Saturday, August 29, 2009

காதல்...

Tuesday, August 25, 2009

பழைய கொழும்பு.

இங்கே போட்டோக்கள் பழைய கொழும்பு நகரம்.[இலங்கை-கொழும்பு]எந்த ஆண்டில் என்றோ எந்த இடங்கள் என்றோ தெரியவில்லை.
2007 ல் என் இந்திய நண்பர் சந்தோஷ் என்பவர் தந்திருந்தார்.
சந்தோஷ் க்கு மிக்க நன்றி.









ஹேமா(சுவிஸ்)

Saturday, August 22, 2009

மன அழுத்தம் தொலைக்கலாம்.

மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும் நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டிய ஒன்று.அதுவும் இன்றைய நம் நாட்டுச் சூழலில் நிலத்திலும் புலத்திலும் அநேகம் பேர் இதன் பிடிக்குள் அகப்பட்டு அவதிப்படுகிறார்கள்.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர்.எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள்.அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது.ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும் கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம்,பயம்,நிராகரிப்பு,எரிச்சல்,அதிக வேலை,அதிக சிரத்தை,குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள்.சிலருக்கு அதிக வெளிச்சம்,அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறப்பு,இறப்பு,போர்கள்,திருமணங்கள்,விவாக ரத்துகள்,நோய்கள்,பதவி இழப்பு,
பெயர் இழத்தல்,கடன்,வறுமை,தேர்வு,போக்குவரத்து நெரிசல்,வேலை அழுத்தம்,கோபம், நட்பு முறிவு,உறவு விரிசல்,என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

எனவே எம் மன அழுத்தம் குறைக்கப் பத்து வழிமுறைகள்.இவைகள் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் எங்களுக்காக அதவது ஈழத்தமிழரின் பிரச்சனையால் நாங்கள் வேலை செய்யும் இடங்களில்கூட பாதிப்போடு இருக்கிறோம் என்று எங்களுக்கு ஒரு நாள் வகுப்பே நடத்தினார்கள்.ஜேர்மன் மொழியில் தந்ததை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

1)இது கொஞ்சம் ஆபத்தான விடயம்தான்.என்றாலும் இது போன்ற சந்தர்ப்பங்களை முன்னர் சமாளித்தது போல இப்போதும் சமாளித்துக் கொள்வேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

2)எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.எல்லாரும் எங்களைப் பாராட்ட வேண்டும் என்று முக்கியம் இல்லை.அந்த எண்ணமும் மன உளைச்சலைத் தரும்.

3)இப்படியான சந்தர்ப்பங்களில் எம்மை நாம் அலட்டிக்கொள்ளாது நிம்மதியாக மூச்சு விட்டு அமைதியாய் இருக்க முயற்சிக்க வேண்டும்.சிலர் யோகாசனமும் செய்கிறார்கள்.மெல்லிய இசை மனதை இதமாக்கும்.பசுமையான புல் தரையில் வெறும் கால் பதித்து நடந்து பாருங்கள்.பூக்களோடு பேசுங்கள்.

4)யார் யார், என்னென்ன சந்தர்ப்பங்கள் எங்கள் மனதைக் குழப்பின என்பதைத் தெரிந்துகொண்டு அப்படியான விடயங்கள் நபர்களை எதிர்கொண்டாலும் எம்மை நாமே தயார்படுத்தி வைத்திருத்தல் நல்லது.எந்த அதிர்ச்சியையும் எதிர்பார்த்து இருந்தால் மனதைத் தாக்காது.

5)என்னவிதமான சூழ்நிலையிலும் துணிவோடு முகம் கொடுத்து எங்கள் முயற்சிகளில் முன்னேற முயற்சித்தலும் சிறந்தது.

6)சொந்தக் கற்பனைக்கு வழிவிட்டு கண்களை மூடி ஒரு நிமிடம் மௌனமாய் இருங்கள்.சுய சிந்தனைக்கு அந்த நேரம் ஒதுக்கப் படலாம்.தெளிவு பிறக்கும்.

7)பிரச்சனைகளை மனசுக்குள்ளேயே வைத்துக்கொண்டு குமைந்து கொண்டிருக்காமல் நண்பர்களோடு அல்லது குடும்ப உறுப்பினர்களோடு மனம் திறந்து பேசி ஆராயவது மிக நல்லது.

8)மனம்விட்டுச் சிரிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வாய்விட்டுச் சிரித்து மகிழ்தல் வேண்டும்.கட்டுப்படுத்த வேண்டாம்.

9)எச்சரிக்கையாக ஆபத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகளைப் பற்றி விழிப்பாயிருத்தல் நல்லது.அவற்றை அலட்சியம் செய்ய வேண்டாம்.

10)தடைகள் தாமதங்களில் தோல்விகள் ஏற்பட்டால் அவை பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம்.ஆனால் அவற்றுள் பல நீண்ட கால நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில உதவியாகக்கூட அமையலாம்.

நான் இவற்றோடு போராடுகிறேன்.
சிலசமயங்களில் கை கொடுக்கவும்தான் செய்கிறது.
முயற்சி செய்துதான் பாருங்களேன் நீங்களூம்.

எம் நல்ல அனுபவங்கள் பரவசம்.கெட்ட அனுபவங்கள் பக்குவம்.

ஹேமா(சுவிஸ்)

Monday, August 17, 2009

அழகு...காதல்...பணம்...கடவுள் ?

வாங்கோ உப்புமடச்சந்திக்கு.கொஞ்சம் கதை பேசலாம்.கன நாளா இந்தக் கேள்விகளோடுதான் வாழ்வை உரசிக்கொண்டும் கெஞ்சியும் மிஞ்சியுமாய் என் வாழ்வு.அழகு,காதல்,கடவுள்,பணம் என்பது வாழ்வோடு எம்மோடு கலந்த ஒன்று.பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இவற்றை இறுக்கிப் பிடித்துக்கொண்டுதான் வாழ்வின் கைபிடித்து நடந்து கொண்டிருக்கிறோம்.இதில் எல்லாமே ஒன்றாய் எங்களிடம் பொருந்தியிருக்கும் அல்லது எங்களைத் தன் வசப்படுத்தியிருக்கும் என்றில்லை.

1)அறிவோடு இருப்போம் அழகு இருக்காது.பணம் இருக்கும் அழகு இருக்காது.

2)கல்யாணம் செய்து குழந்தைகள்கூட இருக்கலாம்.காதல் இருக்காது.அல்லது விரும்பிய காதல் தள்ளப்பட்டு விரும்பாத ஒரு காதலுக்குள் திணிக்கப்பட்டிருப்போம்.

3)அதுபோல கடவுள் என்பது[வர்]என்ன? இருக்கா இல்லையா? உலகின் இயற்கையை வளப்படுத்துவது கடவுளா?அப்படிக் கடவுள்தான் என்றால் ஏன் என் மக்களின் இத்தனை அவலம்?புளுக்களோடு சிநேகம் கொள்ள முயற்சிக்கும் என் அத்தனை சனங்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களா?

4)அடுத்து பணம்.பணம்தான் வாழ்வா?வாழ்வுக்குப் பணம் தேவை என்றாலும் பணமேதான் வாழ்வு என்று என் மனம் நினைக்க மறுக்கிறது.உறவுகளைப் பிரிந்து இருப்பதாலோ என்னமோ அன்பை மட்டுமே மனம் தேடி நிற்கிறது.கள்ளமில்லா பொய்யில்லா அன்பு எங்கே கிடைக்கும்?ஆனால் எதைக் கொடுத்தாலும் அது கிடைப்பது மட்டும் எட்டாக் கனியாகிறது.

கீழே உள்ள கேள்விகளை நான் இங்கு தொடர் பதிவாக்க நினைக்கிறேன்.என் மனதில் உள்ளதையும் எழுதுகிறேன்.ஒவ்வொருவரும் 3-5 பேரைத் தொடர் பதிவுக்கு கூப்பிட்டுக் கொள்வோம்.எல்லோரது கருத்துக்களையும் அடுத்தவர் மனம் நோகாமல் பகிர்ந்துகொள்வோம்.நகைச்சுவையானாலும் ஏற்றுக்கொள்வோம்.முரண்பட்ட கருத்தானாலும் வரவேற்று அதிலும் ஒளிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்வோமே !

1)அழகு என்பது என்ன ?நிரந்தரமானதா ?

மனதின் அழகு கண்கள் ஊடாக அன்பின் ஒளியோடு தெறிப்பதே அழகு.ஒருவரின் உருவமோ பருவமோ பணமோ பதவியோ அழகைக் கூட்டவோ குறைக்கவோ மாட்டாது.
அன்பு மட்டுமே அழகைக் கூட்டும்.
மனதின் அமைதியையும் தரும்.நிச்சயமாக அழகு நிரந்தரமற்றது.நொடியில் இல்லாமல் மறையும் ஒரு மாயை இந்த அழகு.


2)காதல் மனிதனுக்கு அவசியமா ?

உயிர்கள் பிடிப்போடு வாழக் காதல் மிகவும் தேவையான ஒன்று.காதல் இல்லாத வாழ்வு பாலைவனம்போல ஈரப்பிடிப்பற்று இருக்கும் எதிலும் பற்றுதல் இருக்காது.காதலில் பற்று உள்ள ஒருவரால் எதையும் சாதிக்க முடியும்.நேசிப்பைக் கொஞ்சம் ஆழமாக்கினால் ஊறும் நீரே காதல்.உடலைத் தாண்டி உள்ளத்தை நெருங்க முயல்வது காதல்.உண்மையும் உயிரும் கலந்தால் காதல் வாழ்வின் பலம்.பலஹீனம் அல்ல.

விழியோடு ஒரு சொட்டுக் கண்ணீர்.
அதுபேசும் உன்னோடு.
நிமிடம்...
பேச நேரமில்லை உனக்கு.
நின்மதியில்லை எனக்கு.
நீ நினைக்காத நேரங்களில் எல்லாம்
கவிதைகள் கிறுக்குகிறேன்.
உன்னை நினைக்கும்
எனக்கான தருணங்களையும்
எடுத்துவிடு என்கிறாய்.
நானோ...
உன் கை கோர்த்து நடக்கிறேன்
காதல் குழந்தை பின் தொடர !!!


3)கடவுள் உண்டா ?

இருக்கிறதா இல்லையா என்கிற ஆடுபாலத்திலேயே நான்.சில இடங்களில் மறுத்தாலும் சிலசமயம் ஆம் என்கிறேன்.கடவுள் வழிபாடு என்பதை மனிதனை நல்வழிப்படுத்த ஒரு வாழ்வின் நல்வாய்பாடு.ஆனால் கடவுள்?என்னைப் பொறுத்தவரை கடவுளே அகதியாய் இங்கு எங்களோடு.நாடு கடக்கும்போது கொண்டு வந்துவிட்டதலோ என்னமோ அங்குள்ளவர்களைக் காப்பாற்ற முடியவில்லை கடவுளால்.


4)பணம் அவசியமா ?

அவசியம்.ஆனால் எங்கு எப்போ எதற்கு என்பதை உணர்ந்து செலவின் தேவைகளாலும் தெளிவு இருத்தல் நல்லது.பணம் வீண் பகையைச் சேமிக்கும்.உறவைக் கெடுக்கும்.உண்மை அன்பு பணத்திற்குப் பலியாகும்.வாய் இருக்கும் மனிதனைவிட வாயில்லாப் பணம் எதையும் சாதிக்கும்.நாய் தின்னாக் காசு நாலு இடத்துச் சச்சரவுகளையும் கொண்டு வரும்.எனவே வாழ்வுக்கு தேவையான பணம் மட்டுமே வாழ்வை வளமாக்கும்.
சந்தோஷமாக்கும்.வறுமைக் கொட்டில்களிலேதான் அன்பு கொட்டிக் கிடக்கிறது பணத்தைவிட.

நான் இந்தத் தொடருக்கு அன்போடு அழைப்பது...

கடையம் ஆனந்த்- மனம்

ஞானசேகரன்-அம்மா அப்பா

சக்தி-வீட்டுப்புறா

இரவீ-கண்டுகொண்டேன்

மேவீ-தினசரி வாழ்க்கை

ஹேமா(சுவிஸ்)

Monday, August 10, 2009

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.

ந்த வாரம் எனக்குக் கொள்ளு வாரம்.என்னவோ எங்கள் வேலை இடத்தில் உள்ள நம்மவர்கள் கொள்ளு பற்றியே கதைக்கிறார்கள்.காரணம் அவர்கள் குண்டாய்-ஒல்லியாய் இருப்பதே.எங்கேயோ றேடியோவில கொள்ளுத் தின்றால் ஒல்லியாகலாமாம் எண்டு சொன்னார்களாம்.சரி வேலை இடம் முழுக்கவுமே கொள்ளு தான்.சரியென்று நானும் கொள்ளு என்ன சொல்லுது எண்டு பாத்தேன்.சரியாத்தான் சொல்லியிருக்கினம்போல.பின்ன உங்களுக்கும் கொள்ளுத் தின்றால் கொளுப்புக் கரையும் எண்டு சொல்ல எண்டுதான் இந்தப் பதிவு.

அதோடு அத்திரி அவர்களின் பதிவிலும் தொப்பை "யூத்தின்" அடையாளம்...!என்கிற பதிவும் பார்த்தேன்.25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.இது அத்திரி சொன்னது. சரி கொள்ளு இனி என்ன சொல்லுது என்று பார்ப்போமே...

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது.அதாவது,
மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.


கொள்ளு சூப்

தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2

தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி,
சீரகம்,கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.


கொள்ளு ரசம்

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்

கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சிறிய வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள.

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)

ஜொள்ளு ன்னு நினைக்காமல் தொப்பை வச்ச எல்லோருமே கொள்ளு பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா ! (உதவி - இணையம்)

ஹேமா(சுவிஸ்)

Friday, August 07, 2009

இன்னைக்கு ஒரு விசேடமுங்கோ !

ன்றைய நாளில் ஒரு விசேடம் தெரியுமா?வாழ்வில் இப்படி ஒரு தினம் காண்பது அரிதாம்.அது என்ன தெரியுமா?இன்றைய திகதியைக் கவனித்துப் பாருங்கள்.07.08.09 என்று வரும்.அதேபோல இன்று 12 மணி
34 நிமிடம் 56 நிமிடத்தையும் கவனியுங்கள்.இப்போ பாருங்கள்.இன்றைய திகதியோடு இணைத்துக் கொள்ளுங்கள்.1-2-3-4-5-6-7-8-9 என்று தொடராக இலக்கங்கள் வருகிறதல்லவா!இது இன்றைய என் சிந்தனை.எப்பிடி....!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 03, 2009

மம்மி சொல்லு சொல்லு...டாடி கேளு கேளு.

மம்மி...டாடி வீட்ல இருக்கீங்களா?இருந்தாலும் சீரியல் பாக்காம எங்களைப் பாக்க இல்லாட்டி நாங்க சொலறதைக் கேக்க கொஞ்சம் டைம் கிடைக்குமா ப்ளீஸ்...எங்க ஃபீலிங்ஸையும் கொஞ்சமாவது புரிஞ்சுக்குவீங்களா ப்ளீஸ்.

ம்யூட்டர்ல இல்லாட்டி மொபைல்ல அசின்,நயன் தாரான்னு ஸ்கிரீன் சேர்வர் வச்சா என்ன ஆகிப்போச்சு இப்போ.உலகக் குத்தமா?அட்டு மொபைலைக்கூட கொஞ்சமாச்சும் கலர்ஃபுல்லாக்குறதே அசின்தான்.
விட்டா...குலசாமி போட்டோவை ஸ்கிரீன் சேர்வரா வச்சுக்கச் சொல்லுவிங்க போல.உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க.கொம்யூட்டரும் மொபைலும் இல்லாத காலத்திலயே நீங்க சுப்ரமணியபுரம் அழகர் மாதிரி "நடையா இது நடையா... - கொடி அசைந்ததும் காற்று வந்ததா...." ஹம்மிங் போட்டுக்கிட்டு அலைஞ்சதை.கொஞ்சம் றீ-வைண்ட் பண்ணிப் பார்க்க விஷயம் வேணாமா அதுக்கான கலெக்க்ஷன் தான் இப்போ நடந்திட்டு இருக்கு.எங்க ஃபீலிங்ஸைப் புரிஞ்சுக்கோங்க கொஞ்சம் பிக் பாஸ்.

ம்மாவுக்குக் கோவம் வந்தா "பாரு அப்பன் புத்தி அப்படியே"ன்னு ஃபாதரை இழுக்கிறாங்க.அப்பாவுக்கு பி.பி எகிறினா "பிள்ளையாடி பெத்து வச்சிருக்கே"ன்னு அம்மாவைத் திட்டுறாரு.பெத்த பிள்ளையைத் திட்டுவதில்கூட பரஸ்பரம் பழிபோடுறதில தெளிவா இருக்கீங்களே.இதையே பார்த்து வளர்ந்தா எப்படி எங்களுக்குள் ஒற்றுமை எண்ணம் வளரும்?யோசிச்சுத் திட்டுங்க மம்மிஸ்....டாடிஸ்.

நாங்க பிறக்கிறதுக்கு முன்னாடியே பிள்ளையை இப்படித்தான் வளர்க்கணும்.இந்த ஸ்கூல்ல படிக்க வைக்கணும்.இந்த டிகிரி சேர்க்கணும்.
இந்த மாதிரித்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு எல்லாம் குறிச்சு வச்சுக்கிறீங்க.எங்களுக்குன்னு சொந்தமா லட்சியம் ஆசைகள்ன்னு கிடையவே கிடையாதா?ஒரு நாளாவது பொறுமையா?'உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?நீ என்னவா ஆகணும்ன்னு ஆசைப்படுறே?உன் கனவுக்கு நாங்களும் உதவியா இருக்கோம்'ன்னு ஆறுதலாய்ப் பேசியிருக்கீங்களா?ஒரு முறை அப்பிடிச் செய்து பாருங்க.உங்கமேல சத்தியமா நாங்க ஆயுசுக்கும் தவறான பாதையில போக மாட்டோம்.

து அட்வைஸ் பண்ற பேரன்ட்ஸுகான அட்வைஸ்.நாங்க தப்பு பண்ணினா கண்டிக்கிற உரிமை உங்களுக்கு இருக்கு.ஆனா அதுக்கு நேரம் காலம் கிடையாதா?கரெக்டா சாப்பிடுற டைம் பாத்துத்தான் ஒவ்வொரு பூவா போட்டு அர்ச்சனையை ஆரம்பிக்கிறீங்க.தட்டுல கையை வச்சதும் திட்ட ஆரம்பிச்சா எப்பிடி எங்களுக்குச் சோறு உள்ளே இறங்கும்?எதுவா இருந்தாலும் சாப்பிட்ட அப்புறம் பேசுங்க.அப்பதான் நீங்க சொல்றதைக் கேக்கிற சக்தியாவது உடம்புக்கு இருக்கும்.

ங்களைத் திட்டுங்க.ஆனா எங்க ஃப்ரெண்ட்ஸ் என்ன தப்புப் பண்ணினாங்க.'அவன் மூஞ்சியே சரியில்ல.பார்த்தா ரவுடி மாதிரி இருக்கான்னு பார்வையிலேயே சீல் குத்தி ஏன் சர்ட்ஃபிகேட் தாறீங்க.
இதில வேற உங்க மார்க் என்ன... பசன்டேஜ் என்ன?ன்னு கேட்டு
அவங்களை டார்ச்சர் பண்றீங்க.சொந்த வீட்ல இம்சைன்னு வந்தா இந்த வீட்லயும் இப்படியா?ன்னு தெறிச்சு ஓடுறான் பாவம் அவன்.நண்பர்கள்
கூடி நல்லதையும் கத்துக்குவோம்ன்னு நம்புங்க.ப்ளீஸ்.

நாங்க ஃபிக்ர் பாக்கிறதா திட்டுறீங்களே.நாங்க உங்க காலம் மாதிரி இல்லாம சாதி சமயம் பாக்காம சமத்துவமா வாழ நினைக்கிறோம்.சீதன ஒழிப்பை நடைமுறைக்கு கொண்டு வாறதும் நாங்கதான்.அதுக்குத்தான் அல்லும் பகலும் குட்டிச் சுவர் மேல இருந்து குழுவாக் கூடி ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்கோம்.நல்லதையே பண்ணுவோம் இன்னைய தலைமுறை நாங்க.

போன வருடத்தில் ஏதோ புத்தகத்தில் படித்து நானே சிரித்துக்கொண்டது.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP