Sunday, January 31, 2010

செதுக்கிய மலைகள்.

பாருங்களேன்...மலைகளை அழகுபடுத்தியிருக்கிறார்களா....இல்லை இயற்கையே இயற்கையாய் அழகா !ஹேமா(சுவிஸ்)

Wednesday, January 27, 2010

தயங்காமல் பேசுவோம்.(தொடர்)

உடல் நிலை மனநிலை மாற்றங்களுக்கு என்ன சிகிற்சை முறைகள் எடுத்துக்கொள்வது ?

தனிப்பட்ட சிகிச்சைகள் கிடையாது.விட்டமின்கள் மனநல ஆலோசனை உடற்பசிற்சிகள் மூலம் இந்த நிலையைக் கட்டுப்ப்டுத்தலாம்.

பொதுவாக என்ன மாதிரியான மாதவிலக்குப் பிரச்சனைகள் உள்ளன ?

1) குறைந்த அளவு உதிரப்போக்கு.
2) உதிரப்போக்கே இல்லாமை.
3) அதிகப்படியான உதிரப்போக்கு.
4) சுழற்சி முறையில் மாறுதல்.
5) வலியுடன் கூடிய உதிரப்போக்கு.இன்னும் பல...

குறைந்த அளவு உதிரப்போக்கு...

இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம்.மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையின் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப்படுவது.உதாரணத்திற்கு வீட்டிலோ பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும்போது உடல் எடை தடாலென்று குறையும்போது உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது(உ+ம்: அதிக உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது)எண்டார்பின் என்கிற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டைத் தடுக்கலாம்.

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும் ரத்த சோகை வேறு நோய் இருந்தாலும் (உ+ம்:சிறுநீரக வியாதி இதய வியாதி போன்றவற்றினாலும்)உதிரப்போக்குக் குறையலாம்.

சினைப்பையில் PCOD(Poly Cystic Ovarian Disease)என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம்.சிலநேரங்களில் மிகச் சிறிய வயதிலேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்றுவிடலாம்.

இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் ?

முதலில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.ஈஸ்ட்ரோஜன் ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவைக் கணக்கிட வேண்டும்.ஸ்கேன் செய்து கர்ப்பப்பை சினைப்பை அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவர் D&C செய்து கர்ப்பப்பையின் உள் சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார்.

சில குழந்தைகள் 16 அல்லது 18 வயதில்தான் பருவம் அடைகிறார்கள்.இதனால் பிள்ளைபேறு பாதிக்குமா ?சிறு வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு 50 வயதைத் தாண்டித்தான் விலக்கு நிற்குமா ?

உடல்வாகு உணவு வளர்கின்ற சூழ்நிலை குடும்பப் பின்னனி ஆகியவற்றைப் பொறுத்து பூப்பெய்து வயது மாறுபடலாம்.சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும் சிலசமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம்.தாம்தமாகப் பூப்பெய்வதால் பிள்ளைப்பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படப்போவதில்லை.பூப்பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லை.

சிலருக்கு உதிரப்போக்கு 10 நாள்வரை இருந்து தொல்லை கொடுக்கிறதே ...ஏன் ?

பெரிய மனுஷியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை.பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவதும் உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கைதான்.உடல் வளர்ச்சியின்போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம்.சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோ ஏற்படலாம்.இது இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும்.ரத்தப்போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தச் சோகை ஏற்படும்.மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.பூப்புக்கு பின் ஒரு மாதத்திற்குள் பலமுறை வந்தாலும் பலமாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்துவிடும்.

சில பெண்கள் ஆரோக்யமாக உடல் வளர்ச்சி சரியாக இருந்தாலும் பூப்பெய்தாமலே இருந்துவிடுகிறார்களே அதற்குக் காரணம் என்ன ?திருமணமானால் சரியாகிவிடும் என்று சொல்லி அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பது சரியா ?அவர்களுக்குக் குழந்தை பிறக்குமா?இதை அறிய என்ன சோதனை செய்ய வேண்டும் ?

18 வயது தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும்.பியூட்டரி சுரப்பி தைராய்டு சுரப்பி போன்றவை சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு கருமுட்டைகளை உள்ளடக்கிய சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதால் மாதவிலக்குத் தோன்றுகிறது.அது தொடங்கவே இல்லையென்றால் பரிசோதனை அவசியம்.

நாளமில்லாச் சுரப்பிகளில் பாதிப்பு இருப்பின் அவற்றின் காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும்.தாயின் வயிற்றுக்குள் கரு உருவாகும்போதே அதன் சினைப்பை தொடக்கநிலை கருமுட்டைகளை உள்ளடக்கிக்கொண்டு வளர்கிறது.இது பிறவியமைப்பில் வளர்ச்சி பெறாமல் வரிக்கீற்று சினைப்பையாக(Streak Ovary)அமைந்துவிட்டால் செயல்படாமல் போய்விடும்.இதனால் பூப்பெய்துவது இல்லை.

இப்பெண்கள் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டால் மாதவிலக்குத் தோன்றும்.தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 21 நாட்களுக்கு மாத்திரை உண்கொண்டால்தான் மாதவிலக்கு மாதம்தோறும் வரும்.இவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது.சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இல்லாமலும் போகலாம்.

ஆனாலும் இவர்கள் தாம்பத்ய உறவு கொள்ள இயலும்.கர்ப்பப்பை இல்லாமல் யோனிக் குழாயும் இல்லாமல் அந்த இடம் சிறு குழியாக மட்டுமே இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் வடிவமைப்பு ஆப்பரேஷன் செய்துகொண்டால் தாம்பத்ய உறவில் சிக்கல் இருக்காது.

காசநோய் இளம்பிராய நீரிழிவுநோய்(Juvenile Diabetes)ஆகியவற்றால் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு இருந்தாலும் மாதவிலக்கு துளையற்ற கன்னிப்படலம் யோனி குழாய் அடைப்பு இருந்தாலும் உதிரம் வெளிவர இயலாமல் அடைபடும்.இவ்வாறு பூப்பெய்தியும் சூதகம்(Cryptorchidism)மறைந்திருந்து மாதவிலக்கிற்கு தடையேற்படுத்துவதை மறைசூதகம் என்று கூறுவர்.ஆப்பரேஷன் செய்து தடையை அகற்றி வழி செய்வதால் இவர்கள் பூப்பெய்தலாம்.குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு.

மாதாமாதம் விலக்கு முறையாக வந்தாலும் உதிரப்போக்கு ஒருநாள்கூட முழுமையாக இல்லாமல் சிலநாள் சிறுதுளிகளாக மட்டுமே வந்தால் அதனால் குழந்தை பிறக்காமல் போகுமா ?

மாதவிலக்கு ஒழுங்காக வந்து பாலின உறுப்புக்களின் வளர்ச்சி சரியாக இருந்து ஹார்மோம் கோளாறுகளுன் இல்லையென்றால் அரை வாரம் அரைமணிநேரம் என்று எப்படி வந்தாலும் கவலைப் படத் தேவையில்லை.

குறைந்த அளவு உதிரப்போக்கு உள்ளவர்கள் அதனால்தான் உடல் பருமனாகிறது என்றும் குழந்தை பிறக்காது என்றும் நினைக்கிறார்கள்.இரண்டுமே தவறு.பருமனாக இர்ப்பவர்களுக்கு உடலில் உள்ள கொழுப்புச் சத்தால்தான்.(Obesity)மாதவிலக்குக் சொற்பமாக இருக்கிறது.எடையைக் குறைத்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும்.

கர்ப்பப்பை குழாய் அடைப்பில்லை.கருமுட்டை வெடித்து வெளிவருவதில் பிரச்சனை இல்லையென்றால் குறைந்த உதிரப்போக்கு குழந்தை பிறக்கத் தடையாக இருக்காது.

ஆரோக்யமாக இருந்தாலும் சிலருக்கு பூப்பெய்திய நாளிலிருந்தே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் மாதவிலக்கு வருகிறது.இவர்கள் கர்ப்பம் தரிக்க இயலுமா ?வேறு ஏதேனும் தொல்லைகள் ஏற்படுமா ?

மாதாமாதம் விலக்கு வருபவர்களுக்கு ஆண்டுக்கு 12 முறை கருத்தரிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்றால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருபவர்களுக்கு அந்த வாய்ப்பு 4 அல்லது 6 முறைதான் கிடைக்கும்.அதுதான் வித்தியாசம்.வேறு தொல்லைகள் கிடையாது.

முதலில் மாதவிலக்கு சரியாக வந்து...திருமணத்திற்குப் பின் தள்ளித் தள்ளி வர ஆரம்பித்து பின்னர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை அதுவும் மாத்திரை சாப்பிட்டால்தான் வருகிறது என்றால் அதற்குக் காரணம் என்ன ?

ஹார்மோன் குறைபாடுகளால் இவ்வாறு ஏற்படலாம்.சோதனை மூலம் அறிந்து சிகிச்சையால் சரிசெய்யலாம்.சினைப்பை மாதம் ஒரு சினை முட்டையை விடுவிப்பது தடைப்பட்டாலும் சினைப்பையில் சிறுசிறு நீர்மக் கட்டிகள் தோன்றிவிடுகின்றன.இதை 'பலநீர்மக் கோளகக் கருவணுவகம்' (PCO- Poly Cystic Ovary)என்று கூறுவர்.ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

சினைமுட்டை விடுவிப்பைத் தூண்டும்(Ovulation Induction)சிகிச்சையே போதுமானது.அதற்கென உள்ள மருந்துகளை வருடக்கணக்கில் சாப்பிடுவது தவற்.நிரிழிவு நோய்க்கான மெட்ஃபார்மியா(Metformio)மாத்திரைகளாலேயே சரிசெய்ய இயலும்.

நீரிழிவு காசநோய் ரத்தச் சோகை போன்றவை அல்லது கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து பல ஆண்டுகள் சாப்பிட்டு நிறுத்தினாலும் இவ்வாறு நேரிடலாம்.

தொடர்ந்து சரியாக மாதவிலக்கு வரும்போது எங்காவது ஊருக்குப் போகவோ பன்டிகை வருகிரது என்றோ மாத்திரை போட்டு மாதவிலக்கை தள்ளிப் போடுவது இன்று பலருக்குப் பழக்கமாகிவிட்டது.இது சரியா ?இதனால் உடம்புக்குக் கெடுதலா ?

Primol-l போன்ற மாத்திரைகளால் மாதவிலக்கை விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்.அத்யாவசி காரணத்துக்காக எப்போதாவது ஒருமுறை அப்படிச் செய்யலாம்.அடிக்கடி இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவது நல்லதல்ல.ஹார்மோன் சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை என்பது உண்மையா ?

உண்மைதான்.ரத்தச் சோகையிலிருந்தும் அது மீட்கிறது.இம்மாத்திரைகள் அதிக உதிரப் போக்கைக் குறைக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது.

மாதவிலக்குச் சரியாக வந்தபோதிலும் இடைப்பட்ட ஒரு நாளில் வலியுடன் கூடிய சிறுதுளி ரத்தப்போக்கு ஏற்பட்டு மறைந்துவிடுகிறது.பின்னர் எப்போதும்போல வரவேண்டிய நாளில் வந்துவிடுகிறது இது ஏன்?உடம்புக்குக் கெடுதலா?

சில பெண்களுக்கு மாதவிலக்கு தோன்றிய 14 அல்லது 16 வது நாளில் இவ்வாறு ஏற்படும்.இது சினைப்பையில் இருந்து சினைமுட்டை விடும் நாளில் ஏற்படுகிறது.இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை.உடம்புக்குக் கெடுதல் கிடையாது.

30 வதிற்கு மேல் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் ஆப்பரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவதுதான் சரியான வழியா ?

சாதாரண கர்ப்பப்பை கட்டிகளாக இருந்து தொந்தரவு இருந்தால் ஆப்பரேஷன் செய்வது நல்லது.கட்டிகள் இல்லையென்றால் D&C செய்து பார்க்க வேண்டும்.இந்த வயதில்தான் புற்றுநோய் தோன்றும்.பரிசோதனை அவசியம்.எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய் (Cervical cancer)கர்ப்பப்பை கழுத்து உள்வரி ஜவ்வு புற்றுநோய் (Endometrial)ஆகியவை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.எனவே இந்த வயதில் அதிக உதிரப்போக்கு இருந்தால் அனைத்துப் பரிசோதனைகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.வருமுன் காப்பது நல்லது.

வெள்ளை படுதலும் அதனுடன் ரத்தப்போக்கும் ஏற்படக் காரணம் என்ன ?இது நோயின் வெளிப்பாடா ?என்ன சிகிச்சை பெற வேண்டும் ?

பருவ மாற்ற காலத்தில் மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் சினைமுட்டை விடுபடும் போதும்.கார்ப்பக்காலத்திலும் ஹார்மோன்களின் சுரப்பான வெள்ளை படுதல் இருக்கலாம்.இது தவறில்லை.ஆனால் வெள்ளைபடுதல் அதிகரித்தோ நாற்றமுடனோ உதிரம் கலந்தோ இருந்தால் ஆபத்தான விஷயம்.உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெறவேண்டும்.

கர்ப்பப்பை கட்டியினால் உதிரப்போக்கு அதிகமாகுமா ?கர்ப்பப்பை எடுக்க நேரிடுமா ?அதற்கு மாற்றாக வேறு சிகிச்சை உள்ளதா ?

பொதுவாக 50 முதல் 60 சதவிகிதத்தினருக்கு மிகச் சிறிய அளவிலிருந்து (0.5-1cm)பெரிய அளவுவரை பல்வேறு கட்டிகளாக தோன்றுவது நார்க்கழலை(Fibroid)எனப்படும்.இதனால் அதீத உதிரப்போக்கு (Menorrhagia)சூதகவலி (Dysmenorrhoea)ஆகிய தொல்லைகள் இருந்தால் முதலில் D&C செய்து உள்வரி ஜவ்வின் தன்மையை கண்டறிய வேண்டும்.பின்பு மாத்திரைகளால் உதிரபோக்கையும் வலியையும் குறைக்கலாம்.அதையும் மீறி போகும் உதிரப்போக்கு அவரவர் வயதிற்கேற்றவாறு சிகிச்சி அளிக்க வேண்டி வரும்.

1.Myomectomy - கட்டி அகற்றும் அறுவை (இதுகுழந்தை வேண்டுபவர்களுக்குப் பொருந்தும்)

2.Hysterctomy கர்ப்பப்பை அகற்றுபவை (40 வயது தாண்டியவருக்கு)

சமீபகாலச் சிகிச்சைமுறைகளாக...

1.Hysteroscopic Myomectomy

2.Uterine Artery Embolisation ஆகியவை சிலருக்குப் பொருந்தும்.

மாதவிலக்கு முடிவடையும் காலத்தில் (மெனோபாஸ்) உதிரப்போக்கு அதிகமாக இருப்பது சகஜமா ?

இல்லை.அது தவறான கருத்து.மாதவிலக்கு முற்றுப்பருவத்தில் உதிரப்போக்கு அதிகம் இருந்தாலோ அதிக நாட்கள் நீடித்தாலோ குறுகிய காலத்துக்கு ஒருமுறை வந்தாலோ கர்ப்பப்பைக் கட்டிகள் கர்ப்பப்பையில் புற்றுநோய் ஆகியவையாக இருக்கக்கூடும்.45 வய்துக்குமேல் 52 வயதிற்குள்ளாகப் பெரும்பாலும் மாதவிலக்கு நின்றுவிடுகிறது.பலருக்கு அளவில் குறைந்தோ சில மாதங்கள் தள்ளி வந்தோ நிற்கிறது.இதற்கெல்லாம் மாறாக எந்தவித உதிரப்போக்கு பிரச்சனையாக இருந்தாலும் சோதனை செய்துகொள்வது அவசியம்.

இதை வாசித்தனால் பயன் உள்ளதா...சொல்லுங்களேன்.

நிறையப் பேசிட்டேனோ ! இன்னும் பேசலாம் கொஞ்சம் கூச்சம்தான் !

ஹேமா(சுவிஸ்)

Monday, January 25, 2010

தயங்காமல் பேசுவோம்.

தீட்டு, வீட்டுக்குத் தூரம்,வீட்டு விலக்கு,மாதவிலக்கு,மாதவிடாய் ...பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள்.அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள்.பயங்கள்...

மாதவிலக்குச் சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும்.குளித்தால் சளி பிடிக்கும்,காயம் படும்,கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது.பூக்களைத் தொட்டால் கருகிவிடும்.தனித் தட்டில்தான் சாப்பிடவேண்டும்.தலைக்குக் குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக்கூடாது.சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்குப் போட்டால் வயிறு வலிக்கும்.இப்படிப் பல கூடாதுகள்.கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக்கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்புவார்கள்.பேய் அடித்துவிடுமாம்.

இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்குப் பற்றிக் கசப்பான உணர்வைப் பெண்கள் மனதில் பதிய விடுகிறது.இதோடு வலி எரிச்சல் சோர்வு கசகசப்பு எல்லாம் சேர "ஏன்தான் பெண்ணாகப் பிறந்தோம்" என்ற சலிப்புத் தட்டுகிறது.

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம்.ஆரோக்யம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரியவைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

அந்த மூன்று நாட்களில் (சிலருக்குக் கூடலாம் குறையலாம்)உண்டாகும் அத்தனை பிரச்சனைகளைப் பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி டாக்டர் தமிழிசை டாக்டர் சுமதி டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு A - Z தெளிவுபடுத்து சுலபமான கேள்வி பதிலாக அவள் விகடனில் 2003 ம் ஆண்டு வந்த பெண்கள் இணைப்பை பிரயோசனம் கருதி நான் பதிவில் இணைக்கிறேன்.

கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக்கூடத் தயங்கும் நாம் எப்படி குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றிப் புரியவைக்கப் போகிறோம். நம் உடல்பற்றி அதன் மாற்றங்கள் இயல்பு பிரச்சனைகள் பற்றி நாம்தான் தயங்காமல் பேசியாக வேண்டும்.

பூப்பெய்தல் என்கிற பருவமடைதல் கட்டம் எப்படிப்பட்டது ?அது எவ்வாறு நிகழ்கிறது ?

பூப்பெய்தல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி.

முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன.10 - 11 வயதில் (இப்போ 9-13)இது தொடங்கும்.ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்புமீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும்.பின்பு உடல்வளர்ச்சியில் வேகம் தென்படும்.அந்த வயதில் ஒரு பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடந்தவளாகத் தெரிவாள்.இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிகமாகும்.பூசினாற்போல் சதைப்பற்று ஏற்படும்.அக்குகளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது.அதன்பின் இந்த மாற்றங்களின்வெளிப்பாடாக மாதவிலக்கு நேரிடுகிறது.

இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள்.உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன ?

பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கல் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை.

மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்துவரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பைமீதும் சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த GNRH ஹார்மோன் தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம்.இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது.முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும்.பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடதிற்கு ஒருமுறை இரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும்.அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறதுஇதனாலேயே முதன் முதாலாக மாத விலக்கு நிகழ்கிறது.

ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள் இடையூறுகள் ஏற்படலாம்.அதனால்தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாகவராது.இந்தக் கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம்.போகப்போகச் சரியாகிவிடும்.

இன்ன வயதிற்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா?

18 வயதில்கூட ஏற்படாவிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டும்.நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள்கூட உண்டு.அதெல்லாம் அபூர்வம்.7 முதல் 9 வயதிற்குள் பூப்படைதலை "விரைவி படுத்தப்பட்ட பூப்பெய்தல்"என்கிறோம்.
சிறுவயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சரியான சைக்கிள் எது ?பாதுகாப்பானது எது ?

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம் ?

அதைச் சுழற்சி என்போம்.சைக்கிள் சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி.சிலருக்கு இரண்டு மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக குறிவாக அல்லது கூடுதலாக வரலாம்.அது தப்பில்லை.

இந்தச் சுழற்சிக்குள் என்னென்னெ நடக்கிறது ?அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக்கூடிய உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எப்படி வகைப்படுத்துவது ?

அந்த 28 நாட்களை பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.1-5 மாதவிலக்கு நாட்கள்.5-10 நாட்கள் ஆரம்ப நாட்கள்.அப்போது ஈஸ்ரோஜன் அதிகம் சுரக்கும்.கருமுட்டை வளர ஆரம்பிக்கும்.கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.

10 முதல் 14 நாட்கள் அதே வளர்ச்சி வேகமாகி 14 ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும்.எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.

14 முதல் 28 நாள்வரை பின்பகுதி நாட்கள்.ப்ரொஜெட்ஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.கர்ப்பப்பைய்ன் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாகத் தென்படும்.(ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தைபோல)கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறைந்துவிடும்.

தண்ணீரும் உரமும் போட்டபோது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லையென்றால் கருகுவதுபோல கர்ப்பப்பையில் வளர்ந்திருக்கும் நடுச்சதை (Endometrium)சுருங்கி அந்தச் சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக்காக வெளிவரும்.மறுபடியும் ஐந்து நாட்கள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்.

லிமிட் என்று உண்டா ?

மூன்று முதல் 6 நாட்கள் இருக்கலாம்.3 க்குக் குறைவாக 6 க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.

எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை சாதாரணம் எனலாம் ?

சுமார் 50 ம்ல்லி லிட்டர் என் இந்த அளவும் வேறுபடலாம்.அப்போது தினமும் அரை மி.லி முதல் மி.கி வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது.உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது.

ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்?

அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் எனக் கூறலாம்.

இந்தக் காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது ?

ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 50 குமிழிகள் உருவாக ஆரம்பித்து பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒருகுமிழ் பெரிதாகி அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14 ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்தக் குமிழ் வெடித்துக் கரு வெளிவந்து விந்துவை எதிர்கொள்ளத் தயாராகிறது.

மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ?

மார்பகம் பாரமாகத் தோன்றும்.பெரிதாவது போலத் தெரியும்.வலிக்கும்.இவை 2 அல்லது 4 நாட்களுக்குமுன் ஏற்படும்.இது சகஜம்.சிலருக்கு இந்த அறிகுறிகள் அதிகமாகக் இருக்கலாம்.

14 ம்நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வயிறு வலி இருக்கலாம்.வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம்.

உடல் நீர் கோர்த்தது போல எடை அதிகமானதாய் தோன்றும்.14 ம் நாளில் இருந்து வளவளப்பான திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் pre Menstural Syndrome என்பார்கள்.தலைவலி,கால்வலி, மற்றும் வீக்கம்,அடிவயிற்றில் வலி,அதிக பசி,அலர்ஜிஃசளி ஏற்படுவது பருக்கள்,குடல் உபாதை,முதுகு வலி,படபடப்பு,அரிப்பு,அதிக வியர்வை போன்ற மாற்றங்கள் நேரலாம்.

உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்தானே ?

நிச்சயமாக.கவலை,பதற்றம்,ஆர்வமின்மை,ஈடுபாடின்மை,அசதி,கோபம் டென்சன்,எரிச்சல்,தூக்கமின்மை,குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல்,தற்கொலை எண்ணம்,தனிமை விரும்புதல்,தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள்.

இந்தப் பிரச்சனைகளுக்கு காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம்.பி.6 என்ற விட்டமின் பற்றாக்குறையாக இருக்கலாம்.தைராய்ட் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளின் தாக்கம் Prolaction Prostoulandins போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமுமாகலாம்.அதிகப்படி நீர் சுரப்பதும் சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணமாகலாம்.

[இன்னொரு பாகமும் பேசுவோம்]

ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 19, 2010

அப்பா சொன்ன "கிளி"க்கதை.

ல்லா யோசிச்சுப் பாத்தா சில சங்கடங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நாங்களும் எங்கள் முட்டாள்தனங்களுமே தான் காரணம்.ஒரு கதையொன்று.எனக்கு அப்பா சொன்ன ஞாபகம்.ஏனோ இன்று மீட்டெடுத்தேன்.

ஒரு ஊர்ல சரியான புளுகுக்காரி ஒருத்தி இருந்தாவாம்.அவ ஒரு நாள் ஒரு சந்தைக்குப் போனாவாம்.அப்ப அவ சந்தையில ஒரு கடைக்காரர் பெரிய கூண்டுக்குள்ள கனக்க 100 க்கு மேலான பறவைகளை வச்சிருந்ததைப் பாத்தாவாம்.பாக்க நல்ல வடிவாயும் வித்தியாசம் தெரியாம ஒரே அளவா ஒரே கலரிலயும் சத்தம் போட்டபடி இருந்திச்சாம்.இவவுக்கு ஏனோ அதைப் பாத்து வாங்கவேணும்போல ஆசையாய் இருந்திச்சாம்.என்றாலும் நிறைய விலையாய் இருந்தபடியால் சுத்திச் சுத்தி வந்துகொண்டேயிருந்தாவாம்.

கன நேரத்துக்குப் பிறகு ஒரு அதிசயம் அதிஷ்டம் மாதிரி அவவின்ர கண்ல ஒரு பறவை வித்தியாசமாப் பட்டிச்சாம்.என்னவென்றால் எல்லாப் பறவைகளும் 10 ரூபா என்றிருக்க ஒரு பறவை மாத்திரம் 1000 ரூபா என்று இருந்திச்சாம்.என்ன - ஏன் என்று விசாரிச்சாவாம் கடையில.அப்ப கடைக்காரார்"அட நீங்க சரியான புத்திசாலிபோல இருக்கே.எப்பிடிக் கண்டு பிடிச்சீங்க.ஏதாச்சும் சாத்திரம் பாக்கத் தெரியுமா சாத்திரம் படிச்சிருக்கீங்களான்னு" கேக்க அவவுக்கு அப்பிடியே தலைல ஐஸ் வச்சமாதிரி ஆயிடிச்சாம்.இப்ப கடைக்காராருக்குத் தெரிஞ்சுபோச்சு இவவை இனிச் சுகமா ஏமாத்தலாம் என்று.இப்ப அவர் தன்ர தொழிலை ஆரம்பிச்சாராம்.

அவர் சொன்னாராம் "பாருங்க தங்கச்சி இது பாக்கத்தான் எல்லாப் பறவைகள்போல இருந்தாலும் இது அவைகளைவிட வித்தியாசமானது.இது சும்மா சினிமாப் பாட்டு மட்டும் பாடாது.கர்நாடக சங்கீதம் தொடங்கி சிங்களப்பாட்டு வரைக்கும் பாட முடியும்"என்றாராம்.
அவ உடன விட்டால் யாராச்சும் வாங்கிட்டாலும் என்று உடனேயே 1000 ரூபா கொடுத்து வாங்கிக்கொண்டு போனாவாம்.பிறகென்ன பக்கத்துவீடு முன்வீடு என்று தான் வாங்கின பறவையைப் பத்தி புளுகாத் தள்ளிக்கொண்டிருந்தாவாம்.

ரெண்டு நாள் பொறுத்து நல்ல கோவத்தோட அந்தக் கடைக்கு வந்தாவாம் அவ."என்ன நீங்க குடுத்த பறவை பாடவேயில்லையே" என்று சத்தம் போட்டுப் பேசினாவாம்.அதுக்கு அந்தக் கடைக்காரர் பாடவில்லையா "ஏன் ஆச்சரியமாயிருக்கே.சரி அது மணியைக் கொத்துதா" என்று கேட்டாராம்.அதுக்கு அவ "என்ன மணி என்று கேக்க மணிதான்.எப்பிடி ஒரு ஒத்திசை இல்லாம எப்பிடிப் பாடும் பறவை.இந்த மணியைக் கொண்டுபோய் அதன் கூண்டுக்குள்ள கட்டிவிடுங்க.மணி அசைஞ்சு சத்தம் வரும்.அப்ப பறவையும் சேர்ந்து பாடத் தொடங்கும்.
மணி ஒன்றும் பெரிய விலையில்ல.200 ரூபாதான்."என்று சொல்லி அவவின் தலைல மணியைக் கட்டி அனுப்பிவிட்டாராம்.

அடுத்த நாள் திரும்பவும் அதே கோவத்டோட வந்தாவாம்."நீங்க குடுத்த மணியையும் கட்டினேன்.அப்பவும் பறவை பாடமாட்டுதாம் ஏன் ?"என்று கேட்டாவாம்.அப்பவும் ஆச்சரியத்தோட அவவின் சோகத்தைக் கேட்ட கடைக்காரர் "என்ன தங்கச்சி நீங்க.
மணியைக் கட்டினபிறகும் பாடாம இருக்குதென்றால்..ம்...ஏன் என்று யோசிக்கிறமாதிரி ஒரு பாவனை செய்துகொண்டு அது ஊஞ்சல் ஆடுதா?" என்று கேட்டாராம்.

அவவோ ஒன்றுமே விளங்காமல் "என்ன ஊஞ்சலா ?"என்று கேட்க "என்ன தங்கச்சி நீங்க.1000 ரூபா குடுத்து இந்தப் பறவையை வாங்குறீங்க.ஓரளவு பறவையைப் பத்தித் தெரிஞ்சிருப்பீங்க என்றுதான் நான் சொல்லாம இருந்தன்.இப்பிடி ஒன்றுமே தெரியாம இருக்கீங்களே.பறவை ஒரே இடத்தில குந்திகொண்டிருந்தா அதுக்கு எப்பிடிக் குஷி வரும்.ஊஞ்சல் ஆடினா சதோஷத்தில பாடவேணும் என்று என்ற ஆசை வரும்.இந்தாங்க இந்த ஊஞ்சலைக் கொண்டு போய்க் கட்டுங்க.300 ரூபாதான்.பாருங்க நாளைக்கு வந்து சொல்லுவீங்க.எப்பிடி நல்லாப் பாடுது என்று."அவவும் என்ன செய்றது என்றபடி ஊஞ்சலை வாங்கிக்கொண்டு போனவாம்.

அடுத்த நாளும் அதே கோவத்தோட "என்ன நீங்க என்னை ஏமாத்திக்கொண்டே இருக்கிறீங்களா.இப்பவும் அது பாடமாட்டேங்குதே" என்றாவாம்.அப்பவும் சலிக்காத கடைக்காரர் "என்ன தங்கச்சி சொல்றீங்க.மணியைக் கொத்துது.ஊஞ்சல் ஆடுது.ஆனா பாட்டு மட்டும் பாடாதாம்.ஏன் ?ஆச்சரியம்தான்."
"கூட்டுக்குள்ள கண்ணாடி வச்சிருக்கீங்களா.அது தன்னைத் தானே பாத்துக்கொள்ளுதுதானே" என்று கேட்டாராம்.குழப்பமும் வியப்புமா அவ "பறவையா...கண்ணாடியா பாத்துக்குமா!" என்றாவாம்."அதானே பாத்தேன் பறவை ஏன் பாடாம இருக்கு என்று இப்பதானே தெரிஞ்சுது.
பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க.பறவைகளுக்கும் மனசுன்னு இருக்குதானே.நாங்கதான் புரிஞ்சுக்கோணும்.அது தனியா இருந்தா எப்பிடிப் பாடும்.தான் தனிய இல்ல என்று அது உணரவேணும்.அதுக்குத்தான் இந்தக் கண்ணாடி வைத்தியம்.அது தன்னையே கண்ணடிக்குள்ள பாத்து தன்னைப்போல இருக்கிற விம்பத்தோட பேச ஆரம்பிக்கும்.அப்புறம் பாருங்க.
பாடத்தொடங்கிடும்.இந்தாங்க 200 ரூபாதான்" என்று அதையும் அவவிடம் விற்றுவிட்டாராம்.

அடுத்த நாளும் அவ கடைக்கு வந்தாவாம்.என்ன என்று கடைக்காரார் கேக்க சரியான கவலையோட "பறவை செத்துப்போச்சு" என்றாவாம்.ஐயோ "கடைசி வரைக்கும் பாடாமலேயே செத்துப்போச்சா?"என்றாராம் கவலையோட.ம்ம்ம்....பாடமத்தான் செத்துப்போச்சு.ஆனா சாகிறதுக்குக் கொஞ்சம் முதல்பேசிச்சு."மணி ,ஊஞ்சல் ,கண்ணாடி என்று உன் தலைல எல்லாத்தையும் கட்டி யோசனை சொன்ன அந்தக் கடைககாரர் ஏன் எனக்குச் சாப்பாடு போடச் சொல்லித் தராமப் போனார்.நீதான் ஒரு பைத்தியம்.அந்த ஆளிடம் ஏமாந்ததுபோல இனி எங்கயும் யாரிடமும் ஏமாறாதே" என்று சொல்லிட்டுத்தான் செத்துப்போச்சு என்று சொல்லியபடியே கோவத்தோட போய்ட்டாவாம்.

இதிலயிருந்து என்ன தெரியுது.யாராவது எங்களை ஏமாத்தினால் ஏமாத்துறவர்தான் குற்றவாளி.ஆனால் ஒரே ஆளிடம் திரும்பத் திரும்ப ஒருவர் ஏமாந்தால் குற்றவாளி ஏமாத்துற அந்தப் பெருச்சாளி இல்லை.ஏமாறுற அந்த வெங்காயம்தான்.

ஹேமா(சுவிஸ்)

Monday, January 04, 2010

ரஜனியின் பூக்கன்றும் பூனைக்குட்டியும்.

புது வருஷம் பிறந்ததால ஏதாச்சும் கொஞ்சம் சிரிப்பாப் பதிவு போடலாம்ன்னு வந்ததால இந்தப் பதிவு.

என் அண்ணி ரஜனி.அவரின் சின்னச்சின்ன நம்பிக்கைகள் என்னைச் சிரிக்க வைக்கும்.அவரோ இது மூடநம்பிக்கை இல்லை என்று வாதாடுவார்.காரணம் தெரியாமலேயே சடங்கு சம்பிரதாயம் சகுனம் என்று என்னென்ன இருக்கோ அத்தனைக்கும் பயந்து வியர்த்து நனையும் ஒரு ஜீவன்.பாவம்.

பலருடைய பதிவுகளில் மூடநம்பிக்கைகள் பற்றிப் பேசும்போது நான் என் அண்ணி பற்றியும் நகைச்சுவையாக சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.அவரைப் பொறுத்தவரை மூடநம்பிக்கை என்றில்லை.ஏதோ ஒரு மனநிலை.அல்லது வீட்டில் பெரியவர்களைப் பார்த்து வளர்ந்த முறை.அதனால் ஏற்படும் பயம் அல்லது தாக்கம்.

ஒரு நாள் வீட்டில் எல்லோருமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.அண்ணாவின் சாப்பாட்டுக்குள் ஒரு பெரிய தலைமுடி.அது அவவினுடையதுதான்.சந்தேகமேயில்லை.
அண்ணா தலைமுடியைச் சாப்பாட்டிலிருந்து பிரித்து எடுத்தார்.உடனே அண்ணி "இங்க தாங்கோ தாங்கோ"என்று வாங்கினா.சரி வாங்கினா குப்பைக்குள்தானே போடுவா என்று பார்த்தால் அண்ணாவின் தலையை(தலைமுடியை)மூன்று முறை சுற்றி தூ தூ என்று மூன்று தரம் துப்பி குப்பைக்குள் போட்டா.

ஏன் அண்ணி என்று கேட்டால் எங்கள் வீட்டில் அம்மா இப்பிடித்தான் செய்வா நானும் செய்கிறேன் என்றார்.சரி பரவாயில்லை.நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்றால் தெரியாது என்கிறா.எல்லோரும் சிர்த்துவிட்டோம்.அவவுக்குத் தன்னைக் கிண்டல் பண்ணுவதாக நினைத்துக் கோபம்தான் வந்தது.காரணம் தெரியாமலே காரியத்தைச் செய்வதிலோ அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டு செல்வதிலோ எனக்கு உடன்பாடில்லை.

இன்னொன்று.என் அண்ணி ஒரு பூங்கன்று வளர்க்கிறா.4-5 வருடங்களாக அது அழகா உயராமா வளர்ந்திருக்கு.2 வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் - அந்தச் சமயத்தில் அவரது அக்கா சுகயீனம் காரணமாகக் காலமாகி 3 வருடங்கள் இருக்கும்."மச்சாள் நேற்றுக் கனவில அக்கா வந்து எனக்குத் தாகமாயிருக்கு.ஏன் எனக்குத் தண்ணி தரமாட்டீங்களாம்.பார் என்ர தொண்டையெல்லாம் வரண்டுபோயிருக்கு என்று கேக்கிறா.இந்தப் பூக்கன்றுக்குப் பக்கத்திலதான் குந்தியிருந்தவ.நானும் இதுக்குத் தண்ணிவிட்டு மூன்று நாளாச்சுத்தான்.
நானும் இப்பத்தான் பாக்கிறன்.அப்ப இது என்ர அக்காதான்"என்றாவே பார்க்கலாம்.எனக்கு என்ன பதில் சொல்ல என்றே வரவில்லை.அந்த நிமிடத்தில் அவவின் நம்பிக்கையும் அக்கா மேல் உள்ள பாசத்தையும்தான் பார்த்து வியந்தேன்.

அண்ணா பிள்ளைகள் வர அவவை வைத்துக் கிண்டல் பண்ணி அழவே வைத்துவிட்டோம்.அந்தப் பூக்கன்றுக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அங்கு யாருக்குமே கிடைப்பதில்லை.இலைகள் கூடப் புழுதி துடைக்கப்பட்டு பளபளப்பாய் பக்கத்தில் மின்சார வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பார் என் அண்ணியின் அக்கா.

இன்னொன்று....இது இன்னும் வேடிக்கை.அண்ணி காலை 5 மணிக்கு வேலைக்குப் போவா.வேலை செய்யும் இடம் அதிக தூரமில்லை.அதனால் அதிகாலையில் 10 நிமிடங்கள் நடந்தே போவா.பல வீடுகள் இருக்கும் உள் ஒழுங்கைப் பகுதியைக் கடந்தே பெருந்தெருவுக்கு வரவேணும்.அங்கேதான் அவ வேலை செய்யும் இடம்.கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஒரே நடைபாதை ஒரே நேரம் போய்வருகிறா.எனவே அந்த நடைபாதையின் நடுவில் நித்தமும் யாரினதோ பூனையொன்று இவவைக் கண்டு பழக்கப்பட்டு இவவின் காலடிச் சத்தம் கேட்டதுமே பக்கம் வந்து உரசி மியாவ் சொல்லிப் போகிறது போல.

அண்ணி சொன்னா "அந்த நேரத்திலயும் தான் நடக்கிற சத்தம் கேட்டதுமே வந்து உரசிக் கதைக்குதாம்.போக விடுதில்லையாம்.பின்னால வருதாம்" என்று.நான் சொன்னேன்."அதுக்கு உங்களை ஒவ்வொருநாளும் கண்டு பழகிப்போச்சு.அதோட அந்த அமைதியான நேரத்தில யாருமேயில்லை.அந்த நேரத்தில உங்களைக் காணேக்க அதுக்கு ஒரு உற்சாகம் சந்தோஷம் என்றேன்."

"இல்ல மச்சாள் அது என்ர முகத்தைப் பார்த்து பார்த்து மியாவ் மியாவ் என்று கத்துது.ஒரு குழந்தைபோல ஏக்கமா என்ர முகத்தைப் பாக்குது.வாலால தடவி தடவி உரசிக் காலடியிலயே இருக்குது.ஒருவேளை அது எங்கட அக்கான்ர மகன் செத்தான்.
அவனாத்தானிருக்கும்.மறுபிறவி எடுத்து வந்திருக்கிறான்போல.அவனுக்கும் என்னை அடையாளம் தெரிஞ்சுபோச்சுது" என்றா கண்ணுக்குள் நிறைந்த பாசத்தோடு.என்ன சொல்ல நான்.கதையாய்க் கேட்டுக்கொண்டிருந்த நான் மறுபிறவி கோகிலன் என்றவுடன் வாயடைத்துப் போனேன்.அண்ணா வந்தார்.பிறகென்ன.இன்னொரு நகைச்சுவைக் கலாட்டாதான் வீட்ல.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்தச் சமயத்தில் "நடந்தது என்ன"என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "ஒரு பாம்பு தங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதாகவும் அதனால் யாருக்கும் ஆபத்து இல்லையென்றும் தங்களது மகன் இறந்த இடத்திலேயே படுத்திருக்கும் என்றும் அது தங்கள் மகனின் மறுபிறவி" என்று ஒரு குடும்பத்தினரின் நம்பிக்கையோடு ஒரு நிகழ்வு.நான் அதையும் இணையத்தில் எடுத்துக் காட்டினேன்.இதன் பிறகும் கேக்கவும் வேணுமோ.இப்போதும் அந்தப் பூனைக்குட்டி என் அண்ணியின் அக்கா மகன் கோகிலனாக உலா வருகிறார்.

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP