Thursday, April 22, 2010

2010ன் விடுமுறையில் ஊரில் நான்.

மோனை பிள்ளையள் எப்பிடியப்பு இருக்கிறியள்.எல்லாரும் சுகம்தானே !ஊருக்குப்போய்ட்டு வந்திருக்கிறன்.ஆனா மனசில எப்பவுமே எங்கட கலட்டியடிக் கிழவின்ர கிணறுபோல ஏதாச்சும் குப்பையும் குச்சியுமாத்தானேடி குழம்பிக் கிடக்கடி பிள்ளை.என்னத்தை எழுத நான் !

இந்த ஜெயாக்குட்டியும்,உந்த ரவிப் பொடியும் எப்பவும் ஆக்கினைக்கு மேல ஆக்கினையாக் கிடக்கு.ஊருக்குப் போய்ட்டு வந்திருக்கிறயணை.ஏதாச்சும் கிறுக்கு கிறுக்கெண்டு.என்னத்தை சொல்லி என்னத்தைக் கேட்டு என்னெண்டு நான் எழுத.துபாய் ராஜா எழுதிற மாதிரி பிரயாணக் கட்டுரையெண்டு வடிவா எனக்கு எழுத வராது.சும்மா புலம்புவன்.அதோட என்ர கமெரா நடுவில குழப்படியும் பண்ணிட்டுது.வீடியோவும் டிஜிடெல் இல்லை.அதால இருக்கிற ரெண்டொரு போட்டோக்கள் மட்டும்தான்.வீடீயோ சரியாக்கின பிறகு ஒரு நாளைக்கு பதிவில போடுறன்.சரியோ !

6 வருஷத்துக்குப் பிறகுதான் வீட்ட போனனான்.போன ரெண்டு வருஷத்துக்கு முன்னம் அம்மாவும் அப்பாவும் சிஙப்பூருக்கு வந்திச்சினம்.அங்க போய்ப் பாத்தபடியால ஊருக்கு கனகாலத்துக்குப் பிறகு போய்ட்டு வந்திருக்கிறன்.

எங்கட ஊரப்பு யாழ்ப்பாணம்/கோண்டாவில்தான்.ஊர்ல நடந்த கலவரத்தால எங்கட பெரியப்பா திருகோணமலையில இருந்ததால இங்க வந்து இருக்கிறம் இப்ப.எனக்கு அங்க பிடிக்கேல்லத்தான்.எண்டாலும் என்ன செய்றது.அப்பாக்கு தான் வளர்ந்த இடமானதால பிடிக்குது.சரி அவையள்தானே இருக்கினம்.இருந்திட்டுப் போகட்டும்.

ஆனாலும் ஒரே நுளம்படா பெடியா.உந்த ரவிப்பொடியன்ர கும்மிக்கு அங்க ஒருக்கா கொண்டு போய் விட்டிட்டு வரோணும்.ஐயா கையையும் காலையும் தூக்கி வச்சுக்கொண்டு வயலின் வாசிப்பார்.எங்கட நிலாக்குட்டி போல.அதோட வெயில் எண்டா அளவெடுக்க முடியாத அளவுக்கப்பனே.அப்பிடி எரிக்குது கல்லுபூமி திருகோணமலை.கால் நிலத்தில வைக்கமுடியேல்லையப்பு.துடிச்சுப் போகுதுகலெல்லோ அந்தச் சனங்கள்.

இனி ஊர்ச் சனங்களைப் பற்றிச் சொல்லவெண்டா....பாவங்கள் எண்டுதான் ஒற்றை வரில சொல்லி முடிப்பன்.சாமான் சக்கட்டு எல்லாம் சரியான கொள்ளை விலையடா. எங்களைப்போல வெளிநாட்டுக்காசை மாத்திச் சீவிக்கிற சனங்கள்தான் நல்லமாதிரி உடுத்திப் படுத்து நின்மதியாச் சாப்பிட்டுச் சீவிச் சிங்காரிச்சு சீவிக்கலாம்.இல்லாட்டி அதோகதிதான். எல்லாம் விலை.சாதாரண கூலி வேலைகள் எல்லாம் இப்ப இல்லை.நாகரீகம் கூடி விறகு கொத்த,மா இடிக்க,வீட்டு வேலை செய்ய எண்டு எதுவும் இப்ப ஆருக்கும் அலுவல் இல்ல. பாவங்கள்தான்.எங்களால முடிஞ்ச உதவி மட்டும் செய்யலாம்.வேற என்னதான் செய்யேலும்.

இதைவிட நாட்டுப்பிரச்சனை இப்ப இல்லையெண்டு கொஞ்சம் அமைதியா தங்கட தங்கடபாட்டுக்குத் திரிஞ்சாலும் மனசுக்குள்ள புழுங்கிக்கொண்டுதான் திரியுதுகள்.யாரிட்ட போய் என்ன சொல்ல ஏலும்.நான் நிக்கேக்க எலக்க்ஷன் வேற.ஒரே சிங்கள ஆக்களின்ர சந்தோஷ அட்டகாசங்கள்தான்.வீட்டுச் சுவர்களில இருந்து ஆட்டோ பஸ் எண்டு எல்லா இடங்களிலயும் ஒரே நோட்டீஸ்கள்.அதான் யாரோ ஒரு தேரர் சொல்லிட்டாரெல்லோ."தமிழன் எதுவும் தன்ர மன விருப்பத்துக்கு எதுவும் கேக்ககூடாது.தாற பிச்சையை வாங்கிகொண்டு சூத்தையும் வாயையும் பொத்திக்கொண்டு பேசாம இருக்கோணும்"எண்டு.
ஓம்......இப்பிடித்தான் அங்க இப்போதைக்குத் தமிழன்ர சீவியம்.

நம்புவதற்காகவோ
ரசிப்பதற்காகவோ
எழுதப்படவில்லை இது.
எம் தலைவிதியை
நானே பார்த்த ஆதங்கம்.

தேர்தல் குறித்த பிச்சையெடுப்போடு
அனுமார்களின் அட்டகாசம்.
கதவுகள் திறந்தே கிடக்கிறதாம்
அதுவும் தமிழர்களுக்காகவாம்
தந்திரம் மந்திரமற்ற
தேவதூதர்கள்போலவே
இக்கணங்களில் அவர்கள்.

தமிழுக்கு
மாலையாம் மரியாதையாம்
நச்சுப்பாம்புகள் ஒளிந்திருப்பது
பாவப்பட்டவர்களுக்கு
தெரியாமலும் இருக்கலாம்.

தமிழன் வீட்டு
நாய் இறந்தால்கூட
தலைவர் வருகிறார்
துக்கம் விசாரிக்க.
தமிழனின் காதில் பூ வைக்க
கையில் பூக்கூடையோடு
பச்சோத்திக் கூட்டம்.

என் தேசத்தில்
எதுவும் நிரந்தரமற்று
தற்காலிகமாய்
தருவதுபோல் தந்து
பறிக்கப்படும் விந்தை.

உஷாராய் இல்லையென்றால்
உடையுருவும்
நிர்வாணம் ரசிக்க.
சிங்களத்தின் கையில்
போதிமரக் கிளையால்
கடையப்பட்ட
புது ஆயுதம் இப்போ!!!


இந்த முறை ஊருக்கு நான் போய் நிக்கேக்குள்ள எங்கட நிலாவும் வந்திட்டாள்.அவதான் இந்தமுறை மகாராணி.என்னை யாரும் கவனிக்கேல்ல.அவளோடயே நாள் எப்பிடிப் போச்சு எண்டே தெரியாமல் போய்ட்டுது.அழுதழுதுதான் அவளை விட்டிட்டு வந்தன்.அவளும் ஹேமா ஹேமா எண்டுதான் கூப்பிட்டுக்கொண்டு நிறைய ஆசையா அன்பா நல்ல வாரப்பாடா இருப்பாள்.அவளை இப்பதானே முதன் முதலாப் பார்த்தனான்.அவளின்ர சேட்டை செல்லமெண்டா அதிகம்.வால் முளைக்காத ஒரு ஆள்தான் அவள்.இதில வேற அவவைக் குரங்கு எண்டா கோவம் வராது வைட் மங்கியெண்டா(white monkey)பாக்கோணுமே அவவின்ர கோவத்தை.வலு கெட்டிக்காரி.நிறையக் கதைப்பாள்.ஒரு நாள் எங்கட அப்பாட்ட கேட்டாள்"தாத்தா இந்த டோக்கியையெல்லாம் கட்டி வைக்கிறீங்கள்.ஏன் உந்த நுளம்பையெல்லாம் பிடிச்சுக் கட்டி வைக்க மாட்டீங்கள்" எண்டு."ஏன் நாய் எல்லாம் வெளில படுக்குது.ஏன் ஸ்கூலுக்குப் போறதில்ல.ஏன் வெளில படுக்குது?"இப்பிடி அவவுக்கு பெரிய சந்தேகங்கள்.வானத்தில நட்சத்திரம் பாத்த உடனே கனடாவில தான் இப்ப விட்டிட்டு வந்திருக்கிற சொந்தம் சிநேகிதர் பெயரெல்லாம் சொல்லிச் சொல்லி எண்ணிப் பாப்பா.எண்ணிக்கைக்கு நட்சத்திரம் போதாவிட்டால் அவையள் நித்திரையாப் போச்சினம் எண்டு கதை முடிச்சிடுவாள். யாராச்சும் நுள்ளிப்போட்டா(கிள்ளினா)"ஐயோ...என்னைப் பிச்சுப்போட்டாங்கள்"எண்டுதான் சொல்லிச் சொல்லி அழுவா.அவளின்ர கதை சொன்னா நிறையச் சொல்லலாம்.இவ்வளவும் போதும் நிலாக்கதை.

இந்தமுறை நிறைய வீட்டிலேயேதான் பொழுது போச்சு.சரியான வெயில்.அதால அங்கால இங்கால எண்டு எங்கயும் போகப்பிடிக்கேல்ல.கோணேசர் கோயிலுக்கும் காளிகோயிலுக்கும் போனன்.இந்த முறை உடுப்புகள் கூட வாங்கேல்ல.ஏனோ எதிலயும் ஒரு பிடிப்பு இல்ல.

அம்மாவும் தங்கச்சியும் ஒவ்வொருநாளும் விதம் விதமாச் சமைச்சு தந்தினம்.நான் பொதுவாக் காலமையில சாப்பிடமாட்டன்.அங்க அவையளின்ர வில்லங்கத்தில 4-5 நாள் சாப்பிட்டன்.அம்மான்ர ஸ்பெஷல் பால் அப்பம்.ஒரு நாள் 4-5 அப்பம் சாப்பிட்டன்.அதுவும் எத்தனயோ வருஷத்துக்குப் பிறகு.அதைப்போல ஒரு நாள் கூழ் காய்ச்சிக் குடிச்சம்.புட்டு, இடியப்பம்,தோசை,இட்லி எண்டு எப்பவும் ஏதோ எல்லாம்.

எனக்கெண்டா சாப்பாடு அலர்ஜி.பசிக்கு அந்த நேரம் என்ன இருக்கோ அது போதும்.எனக்காகச் செய்துபோட்டு அவையளே சாப்பிடுவினம்.எனக்கு நிறையத் திட்டு விழும்.அதோட இந்த முறையும் அம்மாவோட சண்டைதான்.இனி வரமாட்டன் இப்பிடியான கதைகள் கதைச்சா எண்டு சண்டை போட்டுக்கொண்டு வந்திட்டன் நான்.செல்லச் சண்டைதான்.

நான் வீட்டுக்குப் போனா செய்ற வேலை என்ன தெரியுமோ முற்றம் கூட்டுறதும்.பூக்கண்டுகளுக்குத் தண்ணி விடுறதும்தான்.வேற ஒண்டும் செய்யத் தெரியாது.அதால பேசாம இந்த வேலைக்குச் சாப்பாடு தந்தால் போதும் எண்டு இருந்திடுவன்.
வீட்ல நிறைய மரம்மட்டைகள் இருக்கு.

பிறகு...5 நாள் சின்னதா ஒரு உலாப் போனோம்.நான் பிறந்து வளர்ந்த இடம் மலையகப் பகுதிக்கு போய் கனநாளாயிட்டுது.இரத்தினபுரி என்கிற அழகான மலையகம்.ஆத்தில குளிச்சோம்.படிச்ச பள்ளிக்கூடம் போனோம்.
பூட்டிக்கிடந்தது.பொன்னையா மாஸ்டர் ஞாபகம் வந்து அப்பாவோட நிறையக் கதைச்சன்.மூத்திரக்காய் மரத்தைக் காணேல்ல.வெட்டிப்போட்டினம்.
இதுதான் மலையகத்தில் நாங்கள் வளர்ந்த வீடு.
எங்கட வீடும் பூட்டிக் கிடந்தது.இப்பவும் பாதியாய் வெட்டினபடி கதவு கிடக்கு.அது என்னெண்டா முந்தி சின்னப்பிள்ளைல மத்தியானம் சாப்பிட்ட உடனே அப்பா பள்ளிக்கூடம் போய்டுவார்.அம்மா குட்டி நித்திரை அடிப்பா.அப்ப எங்களை வெளி விறாந்தைல விளையாட வச்சிட்டு படுத்திருப்பா.என்ர தங்கச்சி ஒரு வால்.அது தூண்டிவிட நாங்கள் மெல்லமா வெளில போய்டுவம்.அந்தத் தேயிலை றப்பர் காடுகள் முழுக்க எங்கட கையிலதான் அட்டை கடிக்க கடிக்கச் சுத்திட்டு வருவம்.என் மலையகத்து முதல் எதிரியே இந்த அட்டையார்தான்.அதாலதான் அந்தக் கதவை அப்பா குறுக்க வெட்டிப் பாதியாக்கிப் பூட்டுப் போட்டவர்.அந்தக் கதவோட கதைச்சன்.அழுகையே வந்திட்டுது.இனி எப்ப பாப்பேனோ !என் தோழி சின்னப்பாப்பவைத் தேடிப்போனம்.இருந்தாள் என் தோழி.என்னைச் சரியா அடையாளம் தெரிஞ்சும் தெரியாமலும்.மனநிலை குழம்பியிருந்தாள்.காதல் தோல்வியாம் அவளுக்கு.பாப்பம்மா பாப்பையா செத்திட்டினமாம்.அவள் அவளின்ர ஒண்டுவிட்ட அண்ணாவோட இருக்கிறாள்.எங்களை அடையாளம் கண்டு கொண்டதா முகபாவம் அந்தச் சிரிப்புச் சொன்னது.

அங்க எல்லாம் தமிழகத்துச் சகோதரர்கள்தான்.அவர்களைக் காண்றதும் கதைக்கிறதும் பழகுறதும் அதொரு சந்தோஷம்.கள்ளமில்லாச் சொந்தங்கள்.அந்த மண்ணின் காலநிலையும் அவர்களைப்போலவே குளிர்மையா இருக்கும்.ஆனால் எங்கள் அரசாங்கம் அவர்களைக் குளிர்மைப் படுத்துவதில்லை.எங்கட நாட்டின்ர ஊன்றுகோலே முதுகெலும்பே அவர்கள்தான்.ஆனால் அவர்கள் நிலை அன்றிலிருந்து இன்றுவரை நிமிராமல் குனிஞ்சபடிதான் !பாவங்கள் அந்த மக்கள்.தேயிலையோட தேயிலையா சக்கையா பிழிபடுதுகள்.கல்வி,வீடு, போக்குவரத்து வசதி என்று எதையும் சரியாச் செய்து குடுக்க மாட்டாங்கள்.
அப்பாட்ட படிச்ச மாணவர் தியாகராஜா இப்போ அதே பள்ளிக்கூடத்தில அதிபரா இருக்கிறார்.அவர் வீட்டிலதான் தங்கினம்.அவர்தான் இந்தப் போட்டோவில போஸ் குடுக்கிறது.
இன்றைய இளைய சமுதாயம் முயற்சி எடுக்கிறார்கள் படித்து நாகரீக வளர்ச்சியோடு முன்னேற.என்றாலும் அவர்களுக்கு உண்டான தரம் குடுக்க அங்க ஆர் இருக்கினம் !அதுதான் நான் அடிக்கடி சொல்றனான் தமிழனாக அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எங்களுக்கே நீங்கள் எங்கிருந்து வந்தனீங்கள் என்ற கேள்வி இந்தக் கதி.அப்போ இவையளின்ர நிலை என்ன !இதை வச்சுத்தான் வெளிநாட்டில எங்களை மதிக்கினம் மரியாதை தருகினம் எண்டு நான் எப்பவும் சொல்றது.உண்மைதான் சுவிஸ்ல எங்களை மதிக்கினம்.எங்கட உணர்வுகளை மதிக்கினம்.எங்கட தேவைகளை நாங்கள் உரிமையோட கேட்டு வாங்கிக்கொள்றம்.எங்கட நாட்டில எங்களுக்கு என்ன மரியாதை ?

"தம்புள்ள"வில் புத்தவிகாரை.


கண்டி,காலி,ஹற்றன்,நுவரெலியா எண்டு வாற வழிகளில இருக்கிற இடமெல்லாம் பாத்துக்கொண்டு வந்தம்.என்னட்ட போட்டோக்கள் இல்லாமப் போச்சு.வீடியோ கசெற்ல எடுத்திருக்கிறன்.அதை CD ல எடுத்து இதுக்குள்ள செருகத் தெரியேல்ல பாருங்கோ.

அப்பா அம்மாக்கு 50 ஆவது கல்யாணநாளும் ,நிலாக்குட்டியின்ர பிறந்தநாளும் ஒரே நாளில பக்கங்களில இருக்கிற சொந்தக்காரர் அயல்வீட்டு ஆக்களோட சின்னதா ஒரு கொண்டாட்டமும் செய்தம்.வேற என்னத்தைச் சொல்ல.இப்பிடியே ஒரு மாசம் போய்ட்டுது வந்திட்டன்.நிலாக்குட்டி இன்னும் அங்கதான் நிக்கிறாள்.அதுவும் பிளேன் எல்லாம் தற்சமயம் ஓடாம இருக்கெல்லோ.எப்ப கனடா போறாய் எண்டால் தான் தாத்தா பாட்டியோட இருக்கப் போறாளாம்.

ஆனா அந்த மண் வாசம் மட்டும் மனசோட.இன்னும் மனசு அங்கதான் நிக்குது.அடுத்த தரம் போகிற வரைக்கும் அந்த வாசத்தை என்ர மூச்சுக் காத்தில அடக்கி வச்சிருப்பன் !

ம்ம்ம்....போட்டோவில நானும் இருக்கிறன்.
நீங்களே கண்டுபிடிச்சுக்கொள்ளுங்கோ !


ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP