ல குணத்தைப் பாருங்கள்.அவளுக்கு இது ஒரு மனநோய். இல்லையென்றால் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்கிறான்."எங்களுக்கெல்லோ தெரியும் எங்கட சனங்களைப்பற்றி !"

யூத்ஃபுல் விகடனில்...குட் புளொக்கரிலும் !

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 12, 2009

கோபத்தைக் களைவது எப்படி?

சின்னதாய் கதை ஒன்று கேட்போமா !

ஒரு துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது.அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார்.பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார்.பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது."என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன்.அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.பிறர் மீது போபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை.குற்ற உணர்வு பச்சாதாபம் தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம்.இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும்.அது இயற்கை.அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம்.அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம்.விழுங்கியது வெளிப்படவே செய்யும்.நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன.பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம். கோபமே அவசியமில்லை கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும்.மனம் வீணாகப் புண்படும்.கடுகடுப்புக்கு முகமும் கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம்.அடுத்தவரது சொற்களோ செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம்.ஆனால் உண்மையில் கோபமும் கோபமின்மையும் நம் மனப்பான்மையையும் மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும்.நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும்.உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும்.வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள்.அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான்.அது கோபமாகட்டும் வெறுப்பாகட்டும் அன்பாகட்டும் நல்லதாகட்டும் தீயதாகட்டும்.அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே.

இப்பொழுதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்ந்து விடுகிறேன்.இப்படியான கதைகள் எனகு அடிக்கடி மெயிலில் வருகிறது.என் மனநிலைக்கேற்ப நானும் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

"கோபம் என்பது பலவீனம் அல்ல அது பாவம்"

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.நன்றி...

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 05, 2009

ஆரம்பிக்கப்படாத வாழ்வு.

சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான்.அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள்.துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள்.வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.

குழந்தைகளின் சிரிப்பொலி பூக்களைச் சுற்றும் வண்டுகள் பக்கத்து வீட்டை அலசும் பெண்கள் பழைய கனவுகளை மீட்டெடுக்கும் முதியவர்கள் என்று அன்றாட இயல்போடு அன்றைய நாள்.அறை மூலையில் ஒரு எலி தன் குஞ்சுக்கு இரை தேடிக்கொண்டிருந்தது.முன்று நாட்களாகக் கிழிக்கப்படாத கலண்டர் சுவரில் காற்றில் அடிபட்டுக்கொண்டிருக்க எலி பயந்து ஓடத்தொடங்கியது.தேநீர் குடிக்க மனம் உந்தியது.ஆனாலும் இருப்பு ஒட்டிக்கிடக்கிறது எழும்ப இயலாமல்.

மெல்ல இருளை வரவேற்று மாலை வெயில் மறைந்திகொண்டிருக்க மெல்லிய கீறலாய் நிலவு வெளிப்பட்டது ஆனாலும் வெளிச்சம் தாராளமாய் இல்லை.இன்னும் யன்னலோடு ஒட்டியபடிதான்.எழுதி வைத்த கடிதம் அடிக்கடி தன்னைத் திரும்பிப் பார்க்கவென்று படபடத்துக்கொண்டேயிருக்கிறது.

மெல்ல இருள் விலகத்தொடங்கியிருந்தது.பறவைகள் இரை தேடவும் பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பால் கொடுக்கவும் தயாராகின்றன.பூக்களின் வாசனை அறையின் துர்நாற்றத்தையும் தாண்டி மனதை இதமாக்குக்கிறது.தூரத்தே ஒரு வீட்டில் ஒரு குழந்தை பள்ளி போக அடம் பிடித்து அழுவதும் கேட்கிறது.

தேநீர் தரவோ கேட்கவோ ஆடகள் இன்றி தாகத்தோடேயே மீண்டும் அதே யன்னல் கம்பிகளூடே ரசிப்பின் நாயகியாய்.இனிமையான காலை நேரப் பாடல்களும் பாடசாலை மாணவர்களுமாய் சாலை கொஞ்சம் நிரம்பியபடி.யாரும் அவள் பக்கம் திரும்பாமலே தங்கள் குறும்புகளோடு சிநேகித முகங்களோடு.இவளுக்குப் பொறாமையாய்கூட.ஏன் இவள் மட்டும் தனிமையில் கவனிப்பாரற்று.

கண்ணீர் யன்னலோரத்துப் புற்களை ஈரமாக்க தன் கைகளை இன்னும் இறுக்கி சூரியனின் வருகையையும் அடுத்த நாளின் ஆரம்பத்தையும் வரவேற்றபடி அவள்.

கதவுகள் எதுவும் திறக்கபடாததால் அறைக்குள் ஒரு இறுக்கம்.சூன்யம்போல அமைதி. ஒருமுறை அறை முழுதும் அலைந்து திரும்பவும் யன்னல் கம்பிகளை இறுக்கிக் கொண்டபடி. வெறுமையான சுவரும் கடைசியாகப் பார்த்த அப்பா அம்மாவின் அல்பமும் இன்னும் விரித்தபடி கிடக்கிறது.அவளின் இளமைக்கால நிழலும் எவ்வளவு சந்தோஷமாக அதற்குள். யார் இத்தனை சந்தோஷங்களையும் விழுங்கிக் கொண்டது.

ஏன் எல்லாம் அவள் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.தொலைபேசி அலறவில்லை.தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை.குளியல் அறையில் மாத்திரம் ஒரு துளி நீர் சொட்டும் சத்தம்.ஓ...அது இறுக்கப் பூட்டப்படாத குழாயின் கூப்பிடு குரல்.

ம்....மெல்லக் கதவு திறந்து மூடுகிறது.யாரோ அறை உடைத்து முன்னேறப் பார்க்கிறார்கள். உறவின் இரைச்சல்கள் அழுகையாய் ஆர்ப்பாட்டமாய் இரக்கமாய் அருகே கேட்கிறது.

இவர்கள் அவள் அறை துழாவத் தொடங்கிவிட்டார்கள்.அவள் இருப்பின் அடையாளங்கள் ஒவ்வொரு துகளிலும் இங்கு கிடக்கப் புறப்படுகிறது காற்றாய் அவள் கைகளும் கால்களும்.
உடல் அது உடல் அல்ல.வெறும் காற்றாய் அந்தர ஊஞ்சலாய்.கதவுகள் திறக்கப்பட்டதால் சுலபமாய் வெளியேற யன்னல் கமபிகளின் வியர்வைப் பிடியிலிருந்து மெதுவாய் வெளியே மெல்ல.சுலபமாய் இருக்கிறதே இப்போ உள்நுழையவும் வெளியேறவும்.

இப்போ அந்த யன்னலின் பின்பக்கமாய் அவள்.இன்னும் யார் யாரோ உள்நுழைய விம்மல் சத்தங்களினூடே அதட்டல் குரல்களும்.

இரன்டு நாட்களுக்கு முதல் தனிமையின் விரட்டல் அதிகரிக்க தலை தடவவோ கைகளை இறுக்கிப் பற்றவோ எவருமின்றி, உதிர உறவுகளை செய்திகள் வெளியேற்ற உச்சி வெயில் வெப்பியெழ இவளும் பைத்தியமானாள்.

கச்சிதமாகத் தனக்குப் பிடித்த உடையணிந்து அலங்கரித்தபடியே படுத்திருந்தாள்.
அவஸ்தையான வாழ்வு,தனிமை,சிறுவர்களின் பசிக் குரல்கள்,பிடிக்காத செய்திகள்.தன்னைத் தானே சூறையாடிய அந்த மயக்க மருந்துகள்.சொக்கிப் போகும் நிமிஷத்திலும் தான் விளையாடிய அந்த முற்றம்,மண்திண்ணை,ஒற்றைப்பனை.மயங்கிவிட்டாள்.மிஞ்சிக் கிடக்கும் உடலைத்தான் பார்த்து அழுகிறார்கள்.எங்கே போனார்கள் இத்தனை நாளும் இவர்கள்!

உடல் புரட்டி உடை தளர்த்தினாலும் கேள்விகளும் பதில்களும் நிரம்பி வழ்ந்தன.

ஏன் என்ன நடந்தது ? !!!

பரீட்சையில் தோல்வியோ...இல்லையே இப்போ பரீட்சைக் காலமில்லையே இரண்டு நாளைக்கும் முன்னமும் பார்த்தேனே தொலைபேசியோடு.நானும் கண்டேனே அடுத்த தெருப் பையனோடு யாரோ ஒருத்தியும் இங்க அடிக்கடி வருவாளே.அவளை இப்போதைக்குக் காணாவில்லை நான்.என்னதான் எழுதியிருக்காம் அதில.காட்டவே மாட்டார்களாம்.படிக்கவோ வேலைக்கோதானே இங்க தங்கியிருக்கிறாள்.

அதில்கூட அவர்களுக்கு முழுமையான விபரம் இல்லை.ஏன் எதற்கு யார் எங்கே எதுவுமே தெரியாது.ஆனாலும் வாய் அவிழ்ந்து புழுவாய்ப் பொய்த்துக் கொட்டுகிறது.அந்த நாற்றத்தைத் தாண்டி அவர்களின் பேச்சு காற்றோடு கலக்கிறது.தனிமையும் உறவுகளின் பிரிவும்தான் அவள் மனதை இறுக்கியது என்று.எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத வெறுமை. தொலைபேசியோடான சிநேகம்,கணணியோடான அளவலாவல், அத்தனைக்கும் தூரமான அவள் தேசம்.

அகற்றப்பட்ட அல்பமும் கடிதமும் கலண்டரும்.இப்போ நாற்றம் இல்லை.அத்தனை கதவுகளும் யன்னலும் திறக்கப்பட்டு மாலையும் காலையும் வெளிச்சம் உள்நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தது.இயல்பு வாழ்வு இயல்பாபகவே நகர்கிறது.குழந்தைகளும் பூக்களும் அப்படியேதான்.சில சமயங்களில் மாத்திரம் சூன்யமாய் வெறித்த பார்வையோடு சிலர் அந்த அறையையைப் பார்க்கிறார்கள்.வாழ்வேண்டிய வாழ்வைச் சூறையாடிய சந்தோஷத்தில் அந்தத் தினம்.நகர்வுகள் இயல்பானானாலும் பாரம் சுமந்த சில மனங்கள். அவளின் உடல் இல்லாமல் போய் ஒரு வாரமாகியிருந்தது.அந்தச் சுற்றாடலில் எல்லோரும் அவளை - அந்தச் சம்பவத்தை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள்.

யூத்புல் விகடனில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP