Friday, December 30, 2011

இதுவும் காதல் !

தாமரை நடப்பதை யாராவது பார்த்திருப்பீர்களா.நான் காண்கிறேன்.படிக்கிற காலம் தொட்டு இப்போ வேலைக்குப் போகும் காலம்வரை.தாமரை இரட்டைப் பின்னல் அசைய கையில் இறுக்கிய புத்தகங்களோடு வந்துகொண்டிருந்தாள்.அவளைப் பார்க்கவென்றே காத்திருந்த சரண் பார்க்காதவன்போல சைக்கிளின் அருகில் நிலத்தில் எதையோ தேடுபவன்போலப் பாசாங்கு செய்தபடி குனிந்தபடி தன்னைக் கடக்கும் தாமரையின் அழகை ரசித்தபடி தன் ஆன்மாவை அவள்பின் தொடரவிட்டு ஒரு பாடலை முணுமுணுத்தபடி மனச்சாட்சியிடம் தான் தாமரையைக் காதலிப்பதாகப் பொய் சொல்லிக்கொண்டிருந்தான்.இரண்டு வருடங்களுக்கு மேலாகவே இந்த விளையாட்டுத் தொடருவதை மனச்சாட்சியும் ரசித்தபடிதான் இருக்கிறது.
சரணைக் கடந்து போன தாமரை தன் நெருங்கிய தோழி வீணாவுடன் மிக சுவாரஸ்யமாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.சற்று நேரத்தில் வீணா அந்த இடம்விட்டுப் போன பிறகு நேரே சரணை நோக்கி வந்தவள் திடீர் என்று கையில் இருந்த புத்தகமொன்றை வேண்டுமென்றே அவன் காலடியில் நழுவவிட்டு இதழோரம் புன்னகை குவித்தவளாய் அவனைத் தாண்டிச் சென்றாள்.இன்னொரு பாடல் தந்து கடந்தது வாசனைத் தாமரை.....!சரண் மெதுவாகப் புத்தகத்தை கையில் எடுத்தான்.இளம் தாய் ஒரு சிசுவை தழுவும் மென்மை அவன் கைகளில் குடியிருந்தது.அது யாரோ எழுதிய கவிதை தொகுப்பொன்று.புத்தகத்தின் இதழ்கள் வழியே ஒரு கடிதவுறை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.அவசரமாக கடிதவுறையைக் கிழித்து கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் தாமரை தந்த தாபால் உறைக்கு வலிக்குமோ...என்று காதலுக்கு மட்டுமே இருக்கும் ஒரு நேசம் சரணின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குரல் கொடுத்ததில் கடிதத்தை பிரிப்பதற்குள் அவன் கைகளில் தஞ்சமிருந்த கைக்கடிகாரத்தின் சிறிய முள் முப்பது முறை ஓடி மூச்சு வாங்கியது.காற்றில் தவழ்ந்து வந்த பாடலொன்று அந்த முப்பது நொடிகளைத் தாலாட்டியது.வலிக்காத போராட்டத்தின் இறுதியில் வெற்றியோடு கடிதத்தை பிரித்தான் சரண்."மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உங்கள் மடியில் புரளும் கற்பனை நினைவுகளை அசைபோட்டபடி....என் இதயம் எழுதுகோலுக்குள் இறங்கி வடிக்கும் என் முதல் மடல் இது....!

தாமரையின் முதல் வரிகள் அவள் கவித்துவத்தோடு சேர்த்து அவள் கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்தையும் சரணின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த அவனுக்கும் கவி நிறைந்த பாடலொன்று நினவிற்கு வந்தது."என் அன்புக்கு... நீங்கள் என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதனையும்,அதை எத்தனையோ தடவை சொல்ல வந்தும் உங்களால் சொல்ல முடியாமல் போனதனையும் நானறிவேன்"

அதே போல் தான் நானும்... உங்களை என் உயிருக்குள் வைத்து இரண்டு வருடமாக காதலித்தும் உங்களிடம் நேரடியாக சொல்ல முடியாமல் நான் வடித்த கண்ணீர் என் தலையணைக்கு மட்டுமே தெரியும்.என் இதயத்தின் சாவி உங்களிடம் இருக்கும்போது இனியும் அதை பூட்டி வைக்கும் சக்தி எனக்கு இல்லை.மேலும் .....

காதலித்த செய்தியைக் காதலர்க்கு சொல்லாமல் கணவருக்குச் சொன்னவர்கள் வரிசையில் என்னையும் வரித்து இறுக்க எனக்கு விருப்பமில்லை.அதனால் தான் என் இதயத்தை இந்த மடலில் இறக்கி வைக்கிறேன்.

எத்தனையோ பேர் எனக்காகக் காத்திருந்தாலும் என் மனது ஏற்றுக்கொண்டது உன்னை மட்டும் தானடா! இனி நீயே மறுத்தாலும் உன்னை என்னால் மறக்க முடியாது.நீ வேணும்டா செல்லம்...!"

இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
உங்கள் உயிர் தாமரை....!

அன்பைக் குழைத்து ஒருமையில் மயக்கியிருந்தாள் தாமரை.பூபாளம் பாடியது சரணின் மனது அவளோடு ....!வாசித்து முடித்த சரணால் சந்தோஷத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவன் கண்கள் ஆனந்த கண்ணீராய் பூக்களை உதிர்த்தது.கண்களை நீர் மறைக்க கடிதத்தை முத்தமிட்டபடியே கடித உறையைத் திருப்பினான்.

கடிதவுறையின் முன்புறமாக சிவப்பு நிற மையினால் எழுதப்பட்டிருந்த வாசகம் அவன் கண்களில் அப்பொழுதுதான் பட்டது.

"நான் எவ்வளவு முயற்சித்தும் உங்கள் நண்பன் ஆதியைச் சந்திக்க முடியவில்லை.தயவு செய்து உங்களுக்கு முடியுமானால் இந்த கடிதத்தை அவரிடம் சேர்க்கவும்!

அவன் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர்ப் பூக்களில் இப்போ உப்புக் கரிப்பதை உணர்ந்தான் சரண்.

முதல் காதலின் நினைவுகளை அழிக்கும் சக்தி எந்த நிமிஷக் கறையான்களுக்கும் இல்லை என்பதைச் சரண் யாரிடமும் சொல்லவில்லை இதுவரை.

வீட்டிற்குள் பந்து அடித்து விளையாடிக்கொண்டிருந்த மகனிடம்...

மது...வீட்டிற்குள் பந்து அடிக்காதே.ஏதாவது உடைத்தால் உதை வாங்குவாய்.

அவன் மனைவியோ....ம் என்ன இருக்கிறது இங்கு உடைக்க.10 ரூபாயும் பெறாத யாரோ கொடுத்ததாய் திருமணமாகி வந்தபோதே அவன் அறையில் இருந்த அந்தத் தாமரைவடிவ மெழுகுதிரியைத் தவிர.அந்த மெழுகுத்தாமரை பாடசாலை விழா ஒன்றில் தாமரைக்குக் கொடுக்கவென்றே வாங்கிக் கொடுக்காமல் விட்டது।அதைக் காணும்போதெல்லாம் அந்த விழாவில் தாமரை பாடிய பாடலொன்றும் அது யாருக்கோ பாடியிருப்பாள் என்று நினைத்தாலும், தனக்குத்தானென்று கற்பனையில் மிதந்த நினைவும் எப்போதும் வராமல் போனதில்லை சரணுக்கு!
பாடல்களுக்காகவே இந்தத் தொடரை எழுத விரும்பினேன்.அன்பின் சகோதரி ஆமினாவுக்கு மிக்க நன்றி.எப்போதும் தொடர்களைத் தொடர யாரிடமும் சொல்வதில்லை.

என்றாலும்....பாடல் ரசனையுள்ள.....


சுவாரஸ்யமாக எழுதுவார்கள் இவர்கள்.ரசிக்க விருப்பத்தோடு இவர்களைத் தொடரச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறேன் !

Wednesday, December 28, 2011

தமிழ்...உலகெங்கும் தமிழ்.

பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்...!

[செவ்வாய்க்கிழமை,27 டிசெம்பர் 2011,08:23.11 PM GMT]
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் பிரான்ஸ் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.

இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி,தேசியப்பூ,தேசிய மிருகம்,தேசியப் பறவை,தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.நன்றி லங்காஸ்ரீ.

Monday, December 19, 2011

பச்சைக் கலர் தேத்தண்ணி.

தேநீரைச் சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் "கிரீன் டீ" என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ?

தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நமக்கு புரியாமல் போய்விட்ட ஆனால் அற்புதமாகக் கிடைத்த ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர்.

இந்தத் தேநீர் மகத்துவமானது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நான் நினைப்பதற்குக் காரணம்.

இந்தத் தேநீரை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது எனவும் இந்தப் பச்சைத் தேநீர் உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யு.கே பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கிறது.

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது பச்சைத் தேநீர் வரலாறு.எனினும் சீனா,ஜப்பான்,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது என்கிறார்கள்.எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் உள்ள இரகசியம் இந்த பச்சைத் தேநீர் தான்.

அவர்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது.உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும்,காயத்தை ஆற்றவும்,உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும்,செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும்,மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம்.

பச்சைத் தேநீரின் மகிமையை வியக்க வியக்க முதல் புத்தகத்தை எழுதியவர் ஒரு ஜென் துறவி.இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இப்புத்தகத்தில் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீரை ஒரு சர்வரோக நிவாரணி என்கிறார்.

உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார்.குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம்.இந்த நூல் வெளியான ஆண்டு 1191.

நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர் பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார்.

தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.

ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேநீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார்கள் மருத்துவர்கள்.

நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும் உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள்.எல்லாவற்றுக்கும் மேலாக எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது.

உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேநீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன் உடலின் கொழுப்பைக் கரைத்தும் குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது.

கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது.தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் வெள்ளை,மஞ்சள்,கறுப்பு,பச்சைத் தேநீர் என வகைப்படுத்தப் படுகிறது.

பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது.இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.

பச்சைத் தேநீர் தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்புச் சுவை சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.

சரி இந்தப் பச்சைத் தேநீரில் சிக்கல்களே இல்லையா என்றால் இருக்கிறது என்பதே பதில்.பச்சைத் தேனீரிலும் காப்பியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு.ஆனால் காப்பியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதியான செய்தி.

இதயம்,நுரையீரல்,குருதி,பல்,எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவிக்கிறது இந்தப் பச்சைத் தேநீர்.

கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது.வரக்காபி என்பதுபோல இது வெறுமையாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.

இது பச்சைத்தேயிலைப் பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.

மற்றைய தேநீர் போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை.அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.

கொதிக்க வைக்கப்பட்ட நீரில் தேநீர்ப் பையை சுமார் 1-2 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதைச் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கலாம்.

சுவைக்குத் தேவையானால் சீனி அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள் எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம்.

உண்மையில் நான் ஒரு நாளைக்கு 2 தரம் குடிப்பேன்.நீங்களும் குடித்துப் பாருங்களேன்.உடம்பு குறையாவிட்டாலும் (என் உடம்பைக் கிண்டல் செய்ய 2-3 பேர் காத்திருக்கிறார்கள்)உடம்பு நோயில்லாமல் சுகமாக இருக்கிறது எனக்கு !

நன்றி இணையம்.

Wednesday, December 14, 2011

புளிக்குதாம்...!இது ஒரு மரக்கறி இனம்.Stangen Rhabarber என்பார்கள் இங்கு.புளிப்போ புளிப்பு.கேக்,சூப் செய்வார்கள் !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP