Tuesday, March 27, 2012

ஒரு காதல் கதை.

பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க,காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அதிகாலை உங்கள் முற்றத்தில் நின்று பாருங்கள்.

மீசையிலும் தாடியிலும்தான் பிரச்சனை முற்றிப் பிரிந்தோம் என்றால் நம்புவீர்களா.சும்மா ஒரு கதைக்குத்தான் ரவியின் மீசையும் தாடியும்।

ரவி என் வாழ்வின் ஒரு பகுதி.அவன் என் வசந்தகாலம். என் கிளையிலிருந்து உதிர்ந்தாலும் வேரோடு ஒட்டிக்கொண்டவன்.ஆனால் எனக்குள் காலமானவன்.அவன் ஒருகாலம்.நேற்றும் இன்றும் இப்போதும் நாளையும் நாற்பது வருடத்தின் பின்னும் என்னவன் அவன்.அவன் தள்ளினானா நானே தள்ளிப்போனேனா.இன்னும் புரியவில்லை.ஆனால் அவன் என்னவன் என்பதே எனக்கு ஆறுதலான ஒரு விஷயம்.

அந்தக் குளிர்ந்த இரவில் மர அட்டைகளோடு இழுத்துப் பறித்து இரத்ததானம் செய்துகொண்டிருந்தபோதே அவனைச் சந்தித்தேன்.

"நான் இண்டைக்குத்தான் இந்தப்பகுதிக்கு வந்திருக்கிறன்.உங்களை இப்பத்தான் பாக்க்கிறன்.உங்கட பெயரோ....தமிழ்.சொன்னவை.ஆனால் ஆர் எண்டு எனக்குத் தெரியேல்ல.அவையள் சொன்ன ஒரு குறிப்பை வச்சுத்தான் சொல்றன்.இனிக் கொஞ்ச நாளைக்கு என்னை இங்கதான் இருக்கச் சொல்லியிருக்கினம்.அநேகமா உங்கட குறூப்பில உங்களோடதான் இருப்பன் எண்டு நினக்கிறன்."

என்றே என்னுடன் பேசத் தொடங்கியிருந்தான் ரவி.பின்னொருநாள் சொல்லியிருந்தான்."அழகான ஆம்பிளை பாரதி"யென்று நினைத்து ரசித்தபடிதானாம் என்னுடன் பேசத்தொடங்கியதாக.

அவன் அறிவு,ஆணழகு எதையுமே அலட்டிக்கொள்ளவில்லை அப்போ.தெய்வீகம் அது இது எதிலும் நம்பி அலட்டிக்கொள்ளாத நேரமது.பொறுப்புகள் என் தலையில் நிறையவே இருந்தது.ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.அந்தந்தக் காலத்தில் துணையைத் தேடுவது பற்றியும் மனசுக்கு ஒத்துவந்தால் கல்யாணம் வரைக்கும் போகலாம்.இடையில் அலட்டல் இல்லாமல் ஆனால் ஒரு நல்ல நண்பர்களாக இருக்கிறதைப் பற்றி மட்டுமே யோசிச்சால் நல்லது.

கூடிய நேரங்களில் என் சந்தேகங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் ரவிதான் பக்கதுணையாய் இருந்தான்.சில நேரங்களில் வேணுமென்றே காணாமல் கொஞ்சம் தளருமளவிற்குத் தவிக்கவிட்ட நேரத்தில் அவன் கண்களில் காதலைப் பார்த்தேன்.ஒருநாளைக்கு அவராய்ச் சொல்லட்டும்.

"பூக்கள் மரங்களில் இருப்பதும் அழகுதான் என்பேன்.....ஏன் இருந்தாப்போல சொல்றீங்கள்"என்பான் குறுகுறு கண்களை அகல விரித்தபடி.

ரவி உங்களோட கதைக்கவேணும்...

ஏன் என்ன விஷயம்.ஏதாலும் செய்தி வந்திருக்கோ.இல்லாட்டி வீட்லயிருந்து கடிதம் வந்திருக்கோ.ஆவலாய்....

நானும் ஒண்டு சொல்லவெண்டுதான் இருக்கிறன்.சரி சரி நீங்களே சொல்லுங்கோ முதல்ல.

இது ஒரு அந்தரங்கம்.பெரிய விஷயம்.பிறகு கதைப்பம்.....

பிறகெண்டால்.....!

பிறகுதான் இரவு சாப்பிட்டு நியூஸ் கேட்டபிறகு...மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைக்கவேணும்.அதுக்கும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

தமிழ்...என்ன விஷயம்.இப்ப சொல்லுங்கோவன்.சொல்லாட்டி எனக்கு நித்திரையும் வராதப்பா.

என் வாயிலிருந்து கிளறி எடுக்க ஆசைப்படுகிறான்.ஆனால் அவனே யாருக்காவோ சொன்னதுதான்."சும்மா...தங்கட அன்பை காதலைச் சும்மா சிநேகிதம் என்கிற பெயரால மறைக்கினம்.நாங்கள் அப்பிடியில்லைத்தானே தமிழ்" என்று சிரித்தபடி என் கண்ணை ஆழப்பார்த்தவன்.

வாங்கோ....அந்தக் கல்லடியில இருப்பம்.சாப்பிட்டீங்கள்தானே....என்றபடி எனக்கும் இடம்விட்டு கல்லில் அமர்ந்தாள்.நேரே என் முகம் பார்த்தாள்.நான் தான் கொஞ்சம் திரும்பிக்கொண்டேன்.நிலவை மறைத்துக்கொண்டிருந்து இரட்டைப்பனைபோல இறப்பர் மரம்.ஆனாலும் அவள் முகத்தில் சந்தோஷ வெளிச்சம் காட்டியது நிலவொளி.

"ரவி...நீங்கள் சொன்ன அதே விஷயம்தான்.தள்ளிப்போட எனக்கு விருப்பமில்லை.நட்புக்குள் காதல் ஒளியவேண்டாம்.இரண்டுமே வேணும் எங்களுக்கு.இப்போதைக்கு வெளில சொல்லவேண்டாம்.எங்களுக்குள்ளேயே இருக்கட்டும்.எனக்கு உங்களை நிறையப் பிடிச்சிருக்கு ரவி.உங்களிட்ட சொல்லிவிடவேணுமெண்டு நினைச்சன்.“டக்”கெண்டு சொல்லிப்போட்டன்.நீங்கள் நடுவில ஏதும் சொல்லாதேங்கோ.நான் சொல்லி முடிக்கிறன்.எனக்கு உங்களில நிறைய விருப்பம்.நான் பெரிசா யாரோடயும் பழகிறதில்ல.அப்பிடியே ஒன்றிரண்டு சிநேகிதம்.அதுவேற இது வேற.உங்கட குணம் நடவடிக்கை என் தாத்தாவை ஞாபகப்படுத்து அடிக்கடி.என்னோட ரவி நீங்க என்கிறதில பெருத்த சந்தோஷம் எனக்கு.நிறையக் கற்பனைகள் சேர்த்திட்டன்.உங்கட ஒவ்வொரு அசைவையும் அறிஞ்சு வச்சிருக்கிறன்.நீங்கள் என்னோட இருந்தால் நான் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாயிருப்பன்.இரண்டு பேரின் இலட்சியங்களும் கலையாது.இதில உங்கட விருப்பமும் இருக்கு.இருக்கும் என்கிற நம்பிக்கையும் எனக்கிருக்கு.என்னைப் பிடிக்காமலும் போகலாம்.ஆறுதலா யோசிச்சுச் சொல்லுங்கோ.ஆனால் சாகிற வரைக்கும் எங்கட நட்பு இப்பிடியே இருக்கவேணும்."முகத்தை அழுத்தமாக அவனுள் புதைத்தபடி சொன்னாள்.நித்திரை இல்லாம ஆக்கினதுக்கும் மன்னிச்சுக்கொள்ளுங்கோ என்றாள் சிரித்தபடியே.

சீ...சீ...இதென்ன தமிழ்.உள்ளுக்குள்ளேயே வளரவிடாமல் மனம் விட்டுச் சொன்னது நல்லதாப்போச்சு.நாங்கள் பழகத் தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதகாலமாகியும் சில விஷயங்களை நான் சொல்லாமல் இருந்தது என் பிழைதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.ஆசைகளை நான் வளர்த்துவிட்டிருக்கிறன்போல.எனக்கு என்ன சொல்றதென்றே தெரியேல்ல.எனக்கு ஏற்கனவே என் மச்சாளைப் கல்யாணம் பேசி வச்சிருக்கினம்.அவளும் காத்திருக்கிறாள்.

தமிழின் கண்ணீர் நிலவில் தெறித்தது.துடைத்துவிடத் துடித்தாலும் உரிமையற்று நின்றிருந்தான் ரவி.

சமாளித்த தமிழ்..."திடீரென்று ஒருமாதிரியாயிட்டன் ரவி.இதில ஏதுமில்ல.கேட்டன் என் விருப்பத்தை.நீங்க சொன்னதில ஒரு பிழையுமில்லை.சரி நான் வாறன்.நாளைக்கு சந்திப்பம்" என்று சொல்லிக்கொண்டே போய்விட்டாள் தமிழ்.நிலவு மழைமேகத்தால் இருட்டடிக்கப்படிருந்தது அப்போ.

அடுத்த நாள் எப்பவும்போல ஒழுங்காகவே இருந்தது.

"நல்லா நித்திரை கொண்டீங்களோ...என்றபடி.நானும் நல்லா நித்திரை கொண்டேன்..."நடு இரவுபோல என்னை எறும்பு கடிச்சிட்டுது"... என்று சிரித்தாள்.மெல்லிய திரை விலகி மனங்கள் சுத்தமானதாக உணர்ந்தேன்."இன்று நாங்கள்தானே சமையல் என்றாள்.மரக்கறிகள் வாங்கவேணும்.சந்தைக்குப் போய்ட்டு வருவம்"...என்றாள் எதுவுமே நடக்காததுபோல.

இப்போவெல்லாம் உங்கட மச்சாள் எப்பிடி என்று கிண்டலடிக்கிறவரை இன்னும் நட்போடு நெருக்கமானோம்.சின்னவிரல் காட்டி ஒல்லியென்பான் ரவி.அப்ப கனக்கச் சாப்பிடச் சொல்லுங்கோ.குழந்தை பிறக்கேக்க கஸ்டம்.உடம்பில தென்பு வேணுமெல்லோ என்று நக்கலடிப்பள் தமிழ்.

போட்டோ வச்சிருக்கிறீங்களே என்பாள் ஆவல் ததும்ப.ஒரு நாளைக்குக் காட்றன் என்பான் ரவி.அதோடு சேர்த்து "உங்களுக்கும் ஒரு மாப்பிள்ளை நான் பாத்துத் தரவோ என்பான்.எனக்குத் தெரிய ஒன்றிரண்டுபேருக்கு உங்களில நல்ல விருப்பம் இருக்கு."...மௌனமாய் சிரித்து அடுத்த கதைக்குத் தாவிவிடுவாள் தமிழ்.

அநேகமான பொழுதுகள் ரவியின் அருகாமையோடே கழிந்தது.பிடித்தும் இருந்தது தமிழுக்கு.உயிருக்குள் ஆழப் புதைந்திருந்தான் அவன்.என் ரவி....என் ரவி...என்கிற ஒரு மந்திரம் சாகும்வரை இருக்கும்போல மன அறைக்குள் அழுத்தி எழுதப்பட்டிருந்தது.அதை எவராலும் அழிக்கமுடியாது.கல்யாணத்துக்கு மட்டும்தான் ரவி வேணும்.காதலிக்க அவன் நினைவுகளும் அருகாமையும் அன்பும் போதுமாயிருந்தது தமிழுக்கு.

சில அத்தியாவசியத் தேவைகள் நேரங்கள் எல்லாமே அவன் துணையாக இருந்தான்.

றோட்டில் நடக்கும்போது மதில் எட்டிப் பூப்பறிக்கவும் ஐஸ்கிறீமுக்குமான செல்ல அடத்துக்கெல்லாம் தாயாய் தாங்கினான் ரவி.

ரவி..."கால் உளையுது தூக்கிக்கொண்டு போங்கோ"...என்பாள்.நான் தூக்கிக்கொண்டு போவன்.நீங்கள் சரியென்றால் என்பான்.ஓம்...தூக்குங்கோ....சரியென்று வேணுமென்றே கிட்டப் போவாள் தமிழ்.

"இவ்வளவு குண்டா இருந்தா நானெல்லோ முறிஞ்சுபோவன்..." என்பான்.அதுக்கும்..."ஓ....உங்களுக்கு ஒல்லி ஆட்களைத்தான் பிடிக்குமென்று..." தன்னையறியாமல் சொல்லிவிட முகம் மாறி மௌனமாகிவிடுவான்.பிறகு எதையோ சொல்லிச் சிரிக்கப்பண்ணி மனதுக்குள் அழுதும் விடுவாள்.

எல்லாம்....எல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறது.அசரீரியாய் ரவியின் குரல் மனதின் மெல்லிய இழைகள்மீது தொடர்ந்த அதிர்வோடு.ஒற்றைக் குடைக்குள் எத்தனை நாட்கள் தெருப்பள்ளத்துள் தேங்கிய மழைநீராய் நினைவுகள்.என் மாதவிலக்கின் நேரம்கூட அவன் காய்ச்சும் கசாயம் மருந்தாய் கசத்தாலும் இனிக்க இனிக்கத் தருவான்.என் வயிற்றுவலியில் பங்கு கேட்பான்.மனதில் பதிந்து காதலனாவன் நட்பென்று தள்ளி நின்றவன்.

காலப்போக்கில் தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தான் ரவி.எனக்கு அழகான மீசை பிடிக்கும்.ஏனோ தாடி பிடிக்காது.மீசைக்குழந்தை என்று நக்கலும் அடிப்பேன்.மீசை வெட்டினா கோவம் வரும்.சொல்லாமல் ரசித்திருக்கிறேன் எத்தனையோ நாட்கள்.மீசை இல்லாவிட்டல் ரவி அழகற்றதுபோலவும் கம்பீரம் குறைந்ததுபோலவும் இருக்கும் எனக்கு.எங்கையப்பா உங்கட மீசைக்குழந்தை என்பேன்.புரிந்துகொள்வான்.

"என்ன இது கோலம்.தாடியும் ஆளுமா.ஏன் ஷேவ் பண்ண நேரமில்லையே.முகத்துக்குள்ள இப்பிடி வேர்த்துக்கிடக்கு என்றேன்".

"இல்ல...கனகாலம் தாடி வளர்த்துப் பார்க்க விருப்பம்.அதுதான்.."என்று இழுத்தான் ரவி.

"வேண்டாம் வேண்டாம் வெட்டிவிடுங்கோ.சிங்கம் அசிங்கமா இருக்கிறார் தாடிக்குள்ள..." தாடிக்காக ஒருபெரிய அலசலே நடந்தது.

"சீ...சீ அரிகண்டம்.(அருவருப்பு) பூச்சாண்டி மாதிரி இருக்கிறீங்கள்.நான் பக்கத்தில படுக்கிறதாயிருந்தால் இரவோட இரவா கத்திரிக்கோல் எடுத்து வெட்டிவிட்டிருவன் என்பாள்."

அடுத்து ஏதோ மெலிதாய் முணுமுணுப்பது மட்டும் கேட்கும்."அதுக்குத்தான் நான் கொடுத்து வைக்கேல்லயே" என்று சொன்னதாய் ஒருநாள் சொல்லியிருந்தாள்.

"ரவி...எங்கட ஊர்ப்பக்கம் ஒரு வேலை இருக்கு.நாளன்றைக்கு நான் போகவேணும்.உந்தத் தாடியை வெட்டிப்போட்டு வெளிக்கிட்டு வாங்கோ என்னோட கட்டாயம்.இல்லாட்டி நான் கதைக்கமாட்டன்..."என்றாள்.

"ஒரு வேளை மச்சாள் ஏமாத்திப்போட்டவோ.அப்பிடியெண்டா எனக்கும் சந்தோஷம்தான்.தாடி ஏன் வளர்க்கிறீங்கள் என்றாள் திடீரென.சரி சரி எது எப்பிடி என்றாலும் முதல்ல தாடியை வெட்டுங்கோ..." என்றாள் உரிமையோடு.

"தமிழ்...உந்த உடுப்பில நல்ல வடிவாயிருக்கிறீங்கள்..." என்றான் ரவி.தமிழின் வயிற்றுக்குள் நெருப்புப் பிசைந்து உருண்டையானது.அவள் சிரித்தபடியே தாடியைப் பார்த்தாள்.

"தமிழ்...ப்ளீஸ் கொஞ்ச நாள் ஆகட்டும் வெட்றன்.இப்ப கிடக்கட்டும்.சத்தியமா வேற ஏதாலும் கேளுங்கோ.கொண்டுவந்து தாறன்.தாடியைப் பற்றிக் கதைக்காதேங்கோ."

அன்று அவள் கிராமம் போய் வந்தோம்.அவள் அம்மாவும் தங்கையும் அழுதது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது.சாப்பாடு குழைச்சு உருட்டி அன்பையும் சேர்த்ததாலோ என்னவோ அந்தச் சாப்பாடும் இன்னும் நினைவின் ஓரத்தில்.அதன் பிறகொருநாள்....4 - 5 பேராச் சேர்ந்துதான் தொடங்கினம் கொஞ்சம் கள்ளுக் குடிச்சால் என்று.அதுக்காக வெறிச்சுக் கூத்தாட இல்லை.ஒரு சின்ன ஆசை அவ்வளவுதான்.அதுவும் யாருக்கும் தெரியாம கந்தன் அண்ணைக்குக் காசு குடுத்து வாங்கினம்.எனக்கு இது இரண்டாம் தரம்.பயமும் இருக்கு.கதை வெளில போனால் தொலைச்சுப்போடுவாங்கள் மற்றப் பெடியள்.போத்தில் திறந்து மணம் வரவே வெறிச்சுது.பிறகு வயித்துக்கை போனபிறகு...பனையடியே படுக்கையானது அன்று.

சரியாய்ப்போச்சு.அடுத்தநாள் முகத்தை ஒருமுழத்திற்கு நீட்டி வைத்திருந்தாள் தமிழ்.யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள்.என்னோடு கதைக்காமலே போய்விட்டாள்.

அடுத்து இரண்டு நாட்களின் பின் தமிழின் முகம் சிரிக்கவில்லை.ஆனால் நீளம் குறைந்திருந்தது.எனக்காகக் காத்திருந்தவள்போல....."ரவி உங்களோட கதைக்கவேணும் கொஞ்சம்.பின்னேரமா கல்லடிக்கு வாங்கோ..." என்றபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள்.அவளைப்போலவே மரங்களும் அசைவற்று நின்றன.ஒருவேளை அவளுக்குப் பயந்து அலுங்காமல் நின்றனவோ !

சந்தோஷமாய் ரசிக்கக்கூடியதாய் எதுவும் சொல்லமாட்டாள்.அது தெரியும் ஆனால் உதை விழாமல் இருந்தால் போதுமென்று நினைத்தபடியே கல்லடிக்குப் போக எனக்கு முன்னமேயே ஒரு பத்தகததை வாசித்தபடி ஆனால் என் காலடிச் சத்தத்திற்குக் காது கொடுத்தபடி உட்கார்ந்திருந்தாள் தமிழ்.

அண்டைக்கு ராத்திரி என்ன நடந்தது....சொல்லுங்கோ.

ஒண்டுமில்லை...யே...என்று நான் இழுக்குமுன்....

ஒண்டுமில்லையோ...தலை ஆட்டினதைப் பார்த்தாலே ஏதோ பெரிசா வெடி இருக்கு என்று மட்டும் விளங்கிக்கொண்டேன்.

"ரவி நல்ல பிள்ளை நல்ல பிள்ளையென்று விட்டுக்கொடுக்காமல் பேசுவீங்கள் நேற்று இரவெல்லோ பாத்திருக்கவேணும்.இனி வாழ்க்கையில அவன் இருக்கிற பக்கம் தலை வச்சுப் படுக்கமாட்டீங்களென்று.... என்னைக் கடுப்பேத்திப் பாக்கிறாங்கள்.எனக்கு பதில் ஏதும் சொல்லவே முடியேல்ல.எனக்கு வெட்கமாயிருக்கு ரவி.முகமெல்லாம் சிவந்து கண்ணீரை விழவிடாமல் கண்ணுக்குள் தேக்கி வைத்திருந்தாள்.இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எல்லாம் போச்சு.போங்கோ.எனகென்று ஒரு உறவு மனமார இருந்தது என்று நினைச்சிருந்தேன்.இனி எல்லாமே போச்சு எனக்கு.குட்பை ரவி...."

என்றபடி வேகமாக அந்த இருட்டுக்குள்ளும் வழி பிசகாமல் நடந்து மறந்துவிட்டாள் தமிழ்.என்னை விட்டு என் உறுப்பில் ஏதோ ஒன்று நான் பார்த்துக்கொண்டிருக்கப் பிய்ந்து போனதாய் ஒரு உணர்வு.எங்களுக்குள் இப்படி எத்தனையோ சண்டை வரும் போகும்.ஆகக்குறைந்தது ஒரு கிழமைக்கு மிஞ்சிக் கதைக்காமல் இருக்கமாட்டாள் தமிழ்.ரவி உங்களோடு கதைக்காவிட்டால் எனக்குக்குள் ஏதோ பாரம்போல என்பாள்.காலைமுதல் இரவுவரை என்ன நடந்தது என்று என்னிடம் குழந்தைபோல ஒப்புவிப்பாள்.சிலசமயம் அதனாலேயே சண்டை வந்துவிடும் எங்களுக்குள்.செய்யக்கூடாதது பேசக்கூடாததெல்லம் சொல்லி என்னிடம் பேச்சும் வாங்குவாள்.ஆனாலும் ஒரு திருப்தி அவளுக்கு அது.

அதைப்போலவே ஒரு கிழமைக்குப்பிறகு என்னைக் கண்டதும் வெடுக்கென்று மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போனவள் அதே வேகத்தோடு திரும்பி வந்து....

"ரவி ஏன் இப்பிடி மாறிட்டீங்கள்.சொல்லச் சொல்ல தாடி வளர்க்கிறிங்கள்.பெடியங்களோட சேர்ந்து தண்ணியடிக்கிறீங்கள்.எனக்கு உங்களில வெறுப்பாய் வருது.அதேநேரம் உங்களைவிட்டுத் தூரமாய்ப் போக விருப்பமுமில்லை.வேணுமெண்டுதான் செய்றீங்கள்போல.நான் தொலைஞ்சுபோறன் ரவி......"

"அதுசரி...ரவி இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணமாயிருப்பனோ...."என்றாள் ஆவல் கண்களுக்குள் ததும்ப.

எனக்கு இப்போ கோபம் வரவில்லை.என்னைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள் என்று நினைத்தபடியே "சீ...ச்...சீ இல்லை..." என்றேன்.

பக்கத்தில் நெருக்கமாய் வந்தவள்..."என்ன கண் கலங்குது இப்ப..."என்று என் கண்ணைப் பார்த்தபடியே கேட்டாள்.

"இல்லை....இல்லை என்றபடியே எனக்கொரு வேலை இருக்கு தமிழ்.பிறகு சந்திக்கிறேன்..." என்றபடியே போய்விட்டேன்.

அடுத்தநாள் சமையலின்போது..."ஏன் இப்ப என்னோட நிறையக் கதைக்க மாட்டீங்கள்..." என்றாள்.

"இது என்ன வம்பு நீங்களே சண்டை பிடிக்கிறீங்கள்.பிறகு நீங்களே கதைக்காமல் விடுறீங்கள்.பிறகு நீங்களே வந்து கேள்வியும் கேட்டு வைக்கிறீங்கள்..."என்றேன்

"சரி...வாற திங்கட்கிழமை எனக்கு ஒரு விஷேசம்.கோயிலுக்குப் போவம் வாறீங்களே என்னோட..."என்றாள்

"இல்ல எனக்கொரு அலுவல் இருக்கு.கட்டாயமாப் போகவேணும்.நான் வரச் சந்தர்ப்பம் இல்லவே இல்லை தமிழ்...."என்றேன்.

"பொய் சொல்லாதேங்கோ.என்னைத் தவிர்க்கிறீங்கள்.உங்களை உங்களுக்குள்ளேயே மறைக்காதேங்கோ ரவி.கட்டாயம் பாத்திருப்பன் நீங்கள் வரவேணும் என்றபடியே..." நம்பிக்கையோடு போய்விட்டாள்.

அதன் பின் வந்த செவ்வாய் பின்னேரம்தான் என்னைக் கண்டவள் கண் கலங்க ..."ஏன் வரேல்லை கோயிலுக்கு.என்ர பிறந்தநாள் நேற்று..."என்றாள்.

"நேரமில்லை நான் முதலேயே சொல்லிட்டுத்தானே போனேன்..."என்றேன் மிக மிக மென்மையாக.

உடைந்துவிட்டாள் தமிழ்."நீங்கள் சும்மாதான் சொல்றீங்களென்று நினைச்சேன்.எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன்...."என்றபடி ஏதோவெல்லாம் சொல்லிச் சொல்லி சத்தமில்லாமல் அழுதுகொண்டு என் முன்னால் நின்றாள்.

எனக்கு என்ன செய்ய முடியும்.சொல்வதற்கும் ஏதுமிருக்கவில்லை.கையாலாகாதவனாய் அழுவதை நேரில் பார்க்க முடியாமல் நிலத்தைப் பார்த்துகொண்டு மௌனமாய் இருந்துவிட்டேன்

இதன்பிறகுதான் எம் விலகலின் தூரம் அதிகமானது.

தமிழ் இப்போதெல்லாம் என்னோடு கதைப்பது மிக மிகக் குறைவு இல்லையென்றே சொல்லலாம்.ஆனால் பார்வையில் வருத்தமும் வலியும்.

கண்ணில் உயிரற்ற ஒரு புன்சிரிப்பு.சுகம்தானே ரவி என்கிற ஒரு பார்வை.ஒரு முறை சொல்லியிருந்தாள் தமிழ்.

"ரவி உங்கள் பெயரை எழுதும்போதும் சொல்லும்போதும் ஒரு சுகம் எனக்கு என்பாள்.அதேபோல உங்களோடு கோபப்பட்டு மனம் வலித்த நேரங்களில் உங்கள் பெயரைச் சொல்வது உயிரைப் பிய்ப்பதுபோல ஒரு வேதனை..." என்பாள்.அதுபோலவே என் பெயர் சொல்லி சுகம் கேட்பதைத் தவிர்த்துக்கொண்டாள்.

பிறகொருநாள் தாடி எடுத்துவிட்டிருந்தேன்.கண்கள் விரியப் பார்த்தவள்

"இப்பத்தான் நீங்கள் நல்ல வடிவு...."என்றாள்.உயிரற்ற சிரிப்பில் ஒரு அளவு தெரிந்தது.

"ம்..." என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

இப்போதெல்லாம் தமிழைக் காணும் நேரம் எனக்குள் குழப்பமோ சலனமோ இல்லை.எம் உறவு உடைந்துவிட்டது மட்டும் நிச்சயமாய் உணர்ந்தேன்.மனம் வலித்தாலும் அழவில்லை.

காரணம்தான் என்ன என்பதைத் தேடிக்கொண்டிருந்தேன்.

தாடி வளர்த்து அவள் சொன்னபோது வெட்டாமல் போனதா...!

தண்ணியடித்ததா....!

கோயிலுக்குப் போகாததா....!

இல்லை...இல்லை வேறு ஏதாவதா.....!

இந்த ஏதோ ஒன்றுதான் பிரிவின் விதையாய் இருந்த்திருக்கிறது.அது பின் ஆழப் புதைந்து முளையாய் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

வருடங்கள் தொலைத்த தருணத்தில் இப்போ நினைத்துக்கொண்டிருக்கிறேன் தமிழை.மனதின் இழைகளில் மெல்லிய அதிர்வு !

தமிழின் மனதில் என்னுடையவன் ரவி என்கிற மந்திரம் உணர்வோடு சுவையோடு ஒன்றிவிட்டிருந்தது.காதலோடு இப்போதும் அதே தமிழ் தமிழாக..... !

பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க, காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அதிகாலை உங்கள் முற்றத்தில் நின்று பாருங்கள்.

பனிவளரும் நாடொன்றில் பனி ரசித்தபடி மனம் வேர்க்கும் தமிழைக் காண்பீர்கள் !

Tuesday, March 20, 2012

சங்கிலியும் சித்தப்பாவும்.

ஐடியா மணிக்கும் அதிராவுக்குமான சங்கிலிச் சண்டை முடியாத சண்டையாய்த் தொடருது.அது நிரூவின் பக்கத்திலயும் போட்டு மணியின் மானத்தை இன்னும் வாங்கியாச்சு.இப்பத்தான் தெரியுது அவர் பல்லும் விளக்காத ஒரு ஆள் என்று.அதுதான் அவரின்ர பதிவின் பக்கம் போற நேரம் ஒரே நாத்தம்.என்னடா என்ர வீட்ல எலி இல்லையே எண்டு யோசிச்சன்.இப்பத்தான் விளங்குது எங்கயிருந்து நாத்தம் வந்த்து எண்டு.நன்றி நிரூவுக்கு.இனி மூக்கைப் பொத்திக்கொண்டு போக நினைச்சிருக்கிறன் அவரின்ர பக்கத்துக்கு.வேற ஏதாவது வழி இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கோ.இதில இன்னொன்றும் தெரியுமோ பல்லு விளக்காம இருக்கிறதுக்கு பெரிசா ஒரு காதல் கதையையே சொல்லிட்டார் மணி.நான் என்ன சொல்ல வந்தேனென்றால்.....இவர்களது சங்கிலிக் கதை என் சித்தப்பா ஒருவரை அடிக்கடி ஞாபகப்படுத்துது.அவர் இறந்து 2 வருடமாகிவிட்டது.

எனக்கொரு முருகானந்தச் சித்தப்பா முருகானந்தச் சித்தப்பா எண்டு ஒருத்தர் இருந்தார்.தம்பி எண்டும் ஒரு பெயரும் இருந்தது இவருக்கு.நல்ல தவில் வித்வான்.நல்லாத்தண்ணியடிப்பார்.தண்ணியடிச்சால்தான் அன்பு பெருகி ஓடும்.சேவகங்களுக்குப் போனால் அங்கு சாப்பாடு பார்சல் பண்ணிக் கொடுத்து விடுவார்கள்.நடுச்சாமத்தில் லாந்தர் விளக்குப் பிடிச்சபடி வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி நல்ல நித்திரையாய்க் கிடக்கும் எங்களையும் எழுப்பி வச்சுக்கொண்டு சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ தூங்கி விழும் எங்களுக்குச் சாப்ப்பாடு தீத்தி விடுவார்.அந்த லாந்தரை கிணத்துக்கட்டில் வைத்துக்கொண்டு இரவு இரவாக உடுப்புத் தோய்ச்சுக் காயவிடுவார்.இப்பிடி நிறைய நகைச்சுவையான நல்ல ஒரு மனிதர்.கெட்ட பழக்கம் சாரயம் குடிக்கிறதுதான்.

அநேகமாக யோகன் பாரிஸ் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் இவரை.நல்லூரடி முத்திரைச் சந்தையடி நல்லரசு என்பவரின் மகன் இவர்.ஆரம்பகாலத்தில் மூளாய் பாலகிருஷ்ணன் அவர்களிடமும்,பிறகு கோண்டாவில் கானமூர்த்தி அவர்களிடமும் தவில் வாசித்தவர்.இந்த இடையில் அளவெட்டி பத்மநாதன் அவர்களிடம் தவில் வாசித்த காலம்.இங்குதான் அந்தச் சங்கிலிக் கதை......

இவர் குழப்படி என்று நகைகள்,தவில் எல்லாமே பத்மநாதன் அவர்கள் வீட்டில்தான் இருக்கும்.கச்சேரிக்குப் போகும் நேரம் மட்டுமே கைக்குக் கிடைக்கும்.அவரது சம்பளம்கூட சித்தியிடம் நேரடியாகப் பத்மநாதன் அவர்களே வீட்டுக்கு வந்து கொடுத்துப் போவார்கள்.இப்படி இருந்த காலத்தில்தான் சித்தப்பாவுக்கு அபாரமாக மூளை வேலை செய்திருக்கு.இடைக்கிடை சித்தி காசு கொடுப்பா.அதில் மட்டுமே தண்ணியடிச்சுகொண்டு சாமிமாதிரி...நல்ல பிள்ளையாம்.

ஒரு நாள் சித்தி கவனிச்சிட்டு அம்மம்மாவோடு கதைச்சிருக்கிறா."உந்தச் சங்கிலி முந்தி நீளமாவெல்லோ இருந்தது......"எண்டு.கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் விட்டு வச்சிருக்கினம் மனுசனை நம்பி.ஆனால் வர வர உண்மையாவே ஒரு வருஷத்திற்குள் சங்கிலி சின்னனாகிப் போய்க்கொண்டிருந்திருக்கு.பார்த்தால் அதிலுள்ள ஒற்றை ஒற்றை மணியாகக் கழற்றி வித்துக் குடிச்சிருக்கிறார்.ஆனாக் கேட்டால் "இல்ல அது அப்பிடியேதான் முதலும் இருந்தது எண்டு....." எண்டு சொல்லிட்டு அதைப் பற்றி எதுவுமே தெரியாயதுமாதிரிப் போய்விடுவாராம்.

மணி,அதிரா சங்கிலிச் சண்டையில் என் சித்தப்பாவை ஞாபகப் படுத்தினேன்.வெற்றிலை அதிகம் போடுவதாலேயே புற்றுநோய் வந்து எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.அவரை நினைப்பதில் சங்கடமும் சந்தோஷமும்.நன்றி மணிக்கும் அதிராவுக்கும் !


ஓஷோ ஜோக்.

ஹெர்னி மிக விரைவாக காரை ஓட்டிக் கொண்டுசென்றான்.பின்னால் தொடர்ந்த ட்ராபிக் போலீஸ் ஒருவர் அவனை மறித்து...

'சார், இப்படியா வேகமா ஓட்டுவீங்க உங்க மனைவி இரண்டு மைல்களுக்கு முன்னால காரில் இருந்து விழுந்துட்டாங்க' என்றார்.

'ஒ அப்படியா, நான் கூட எங்கே என் காதுதான் செவிடாயிருச்சோன்னு பயந்து போயிட்டேன்' என்றான்.

Friday, March 16, 2012

எமக்கு இப்போ வேண்டிய இரண்டும்.

தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுக்கிறேன். வெளவாலாய்த் தலைகீழாய்க்கூடப் படுத்துப் பார்க்கிறேன்.மனமும் தொங்குகிறதே தவிர கண்ணுக்குள் எந்த அசைவும் இல்ல.இந்தக் குளிர் தேசத்திலும் என் தேகம் எரிகிறது.இப்போ இருக்கிற மனநிலையில இணையப் பக்கங்களில் வாசிச்சு மனசில பதிஞ்ச கதைகள் இரண்டு சொல்லலாம்போல இருக்கு.

ஒரு ஆசிரியர் தனது மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார்.ஒரு வெள்ளைத் தாளைக் காண்பித்தார்.அந்தத் தாளின் நடுவில் ஒரு சிறிய கரும்புள்ளி வைக்கப் பட்டிருந்தது.தாளை காண்பித்து அதில் என்ன தெரிகிறது என மாணவர்களைக் கேட்டார்.அனைவ‌ருமே ஒரு கரும் புள்ளி தெரிவதாகச் சொன்னார்கள்.ஆசிரியர் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சொன்னார்....

"எனது அன்பு மாணவர்களே .... இந்த தாளில் வெண்மையான மிகப் பெரிய பகுதி உள்ளது.ஆனால் நாம் அதை விட்டு விட்டு கரும்புள்ளியில் மட்டுமே கவனம் கொள்கிறோம்.இது தான் மனதின் இயல்பு.வாழ்க்கையில் எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருந்தாலும் சின்ன சின்ன எதிர் மறையான நெருடல்களிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம்.அதையே நினைத்து மனம் வருந்தி நேர விரயம் செய்கிறோம்."

அதற்காக ஒரு பிரச்சனை வரும் போது அதனை கண்டு கொள்ளாமல் ஜாலியாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை.அந்த பிரச்சனையைச் சந்திக்க வேண்டும்.அதனை வெற்றிகரமாக தீர்க்க வேண்டும்.அதனை வெற்றி கொள்ளும் போது ஒரு சந்தோஷம் ஒரு திருப்தி ஏற்படுகிறதல்லவா அதில் நிலை கொள்ள வேண்டும்.ஆனால் நாம் எப்போதும் எதிர் மறையான எண்ணங்களையே நினைத்து வருந்தி வாழ்ந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறி விடுகிறது.மேலும் மேலும் கவலைகளை உற்பத்தி செய்கிறோம்.

நாம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களைச் சந்திக்காமலில்லை.சந்திக்கிறோம்.ஆனால் எவ்வளவு நேரம் அந்த சந்தோஷத்தில் நிலை கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது.

சரி இதற்கு மாறாக எப்போதும் மகிழ்ச்சியாகக் குதூகலமாக வாழ முடியுமா?கண்டிப்பாக முடியும்.ஏனென்றால் சந்தோஷமானாலும்,துக்கமானாலும் அந்த உணர்வு நமது உள்ளே இருந்து தான் வெளிப்படுகிறது.அதாவது அந்த உணர்வு ஏற்கனவே அங்கு உள்ளது.புறச் சூழ்நிலைகள் வெறும் கருவிகளே.

நாம் எல்லோருமே எப்போதும் நிறைவான சந்தோஷத்துடன்தான் வாழ விரும்புகிறோம்.ஆனால் ஏதோ ஒன்று மாறி ஒன்று மனதிற்குள் புகுந்துகொள்ள எப்போதும் சோகம் தேய்ந்த முகத்துடனும் கவலையுடனுமே நமது வாழ்நாட்கள் ஓடுகின்றன.நம்ம ஐடியா மணி,அதிரா போன்ற ஆட்களைக்கூட அது விட்டு வைப்பதில்லை

நாம் நாளாந்தம் எம்மைக் கடக்கும் எம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.அனைவரும் ஏதோ எதையோ ஒன்றை இழந்தது போல் வெறித்த பார்வையோடு ஏனோதானோவென்று பொய்யாகப் புன்னைகைத்தபடி வாழ்வோடு பறந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

பல நாட்கள்,பல வருடங்கள்,பல பிறவிகளின் பழக்கம் இந்தக் கவலை!என்ன செய்வது கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கலையைத்தான் முழுமையாகக் கற்றிருக்கிறோமோ என்னவோ !

எனவே...அவ்வளவு சீக்கிரம் அகலுமா அது?மேலும் நமது உலகமும் சமூகமும் சந்தோஷத்திற்கு எதிராகவே செயல் படுகிறது.கலகலப்பாகச் சிரித்து விளையாடி மகிழும் குழந்தைகளை மாணவர்களைக் கண்டிக்கிறோம்.புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவன் புத்திசாலியெனப் போற்றப் படுகிறான்.அவன் தன் குழந்தைச் சந்தோஷங்களை தன்னுள்ளேயே அடக்கிப் பெரியவர்களின் திணிப்பில் படிக்கிறான் என்பதை யார் யோசிக்கிறோம்.

ஆனால் உண்மை என்னவெனில் இந்தச் சந்தோஷம்,ஆனந்தம்,குதூகலம்,மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் அனைத்தும் நமது உள்ளத்தில் ஏற்கனவே இருக்கிறது.ஆனால் நாம் தான் எப்போதும் துக்கம் என்னும் உணர்வையே தேர்ந்தெடுத்து விடாப் பிடியாக பின் பற்றி வருகிறோம்.அதுதான் எம்மை வெகு சீக்கிரமாகத் தாக்கும் வைரஸ் என்பதாலா....!

1) "ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?"
"சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"

2) "பேய் 1 : "எதுக்கு இப்படி அலறியடிச்சிட்டு ஓடி ஒளியறே?"
"பேய் 2 : "என் பொண்டாட்டி திடீர்னு செத்து தொலைச்சிட்டா..."


இன்னுமொன்று.....
ஒரு காட்டில் ஒரு ஞானி வசித்து வந்தார்.அவரைக் காணப் பலர் வந்தார்கள்.வந்தவர்களோடு நல்லபடி உரையாடி உபசரித்து அனுப்பி வந்தார் ஞானி.ஒரு நாள் ஒரு சீடன் அவரைப் பார்ப்பதற்காக வந்தான்.அன்று முழுவதும் அவரோடு இருந்தான்.அவருடன் பேசிக் கொண்டிருந்தபோதே இருள் சூழத் தொடங்கிவிட்டது.

சீடன் புறப்பட விரும்பினான்.தடுத்த ஞானி “இரவு இங்கேயே தங்கி நாளை காலையில் புறப்படு” என்றார்.“நான் இன்றிரவே போய்ச் சேர்ந்தாக வேண்டும்” என்றான் சீடன்.நல்லது போய் வா” என்றார் ஞானி.வாசலுக்கு வந்த சீடன் இருளில் போகத தயங்கி நின்றான்.அங்கேயே தங்கவும் மனமின்றி புறப்படவும் துணிவு இன்றிச் சீடன் தடுமாறுவதைக் கண்டார் ஞானி.உடனே அவர் ஒரு விளக்கை அவன் கையில் கொடுத்து “இப்போது புறப்படு” என்றார்.

அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கிளம்பினான் சீடன்.அவன் சிறிது தூரம் நடந்ததும் “நில்” என்றார் ஞானி.சீடன் அப்படியே நின்றான்.வேகமாக வந்த ஞானி வாயால் ஊதி விளக்கை அணைத்தார்.பின்னர் மீண்டும் “புறப்படு” என்றார்.

சீடன் திகைத்தான்.ஞானி சொன்னார்.“இரவல் வெளிச்சம் நெடுந்தூரம் துணைக்கு வராது.உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது.உள்ளே துணிவிருந்தால் வெளியே விளக்குத் தேவை இல்லை.உள்ளே பயம் போகாத வரை உன்னால் முன்னேற முடியாது போ… இதே இருள் இதே பாதை இவை எப்போதும் இங்கேயதான் இருக்கும்.உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்” என்று உபதேச மொழிகளை மொழிந்தார்.

தெளிவடைந்த சீடன் இப்போது உறுதியுடன் நடக்க ஆரம்பித்தான்.எல்லோருக்கும் அகமே விளக்கு.கடைசி வரை அதுதான் வழிகாட்டும்.இரவல் அறிவோ ஒளியோ எப்போதும் துணைக்கு வராது.விதை முளைப்பதற்கான ஆற்றல் விதைக்குள்ளேயே இருப்பதைப் போல் வாழ்க்கையின் வெற்றியும் எங்களுக்குள்ளேயே இருக்கிறது.நம்பிக்கையோடு முன்னேறுவோம்.எம் முன்னால் நம்பிக்கைச் சூரியனின் ஒளி வழிகாட்டலின் துணையும் எப்போதும்...!

துணிவுடன் இருங்கள் - வளமான வாழ்க்கை உங்களுடன்.துணிவுடன் இருங்கள் என்றால் மற்றவர்களை அடக்கி ஆளுங்கள் என்பது பொருள் அல்ல.உங்களை அடக்கி ஆளுங்கள் என்பதுதான் உண்மையான பொருள்.உங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து முன்னேறுங்கள்.எதிர்காலத்தில் வளமான வாழ்க்கை.வேண்டுமானால் உங்களது மனதை அடக்கி நல்லவற்றில் மட்டுமே முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்.

-ஜேம்ஸ் ஆலன்.

Monday, March 05, 2012

ஐடியா மணிக்குப் பொன்னாடை போர்த்துறோம்ல !

பாரிசில் வாழும் மாத்தியோசி புளொக்கின் தலைவர் முன்னாடி ஓட்டை வடை நாரயணன்,நிரூபனின் அல்லக்கை,ரஜீவன் என்கிற பெயரில் பின்னாடி இப்போ ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW (பாருங்கோ மக்களே எங்கயெல்லாம் படிச்சு எத்தனை டிப்ளோமா எண்டு) என்கிற பெயரில் கறுப்புக் கண்ணாடியோடு லாச்சப்பலில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க யோசிச்சிருக்கிறோம்.ஏனென்றால் மிகவும் பயனுள்ள பெண்களுக்கான வீட்டுக்குரிப்புகளை அல்லி வழங்கிருயிருக்கிறார்.

அந்தப் பதிவைப் படிச்ச சந்தோஷத்தில உடம்பு முழுக்க மூளையென்று நினைச்சு தெரியாமல் சொல்லிட்டேன் பொன்னாடை போத்துறன் எண்டு.அதுக்குப்பிறகுதான் தெரியுது அதிராவின் பூனைக்குட்டியாரின்ர 5 பவுண் தங்கச்சங்கிலிக்கு அவர்மேல வழக்கு நடக்குது என்று.ஆனால் அவர்தான் எடுத்தாரென்று ஓரளவு பிடிபட்டும் கிட்டக் கிட்ட வந்தும்.... பிறகு பிடிபடாமல் போறார்.இதில அப்பா யோகா,அம்பலத்தார் ஐயா,காட்டான் மாமா,நிரூ,கந்து,தனிமரம் நேசன் எல்லாரும் சம்பந்தப்பட்டிருபார்கள் என்றே சந்தேகிக்கப்படுகிறார்கள்.அதால அவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் இணையப் பதிவர் நீதிமன்றம் தடுமாறுகிறது.
இதுதான் அந்தச் சங்கிலியாம்.ஆனா இது 5 பவுணைவிடக் கூடவாயிருக்குமே !

இவர் சங்கிலி எடுத்தவர் என்று நிரூபிச்சிட்டால் நிரூ முள்ளுக்காவடி எடுக்கிறதாய் அதிரா சொல்ல,முள்ளுக் காவடி எடுக்கும் சம நேரத்தில அக்காச்சி அதிராவும் அக்காச்சி ஹேமாவும் அலகு குத்தி பாற் செம்பு எடுப்பீனம் என்று வள்ளி தெய்வானை மேல சத்தியம் செய்து சொல்றேன் என்று நிரூவும் (என்னைக் கேட்காமலேயே ) நேர்திக்கடனை முருகனுக்கு அள்ளிக் குடுக்கிறார்கள்.இப்பிடியெல்லாம் நேர்த்திக்கடன் கடனாக் கிடக்கு.எப்பிடியும் முருகனுக்கு ஆப்புத்தான்.ஏமாந்துதான் போகப்போறார்.அதோட வள்ளிக்கும் தெய்வானைக்கும் சங்கிலி,சேலை என்று பொய்யான லஞ்சம் எல்லாம் ஒருபக்கமும் கிடக்கு.
கருப்புக் கண்ணாடி(கறுப்பு கண்ணாடி சமாதான காலத்தில புதூர் நாகதம்பிரான் கோயில் திருவிழாவில வாங்கின எட்டு வருசம் பழைய கண்ணாடி என்றும்...நப்பி! நீயி...உந்த இடப் பெயர்வுக்கையும் கண்ணாடியை கைவிட மனமில்லாம பொக்கற்றுக்குள் கொண்டு வந்தது எனக்கெல்லோ தெரியும்!என்றும் நிரூ சொல்கிறார்.) இரகசியம் என்னடாவெண்டா காதலிச்சுக் காதலியின் கரைச்சல் தாங்காம ஓடி ஒளிஞ்சு பரிஸ் - லாச்சப்பல் பக்கம் ஒளிஞ்சு இருக்கிறாராம்.இது நான் கேள்விப்பட்டது.ஐடியா http://www.tamilaathi.com/2012/03/blog-post_03.html மணியத்தாரின் இந்தப் பதிவும் சொல்லுது பாருங்கோ.

இனிமே யாருமே காதலிக்காதேங்கோ.காதலிச்சா இதையெல்லாம் மெயிண்டேன் பண்ணவேணும்.இல்லாட்டி காதலி உங்களை மதிக்கமாட்டாளென்று.ஆனா இவரை காதல் செக்சனில இண்டர்போல் போலீஸ் தேடுதாம்.அதுக்குத்தான் கருப்புக்கண்ணாடி.இதெல்லாம் பழைய சிவாஜி,எம்.ஜி.ஆர் படங்களில ஆள் அடையாளம் தெரியாம இருக்க கன்னத்தில ஒரு மச்சம் ஒட்டிவிட்டா ஆள் அடையாளம் மாறும் என்கிறமாதிரித்தான் இந்தக் கருப்புக் கண்ணாடி.

1) ஒட்டுசுட்டாணில ஒண்டிப்புலி சின்ராசு மகள் மேல கை வைச்சு வாங்கி கட்டினது...

2) வட்டக்கச்சி விதானையாரின் பொட்டையை ஏமாத்தினது...

3) கனககுஜலாம்பாள் அப்டீங்கற பொண்ணை லவ் பண்ணும் போது அந்தப் பொண்ணை நிரூ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆயிரம் தேங்காய் உடைக்குறதாகூட வேண்டிக்கிட்டது....

4) ஒருவாட்டி குஞ்சுப் பரந்தனுக்கு போயி தேங்காய் கட்டிக் கொண்டு வாடா என்று ரெண்டு சாக்கு கொடுத்து இவனோட அம்மா அனுப்பி வைச்சா.இந்த நரி...தொதல் கிண்ட தேங்காய் வாங்கி வர கொடுத்தனுப்பிய காசில திருவருட் பிள்ளையார் படமாடத்தில போயி கோணாவில் கவிதாவின் போட்டோவை பிரேம் பண்ணிக் கொண்டு வந்ததோட தேங்காய் வாங்க கொடுத்து அனுப்பிய காசையும் செலவளிச்சுப் போட்டு வந்திட்டுது! இந்த லட்சணத்தில நேர்த்தி வைச்சு இவன் தேங்காய் உடைக்கிறதாவது!

இப்பிடி இப்பிடியே இவரது பிரதாபங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.பிரான்ஸ் பிகருகள் பற்றி துஷி சொல்றதாச் சொல்லிட்டு நட்புப் பாலத்தை இறுக்கிப் பிடிச்சு வைச்சிருக்கிறதுக்காக்கப் பிறகு சொல்லாம விட்டிட்டார் !

இவற்றோடு....இன்னும் இந்தப் பன்னாடையை பர்சனலா அறிந்தவன் என்ற ரீதியில் சொல்றேன்....என்று நிரூ இவரைப் பற்றிச் சொல்வதாவது.....

இவன் ஒரு வசதியான திருடன்! இவன் லோக்கல் திருடன் இல்லை!
கோப்பை கழுவுறான் என்று நீதிபதிகிட்டயே பொய் சொல்லிட்டானே இந்த நாதாரி !

மக்களே இவன் பிரான்ஸில ஒரு மொழி பெயர்ப்பாளரா ஒரு கூலான அறைக்குள் இருந்து ஒர்க் பண்றான்! இவனுக்கு இங்கிபீசு பிரெஞ்சு அத்துப்படி! அதோட இந்த நாயி ஒரு பகுதி நேர ஆங்கில நா(வா)த்தி & எக்கவுண்டன்!

பிரான்ஸில வசதியா இருந்திட்டு,தன் திருட்டை நியாயப்படுத்தக் கோப்பை கழுவுறதா பொய் சொல்றான்!

இதெல்லாம் இவரது காதல் சாகசங்களும் இன்னும் பிறவும்...(இதெல்லாம் சொன்னவர் நாற்றுப் பதிவளர் நிரூ.ஆட்டோ அனுப்பிறதென்றால் அவர் பக்கம் அனுப்பவும்.)

இவ்வளவு பிராதுகள் இவர் பக்கம் இருந்தாலும்....எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளைய அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளாரென்றும் அறியக் கிடைத்துள்ளது.

எனவே இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் இணைய உறுப்பினருமான முன்னாடி ஓட்டைவடை நாரயணன் பின்னாடி ஐடியா மணி அவர்களுக்குச் சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே அவருக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்.இந்த இடத்தில் மன்னிப்போடு ஒன்றும் சொல்லிக்கொள்கிறோம்.அவர் இலண்டனிலதான் வச்சுத்தான் பொன்னாடை போர்த்தச் சொல்லிக் கேட்டவர்.(இதிலயும் நிரூ சொன்னதாவது பன்னாடைக்குப் பொன்னாடையோ என்று.)ஆனா அதிரா தேம்ஸ் நதிக்கரையில டெண்ட் அடிச்சுப் பூனையாரோடு காத்திருப்பதாகப் பிந்திய செய்திகள் கிடைச்சிருக்கு.அது அவ தீக்குளிக்கிறதுக்கோ (தீ அணைக்கிற லாரிக்கும் அறிவிச்சிருக்கிறாவம்)இல்லாட்டி மணியத்தாரைப் பிடிச்சுத் தண்ணிக்குள்ள தள்ளவோ எண்டு இன்னும் சரியாக அறியப்படவில்லை.

எது எப்பிடியானாலும் இவரது எல்லாச் சேவைகளையும் பாராட்டி இன்று அண்ணன் சிந்தனை பொறித்த பொன்னாடையை தமிழீழ தமிழகத்து உணர்வாளர்கள் நாங்கள் போர்த்திக் கௌரவிக்கிறோம்.(மணியத்தாருக்கே இப்ப இனித்தான் அறிவிக்கப்போறோம்.)அத்தனை இணையத் தமிழ் உறவுகளின் வாழ்த்தை அவருக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

நிரூ,ஹேமாவின் ஒருங்கிசைவில் பொ(ப)ன்னாடையோடு காத்திருக்கும் உலக இணையத் தமிழர் ஒருங்கிணைப்புச் சங்கம் !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP