Monday, April 18, 2011

பெண் எழுத்து.

அதென்ன பெண் எழுத்து ஆண் எழுத்து.பிரித்து வைத்துச் சொல்லும்போதே கவனமாய் எழுது என்று கொஞ்சம் அதட்டி மிரட்டிச் சொல்வதாகவே இருக்கிறது.எழுத்து என்பதைப் பொதுவாகப் பார்த்திருந்தால் பெண் எழுத்து ஆண் எழுத்து என்கிற பிரித்துச் சொல்லவே வந்திருக்காதே.இந்தத் தலையங்கங்கத்தை ஆமோதித்து எழுத வந்தபோதே எங்கள் பலஹீனத்தை ஓரளவு ஒப்புக்கொண்டமாதிரித்தான்.

பெண் ஆண் என்று பிரித்துச் சொல்வதே பிடிக்கவில்லை.முட்டாள் தனம்.ஆனால் என்ன செய்ய...எங்காவது ஒரு சில விதிவிலக்குகள் தவிர வேத காலம் முதலாக பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.

நன்றி ஆயிஷா.தொடர் பதிவுகளில் அவ்வளவு நாட்டமில்லை என்றாலும் அன்பான அழைப்புக்கும் சொல்லவேண்டிய சில விஷயங்களுக்காகவுமே எழுத நினைக்கிறேன்.எழுதத் தந்த தலைப்பிற்கும் என் மனஆதங்கமும் ஒத்துப்போகிறதோ தெரியவில்லை.என்றாலும்......நன்றி தோழி.

பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.அதாவது ஆண் பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம்.பெண் எழுத்துக்கு தனிப் பண்பு உண்டு.பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம்.

ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.இதை எழுத ஆண் பெண் என்கிற பேதம் எதற்கு.நடந்ததை நடந்ததாக எழுத உணர்வே முக்கியம்.எதையாவது ஒரு நிகழ்வை எழுதும்போது அகத்தோற்றம் மட்டுமல்ல.புறத்தோற்றத்தையும் தேடுதல் அவசியம்.அங்கு ஒரே இருளாகத்தான் இருக்கும்.அந்த இருள்தான் ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்தி நிற்கிறது.

வாழ்க்கை கொடுக்கும் புதிர்களுக்குப் பதில் தேட இருக்கும் நிறைய வழிகளில் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது. இருளுக்குள் பயங்கரமும் இருக்கலாம்.பாலுணர்வும் இருக்கலாம். பயமும் சரி பாலுணர்வும்சரி பெண்ணின் எழுத்தைக் கொஞ்சம் பின்னிழுக்க வைக்கிறது.ஒரு ஆண் இரத்தமும் சதையுமாய் பிண்டமாய்க் கிடக்கும் கலந்து கதை பேசி துணிச்சலாய் எழுதக்கூடியவன்.பெண்ணாலும் முடியும் என்றாலும் ஓரளவோடு சோர்ந்துபோகிறாள். பாலுணர்வை சில அசிங்கங்களை எழுத நினைத்தாலும் எழுதிவிட்டு அதைப் பகிர்ந்துகொள்ளாமலே இருக்கிறாள்....இருக்கிறேன்.

ஆயிஷா சொன்னதுபோல ஆண்கள் எதையும் கூச்சமில்லாமல் துணிச்சலோடு எழுதும் உரிமை சுதந்திரம் எனக்கில்லை.இங்குதான் பெண் எழுத்து அடிபட்டுப்போகிறது.சின்னச் சின்னச் சொற்களைச் சேர்த்தாலே விரசமாகக் கவனிக்கப்பட்டு "ஐயோ ஏன் ஹேமா இப்படி எழுதவேணாம்" என்று அன்போடு அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்.ஆனாலும் சொல்லவேண்டியதைச் சொல்லியே ஆகவேண்டும் என்று குட்டி ரேவதி,லீலா மணிமேகலை போன்றவர்கள் சொல்லிகொண்டேதான் வருகிறார்கள்.

முதலில் ஒரு படைப்பை வைத்து எந்தப் பொதுப்படையான தீர்மானத்துக்கும் வரமுடியாது வரவும்கூடாது.கருவும் சிந்தனையும் எண்ணப் போக்குகளும் உலகப்பொதுவானவை.பெண்கள் முழுக்க முழுக்க பலவீனமானவர்கள் மட்டுமே அல்ல.எல்லா மனிதர்களுக்கும் உள்ள பலவீனங்கள்தான் இவர்களுக்கும்.ஆனால் அவற்றிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறோம்.அதற்கான பாதையைத் தேடுகிறோம் முடியும் என்கிற நம்பிக்கையோடு.

மரணம் என்பது கொடுமை.ஒரு இழப்பு.தன் வாழ்வில் ஒரு மரணத்தைத் தொடர்ந்த அடுத்த நாள் வாழ்வுக்கு ஒரு பெண் தயாராகும் போதும் துளியளவான நம்பிக்கை அரும்புவதை பார்க்க முடியும்.பெண்களின் கண்ணீர் வெறும் சோகத்தின் அடையாளமாக மட்டும் இருந்துவிட முடியாது.ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கும்.சுயம் இருக்கும்.வாழ்க்கையும் வாழும் சூழலும் சமூகமும் அந்தச் சுயத்தையும் இயல்பான அடையாளங்களை மெல்லச் சிதைக்கின்றன.அல்லது சிதையச்செய்கின்றன பயத்தால் சிலநேரங்களில் நாமே அழித்துக்கொள்கிறோம்.

வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென ஏதும் இருப்பதில்லை.உணர்ச்சி என்பதே மாறக்கூடியதுதான்.என் சிறுவயதுத் தோழி ஒரு போராளியின் தங்கை.அண்ணா அடிக்கடி காணாமல் போகிறார்.அம்மா அழுகிறா.என்று நிறையச்சொல்லுவாள். விருப்பமில்லாவிட்டாலும் அவளின் சிநேகம் தொடர்ந்தது.ஆனாலும் நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.ஏனென்றால் அந்த வீரம் பயந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

இந்தப் பயத்தில் புதைந்துள்ள சின்ன தைரியம்தான் நான்.என் எழுத்துக்கள்.ஆனாலும் இன்னும் துணிச்சல் போதாது.இதுபோல இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும்,புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும்,அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் தேவை வாழ்வின் வளர்ச்சிக்கு.எங்களுக்கு முன்னால் ஒரு சிறு கோடு போட்டுக்கொண்டு சொல்ல வேண்டியதை எழுத்தில் சொல்வோம்.முரண் இல்லாமல் சொல்வோம்.வக்கிரமில்லாமல் மென்மையாகச் சொல்வோம்.ஆண்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது.இது பாஸ்கலின் தத்துவம்.மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது.அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள்.இங்கு நான்(ம்) எழுத்தில்...!

"ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்."

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP