Monday, December 21, 2009

ஓகே...ரெடி...யூட்...!

ந்தப் படம் உங்கள் மனதில் என்ன தோற்றுவிக்கிறது.சொல்லுங்கள்.கவிதை வரிகளாக.அல்லது கதையாக.நிறைய நாளாச்சு.படத்துக்குக் கவிதை எழுதி.முன்பெல்லாம் கடையம் ஆனந்த அடிக்கடி படம் தந்து கவிதை கேட்பார்.இப்போ அவர் ரொம்ப பிஸியாம்.அதுதான் எனக்கு அந்த நினைவு வந்தாச்சு.பார்க்கலாம்.நானும் எழுதறேன்.ஓகே...ரெடி...யூட்...!

[நேரக் குறைச்சலால் திடீர்ப் பதிவு.]

ஹேமா(சுவிஸ்)

ஸ்ரீராம்
********

விளையாடுன்னு சொல்லி
பொம்மையைக் கொடுத்தாங்க.
ஆமாம், விளையாட்டுன்னா என்ன?"

"மனிதர்களை
பொம்மையாக மதிக்கும் உலகில்
பொம்மையை வைத்துக் கொண்டு
நான் என்ன செய்வது?"

தமிழுதயம்
**************

தூக்கப்படுவது
குழந்தை பொம்மையாக இருந்தாலும்,
அதை தூக்கும் முறை சரியில்ல.
குழந்தைய இப்படி தூக்குவோம்மா.
பொம்மையாக இருந்தாலும்-
நான் குழந்தையாகவே பார்க்கிறேன் !

ஸ்டார்ஜன்
**************
அன்பே உன்னாலே

நானும் மறந்தேன்

நினைப்பதற்காக

உன்

மறு வருகை எப்போ !!


துபாய் ராஜா
*****************

1)
குழந்தை கை
பொம்மை போல்
குலுக்குகிறாய்
என் மனதை...

அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய் உயிரெ(ல்)லாம்,
என் உணர்வெ(ல்)லாம்...

2)
காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு

கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.

3)
காதல் விளையாட்டில்
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை

கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.

4)
ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...

ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....

- இரவீ -
************
ருத்ர காளி:
**************

வரண்ட வாடை காற்றின் வேகம் அதிகரித்த அந்தி நேரம்.அலையின் சல சலப்பு அந்தகார இருளை வரவேற்றபடி இருக்க ஒற்றையடி பயணமானாள் வேம்பு.காலத்தின் கோலமா - அவசரத்தின் அல்லோகலமா தெரியாது.அவளது முடிவை நோக்கிய முடிவான பயணம் அது.

அவளின் ஆழ்ந்த பெருமூச்சு.நடையின் வேகமா இல்லை அலையின் ஓலமோ என இனம்கானமுடியா வெப்பமாய்.கோபத்தின் உச்சத்தில் அவள் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருக்க இலக்கை அடையும் வேகம் நடையின் ஒவ்வோரு வினாடியும் கூடிக்கொண்டே இருந்தது.இன்னும் சில வினாடிதான்.அவள் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஒற்றைப் பனை மரம்.அதை ஒட்டிப் பாழடைந்தது தெரியாமல் இருக்க அவசரமாய் கூரை வேயப்பட்ட மண்டபம் - நெஞ்சு படபடக்க மண்டபம் நெருங்கலானாள்.பதைபதைப்பு தொத்திக்கொன்டது - அவளின் இதயத் துடிப்புக் குறைவதை அவளே கேட்க முடிந்தது.மெல்ல அடிமீது அடிவைத்து நெருங்கலானாள்.

காலில் சில்லென ஏதோ தட்டுப்படக் கீழே கூர்ந்து கவனித்தாள்.பூக்கள் மற்றும் தென்னங்குருத்தோலை அந்த மண்டபம் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.மனதை ஆசுவாசப்படுத்த முயன்று கவலை தொத்திக் கொண்டதை உணர்ந்தாள்.வந்த நோக்கம் நிறைவேறாதோ என்ற கவலையும் கூடிக்கொண்டது.

மண்டபத்தின் மதிலை நெருங்கிய நேரம்.காலில் கடினமாய் ஏதோ தட்டுப்பட்டது.இதயத் துடிப்பை நிறுத்திக் கூர்ந்து கவனித்தாள்.பளிச்சிட்ட ஒளியாய் அவள் கண்ணின் முன் பொம்மி வந்து போனாள்.ருத்ர காளி வேஷம் போட வேல்கம்பு கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருட்டறையில் கோவித்து நின்றது நியாபகம் வர சிரித்துக் கொண்டே முன்னே இருந்த உடைந்த காவடியில் சொருகி இருந்த வேல்க்கம்பை கையில் எடுத்து முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு வீடு திரும்பினாள்.


ஜெயா
********
கண்மணியே கோவம் ஏன்?
கையில் உள்ள பொம்மை மீதா,
இல்லை....
அதை தந்து விளையாடச்சொன்ன
அன்னை மீதா
உங்க கோவம்?
ஏக்கம் வேண்டாம் செல்லமே,
கோபத்திலும் நீங்க அழகுதான்,
சிரியுங்க....சிரியுங்க
அட சிரியுங்க ****


ஹேமா
**********

உடையில்லா பொம்மை.
அழகிய உடையில்
கோபக் குழந்தை.

குனிந்த முகத்தில்
அழுகையா வெறுப்பா ?

முடியில்...
முத்தால் சோடனை.
பொம்மைக்கும் உடை.
பஞ்சுப் பாதம்
மண்ணில் படாமல்
பவளத்தால் ரதமும் இங்கே.

இல்லாத அம்(ப்)மா(பா)வை
கூட்டி வா என்றால்
எங்கே போவேன் நான் !


Thamizhan
************

அன்னை பூடேயின்
அற்புத வண்ணம் !
களங்கமான உலகில்
கலங்கிய தனிமை!
கையிலே பொம்மை
நெஞ்சிலோ வெறுமை!


பித்தனின் வாக்கு
********************

கோபம் என்பது பாவம் குழந்தாய்
அது வாளில்லா கத்தி போல
சிரித்து மகிழும் உன் முகம்
கறுத்துத் தொங்கியது ஏன்,

ஆத்திரம் என்பது வாழ்வை அழிக்கும்
உன் கையில் உள்ள பொம்மையப் போல
துக்கம் என்பது மகிழ்வைக் கொடுக்கும்
உன் குனிந்த தலை போல.

அக்பர்
*******


பொம்மையை

கையில் திணித்து

என் சந்தோசத்தை

திருடிக்கொண்டு

போனது யார்?


கடையம் ஆனந்த்
********************

1)
யுத்த பூமியில்
விளையாட தலைகள் உண்டு
குனிந்து பார் கண்ணே!


உன்னை இங்கே விட்டு செல்ல
மனமில்லை எனக்கு!

அழைத்து போகவும் வழியில்லை
திக்கற்றவளா நான்...

கண்கள் முடி அழுகிறேன்
கண்ணே போதும் வந்து விடு!

2)
அடங்கவில்லை
பழி தீர்த்த பிறகும்!

8-வது பிறப்பு நீ
கம்ஷன் துரத்துகிறhன்
ஓடிடுவோம்...வா!

ரத்தம் வாடை அடிக்கிறது
இந்த பூமியில்...!

இங்கே நீ பிஞ்சு
எனக்கு நீ நச்சு-என்று
கொக்கரிக்கின்ற கூட்டத்தில்
உன்னை விட்டு செல்ல மனமில்லை

வா...
வந்து விடு....

கலா
******

என் நாட்டு ஒளிவழியில்
இப்படிப் பார்த்தாய்!
பக்கவாட்டில்...
ஒத்தைக் கையால் தூக்கி
உயிர் உள்ள குழந்தைகளைக்
தூரமாய் எறியும் காட்சியை

ஓ..ஓ.. புரிகிறது

இதைத் தான் கண் பார்த்தால்
கை செய்யும் என்பார்களோ!

பார்த்தவுடன்....
பரீட்சித்துப் பார்க்க
இவள் பொம்மையைத்
தூக்கினாள் .....

தூக்கிப் போடும் முன்னே
பார்த்து நினைவுக்கு வர...
பேதலித்துப் போனாளிவள் !


S.A. நவாஸுதீன்
*******************

பெற்றவர்கள் கல்யாணம்
பொம்மை கல்யாணமாய்
பிள்ளை இவளுக்கோ
உண்ணவும்
உறங்க மடியும்
உதவிக்கு சில கதையுமின்றி
வெறும் பொம்மை மட்டுமே
துணையாய் !


கவிதை(கள்)
***************

ராவில் கைப்பிடித்து
காதருகில் கதைபேசி
புகலிடம் தேடா
புதுயுக பொம்மை
தலைகீழாய்
என் வாழ்வைப்போல ...........


ராஜவம்சம்
*************

பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா

ஏதாயினும் வீறுகொள்
நீ வாழப்பிறந்தவள் அல்ல
நம் மண்ணை ஆளப்பிறந்தவள்

உன் கையின் இறுக்கம்
மனத்திடத்தை பறைசாற்றுகிறது
குனிந்து நிற்பது
கோழைத்தனம் மட்டும் அல்ல
பெண் அடிமைத்தனமும் கூட

நிமிர்ந்து நில்
தெளிவாயிரு
நாளைய உலகம் உன் கையில் !


நட்புடன் ஜமால்
*******************

சிரித்த முகத்துடன்
செயலிழந்து கிடக்கின்றாயே
என் ஈழத்து உறவுகள் போல் !

(குழந்தை பொம்மையை பார்த்து சொல்வது)

தியாவின் பேனா
********************

(விழி ... நிமிர்...நட...)

விளையாட்டுப் பொம்மையை
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???

உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???

ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???

அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.



பலா பட்டறை
*****************

கையில் இரை இருந்தும்
இருபக்கமும் பல் காட்டும்
மந்தி கூட்டம்
கண்டு

உயிர்குழந்தையுனை
தவிக்கவிட்ட
பெரிய குழந்தைகள் அறியுமோ??
பொம்மை எனினும் பத்திரமாய்
நீ காத்த
உன் கை குழந்தை..

ருத்ர வீணை
****************
ஒதுக்கபட்டவள்

சீவி முடி முடிந்து
சிங்கார சிலை போல
காணும் எவர் மனதும்
கவி பாடு - என தோன்றும்

பாவி எவன் மனதும்
பாசம் வைக்கும் போது - வந்து
வேண்டி தொடர்பறுக்கும்
நேசமறு யோசனையில்

பூசி மொழுகி தினம்
புன்னகையில் நிறுத்திவிட
மூடிக் கிடக்குதொரு
முக்காடு மாயன் - மனத்தில்

தேடி கிடைக்குமொரு
திருநாளில் எனப்பார்த்தால்
மேவி மனமுழுதும்
மெத்தனமே - நிறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும்
காலமது வந்துவிடும்
வாடி விழுந்ததலை
விண்நோக்கி நிமிர்ந்துவிட்டால்

தேடி வசைமொழிவேன்
வாயடிக்கும் கூட்டத்தினை
கூடி ஒழிதிடுவேன்
கூறு அற்ற வார்த்தைகளை

நாடி நீ வந்து
பூவுலகில் விழுந்த நொடி
மாறிவிட்டதென்று உன்னை
பெற்ற கை உதறியதால்
காரிருள் கண்மறைத்த
காயமது பேயுனக்கு

நேசி நின் திருவுளத்தை
நின்பால் நானிருப்பேன்
பாடம் இதுவென்று
பொம்மையிடம் சொல்லிவிடு...


அரங்கப்பெருமாள்
*********************

”இயலாமை"

நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.
வெறுக்கும் போது என்னை
அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன.

நான் விரும்பும் அந்தச் சித்திரப் பாவை போல.
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.
எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது
எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என அறிந்ததாலோ என்னவோ?

இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
எண்ணங்கள் கவிழ்ந்து நிற்கின்றன.
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.

வாசகனாய் ஒரு கவிஞன்
பனித்துளி சங்கர்
*******************************
எப்பொழுதோ உன்னை பிரிந்துவிட்டேன்.
இருந்தும் உன் நினைவாக
நீ வாங்கித் தந்த இந்த பொம்மையின்
கரம் பிடிக்கும் பொழுதெல்லாம்
ஏனோ தெரியவில்லை.
எனது விழிகள்
என் அனுமதி இன்றி வெக்கதில்
தானாக தலை குனிந்துகொள்கிறது.


SUFFIX
********
உடைந்த பொம்மை
கிடைத்த்தது வழியில்
பத்திரமாய் என்னிடம்

உடைந்த மனது
குனிந்த தலை
தேற்றிடுவார் யாரோ!!

Thursday, December 10, 2009

உறவு தேடும் உள்ளம் 2

ஹேமா கதையை அழகுபடுத்தேல்ல மெருகாக்கேல்ல எண்டு குறை சொல்றீங்கள்.நானே அப்படித்தான் இருக்கிறன்.என்னைப்பற்றி இனி நானே என் மனதை அப்படியே பகிரப்போறன் உங்களோட.
இது என்னை நானே விமர்சிக்கும் ஒரு சந்தர்ப்பம்.வலி இருந்தாலும் சொல்லியே ஆகவேணும்.இங்க உங்களிட்ட நான் அனுதாபம் தேடேல்ல.சொல்றதால ஒரு ஆறுதல் தேடிக்கொள்றன்.அவ்வளவும்தான்.

நான் ஊனம் என்று சொல்லுமளவிற்கு கையோ காலோ முடம் எண்டில்லை.நான் என் அப்பாவின் உருவம் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவா.அப்படியே அவரை உரித்து வைத்துபோல பெண் உருவமாய் உலாவுறன் எண்டும் சொல்லுவா.வயதிற்கேற்ற தோற்றமில்லாமல் உயரம் குறைவாய் கட்டையாய் மிகவும் கட்டையாய் பிறந்திட்டன்.சரி அதுதான் பரவாயில்லை எண்டால் கையும் காலும் உருவத்திற்கேற்றபடி இல்லாமல் மிகவும் குள்ளமாய் சின்னதாய் உருவத்திற்குச் சமபந்தமில்லாமல் இருக்கு.ஏதோ ஒரு விகார நிலை என்னில் எனக்கே தெரியுது.மற்றும்படி உள்ளத்தில் உணர்வில் ஒற்றுமையில் ஒன்றும் குறைவில்லாமயே இருக்கிறன் நான்.நான் ஒரு வயோதிபர்களைப் பராமரிக்கும் வைத்தியசாலையில் தாதியாகவும் வேலை செய்யிறன்.மற்றவையளைளைப் போலவே என்னாலும் இயங்க முடியுது.இதுதவிர உங்களுக்கும் எனக்குமிடைல வேறு எந்த வித்தியாசமும் இல்லை.ஓரளவு ஆங்கில அறிவோட எனக்கு எட்டின வரைக்கும் படிச்சும் இருக்கிறன்.

இந்தக் குறைபாடு எனக்குள்ள எப்பவும் பிரச்சனை.தாழ்வு மனப்பான்மை எண்டே சொல்லுவீங்கள்.அப்பிடித்தான்.இது மனசுக்குள்ள வாட்டுறதாலதான் சிவா என்னை விரும்புறதாச் சொன்னதும் நான் தள்ளி நிண்டன்.ஆனாலும் உள்மனசில கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல யாருமே உறவென்று இல்லாத இந்த நாட்டில் பாதுகாப்பென்ற துடுப்பாக சிவாவைக் கண்டன்.அடிக்க அடிக்க அம்மியும் நகருமாம் என்பதைப்போல சிவா நாளுக்கு நாள் என்னைத் தன்ர பக்கமாக்கிக்கொண்டார்.

அதுக்குப் பிறகு ஒருத்தருக்கொருத்தர் மனச்சாட்சிப்படி உறுதி எடுத்துக்கொண்டு ஆண்டவனின் சாட்சியோடும் வாழத்தொடங்கினம்.நானோ சிவாவோ சட்டப்படி திருமண எழுத்து எழுதவேணும் என்று நினைக்கவேயில்லை.நான் எப்போவாவது நினைக்கும் அளவிற்கு சிவா சந்தேகத்திடமாக நடக்கவுமில்லை.8 வருட காலம் ஜேர்மனியிலேயே வாழ்ந்தும் வந்தம். அங்கயிருந்து சிவாவின் சில தெரிந்தவர்களின் சில சுடுசொற்களாலும் சில சூழ்நிலைகளாலும் சுவிஸ் வரவேண்டியதாப்போச்சு.

சிவா என்னை விட்டுப் போனவர்தான்.போயேவிட்டார்.காத்துக் கிடக்கிறது மட்டுமே மீதமாய் அருகில கிடக்கு.இப்போ எனக்கு 40ன் வருசமாச்சு இப்ப.இளமை என்னை விட்டு மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கு.இப்பவெல்லாம் தனிமையின் கொடுமை என்னை வதைக்குது பயம்காட்டுது.கட்டிலுக்குக் கீழயும் குளியலறைத் தொட்டியிலயும் படுத்துக் கொண்டிருக்கு.

அயர்ந்து களைச்சு வீடு திரும்பேக்க அன்புக்கும் அரவணைப்புக்குமாய் யாராவது இருப்பினமோ எண்டு மனம் தேடுது.என்னால முடிஞ்ச மட்டும் நிறையவே அழுகிறன்.சிவாவை இப்போதும் தேடுறன்.வாற தொலைபேசி அழைப்புக்குள்ளயும் தபால் பெட்டிக்குள்ள கிடக்கிற கடிதங்களுக்குள்ளயும் ஒரு எழுத்தில ,ஒரு சொல்லில ,ஒரு குரலில சிவா என்கிற அந்த வரத்தை இன்னும் தேடுறன்.அறிஞ்சு தெரிஞ்சவைக்குப் பதில் சொல்லத் தெரியேல்ல.வெக்கமாவும் கிடக்கு.

அதோட இன்னொண்டு.இப்பவெல்லாம் குழந்தை என்கிற ஒரு பூ என் மனக் கண்ணில் வாசம் வீசிப் போகுது.அங்கயும் என்னையே நொந்துகொள்றன்.இரண்டுமுறை சந்தர்ப்பம் கிடைத்தும் இப்போ வேணாம் எண்டு நானும் சம்மதித்தே தள்ளிப்போட்டன்.இப்ப அதின்ர ஏக்கம் கனக்கவா(அதிகமா)என்னை உலைக்குது.

சிவாவோடு வாழ்ந்த காலத்திலயே இந்த ஏக்கம் எனக்குள்ள இருந்தே வந்தது.முறையாகக் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எண்டு சொல்லித்தான் அவரே எனக்கொரு குழந்தையாய் இருந்து வந்தார் என் சிவா.நானும் ஒத்துக்கொண்டன்.அதோடு உள்ளுக்குள்ள ஒரு பயமும் எனக்கிருந்தது.அப்பாபோல நான் இருக்கிறன்.சிலவேளை என்னைப்போலவே என் குழந்தையும் இருந்திட்டால்...!

அவர் இருக்கேக்க இல்லாத தாக்கம் அதிகமா இப்ப எனக்குள்ள.அவரைத்தவிர ஆருமேயில்லாத உலகத்துள்ள வாழ்ந்து பழக்கப்பட்டுட்டன்.வெளிவரப் பயமாவும் மிரட்டலாவும் தெரியுது.அன்புக்காக ஏங்குற என் பலகீனத்தை அவர் நல்லாப் பாவிச்சிருக்கிறார்.நான் அவரை கடவுளின் இடத்தில வச்சுக் கும்பிட்டு என்னையே மறந்திருந்தன்.கடவுளும் அவருமாச் சேர்ந்து என்னை ஏமாத்திப்போட்டினம்.இப்ப காலம் கடந்திட்டுது.அடுத்தவையளைக் காணேக்க உறவுகளின்ர ஏக்கமமும் தப்பிப் போன காலங்களையும் நினைச்சு ஏங்குறன்.

என்னோட ஒண்டா ஜேர்மன்ல இருந்த சிநேகிதி ஒருத்திதான் என்னை அடிக்கடி ஆறுதல் படுத்தும் ஜீவனாய் இருக்கிறாள்.அவள் என்னை மெதுவாய் என் எதிர்காலம் பற்றிச் சொல்லி சொல்லி எப்போதும் என்னை மாத்த முயற்சிக்கிறாள்.

"மதி சிவாவுக்காக நீ காத்திருந்தது போதும்.நாலு வருசமாப் போச்சு ஒண்டுமே தெரியேல்ல.உனக்கு வயசும் போய்க்கொண்டிருக்கு.நீ சிவாவுக்காகக் காத்திருக்கலாம்.காலம் யாருக்காகவும் காத்திருக்காது.உனக்கெண்டு யாருமே பக்கதில இல்ல.உன்ர நிலைமையை நினைச்சு நீயும் யாரோடயும் பழகுறதுமில்ல.நீ இப்பிடியே இருக்கிறது எனக்கு மனசுக்கு கஸ்டமாயிருக்கு.நீ இவ்வளவு காலமும் சொன்ன சமாதானம் போதும்.இனியும் எதுவும் கதைக்காதை"என்று என் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் திருமணம் ஒன்று செய்துகொள்ளச் சொல்லி எனக்கு புத்தி சொல்லியபடியே அலுவலிலயும் இறங்கிட்டாள்.

எனக்கோ சிவாவையோ அவரோட வாழ்ந்த நினைவுகளையோ மறக்க முடியாட்டிலும் என் தனிமைக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுது.மனம் விட்டுக் கதைக்க ஒரு உள்ளம் தேடுது. தனிமை பயமுறுத்தி வெறுக்கவைக்குது வாழ்வை.என்னை நானே மறக்கிற நிலையில் சிலசமயம் தற்கொலை செய்துகொள்ளட்டோ எண்டுகூட எனக்குள்ளேயே நினைச்சு சமாதானமும் செய்துகொள்றன்.

அவள் இப்போ என்னட்ட ஒண்டும் கேக்கிறதில்லை.என்ர அம்மாவாகிறாள். இப்பவெல்லாம் தானாகவே ஆரிட்டையோ கதைக்கிறாள்.வேணாம் என்கிறாள்.சரி என்கிறாள்.நான் விருப்பு வெறுப்பற்ற ஜடமாய் பார்த்துக்கொண்டிருக்கிறன்.வலு மும்மரமா ஓடித் திரியிறாள்.எனக்குக் கல்யாணம் செய்து தரப்போறாளாம்.சிரிப்பா வேற வருது.

இப்பிடியிருக்க ஆரோ ஒரு தரகர் மூலமாக விபரங்கள் கொடுத்த விசாரிப்பில் மாப்பிள்ளை எண்டு ஒருத்தர் ஒரு நாள் வந்தார்.ஏற்கனவே கல்யாணமாகி மனைவியிடம் விவாகரத்து வாங்கிட்டாராம்.இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாம்.பிள்ளைகள் ஊரில் தாயோடயாம். என்னைவிட 6 வயது மூத்தவர்.என் போட்டோ மற்றும் விபரங்கள சொல்லியும் பார்த்தும்தான் வந்திருக்கிறார்.அவரை நான் பாக்கிறன்.

பார்த்தால் வயசுக்கேத்த பருமன் உருவம்.தாரில உருட்டிவிட்ட ஒரு கலர்.முடிகொட்டி வழுக்கை.இருக்கிற முடியும் நரைச்சு வெளுத்திருக்கு.கண்ணில கண்ணாடி.எனக்கு என்னவோ போலக் கிடக்கு.தேவையா இது எனக்கு.ஏன் இவள் என்னைப் படுத்துறாள் எண்டு மனசுக்குள்ள என் தோழியைத்தான் திட்டிக்கொண்டிருக்கிறன்.

எனக்கு ஓ...வென்று குழறி அழவேணும்போல கிடக்கு.யாரோ வீட்டிற்கு விருந்துக்கு வந்திருக்கினம் எண்டு என்னை நினைச்சுக்கொண்டு சரளமாக இருக்கட்டாம்.அப்படியே இருக்கப் பாக்கிறன்.எல்லாருமாப் பேசிச் சிரிச்சு சாப்பிட்டு பிறகு என் தோழி அவர் கணவரோடு தனிமையாக் கதைச்சிட்டும் போனார்.அடுத்த கிழமையே என்னைப் பிடிக்கேல்லயாம் எண்டு பதிலும் வந்தது.அவர் சொல்ல முதலேயே நான் சொல்லிட்டன் என் தோழியிடம்.அவள்தான் என்னைச் சமாதானப்படுத்தி வைச்சிருந்தாள்.நல்லவர் வல்லவர் எண்டு.நான் உயரமாக இல்லையாம்.மயிலின்ர தோகைபோல கூந்தல் வடிவாய் இல்லையாம்.நடையும் வடிவில்லையாம்.ம்ம்ம்....!

இதுக்குப்பிறகு நான் ஆரையும் வீட்டுக்கு வந்து என்னைப் பாக்க விடுறேல்ல.தோழியோ விடுறதாயில்லை.இன்னும் இரண்டு பேரோட கதைச்சதில முன்னைப்போலவே திரும்பவும் செய்திகள் கிடைச்சது.வாழ்வின் வரவும் செலவுமாய் அவர்களை நான்
நினைச்சுக்கொண்டேன்.அவரவர்களும் தங்கட தங்கட குறைகளைக் கொஞ்சம்கூட நினைக்க மாட்டாம என்ர மனதின்ர அழகை உணர்வின்ர அழகைப் பார்க்கமுடியாம போனது அவையள் அறியாமையின்ர இருளில் அழுந்தப்பட்டவையெண்டு நினைச்சுக்கொண்டன்.இதன் பிறகு இனிமேல் இந்த விளையாட்டு வேண்டவே வேண்டாம் என்று மறுத்திட்டன்.

இவ்வளவு தூரம் ஆனபிறகும் என்ர புருஷனாய் எனக்குள்ள வரிச்சுக்கொண்ட என்ர சிவாவை நினைக்காத நாளில்ல.எனக்குள்ளயே ஏராளமான கேள்விகள் எழும்.நானும் ஒரு பெண்தானே. நான் மட்டும் ஏன் இவையளைவிட அன்னியவளாக்கப்படுறன்.என் உருவம் இயற்கையானதுதானே.நானே விரும்பி வடிவமைத்துக் கொள்ளேல்லையே.ஆண்டவன் தந்ததுதானே.ஏன் என்னைப் புறக்கணிக்கினம்.எனக்குள்ள ஆசைகள் உணர்வுகள் குறைவாக இல்லையே.எல்லோரையும் போலத்தானே முழுசாத்தானே இருக்கு.என்னை உணர ஒரு மனசன் இல்லையோ.இதே வரிசையிலதான் சிவாவும்.சிலசமயம் மனம் கலங்கி கண்ணின் வழி இரத்தமாய் வழியும்.

இப்பவெல்லாம் பதிலே சொல்லாத கடவுளோடு போராடிக்கொண்டிருக்கிறன்.அப்பா இல்லாமல் அம்மாவும் நானும் மாமாவோடுதான் இருந்தம்.படிக்கவென்று ஆச்சிரமப் பள்ளியொன்றில் மாமா சேர்த்துப் படிப்பிச்சிருந்தார்.எல்லோரையும் தவறவிட்டேன் ஊர்க்கலவரத்தில.ஒட்டின படிப்பு இருந்தபடியா நிறைய வாசிக்கப் பழகிக்கொண்டன்.என்ர தனிமையைப் புத்தகங்களோடு இப்ப பகிர்ந்துகொண்டிருக்க்கிறன்.

இப்பிடி இருக்கேக்குள்ளதான் என் சிநேகிதி கேட்டாள்."ஏன் மதி உனக்கென்ன துணைக்கு அன்புக்கு ஆறுதலுக்கு பேச்சுத்துணைக்கு ஒரு துணைதானே தேவை.ஒரு ஆள் இருக்கு.இந்தத் துணையை நீ வேண்டாம் எண்டோ அல்லது அந்தத்துணை உன்னை வேண்டாம் எண்டோ சொல்லவே மாட்டாய்.இஞ்ச பார்.மாட்டேன் சொல்லாமல் நான் சொல்றதைக் கேள்"என்று ஒரு விளம்பரம் காட்டினாள்.அது செஞ்சோலைக் குழந்தைகளுடையது.கனக்க யோசிக்காமல் சரி எண்டும் சொல்லிட்டன்.

இப்ப மூன்று வயது சிவாவுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறன்.
இன்னும் நிறையக் குழந்தைகளுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறன்.வாழ நினைச்சால் வாழ வழியா இல்லை யெண்டு இந்தப் செஞ்சோலைச் செல்வங்கள் எனக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கினம்.நானும் சிவாவோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறன்.

[இது அனுபவம் என்று சொல்ல ஏனோ பலர் பயப்படுகிறீர்கள்.இது என் நெருக்கத்தில் நான் பார்த்த அனுபவ உண்மை.இன்றும் மதி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாள்.]

ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 08, 2009

உறவு தேடும் உள்ளம் 1

புரண்டு புரண்டு படுக்கிறேன்.நித்திரை பக்கமும் இல்லை.என் உளட்டலினால் கட்டில் அசைய என் கணவர் சிவா விழித்துக்கொள்கிறார்.என் பக்கம் திரும்பி "என்ன மதி இன்னும் நித்திரை கொள்ளேல்லையோ" என்று கேட்க நானும் இல்லையென்ன்று சொல்லவும் என்னை இடையோடு அணைத்தபடி திரும்பவும் தன் மூச்சுக்காற்றை என்னில் பரவவிட்டுத் தூங்கத்தொடங்கினார்.

கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியின் இறக்கைகளுக்குள் அடைவதுபோல உரோமங்கள் நிறைந்த அவரது வெற்று மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டேன் நானும்.உலகமே எனக்கு மட்டும்தான் என்கிற கர்வம்.இந்தக் கைகள் மட்டுமே போதும் என்கிற அசையாத நம்பிக்கை வேறு எந்தப் பாதுகாப்புமே தேவையில்லை என்கிற இறுமாப்பு.பெருமூச்சொன்று பெரிதாகப் புறப்பட்டு சிவாவுக்குப் பயந்து மெதுவாக வெளியேறியது.மனம் விழித்துக் கிடக்கிறது.எப்படி நித்திரை அருகில வரும்.மனம் முழுதும் கவலை மலை மலையாய் முட்டிக் கொண்டு நிற்கிறது.

இரண்டு மாதத்திற்கு முன் சாடைமாடையாக அரும்பத்தொடங்கிய இந்தநிலை சென்ற இரண்டு கிழமைக்கு முன்பு நிச்சயமாகிவிட்டது.அன்றிலிருந்து ஓ...விடிந்துவிட்டது இன்று.இன்னும் மூன்று நாட்கள்தான் இன்னும் இரண்டு நாட்கள்தான் என்று இன்று இன்று மட்டும் ஒரு நாள் என்கிற கணக்கோடு புரண்டுகொண்டிருந்தேன்.ஆமாம் விடிந்தால் சிவா என்னைவிட்டு வெகுதூரம் போகப்போகிறார்.நினைக்கும்போதே நெஞ்சு வலித்து வெடித்து விம்மியது.சென்ற இரவுகளில் சிவாவுக்குத் தெரியாமலேயே அழுது தீர்த்தேன்.இன்று என்னால் முடியவேயில்லை.சிவாவின் மார்புக்குள் புதைந்தபடியே அழத்தொடங்கிவிட்டேன்.

"என்ன மதி ஏன் இப்பிடிக் கவலைப்படுகிறீர்.நான் தான் சொல்றேனே,இனி இங்க இருக்கேலாது திரும்பிப் போகச்சொல்லி வந்திட்டுது.மூன்று தரம் அப்பீல் பண்ணியும் பாத்தாச்சுத்தானே.நல்ல வேளை எங்களுக்கு கல்யாண எழுத்தில்லாதது நல்லதாப் போச்சப்பா.இல்லையெண்டா இரண்டு பேரையுமெல்லோ கலைச்சிருப்பாங்கள்.இப்போ என்ன நீ தந்திருக்கிற 10,000Sfr வைச்சுக்கொண்டு நான் கனடா போறன்.அங்க எப்பிடியும் ஒரு வருசத்துக்குள்ள காட் தந்திடுவாங்கள்.பிறகென்ன உன்னைக் கூப்பிடுவன்தானே.பத்து வருசமாச்சு உன்னோட குடும்பம் நடத்தத் தொடங்கி.உன்னை எப்பவாவது நீ ஒரு ஏலாதவள் எண்டு நான் கனவிலகூட நினைச்சதில்லையப்பா.இந்தக் கையால எவ்வளவை நீ உழைச்சுக்கொண்டு வந்து தந்திருக்கிறாய்.இஞ்ச பார் மதி.யோசிக்காம கவலைப்படாம நித்திரையைக் கொள்."

என் கணவர் சிவாவை நிமிர்ந்து பார்த்தேன்.அவர் கண்களும் கலங்கியிருந்தன.அவரின் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு நிரந்தரம்.சின்னப் பிரிவுதானே கொஞ்ச நாளைக்குத்தானே என்று என்னையே ஆறுதல் படுத்திக்கொண்டு அயரத்தொடங்கினேன்.

அன்றைய இரவு ஓய்வெடுக்கத் தொடங்க பகல் பொழுது சூரியனின் துணையோடு தன் அலுவல்கலைத் தொடங்கியிருந்தது.நான் அழ சிவாவும் அழுது ஆறுதல் சொல்லிப் பயணமானார்.காலத்திற்கு யாரைப்பற்றியுமே கவலையில்லை.நகர்ந்துகொண்டிருந்தது.

அவர் போய் தகவல் வரும் என்று காத்திருந்தேன்.எதுவுமே தெரியவில்லை.சாதரணமாகக் களவாகப் போகிறவர்கள் உடனடியாகப் போய்ச்சேரவோ போனாலும் உறவினர்களோடு தொடர்புகொள்ளவோ சீக்கிரமாக நடக்கிற காரியமல்ல.எனவே காத்திருப்பு மூன்று நாட்கள் மூன்று வாரங்கள் என மூன்று வருடங்கள் வரை நீண்டுகொண்டே போய்விட்டன.இன்று வரை எதுவித தகவலுமேயில்லை.(அன்றைய சூழ்நிலையில் வருடக்கணக்காகச் செய்திகள் கிடைப்பதில்லை)

ஒருவேளை போகும் வழியில் ஏதாவது ஆகியிருக்குமோ.எங்காவது காவல்துறையினரால் கைதாகியிருப்பாரோ.மனம் உளைந்து சந்தேகப் பூச்சிகளாலும் சூழ்ந்துகொள்கிறது சிலசமயம்.சிவாவா...என்சிவா என்னை ஏமாற்றுவாரா.சீ....என்ன இப்படி நினைக்கிறேன். இல்லை இல்லை.அவர் ஏதோ எங்கோ ஒரு சிக்கலுக்குள்தான் அகப்பட்டுக்கொண்டார்.
பயமில்லை.காலம் தாமதமானாலும் செய்தி வரும் நிச்சயம் என என்னையே சமாதானம் செய்துகொண்டேன்.

என் மனதை நம்பிக்கையால் நிரப்பியிருந்தேன்.ஏனென்றால் நானும் என் சிவாவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது.என்னை முதன் முதலாக் ஜேர்மனியில்தான் சிவா சந்தித்தார். என்னைப்போலவே அவரும் ஜேர்மனிக்கு அவரும் வந்திருந்தார்.அகதிப்பதிவு உதவிப்பணம் பெற அவரும் வந்திருப்பார்.அந்த நேரங்களில் பலதடவைகள் நாங்கள் கண்டு பழகியே அந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது.அப்போது எனக்கு வயது 26.நான் சிவாவிடம் காதலை எதிர்பார்த்திருக்கவில்லை.அதிர்ச்சி பயமாகி என் நிலைமையையும் உணர்ந்து அவரது காதலை மறுத்தேன்.பின்னரும் அவரது அன்பைத் தவிர்க்கமுடியாமல் அவரது சமாதனத்திற்குள் இணங்கிகொண்டேன்.

(இன்னும் இதேயளவு ஒரு பகுதி இருப்பதால் பதிவை இரண்டாக்குகிறேன்.)

ஹேமா(சுவிஸ்)

Friday, November 27, 2009

தமிழ் தேசிய தலைவனின் அன்பும் கொக்கரிக்கும் சிங்களமும்.

இந்தியாவுக்கும் எதிரான சிங்களம்.



2008 ம் ஆண்டில் தலைவரின் உரை.



காப்புரிமை கொண்ட www.youtube.com இற்கு நன்றி.


உப்பு கரிக்கும் கண்ணீரில் மினரல் வாட்டர் பொரொஜக்ட்.


இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை
முடியாத வரலாறாக வாழும் என தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். நேற்று எழுதியுள்ள கடிதம் ஒன்றில் முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முரசொலியில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த பாயும்புலி பண்டாரக வன்னியன் என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், நானும் தமிழன் தானே என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, நீ தமிழன் தான் இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான் ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன் பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன் பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன் என்று சினந்து கூறுவதாக அமையும்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான் என கூறுவதாக அமையும்.இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார்.

இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982‐ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பாயும் புலி பண்டாரக வன்னியன் தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது விளக்கமான பதில் வீரம் கொப்பளிக்கும் பதில் அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டார வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டார வன்னியனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள் அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என முடியும்.

காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை பண்டாரக வன்னியன் ஒருவனல்ல் அவனைப் போல பலர் உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் என்பது குறிப்பிடதக்கது.

www.dmktamilnaadu.com

Monday, November 23, 2009

நான் ஒரு படம் பாத்தன்.

நானும் அப்பாவும் அம்மாவும் ஒரு பென்குயின் படம் பார்த்தம்.அது ஒரு நல்ல படம்.பென்குயின்ஸ் எல்லாம் தஙக்ளுக்குக் குஞ்சு வேணுமெண்டு கன தூரம் நடந்து நடந்து போகினம்.நிறையத் தூரம் நடக்கினம்.அங்க போய் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துணையைத் தேடி விரும்பிக் கல்யாணம் செய்திச்சினம்.

பிறகு அம்மாப் பென்குயினுக்கு முட்டை வந்தது.அவையள் நிறைய நாள் சாப்பிடாமல் இருந்தவை.அங்க நல்ல குளிரும் இருந்தது.பிறகு முட்டையை அப்பாட்ட குடுத்துட்டு அம்மா எல்லாம் சாப்பிட போயிட்டினம்.சாப்பிடுறதுக்கு திருப்பியும் நிறைய தூரம் நடந்து நடந்து போனவை.அப்பா எல்லாரும் முட்டையையும் வைச்சுக் கொண்டு நல்ல குளிருக்குள்ள நிக்கினம்.பாவமாயிருந்தது.அப்பாட்டை இருகேக்கையே முட்டையும் பொரிஞ்சுட்டுது.
அந்த குஞ்சுக்கு அப்பா வாயில இருந்து ஏதோ சாப்பாடு கொடுத்தார்.

பிறகு கொஞ்ச நாளில அம்மா எல்லோரும் திரும்பி வந்தவை.குஞ்சு அம்மாட்டை போய் வாயில இருந்து பால் வாங்கி குடிச்சுது. பிறகு குஞ்சை அம்மாக்களோட விட்டுட்டு அப்பா எல்லாரும் சாப்பிட நடந்து போயிட்டினம்.அவையளும் திருப்பி நிறைய தூரம் நடந்து நடந்து போகினம்.

சில குஞ்சு குளிரில செத்துப் போச்சுது.செத்துப்போன குஞ்சோட அம்மா பாவம்.வேற அம்மாட்டை இருந்து மற்ற குஞ்சை பறிக்க பார்த்தது.ஆனால் அந்த அம்மா குடுக்கேல்லை. சில குஞ்சை பருந்தும் வந்து கொத்திச்சுது.பாவம் குஞ்சுகள்.பிறகு அப்பாவும் அம்மாவும் மாத்தி மாத்தி குஞ்சை பார்த்துக் கொண்டினம்.மாத்தி மாத்தி சாப்பிடப் போச்சினம். ஒவ்வொரு முறையும் நிறைய தூரமாக நடந்து நடந்து போகினம்.

கடைசியில அந்த குஞ்சு எல்லாத்தையும் தனியா விட்டுட்டு அப்பா அம்மா எல்லாருமே போயிட்டினம்.எனக்கு அழுகை அழுகையா வந்தது.அந்த குஞ்சுகள் எல்லாம் பாவம்தானே? அவையளுக்கு தனியா இருக்க பயமா இருக்கும்தானே? அவையள் தனிய போனால் பருந்து எல்லாம் பிடிச்சு சாப்பிட்டுடும்தானே? அவையளுக்கு பருந்திட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதெண்டு தெரியாதுதானே? நான் அழத் தொடங்கிடன்.

பிறகு அம்மாவும் அப்பாவும் சொல்லிச்சினம் அவையளாவே எப்படி தப்பிக்கிறதெண்டு பழகிடுவினம் எண்டு.பிறகு பார்த்தால் ஒருத்தரும் சொல்லிக் குடுக்காமலே அந்தக் குஞ்சுகள் எல்லாம் தாங்களாவே தண்ணியில போய் கைகளை விரிச்சு விரிச்சு அடிச்சுக் கொண்டு நீந்தி நீந்தி போச்சினம்.அது பார்க்க நல்ல வடிவாயிருந்தது.ஆனா நான் அவையள்போல என்ர அப்பா அம்மாவை விட்டிட்டு போகமாட்டன்.எனக்குப் பயம்.அதோட நான் பெரிசா வளந்தப்பிறகுகூட நான் தான் தான் உழைச்சு அப்பாவையும் அம்மாவையும் பாத்துக்கொள்ளுவன்.எனக்கு நீந்தத் தெரிஞ்சாலும் போகமாட்டன்.

ஆனால் இப்ப எத்தனயோ மைல்கள் தாண்டித்தான் என்ர அப்பா அம்மாவை விட்டிட்டு வந்திருக்கிறன்.

யாரோ ஒரு எங்கள் ஊர்க் குழந்தை எழுதியதாக இருக்கலாம் இது.கற்பனையாகவும் இருக்கலாம்.எனக்கு மெயிலில் வந்தது.நான் என்னை அக்குழந்தையாக்கி அதை மெருகேற்றிக்கொண்டது இப்பதிவு.

ஹேமா(சுவிஸ்)

Monday, November 16, 2009

இப்படியும் நடக்கிறது.

நான் இந்த வாரத்தில் அனுபவித்த நிகழ்வொன்று.அது அதிர்வுபோல்.அதற்குள்ளிருந்து இன்னும் மீளவில்லை.அதுதான் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

நான் ஒரு 8 மாத்திற்கு முன் என் தோழி அதாவது வேலை செய்யுமிடத்தில் ஒரு வருடச் சிநேகம் மட்டுமே.அவள் ஏதோ தன் கஸ்டம் சொல்லித் தனக்கு 200 Sfr பணம் தரும்படியும் மாத இறுதியில் தந்துவிடுவதாகவும் சொல்லிக் கேட்டாள்.கொடுத்தும் விட்டேன்.யாருக்கும் சொல்லவும் வேண்டாம்.தனக்கு அதனால் வெட்கம் என்றும் கெஞ்சாத குறையாய் கேட்டும் இருந்தாள்.அதன் பிறகு எங்கள் வேலை நேர மாற்றங்களாலும் என் விடுமுறை அவள் விடுமுறை என்று பிறகு சுகயீன விடுமுறை இப்படி இப்படியே ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் கிட்டத்தட்ட 4-5 மாதங்களாகிவிட்டது.அவள் போன் பண்ணிக்கூட உன் பணம் தரவேண்டும் எங்கு எப்படி என்ற கேள்வியே இல்லை.அதன் பிறகு போன மாதத்தில் ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு.அன்று கண்டபோது ஒரு வார்த்தை மட்டும் பணம் பற்றி வந்தது."ஐயோ உங்களை நான் காணவேயில்லை.காசு வச்சிருந்து வச்சிருந்து பாத்திருந்து செலவாயிட்டுது.இனி இந்த மாசம்தான் தருவேன்"என்றாள்.நான் தலையை மட்டும் ஆட்டினேன்.எனக்கோ கொடுக்கல் வாங்கல் என்பது சரியாய் இருக்கவேணும் என்பதில் உறுதியாய் இருப்பேன்.அவளை நிறையவே ஏதாவது சொல்ல வேணும்போல இருந்தது.
என்றாலும் வேண்டாம்.இனி எப்போதும் கொடுக்காமல்விட்டால் சரிதானே தரட்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.

சரி அந்த மாத இறுதிவரை திரும்பவும் இடைவெளி.காணவில்லை.சரியென்று பார்த்தால் வேலை நேர அட்டவணையில் திரும்பவும் ஒருமாத சுகயீன விடுமுறை போட்டிருந்தது.சரி அப்போ இந்த மாதமும் பணம் வரப்போவதில்லை என்றிருந்தேன்.யாரிடமும் சொல்லவில்லை இதுவரைக்கும்.இப்படியிருக்க என் நெருங்கிய தோழி மனதை அடக்கமுடியாமல் ஒரு நாள் சொன்னாள்.நான் அவவுக்கு 200 Sfr பணம் கொடுத்து 6 மாதமாகிவிட்டது.2-3 தடவைகள் கேட்டும்விட்டேன்.இப்போ இல்லை இல்லை என்கிறாவாம் என்று.எனக்குச் சிரிப்பாய் போய்விட்டது.சிரித்துவிட்டுச் சொன்னேன் நானும் கொடுத்திருக்கிறேன் என்று.என்னிடம்போலவே யாருக்கும் சொலவேண்டாமென்று சொல்லியே வாங்கியிருக்கிறாள்.சரி பார்க்கலாம் எப்போ தருவாள் என்றுவிட்டு இருந்துவிட்டோம்.

சரி சென்ற 5 ம் திகதியிலிருந்துதான் சுகயீன விடுமுறை.அதற்கு இரண்டு நாள் முன்னதாகவே தனக்கு முடியவில்லை என வராமல் நின்றுவிட்டாள்.பணம் தரவில்லையே தவிர எங்களோடு எப்பவும் போலப் பேசிச் சிரித்து சகஜமாகவேதான் இருந்தோம்.சரி 7 ம் திகதி எனக்குப் போன் பண்ணி எப்போ வரைக்கும் தனக்கு விடுமுறை போட்டிருக்கு என்று கேட்டாள்.அதற்கு நான் நாளை பார்த்து வருகிறேன்.நாளை நான் வேலை முடிந்து வர மாலை 3 மணியாகும் என்றும் வேலை இடத்திற்குப் போன் எடுக்கவேண்டாம் என்று சொல்லி வைத்தேன்.ஏனென்றால் காலை நேரங்களில் வேலை கூடவாயும் வெளித்தொலைபேசி அழைப்பு வந்திருக்கு என்று கவனத்திலும் இருக்கும்.

பார்த்தால் அடுத்தநாள் காலை 8.45 க்கு போன் எடுக்கிறாள்.என் நேர அட்டவணை பார்த்தீர்களா என்று.எனக்கோ நல்லாய் ஏறின கோவம் வந்துவிட்டது.நான் முதலில் கேட்டது."ஏன் இப்போ போன் எடுக்கிறீங்கள்.
உங்களுக்கு நேற்று என்ன சொல்லிட்டு வந்தேன்.வையுங்கோ போனை.நான் இன்னும் வேலை அட்டவணை பாக்கேல்ல.பாத்திட்டு வந்து வீட்ல இருந்து சொல்றேன்" என்றுவிட்டுப் போனை அணைத்துவிட்டேன்.

என் பக்கத்தில் இன்னொரு எங்கள் அண்ணா ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.நான் இன்னும் கோபம் முடியாமல் திட்டிக்கொண்டிருந்தேன்.போனவாரம் சுகயீனம் என்று அறிவிக்க இன்னொரு சிநேகிதியின் வீட்டுக்குக் காலை 4.30 Am மணிக்கு போன் பண்ணியிருக்கிறாள். "வேலையிடத்துக்கு போன் பண்ண வேணும் என்னிடம் போன் நம்பர் இல்ல தாங்கோ" என்று கேட்டு.குழந்தைகள் கணவன் எல்லாரும் தூக்கம் கலைந்து எழும்பியிருக்கிறார்கள்.ஒரு வருடமாக வேலை இடத்து போன் நம்பர் இல்லாமல் இருந்திருக்கிறாள்.இதுவும் ஒரு செய்தி.

அப்போ அதையும் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தேன் நான்.பக்கம் இருந்த அண்ணா என்னைப் பேசினார்."ஏன் இப்போ இவ்வளவு கோபம் உங்களுக்கு உங்களுக்குத்தான் உடம்புக்குக் கூடாது.சத்தம் போடாதேங்கோ என்று.அதோட அவர் சொன்னார் அவ ஆள் சரில்ல. கவனமாய் இருங்கோ.சரியான சுயநலக்காரி.பழக்கவழக்கங்களும் சரில்ல.கொடுக்கல் வாங்கல் ஏதும் வச்சுக்கொள்ளவேண்டாம்" கவனம் என்றார்.எனக்கு மூளையில் பொறி தட்டியது.ஏன் அப்பிடி சொல்றீங்கள் என்று அவரை நோண்டத் தொடங்க அவரும் 100 Sfr பணம் கொடுத்துப் பத்து மாதங்களாம்.

அவள் எங்களைவிடக் கொஞ்சம் வித்தியாசமாகவே எல்லோருடனும் பழகியும்வந்தாள். ஆண்கள் பெண்கள் பேதமில்லாமல் எல்லோரிடமும் எந்தக் கதையும் அரட்டை அடிப்பாள். ஆண்களை டேய் அத்தான் என்பாள்.மச்சான் அங்கிள் என்றென்றாள் பகிடியாய் கதைச்சுக் கொள்வாள்.எங்களுக்குத் தேவையில்லாத விஷயம் இல்லாவிட்டாலும் "கவனம் சரில்ல நாங்கள் இருக்கேக்க கதைகளைக் குறைச்சுக்கொள்ளுங்கோ" என்று மட்டும் சொல்லி வச்சிருக்கேன்.

சரி என்று நான் சாப்பிட்டுக்கொண்டிருக்க என்னோடு வேலை பார்க்கும் பிரேசில் பெண் மெலானி என்பவள் "ஏன் கோபமாய் இருக்கிறாய்" என்று கேட்க ஏன் எங்கள் பல்லைப் நோண்டி நாங்களே மணக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் சிநேகிதி போன் பண்ணினதால் கோபமாய் இருக்கிறேன் என்று மட்டும் சொல்லி விட்டுவிட்டேன்.அதற்கு அவள் பிறகு "நீ அவளுக்குப் போன் பண்ணினால் அவள் எனக்கு ஒரு பரிசுப் பொருள் ஒன்று தரவேணும்.
காத்திருக்கிறேனாம் ,என்றும் கோபமாய் இருக்கிறேன் என்றும் சொல்லிவிடு அவளுக்குப் புரியும்" என்றாள்.நானும் சரி என்று வேலையில் மூழ்கிவிட்டேன்.

ஆனால் மண்டையில் ஏதோ ஒன்று குடையத் தொடங்கியது.மத்தியானம் சாப்பாட்டு வேளை மெலானி ஏன் அப்படிச் சொன்னாய்.அவள் ஏதாவது பணம் தரவேணுமா உனக்கு என்று கேட்க அவளும் 200Sfr பணம் கொடுத்து 6 மாதங்களாம்.எனக்கு அதன் பிறகு அடக்க விருப்பம் இல்லை.இப்போ நான்கு பேர் கடன் கொடுத்திருப்பதை உடைத்தேன் கோபத்தோடு.அவளுக்கு அதிர்ச்சி.அவள் உடனேயே போன் பண்ணிக் கேட்க சமாதனமாய் "சரி 22 ம் திகதி வந்துவிடுவேன்.உன் பணம் தந்துவிடுவேன் நீ எங்கிருந்து பேசுகிறாய் ஹேமா இருக்கிறாவா, சத்தம்போடாதே என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்தவும் அவள் சரி தராவிட்டால் மேலிடத்தில் சொல்லுவேன்" என்றபடி முடித்தாள்.

சரியன்று இருக்க எங்கள் பின்னாலிருந்து சாப்பிட்ட ஆபிரிக்கத் தோழர் "ஏன் மெலானி சத்தம் போடுது என்று கேட்க அவளும் சொல்ல நானும்" என்றான் அவன்.இன்னும் வேலை விட்டு விலகிய இருவரது பெயரையும் சொன்னான் இன்னும்.இப்பொழுது பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவர் சொல்லச் சொல்ல 19 - 20 பேராக கடன் கொடுத்தவர்கள் பட்டியல் உயர்ந்திருக்கிறது.கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரைக்கும் கை நீட்டப்பட்டிருக்கிறது.

பிறகு என்னைக் கேட்க வேணுமா.போன் எடுத்துப் பெரிய பிரசங்கமே வைத்துவிட்டேன்.உண்மையில் வெட்கமாயிருக்கிறது.ஒருவன் கேட்டான் உண்மையாய் "அவள் இலங்கைப் பெண்தானா.நான் 12 வருடமாக வேறு இலங்கையர்களோடு பழகுகிறேன். அவர்களுக்கும் இவளுக்கும் நிறைய வித்தியாசம்" என்று.எல்லாம் சொல்லித் "திரும்பி வருவதற்கிடையில் எங்கள் பணங்கள் இல்லாவிட்டாலும் அடுத்த நாட்டுக்காரன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவர்கள் முகத்தில முழியுங்கள்.எங்களைப்போல அவர்கள் அடக்கி வாசிக்க மாட்டார்கள்.இப்போதே கிட்டத்தட்ட 400 பேருக்கும் கதை பரவிட்டிருக்கு.இதனால் உங்கள் வேலைக்கும் ஆபத்து" என்று சொல்லி விட்டிருக்கிறேன்.நானும் 8 வருட காலமாய் வேலை செய்கிறேன்.இப்படி ஒரு தமிழ்ப் பெண்ணை நான் கண்டதில்லை.
வெட்கமாயிருக்கிறது.

கொடுக்கல் வாங்கல் என்பதில் மனிதனுக்கு நேர்மை இல்லாவிட்டால் அவனைப் போல ஒரு போக்கிரி உலகில் வேறு யாருமில்லை.இதைவிடச் சந்தியில் நின்று பிச்சையெடுத்துச் சாப்பிடலாம்.உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வெட்கப்படுகிறேன்.என்றாலும் வாழ்வின் அனுபவம் இது.இன்னும் வாழ்க்கையில் கவனமாயிருக்கலாமே !

ஆனால் சுவிஸ்காரனின் நல்ல குணத்தைப் பாருங்கள்.அவளுக்கு இது ஒரு மனநோய். இல்லையென்றால் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்கிறான்."எங்களுக்கெல்லோ தெரியும் எங்கட சனங்களைப்பற்றி !"

யூத்ஃபுல் விகடனில்...குட் புளொக்கரிலும் !

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 12, 2009

கோபத்தைக் களைவது எப்படி?

சின்னதாய் கதை ஒன்று கேட்போமா !

ஒரு துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது.அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார்.பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார்.பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது."என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன்.அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.பிறர் மீது போபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை.குற்ற உணர்வு பச்சாதாபம் தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம்.இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும்.அது இயற்கை.அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம்.அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம்.விழுங்கியது வெளிப்படவே செய்யும்.நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன.பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம். கோபமே அவசியமில்லை கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும்.மனம் வீணாகப் புண்படும்.கடுகடுப்புக்கு முகமும் கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம்.அடுத்தவரது சொற்களோ செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம்.ஆனால் உண்மையில் கோபமும் கோபமின்மையும் நம் மனப்பான்மையையும் மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும்.நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும்.உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும்.வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள்.அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான்.அது கோபமாகட்டும் வெறுப்பாகட்டும் அன்பாகட்டும் நல்லதாகட்டும் தீயதாகட்டும்.அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே.

இப்பொழுதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்ந்து விடுகிறேன்.இப்படியான கதைகள் எனகு அடிக்கடி மெயிலில் வருகிறது.என் மனநிலைக்கேற்ப நானும் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

"கோபம் என்பது பலவீனம் அல்ல அது பாவம்"

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.நன்றி...

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 05, 2009

ஆரம்பிக்கப்படாத வாழ்வு.

சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான்.அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள்.துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள்.வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.

குழந்தைகளின் சிரிப்பொலி பூக்களைச் சுற்றும் வண்டுகள் பக்கத்து வீட்டை அலசும் பெண்கள் பழைய கனவுகளை மீட்டெடுக்கும் முதியவர்கள் என்று அன்றாட இயல்போடு அன்றைய நாள்.அறை மூலையில் ஒரு எலி தன் குஞ்சுக்கு இரை தேடிக்கொண்டிருந்தது.முன்று நாட்களாகக் கிழிக்கப்படாத கலண்டர் சுவரில் காற்றில் அடிபட்டுக்கொண்டிருக்க எலி பயந்து ஓடத்தொடங்கியது.தேநீர் குடிக்க மனம் உந்தியது.ஆனாலும் இருப்பு ஒட்டிக்கிடக்கிறது எழும்ப இயலாமல்.

மெல்ல இருளை வரவேற்று மாலை வெயில் மறைந்திகொண்டிருக்க மெல்லிய கீறலாய் நிலவு வெளிப்பட்டது ஆனாலும் வெளிச்சம் தாராளமாய் இல்லை.இன்னும் யன்னலோடு ஒட்டியபடிதான்.எழுதி வைத்த கடிதம் அடிக்கடி தன்னைத் திரும்பிப் பார்க்கவென்று படபடத்துக்கொண்டேயிருக்கிறது.

மெல்ல இருள் விலகத்தொடங்கியிருந்தது.பறவைகள் இரை தேடவும் பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பால் கொடுக்கவும் தயாராகின்றன.பூக்களின் வாசனை அறையின் துர்நாற்றத்தையும் தாண்டி மனதை இதமாக்குக்கிறது.தூரத்தே ஒரு வீட்டில் ஒரு குழந்தை பள்ளி போக அடம் பிடித்து அழுவதும் கேட்கிறது.

தேநீர் தரவோ கேட்கவோ ஆடகள் இன்றி தாகத்தோடேயே மீண்டும் அதே யன்னல் கம்பிகளூடே ரசிப்பின் நாயகியாய்.இனிமையான காலை நேரப் பாடல்களும் பாடசாலை மாணவர்களுமாய் சாலை கொஞ்சம் நிரம்பியபடி.யாரும் அவள் பக்கம் திரும்பாமலே தங்கள் குறும்புகளோடு சிநேகித முகங்களோடு.இவளுக்குப் பொறாமையாய்கூட.ஏன் இவள் மட்டும் தனிமையில் கவனிப்பாரற்று.

கண்ணீர் யன்னலோரத்துப் புற்களை ஈரமாக்க தன் கைகளை இன்னும் இறுக்கி சூரியனின் வருகையையும் அடுத்த நாளின் ஆரம்பத்தையும் வரவேற்றபடி அவள்.

கதவுகள் எதுவும் திறக்கபடாததால் அறைக்குள் ஒரு இறுக்கம்.சூன்யம்போல அமைதி. ஒருமுறை அறை முழுதும் அலைந்து திரும்பவும் யன்னல் கம்பிகளை இறுக்கிக் கொண்டபடி. வெறுமையான சுவரும் கடைசியாகப் பார்த்த அப்பா அம்மாவின் அல்பமும் இன்னும் விரித்தபடி கிடக்கிறது.அவளின் இளமைக்கால நிழலும் எவ்வளவு சந்தோஷமாக அதற்குள். யார் இத்தனை சந்தோஷங்களையும் விழுங்கிக் கொண்டது.

ஏன் எல்லாம் அவள் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.தொலைபேசி அலறவில்லை.தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை.குளியல் அறையில் மாத்திரம் ஒரு துளி நீர் சொட்டும் சத்தம்.ஓ...அது இறுக்கப் பூட்டப்படாத குழாயின் கூப்பிடு குரல்.

ம்....மெல்லக் கதவு திறந்து மூடுகிறது.யாரோ அறை உடைத்து முன்னேறப் பார்க்கிறார்கள். உறவின் இரைச்சல்கள் அழுகையாய் ஆர்ப்பாட்டமாய் இரக்கமாய் அருகே கேட்கிறது.

இவர்கள் அவள் அறை துழாவத் தொடங்கிவிட்டார்கள்.அவள் இருப்பின் அடையாளங்கள் ஒவ்வொரு துகளிலும் இங்கு கிடக்கப் புறப்படுகிறது காற்றாய் அவள் கைகளும் கால்களும்.
உடல் அது உடல் அல்ல.வெறும் காற்றாய் அந்தர ஊஞ்சலாய்.கதவுகள் திறக்கப்பட்டதால் சுலபமாய் வெளியேற யன்னல் கமபிகளின் வியர்வைப் பிடியிலிருந்து மெதுவாய் வெளியே மெல்ல.சுலபமாய் இருக்கிறதே இப்போ உள்நுழையவும் வெளியேறவும்.

இப்போ அந்த யன்னலின் பின்பக்கமாய் அவள்.இன்னும் யார் யாரோ உள்நுழைய விம்மல் சத்தங்களினூடே அதட்டல் குரல்களும்.

இரன்டு நாட்களுக்கு முதல் தனிமையின் விரட்டல் அதிகரிக்க தலை தடவவோ கைகளை இறுக்கிப் பற்றவோ எவருமின்றி, உதிர உறவுகளை செய்திகள் வெளியேற்ற உச்சி வெயில் வெப்பியெழ இவளும் பைத்தியமானாள்.

கச்சிதமாகத் தனக்குப் பிடித்த உடையணிந்து அலங்கரித்தபடியே படுத்திருந்தாள்.
அவஸ்தையான வாழ்வு,தனிமை,சிறுவர்களின் பசிக் குரல்கள்,பிடிக்காத செய்திகள்.தன்னைத் தானே சூறையாடிய அந்த மயக்க மருந்துகள்.சொக்கிப் போகும் நிமிஷத்திலும் தான் விளையாடிய அந்த முற்றம்,மண்திண்ணை,ஒற்றைப்பனை.மயங்கிவிட்டாள்.மிஞ்சிக் கிடக்கும் உடலைத்தான் பார்த்து அழுகிறார்கள்.எங்கே போனார்கள் இத்தனை நாளும் இவர்கள்!

உடல் புரட்டி உடை தளர்த்தினாலும் கேள்விகளும் பதில்களும் நிரம்பி வழ்ந்தன.

ஏன் என்ன நடந்தது ? !!!

பரீட்சையில் தோல்வியோ...இல்லையே இப்போ பரீட்சைக் காலமில்லையே இரண்டு நாளைக்கும் முன்னமும் பார்த்தேனே தொலைபேசியோடு.நானும் கண்டேனே அடுத்த தெருப் பையனோடு யாரோ ஒருத்தியும் இங்க அடிக்கடி வருவாளே.அவளை இப்போதைக்குக் காணாவில்லை நான்.என்னதான் எழுதியிருக்காம் அதில.காட்டவே மாட்டார்களாம்.படிக்கவோ வேலைக்கோதானே இங்க தங்கியிருக்கிறாள்.

அதில்கூட அவர்களுக்கு முழுமையான விபரம் இல்லை.ஏன் எதற்கு யார் எங்கே எதுவுமே தெரியாது.ஆனாலும் வாய் அவிழ்ந்து புழுவாய்ப் பொய்த்துக் கொட்டுகிறது.அந்த நாற்றத்தைத் தாண்டி அவர்களின் பேச்சு காற்றோடு கலக்கிறது.தனிமையும் உறவுகளின் பிரிவும்தான் அவள் மனதை இறுக்கியது என்று.எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத வெறுமை. தொலைபேசியோடான சிநேகம்,கணணியோடான அளவலாவல், அத்தனைக்கும் தூரமான அவள் தேசம்.

அகற்றப்பட்ட அல்பமும் கடிதமும் கலண்டரும்.இப்போ நாற்றம் இல்லை.அத்தனை கதவுகளும் யன்னலும் திறக்கப்பட்டு மாலையும் காலையும் வெளிச்சம் உள்நுழைந்து வெளியேறிக்கொண்டிருந்தது.இயல்பு வாழ்வு இயல்பாபகவே நகர்கிறது.குழந்தைகளும் பூக்களும் அப்படியேதான்.சில சமயங்களில் மாத்திரம் சூன்யமாய் வெறித்த பார்வையோடு சிலர் அந்த அறையையைப் பார்க்கிறார்கள்.வாழ்வேண்டிய வாழ்வைச் சூறையாடிய சந்தோஷத்தில் அந்தத் தினம்.நகர்வுகள் இயல்பானானாலும் பாரம் சுமந்த சில மனங்கள். அவளின் உடல் இல்லாமல் போய் ஒரு வாரமாகியிருந்தது.அந்தச் சுற்றாடலில் எல்லோரும் அவளை - அந்தச் சம்பவத்தை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள்.

யூத்புல் விகடனில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 29, 2009

இப்படியாவது பிறந்திருக்கலாம்.

கொடுத்துவைத்த பிறவிகள்.

போட்டி பொறாமை போன்ற குணங்களால் மனிதனே மனிதன் மீது அன்பு காட்ட சிரமப்படுகிறான்.ஒரு பிராணி மீது அன்பு காட்ட கற்றுக்கொண்டால் மனித நேயம் தானாக வந்துவிடும்.

சிறு வயதில் பிராணிகள் மீது அன்பு கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் பெற்றோர் மீதும் பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

பிராணிகள் செய்யும் தவறுகளை சகித்துக் கொள்ள கற்றுக்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியும்.

பிராணிகள் செய்யும் குறும்புகளை இரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் மன அழுத்தம் தானாக குறைந்து விடும்.



வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு காட்ட தெரியாத சமுதாயம் பண்பட்ட சமுதாயமாக இருக்க முடியாது.அதனால் தான் இன்றய சமுதாயத்தில் மனித நேயம் குறைந்து வன்முறை பெருகி வருகிறது. இதை பன்னாட்டு சமுதாயம் உணரவேண்டும்.

இன்றிலிருந்து இனி யாரையும் நாயே என்று திட்டுவதை நிப்பாட்டுங்கள்.


ஹேமா(சுவிஸ்)

Sunday, October 25, 2009

பகலொளி சேமிப்பு நேரம்.


██ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படும் பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் முன்னர் கடைப்பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகள்.

██ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படாத நிலப்பகுதிகள்.

கலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும்.இது பொதுவாக ஒரு மணி நேரமாகும்.இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது."சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இம்முறை பின்பற்றப்படாவிட்டால் காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.

பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில் பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

அரசுகள் சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால் இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன.ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது.இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை).மிகுதி மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை).இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.

வரலாறு

பாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1907 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.
பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது.உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1 க்கும் இடையில் பயன்படுத்தியது.

[இன்று நேரம் மாற்றப்படுகிறது.அக்டோபர் மாதக் கடைசி வாரத்திலும் ஏப்ரம் மாதக் கடைசி வாரத்திலும் மாற்றப்படும்.]

நன்றி இணையம்.

Wednesday, October 21, 2009

மிருகங்களுக்கும் சர்க்கரை நோய்.

மிருகங்களுக்கும் சர்க்கரை வியாதி வரலாம்.நாய்களுக்கு வரும் சர்க்கரை வியாதி மனிதார்களிடமிருந்து வேறுபட்டது.மனிதர்களில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் படிப்படியாகத்தான் குறையும்.மனிதர்கள் அதற்காக மாத்திரைகளை எடுத்தால் இன்சுலின் சுரக்கும் கலங்களின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆனால் நாய்களைப் பொறுத்தமட்டில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் மொத்தமாகவே அழிந்தபின்புதான் இந்த நோய் தோன்றுகிறது.இதனால் இன்சுலின் ஊசிமூலம் கொடுப்பதே சிறந்த பரிகாரம்.தினமும் இந்த ஊசி ஏற்றவேண்டும்.சிலசமயங்களில் இரண்டுவேளைகளில் செலுத்தவும் நேரலாம்.ஆரம்பத்தில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை சரியான நிலைக்கு கொண்டுவர சிலநாட்கள் செல்லலாம்.சிலநாட்களுக்கு கிளினிக்கில் வைத்திருக்க வேக்ண்டும்.விசேட உணவு வழங்க வேண்டும்.

நாய் பூனைகளுக்கு சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டு பிடித்தவுடன் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அவற்றின் எஜமானர்களின் குடும்பவிபரத்தைக் கேட்டறிவது நல்லது.நோயினால் பாதிப்புற்ற பிராணிகளை நேரம் எடுத்துப் பராமரிக்க வேண்டும். 'பிஸி 'யாக இருப்பவர்களினால் இது முடியாத காரியம்.

இன்சுலினை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த தாமதித்தால் பிராணிகள் மயங்கும்.உணவு பிந்தினால் சோர்வுடன் முடங்கும்.இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் பெண்கள் மிகுந்த சிரத்தை அடைவர்கள் என்பது உண்மை.

தெரிந்த பெண் ஒருவர் இந்த நோயினால் பீடிக்கப்பட்ட நாயொன்றைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு பராமரிக்கிறார்.இது மானுட வயதில் ஐம்பத்தைந்து வருடத்துக்கு சமனாகும்.அடிக்கடி ஊசிபோடுவதற்கு நாய்க்கும் பொறுமை வேண்டும்.நோய் வந்த நாய்கள்-கருணைக்கொலை மூலம் பரலோகம் அனுப்பப்படுவதுமுண்டு.இது சோகம்தான்.ஆனால் தவிர்க்க முடியாதது.

நீரிழிவு என இலங்கையிலும் சர்க்கரை வியாதி என தமிழகத்திலும் சொல்லப்படும் இந்த நோய் நாய் பூனைகளை மட்டும் அல்ல மனிதர்களைப் படுத்தும் பாடு.

ஒரு சுவாரஸ்யமான கதையும் ஒன்று இதனோடு.

ஒரு அம்மா இந்த உபாதையால் பலஆண்டுகள் வருந்தினார்.நாற்பது வயதில் வந்த இந்தநோய் - சுமார் 15வருடங்கள் அவர்கள் மறையும் வரையில் உடலோடு ஒட்டி உறவாடியது.அவரது மகன் இன்சுலின் ஏற்றும் பழக்கத்தைத் தொடக்கிவிட்டிருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள் அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் - அம்மாவைப் பிரியாதிருந்தது இந்த நோய்.அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது.கணவரது குத்தல் நக்கல் மொழிகளையும் அவர் பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.

அவர் வாழ்ந்த காலம் சுவாரஸ்யமானது.

வீட்டுக்கு வருபவர்களெல்லாம் வைத்தியர்களாகிவிடுவார்கள்.ஆயுர்வேதம் சித்தவைத்தியம் யுனானி எனக் கூறிக்கொண்டு இலை குழை தண்டு வேர் பூ - என தாவரவியலையும் அம்மா கரைத்துக் குடித்ததுக் கொள்வார்.அரைத்துக் குடித்த பாகற்காய்களுக்குக் கணக்கேயில்லை.

உலகத்தில் தோன்றிய பெரிய தெய்வங்கள் சிறிய தெய்வங்கள் பிறசமயத் தெய்வங்கள் என மத நல்லிணக்கணத்துடன் அம்மா விரதம் இருந்தும் இந்த உபாதையை போக்க முயன்றார்.நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து அதிகாலையில் குளித்துவிட்டு தெய்வதரிசனத்துக்குச் சென்றதால் கிணற்றில்தான் நீர் வற்றியதே தவிர நீரிழிவு வற்றவில்லை.

பூசாரிகள் மந்திரவாதிகள் சூனியம் எடுப்பவர்கள் எனச் சொல்லிக்கொண்டும் சிலர் வந்து போனார்கள்.கேரளாப் பக்கமிருந்து வந்த மலையாள மாந்திரீகார் ஒருவர் வந்து அம்மாவிடம் 'உங்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் சூனியம் செய்திருப்பதாகச் சொல்லி உறவுக்குள் பகை நெருப்பை மூட்டிச் சென்றார்.இவர்கள் எல்லோரையும் விட அம்மாவின் உயிரை பிடித்து வைத்திருந்தது இன்சுலின் ஊசி மருந்துதான்.

முன்பு மாட்டிலிருந்தும் பன்றியிலிருந்தும் தயாரிக்கப்பட்ட இன்சுலின் இப்பொழுது சைவமுறைப்படி பக்டாரியாவுக்குள் இன்சுலின் ஜீனைச் செலுத்தி பிராமணர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறதாம்.

[ஒரு அனுபவஸ்தர் சொல்ல நான் கேட்டுக்கொண்டது.]
ஹேமா(சுவிஸ்)

Friday, October 16, 2009

சுவிஸ் ன் அழகு.


என் இனிய நண்பர்கள் அனைவருக்கும்
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
இனியாவது ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளி பிறக்கப் பிரார்த்திக்கொள்வோம்.

சுவிஸ்(ஹேமா)

Thursday, October 08, 2009

"மேவீ" க்கு அனுப்பின ரொட்டி

என் இணைய நண்பர் மேவீ தனிச்சமையல் பண்றார் இப்போ.பாவம் சமைக்கவே தெரில.சுடுதண்ணி வைப்பேன் என்றார்.என்ன செய்யலாம்.
என்னால முடிஞ்சது சொல்லிக் குடுத்தேன்.இனி அவர் சமைச்சாரா சாப்பிட்டாரா ,ஏன் தனிய சமைக்கிறார்ன்னு அவர்கிட்டயே கேட்டுக்கோங்க.ரொட்டி நல்லாயிருந்தா மட்டும் என்கிட்ட சொல்லுங்க.

காய்கறி ரொட்டி
*******************

கோதுமை மா(மைதாமா) - 500 கிராம்

உப்பு - தேவையானளவு

பால் - 2 மேசைக்கரண்டி

பட்டர் - 2 மேசைக்கரண்டி

சூடான நீர் - (1- 2)கப்[கைக்கு இதமான சூடு போதும்]

எண்ணைய் - தேவையானளவு

பெரியவெங்காயம் [சிறிது சிறிதாக வெட்டினது] - 1

பச்சைமிளகாய்[சிறிய வட்டமாக வெட்டினது] - 3 - 6[உறைப்புக்கு மாதிரி]

கருவப்பிலை [சிறிது சிறிதாக வெட்டினது]- சிறிதளவு

லீக்ஸ் [சிறிய மெல்லிய வட்டமாக வெட்டினது]- ஒரு லீக்ஸ் ல் பாதி(25கிராம்)

கரட் (துருவியது) - 1(25கிராம்)

பீன்ஸ் [மெல்லிய வட்டமாக வெட்டினது]- 10 (25 கிராம் )

முட்டைகோஸ்[சிறிது சிறிதாக]- சிறிய துண்டு (15கிராம்)

உருளைகிழங்கு [துருவியது] - 1

[நீர்த்தன்மை இல்லாத காய்கறிகள் எதுவுமே போடலாம்.விரும்பினா காய்கறிகளை ஒரு நொடி மட்டும் வதக்கியும் போடலாம்.]

எப்பிடிச் செய்யிறது
***********************

1)கோதுமை மா [மைதாமா],உப்பு,பால்,பட்டர்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
கருவப்பிலை, லீக்ஸ்,கரட்,பீன்ஸ்,முட்டைகோஸ்,உருளைகிழங்கு
எல்லாத்தையும் போட்டு கலந்து எடுங்க. விரும்பினா தேங்காப்பூவும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்.[ஒரு பிடியளவு]

2)அதுக்குப் பிறகு மெல்லிய சூடான தண்ணீர் விட்டு நல்லா பிசைஞ்சு எடுங்க.நல்லா இறுக்கமாவோ இல்லாட்டித் தளர்வாகவோ பிசைய வேணாம்.தண்ணியை கொஞ்சம் கொஞ்சமா விட்டுப் பிசைஞ்சு எடுங்க.அப்ப சரியா வரும்.

(3)அதுக்குப் பிறகு குழைத்த மாவை சிறு உருண்டைகளா உருட்டி எடுத்து வட்டமாக தட்டி எடுங்க.

(4)அதுக்குப் பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணைய் தடவி ரொட்டியைப் போட்டு வேகவிடுங்க.அடுப்பை மெல்லிய சூட்டில வச்சிருங்க.அப்பதான் இரண்டு பக்கமும் உள்ளுக்கும் சரியா வெந்து வரும்.

காய்கறி ரொட்டி ரெடி.கண்டிப்பா செய்து பாருங்க.நல்லாயிருக்கும்.
சீக்கிரமாய்ச் செய்யக்கூடியதும் ஆரோகியமானதுமான சாப்பாடு.

பி.கு - கடைசில தோசைக்கல் இல்லன்னு சொல்லிட்டார்.அப்புறம் வாங்கிச் சுட்டேன்னும் சொன்னார்.

ஹேமா(சுவிஸ்)

Monday, October 05, 2009

சாமக்கோழி.

சாமக்கோழி கூவுகிறது " " நடுச்சாமத்தில் வந்தார் " என்று சொல்லும் போது சாமம் என்றால் இரவு என்றே பொருள் கொள்ளப்படுகிறது.ஆனால் அவ்விதம் பொருள் கொள்வது அறியமையாகும்.

காரணம்,சாமம் என்பது ஒரு கால அளவீடு.அது இரவு நேரத்திற்கு மட்டும் உரியது அன்று.
சாமம் என்பது பகலிலும் உண்டு.இரவிலும் உண்டு.

60 நொடி = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை ( 1 நாழிகை = 24 நிமிடம் )
71/2 நாழிகை = 1 சாமம் .
8 சாமம் = 1 நாள் .
7 நாள் = 1 வாரம் .
15 நாள் = 1 பக்கம் .
2 பக்கம் = 1 மாதம் .
6 மாதம் = 1 அயனம் .
2 அயனம் = 1 ஆண்டு .
இதுவே நம் மக்களின் கால அளவீடு ( கணக்கீடு ).

இதில் 8 சாமங்கள் கொண்டது 1 நாள்.அதாவது பகலில் 4 சாமம் , இரவில் 4 சாமம். அதாவது ஒரு சாமம் என்பது 3 மணி நேரம்.எனவே,சாமம் என்பது வேளையைக் குறிப்பது என்பது தவறு.

ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் என்பது கணக்கு.60 நாழிகைகளை 8 ஆல் வகுத்தால் 7 1/2 கிடைக்கும்.7 1/2 நாழிகை ஒரு சாமம்.நான்கு சாமம் சேர்ந்தது ஒரு பகல்.அதேபோல் நான்கு சாமம் சேர்ந்தது ஓர் இரவு.எனவே சாமம் என்பது இரவு அல்ல.

ஹேமா(சுவிஸ்) [இன்று மெயிலில் கிடைத்தது.]

Saturday, October 03, 2009

தந்தியோ தந்தி.

ன்றைய காலத்தில் இல்லாத ஒன்றாகப் போய்விட்டது தந்தி என்கிற அந்தச் சொல் கூட.இன்று SMS ,Mail போல் அன்றைய காலகட்டங்களில் தபால் கந்தோர்களில் மட்டும் அவசர செய்திகளைப் பரிமாறிக்கொள்ள இந்தத் தந்தி உதவிக்கொண்டிருந்தது என்கிறார்கள்.படித்துச் சுவைத்த ஒரு தந்தி தருகிறேன்.உங்களின் அனுபவங்களையோ கேட்ட அனுபவங்களையோ தாங்களேன் கொஞ்சம் சிரிக்க.

தபால் கந்தோரில் தந்திப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவருக்கு வேலை போய்விட்டதாம்.பின்ன...தந்தியைக் கீழ்க்கண்டபடி ஒருவரின் தந்தியை இன்னொருவருக்கு மாற்றி மாற்றி அடித்து அனுப்பினால் எப்படி...?நீங்களே தந்தியைச் சரி செய்து கொள்ளுங்கள்.

1) தந்தி - செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.இனிக் கடவுள்தான் உங்களைக் காப்பாற்றவேண்டும்.

பெற்றுக்கொள்பவர் - புதுமணத்தம்பதிகள்.

2) தந்தி - பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

பெற்றுக்கொள்பவர் - கல்லூரி மாணவன்.

3) தந்தி - பிரயாணத்தை ரத்துச் செய்யவும்.

பெற்றுக்கொள்பவர் - சாகக் கிடக்கும் ஒருவரைக் காப்பாற்றச் செல்லும் ஒரு வைத்தியர்.

4) தந்தி - வாழ்த்துக்கள்.இன்றுபோல் என்றும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பெற்றுக்கொள்பவர் - வியாபாரத்தில் நொடித்துக்கொண்டிருக்கும் ஒருவர்.

5) தந்தி - இனி எந்தவித ஒரு சதம் கூட என்னிடமிருந்து கிடைக்காது.உடனே கிளம்பி ஊருக்கு வரவும்.

பெற்றுக்கொள்பவர் - நடிகையை ஒப்பந்தம் செய்யப் போயிருக்கும் பிரபல பட இயக்குனரின் காரியதரிசி.


ன்னொரு செய்தியையும் இதோடு இணக்கிறேன்.அதுவும் படித்துச் சுவைத்தது.அந்தக் காலத்தில் பட்டிணத்தடிகள் தஞ்சை ஜில்லா ,திருவாரூரில் ஒரு இளைஞனுக்குத் திருமணம் நடந்தபோது தந்தி மூலமாக வாழ்த்துரை வழங்கியதைப் பாருங்கள்.

"நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலவனெல் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்.
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மறத்துணையிற் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கினைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே !"

பட்டிணத்தாருடைய வாழ்த்து எவ்வளவு பொருள் சுவையும் நகைச்சுவையும் அடங்கியிருக்கிறது.பாருங்களேன்.

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 24, 2009

ரசிக்கக் கொஞ்சம்.

கோலங்களா ! கம்பளங்களா !
எத்தனை கைகளின் கூட்டு முயற்சி ! எவ்வளவு அழகு !







Monday, September 21, 2009

ஆனந்தத் தோழமை.

ஏனோ இந்த வாரம் எனக்கு நட்பின் வாரமாக மனதில் ஒரு சங்கடம்.நட்பின் நினைவுகளும் நட்பின் வலிகளும் அடிக்கடி.அதனால் எல்லோரும் நட்பு பற்றிச் சொல்லியிருந்தாலும் என் மனதின் பதிவாக இந்தப் பதிவு.

நட்பு - தோழமை காதலை விடக் கொடியது.தோள் சாய்ந்து சுகம் கேட்டு எப்பவும் எதையோ தேடியபடிதான்.மித மிஞ்சிய எதிர்ப்பார்புக்களுடனும்.ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ளும்வரை தேடல் இருந்து கொண்டேயிருக்கும்.ஏற்றத் தாழ்வுகள்,சாதி,மதம், பணம்,தூரம்,தொலைவு எதுவுமே உண்மையான நட்பை எதுவும் செய்துவிடலாகாது. நட்பை இலக்கியங்களில்கூட பேசியிருக்கின்றன.என் நலனுக்காகவோ தன் நலனுக்காவோ ஒதுங்குவதும் நட்பாயில்லை.சுயநலத்திற்க்காக மட்டுமே உறவாடிப் பின் பிரிந்து நிற்பதும் நட்பல்ல.சூழ்நிலை தாண்டி சுடுசொற்கள் ஏந்தி அகலுக்குள் அடங்கிய தீபமாய் ஒளிர்வதே நட்பு.முதலில் நட்பின் மனதைப் படித்து உணர்ந்து உலகிற்கு நட்புப் பூக்களைத் தூவலாம்.

உயிருக்குச் சமனாக
என்னிடம் ஒன்று இருக்கிறது.
யாருக்கும் கொடுக்கச் சம்மதமில்லை.
பணத்திற்கும் விற்கமாட்டேன்.
உயிருக்கு உயிர் தருவேன்.

வாங்கிச் சிரித்தது ஒரு நட்பு.
என்னைப் புரியாமலே
உயிர் பிரித்துப் போனது.
வா ....
உன்னிடம் நான்
எதுவும் பேசப்போவது இல்லை.
இன்னும் காத்திருக்கிறேன்.
நட்பின் பூவோடு !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, September 14, 2009

பொழுது ஒன்று படைத்தவனோடு.

நான் : அடக் கடவுளே கடவுளே

கடவுள் : ஏய் பொண்ணு ஏன் எப்பவும் என்னைக் கூப்பிடுற.என்னைத் திட்டிக்கிட்டே இருக்கே நீ.ஏன் என்னாச்சு.நான் தான் கடவுள்.ரொம்ப காலம் உன் புலம்பல் எல்லாம் பாத்திட்டுத்தான் இப்போ வந்திருக்கேன்.சொல்லு உனக்கு என்ன வேணும்.எல்லாம் நான் தருவேன்.என்னால முடியாதது இந்த உலகத்தில ஒண்ணுமே இல்ல.

நான் : கடவுளா நீங்களா !அப்பிடின்னு ஒருதர் இருக்காரா.உங்களையாவது அதுவும் நான் கூப்பிடுறாதவது.அதுவும் இவ்ளோ திமிரோட.உங்களுக்கே இவ்ளோ திமிர்ன்னா பிறகு எப்பிடி நீங்க படைச்ச மனுஷன் மட்டும் சாதாரணமா இருப்பான்.என்னமோ எல்லாரும் கஸ்டம் வந்தா கடவுளேன்னு சொல்லுவாங்க அதான் நானும் சொல்லிட்டேன்.சத்தியமா இனிமேல் நான் அப்பிடி ஒரு வார்த்தையைச் சொல்லவே மாட்டேன்.தயவு செய்து போய்டுங்க.

கடவுள் : ஏம்மா இவ்ளோ கோவமா இருக்கே நீ.உன் பதிவெல்லாம் பாத்திட்டுத்தான் இருகேன்.எரிச்சல் கோவம்ன்னு வந்தவன் போனவன் ஒருத்தனையும் மிச்சம் விட்டு வைக்காம திட்டிட்டே இருக்க.அப்பிடி என்னதான் உன் மனசில எரிச்சல்.சொல்லு.கூப்பிட்ட குரலுக்கு வரணும்ங்கிறது என் பழக்கம்.கோவம் இல்லாமக் கொஞ்சம் பேசு பறவாயில்ல.மனசுக்கும ஆறுதலா இருக்கும்.உனக்கு ஏதாச்சும் குழப்பமிருந்தாலும் பகிர்ந்துக்கலாம்.வா...இங்க பக்கதில வா.

நான் : அடக் கடவுளே.எனக்கு உங்க கூடப் பேச எதுவுமில்ல.அதோட பிடிக்கல.எனக்கு நேரமும் இல்ல.மனசு அமைதி வேணும்ன்னா நிறையப் பாட்டுக் கேப்பேன்.எனக்கு மனசில படுறதை எல்லாம் எழுதுவேன்.இல்லாட்டி கண்ணை மூடிக்கிட்டு பேசாம படுத்திருப்பேன்.இப்போ நான் நிறைய அலுவலா இருகேன்.நின்மதியாவும் இருக்கேன்.உங்க கூடப் பேசினாத்தான் குழம்பிடுவேன்.எனக்கு நீங்க வேணாம் போயிடுங்க.

கடவுள் : சரி...சரி.நீ சொல்றதெல்லாம் நல்ல விஷயம்தான்.மனசை அமைதியா வச்சிருக்க நிறைய வழிகள் வச்சிருக்க.ஆனாலும் அலுவல் அலுவல்ன்னு சொல்ற.அப்பிடீனா...? அது என்ன உங்க ஊர் பாஷையா?

நான் : என்ன லொள்ளா?அது எங்கட யாப்பாணத் தமிழ்.உங்களுகுத் தெரியாட்டிப் போங்கோ.நானே வாழ்க்கை வெறுத்து சரி உயிர் இருக்கேன்னு வழ்க்கையோடயே சண்டை பிடிச்சு பிடிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.நீங்கவேற வந்து உயிரை எடுக்கிறீங்க.மனசில என்னமோ ஒரு அவதி.எல்லாம் இருந்தாலும் நின்மதி இல்லாம இருக்கேன்.எனக்கு முடியல கடவுளே.

கடவுள் : சரி ஹேமா யோசிக்காதீங்க.அழவேணாம்.என் கையை இறுக்கிப் பிடிச்சுக்கோங்க.தண்ணி கொஞ்சம் குடிங்க.நான் இருக்கேன்.சரியா.நீங்க சொல்லுங்க.சரி நான் கடவுள் இல்ல.உங்க சிநேகிதன்.உங்க கஸ்டத்தில நானும் பங்கு போட்டுக்கிறேன் சொல்லுங்க.முடிஞ்சா உதவியும் பண்றேன்.இப்பிடி வாங்க பக்கதில.

நான் : சரி நான் பக்கதில எல்லாம் வரல.என்னவோ உதவி பண்றதா சொல்றீங்க.காசு பணம் எதுவும் கேக்கமாட்டீங்கதானே.சரி... அப்படின்னா முதல்லே இதுக்குப் பதில் சொல்லுங்க .... இப்பெல்லாம் வாழ்க்கை ஏன் ஒரு பெரிய சிக்கலா இருக்கு? ஒவ்வொரு படியும் கஸ்டப்படுத்தான் ஏறவேண்டியிருக்கு.போராட்டமா இருக்கு.

கடவுள் : வாழ்க்கையைச் சும்மா அப்படியே விளையாட்டா வாழ்ந்து பாருங்க.ரொம்ப யோசிக்காமா அதைப் பத்தியே நினைச்சு குழப்பமாகாம அலசி ஆராயம விட்டுப் பாருங்க.வாழ்க்கை சுலபமா இருக்கும்.எந்த விஷயத்தையும் பெரிசா ஆக்கவேணாம்.எந்தக் கேள்விக்கும் பதில இருக்கிற மாதிரி வாழ்க்கைக்கும் வழி இருக்கு.

நான் : ஏன் தொடர்ந்த துன்பம் தொடர்ந்த பிரச்சனைகள்ன்னு சந்தோஷங்களைத் தொலைச்சிட்டு அவதிப்படுறோம்?

கடவுள் : இது முக்கியமான ஒண்ணு.வாழ்க்கையை பாத்துப் பயந்து பயந்து அதையே அலசி ஆராய்ஞ்சு கவலைப்படுறதே உங்க வாழ்க்கையா போகுது.அப்போ எப்பிடி சந்தோஷம் உங்க பக்கதில வரும்.முதல்ல சந்தோஷத்தை உங்க பக்கதில வர வழி விடுங்க.

நான் : ம்ம்ம்....நீங்க வேற.அடுத்த நிமிஷம் - அடுத்த வேளை என்ன நடக்கும்ன்னு எப்பிடி ஆகும்ன்னு உலகத்தில என்னென்னவோ எல்லாம் நடந்துகிட்டிருக்கு.எப்பிடி சந்தோஷமா எதையாவது பண்றது.நினைக்கவே பயமாயிருக்கு.

கடவுள் : பாருங்க ஹேமா ,ஒண்ணு ஆவுறதும் அழியறதும்ங்கிறது வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒண்ணு.அரசியலில இதெல்லாம் சகஜம்ன்னு சொல்றாப்போல இதுக்கெல்லாம் கவலைப்பட்டா...உங்களுக்குக் கிடைச்சிருக்கிற வாழ்க்கையைச் சரியாக்கிகிட்டு உங்களுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்துகிட்டு போய்கிட்டே இருங்க.

நான் : அட! என்ன கடவுளாரே மனசுக்கு எவ்ளோ கஸ்டமா இருக்கு.உலகம் இடிஞ்சு போகுதுன்னு சொல்றாங்க.இப்போ எல்லாம் ஏரோப்பிளேன் எல்லாம் கண்ட பாட்டுக்கு விழுந்து தொலையுது.எது எப்பிடின்னு எங்க என்ன நடக்குதுன்னு கவலையா இருக்குது.என்ன நீங்க ?

கடவுள் : வேதனை கவலை கஸ்டம் எல்லாம் இருக்கும்தான்.அது அப்ப வந்து அப்பவே போயிடணும்.உங்க மனசில நிலைச்சு நிக்ககிறதுதான் கூடாது.ஆனாலும் அது உங்க விருப்பம்.

நான் : அட என்னைய்யா நீங்க.கஸ்டம் கவலை எல்லாம் நம்ம நம்ம விருப்பம்ன்னா ஏன் நல்லவங்க ஒண்ணும் தெரியாத அப்பாவிங்க எல்லாம் கஸ்டப்படுறாங்க?சந்தோஷமும் எங்க விருப்பம்தானே?

கடவுள் : பாருங்க ஹேமா தங்கத்தைச் சுட்டாத்தான் அழகான நகைகளா ஆகுது.மண்ணைப் பிசைஞ்சு எடுத்து குயவன் சுத்தணும்.அப்பத்தான் அழகா குடம் ஆகும்.அப்பிடித்தா நல்லவங்களுக்கு நிறைய சோதனைகள் வரும்.ஆனா சுலபமா போய்டும்.கசப்பு மருந்து போலத்தான் அவங்க கஸ்டம்.குடிச்சா நோய் மாறிடும்.

நான் : அப்பிடின்ன கஸ்டங்கள் வேணுமா வாழ்க்கையில.அது ஒரு படிப்பினையாவும் இருக்கும்ன்னும் சொல்றீங்க.

கடவுள் : சரியாப் புரிஞ்சுகிட்டீங்க.வாழ்க்கையில பட்டுத் தெளியுறது இருக்கே அது போல ஒரு வாத்தியார் உங்களுக்குக் கிடைக்காது.முதல்ல சோதனையெல்லாம் வச்சு அப்புறம் அழகா பாடம் சொல்லித் தந்து உங்க குழப்பங்களைத் தெளிய வைப்பார் அந்த ஆசான்.

நான் : எல்லாம் சரிதான் ஏன் நாங்க அந்த பிரச்சனைகளுக்குள்ள எல்லாம் அகப்படாம இருக்க முடியாதா கடவுளே?

கடவுள் : பிரச்சினைகள்தான் உங்களுக்குப் பயன் தரும் பாடத்தைச் சொல்லித்தர வேணுங்கறதுக்காக உண்டாக்கப்பட்டத் தடைக் கற்கள்.அதனாலே உங்க மனவலிமை அதிகமாகும்.போராடவும் பொறுத்துக் கொள்ளவும் தெரிஞ்சா உங்க உள் மனசோட பலம் அதிகமாகும். பிரச்சினை இல்லாம இருந்தா இது நடக்காது. உங்களைப் பார்த்து உங்க பின்னாடி வளரும் இளம் சந்ததிகளும் பாடம் படிச்சுக்கும்.சரிதானே.

நான் : என்னவோ சொல்றீங்க.இவ்ளோ ஓடிட்டு இருக்கு உலகத்தில நான் எங்கே போறேன்னே தெரியாம ஓடிட்டு இருக்கேன்.பயமும் பைத்தியமும் பிடிச்சிருச்சுரும் போல இருக்கு எனக்கு.

கடவுள் : நீங்க வெளிப்படையாப் பாத்தீங்கன்னா எங்கே போறோம்னு உங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் மனசை ஒரு நிலைப்படுத்தி நினைச்சுப்பாருங்க! எங்கே போறோம்ன்னு தெரியும்.வெளிப் பார்வைக்கு அது ஒரு கனவு போலத்தான் இருக்கும்! விழிப்பாயிருங்க! கண்ணாலே பார்க்கத்தான் முடியும். இதயத்தாலே மட்டும்தான் உள்ளுணர்வு என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்!!

நான் : சில சமயம் சீக்கிரமா முன்னேற முடியல நினைச்சது நடக்கலங்கிறது சரியான வழிலே போலேங்கறத விட அதிகமா வலிக்குதே! என்ன செய்யறது?மத்தவங்க செய்ற தப்புக்கெல்லாம் கோவம் வருதே...ஏன்?

கடவுள் : முன்னேற்றம்ங்கிறது மத்தவங்க உங்க செயலோட பலன்களை எடை போடறது! திருப்தியா இருக்குதா இல்லயான்னு பாக்கிறது.நீங்க தீர்மானிக்கற விஷயம் என்னன்னா... எங்கே போறோம்னு தெரிஞ்சுக்கறது இன்னும் போய்க்கிட்டே இருக்கோமேங்கிறது சந்தோஷம் தர விஷயம் இல்லையா?மத்தவங்க எப்பிடியும் உங்களைக் கணக்குப் போடட்டும்.நீங்க உங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருங்க.திரும்பிப் பாத்தீங்கன்னா உங்களை நிறுத்திப் பேசிக்கிட்டே இருப்பாங்க.

ம்ம்ம்...மத்தவங்களை ஏன் நீங்க பாக்கிறீங்க.அதுவும் நீங்களே தேடிக்கிற ஒரு கஸ்டம்தான்.அதோட அதன் பலனை அவனே அனுபவிப்பான்.

நான் : அட என்னப்பா நீங்க! ரொம்பக் கஷ்டத்திலே இருக்கறப்போ எப்படி ஊக்கமா வேலை செய்ய முடியும்?எப்பிடி களைக்காம நடக்க முடியும்?அடுத்தவன் செய்ற அசிங்கங்கள் எங்களையும்தானே தாக்குது.எப்பிடி சும்மா இருக்கிறது.தப்புன்னாவது சொல்ல வேண்டாமா?

கடவுள் : எப்பவுமே எவ்வளவு தூரம் போயிருக்கோம் என்ன பண்ணியிருக்கோம்ன்னு பாக்காதீங்க. இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னும் பாக்காதீங்க!உங்களுக்குக் கிடைச்ச பலனைப் பாருங்க!உங்க கைவிட்டுப் போனதைப் பாக்காதீங்க!

அடுத்தவன் விஷயம் நீங்க சொல்றது சரிதான்.நீங்க கொஞ்சம் நின்மதியா இருக்கணும்ன்னா கண்ணைக் கொஞ்சம் மூடித்தான் ஆகணும்.

நான் : கடவுளே உங்களுக்கு மனுஷங்களைப் பார்த்தா ஆச்சரியமா அதிசயமா இருக்கா என்ன?

கடவுள் : ரொம்பவே இருக்கு! கஷ்டப்படற போது என்னப் பார்த்து “எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் அப்படின்னு கேட்கறவங்க சுகப்படற போது இது எப்பிடி எனக்குக் கிடைச்சதுன்னு " கேட்கறதேயில்ல.ஒரு நன்றி கூட இல்லையே.இது எனக்குப் புரியலே!எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு ஆசைப்படறாங்க! ஆனா உண்மை பக்கம் யாருமே இருக்க மாட்டேங்கறாங்க!

நான் : அட சில சமயம் நான் கூடத்தான் “நான் யாரு?” “ஏன் பொறந்தேன்?” இப்படின்னு கேட்கறேன்! இது வரைக்கும் பதிலே கிடைக்கல.

கடவுள் : நீங்க யாருன்னு கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படாதீங்க.ஆனா நீங்க யாரா இருக்கணும்னு தீர்மானிங்க.இங்கே ஏன் பொறந்தேன்னு கண்டுபிடிக்கறத விடுங்க! பொறந்ததுக்கான காரணத்தை ஆராய்ச்சி பண்றத நிறுத்துங்க!காரணத்தை நீங்களே உருவாக்குங்க.வாழ்க்கை காணாமப் போனதைக் கண்டுபிடிக்கறது இல்லே! புதுசா உருவாக்கறதுதான்! புரிஞ்சுக்கோங்க!

நான் : இவ்வளவெல்லாம் சொல்றீங்களே வாழ்க்கையைச் சிறப்பா வைச்சுக்கறது எப்படி?

கடவுள் : மறந்திடாம உங்களோட இறந்த காலத்தை வருத்தமில்லாம நினைச்சுப் பாருங்க.நிகழ்காலத்தைப் பொறுப்பா தன்னம்பிக்கையோட நடத்துங்க.எதிர்காலத்தை அச்சமில்லாம எதிர்கொள்ளுங்க¡ உங்க ஒவ்வொரு அடியும் சந்தோஷமா இருக்கும்.

நான் : கடைசியா ஒரு கேள்வி! சில சமயம் என் கேள்விகளுக்கெல்லாம் பதிலே இல்லைன்னு நினைக்கிறேன்? சரிதானா?

கடவுள் : இங்கே [வாழ்க்கையில] பதில் அளிக்கப்படாத கேள்விகளே இல்லை! சில கேள்விகளுக்குப் பதிலே இல்லைங்கறதுதான் உண்மை!!

நான் : நிறைய நன்றி கடவுளே !நிறையப் பிரயோசனமா இருந்தது.நான் இப்ப ரொம்பத் தெளிவா இருக்கேன்! ஒருவிதமான புத்துணர்ச்சியோட என் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன்! ஆமா நான் இத்தனை நேரம் உங்ககிட்ட சரியாப் பேசினேனா! விளங்கிச்சா! நான் ரொம்ப குழந்தைத்தனமா நடந்துக்கிட்ட மாதிரி இருக்கே!

கடவுள் : இது தெரிஞ்ச விஷயம்தானே! தப்பு செய்யறதும் உடனே வருந்துறதும் மனுஷங்களுக்கு இயல்பான ஒண்ணுதானே!உங்களை எல்லாம் குழந்தைகள் அப்படின்னு சொன்னாதான் நான் கடவுளா இருப்பேன்.
குழந்தைகள் செய்யற தப்பெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கறது இல்ல!

“ உங்களில உங்க வாழ்க்கையில நம்பிக்கை வையுங்க! நல்லதே நடக்கும்!
அச்சத்தை விடுங்க! ஆக்கம் தானே வரும்!

உங்க சந்தேகத்தை எல்லாம் நம்பாதீங்க! உங்க நம்பிக்கை பேர்லே சந்தேகப்படாதீங்க!வாழ்க்கை ஒரு புதிர்தான்! விடுவிக்கலாம்! பிரச்சினையே இல்ல. தீர்ந்திடும்!

என் பேர்ல நம்பிக்கை வையுங்க!எப்பவும் நண்பனாய் கூடவே இருப்பேன்!!
எப்படி வாழணும்னு தெரிஞ்சா உங்க வாழ்க்கை ரொமப அற்புதமானது! தெரிஞ்சுக்கறதுக்கு முயலுங்க!

பெரிய சாதனை எல்லாம் வலிமையால சாதிக்கல! விடாமுயற்சியாலதான் சாதிச்சிருக்காங்க! நீங்களும் சாதியுங்க! சந்தோஷமா இருங்க! ”

இப்போதைக்கு அவ்வளவுதான்; மறுபடியும் கூப்பிடுங்க.அப்ப நான் வருவேன்.போய்ட்டு வரவா !

ஹேமா(சுவிஸ்) [வாசித்ததும் பகிர்ந்துகொண்டதும்.]

Monday, September 07, 2009

இருவர் தொடரோடு...நான்.

நானும் ஒரு ஆள் என்று தொடர் பதிவுக்கு அழைத்த அபூ வுக்கு நன்றியும் நிறைவான திட்டலும்.இவரோடு பெருமாளும் இதே அகர வரிசையில் வித்தியாசமான சொல்லாடலோடு அழைத்திருக்கிறார்.இருவரையும் திட்டிக்கொண்டே...பெருமாள் நான் ஆங்கிலத்தைத் தவிர்த்துக் கொள்கிறேன்.இத்தொடரைத் தொடர்பவர்கள் [A-Z]ஆங்கிலத்தைத் தொடர்ந்து கொள்வார்கள்.

ட்டகாசம் பண்ணியது : அட்டகாசம் பண்ண்னினதே இல்லையாம்.அம்மா அடிக்கடி சொல்லுவா.

ன்புக்குரியவர்கள் : அநேகமாக என்னோடு பழகுபவர்கள் எல்லோருமே.


ள் மாறாட்டம் : சின்ன வயசில இரத்தினபுரி(டேனாக்கந்த)யில இருக்கேக்க ஒரு நத்தார் கொண்டாடத்தின்போது மாறுவேஷம் போட்டது.முருகனாய்.

சைக்குரியவர் : அப்பா

ன்பமான செய்தி : நீ காதலிக்கலாம் தப்பே இல்லை.என்று வீட்டில சொன்னபோது.ஆனா...எண்டு பிறகு இழுத்துச் சொன்னதெல்லாம் இங்கே வேண்டாம்.

லவசமாய் கிடைப்பது : கண்ணீர்

யென பல்லிளித்து : ஏதாவது தேவைக்கு அப்பா அம்மாவிடம் மட்டும்தான்.இப்போ அதுவும் இல்லை.நானே எனக்கு எஜமானி.

தலில் சிறந்தது : கல்வி கொடுப்பது.

ணர்வுகள் அழுதது : ம்ம்ம்....எத்தனையோ தடவைகள்.சொல்லி அளவில்லை.
முந்தைநாள் இங்கு என் ஊரில் பக்கத்து வீட்டு உறவொன்று மன அழுத்தம் தாங்காமல் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது.(31.08.2009)

லகத்தில் பயப்படுவது : வதந்திக்கு.

னமாய் நின்றது : அப்பா அம்மாவை விட்டு அகதியாய் வெளிநாடு வந்தபோது.போகமாட்டேன் என்று நினைத்தாலும் முடியாமல் வந்தது.

மை கண்ட கனவு : சொல்ல முயற்சிப்பதே வாழ்வின் வெற்றி.

ன்ன கற்பனை : கற்பனைகளை அழித்துவிட்டே அதன்மேலேயே வாழ்வு போய்க்கொண்டிருக்கு.

ப்போதும் உடனிருப்பது : எனக்குள் நான் மாறாமல்.

ழைகள் பற்றி : அவர்களைக்கூட இப்போ நம்பமுடியவில்லை.உண்மை இல்லை.சிலரிடம் சோம்பேறித்தனம் அதிகம்.முயற்சி இல்லை.முயற்சி இருந்தால் உதவி செய்வேன்.செய்தும் இருக்கிறேன்.

ன் இந்தப் பதிவு : அபூவின் அன்புக்கும் பெருமாளின் அன்புக்கும் கட்டுப்பட்டு.

க்கியம் : பாசமும் அக்கறையும் அது நாடாக இருக்கலாம் வீடாக இருக்கலாம்.இறுக்கமாகவும் உண்மையாகவும் இருக்கவேணும்.

ஸ்வர்யத்தில் சிறந்தது : பொறுமை.

துங்கி நின்றது : எதிலுமே எப்பவுமே ஒதுங்கியே இருப்பேன்.பாசம் காட்டுபவர் மனதில் ஒதுங்க ஆசை.

ரு ரகசியம் : ஆசை தோசை...சொல்லவே மாட்டேன்.

லையின் கீற்றுக்கள் : எங்கள் வறுமைக் காலத்தில் கூரையாய் இருந்து நிழல் தந்த தோழி.

சையில் பிடித்தது : இரவில் வீணை இசை.

ஒளடதம் : அப்பா

வை மொழி ஒன்று : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

: சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள்வது.
எனக்கென்ன என்றாலும் கடிந்துகொள்வேன்.

(அ)றிணையில் பிடித்தது : நன்றியுள்ள பாசமான மிருகங்கள் எல்லாமே.


தொடரைத் தொடர.....

அண்ணாதுரை - அழுத்தத்தின் அதிர்வுகள்.

சத்ரியன் - மனவிழி.

முனியப்பன் - முனியப்பன் பக்கங்கள்.

தமிழ்ப்பறவை - வானம் வசப்படும்.

கடையம் ஆனந்த் - மனம்.

ராஜாராம் - கருவேல நிழல்.

வேல்கண்ணன் - வேல் கண்ணன்.

ஜெரி ஈசானந்தா - ஒருமை

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP