Tuesday, December 28, 2010

சுவிஸ்...ல் இன்றைய குளிரும் அழகும்.

Swiss - Bern ல் என் இருப்பிடத்தை அண்டிய பகுதிகள் மட்டும்...!ஹேமா(சுவிஸ்)

Thursday, December 23, 2010

உதவுவோமா.

மீண்டும் ஒரு புது வருடம் பூக்கத் தொடங்குகிறது.ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு நல்ல விஷயம் செய்யவென்று உறுதி செய்துகொள்வது என் வழக்கம்.அதன் முயற்சியில் சிலசமயம் நடக்கும் நடக்காமலும் போகிறது.ஆனாலும் தொடர்ந்துகொள்வேன்.எனக்கே அது இடைஞ்சலாகவும் வந்து சூழ்ந்துகொண்டதும் உண்டு.என்றாலும் முடிந்த உதவிகளைச் செய்வது மனதிற்கு ஒரு திருப்தி.பிறந்ததின் பயன்.

ஒரு நாள் காலைநேரம் ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது.ஒரு இளைஞன் ஒருவன் அலைகளினூடேயும் கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட அவன் அருகில் சென்றார்.அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான்."தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர்.

"ஐயா...வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது அலை உள்வாங்குகிறது.எனவே கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்துகொண்டிருக்கிறேன். இல்லையென்றால் அவைகள் செத்துவிடும்." என்றான் இளைஞன்."தம்பி! இந்தக் கடற்கரையோ பல மைல்கள் நீளமானது.கரை முழுவதும் ஏராளமான மீன்கள்
ஒதுங்கியுள்ளன.உன் முயற்சியால் ஒரு மாற்றமும் விளையப்போவதில்லை." என்றார் முதியவர்.இளைஞன் புன்னகைத்தான்.குனிந்து மற்றொரு மீனை எடுத்துக் கடலில் வீசியவாறே "மாற்றம் இந்த மீனுக்கு விளைந்துள்ளது ஐயா!" என்றான்.

நாம் செய்கின்ற சின்ன விஷயமானாலும் சம்பந்தப்பட்டவருக்கு அது பெரிதாகவும் தேவையானதாகவும் இருக்கும்.சென்ற வாரமொரு நிகழ்ச்சி பார்த்தேன் தொலைக்காட்சியில். திடீரென விபத்தில் இறந்த 15-16 வது மகனின் 11 உறுப்புக்களை அந்த நேரச் சோகத்தையும் தாண்டி தேவையானவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள் அவனின் பெற்றோர்கள்.யாருக்கு இப்படி ஒரு மனம் வரும்.அந்தத் தாய் அழுதபடியே தன் மகனை அந்தப் பதினொரு பேரிலும் பார்ப்பதாய்ச் சந்தோஷப் படுகிறார்.

இதற்குள் அப்பா சொன்ன கதையையும் சேர்த்துக்கொள்கிறேன்.

ஒரு கிராமத்திற்குச் ஒரு பெரியவர் சென்றிருந்தார்.சிறுவன் ஒருவன் அவரிடம் ஒரு ரூபாய் பிச்சை போடுமாறு கேட்டான்.அவர் அவனைப்பார்த்து "நான் உனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டதற்கு சிறுவன் ஐம்பது சதத்தை என் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஐம்பது சதத்திற்குப் கொஞ்சப் பழங்கள் வாங்கிவந்து விற்பேன்" என்று சொன்னான்.அவரும் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.

வருடங்கள் கழிந்தன.மீண்டும் அந்தப் பெரியவர் அங்கு வந்திருந்தார்.அப்பொழுது ஒரு பெரியவர் வந்து அவரை வீழ்ந்து வணங்கி "ஐயா...என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார்."மன்னிக்கவும்.எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே! நீங்கள் யார்?" என்றார் பெரியவர்."நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த பொழுது ஒரு சிறுவன் தங்களிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்டான்.நீங்களும் கொடுத்தீர்கள்.அந்த ஒரு ரூபாயை முதலீடாகக் கொண்டு அவன் பழ வியாபாரம் தொடங்கி இப்பொழுது ஒரு பெரிய பணக்காரனாகி விட்டான்.அந்தச் சிறுவன் நான்தான் என்று சொன்னார் அந்தச் சிறுவனான பெரியவர்.

ஒரு ரூபாய் என்ன பெரிய பணமா எம் வாழ்வின் ஓட்டத்தில்.ஒற்றை ரூபாய் ஒருவரின் வாழ்வையே புதுப்பித்திருக்கிறது என்றால் எத்தனை சந்தோஷம்.அவன் வாழ்வையே புரட்டிப் போட்டிருக்கிறது.இதுமாதிரிச் சின்னச் சின்ன உதவிகள் செய்யும் மனநிலைகூட இல்லாமலா நாங்கள் வாழ்கிறோம்.எங்கள் தோளை நாங்களே தட்டிக்கொடுத்து எங்களை நாங்களே உற்சாகப்படுத்தும் நிகழ்வுகள் இவைகள்.

வறுமையும் கையேந்துதலும் அசிங்கம் என்று அடுத்தவர்களைப் பார்த்து பேசிக்கொள்ளும் நாம் அதைக் குறைக்கவோ தடுக்கவோ என்ன செய்கிறோம்.

நம் நாடுகளில் நாளொன்றில் தெருவில் ஒரு விநாடி நின்று பார்த்தாலே ஆயிரம் உதவிகள் செய்ய்லாம்.அதற்காக வேலையற்றவர்களா நாம் என்றில்லை.நடக்கும்போது காலில் தட்டுப்படும் குப்பையை எடுத்து அதன் இடத்தில் போடலாம்.தெருக்கடக்கும் கண் தெரியாதவருக்கு உதவலாம்.பாரம் சுமக்கும் ஒருவருக்குச் சுமையைத் தூக்கித் தலையில் வைக்க உதவி செய்யலாம்.இப்படி எத்தனயோ.அன்று இரவு தூங்கப்போகையில் அன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்தாலே நின்மதியான திருப்தியான தூக்கம் வரும்.

எனவே அடுத்தவர் வாழ்வை மாற்றி எம்மையும் மாற்றிக்கொள்வோம்.
பிறக்கும் புதிய ஆண்டில் இருள் விலகி சந்தோஷ ஒளி பிறக்க நல்லன செய்வோம்.

Thursday, December 16, 2010

தொலைந்துபோவமோ தூரதேசத்தில்.


மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

வேப்பமரக் குயிலே...
குயிலே......என் வீடு இன்னும் இருக்கிறதா
ஏக்கமுடன் நீ பாடும் ஒற்றைக் குரல் ஒலிக்கிறதா
ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா......ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா
நேப்பிள்மர நிழலோரம் மெல்ல விழி மூடுகையில்
கேட்குதடி உன் பாடல்
தேம்புதடி என் இதயம்....

மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

வந்த இடம் ஒட்டவில்லை வாழ்நிலமும் கிட்டவில்லை
சொந்தமும் பக்கமில்லை சொல்லியழ நேரமில்லை
சொல்லியழ நேரமில்லை
சொல்லியழ நேரமில்லை......சொல்லியழ நேரமில்லை
இந்த நிலை மாறி எங்கள் சொந்த மண்ணைச் சேர்வதெப்போ
அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ
அழுது துயர் தீர்வதெப்போ....

மறந்து போகுமோ மண்ணின் வாசனை.
தொலைந்து போவமோ தூர தேசத்தில்.
தூர....தூர....தூர....தூர தேசத்தில்.

தூர தேசத்தில்.....
தூர தேசத்தில்.....
தூர தேசத்தில்.......................!!!!!!

பாடியவர் - சுகல்யா ரகுநாதன்.
வரிகள் - கலைவாணி ராஜகுமாரன்.

Monday, December 13, 2010

தொலையாத ஞாபகங்கள்.

தட்ஷணாமூர்த்தி


நினைவலையொன்று வீசியடிக்கிறது இன்று தொலைபேசியூடாக அம்மாவோடும் அப்பாவோடும்.

ஞாபகங்கள் ...இதுதான் எங்கட பலஹீனம்.எல்லாத்தையும் மனசுக்குள்ள பொக்கட் போல நிரப்பி வச்சுக்கொண்டு திரியிறம்.அது உடம்பு முழுக்க ஊர்ந்தபடி திரியுது.எதையும் பெரிசா நினைக்காமல் மறந்திட்டா நிறையப் பிரச்சனைகள் குறையும்.ஒதுக்கித் தள்ளி வச்சிட்டு இதுகள் இல்லாட்டி எங்களுக்கென்ன எண்டு இருக்க முடியாமல் இருக்கு.

லண்டனில இருந்து வாற தொலைக்காட்சியில ஒரு விளம்பரம்.அதில கோயில் திருவிழா. அங்க ஒரு மேளச்சமா.அதைப் பார்த்தால் ரசிச்சுச் தொலைச்சிட்டுப் போகவேண்டியதுதானே. ஏன் உடன் எங்கட உப்புமடச் சந்தியடிப் பிள்ளையார் கோயில் ஞாபகத்துக்கு வரவேணும்.
அது துரத்தியடிக்குது ஊர் வரைக்கும்.

தூரமாய்க் கேட்ட மேளச் சத்தம் இப்ப பக்கதில கேக்குது.அந்த மண்வாசனை செம்பாட்டுப் புழுதியும்,பனக்கூடலும்,பனம்பழ வாசமும்,பன்னாடை,காவோலை,கொக்கறை,ஙொய் என்று பறந்து பயமுறுத்தும் மாட்டிலையான் அதைத்தொடர்ந்து....

அப்புக்குட்டி அண்ணாட்ட ஏதோ ஒரு பனைமரம் குறிச்சு அந்தப் பனைக் கள்ளுத்தான் வேணுமெண்டு வாங்கிக் குடிச்சிட்டு சித்தியை அடிக்கிற சித்தப்பா,அவரோடு சேர்ந்து குடிச்ச வேலுப்பிள்ளை அண்ணை வடக்கு வீதியில மேளச்சத்தம் கேட்டு கண்ணையும் பூஞ்சிக்கொண்டு வாயையும் சப்பிப் புழுந்திக்கொண்டு "அடியுங்கோ நல்லா அடியுங்கோ" எண்டு தானும் தாளம் போட்டபடி அட்டகாசம் பண்றதையும் மறக்க முடியேல்ல.

நிலவில் நண்பர்கள் சூழ
கோயில் மணல் கும்பியில்
நான் தான் ராஜாவாய்.

அடுத்த நிமிடம்கூட
கேள்விக்குள் இல்லாத
விதை முளைத்து
வெளி வந்த வசந்த காலம்.

பூவரசம் தடியும்
கள்ளி முள்ளும்
காஞ்சூண்டி இலையும்
பிச்சு மறைச்சு
மூடியொரு பொறிக்கிடங்கு.

குண்டிக் கழுசானில்
தபால் போடலாம்.
மூக்கைச் சீறி
சட்டையில் துடைச்சபடி

நிலவு வெளிச்சத்தில்
ஒளிச்சிருச்சிருந்து பாக்க
பொறிக்கிடங்கில்
விழுந்து
அம்மா என்று அலறும்
யாரோ ஒருவர்
அடுத்த நொடி
அப்பா வாறார்.

மாயமாய் மறையும்
வித்தைக்காரன் நான் அப்போ!!!

சில நேரங்களில் இப்பிடி நினைவுகள் துரத்தி துரத்தி அடிக்கேக்க எங்கயாச்சும் ஒரு மூலையில குந்தியிருந்து அழவேணும் போலக் கிடக்கு.பக்கத்துக் கோயில்ல திருவிழா எண்டா முதல் நாளே லவுட்ஸ்பீக்கர்ல பக்திப் பாட்டுக்கள் கேக்கத் தொடங்கிடும்.கிட்டத்தட்ட வீடும் கோயில்போல ஆயிடும்.விடியக்காலேல எழுப்பிவிட்ருவா அம்மா.துளசிமாடம் சுற்றிப் பெரிய முற்றம்.அதைப் புழுதி பறக்கக் கூட்டிப் பிறகு புழுதி தணிக்க சாணகம் கரைச்சுத் தெளிச்சு முற்றம் நிறையக் கோலம் போட்டு வீட்டு முற்றத்தில கட்டில் போல ஒரு பெரிய திண்ணையோடு ஒரு பகுதி.அதையும் அழகா பசுஞ்சாணியால மெழுகிவிடுறா அம்மா.

வீட்டில சொல் பேச்செல்லாம் அந்த நேரத்தில ஒழுங்காக் கேப்பம்.ஏனெண்டால் இரவில கண்ணன் கோஷ்டி,சின்னமணி அண்ணையின்ர வில்லுப் பாட்டு,சின்னமேளம் எண்டு நடக்கும்.பிறகு விட மாட்டினம்.எல்லாரும் தோய்ஞ்சு குளிச்சு சாமி கும்பிட்டு பிடிக்காவிட்டாலும் விரதம் இருந்தே ஆகவேணும்.பசியெண்டா கண்ணுக்குள்ள பசிக்கும்.

அம்மா சமைக்க அடுக்குப் பண்றா.அம்மாவுக்கு தேங்காய் துருவி வெங்காயம் உரிச்செல்லாம் குடுப்பன் வீட்ல நிண்டா.அப்பாவும் ஒரு சாதரண தவில் வித்வான்தான்.போய்ட்டார் வேற எங்கேயோ சேவுகமாம்.நான் பள்ளிகூடம் போகேல்ல.பிள்ளையார் எல்லாம் அருள் தருவார் எண்டு திருவிழா நேரத்தில 2-3 நாளைக்குப் போகமாட்டன்.

சமைச்சு வச்சிட்டு கோயிலுக்குப் போய் வந்துதான் சாப்பிடுவம்.கோயில்லயும் சாப்பிடலாம். அன்னதானம் தருவினம்.அம்மாவுக்கு வருத்தம்.பிந்தினால் மயங்கி விழுந்திடுவா.அம்மா பூசை முடிய அவசரமா வீட்டை வந்து சாப்பிடுவா.நான் வரமாட்டன்.அம்மாட்ட குழப்படி செய்யமாட்டன் எண்டு சத்தியம் பண்ணிட்டுத்தான் நிப்பன்.அதுவும் விரதமெண்டா சத்தியத்தைக் காப்பாத்தவேணும்.

பூசை தொடங்குது.சுத்துப்பலி சாமியைச் சுத்துவினம்.தொடங்கும் ஆரவாரம்.ஆம்பிளைகள் பிரதட்டையும்,பொம்பிளைகள் அடியழிச்சும் வருவினம்.வடக்கு வீதிதான் அமர்க்களம். சாமியும் அப்பிடியே நிக்கும்.அப்படி ஒரு நிகழ்வு அதிலதான்.


இணுவில் தட்ஷணாமூர்த்தி,இணுவில் சின்னராசா,கைதடிப் பழனி,நாசிமார் கோயிலடி கணேசு.சமா எண்டா அதுதான் மேளச்சமா.அதுதான் கேட்டது எனக்கு இப்ப கொஞ்சம் முன்னால.அவையளை அதில கன நேரம் நிக்க வைக்கவெண்டே பெரிசா மைக் கொண்டு வந்து வச்சிடுவினம்.

தட்ஷணாமூர்தியின்ர வடிவைப் பாக்கவெண்டே பெட்டையள் கூடி நிப்பினம்.அவர்தான் தொடங்குவார் தெரியுமோ.நெஞ்சில மொத்தமா ஒரு சங்கிலி மீன் வச்ச பதக்கத்தோட சிரிச்சபடி மனுஷன் தொடங்கி வைப்பார்.அவரின்ர தவில் மழைபோல கொட்டித் தீர்க்கும். கடல் போல கொந்தளிக்கும் விரல்களில அத்தனை லயம்.பிசகாத தாளம்.கோபமாய் முறைச்சு சிரிச்சு தானே தாளமும் போட்டுக் காட்டித் தன் கலையின் அத்தனை வித்தையையும் கலந்து குழைத்துத் தரும் கலைக் கடவுள் அவர்.

மேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக்கணித வேழமெனத் திகழ்ந்த வித்தகன் என்பார்கள் அவரை.

ஈழத்து மேதை கொடுத்த லயத்தை அப்பிடியே கேட்டு வாங்கிக் கொள்கிறார் இணுவில் சின்னராசா.தடியன் சின்னராசா.கருவல் சின்னராசா எண்டெல்லாம் பேர் வச்சிருக்கிறம் அவருக்கு.மலைபோல பெருத்த உடம்பு.தந்ததை நான் அழகாக இன்னும் அழகாய் மெருகுபடுத்தி வாசிப்பேன் என்பதுபோல தாளக்கட்டோட பிசகாமல் வேர்த்து ஒழுக ஒழுக வாசிக்கிறார்.பக்கத்தில அவரின்ர மகனும் நிக்கிறார் தாளம் போட்டபடி.தட்ஷணாமூர்த்தியை நேர பார்த்தபடி என்னாலயும் ஏலும் என்கிற மாதிரி சிரிச்சபடி வாசிக்கிறார்.நாங்கள் கொஞ்சப் பெடியள் சுத்தி நிண்டு வேடிக்கை பாக்கிறம்.ஆனாலும் ரசிக்கிறம்.சிரிக்கிறம்.தாளம் போட்டும் பாக்கிறம்.ஆனால் அவையள் போடுறது வேற மாதிரிக் கிடக்கு.

விரதம்.பட்டினி சனங்களுக்குப் பசி.எண்டாலும் வெயிலுக்க நிக்குதுகள் மேளச்சமா ரசிச்சபடி.இதை விட்டால் இனி அடுத்த வருசம்தானே.


N.K.பத்மநாதன்

சின்னராசாவைக் கவனிச்சபடி கட்டையான ஒருத்தர்.கருப்புத்தான்.கை துருதுருக்கக் காத்திருக்கிறார் கைதடிப் பழனி.ஞானம் முட்டின தாள லயிப்பு சின்னராசவின்ர வாசிப்பில.அவர் குடுக்க இவர் வாங்கிறதுபோல அப்பிடியே எட்டிப் பிடிச்சுக்கொள்றார் பழனி.வாங்கிய வேகத்தில் தன் திறமையைச் சொல்லாமல் பார்வையாலயே கர்வமாய்ப் பார்த்தபடி வெளுத்து வாங்குகிறார்.தாளம் ஏற ஏற அவரை விட தட்ஷணாமூர்த்தியும் சின்னராசாவும் வித்துவத்தில் திறமையாய் இருந்தாலும் தானும் சளைத்தவரில்லை என்பதைப் புன்னகைத்தபடி தவிலில் சொல்லிக் காட்டியபடி வாசிக்கிறார்.

இது ஒரு சோர்வில்லாத சமர்.தாளத்தை மெட்டுக்குள் அடக்கும் வித்தை.கைமாறும் தாளக்கட்டு தவிலுக்குள்.பசி பறந்திட்டுது.அம்மாகூட வீட்டை போகாம மயங்கியும் விழாமப் பாத்துக்கொண்டிருக்கிறா. பிள்ளையாரப்பா அழகா ரசிச்சபடி இருக்கிறார்.பசிக்கேல்ல அவருக்கும்.

நிலை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்த வேகத்திலயே மேளச்சமா நாச்சிமார் கோயிலடி கணேசு,வாக்கர் கணேசு எண்டு சொல்ற அவரிட்ட போய்ட்டுது.அவர் கால்களை அகல வச்சபடி தாளத்தைக் காலில போட்டுக்கொள்றார்.தாளக்காரருக்கு ஒரு முறைப்பு.தவில் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு வித்தியாசம் காணலாம் வாசிக்கும் தன்மையிலும் தவிலின் நாதத்திலும் கூட.கணேசு வாசிக்கும்போது உடம்பு அசையாது.வெத்திலை வாய் நிறைய எப்பவும் இருக்கும்.கோயில்ல வாசிக்கும்போது மட்டும் இருக்காது.நாசூக்கான வாசிப்பு எனலாம்.

கானமூர்த்தி பஞ்சமூர்த்தி

கண்கள் விரிய காது அடைக்க ஆனாலும் தூரமாய்ப் போகாமல் பக்கத்தில நிண்டு பார்ப்போம்.ஒருத்தை ஒருத்தர் போட்டிபோல யாரையாச்சும் தடக்கி விழுத்தவேணும் எண்டுதான் வாசிப்பினம்.யாருமே தாளம் பிசகாம லயம் குழம்பாம வாசிப்பினம்.ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவை இல்லை.வீச்சுக் குறையாத கலைச் செல்வங்கள்.அந்த நாதம் எல்லாம் காற்றில் தொங்கி நிற்கிறது இப்போ.அவர்களும் இல்லை இப்போ.வாரிசுகள் அவர்கள் அளவுக்கு இல்லாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ.........புத்தர் சிலையோ......!!!

இதில் குறிப்பிட்ட கலைஞர்களை விட இவர்கள் காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்.

கோண்டாவில்(மூளாய்) பாலகிருஷ்ணன் சகோதரர்கள்
அளவெட்டி குமரகுரு
இணுவில் கோவிந்தசாமி
அளவெட்டி பாலகிருஷ்ணன்
சட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் - தவில்
காரைதீவு கணேஸ் - நாதஸ்வரம்
சாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம்
அளவெட்டி S.S.சிதம்பரநாதன்
அளவெட்டி M.சிவமூர்த்தி - நாதஸ்வரம்
அளவெட்டி R.கேதீஸ்வரன்
யாழ்பாணம் K.நாகதீபன்.
இணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள்

(இன்னும் அறிந்தவர்கள் பெயர்களிருந்தால் அறியத்தாருங்கள்.)

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP