Monday, December 21, 2009

ஓகே...ரெடி...யூட்...!

ந்தப் படம் உங்கள் மனதில் என்ன தோற்றுவிக்கிறது.சொல்லுங்கள்.கவிதை வரிகளாக.அல்லது கதையாக.நிறைய நாளாச்சு.படத்துக்குக் கவிதை எழுதி.முன்பெல்லாம் கடையம் ஆனந்த அடிக்கடி படம் தந்து கவிதை கேட்பார்.இப்போ அவர் ரொம்ப பிஸியாம்.அதுதான் எனக்கு அந்த நினைவு வந்தாச்சு.பார்க்கலாம்.நானும் எழுதறேன்.ஓகே...ரெடி...யூட்...!

[நேரக் குறைச்சலால் திடீர்ப் பதிவு.]

ஹேமா(சுவிஸ்)

ஸ்ரீராம்
********

விளையாடுன்னு சொல்லி
பொம்மையைக் கொடுத்தாங்க.
ஆமாம், விளையாட்டுன்னா என்ன?"

"மனிதர்களை
பொம்மையாக மதிக்கும் உலகில்
பொம்மையை வைத்துக் கொண்டு
நான் என்ன செய்வது?"

தமிழுதயம்
**************

தூக்கப்படுவது
குழந்தை பொம்மையாக இருந்தாலும்,
அதை தூக்கும் முறை சரியில்ல.
குழந்தைய இப்படி தூக்குவோம்மா.
பொம்மையாக இருந்தாலும்-
நான் குழந்தையாகவே பார்க்கிறேன் !

ஸ்டார்ஜன்
**************
அன்பே உன்னாலே

நானும் மறந்தேன்

நினைப்பதற்காக

உன்

மறு வருகை எப்போ !!


துபாய் ராஜா
*****************

1)
குழந்தை கை
பொம்மை போல்
குலுக்குகிறாய்
என் மனதை...

அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய் உயிரெ(ல்)லாம்,
என் உணர்வெ(ல்)லாம்...

2)
காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு

கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.

3)
காதல் விளையாட்டில்
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை

கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.

4)
ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...

ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....

- இரவீ -
************
ருத்ர காளி:
**************

வரண்ட வாடை காற்றின் வேகம் அதிகரித்த அந்தி நேரம்.அலையின் சல சலப்பு அந்தகார இருளை வரவேற்றபடி இருக்க ஒற்றையடி பயணமானாள் வேம்பு.காலத்தின் கோலமா - அவசரத்தின் அல்லோகலமா தெரியாது.அவளது முடிவை நோக்கிய முடிவான பயணம் அது.

அவளின் ஆழ்ந்த பெருமூச்சு.நடையின் வேகமா இல்லை அலையின் ஓலமோ என இனம்கானமுடியா வெப்பமாய்.கோபத்தின் உச்சத்தில் அவள் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருக்க இலக்கை அடையும் வேகம் நடையின் ஒவ்வோரு வினாடியும் கூடிக்கொண்டே இருந்தது.இன்னும் சில வினாடிதான்.அவள் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஒற்றைப் பனை மரம்.அதை ஒட்டிப் பாழடைந்தது தெரியாமல் இருக்க அவசரமாய் கூரை வேயப்பட்ட மண்டபம் - நெஞ்சு படபடக்க மண்டபம் நெருங்கலானாள்.பதைபதைப்பு தொத்திக்கொன்டது - அவளின் இதயத் துடிப்புக் குறைவதை அவளே கேட்க முடிந்தது.மெல்ல அடிமீது அடிவைத்து நெருங்கலானாள்.

காலில் சில்லென ஏதோ தட்டுப்படக் கீழே கூர்ந்து கவனித்தாள்.பூக்கள் மற்றும் தென்னங்குருத்தோலை அந்த மண்டபம் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.மனதை ஆசுவாசப்படுத்த முயன்று கவலை தொத்திக் கொண்டதை உணர்ந்தாள்.வந்த நோக்கம் நிறைவேறாதோ என்ற கவலையும் கூடிக்கொண்டது.

மண்டபத்தின் மதிலை நெருங்கிய நேரம்.காலில் கடினமாய் ஏதோ தட்டுப்பட்டது.இதயத் துடிப்பை நிறுத்திக் கூர்ந்து கவனித்தாள்.பளிச்சிட்ட ஒளியாய் அவள் கண்ணின் முன் பொம்மி வந்து போனாள்.ருத்ர காளி வேஷம் போட வேல்கம்பு கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருட்டறையில் கோவித்து நின்றது நியாபகம் வர சிரித்துக் கொண்டே முன்னே இருந்த உடைந்த காவடியில் சொருகி இருந்த வேல்க்கம்பை கையில் எடுத்து முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு வீடு திரும்பினாள்.


ஜெயா
********
கண்மணியே கோவம் ஏன்?
கையில் உள்ள பொம்மை மீதா,
இல்லை....
அதை தந்து விளையாடச்சொன்ன
அன்னை மீதா
உங்க கோவம்?
ஏக்கம் வேண்டாம் செல்லமே,
கோபத்திலும் நீங்க அழகுதான்,
சிரியுங்க....சிரியுங்க
அட சிரியுங்க ****


ஹேமா
**********

உடையில்லா பொம்மை.
அழகிய உடையில்
கோபக் குழந்தை.

குனிந்த முகத்தில்
அழுகையா வெறுப்பா ?

முடியில்...
முத்தால் சோடனை.
பொம்மைக்கும் உடை.
பஞ்சுப் பாதம்
மண்ணில் படாமல்
பவளத்தால் ரதமும் இங்கே.

இல்லாத அம்(ப்)மா(பா)வை
கூட்டி வா என்றால்
எங்கே போவேன் நான் !


Thamizhan
************

அன்னை பூடேயின்
அற்புத வண்ணம் !
களங்கமான உலகில்
கலங்கிய தனிமை!
கையிலே பொம்மை
நெஞ்சிலோ வெறுமை!


பித்தனின் வாக்கு
********************

கோபம் என்பது பாவம் குழந்தாய்
அது வாளில்லா கத்தி போல
சிரித்து மகிழும் உன் முகம்
கறுத்துத் தொங்கியது ஏன்,

ஆத்திரம் என்பது வாழ்வை அழிக்கும்
உன் கையில் உள்ள பொம்மையப் போல
துக்கம் என்பது மகிழ்வைக் கொடுக்கும்
உன் குனிந்த தலை போல.

அக்பர்
*******


பொம்மையை

கையில் திணித்து

என் சந்தோசத்தை

திருடிக்கொண்டு

போனது யார்?


கடையம் ஆனந்த்
********************

1)
யுத்த பூமியில்
விளையாட தலைகள் உண்டு
குனிந்து பார் கண்ணே!


உன்னை இங்கே விட்டு செல்ல
மனமில்லை எனக்கு!

அழைத்து போகவும் வழியில்லை
திக்கற்றவளா நான்...

கண்கள் முடி அழுகிறேன்
கண்ணே போதும் வந்து விடு!

2)
அடங்கவில்லை
பழி தீர்த்த பிறகும்!

8-வது பிறப்பு நீ
கம்ஷன் துரத்துகிறhன்
ஓடிடுவோம்...வா!

ரத்தம் வாடை அடிக்கிறது
இந்த பூமியில்...!

இங்கே நீ பிஞ்சு
எனக்கு நீ நச்சு-என்று
கொக்கரிக்கின்ற கூட்டத்தில்
உன்னை விட்டு செல்ல மனமில்லை

வா...
வந்து விடு....

கலா
******

என் நாட்டு ஒளிவழியில்
இப்படிப் பார்த்தாய்!
பக்கவாட்டில்...
ஒத்தைக் கையால் தூக்கி
உயிர் உள்ள குழந்தைகளைக்
தூரமாய் எறியும் காட்சியை

ஓ..ஓ.. புரிகிறது

இதைத் தான் கண் பார்த்தால்
கை செய்யும் என்பார்களோ!

பார்த்தவுடன்....
பரீட்சித்துப் பார்க்க
இவள் பொம்மையைத்
தூக்கினாள் .....

தூக்கிப் போடும் முன்னே
பார்த்து நினைவுக்கு வர...
பேதலித்துப் போனாளிவள் !


S.A. நவாஸுதீன்
*******************

பெற்றவர்கள் கல்யாணம்
பொம்மை கல்யாணமாய்
பிள்ளை இவளுக்கோ
உண்ணவும்
உறங்க மடியும்
உதவிக்கு சில கதையுமின்றி
வெறும் பொம்மை மட்டுமே
துணையாய் !


கவிதை(கள்)
***************

ராவில் கைப்பிடித்து
காதருகில் கதைபேசி
புகலிடம் தேடா
புதுயுக பொம்மை
தலைகீழாய்
என் வாழ்வைப்போல ...........


ராஜவம்சம்
*************

பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா

ஏதாயினும் வீறுகொள்
நீ வாழப்பிறந்தவள் அல்ல
நம் மண்ணை ஆளப்பிறந்தவள்

உன் கையின் இறுக்கம்
மனத்திடத்தை பறைசாற்றுகிறது
குனிந்து நிற்பது
கோழைத்தனம் மட்டும் அல்ல
பெண் அடிமைத்தனமும் கூட

நிமிர்ந்து நில்
தெளிவாயிரு
நாளைய உலகம் உன் கையில் !


நட்புடன் ஜமால்
*******************

சிரித்த முகத்துடன்
செயலிழந்து கிடக்கின்றாயே
என் ஈழத்து உறவுகள் போல் !

(குழந்தை பொம்மையை பார்த்து சொல்வது)

தியாவின் பேனா
********************

(விழி ... நிமிர்...நட...)

விளையாட்டுப் பொம்மையை
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???

உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???

ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???

அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.



பலா பட்டறை
*****************

கையில் இரை இருந்தும்
இருபக்கமும் பல் காட்டும்
மந்தி கூட்டம்
கண்டு

உயிர்குழந்தையுனை
தவிக்கவிட்ட
பெரிய குழந்தைகள் அறியுமோ??
பொம்மை எனினும் பத்திரமாய்
நீ காத்த
உன் கை குழந்தை..

ருத்ர வீணை
****************
ஒதுக்கபட்டவள்

சீவி முடி முடிந்து
சிங்கார சிலை போல
காணும் எவர் மனதும்
கவி பாடு - என தோன்றும்

பாவி எவன் மனதும்
பாசம் வைக்கும் போது - வந்து
வேண்டி தொடர்பறுக்கும்
நேசமறு யோசனையில்

பூசி மொழுகி தினம்
புன்னகையில் நிறுத்திவிட
மூடிக் கிடக்குதொரு
முக்காடு மாயன் - மனத்தில்

தேடி கிடைக்குமொரு
திருநாளில் எனப்பார்த்தால்
மேவி மனமுழுதும்
மெத்தனமே - நிறைந்துவிடும்

காற்றும் நின்றுவிடும்
காலமது வந்துவிடும்
வாடி விழுந்ததலை
விண்நோக்கி நிமிர்ந்துவிட்டால்

தேடி வசைமொழிவேன்
வாயடிக்கும் கூட்டத்தினை
கூடி ஒழிதிடுவேன்
கூறு அற்ற வார்த்தைகளை

நாடி நீ வந்து
பூவுலகில் விழுந்த நொடி
மாறிவிட்டதென்று உன்னை
பெற்ற கை உதறியதால்
காரிருள் கண்மறைத்த
காயமது பேயுனக்கு

நேசி நின் திருவுளத்தை
நின்பால் நானிருப்பேன்
பாடம் இதுவென்று
பொம்மையிடம் சொல்லிவிடு...


அரங்கப்பெருமாள்
*********************

”இயலாமை"

நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.
வெறுக்கும் போது என்னை
அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன.

நான் விரும்பும் அந்தச் சித்திரப் பாவை போல.
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.
எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது
எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என அறிந்ததாலோ என்னவோ?

இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
எண்ணங்கள் கவிழ்ந்து நிற்கின்றன.
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.

வாசகனாய் ஒரு கவிஞன்
பனித்துளி சங்கர்
*******************************
எப்பொழுதோ உன்னை பிரிந்துவிட்டேன்.
இருந்தும் உன் நினைவாக
நீ வாங்கித் தந்த இந்த பொம்மையின்
கரம் பிடிக்கும் பொழுதெல்லாம்
ஏனோ தெரியவில்லை.
எனது விழிகள்
என் அனுமதி இன்றி வெக்கதில்
தானாக தலை குனிந்துகொள்கிறது.


SUFFIX
********
உடைந்த பொம்மை
கிடைத்த்தது வழியில்
பத்திரமாய் என்னிடம்

உடைந்த மனது
குனிந்த தலை
தேற்றிடுவார் யாரோ!!

Thursday, December 10, 2009

உறவு தேடும் உள்ளம் 2

ஹேமா கதையை அழகுபடுத்தேல்ல மெருகாக்கேல்ல எண்டு குறை சொல்றீங்கள்.நானே அப்படித்தான் இருக்கிறன்.என்னைப்பற்றி இனி நானே என் மனதை அப்படியே பகிரப்போறன் உங்களோட.
இது என்னை நானே விமர்சிக்கும் ஒரு சந்தர்ப்பம்.வலி இருந்தாலும் சொல்லியே ஆகவேணும்.இங்க உங்களிட்ட நான் அனுதாபம் தேடேல்ல.சொல்றதால ஒரு ஆறுதல் தேடிக்கொள்றன்.அவ்வளவும்தான்.

நான் ஊனம் என்று சொல்லுமளவிற்கு கையோ காலோ முடம் எண்டில்லை.நான் என் அப்பாவின் உருவம் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவா.அப்படியே அவரை உரித்து வைத்துபோல பெண் உருவமாய் உலாவுறன் எண்டும் சொல்லுவா.வயதிற்கேற்ற தோற்றமில்லாமல் உயரம் குறைவாய் கட்டையாய் மிகவும் கட்டையாய் பிறந்திட்டன்.சரி அதுதான் பரவாயில்லை எண்டால் கையும் காலும் உருவத்திற்கேற்றபடி இல்லாமல் மிகவும் குள்ளமாய் சின்னதாய் உருவத்திற்குச் சமபந்தமில்லாமல் இருக்கு.ஏதோ ஒரு விகார நிலை என்னில் எனக்கே தெரியுது.மற்றும்படி உள்ளத்தில் உணர்வில் ஒற்றுமையில் ஒன்றும் குறைவில்லாமயே இருக்கிறன் நான்.நான் ஒரு வயோதிபர்களைப் பராமரிக்கும் வைத்தியசாலையில் தாதியாகவும் வேலை செய்யிறன்.மற்றவையளைளைப் போலவே என்னாலும் இயங்க முடியுது.இதுதவிர உங்களுக்கும் எனக்குமிடைல வேறு எந்த வித்தியாசமும் இல்லை.ஓரளவு ஆங்கில அறிவோட எனக்கு எட்டின வரைக்கும் படிச்சும் இருக்கிறன்.

இந்தக் குறைபாடு எனக்குள்ள எப்பவும் பிரச்சனை.தாழ்வு மனப்பான்மை எண்டே சொல்லுவீங்கள்.அப்பிடித்தான்.இது மனசுக்குள்ள வாட்டுறதாலதான் சிவா என்னை விரும்புறதாச் சொன்னதும் நான் தள்ளி நிண்டன்.ஆனாலும் உள்மனசில கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல யாருமே உறவென்று இல்லாத இந்த நாட்டில் பாதுகாப்பென்ற துடுப்பாக சிவாவைக் கண்டன்.அடிக்க அடிக்க அம்மியும் நகருமாம் என்பதைப்போல சிவா நாளுக்கு நாள் என்னைத் தன்ர பக்கமாக்கிக்கொண்டார்.

அதுக்குப் பிறகு ஒருத்தருக்கொருத்தர் மனச்சாட்சிப்படி உறுதி எடுத்துக்கொண்டு ஆண்டவனின் சாட்சியோடும் வாழத்தொடங்கினம்.நானோ சிவாவோ சட்டப்படி திருமண எழுத்து எழுதவேணும் என்று நினைக்கவேயில்லை.நான் எப்போவாவது நினைக்கும் அளவிற்கு சிவா சந்தேகத்திடமாக நடக்கவுமில்லை.8 வருட காலம் ஜேர்மனியிலேயே வாழ்ந்தும் வந்தம். அங்கயிருந்து சிவாவின் சில தெரிந்தவர்களின் சில சுடுசொற்களாலும் சில சூழ்நிலைகளாலும் சுவிஸ் வரவேண்டியதாப்போச்சு.

சிவா என்னை விட்டுப் போனவர்தான்.போயேவிட்டார்.காத்துக் கிடக்கிறது மட்டுமே மீதமாய் அருகில கிடக்கு.இப்போ எனக்கு 40ன் வருசமாச்சு இப்ப.இளமை என்னை விட்டு மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருக்கு.இப்பவெல்லாம் தனிமையின் கொடுமை என்னை வதைக்குது பயம்காட்டுது.கட்டிலுக்குக் கீழயும் குளியலறைத் தொட்டியிலயும் படுத்துக் கொண்டிருக்கு.

அயர்ந்து களைச்சு வீடு திரும்பேக்க அன்புக்கும் அரவணைப்புக்குமாய் யாராவது இருப்பினமோ எண்டு மனம் தேடுது.என்னால முடிஞ்ச மட்டும் நிறையவே அழுகிறன்.சிவாவை இப்போதும் தேடுறன்.வாற தொலைபேசி அழைப்புக்குள்ளயும் தபால் பெட்டிக்குள்ள கிடக்கிற கடிதங்களுக்குள்ளயும் ஒரு எழுத்தில ,ஒரு சொல்லில ,ஒரு குரலில சிவா என்கிற அந்த வரத்தை இன்னும் தேடுறன்.அறிஞ்சு தெரிஞ்சவைக்குப் பதில் சொல்லத் தெரியேல்ல.வெக்கமாவும் கிடக்கு.

அதோட இன்னொண்டு.இப்பவெல்லாம் குழந்தை என்கிற ஒரு பூ என் மனக் கண்ணில் வாசம் வீசிப் போகுது.அங்கயும் என்னையே நொந்துகொள்றன்.இரண்டுமுறை சந்தர்ப்பம் கிடைத்தும் இப்போ வேணாம் எண்டு நானும் சம்மதித்தே தள்ளிப்போட்டன்.இப்ப அதின்ர ஏக்கம் கனக்கவா(அதிகமா)என்னை உலைக்குது.

சிவாவோடு வாழ்ந்த காலத்திலயே இந்த ஏக்கம் எனக்குள்ள இருந்தே வந்தது.முறையாகக் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எண்டு சொல்லித்தான் அவரே எனக்கொரு குழந்தையாய் இருந்து வந்தார் என் சிவா.நானும் ஒத்துக்கொண்டன்.அதோடு உள்ளுக்குள்ள ஒரு பயமும் எனக்கிருந்தது.அப்பாபோல நான் இருக்கிறன்.சிலவேளை என்னைப்போலவே என் குழந்தையும் இருந்திட்டால்...!

அவர் இருக்கேக்க இல்லாத தாக்கம் அதிகமா இப்ப எனக்குள்ள.அவரைத்தவிர ஆருமேயில்லாத உலகத்துள்ள வாழ்ந்து பழக்கப்பட்டுட்டன்.வெளிவரப் பயமாவும் மிரட்டலாவும் தெரியுது.அன்புக்காக ஏங்குற என் பலகீனத்தை அவர் நல்லாப் பாவிச்சிருக்கிறார்.நான் அவரை கடவுளின் இடத்தில வச்சுக் கும்பிட்டு என்னையே மறந்திருந்தன்.கடவுளும் அவருமாச் சேர்ந்து என்னை ஏமாத்திப்போட்டினம்.இப்ப காலம் கடந்திட்டுது.அடுத்தவையளைக் காணேக்க உறவுகளின்ர ஏக்கமமும் தப்பிப் போன காலங்களையும் நினைச்சு ஏங்குறன்.

என்னோட ஒண்டா ஜேர்மன்ல இருந்த சிநேகிதி ஒருத்திதான் என்னை அடிக்கடி ஆறுதல் படுத்தும் ஜீவனாய் இருக்கிறாள்.அவள் என்னை மெதுவாய் என் எதிர்காலம் பற்றிச் சொல்லி சொல்லி எப்போதும் என்னை மாத்த முயற்சிக்கிறாள்.

"மதி சிவாவுக்காக நீ காத்திருந்தது போதும்.நாலு வருசமாப் போச்சு ஒண்டுமே தெரியேல்ல.உனக்கு வயசும் போய்க்கொண்டிருக்கு.நீ சிவாவுக்காகக் காத்திருக்கலாம்.காலம் யாருக்காகவும் காத்திருக்காது.உனக்கெண்டு யாருமே பக்கதில இல்ல.உன்ர நிலைமையை நினைச்சு நீயும் யாரோடயும் பழகுறதுமில்ல.நீ இப்பிடியே இருக்கிறது எனக்கு மனசுக்கு கஸ்டமாயிருக்கு.நீ இவ்வளவு காலமும் சொன்ன சமாதானம் போதும்.இனியும் எதுவும் கதைக்காதை"என்று என் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் திருமணம் ஒன்று செய்துகொள்ளச் சொல்லி எனக்கு புத்தி சொல்லியபடியே அலுவலிலயும் இறங்கிட்டாள்.

எனக்கோ சிவாவையோ அவரோட வாழ்ந்த நினைவுகளையோ மறக்க முடியாட்டிலும் என் தனிமைக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுது.மனம் விட்டுக் கதைக்க ஒரு உள்ளம் தேடுது. தனிமை பயமுறுத்தி வெறுக்கவைக்குது வாழ்வை.என்னை நானே மறக்கிற நிலையில் சிலசமயம் தற்கொலை செய்துகொள்ளட்டோ எண்டுகூட எனக்குள்ளேயே நினைச்சு சமாதானமும் செய்துகொள்றன்.

அவள் இப்போ என்னட்ட ஒண்டும் கேக்கிறதில்லை.என்ர அம்மாவாகிறாள். இப்பவெல்லாம் தானாகவே ஆரிட்டையோ கதைக்கிறாள்.வேணாம் என்கிறாள்.சரி என்கிறாள்.நான் விருப்பு வெறுப்பற்ற ஜடமாய் பார்த்துக்கொண்டிருக்கிறன்.வலு மும்மரமா ஓடித் திரியிறாள்.எனக்குக் கல்யாணம் செய்து தரப்போறாளாம்.சிரிப்பா வேற வருது.

இப்பிடியிருக்க ஆரோ ஒரு தரகர் மூலமாக விபரங்கள் கொடுத்த விசாரிப்பில் மாப்பிள்ளை எண்டு ஒருத்தர் ஒரு நாள் வந்தார்.ஏற்கனவே கல்யாணமாகி மனைவியிடம் விவாகரத்து வாங்கிட்டாராம்.இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாம்.பிள்ளைகள் ஊரில் தாயோடயாம். என்னைவிட 6 வயது மூத்தவர்.என் போட்டோ மற்றும் விபரங்கள சொல்லியும் பார்த்தும்தான் வந்திருக்கிறார்.அவரை நான் பாக்கிறன்.

பார்த்தால் வயசுக்கேத்த பருமன் உருவம்.தாரில உருட்டிவிட்ட ஒரு கலர்.முடிகொட்டி வழுக்கை.இருக்கிற முடியும் நரைச்சு வெளுத்திருக்கு.கண்ணில கண்ணாடி.எனக்கு என்னவோ போலக் கிடக்கு.தேவையா இது எனக்கு.ஏன் இவள் என்னைப் படுத்துறாள் எண்டு மனசுக்குள்ள என் தோழியைத்தான் திட்டிக்கொண்டிருக்கிறன்.

எனக்கு ஓ...வென்று குழறி அழவேணும்போல கிடக்கு.யாரோ வீட்டிற்கு விருந்துக்கு வந்திருக்கினம் எண்டு என்னை நினைச்சுக்கொண்டு சரளமாக இருக்கட்டாம்.அப்படியே இருக்கப் பாக்கிறன்.எல்லாருமாப் பேசிச் சிரிச்சு சாப்பிட்டு பிறகு என் தோழி அவர் கணவரோடு தனிமையாக் கதைச்சிட்டும் போனார்.அடுத்த கிழமையே என்னைப் பிடிக்கேல்லயாம் எண்டு பதிலும் வந்தது.அவர் சொல்ல முதலேயே நான் சொல்லிட்டன் என் தோழியிடம்.அவள்தான் என்னைச் சமாதானப்படுத்தி வைச்சிருந்தாள்.நல்லவர் வல்லவர் எண்டு.நான் உயரமாக இல்லையாம்.மயிலின்ர தோகைபோல கூந்தல் வடிவாய் இல்லையாம்.நடையும் வடிவில்லையாம்.ம்ம்ம்....!

இதுக்குப்பிறகு நான் ஆரையும் வீட்டுக்கு வந்து என்னைப் பாக்க விடுறேல்ல.தோழியோ விடுறதாயில்லை.இன்னும் இரண்டு பேரோட கதைச்சதில முன்னைப்போலவே திரும்பவும் செய்திகள் கிடைச்சது.வாழ்வின் வரவும் செலவுமாய் அவர்களை நான்
நினைச்சுக்கொண்டேன்.அவரவர்களும் தங்கட தங்கட குறைகளைக் கொஞ்சம்கூட நினைக்க மாட்டாம என்ர மனதின்ர அழகை உணர்வின்ர அழகைப் பார்க்கமுடியாம போனது அவையள் அறியாமையின்ர இருளில் அழுந்தப்பட்டவையெண்டு நினைச்சுக்கொண்டன்.இதன் பிறகு இனிமேல் இந்த விளையாட்டு வேண்டவே வேண்டாம் என்று மறுத்திட்டன்.

இவ்வளவு தூரம் ஆனபிறகும் என்ர புருஷனாய் எனக்குள்ள வரிச்சுக்கொண்ட என்ர சிவாவை நினைக்காத நாளில்ல.எனக்குள்ளயே ஏராளமான கேள்விகள் எழும்.நானும் ஒரு பெண்தானே. நான் மட்டும் ஏன் இவையளைவிட அன்னியவளாக்கப்படுறன்.என் உருவம் இயற்கையானதுதானே.நானே விரும்பி வடிவமைத்துக் கொள்ளேல்லையே.ஆண்டவன் தந்ததுதானே.ஏன் என்னைப் புறக்கணிக்கினம்.எனக்குள்ள ஆசைகள் உணர்வுகள் குறைவாக இல்லையே.எல்லோரையும் போலத்தானே முழுசாத்தானே இருக்கு.என்னை உணர ஒரு மனசன் இல்லையோ.இதே வரிசையிலதான் சிவாவும்.சிலசமயம் மனம் கலங்கி கண்ணின் வழி இரத்தமாய் வழியும்.

இப்பவெல்லாம் பதிலே சொல்லாத கடவுளோடு போராடிக்கொண்டிருக்கிறன்.அப்பா இல்லாமல் அம்மாவும் நானும் மாமாவோடுதான் இருந்தம்.படிக்கவென்று ஆச்சிரமப் பள்ளியொன்றில் மாமா சேர்த்துப் படிப்பிச்சிருந்தார்.எல்லோரையும் தவறவிட்டேன் ஊர்க்கலவரத்தில.ஒட்டின படிப்பு இருந்தபடியா நிறைய வாசிக்கப் பழகிக்கொண்டன்.என்ர தனிமையைப் புத்தகங்களோடு இப்ப பகிர்ந்துகொண்டிருக்க்கிறன்.

இப்பிடி இருக்கேக்குள்ளதான் என் சிநேகிதி கேட்டாள்."ஏன் மதி உனக்கென்ன துணைக்கு அன்புக்கு ஆறுதலுக்கு பேச்சுத்துணைக்கு ஒரு துணைதானே தேவை.ஒரு ஆள் இருக்கு.இந்தத் துணையை நீ வேண்டாம் எண்டோ அல்லது அந்தத்துணை உன்னை வேண்டாம் எண்டோ சொல்லவே மாட்டாய்.இஞ்ச பார்.மாட்டேன் சொல்லாமல் நான் சொல்றதைக் கேள்"என்று ஒரு விளம்பரம் காட்டினாள்.அது செஞ்சோலைக் குழந்தைகளுடையது.கனக்க யோசிக்காமல் சரி எண்டும் சொல்லிட்டன்.

இப்ப மூன்று வயது சிவாவுக்கு அம்மாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறன்.
இன்னும் நிறையக் குழந்தைகளுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறன்.வாழ நினைச்சால் வாழ வழியா இல்லை யெண்டு இந்தப் செஞ்சோலைச் செல்வங்கள் எனக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கினம்.நானும் சிவாவோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறன்.

[இது அனுபவம் என்று சொல்ல ஏனோ பலர் பயப்படுகிறீர்கள்.இது என் நெருக்கத்தில் நான் பார்த்த அனுபவ உண்மை.இன்றும் மதி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாள்.]

ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 08, 2009

உறவு தேடும் உள்ளம் 1

புரண்டு புரண்டு படுக்கிறேன்.நித்திரை பக்கமும் இல்லை.என் உளட்டலினால் கட்டில் அசைய என் கணவர் சிவா விழித்துக்கொள்கிறார்.என் பக்கம் திரும்பி "என்ன மதி இன்னும் நித்திரை கொள்ளேல்லையோ" என்று கேட்க நானும் இல்லையென்ன்று சொல்லவும் என்னை இடையோடு அணைத்தபடி திரும்பவும் தன் மூச்சுக்காற்றை என்னில் பரவவிட்டுத் தூங்கத்தொடங்கினார்.

கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியின் இறக்கைகளுக்குள் அடைவதுபோல உரோமங்கள் நிறைந்த அவரது வெற்று மார்புக்குள் முகம் புதைத்துக் கொண்டேன் நானும்.உலகமே எனக்கு மட்டும்தான் என்கிற கர்வம்.இந்தக் கைகள் மட்டுமே போதும் என்கிற அசையாத நம்பிக்கை வேறு எந்தப் பாதுகாப்புமே தேவையில்லை என்கிற இறுமாப்பு.பெருமூச்சொன்று பெரிதாகப் புறப்பட்டு சிவாவுக்குப் பயந்து மெதுவாக வெளியேறியது.மனம் விழித்துக் கிடக்கிறது.எப்படி நித்திரை அருகில வரும்.மனம் முழுதும் கவலை மலை மலையாய் முட்டிக் கொண்டு நிற்கிறது.

இரண்டு மாதத்திற்கு முன் சாடைமாடையாக அரும்பத்தொடங்கிய இந்தநிலை சென்ற இரண்டு கிழமைக்கு முன்பு நிச்சயமாகிவிட்டது.அன்றிலிருந்து ஓ...விடிந்துவிட்டது இன்று.இன்னும் மூன்று நாட்கள்தான் இன்னும் இரண்டு நாட்கள்தான் என்று இன்று இன்று மட்டும் ஒரு நாள் என்கிற கணக்கோடு புரண்டுகொண்டிருந்தேன்.ஆமாம் விடிந்தால் சிவா என்னைவிட்டு வெகுதூரம் போகப்போகிறார்.நினைக்கும்போதே நெஞ்சு வலித்து வெடித்து விம்மியது.சென்ற இரவுகளில் சிவாவுக்குத் தெரியாமலேயே அழுது தீர்த்தேன்.இன்று என்னால் முடியவேயில்லை.சிவாவின் மார்புக்குள் புதைந்தபடியே அழத்தொடங்கிவிட்டேன்.

"என்ன மதி ஏன் இப்பிடிக் கவலைப்படுகிறீர்.நான் தான் சொல்றேனே,இனி இங்க இருக்கேலாது திரும்பிப் போகச்சொல்லி வந்திட்டுது.மூன்று தரம் அப்பீல் பண்ணியும் பாத்தாச்சுத்தானே.நல்ல வேளை எங்களுக்கு கல்யாண எழுத்தில்லாதது நல்லதாப் போச்சப்பா.இல்லையெண்டா இரண்டு பேரையுமெல்லோ கலைச்சிருப்பாங்கள்.இப்போ என்ன நீ தந்திருக்கிற 10,000Sfr வைச்சுக்கொண்டு நான் கனடா போறன்.அங்க எப்பிடியும் ஒரு வருசத்துக்குள்ள காட் தந்திடுவாங்கள்.பிறகென்ன உன்னைக் கூப்பிடுவன்தானே.பத்து வருசமாச்சு உன்னோட குடும்பம் நடத்தத் தொடங்கி.உன்னை எப்பவாவது நீ ஒரு ஏலாதவள் எண்டு நான் கனவிலகூட நினைச்சதில்லையப்பா.இந்தக் கையால எவ்வளவை நீ உழைச்சுக்கொண்டு வந்து தந்திருக்கிறாய்.இஞ்ச பார் மதி.யோசிக்காம கவலைப்படாம நித்திரையைக் கொள்."

என் கணவர் சிவாவை நிமிர்ந்து பார்த்தேன்.அவர் கண்களும் கலங்கியிருந்தன.அவரின் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு நிரந்தரம்.சின்னப் பிரிவுதானே கொஞ்ச நாளைக்குத்தானே என்று என்னையே ஆறுதல் படுத்திக்கொண்டு அயரத்தொடங்கினேன்.

அன்றைய இரவு ஓய்வெடுக்கத் தொடங்க பகல் பொழுது சூரியனின் துணையோடு தன் அலுவல்கலைத் தொடங்கியிருந்தது.நான் அழ சிவாவும் அழுது ஆறுதல் சொல்லிப் பயணமானார்.காலத்திற்கு யாரைப்பற்றியுமே கவலையில்லை.நகர்ந்துகொண்டிருந்தது.

அவர் போய் தகவல் வரும் என்று காத்திருந்தேன்.எதுவுமே தெரியவில்லை.சாதரணமாகக் களவாகப் போகிறவர்கள் உடனடியாகப் போய்ச்சேரவோ போனாலும் உறவினர்களோடு தொடர்புகொள்ளவோ சீக்கிரமாக நடக்கிற காரியமல்ல.எனவே காத்திருப்பு மூன்று நாட்கள் மூன்று வாரங்கள் என மூன்று வருடங்கள் வரை நீண்டுகொண்டே போய்விட்டன.இன்று வரை எதுவித தகவலுமேயில்லை.(அன்றைய சூழ்நிலையில் வருடக்கணக்காகச் செய்திகள் கிடைப்பதில்லை)

ஒருவேளை போகும் வழியில் ஏதாவது ஆகியிருக்குமோ.எங்காவது காவல்துறையினரால் கைதாகியிருப்பாரோ.மனம் உளைந்து சந்தேகப் பூச்சிகளாலும் சூழ்ந்துகொள்கிறது சிலசமயம்.சிவாவா...என்சிவா என்னை ஏமாற்றுவாரா.சீ....என்ன இப்படி நினைக்கிறேன். இல்லை இல்லை.அவர் ஏதோ எங்கோ ஒரு சிக்கலுக்குள்தான் அகப்பட்டுக்கொண்டார்.
பயமில்லை.காலம் தாமதமானாலும் செய்தி வரும் நிச்சயம் என என்னையே சமாதானம் செய்துகொண்டேன்.

என் மனதை நம்பிக்கையால் நிரப்பியிருந்தேன்.ஏனென்றால் நானும் என் சிவாவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது.என்னை முதன் முதலாக் ஜேர்மனியில்தான் சிவா சந்தித்தார். என்னைப்போலவே அவரும் ஜேர்மனிக்கு அவரும் வந்திருந்தார்.அகதிப்பதிவு உதவிப்பணம் பெற அவரும் வந்திருப்பார்.அந்த நேரங்களில் பலதடவைகள் நாங்கள் கண்டு பழகியே அந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது.அப்போது எனக்கு வயது 26.நான் சிவாவிடம் காதலை எதிர்பார்த்திருக்கவில்லை.அதிர்ச்சி பயமாகி என் நிலைமையையும் உணர்ந்து அவரது காதலை மறுத்தேன்.பின்னரும் அவரது அன்பைத் தவிர்க்கமுடியாமல் அவரது சமாதனத்திற்குள் இணங்கிகொண்டேன்.

(இன்னும் இதேயளவு ஒரு பகுதி இருப்பதால் பதிவை இரண்டாக்குகிறேன்.)

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP