Thursday, August 05, 2010

அம்மிணி இழுத்த தொடர் சந்தியில்.

ம்ம்ம்...தொடர் எழுத அவ்வளவு விருப்பமில்லை.ஏனென்றால் அதுவும் ஒரு பதிவு.அதில் ஏதாவது ஒரு விஷயம் இருக்கவேணும்.இந்தப் பதிவில் ஏதும் இருக்கா ?! ....நீங்களே கண்டு பிடிங்க !

என்னை இந்த வம்பில மாட்டிவிட்ட சின்ன அம்மிணிக்கு நன்றி நன்றி மிக்க நன்றி தோழி.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ?

ஹேமா(சுவிஸ்)

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் ஹேமவதி.சுவிஸ் என் பெயரோடு ஒட்டிக்கொள்ளக் காரணம்...முன்பு வானொலியில் பங்குபற்றிக்கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு ஹேமாவும் இருந்தார். அதனால் சுவிஸிலிருந்து ஹேமா என்று தொடங்கி....ஹேமா(சுவிஸ்) ஆகிவிட்டது.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ஓ...அந்தக் கதையா.எனக்கு என்னமோ சின்னப்பிள்ளைல இருந்து ஊடகத் துறை மேல நிறைய விருப்பம்.நாள் முழுக்க ரேடியோ அலறினபடியே இருக்கும்.அதில வாற அறிவிப்பாளர் என்ன திறமையோட இருக்கிறார் என்று அறிஞ்சு வியப்பேன்.கடிகாரம் பார்க்காமலே நிகழ்ச்சி கேட்டு நேரத்தைச் சொல்லிவிடுவேன்.அப்படி ஒரு பைத்தியம்.செய்தி வாசிப்பவர்கள் தொடக்கம் இரவில நித்திரைக்குத் தாலாட்டுப் படிக்கிறவர்கள் வரைக்கும் எல்லோருமே என் விசிறிகள்தான்.

அதுபோல கவிதைகள் எழுதி எழுதி அவர்களைப்போல வாசிச்சுப் பார்ப்பேன்.ஆனா அனுப்பினது கிடையாது.வீட்டில யாரும் ஊக்கப்படுத்தேல்ல."என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்" என்று மட்டும்தான் கேட்டார்கள்.

அப்பிடி இப்பிடி நாள் ஓடி நானும் சுவிஸ் வந்தேன்.அப்ப இலண்டன்ல இருந்து 2-3 வானொலிகள் ஒலிபரப்புச் சேவையில் இருந்தன.அவைகளுக்கு மெல்ல மெல்ல எழுதத் தொடங்கினேன்.என் கவிதைகள் ஒலிபரப்பாகின.அதன்பிறகும் வானொலிகளுக்கு இடையிலான பிரிவுகள்,அரசியல் பிரிவுகள் என ஒரு வானொலியை இன்னொரு வானொலி திட்டுவதும்,கேட்பவர்களும் சார்ந்து பிரிந்து நிற்பதும் என்னை அவர்களோடு ஒட்டி நிற்கவிடாமல் தனித்தே விடப்பட்டேன்.புலம் பெயர்ந்து ஒட்டுக் குடித்தனம் நடத்தும் வேளையிலும் ஒற்றுமையில்லை.விருப்பமில்லை.கேட்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டேன் என்னை.

அதன் பின்னரும் கிறுக்கல்கள் தொடர்ந்தபடிதான் படிக்கும் புத்தக மூலையிலும்,பாடும் கழிவறைக் கடதாசியிலும் கூட.வானொலியில் என் திறமையைக் கண்ட இலங்கைச் சூரியன் வானொலி அறிவிப்பாளர்,என் ஊர்க்காரர்,என் உறவுக்காரர் தீபசுதன் தான் இப்படி ஒரு வழி இருக்கு என்று சொல்லி அவரும் என் தமிழகத்து நண்பருமான அரவிந் ம் சேர்ந்து ஒரு புளொக்கர் செய்து தருகிறோம் என்று இதைச் செய்து தந்தார்கள்.

அவர்கள் செய்ததும் போதும்.நான் அவர்களைப் படுத்தின பாடும் போதும்.அது பெரும் கதை.கருப்புத்தான் வேணும்.அதுவும் மூன்றாகப் பிரிஞ்சிருக்க வேணும்.மேல என் மன அவதிகள் ஓடவேணும்.இப்பிடி இப்பிடி....!

தொடக்கிவிட்டதோட தீபசுதன் சரி.பதிவுகளின் அபிப்பிராயம் மட்டும் எப்போதாவது சொல்வார்.அரவிந் தான் இப்பவும் அவசர உதவியில் இருக்கிறார்.என்றாலும் அவருக்கும் பயம்.எதுக்கோ இந்தக் கொக்கு ஒற்றைக்காலில நிக்கபோகுது என்று போன் பண்ணினாலும் சிலசமயம் போன் "நீங்கள் போன் செய்த நபர் இப்போ தூக்கத்தில்" என்று சொல்லச் சொல்லிடுவார்.

புளொக்கர் செய்ய முதல் அரவிந் ஏதோ ஒரு கவிதைத் தளத்தில் ஒரு கவிதையைப் பதிவிட்டார் படத்தோடு.அதுவே எனக்கு ஆர்வமாய் இருந்தது.இப்போது சந்தோஷப் படுவார்கள் இருவரும்...சும்மா விளையாட்டாகத் தொடங்கித் தந்தோம்.நீங்கள் அதை ஆர்வத்தோடு அழகாகக் கொண்டு போகிறீர்கள் என்று என்னை ஊக்கப்படுத்துவார்கள்.
அவசர உதவியாளர் இருவரும் இலண்டனில்தான் இருக்கிறார்கள்.
உண்மையில் இருவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

அதன் பின் என்னை இன்றுவரை தொடரும் இணைய நண்பர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.அவர்கள் தரும் பின்னூட்டம் தரும் ஊக்கம்தான் அடுத்த கவிதைக்கான அஸ்திவாரம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

என் குழந்தைநிலா பிரபல்யம் அடைந்திருக்கிறாளா.அப்படி நீங்கள் சொன்னால் சந்தோஷம்தான்.எனக்கு வந்து என்னை ஊக்கப்படுத்தும் நண்பர்களை நானும் ஊக்கப்படுத்தத் தவறாமல் பின்னூட்டம் தருவேன்.வேறு லங்காஸ்ரீ இணையத்தில் என் தளத்தை இணைத்திருக்கிறார்கள்.மற்றும் தமிழ்மணம்,தமிழிஸ் லும் இணைத்திருக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பாதிக்குப் பாதி ....ஓரளவு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.யாரிடமும் சொல்லி ஆறமுடியாத மன அவஸ்தை எழுத்துக்குள் அடங்கிப் போகிறது.யாரிடமோ சொல்லிவிட்டதுபோல ஒரு பெரிய பாரம் இறங்கினதுபோல பெருமூச்சு ஒன்று வெளிவரும்.அது சந்தோஷமோ, கவலையோ அல்லது கோபமாய்த் திட்டவேணுமோ,செல்லமாய்க் கொஞ்சவேணுமோ எல்லாமே எழுத்துக்களில் அடக்கிக் கொள்வேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஐயோ....முழுக்க முழுக்கப் பொழுது போக்குத்தான்.எனக்கு லாபம் ன்னா என் மன அழுத்தம் குறைகிறது.அட....இதில சம்பாதிக்கவும் முடியுமா அப்பிடியே இருந்தாலும் வேணாம். நிறையவே சம்பாதிச்சு வச்சிருக்கிறேன்.போதும்!

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு.என்ன கேள்வி இது.இரண்டுமே தமிழ்தான்.ஒன்று "வானம் வெளித்த பின்னும்". அடுத்து ஒரு வருடத்தின் பின்னர் கவிதை தவிர்த்து வேறு விஷயங்கள் எழுதவென்று தொடங்கித் தந்தார்கள் "உப்புமடச்சந்தி".கவிதைகள் எப்போதும் கவலையாகவே இருக்கு என்று...நகைச்சுவையாகக் கதைச்சுச் சிரிக்கலாம் என்றுதான் தொடங்கினேன்.இந்த இடத்தில் கடையம் ஆனந்த் க்குத்தான் நன்றி.கவிதைப் பக்கத்தில் வந்து அடிக்கடி சொல்லிக் கொள்வார் .....ஏன் இப்படிச் சோகமான கவிதைகள் என்று !அவரின் அந்தப் பின்னூட்டங்களே சந்தோஷமான பதிவுகளுக்காக இன்னொரு பக்கம் தேவை என ஊக்கம் தந்தது.

என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாமலே எதையாவது அங்கும் பதிவிட்டபடி இருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை கட்டாயம் வரவேணும் இந்த மன ஆமைக்குள்ளயும்.அப்பத்தான் எழுதவேணும் என்கிற உற்சாகம் வரும்.

நல்லா எழுதுற எல்லார் மேலயும் பொறாமை வரும். பாரா அண்ணா மேல,நேசன் மேல பொறாமை.பிறகு ...ஒருத்தர் பேரும் சொல்லமாட்டேன்.ஆனா நல்லாச் சிறுகதை... கட்டுரை...சமூக விழிப்புச் சங்கதிகள் எழுதுற,பிழை பிழையா எழுதுற,கும்மி அடிக்கிற,நகைச்சுவையா எழுதுற,படம் வரையிற,அரசியல் அனுபவம்ன்னு எழுதுற எல்லார் மேலயும் அன்போட பொறாமை இருக்கு !

திறமையா எழுதுறவங்க பதிவுக்குப் போய் அவங்க என் பக்கமே வராம இருந்தாலும் அவங்க திறமையைப் பாராட்டிவிட்டு வருவேன்.அவங்க என்னை ஒரு லூசுன்னு நினைச்சாலும் பரவாயில்லை.உண்மையில் பலராலும் புகழப்படும் சிலர் என் பக்கம் வருவதேயில்லை. காரணம் தெரியவில்லை.

ஏதாவது என் மீது தப்பிருக்கோ அல்லது தப்பான விஷயங்களை எழுதுகிறேனோ என்று கூட நான் நினைத்துக்கொள்வேன்.அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி அந்த பாராட்டைப் பற்றி..

உண்மையில் இந்தக் கேள்விக்குக் குழப்பம்தான் பதில்.குழந்தைநிலாதான் என்னோட முதல் தளம்.அதில டெம்லேட் பிடிக்கேல்ல பிடிகேல்ல என்று அடிக்கடி அழித்துவிடுவேன்.4-5 மாதங்களின் பின் தான் இந்த டெம்லேட் சரி என்று தலை ஆட்டினேன்.அதனால் எந்தக் கவிதை முதல் பதிவிட்டேன்....யார் பின்னூட்டம் என்று சொல்லத் தெரியவில்லை.முதல் கவிதை பதிவில் 25.01.2008 என்று இருக்கிறது.

அதோடு ஆரம்ப காலங்களின் ஒரு பின்னூட்டம் காணத் தவமாய்த் தவமிருக்க வேணும். யாருக்கும் என் பக்கம் தெரியவில்லை.எனக்கும் யாரையும் தெரியவில்லை.மற்றவர் தளங்கள் போகவோ பின்னூட்டம் போடவோ தெரியவில்லை.10-15 கவிதைகளின் பின் இரவீ தான் ஒரு கவிதைக்கு அதுவும் 3-4 மாதங்களின் பின் பின்னூட்டம் போட்டிருந்தார்.

comments: Ravee (இரவீ )
//நான் உன் அன்பான
ராட்சதக் காதலிதான்.//

நீங்க ஆரம்பத்தில் இருந்தே அப்படி தானா... சரி சரி.
18 December, 2008 19:47

இந்த நேரங்களில் தமிழ் மணம்,தமிழிஸ்,லங்காஸ்ரீ எதுவும் இணையாத காலங்கள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எல்லோரது திறமைகளையும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் இல்லாமல் ஊக்கம் தாருங்கள் என்று இணையங்களில் இருக்கும் திறமை மிக்க...அனுபவம் நிறைந்த பெரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நிலா அம்மாவின் 31 + 1 கேள்விகள் எனும் என் பழைய தொடரிலும் கொஞ்சம் என்னைப்பற்றிச் சொல்லியிருக்கு.

நான் யாருக்கும் கரைச்சல் குடுக்க மாட்டேன் இதைத் தொடரச் சொல்லி.இந்தத் தொடர் அநேகமாக எல்லோருமே எழுதிட்டாங்க.

நான் குடுத்தா ரவி கிட்டத்தான் குடுக்கணும்.எனக்குத் திட்டு வாங்கப் பிடிக்கேல்ல இப்பல்லாம் !

ஐயோ....இலக்கிய மேதையாம்(அவரே சொல்லிக்கிறார்) மேவீ பண்ற தொல்லை தாங்கமுடியேல்ல.சரி...அவர் இந்தத் தொடரைத் தொடரப்போகிறாராம்.சரி மேவீ எழுதுங்கோ!

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP