Friday, December 30, 2011

இதுவும் காதல் !

தாமரை நடப்பதை யாராவது பார்த்திருப்பீர்களா.நான் காண்கிறேன்.படிக்கிற காலம் தொட்டு இப்போ வேலைக்குப் போகும் காலம்வரை.தாமரை இரட்டைப் பின்னல் அசைய கையில் இறுக்கிய புத்தகங்களோடு வந்துகொண்டிருந்தாள்.அவளைப் பார்க்கவென்றே காத்திருந்த சரண் பார்க்காதவன்போல சைக்கிளின் அருகில் நிலத்தில் எதையோ தேடுபவன்போலப் பாசாங்கு செய்தபடி குனிந்தபடி தன்னைக் கடக்கும் தாமரையின் அழகை ரசித்தபடி தன் ஆன்மாவை அவள்பின் தொடரவிட்டு ஒரு பாடலை முணுமுணுத்தபடி மனச்சாட்சியிடம் தான் தாமரையைக் காதலிப்பதாகப் பொய் சொல்லிக்கொண்டிருந்தான்.இரண்டு வருடங்களுக்கு மேலாகவே இந்த விளையாட்டுத் தொடருவதை மனச்சாட்சியும் ரசித்தபடிதான் இருக்கிறது.
சரணைக் கடந்து போன தாமரை தன் நெருங்கிய தோழி வீணாவுடன் மிக சுவாரஸ்யமாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.சற்று நேரத்தில் வீணா அந்த இடம்விட்டுப் போன பிறகு நேரே சரணை நோக்கி வந்தவள் திடீர் என்று கையில் இருந்த புத்தகமொன்றை வேண்டுமென்றே அவன் காலடியில் நழுவவிட்டு இதழோரம் புன்னகை குவித்தவளாய் அவனைத் தாண்டிச் சென்றாள்.இன்னொரு பாடல் தந்து கடந்தது வாசனைத் தாமரை.....!சரண் மெதுவாகப் புத்தகத்தை கையில் எடுத்தான்.இளம் தாய் ஒரு சிசுவை தழுவும் மென்மை அவன் கைகளில் குடியிருந்தது.அது யாரோ எழுதிய கவிதை தொகுப்பொன்று.புத்தகத்தின் இதழ்கள் வழியே ஒரு கடிதவுறை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.அவசரமாக கடிதவுறையைக் கிழித்து கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் தாமரை தந்த தாபால் உறைக்கு வலிக்குமோ...என்று காதலுக்கு மட்டுமே இருக்கும் ஒரு நேசம் சரணின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குரல் கொடுத்ததில் கடிதத்தை பிரிப்பதற்குள் அவன் கைகளில் தஞ்சமிருந்த கைக்கடிகாரத்தின் சிறிய முள் முப்பது முறை ஓடி மூச்சு வாங்கியது.காற்றில் தவழ்ந்து வந்த பாடலொன்று அந்த முப்பது நொடிகளைத் தாலாட்டியது.வலிக்காத போராட்டத்தின் இறுதியில் வெற்றியோடு கடிதத்தை பிரித்தான் சரண்."மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உங்கள் மடியில் புரளும் கற்பனை நினைவுகளை அசைபோட்டபடி....என் இதயம் எழுதுகோலுக்குள் இறங்கி வடிக்கும் என் முதல் மடல் இது....!

தாமரையின் முதல் வரிகள் அவள் கவித்துவத்தோடு சேர்த்து அவள் கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்தையும் சரணின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த அவனுக்கும் கவி நிறைந்த பாடலொன்று நினவிற்கு வந்தது."என் அன்புக்கு... நீங்கள் என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதனையும்,அதை எத்தனையோ தடவை சொல்ல வந்தும் உங்களால் சொல்ல முடியாமல் போனதனையும் நானறிவேன்"

அதே போல் தான் நானும்... உங்களை என் உயிருக்குள் வைத்து இரண்டு வருடமாக காதலித்தும் உங்களிடம் நேரடியாக சொல்ல முடியாமல் நான் வடித்த கண்ணீர் என் தலையணைக்கு மட்டுமே தெரியும்.என் இதயத்தின் சாவி உங்களிடம் இருக்கும்போது இனியும் அதை பூட்டி வைக்கும் சக்தி எனக்கு இல்லை.மேலும் .....

காதலித்த செய்தியைக் காதலர்க்கு சொல்லாமல் கணவருக்குச் சொன்னவர்கள் வரிசையில் என்னையும் வரித்து இறுக்க எனக்கு விருப்பமில்லை.அதனால் தான் என் இதயத்தை இந்த மடலில் இறக்கி வைக்கிறேன்.

எத்தனையோ பேர் எனக்காகக் காத்திருந்தாலும் என் மனது ஏற்றுக்கொண்டது உன்னை மட்டும் தானடா! இனி நீயே மறுத்தாலும் உன்னை என்னால் மறக்க முடியாது.நீ வேணும்டா செல்லம்...!"

இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
உங்கள் உயிர் தாமரை....!

அன்பைக் குழைத்து ஒருமையில் மயக்கியிருந்தாள் தாமரை.பூபாளம் பாடியது சரணின் மனது அவளோடு ....!வாசித்து முடித்த சரணால் சந்தோஷத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவன் கண்கள் ஆனந்த கண்ணீராய் பூக்களை உதிர்த்தது.கண்களை நீர் மறைக்க கடிதத்தை முத்தமிட்டபடியே கடித உறையைத் திருப்பினான்.

கடிதவுறையின் முன்புறமாக சிவப்பு நிற மையினால் எழுதப்பட்டிருந்த வாசகம் அவன் கண்களில் அப்பொழுதுதான் பட்டது.

"நான் எவ்வளவு முயற்சித்தும் உங்கள் நண்பன் ஆதியைச் சந்திக்க முடியவில்லை.தயவு செய்து உங்களுக்கு முடியுமானால் இந்த கடிதத்தை அவரிடம் சேர்க்கவும்!

அவன் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர்ப் பூக்களில் இப்போ உப்புக் கரிப்பதை உணர்ந்தான் சரண்.

முதல் காதலின் நினைவுகளை அழிக்கும் சக்தி எந்த நிமிஷக் கறையான்களுக்கும் இல்லை என்பதைச் சரண் யாரிடமும் சொல்லவில்லை இதுவரை.

வீட்டிற்குள் பந்து அடித்து விளையாடிக்கொண்டிருந்த மகனிடம்...

மது...வீட்டிற்குள் பந்து அடிக்காதே.ஏதாவது உடைத்தால் உதை வாங்குவாய்.

அவன் மனைவியோ....ம் என்ன இருக்கிறது இங்கு உடைக்க.10 ரூபாயும் பெறாத யாரோ கொடுத்ததாய் திருமணமாகி வந்தபோதே அவன் அறையில் இருந்த அந்தத் தாமரைவடிவ மெழுகுதிரியைத் தவிர.அந்த மெழுகுத்தாமரை பாடசாலை விழா ஒன்றில் தாமரைக்குக் கொடுக்கவென்றே வாங்கிக் கொடுக்காமல் விட்டது।அதைக் காணும்போதெல்லாம் அந்த விழாவில் தாமரை பாடிய பாடலொன்றும் அது யாருக்கோ பாடியிருப்பாள் என்று நினைத்தாலும், தனக்குத்தானென்று கற்பனையில் மிதந்த நினைவும் எப்போதும் வராமல் போனதில்லை சரணுக்கு!
பாடல்களுக்காகவே இந்தத் தொடரை எழுத விரும்பினேன்.அன்பின் சகோதரி ஆமினாவுக்கு மிக்க நன்றி.எப்போதும் தொடர்களைத் தொடர யாரிடமும் சொல்வதில்லை.

என்றாலும்....பாடல் ரசனையுள்ள.....


சுவாரஸ்யமாக எழுதுவார்கள் இவர்கள்.ரசிக்க விருப்பத்தோடு இவர்களைத் தொடரச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறேன் !

Wednesday, December 28, 2011

தமிழ்...உலகெங்கும் தமிழ்.

பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்...!

[செவ்வாய்க்கிழமை,27 டிசெம்பர் 2011,08:23.11 PM GMT]
பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் பிரான்ஸ் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.

இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி,தேசியப்பூ,தேசிய மிருகம்,தேசியப் பறவை,தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.நன்றி லங்காஸ்ரீ.

Monday, December 19, 2011

பச்சைக் கலர் தேத்தண்ணி.

தேநீரைச் சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் "கிரீன் டீ" என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ?

தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நமக்கு புரியாமல் போய்விட்ட ஆனால் அற்புதமாகக் கிடைத்த ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர்.

இந்தத் தேநீர் மகத்துவமானது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நான் நினைப்பதற்குக் காரணம்.

இந்தத் தேநீரை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது எனவும் இந்தப் பச்சைத் தேநீர் உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யு.கே பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கிறது.

சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது பச்சைத் தேநீர் வரலாறு.எனினும் சீனா,ஜப்பான்,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது என்கிறார்கள்.எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் உள்ள இரகசியம் இந்த பச்சைத் தேநீர் தான்.

அவர்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது.உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும்,காயத்தை ஆற்றவும்,உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும்,செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும்,மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம்.

பச்சைத் தேநீரின் மகிமையை வியக்க வியக்க முதல் புத்தகத்தை எழுதியவர் ஒரு ஜென் துறவி.இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இப்புத்தகத்தில் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீரை ஒரு சர்வரோக நிவாரணி என்கிறார்.

உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார்.குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம்.இந்த நூல் வெளியான ஆண்டு 1191.

நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர் பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார்.

தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.

ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேநீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார்கள் மருத்துவர்கள்.

நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும் உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள்.எல்லாவற்றுக்கும் மேலாக எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது.

உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேநீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன் உடலின் கொழுப்பைக் கரைத்தும் குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது.

கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது.தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் வெள்ளை,மஞ்சள்,கறுப்பு,பச்சைத் தேநீர் என வகைப்படுத்தப் படுகிறது.

பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது.இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.

பச்சைத் தேநீர் தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்புச் சுவை சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.

சரி இந்தப் பச்சைத் தேநீரில் சிக்கல்களே இல்லையா என்றால் இருக்கிறது என்பதே பதில்.பச்சைத் தேனீரிலும் காப்பியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு.ஆனால் காப்பியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதியான செய்தி.

இதயம்,நுரையீரல்,குருதி,பல்,எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவிக்கிறது இந்தப் பச்சைத் தேநீர்.

கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது.வரக்காபி என்பதுபோல இது வெறுமையாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.

இது பச்சைத்தேயிலைப் பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.

மற்றைய தேநீர் போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை.அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.

கொதிக்க வைக்கப்பட்ட நீரில் தேநீர்ப் பையை சுமார் 1-2 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதைச் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கலாம்.

சுவைக்குத் தேவையானால் சீனி அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள் எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம்.

உண்மையில் நான் ஒரு நாளைக்கு 2 தரம் குடிப்பேன்.நீங்களும் குடித்துப் பாருங்களேன்.உடம்பு குறையாவிட்டாலும் (என் உடம்பைக் கிண்டல் செய்ய 2-3 பேர் காத்திருக்கிறார்கள்)உடம்பு நோயில்லாமல் சுகமாக இருக்கிறது எனக்கு !

நன்றி இணையம்.

Wednesday, December 14, 2011

புளிக்குதாம்...!இது ஒரு மரக்கறி இனம்.Stangen Rhabarber என்பார்கள் இங்கு.புளிப்போ புளிப்பு.கேக்,சூப் செய்வார்கள் !

Saturday, November 26, 2011

கற்களை இடிக்கலாம் மனங்களை...!

கல்லறைகளை மட்டுமே சிங்களம் உடைத்தெறிந்தது.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.நம் தங்கத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினமான இன்று இதைத் திறந்து வழிபடத் தொடங்கியது இன்னும் சிறப்பான நாளாக ஆனது !

சுவிஸ்சில் தாயகக்கனவுடன் சாவினை தழுவியவர்களின் நினைவாலயம் திறப்பு.சூரீச்சில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயக விடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது.தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா இனிதே நடாத்தப்பட்டது.

சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தாய் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி,அகவணக்கம்,மலர்வணக்கம்,மலர்வணக்கம்,
தீபவழிபாடு,கவிதாஞ்சலி,எழிச்சிஉரை,வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிற்பாக நடைபெற்றது.
[சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 04:57.57 PM GMT]

நன்றி லங்காஸ்ரீ.

Friday, November 25, 2011

நான் பார்க்கும் குழந்தைகள்.

சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தையொன்று விளையாட ஆரம்பிக்கின்றது.

அப்பொழுது ....

டேய்....உடைத்துவிடாதே.கீழே வை தொடாதே..!

கொஞ்ச நேரத்தின்பின் பார்க்க.....குழந்தை மீண்டும் அந்தத் தட்டைக் கையில் எடுத்துக் கொள்கின்றது.மறுபடியும்...டேய் அதைத் தொடாதே.கத்துவது காதில் விழுகிறதா இல்லையா...!

பிறகும் திரும்பிப் பார்க்க....மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..!

குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும்.அவர்கள் அதனைக் கேட்காத பொழுது மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல் குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்,சிலர் அடிக்க வேண்டும்,சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும் குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். குணாதிசயங்கள் இருக்கும்.இருப்பினும் குழந்தைகளை இப்படித்தான் நடத்த வேண்டுமென்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது.அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும்.நாம் நினைத்தமாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது.திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்.

4. எதிலும் உறுதியாக இருங்கள்.அதையே குழந்தைக்கும் சொல்லிக் கொடுங்கள்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்.

6. அடம் பிடித்து அழுகின்றதா...விட்டு விடுங்கள்.

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கேளுங்கள்.குழந்தையின் தவறுகளையும் மன்னித்து விடுங்கள்.

8. இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.

9. கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்.
இத்தனையும் நம் ஈழக்குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்றால் பெரிதொரு கேள்விக்குறிதான் !

எலும்பும் தோலுமாய் ஒட்டிய வயிறோடு அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு...தமிழச்சி வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் அவல வாழ்வுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்...உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்...எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம் இன்று வெளியில் தெரியா மரணக் கேணியாய் ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புக்களும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன.ஆனால் சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது"ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசிப்பேருக்குக் காது மந்தமாகி விட்டதெனவும்,ராணுவப் பீரங்கிகளின் கொடும் சத்தம் அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டதெனவும்,மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்.

ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும் பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை மனசாட்சியுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.தனிமைப்படுத்தி அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

பசியால் தவித்த பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது ராணுவத்தினரிடம் பிடிபட்டனர்.மொத்தக் குழந்தைகளும் பார்க்க அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி எல்லோரையும் உலுக்கி விட்டது.ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள்.மதிய வேளைகளில் ராணுவத்தினர் வரும்போது,'ஆமி மாமா சோறு போடுங்கோ...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்துவிடும்!

பாவம் பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள் கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும் சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர் அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!

அண்ணன்-தம்பி,அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது.ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனித்தால்...இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும் என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ் இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான் என்கிறார் வேதனை மேலிட.

தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ இதைவிடக் கொடூரம்...!கடந்த இறுதி யுத்தகாலங்களில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கின்றனர்.3000-4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.ரத்தத் தொற்று வியாதிகள் பரவி நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி எப்போது மரணம் என்ற நிலையில் கிடக்கின்றன.12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன."எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது" என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம்.

சிங்களவர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில் இதுநாள்வரை தமிழ்ப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர் அங்கே விபச்சார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுமி ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும் வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக்காகப் போராட கிளம்பிவிடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது 'இனப் படுகொலை' மட்டுமல்ல...'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!

ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன.குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள்.
குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது.அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது.குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை.அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை.குழந்தைகளை அற்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள்.

"குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகளும் கோபமும் விரக்தியும் எந்த அரசியல் சுயநலக் குறிக்கோள்களையும் கொண்டிருப்பதில்லை.அவர்களின் கோபங்கள் எங்கிருந்து ஏன் வருகின்றன என்பதுதான் முக்கியமானது.அழகான குழந்தைகளின் மனவுலகம் பல்வேறு அரசியல்களுக்காக தொடர்ந்தும் சிதைக்கப்படுகின்றன."

அண்மையில் யாழ் நூலகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னணிப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் பரமேஸ்வரன் சேதுராகவன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியாக 194 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டான்.தனது தாய் தந்தையருடன் வருகை வந்த சேதுராகவன் அன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கால்களில் விழுந்து வணங்க மறுத்திருக்கிறான்.

வன்னி யுத்தத்திற்குள் வாழ்ந்து அதிலிருந்து மீண்டு தடுப்புமுகாம் சென்று அங்கிருந்து மீள்குடியேறி சமகால வன்னிச் சனங்கள் வாழும் வாழ்க்கைக்குள் இருந்து வந்த இந்தச் சிறுவன் இன்றைய ஈழத்து மக்களிடத்தில் உள்ள உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறான். அவனிடம் எந்த அரசியலும் இல்லை.தனது எதிர்ப்பு உணர்வை மறைக்கவும் தெரியவில்லை.கல்வி அமைச்சரின் கால்களில் விழுவதற்கு அவன் விரும்பவில்லை என்ற நிலைப்பாடு அரசு மீதான வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது.சிறுவர்களின் வெறுப்பு சாதாரணமானதல்ல.அவை சிறுவர்களின் வெள்ளை மனவுலகத்தில் இருந்து எந்த ஒளிவு மறைவுமின்றி ஏற்படுகின்றது.

அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் இருப்பவனோ அல்ல.வாக்கு அளிக்கின்ற வயதைக் கொண்டவனுமல்ல. போருக்குள் பிறந்து வாழ்ந்ததைத் விட வேறு எதையும் அறியாதவன்.எதற்காக கால்களில் விழ மறுத்திருக்கிறான்?

சேதுராகவனுக்கு பத்து வயதே ஆகிறது.கடந்த 2001 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறான். யுத்த்தில் பிறந்து யுத்தத்தில் வளர்ந்து யுத்தத்தில் படித்துத் தனது வாழ் நாட்கள் முழுவதையும் யுத்த காலத்தில் கழித்திருக்கிறான்.அவன் பார்த்திருந்த காட்சிகள் எல்லாமே யுத்தம்தான்.தமிழன் என்பதனால்தான் சேதுராகவன் கால்களில் விழ மறுத்தான் என்று மட்டும் சொல்லிவிட இயலாது.இது ஒரு குழந்தையின் எதிர்ப்புணர்வு.காயங்களினால் ஏற்க மறுக்கிற எதிர்ப்பு.துயரமும் அழிவும் கொண்ட வாழ்க்கையினால் ஏற்பட்ட உணர்வு.யாரும் அவனுக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.அவனாகவே இதைச் செய்திருக்கிறான்.சேதுராகவனின் மனம் என்பது ஈழத்தின் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் உள்ள மனம்.

ஈழப் போரைக் கடந்த பல குழந்தைகளின் நெஞ்சில் அந்தப் போர்க்காட்சிகள் ஆழமாகப் படிந்திருக்கின்றன.போருக்குப் பிந்தைய இன்றைய வாழ்விலும் அதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்கிறது.அவர்கள் அந்தப் போரின் இறுதி நாட்களைப் பற்றியும் மரணக் காட்சிகளையும் பற்றியும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.போரின் குழந்தைகளாய் நெஞ்சில் படிந்த இந்தக் காயங்களை துடைத்தெறியக் கூடிய வாழ்வை அவர்கள் எட்டவில்லை என்பதுதான் துயரம்.

உலகில் குழந்தைகளின் நலம் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்.போரின் குழந்தைகளாய் பிறந்து வாழும் ஈழக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?அரசாங்கம் ஈழத் தமிழர்களின்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகைளையும் அழிவுகளையும்தான் கட்டவிழ்த்து விடுகிறது.எமது குழந்தைகள் அந்தச் சூழலில் வளர்வதுடன் அதையே தங்கள் முதல் பாடமாக படிக்கிறார்கள்.குழந்தைகளின் மனங்களை வெல்ல இந்த அரசால் முடியவில்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படும் பெரும் செய்தி.

சமாதானம் கொண்டு வரப்பட்ட பூமி என்றும்,பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட தேசம் என்றும் வெற்று அரசியல் வார்த்தைகளைச் சொல்லி ஈழத் தமிழர்களின் வாழ்வுலகத்தை மறுக்கும் அரசியலை செய்யும் பொழுது,ஈழக்குழந்தைகள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதும்,இந்த வடுக்கள் நெஞ்சில் எப்படிப் படிந்திருக்கின்றன என்பதும் எப்பொழுது புரியப்படும்?

ஈழக் குழந்தைகள் நிம்மதியாக வாழும் ஒரு உலகத்தைத் தேடுகிறார்கள்.‘ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள் தங்களோடு எடுத்தே செல்கின்றனர்....!தோழி...சகோதரி அம்பாளடியாளுக்கு என் நன்றி.அவர் இழுத்த தொடர் சங்கிலி யுத்தபூமியில் வாடும் வாழும் நம் குழந்தைகளையும் நினைக்க வைத்தது.உலகப் பந்தில் எத்தனையோ சந்தோஷங்களோடு எத்தனையோ அறிவியலோடு செல்லக்குழந்தைகளாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் என் தேசத்துக் குழந்தைகளே என் பார்வையில் உடனடியாகத் தெரிந்தார்கள்.மாவீரர் வாரத்தோடு இந்தப் பதிவை இணைப்பதில் மிகுந்த சந்தோஷம்.எமக்காய் விதையுண்ட அத்தனை உயிர்களுக்கும் என் தலைசாய்த்த நன்றியும் வணக்கமும் !

நிறைவான ஈழச் செய்திகள் உதவி இணையம்,கூகிள்.

Wednesday, November 16, 2011

மண்வாசனை...கோண்டாவில்.

என்தேசம்.என் ஊர்.
மண் வாசனை அந்தப் புழுதியைச் நாசிக்குள் நுகர்ந்தபடி எழுத நினைக்கிறேன்.கண்ணுக்குக் குளிர்ச்சியாக கிராமுமல்லாமல் நகரமும் அல்லாத ஊர் என் கோண்டாவில்.தோட்டங்கள் சூழ குளிர்ந்த காற்றோடு எப்போதும் கலகலவென்றிருக்கும் அன்று.

காலைப்பொழுது விடிகை மிக ரம்யம்.கோயில் மணியோசை பரவசமாக்க பறவைகளின் காலைக் களிப்பு ஆனந்திக்கும் எங்களையும் சேர்த்து.பறப்பின் படபடப்பும் குஞ்சுக்கு இரை தேடிக் கொடுத்தலும் காலைக்காட்சியின் ஒரு பகுதி.அதிகாலை 4 மணிக்கே கிடுகு வண்டில்களின் டக்டக் சத்தமும் அதை இழுத்துச் செல்லும் காளைமாடுகளின் கழுத்து மணி ஜல்ஜல் ஒசையும் நித்திரையைக் கலைத்தாலும் அந்தத் தாளக்கட்டு ரசனையோடு இசையும்.

இதைவிட மற்றைய ஊர்களில் கேட்கமுடியாத ஒரு விஷேசம் என் ஊரில்.அதாவது நாதஸ்வர தவில் கலைஞர்கள் கூடுதலாக வாழும் இடம் எங்களூர்.அவர்களின் காலைப் பயிற்சியும் ஒரு காலைக்காட்சியாகியிருக்கும்.அதிகாலை 4-5 மணிக்கே தங்கள் கலைகளைப் பயிலும் மாணவர்கள் சாதகம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள்.ஆரம்பப் பயிற்சியாளர்கள் ஸ்வர சரளி வரிசை தொடக்கம் அலங்காரம் கீதம் வரை தாளம் போட்டுச் சத்தமாகப் பாடுவார்கள்.குரல் வளம் தெளிவாகும் என்பார்கள் இதனால்.

நாதஸ்வரப் பயிற்சியாளர்கள் நாதஸ்வரத்தின் அடிப்பகுதித் துவாரத்தைத் துணியால் அடைத்துவிட்டு கீழ் சுருதியில் வாசித்துப் பழகுவார்கள்.தவில் பழகுபவர்கள் தவில்போன்ற அமைப்பிலுள்ள கட்டையில் கைக்கிளி என்று சொல்லப்படும் சிறு கைக்கட்டையால் அடித்துப் பழகுவார்கள்.அதில தொம் தொம் தகா தொம் தொம் திகுதகா என்கிற சொல் டக் டக் என்றே கேட்கும்.மார்கழி மாதக் குளிரில் எழும்பியிருந்து பழகும் இவர்களைவிட நித்திரை கலைந்து கிடப்பவர்களுக்கே கோபம் கோபமாக வரும்.இதனாலேயே இவர்களுக்கென்று தனியாகச் சின்னக் குடில் செய்து கொடுத்திருப்பார்கள்.தூரத்து ஊர்களிலிருந்துகூட பயிற்சிக்காகவே இங்கு வந்து தங்கியிருப்பார்கள் சிலர்.மாலைக்காட்சியிலும் இவர்களது நிகழ்வு தொடரும்.

பூவோடு கூடிய நாருக்கும் மணமுண்டாம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் எனது பக்கத்துஊர் இணுவில்.இங்கேதான் எம் பாரம்பரியக் கலை கலாசாரங்கள் நிறைந்திருக்கின்றன.இணுவிலின் பக்கம் என்பதாலோ என்னவோ கோண்டாவிலும் கலைக்கூடம்தான்.நானும் அதே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.ஆகவே எனக்குத் தெரிந்தமட்டில அகில இலங்கைப்புகழ் நாதஸ்வர தவில் கலைஞர்கள் இங்குதான் 3-4 தலைமுறையாக வாழ்வதாக அறிகிறேன்.காலம் சென்ற வி.ஏ.பாலகிருஷ்ணன் அவர்களும் இங்குதான் வாழ்ந்தார்.இன்னும் புகழ்பெற்ற வரிசையில் நாதஸ்வரத்தில் வெள்ளிவிழாக்கண்ட வி.கே கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்களும்.தற்போது கானமூர்த்தி அவர்கள் காலம் சென்றுவிட்டார்.இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நல்ல தவில் மிருதங்க வயலின் வித்வான்களும் இங்கு இருக்கிறார்கள்.இருந்தார்கள்.எம் வாழ்வின் அவலத்தான் இந்தத் தொழிலிலும் தாக்கம் இருக்கிறது.

இவர்களைவிட ஆரூடம் சொல்பவர்கள்,சமய சிவாச்சாரியர்கள்,கோபுர சிற்பவேலை,நகைகள் செய்பவர்கள்,மரச் சிற்பங்கள் தளபாடங்கள் செய்பவர்கள்,மூலிகை மருத்துவர்கள் என்று நிறைவான அறிஞர்கள் கலைஞர்கள் நிறைந்த ஊர் எனது ஊர்.

என் ஊரின் மண் சிவப்பு நிறமாக இருக்கும்.இதுவும் இணுவில் மண்ணின் பாதியே என்றுதான் சொல்லவேண்டும்.கோண்டாவிலின் முழுப்பகுதியும் சிவப்பு மண் இல்லை.இணுவில் பகுதியைத் தொடும் எல்லைப்பகுதியின் கொஞ்சத் தூரம் மட்டுமே செம்மண்ணாக இருக்கும்.ஒரு நாளைக்கு 2-3 தரம் தலை கழுவிக் குளிக்க வைத்து அம்மாவிடம் அடி வாங்கிய நினவுகள் நிறையவே இந்தச் செம்பாட்டு மண்ணால்.கோண்டாவில் தமிழ்க்கலவன் பாடசாலை.

ஆனால் இதில் பயிர்களின் செழிப்பும் வளர்ச்சியும் அதிகம்.முக்கியமாக மிளகாய் புகையிலை.மிள்காய் புகையிலைக்குக் கோண்டாவில் பெயர்பெற்ற இடமாகும்.
புகையிலையைக் கருவாகக்கொண்டு நிறையச் சுருட்டு ஆலைகள் அதை நடாத்தும் முதலாளிகள் தொழிலாளர் என்று பெரும் பணக்காரரும் இங்கு.நான் அன்று இருந்தபோது வி.பி.ஆர் என்கிற பீடி ஆலை பெயர்பெற்றதாக இருந்தது.

இங்குள்ள சுருட்டு முதலாளிகள் கொழும்பு மலைநாட்ட்டுப் பகுதிகளில் தங்கள் வியாபாரத்தை நன்கு நடாத்தி வந்தார்கள்.1983 யூலைக் கலவரத்தின் பின் இதற்கும் கொஞ்சம் பின்னடைவே என்பார்கள்.நானும் இந்தத் தோட்டங்களுக்குப் மரக்கறி வாங்கப் போயிருக்கிறேன்.வரப்புப் பகுதியில் முளைத்திருக்கும் பலகீரையை எங்களையே பிடுங்கிப் போகச் சொல்வார்கள்.குண்டுக் குண்டாய் நிலம் முட்டிக் காய்த்திருக்கும் கத்தரிக்காய்.வான் பார்க்க நீளம் நீளமாய் நீட்டிமுளைத்திருக்கும் வெண்டைக்காய்.பொலிந்து தொங்கும் பயற்றங்காய்.பாம்புக்குக் கல் கட்டித் தொங்கவிட்டதுபோல புடலங்காய்.ஊடலில் புகுந்திருக்கும் முளைக்கீரை பொன்னாங்காணி என்று தனித் தனிப்பாத்தியில் பசுமையாய் குளிர்ச்சி தரும்.பருப்புக் கலந்து சமைக்கும் பலகீரை எனக்கு மிகவும் பிடிக்கும்.முருங்கை மரமில்லா வீடுகளே இல்லை என்பேன் அப்போ.வாழை மரங்கள் குட்டிகளோடு தென்னை பப்பா எலுமிச்சை என் வீட்டுத்தோட்டமும் வெருளியும் இருப்பார்.அது அந்தக் காலமாகிவிட்டது.நினைவுகள் மட்டும் காலமாகாமல்.

அடுத்து இனிப்பது எங்களூர்க் கிணற்றுத் தண்ணீர்.பக்கத்து ஊர்களில் இருந்துகூட வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள்.விரைவாக பருப்போ அரி்சியோ வெந்துவிடும் என்பார்கள்.அதுவும் மண்பாத்திரத்தில் சமைத்தால் இன்னும் சுவை என்பார்கள்.

இன்னும் கோண்டாவில் உப்புமடச்சந்தி சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (கே.கே.எஸ்) காங்கேசந்துறை வீதியில் சக்தி வாய்ந்த தெய்வமாகும்.வருடத்தில் ஒரு தரம் 10 நாடகள் திருவிழாக் கோலம் காணும் இந்தக்கோவில் ஊரும்தான்.கோண்டவிலை ஒட்டி நந்தாவில் அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது இங்கு திருவிழா ஆடம்பரமும் அட்டகாசமும்.அழகான கேணியும் ஒன்று இங்கு தாமரை மிதக்க.திருவிழாக்கள் கலகலவென்று தெருக்களும்,வீடும் சுத்தமாக இருந்தாலும் அப்பா அம்மாவுக்கு எங்களால் கஸ்டமான நாட்களாகவே இருக்கும்.பாடசாலை போக அடம்பிடிப்போம்.ஐஸ்கிறீம்,கச்சான்,பலூன்,காப்பு,மாலை ஏதோவொன்றுக்கு எப்போதும் அடிபோடுட்டு அடிவாங்காத நாள் இருக்காது.கோண்டாவில் புகையிரத வீதியிலும் ஒரு காளிகோவில்.மீண்டும் வருமா மறைந்த இழந்த அந்த நாட்கள்.கண்கள் மட்டுமே கலங்கிறது தூசே இல்லாத சுத்தமான நாட்டிலும்.

நந்தாவில் என்று சொலப்படுகிற இடம் கோண்டாவிலின் நடுப்பகுதியை பள்ளம் கொண்டதாய் அலங்கரிக்கிறது.நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிறைந்த தோப்புப் பகுதி.இங்கு மரமேறும் சிலரது வீடுகள் தவிர வீடுகள் இல்லை.காதலர்கள் சந்திக்கும் மறைவான பூங்காபோல.சிறுவர்களின் பந்தாடலுக்கு பரந்த பெருவெளி.இளைஞர்களின் சீட்டாட்டம் கள்ளுக் குடியலின் ஆரம்பப் பயிற்சியும் இங்குதான்.பாடசாலை போகாமல் படம் பார்க்கப்போக புத்தங்களைப் பாதுகாக்கும் இந்த நந்தாவில்.

என் அண்ணா இன்னொரு சொந்தமான அவர் வயதுள்ள சிநேகிதரோடு படம் பார்க்கப்போய் காளிகோவில் ஐயா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சொல்லி,தவில் வாரினாலே அந்தப் படத்தின் பாட்டு வரிகளைச் சொல்லிச் சொல்லியே அடி வாங்கினதும் ஞாபகம் வருது.

இங்கு மழைக்காலங்களில் வெள்ளம் ஒரு ஆளை முழுதாக மூடுமளவிற்கு முட்டி வழியும்.சிலசமயங்களில் நீர் நிரம்பி பெரும் தெருவைத் தாண்டும்.மழைநீர் நிரம்பும் காலங்களில் சிடைச்சித் தாவரம் நிறைய வளர்ந்திருக்கும்.தவளையின் இசையோ இரவு இரவாகப் பெரும் கச்சேரிதான்.மீன்கள்,வால்பேத்தைகள் போத்தல்களில் பிடித்து வைத்துக்கொண்டு மீன் வளர்க்கிறோம் என்போம்.பனை மரத்தைப் பாதியாகப் பிளந்து வள்ளம் போலாக்கி தூண்டில் வைத்து மீனும் பிடிப்பார்கள்.

நான் பாடசாலைக்கு நடந்தே போய் வந்திருக்கிறேன்.ஓ...மழைக்காலம் அது பெரிய சந்தோஷம்.தண்ணீருக்கு கல் எறிந்து விளையாடி வீட்டுக்குப் பிந்தியே போய் வெள்ளைச்சட்டை நனைந்து அடி வாங்கி வலிப்பது எங்களுக்குத்தானே தண்ணீருக்கு இல்லையே.தூணில் கட்டி வச்சு கண்ணுக்கு மிளகாய் பூசப்பட்ட காலமும் இருக்கு இந்த நந்தாவில் வெள்ளத்தால்.காலில் சிரங்கு குரங்காய் மாறி....பிறகென்ன !
சிவகுமாரன்.

கோண்டாவில் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று பிரித்தே சொல்கிறார்கள்.எனது ஊர் கோண்டாவில் மேற்கு.கிழக்குக் கோண்டாவில் பலாலி போகும் பெரும் தெருவில் தின்னவேலியோடு சேர்ந்தது.அங்கு முக்கியமாக பல்தொழில்நுட்பக் கல்லூரியும்,பல்கலைக் கழகமும் இருக்கிறது.சிறப்பாக எங்கள் சிவமுமாரன் பிறந்து வளர்ந்த ஊர்.ஒரு நாள் தனியாக யாழ்ப்பாணம் போய் பாலாலி கோண்டாவில் பேரூந்தில் ஏறி என் கோண்டாவிலைக் காணவில்லையென்று தெருவில் நின்று அழுதது ஞாபகம் வகிறது.

எங்களூரில் பனை,தென்னை,மா,பலா,புளி,நாவல்,நெல்லி மற்றும் பூக்கள் பொலியும் மரங்களுக்குக் குறவேயில்லை.என் தங்கை பாடசாலை போகும் வழியில் நாவற்பழக்காலங்களில் நாவல் மரத்தடியில் காலம் கழித்துவிட்டு வீட்டுக்குப் பிந்தியே வருவாள்.அம்மா கேட்டால் ஏதாவது பொய் சொல்லுவாள்.வாய் மட்டும் நாவலாய் மாறியிருக்கும்.பிறகென்ன மாட்டிக்கொண்டு நல்ல அடிதான்.நாவல்மரம்,புளியமரம் சுற்றுவதால் அடிக்கடி படிப்பைக் குழப்பிகொள்வாள்.

எங்களூரில் இந்து,கிறீஸ்தவ,முஸ்லிம் மக்களென ஒற்றுமையாய் சந்தோஷமாய்த்தான் இருந்தோம்.இப்போ நினைத்தாலும் மனம் ஏங்குகிறது.இன்று யாரோ எவரெவரோ எங்கெங்கோ.என் அழகு கலைந்த வீட்டு முற்றம் எனக்காய் காத்திருக்குமோ.துளசிச்செடி ஒற்றைக்கோட்டுக் கோலத்துக்காய் கருகாமல் இருக்குமோ.சாகுமுன் என் ஊரைப் பழைய அழகோடு காண்பேனா.திரும்பவும் எல்லோரையும் காண்பேனா.என் இறப்பாவது என் மண்ணில் நடக்குமா.இப்போதைக்கு இல்லை என்பதே பதிலானாலும் நம்பிக்கையோடு நடப்போம்.எதிர்காலத்திற்காவது பாதை வெட்டி வழி சமைப்போம் !

9 வருடங்களுக்கு முன் வானொலிக்காக எழுதினது.மாற்றம் செய்யாமல் அப்படியே !

Friday, November 04, 2011

என் கேள்விக்கென்ன பதில்.

உலக சனத்தொகை இப்போ ஏழு பில்லியனானது.உலகிலேயே ஏழு பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது.மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம்.இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளைக் கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும்.இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும்.ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது.

இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும்.தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடுங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரக் காத்திருக்கும்.அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும்.புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடுங்கிப்போட்டுவிடும்.ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்குத் திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது.பழைய நினைவுகள்,பழைய பழக்கவழக்கங்கள்,பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது.பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான ஆயுள் உண்டு.புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது.குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தைப் பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன.கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராணக் கதைகளில் இருக்கிறது.

ஆனாலும் ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதைப் பார்த்தால் ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்கிறது.இந்த 120 ஆண்டுகள் ஒரு மனிதன் உயிர் வாழ முடியும்.அதுவரையில் அவனுடைய ஜாதகப்படி வருகிற தசை – புத்திகள் கணிக்கப்படுகிறது.இப்படி 120 ஆண்டுகள் ஒரு நபர் உயிருடன் இருப்பது என்பது இன்றைய காலத்தில் அதிசயமான விஷயமாக இருக்கிறது.

விஞ்ஞான வளர்ச்சி பல முன்னேற்றங்களை தந்திருந்தாலும் எண்ணற்ற பாதக நிலைகளையும் தந்திருக்கின்றது – தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் – கனிகளில் கூட மருந்துகள் கலங்கப்பட்டு அது மனித உடலுக்குள் சென்றவுடன் விஷத் தன்மையாக மாறி மனிதர்களின் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது.இன்று 30 – 40 வயதுக்குள்ளாகவே பல உடல் கோளாறுகளை மனிதன் தன் உடலில் வரவேற்கிறான்.காரணம் ஆரோக்கியமான உணவு இங்கே யாருக்கும் இல்லை.ஒரு இளநீரை எடுத்துக் கொண்டாலும் அது இயற்கையாக இளநீர் காயாக இருந்து குடிப்பதுதான் ஆரோக்கியம்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது?

அந்த இளநீர் கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதுவும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுச் சந்தைக்கு வருகிறது.அந்த இளநீர் கெடாமல் இருப்பதற்காக அதில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது ஒரு விஷயத்தை நாம் என்றுமே நினைவில் நிறுத்த வேண்டும்.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் பழங்கள் இப்படி எந்த உணவாக இருந்தாலும் அதனை இயற்கை விதித்த குறிப்பிட்ட காலத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.அந்தக் குறிப்பிட்ட காலம் சென்ற உடன் இயற்கையே அந்த பொருட்களை மனிதனுக்கு ஏற்றவை அல்ல என்பதை தீர்மானித்து அழித்துவிடுகிறது.அதாவது கெட்டுப்போகிறது.

நமக்குத் தாயாக இருக்கக் கூடிய இயற்கை நமது உடலுக்கு எது ஏற்றது என்பதை தீர்மானித்துப் படைக்கிறது.பிறகு அந்தப் படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த இயற்கையே அழித்தும் விடுகிறது.காரணம் அந்தப் பொருள் இனி மனிதர்களுக்கு உதவாது என இயற்கை அன்னைக்குத் தெரிகிறது.இவையெல்லாம் இப்படியிருக்க விஞ்ஞானிகள் மனிதன் 150 வருடங்கள் வரை வாழக்கூடிய விதியைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அல்லது பிடிக்கிறார்களாம்.இது நான் நேற்று வானொலியில் கேட்டது.அதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பாளர் யாருக்கெல்லாம் 150-200 வயது வரை வாழ விருப்பம்,ஏன் என்கிற கேள்விகளை நேயர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.எனக்கும் பிடித்திருந்தது.எனவே அதையே நானும் உங்களிடம் கேட்க நினைக்கிறேன்.சொல்லுங்கள் நண்பர்களே.

நீண்ட வருடங்கள் உங்களுக்கு வாழ விருப்பமா ?

ஏன் ?

சொல்லுங்களேன்.....!


என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.நான் வாழ்ந்து எதுக்கு ......!

உதவி இணையம்.

Tuesday, October 25, 2011

பிரச்சனையோ பிரச்சனை.

கனநாள் ஒண்டும் எழுதேல்ல.என்னத்தை எழுதி என்ன கிழிக்கவெண்டு கிடக்கு.ஆனா எனக்கொரு பிரச்சனை.வெளில சொல்லமுடியாமத்தான் உங்களிட்ட சொல்லலாமெண்டு நினைக்கிறன்.அப்பா அம்மாட்ட சொன்னா உதைப்பினம்.அண்ணாட்ட சொன்னா கிட்டத்தான் இருக்கிறான்.கத்தியோட வருவான் குரங்கன்.என்ர சிநேகிதி ஒருத்தி 3 பிள்ளைகள் புருஷனோட கும்மியடிச்சுக்கொண்டிருக்கிறாள்.அவளுக்கு இதெல்லாம் கணக்கெடுக்க நேரமில்லை.எனக்குத்தான் குடும்பம் குட்டி இல்லையெண்டா அவளையும் ஏன் கஸ்டப்படுத்த.லீவு முடிஞ்சு வந்து கொஞ்சநாள் வெறுமையும் தனிமையும் அலைக்கழிச்சு முடிய இது தலையில மாட்டிக்கொண்டு இரவாப் பகலா எலி குடைஞ்சதுபோல புசுபுசுவெண்டு ஓடிக்கொண்டிருக்கு.உங்களில ஆருக்காவது உண்மையா இந்தப்பிரச்சனைக்கு ஒருவழி கட்டாயம் தெரியும்.

எப்பவுமே கொஞ்சம் கஸ்டமான விஷயங்களையும் முடியாத ஈழக்கதையையும் சோகக்கவிதையையும் எழுதிக்கிழிக்கிறேனாம்.சொல்லிப்போட்டினம் எல்லாரும் சொல்லிப்போட்டினம்.அதுதான் கவிதைகள் இருந்தும்.....ஆசைகள் ஆதங்கம் இருந்தும்......!

இப்ப என்ர வீட்டில ஒரு ஆள் இருக்கிறா.ஒல்லியா கொஞ்சம் கருப்பா.ஆக்களின்ர உறுப்புகளை அறுத்து எத்தினை எலும்பு எங்கெங்க நரம்புகள் இருக்கெண்டு படிக்கிற படிப்பாம்.ஆனா அவவில ஒருகிலோ சதையை கொஞ்சம் தோல் போர்த்திவிட்டமாதிரித்தான் இருப்பா.பாவம்.சரி தற்செயலா இதைப் பார்த்தா முறைப்பாள்.யாரும் சொல்லாதேங்கோ.
அவவோடயே என்ர நேரம் போகுது.அவவுக்கு என்ன சாப்பாடு செய்து குடுக்கிறது.நாளைக்கு என்ன சாப்பிடுவா.எனக்கு எத்தினை மணிக்கு வேலை.கடைக்குப் போய் அவவுக்கு என்ன பிடிக்குமெண்டு சுத்துறதே நேரமாகுது.வீட்டுக்கு வந்தா இண்டைக்கு எதை வெட்டினது எதை ஒட்டினதெண்டு சொல்லிக் கதைச்சு பிறகு சமைச்சுச் சாப்பிட்டுப் படுக்கவே நேரமாகுது.இதுக்குள்ள இந்தப் பிரச்சனை வேற.

இவவுக்குப் பாவம் சொக்லேட் எண்டா நல்ல விருப்பம்.இரண்டு நாள் சொக்லேட் சாப்பிட்டதைப் பாத்திட்ட இவவின்ர விரிவுரையாளர்200-300 பேருக்கு முன்னால மைக்ல சொல்லிப்போட்டாராம்.கோலா குடிச்சதையும் சேர்த்துச் சொல்லிப்போட்டாராம்.அவவுக்கு வெக்கமாப்போச்சு.இப்ப வீட்ல மட்டும்தான் சொக்லேட் கோலா.2-3 மாசத்தில மாணவர் விடுதியில போய் இருந்திடுவா.போக்குவரத்துக்கே நேரம் வீணாப்போகுதாம்.பிறகென்ன நான் எப்பவும்போல கொம்பியூட்டரோட குந்தியிருப்பன்.இதாலதான் இப்ப கொஞ்சம் குறைச்சிருக்கிறன்.உங்கள் எல்லாருக்கும் சந்தோஷமும் நிம்மதியுமாக்கும்.இருங்கோ..... இருங்கோ.நானும் நேரத்துக்கும் நித்திரை கொள்றனெல்லோ !

வேலை இடத்திலயும் கட்டிட வேலை செய்யினம்.30,000 மில்லியோன் செலவழிச்சு 200 வருஷக் கட்டிடங்களைத் திருத்தியெடுக்கினம்.அதால நேற்று வேலை இடத்தில் எல்லா வேலையாட்களும் எங்கள் சாப்பாட்டுச் சாலையில் இருந்து சாப்பிட்டம்.எப்பவும் நானும் அங்கதான் சாப்பிடுவன்.நேற்று வந்த எங்கட ஹொட்டல் பெரியவர் தனக்கு வயிறு கொஞ்சம் சரில்லையெண்டு சாப்பிடாமப் போய்ட்டார்.கள்ளர்.அவரின்ர பார்வையில நடத்துற அடுப்படிச் சாப்பாட்டைத்தானே நானும் 9 வருஷமாச் சாப்பிடுறன்.இருக்கட்டும் இனி சாப்பாட்டுக் காசு கழிக்கட்டுமெண்டுதான் பாத்துக்கொண்டிருக்கிறன்.

பிறகு எப்பவும் ஞாயிற்றுக்கிழமைல கோபிநாத் நடத்துற விஜய் தொலைக்காட்சி நீயா நானா பாத்திட்டுத்தான் படுப்பன்.இந்தக்கிழமை மாமியாய் மருமகள்களைக் கூப்பிட்டு வச்சு நல்ல விஷயம்தான் கதைச்சார் கோபி.ஆனாலும் வீட்லபோய் எந்த மாமி மருமகள்கள் சண்டை போட்டிச்சினமோ.பாவம் அந்த நடுவில நிக்கிற நாயகன்.

கடாபியையும் கலைச்சுப்பிடிச்சு ஒருமாதிரிச் சுட்டுப்போட்டாங்கள்.கடாபியப் பற்றிக் கதைச்சால் எங்கட மாத்தையா சிவப்புச் சட்டைக்காரர் வந்தாலும் வந்திடுவார் ஞாயம் கேக்க.மனச்சாட்சியைக் கேட்டுப் பார்க்க அவருக்கெங்க நேரம்.யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் மொட்டையடிக்கவே அவருக்கும் அவரிண்ட குடும்பத்துக்கும் நேரம் போகுது.

உலகத்தில நாட்டில எவ்ளோ பிரச்சனையிருக்க என்ர பிரச்சனை...சரி நீங்களே சொல்லுங்கோ என்ர பிரச்சனை தீர்க்க என்ன வழி.தீபாவளியோடயாவது என்ர பிரச்சனையை முடிக்கவேணும்.அதான் உங்களிட்ட கேட்டு வைக்கிறன்.சரி எல்லாரும் ஆடு வெட்டி சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்கோ.என்ர பிரச்சனையையும் பாத்துக் கீத்து.... !!!!!வணக்கம் சேர்...என்னை அடையாளம் தெரியுதோ உங்களுக்கு?

ஏன்டாப்பா இப்படிக் கேட்கிறாய்...என்னட்ட படிச்ச பெடியன்தானே நீ...?

ஓம் சேர்.அ..அது... வந்து... ஒ...ஒரு விஷயம் சொல்லவேணும் !

என்ன சொல்லு...இது...வார்த்தை திக்கித் திக்கி வருது...உடம்பு நடுங்குது... நீ என்னவோ கோக்கு மாக்குச் செய்திருக்கிறாய்போல !

எப்படிச் சொல்லுறீங்க ?

நான் சொல்லேல்ல... பஞ்ச தந்திரம் சொல்லுது.

என்ன சொல்லுது ?

ஒரு குற்றவாளி எப்படி இருப்பான் என்பதற்கு சில அடையாளம் உண்டு என்று சொல்லுது !

அப்படியா.....!?

ஓம்... குற்றம் செய்து விட்டுப் பயந்து போன ஒருத்தனுக்கு முகம் வெளிறியிருக்குமாம்.பேச்சுக் குளறுமாம்.மிரண்ட பார்வை...ஒடுங்கிய கர்வம்... தள்ளாடித் தள்ளாடி நடப்பான்.முகம் வெளுத்துப் போகும்.நெற்றியில் வியர்த்துக் கொட்டும்.வார்த்தை திக்கித் திக்கி வரும்.உடல் நடுங்கிக் கொண்டிருக்கும்.பார்வை கீழ் நோக்கிச் செல்லும்.இந்த வெளிப்படையான அடையாளங்களைக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறது பஞ்ச தந்திரம்!

இந்த அறிகுறி எல்லாம் இப்ப உன்னட்ட இருக்கு.என்ன சொல்லு.எதுக்காக இந்த நேரத்தில என்னைத் தேடி வந்தாய்?

அழைப்பிதழ் ஒண்டு கொடுக்க...!

என்ன அழைப்பிதழ் ?

கல்யாண அழைப்பிதழ் சார் !

யாருக்குக் கல்யாணம் ?

எனக்குத்தான் !

அடப்பாவி... அதுக்காகவா இப்படிப் பயப்பிட்டு நடுங்குறாய்.சந்தோசப் படவேண்டிய விஷயம்தானே இது ?!

கொண்டா இப்படி... யார் பிள்ளை?

உங்கட மகள் தான் சேர்.....!

Tuesday, August 09, 2011

மாய உலகம் தேடவிட்ட மூன்றுக்கள்.

சின்னச் சின்னக் கேள்விகளானாலும் நம் மனதை வெளிப்படுத்தும் கேள்விகள்.வலைத்தளத்திற்குப் புதியவர் மாய உலகம்.அவரின் அன்பு அழைப்பை ஏற்று இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

எனக்கொரு குணம்.எனக்கு அப்பாவென்றால் உயிருக்குள் உயிர்போல.அதனால என்னோடும் பழகும் - பார்க்கும் எவரிடமும் அப்பாவைத் தேடுவேன்.ஒரு ஆள் இன்னொருத்தராக இருக்காது என்று அறிந்தாலும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.

அதுபோல எம்மிடமும் சிலர் தம் உறவுகளைத் தேடலாம்.அவர்கள் நினைவில் அல்லது கனவில் அடிக்கடி வரும் ஒரு முகமாகவோ அல்லது குணம் ஒத்துப்போகிறமாதிரியோ நாம் இருந்தால் அதுகூட ஒரு சந்தோஷம்தான்.ஒருவரது தேடலின் பங்கில் நாமும் இருப்பது மனதிற்கு நிறைவாகவே இருக்கும் !

இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை.தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்.

தேடுதல் கூடக்கூட வேகம்,சுறுசுறுப்பு தானாகவே கூடும்.தேடுவதை அடையும்வரை உடலும் உயிரும் சிந்தாது சிதறாது.இயங்கிக் கொண்டேயிருக்கும்.வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்.

1) எனக்குப் பிடித்த முதல் மூன்று...!
எனக்குப் பிடித்தது எதுவும் நீண்ட காலங்கள் என்னோடு நிலைப்பதில்லை.அதனால் பிடிக்கிறது என்று ஆசையோடு எனக்கே எனக்கென்று உறுதிப்படுத்திக்கொள்வதில்லை.

# அப்பா !
# தொலைத்துவிட்ட ஆனால் என்னோடு கலந்துவிட்ட ஒரு நட்பான காதல் !
# தனிமையில் மெல்லிய இசை !

2 ) விரும்பாத மூன்று !
# பிச்சையெடுப்பவர்களையும் பசியோடு இருப்பவர்களையும் காண்பது !
# நீண்ட நேரக் குழந்தையின் அழுகை !
# தமிழர்கள் தமிழ் ஊடகங்களில்(சினிமா,அரசியல் போன்றவை)
ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பது !

3) என் பார்வையில் மூன்று...!
# ஒழுக்கமான நேர்மையான வாழ்க்கை !
# உண்மையான பேச்சு !
# அளவான உணவு !

4) பிடித்த உணர்வுகள் மூன்று...!
# அன்பு !
# கருணை !
# இரக்கம் !

5) பிடிக்காத மூன்று உணர்வுகள்...!
# பயம் !
# பொய் !
# இரட்டைவேடம் !

6) முணுமுணுக்கும் குளியலறைப் பாடல் மூன்று...!
# வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...
# மாலையில் யாரோ மனதோடு பேச....
# அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

7) பிடித்த தமிழ்ப்படம் மூன்று...!
# சிப்பிக்குள் முத்து!
# காதல் கதை!
# ஊமை விழிகள் !

8) அன்புத் தேவைகள் மூன்று...!
# அப்பாவின் குரல் !
# நிலாக்குட்டியின் பிரெஞ்சுப் பாட்டு !
# இன்னுமொன்று சொல்லமுடியாதது !

9) வலிமையை அழிப்பன மூன்று...!
# அன்பு !
# கோபம் !
# தாழ்வு மனம் !

10) குட்டித்தத்துவம் மூன்று...!
# தேவைகள் இல்லாதபோது துயரங்களும் இருப்பதில்லை !
# அச்சம் இதயத்தின் சிறை !
# அன்பாய் இருந்தாற்கூட அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!

11) பயமுறுத்தும் பயம் மூன்று...!
# அடுத்தவர் மனம் நோகாமல் பேசுகிறேனா என்று பயம் !
# இழந்துவிடுவேனோ என்று ஏற்றுக்கொள்ளப் பயம் !
# மறதிநிலை வந்துவிடுமோ என்று பயம்

12) என்றும் நிலைக்க விரும்பும் ஏக்கம் மூன்று...!
# என் சுயநினைவு !
# என் உடற்சுகம் !
# என் குணம் !

13) கற்றுக்கொள்ள விரும்பும் விஷயம் மூன்று...!
# வேற்றுமொழி கலக்காத தமிழ்ப்பேச்சு !
# கொஞ்சம் சமூக சேவை !
# நினப்பதை எல்லாம் எழுத்தில் பதிப்பது !

14) வெற்றிபெற வேண்டிய மூன்று...!
# இறப்பாவது என் மண்ணில் கிடைத்தால்...அதுவும் மூப்பு வரமுன் !
# இழந்துவிட்ட அன்பு மீண்டும் கிடைத்தால்...அதுவும் அதே அன்போடு !
# மூன்று வேளையும் ஒழுங்காகச் சாப்பிட்டு...நேரத்தோடு என்னைமறந்த தூக்கம் !

15) சோர்வு நீக்க வழி மூன்று...!
# இசைகேட்டால்....
# உடற்பயிற்சி செய்தால்...(நான் செய்வதில்லை)
# நேரத்தோடு நித்திரை விட்டெழுந்தால்...

16) எப்போதும் தயாரா இருக்கவேண்டிய மூன்று...!
# துணிந்த மனமும் உடல்நிலையும் !
# தேவைக்கேற்ற பணம் !
# கூப்பிட்டால் ஓடி வரும் ஒரு உண்மையான நல்ல உதவி !

17) வாழ்வின் முன்னேற்றத்திற்கான மூன்று...!
# ஒற்றுமை !
# சோர்வில்லா முயற்சி !
# முடியாது என்கிற சொல்லை மறத்தல் !

18) வாழ்வின் அவசியங்கள் மூன்று...!
# பெற்றவர்கள் - பெரியவர்களின் ஆசீர்வாதம் !
# நிதானம் !
# அறிவு !

19) மனதில் பதிந்திருக்கும் தத்துவங்கள் மூன்று...!
# இதுவும் கடந்து போகும் !
# உரிமைகள் நாமாக எடுத்துக்கொள்வதே தவிர கேட்டு எவரும் தரப்போவதில்லை !
# குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் தத்துவத்தின் சாவி.

20) புரிந்தும் குழம்பும் குழப்பங்கள் மூன்று...!
# நீ...!
# நான்...!
# நாம்...!

21) வாழ்வில் புரியாதது...!
# கடவுள் !
# மனிதன் !
# மரணம் !

22) எரிச்சல்படுத்தும் நபர்கள் சம்பவங்கள் மூன்று...!
# பெருமிதமாகப் பொய் சொல்பவர்கள் !
# குழந்தைகளுக்கு அர்த்தமில்லாத பெயர்கள் வைக்கும் பெற்றோர்கள் !
# தாய் நாட்டைப் பழித்துப் பேசுபவர்கள் !

23) பிடித்த பாடகர்கள் மூவர்...!
# பி.பி.ஸ்ரீனிவாஸ் - சந்திரபாபு
# S.P.பாலசுப்ரமணியம் - K.J.ஜேசுதாஸ்
# சுசீலாம்மா - ஜானகியம்மா

24) இனிமை மூன்று...!
# குழந்தையின் சிரிப்பும் சிணுங்கிச் செல்ல அழுகையும் !
# எதிர்பாராத நேரத்தில் காதலனின் இனிமையான முத்தம் !
# அப்பா கூப்பிடும் குட்டியா !

25) சாதித்தவர்கள் சந்தித்த இடைஞ்சல்கள் மூன்று...!
# வறுமை !
# கிண்டல் பேச்சுக்கள் !
# குடும்பச் சிக்கல்கள் அதாவது நிச்சயம் பிரிவு !

26) பிடித்த பழமொழிகள் மூன்று...!
# எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம்.இன்னொன்று மெளனம் !

# எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது !

# வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான் !

ஓடிப்போகாதேங்கோ.ஒரு கதை சொல்லி முடிக்கிறன்.ஒரு வெள்ளைக்காரர் ஆப்பிரிக்காவில ஆதிவாசிகளின்ர கிராமங்களுக்கு நடுவால நடந்துகொண்டிருந்தாராம்.அவருக்கு ஏதாவது புதுசு புதுசா செய்யிறது எண்டா நிறையப் பிடிக்குமாம்.அவருக்கு நல்லா நீச்சல் தெரியுமாம்.போற வழியில ஒரு பெரிய ஏரியைக் கண்டாராம். அந்த ஏரியைக் கடந்தால் அடுத்த பக்கக் கிராமத்துக்குப் போய்டலாமாம்.அப்ப அவருக்கு நீந்தியே மற்றப்பக்கம் போகவேணுமெண்டு ஆசை வந்திட்டுதாம்.உடனேயே உடுப்புகளையெல்லாம் கழட்டி வச்சிட்டு நீந்தவும் தொடங்கிட்டாராம்.

அப்ப....பாதித்தூரம் போய்க்கொண்டிருக்கேக்க ஆதிவாசிகள் கை தட்டிச் சத்தம்போட்டு ஏதோ எதோ சொல்லிக் கத்திக்கொண்டு இருந்திச்சினமாம்.அவருக்கு இன்னும் குஷி கூடிப்போச்சு இப்ப.அவர் குத்துக்கரணம்(குட்டிக்கரணம்) போட்டுத் தலைகீழா எல்லாம் நீந்திக் காட்டினாராம்.அப்பிடியே கொஞ்ச நேரத்தில கரைக்கு வந்தாராம்.ஆதிவாசிகள் முதுகில தட்டி உற்சாக பாணம் எல்லாம் கொடுத்துப் பாராட்டிச்சினமாம்."நல்லா நீந்தி விளையாட்டுக் காட்டுறியள்.உங்களுக்குப் பயமேயில்லை....."எண்டு திரும்பத் திரும்பச் சொல்லிச்சினமாம்.

"அட இதென்ன....நான் இன்னும் நிறைய வித்தைகள் தண்ணிக்குள்ள காட்டுவன்.கை கால் அடிக்காம மிதந்துகொண்டுகூடப் போவன்"...எண்டு சொன்னாராம்.

"அட...வெள்ளைக்காரரே எங்களுக்கும் இதெல்லாம் அத்துப்படி.ஆனால் இந்த ஏரிக்குள்ளமட்டும் நீந்தமாட்டம்.நீந்தினதுக்காக உங்களைப் பாராட்டேல்ல.இந்த ஏரிக்குள்ள நிறைய முதலைகள் இருக்கினம்.பயமில்லாம நீந்தி வந்தீங்களே.அதுக்காகத்தான் உங்களைப் பாராட்டினம்"....எண்டு சொல்லிச்சினமாம்.வெள்ளைக்காரருக்கு மூச்சு ஒருக்கா நிண்டு வந்திச்சாம்.பாவம்.எண்டாலும் தலை தப்பிச்ச சந்தோஷமெல்லோ !

Tuesday, July 26, 2011

மறக்காத கருப்பு ஆடி.


அவலமும் அவலத்துள் எதிர்ப்பும் இவ்வகையான கணங்களில் உரை நடை தோற்றுப்போகின்றது.ஆனால் கவிதை அந்தக் கணங்களை மீட்டுத்தருகிறது.பாஸில் ஃபெர்னாண்டோ (Basil Fernando) என்னும் சிங்கள வழக்கறிஞர் ஜூலைப் படுகொலைகளின் பல முகங்களைக் கவிதையில் காட்டியிருக்கிறார்.அவருடைய "தார்மீக சமூகம்" என்கிற கவிதை கொலையாளிகள்மீதும் எனதும் அவரதும் சமூகத்தின் மீதுமான பெருங்குற்றச்சாட்டாகும்.

அந்தக் கவிதையைத் தொடர்ந்து அவரெழுதிய மற்றுமொரு கவிதைதான் "ஜூலை 83:மேலும் ஒரு சம்பவம்".இது இன்னுமொரு பெருங்குற்றச்சாட்டு.கவிதையில் வருகிற "மேலும்ஒரு" என்ற தொடர் எழுப்புகிற முரண்நகை மிகுந்த பலம் வாய்ந்தது.அதன் நோக்கமே இத்தகைய முரண்நகையைக் கிளப்புவதுதான்.எனினும் வேறொரு தலைப்பையும் ஒருவர் எண்ணிப் பார்க்க முடியும்.அவலத்துள் எதிர்ப்பு அந்தக் கிழமை இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றிய பாஸில் ஃபெர்னாண்டோவின் கவித்துவ விவரணம் அந்த வாரம் கொல்லப்பட்ட அத்தனை தமிழர்களதும் அவலத்தையும் வலியையும் ஒரு சேர எழுப்புகிறது.அது மட்டுமன்று பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதை சுமத்துகிற குற்றச்சாட்டுள் இன்னுமொரு விடயமும் பொதிந்திருக்கிறது.பயங்கரமான அவலத்தை எதிர்கொள்ளப்போகும் ஒரு தமிழர் வெளிப்படுத்திய அழிக்க முடியாத எதிர்ப்பே அது.
அந்தக் கவிதை.....

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்.

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி
எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர் நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை.

குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால் திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது.

அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.

அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.


இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது.நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம்.வலியுடன் ஆனால் சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை.நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர்.நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது.வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால் உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.‘வெகு சாதாரணமாக’ என்பதை அழுத்திச் சொன்னார்."ஏராளமான சம்பவங்களை நான் பார்த்துவிட்டேன்.போலிஸ்காரர்கள் இவற்றைக் கணக்கிலெடுக்கவே இல்லை."

சம்பவங்களைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கதைப்பதே அந்த நாள்களில் வழமையானதொன்றாக இருந்தது.இந்தச் சம்பவமும் அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது.எனினும் ஒருவருக்காவது இந்தச் சம்பவம் ஆச்சரியத்தைத் தரவில்லை அவருடைய நண்பர்கள் வட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் பற்றிக் கோபமும் துயரமும்தான் இருந்தன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.

ஆனால் என்னுடைய அக்கறையோ அந்த ஊர் பெயர் தெரியாத தமிழ்த் தந்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டிய எதிர்ப்பு பற்றியது.முகம் தெரியாத அந்தத் தமிழரின் ஒரு தந்தையின் மிகுந்த உறுதிவாய்ந்த அந்தச் செயல் வார்த்தைகள் பேசுவதைவிடப் பெரிதும் பலமாகப் பேசிற்று.அவருடைய செயலைவிட மிகக் காத்திரமான எந்த அறிக்கையும் வெளிவர முடியாது.அது ஒரு கிளர்ச்சியின் செயல்.வன்மையான கண்டனம்.மானுடத்தின் மீது பொதுவாகவும் சிங்களவர்மீது குறிப்பானதுமான குற்றச்சாட்டு அது என்றும் சொல்கிறார்.

யூலை 1983...

இனப்படுகொலைகளின்போது தப்பிப் பிழைத்தவர்கள் பாதிக்கப்பட்டோர் கொல்லப்பட்டோரை நினைந்து அழுவோர் ஆகியோரின் நினைவுக் கணங்களில் கொலையாளிகள் பற்றிய எண்ணங்களும் தவிர்க்க முடியாமல் பிணைந்திருக்கும்.எல்லாப் படுகொலைக் காலங்களிலும் கொலையாளிகள் எரியூட்டுவோர் கொள்ளையடிப்போர் எனப் பலதரப்பினர் இருக்கத்தான் செய்வர் இவர்கள் வெறுமனே ‘காடையர்கள்; காட்டுமிராண்டிகள்’ அல்லர்.இனப்படுகொலைகளில் ஈடுபட்டோர் பழியை வேறு யாரிடமாவது சுமத்தி விட்டுத் தாம் விலக நினைக்கிற மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் அரசாங்கத்தின் அடியாள்களாக இருக்கலாம்.ஜூலை83 இல் இத்தகைய வெற்றிக்களிப்பின் கணங்களில் ஒன்றை உள்ளூர்ப் படப்பிடிப்பாளர் ஒருவர் படம் எடுக்க நேர்ந்தது.ஆடை களையப்பட்டு பீதியுடன் இருக்கும் தமிழர் ஒருவரைச் சூழ நின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களையும் மனிதர்களையும் அந்தப் படம் காட்டியது.அந்தத் தமிழர் கொலை செய்யப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பு நகரில் பொறள்ளை என்னுமிடத்திலிருந்த பஸ் நிலையத்துக்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில் 24 ஜூலை 1983 திங்கள் கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. அன்றைய நாளைத்தான் ‘கறுப்புத் திங்கள்’ என்று அழைக்கிறார்கள்.ஜூலை 83இன் முதலாவது படுகொலைகளில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும்.இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க.இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர்.படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார்.கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க தெரிவித்தார்.

இனப்படுகொலைகளின்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய குதூகலத்தை ஒட்டுமொத்தமாகவே விசித்திரமான மடத்தனம் என நாம் ஒதுக்கிவிட முடியாது.இன்னொரு சிங்கள நண்பர் சொன்னது இந்தக் கதை.

கண்டி நகரின் பேராதனை வீதிக்கு அண்மையில் ஒரு ‘கௌரவமான’ தெருவில் குடியிருந்தவர் அவர்.ஜூலை 83 படுகொலைகள் கண்டியிலும் பரவலாகவும் கொடூரமாகவும் இடம்பெற்றன.தெருவில் இருந்த தமிழ் வீடுகளைத் தேடிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் அலைந்தது.தமிழ் மூதாட்டி ஒருவர் குடியிருந்த வீட்டை இனங்கண்ட கும்பல் நேரே அங்கு சென்றது. நல்லவேளையாக ஏற்கனவே அந்த மூதாட்டி பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.கும்பல் வீட்டை உடைக்க ஆரம்பித்தது.எனது நண்பரும் கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக அங்கே நின்றார். தமிழ் மூதாட்டியின் வளர்ப்புப் பிராணியான அல்சேஷன் நாயைக் கும்பல் கண்டுபிடித்துவிட்டது.அந்த நாய் துண்டு துண்டாக வெட்டப்பட்டது.கும்பலுக்கு மிகுந்த கொண்டாட்டம்.

பயங்கரவாதம் எனும் போர்வையில் நடாத்திய ஒரு இனப்படுகொலையே 1983இல் நடைபெற்ற நாடு தழுவிய இனக்கலவரம்.கேட்டுப் பெற முடியாததை போராடிப் பெற புறப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு குத்திய முத்திரைதான் பயங்கரவாதம்.ஆனால் ஸ்ரீலங்கா அரசின் ஏவல்படைகள் ஈழ மண்ணில் செய்த அட்டூழியங்களிற்கு முற்றுப்புள்ளி இல்லை.1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்காவின் தனிச் சிங்களச் சட்டம் 1974இல் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்,1983இல் யாழ் நூலக எரிப்பு என்று வளர்ந்து 1983இல் நாடு தழுவிய இனக்கலவரம் ஸ்ரீலங்கா மூர்க்கத்தனமாக நடாத்தப்பட்டது.

1983 யூலை 23இல் திருநெல்வேலியில் 13 ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொரில்லாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர்.யூலை 24இல் இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பில் உள்ள கனத்தை பொது மயானத்தி்கு கொண்டு வரப்படுகிறது.இதன் எதிரொலியாக பொறள்ளையில் ஆரம்பித்த இனக்கலவரம் காட்டுத் தீ போல் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றது.தமிழர்களைக் கண்ட இடத்தில் தாக்கினர்.கொள்ளையடித்தனர் கற்பழித்தனர் தீ வைத்தனர்.அன்றைய ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் ஆதிகாரத்திற்கு அப்பால் நிலைமை கட்டுக்கடங்காது சென்றுவிட்டது. ஏனெனில் அவருடைய அமைச்சர் சிறில் மத்யுவும் இராணுவமுமே இனக் கலவரத்தின் சூத்திரதாரிகள்.ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்பட்ட போதிலும் வாக்காளர் பட்டியலை வைத்து வீடுகள் தொழிற்சாலைகள் கடையை இனவெறிக் கும்பல் இனங்கண்டது.

கொள்ளுப்பிட்டி பொறள்ள,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை என்று கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் 2000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.ஒரு இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் வீடிழந்தனர்.தமிழ் தொழிலதிபர்களான குணரத்தினம்,ஞானம் மகாராஜா போன்றவர்களின் ரெக்ஸரைல்ஸ் பிலிம் வினியோகம் போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றை எரிந்து நாசமாக்கினர்.இதன் மூலம் மாத்திரம் 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும் 1 1/2 இலட்சம் பேருக்கு மேல் வேலையும் இழந்தனர்.இவர்களின் புத்தியற்ற வேலையால் சிங்கள மக்களும் வேலையிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதைவிட மாத்தளை,நுவரேலியா,அநுராதபுரம்,கண்டி என்று தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் வன்முறைகள் நடந்தேறின.

ஸ்ரீலங்கா அரசின் சித்திரவதைக் கூடங்களை வெலிக்கடை,யாழ்க்கோட்டை ஆனையிறவு, பனாகொடை,குருநகர்,மட்டக்களப்பு என்று வரிசைப்படுத்தலாம்.பின் நாளில் குருநகர் இராணுவ முகாமினை தகர்த்து யாழ்/கோட்டை ஆனையிறவு முகாம்களை தாக்கி கோட்டையை முற்று முழுதாக கைப்பற்றினர்.1984இல் இரண்டு தடவைகள் மட்டக்களப்பு சிறை உடைக்கப்பட்டு பல ஈழப் போராளிகள் மீட்கப்பட்டனர்.பலத்த காவலிற்கு மத்தியிலான பனாகொடை முகாமில் இருந்து மகேஸ்வரன் என்ற போராளி தப்பி பனாகொடை மகேஸ்வரன் என்ற புகழ் பெற்றார்.

ஸ்ரீலங்காவிலுள்ள சிறைச்சாலைகளில் மிகப்பெரியது வெலிக்கடை சிறைச்சாலையாகும். இது ஒரு சிலுவை அமைப்பாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.இங்குள்ள சப்பல் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஏ 1,பி 2,சி 3,டி 4 என நான்கு பிரிவுகள் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளன.1983 யூலை மாதம் சி 3 பிரிவில் பிரிவில் பனாகொடை இராணுவ முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 தமிழ் கைதிகளும் பி 2 பகுதியில் 1981 ஏப்பிரல் 5ஆம் திகதி கைது செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை உட்பட ஜெகன்,நடேசதாசன்,சிவபாதம் மாஸ்டர், தேவன் உடன் வேறு சில கைதிகளும் தனித்தனியாகப் பூட்டப்பட்டு இருந்தனர்.இந்த ஆண்டு மேல் மாடிகளிலிருந்தும் சுமார் 600 சிங்கள கைதிகள் பலதரப்பட்ட குற்றங்களிற்காக தண்டிக்கப்பட்டு இருந்தனர்.இங்கு இருந்த தமிழ் போராளிகள் பல காரணங்களிகாக கைது செய்யப்பட்டிருந்தனர்.1981 ஏப்ரல் 5ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை குட்டிமணி ஆகியோரும் 22ஆம் திகதி ஜெகனுடன் பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.1983ஆம் ஆண்டு பெப்பிரவரி 24ஆம் நாள் தங்கத்துரை நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் "நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளல்ல" என்ற வடிவில் வெளியிடப்பட்டது.அவற்றின் சில பகுதிகள்...

"பயங்கரவாதம் கொள்ளை என்கிறீர்கள்.ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடாத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்க முடியாது.அதே ஏவல் படைகள் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு அறியாத இரகசியங்கள் அல்ல.இத்தனை கேவலங்களையும் நடாத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மை பயங்கரவாதிகளாய் சித்தரிக்க கச்சை கட்டியிருப்பதை விட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்."

"பிரிவினை கோருகின்றோம்.நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கிறீர்கள் நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?ஆங்கிலேயரால் திருப்பி ஒப்படைக்கவில்லை.எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம்.யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.இந்நிலையில் தாம் கோருவது விடுதலையேயன்றி துண்டாடல் அல்ல."

"எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகமோ அன்றி பயங்கரவாதமோ என உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை."

"இத்தீவில் வனவிலங்குகளிற்கேனும் ஒரு வில்பத்து,யாஎல,சிங்கராயக்காடு என வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு.ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்கு பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை."

"நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மனநோயாளிகளோ அல்லர்.மாறாக விடுதலையை முன் வைத்துப் போராடும் ஓர் ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்."

"நாம் விடுதலை பெறுவது நிச்சயமான உண்மை.பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச் சட்டங்களும் எம்மை அணுகா.எமது கடமையை முடிந்தவரை செய்த மன நிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் கழிக்கவோ... வேண்டுமாயின் மரணத்தைக் கூட தழுவவோ நாம் தயங்கவில்லை."

இந்நீதி மன்றத்தில் போராளிகளிற்காக புகழ் பெற்ற சட்டத்தரணிகள் சிவசிதம்பரம்,கரிகாலன் ,சந்தியேந்திரா குமாரலிங்கம் போன்றோர் வாதாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஏப்பிரல் 7ஆம் திகதி உமா மகேஸ்வரன் சந்ததியார் ஆகியோரை சந்தித்ததாகவும், இந்தியாவிற்கு தப்ப வைத்ததற்காகவும் டேவிட் அவர்களையும் அதே குற்றங்களின் சந்தேக நபராக டாக்டர் இராஜசுந்தரம் அவர்களால் ஸ்ரீலங்காவின் இரகசிய பொலிஸ் பிரிவினர் கைது செய்திருந்தனர்.இவர்கள் மூலம் காந்தியம் என்ற அமைப்பு உருவாக்கப் பெற்றது.வவுனியாவில் 12 நவீன பண்ணைகள் நடமாடும் வைத்தியசாலைகள் பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள் சிறுவர்களிற்கான பால்,திரிபோசா மா விநியோகம் சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் ஏறத்தாள 5000 மலையக மக்கள் வவுனியா திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களின் குடியமர்த்தப்பட்டனர்.இந்த வேலைத்திட்டங்களின் வருடாந்த வரவு செலவுத்திட்டம் 5,000,000 ரூபாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"சுதந்திரன்" ஆசிரியர் கோவை மகேசன்.தமிழீழ அணியின் தலைவர் டாக்டர் எஸ்.ஏ. தர்மலிங்கம் (75 வயது) சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றத்திற்காக சந்தேக நபர்களாக 1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி விரிவுரையாளர் நித்தியானந்தன்,நிர்மலா நித்தியானந்தன் மற்றும் மதகுருமாரர்கள் சிங்கராயர்,சின்னராயர்,ஜெயகுலராஜாவுடன் மாஸிச எண்ணங்கள் சிந்தனைகள் கொண்டிருந்த பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களோடு தமிழீழப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் துரதிஷ்டவசமாக கைது செய்யப்பட்டவர்கள் பலர்.வெளிநாட்டுப் பயணத்திற்கு 50,000 ரூபா கட்டிய ஜெயதாஸ் ஏஜன்சிக்காரால் தமிழீழப் போராளி என போலீசாருக்கு இணங்காட்டப் பட்டார்.ஐம்பது வயதுடைய பாலசிங்கம் என்பவர் கிணறு வெட்டுவதற்காக வைத்திருந்த டைனமற்றால் கைது செய்யப்பட்டிருந்தார்.வவுனியாவில் நடைபெற்ற இலங்கை விமானப் படையினருக்கு எதிரான தாக்குலின் பின் துவக்கு கடையொன்றினுள் எறியப்பட்டிருந்தது.எந்தத் தொடர்பும் இல்லாத கணேசலிங்கம் (26 வயது) கைது செய்யப்பட்டார்.இவ்வாறு பலருடைய சோகக் கதைகளை வரிசைப்படுத்த முடியும்.

தமது மண்ணின் மைந்தர்கள் ஸ்ரீலங்காவின் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகளாக அடைபட்டு அவர்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அங்காது.15 நிமிடமே வெளியில் வருவார்கள்.மிகுதி 23 மணி 45 நிமிடங்களும் தொடர்ந்து பல நாட்களாக கையில் விலங்குடன் சாப்பாடு கொடுக்காமல்,பின்பு உப்புக்கூடிய சாப்பாடுகளையும் கொடுப்பார்கள். சிறை வளவில் மழை பெய்து நிற்கும் வெள்ளத்தில் உருளச் செய்வார்கள்.தலைகீழாகக் கட்டித் தொங்விட்டு மிளகாய்த்தூள்புகை போடுவார்கள்.இவையெல்லாம் எந்த ஆடையுமின்றி நிர்வாணமாகவே செய்யச் சொன்னார்கள்.உற்றார் உறவினர் பார்க்க அனுமதிவில்லை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக 25.07.1983-ல் பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு நடந்தேறிய இனவெறிக் கொலையே உச்சக்கட்டமானது.

வெலிக்கடையின் சிலுவைக் கட்டடததினுள் பாலித (Location Officer) ஜெஜஸ் (Assistant Cheif Jailer) சமிரத்னா (Jailer) போன்றவர்களின் ஏற்பாட்டின் பெயரில் சிங்களக் கைதிகளை ஆயுதமாக்கி நிராயுதபாணியான தமிழ் கைதிகளின் கதவுப் பூட்டுகள் திறக்கப்பட்டு மண்டைகளைப் பிளந்து,கை கால்கள் வெட்டப்பட்டு,குரல் வளைகள் அறுக்கப்பட்டு, இதயங்களைப் பிளந்து தமிழ் இரத்தம் ஆறாக ஓடியது.இத்தனைக்கும் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்காவின் இராணுவம் வெலிக்கடையைச் சுற்றி தமிழ் போராளிகள் தப்பியோடாமல் காவல் புரிந்து கொண்டிருந்தது.எமது மக்களின் குற்றுயிரான உடல்கள் இழுத்து வரப்பட்டு அங்கிருந்த புத்த விகாரையின் முன்பு இருந்த புத்தரின் முன் போடப்பட்டன.சிங்கள கைதிகளின் வழிபாட்டிற்காக புத்தர் சிலையுடன் கூடிய விகாரை ஒன்று அங்கு அமைந்திருந்தது.
Black Moon - the 1983 riots in Sri Lanka
மரண ஓலங்கள் கத்தி கோடாலி கம்பியால் நிரந்தரமாக நிறுத்தப்பட்டன.
மரணதண்டனையென நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்னபோது குட்டிமணியும்,ஜெகனும் தமது கண்களை கண் பார்வையற்ற தமிழர்களிற்கு வழங்குவதன் மூலம் மலரும் தமிழீழத்தை தமது கண்கள் காணட்டும் என்று தமது இலட்சியக் கனவினைச் சொல்லியிருந்தனர்.அந்தோ பரிதாபம்....உயிருடன் அவர்களின் கண்களைத் தோண்டியெடுத்தனர்.நிர்வாணமாக்கி ஆணுறுப்பை வெட்டினர்.இரத்தத்தைக் சுவைத்துப் பார்த்தனர்.

பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவன் மயில்வாகனம் கைதிகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் ஒளித்திருப்பதைக் கண்ட ஜெயிலர் சமிரத்னா ரத்தம் பீறிட குரல் வளையைப் பதம் பார்த்தான்.சிங்கள கொலைஞர்கள் "ஜெயவேவா" (மகிழ்ச்சி ஆரவாரம்) என்று விசிலடித்துக் கும்மாளம் கொட்டினர்."நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர் கண்டு" என்று இந்நேரத்தில் பாரதியை நினைவுகூராமல் இருக்கத்தான் முடியுமா?

புத்தன் சொன்ன போதனை பொய்யாகிப் போகிறது என் மண்ணில்....!
"அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு ஞானம் வழங்குவதற்காகவே நான் வந்திருக்கிறேன்.உத்தம புருஷனானவன் ஜீவ கோடிகளுக்கு நன்மை புரிவதில் தன்னை இழந்துவிட வேண்டும்.கை விட்டோரை அவன் கைதூக்கிவிட வேண்டும்.இல்லாவிட்டால் அவன் உத்தம புருஷன் ஆகமாட்டான்.ஜீவ காருண்யமே என்னுடைய மதம்.அதனால்தான் இவ்வுலகில் சுகபோகங்களில் வாழ்பவர்களுக்கு அதை அனுஷ்டிப்பது கஷ்டமாக இருக்கின்றது.முக்திக்கான வழி எல்லோர்க்கும் தெரிந்திருக்கின்றது.உயர் குலத்தவனைப் போலவே சண்டாளனும் மூடிவிடுகிறான்.நாணற் குடிசைகளை யானை முறித்து எறிவது போல உங்கள் ஆர்வங்களை ஆசைகளை அழித்து விடுங்கள்.தீமையை அழித்து ஒழிக்கும் அருமருந்தே அறிவாகும்."

கருத்துக்களும் படங்களும் உதவி...இணையம் விக்கிப்பீடியா !

Thursday, July 07, 2011

குழந்தைகள் குழந்தைகளாக.

நேற்று இரவு சிறுவர்களின் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவர்களின் திறன் என்னை மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களை என்ன பாடுபடுத்தி இந்த நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் பெற்றவர்கள்.சந்தோஷம்தான்.ஆனாலும் பொம்மையும் பந்துமாய் தாங்களே மாறி விளையாடும் இவர்களைப் பொம்மைகளாக்கி சொல்வதைக் கேட்க வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் அற்புதமான சிற்பிகள் அவர்களது குருமார்கள்.அந்தச் சிந்தனையில்தான் தோன்றிய சில விஷயங்கள் இங்கு படித்த...கேட்ட சிலவற்றோடு.

கற்றல் என்பது வெற்றி பெறுதலாய் மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்.மெல்லக் கல்வி தோற்றுப்போய் வெற்றி மட்டுமே இலக்காகிறது.பண்பு குறித்துப் பேசி வந்த பெற்றோரும் ஆசிரியர்களும் இன்று ஆளுமை குறித்துப் பேசுகின்றனர்.ஆளுமை என்பது வெற்றி பெற்றோருக்கான குறியீடு ஆகும்.கதைகளோ கட்டுக் கதைகளோ நிறையச் சொல்வது வெற்றி பெற்றோரைப் பற்றியேதான்.

"என் அண்ணன் மகன் ஆறு மாதத்தில் குப்புற விழாமலேயே தவழ ஆரம்பிச்சிட்டான்."மிகச் சிறிய பருவத்திலேயே வெற்றி தோல்வி குறித்த பேச்சுகள் தொடங்கி விடுகின்றன.

குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிடும் எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன.ஒன்று அறிவின் ஆதிக்கம்,மற்றொன்று பெரியவர்களின் எதிர்பார்ப்பு.

உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றும் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும்,பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

சரி – பிழை கண்டுபிடிக்கும்வரை அவர்களோடு நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்.அபோதுதான் குழந்தைகளை நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறது..

சுவிஸ் நாட்டு உளவியல் நிபுணர் ஜீன் பியாஜெட் (Jean Piaget 1896-1980) பற்றிக் கல்வியாளர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.அவசரம்… வேகம்… முந்துவது போன்ற ரேஸ் மைதானத்து வார்த்தைகள் கல்விக் கூடங்களை வந்து ஆக்கிரமித்தபோது குழந்தை எவ்வாறு சுயமாக படிப்படியாகக் கற்கிறது என்பதை வெற்றிப் பைத்தியங்களுக்கு மண்டையில் அடித்து விளக்கியவர் பியாஜெட்.

பியாஜெட் ஐந்து வயதுச் சிறுமி ஜுலியாவுடன் நடத்திய சிறிய ஓர் உரையாடல் கல்வி உலகின் கவனத்தைப் பற்றிப் பிணித்தது.காற்று உரையாடல் என அது பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

பியா: காற்று எப்படி வருது ஜுலி?

ஜுலி: மரத்தில இருந்துதான் !

பியா: அது எப்படி உனக்குத் தெரியும்?

ஜுலி: மரம் கிளைகளை ஆட்டி அசைக்கக் காத்து வருதே.நான் பாத்திருக்கிறேன் !

பியா: அப்படியா? எனக்குச் செய்து காட்டு!

ஜுலி: பாருங்க இப்பிடித்தான்! (தன் கைகளை அசைக்கிறாள்)

பியா: காத்து வரலயே!…

ஜுலி: ம்ம்! மரம் பெரிசுதானே! அதுக்கு நிறையப் பெரிய கை இருக்கு.அது அசைச்சா காத்து வந்திடும் !

பியா: அப்போ கடல்ல எப்படி ஜுலி காத்து வருது? அங்க மரங்களே இல்லையே!

ஜுலி: ம்ம்ம்! காத்து தரையில் இருந்து கடலுக்குப் போகுது.இல்ல! இல்ல! அது காத்து இல்ல.அலை !

பியாஜெட் ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடல் நடத்தியவர்.பெரிய உலக அறிவுச் செய்திகளை அவர் ஒருபோதும் குழந்தைகளோடு பேசும்போது நடுவில் திணித்துச் சொல்வதில்லை.

வயது வந்தவர்களின் அறிவுலகப் பார்வையின் படி ஜுலியர் சொன்னதெல்லாம் தப்பாக இருந்தாலும்,உண்மையில் அது தப்பு அல்ல என்பது பியாஜெட்டின் கருத்து.எதையும் குழந்தை தன் வழியில் அறியும் முயற்சி இது.

ஜுலி சொன்ன காற்றின் நம்பிக்கைக்குத் தலையாட்டி சரி என்று ஒப்புக் கொள்ளாமலும்,தவறு என்று மறுக்காமலும் பியாஜெட் பேச்சைத் தொடர்ந்தார்.குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும்.வயது வந்தோரின் அவசரத்துக்குக் குழந்தையின் புரிதலைத் திருத்துவதும் சரி செய்வதும் தவறு என்பது பியாஜெட்டின் கருத்து.

தோற்கும் பின்தங்கும் தடுமாறும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள இந்தத் தெளிவும் நிதானமும் தேவை.வயது வந்தோரின் தர்க்க அறிவைக் குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் மேலும் அக் குழந்தைகளிடம் தோல்வியையே திணிக்கிறோம்.குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிறோம்.விம்மிக் குறுக வைக்கிறோம்.

குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பு.குழந்தையை உணர்வில்லாப் பொம்மையாக்கி உங்கள் விருப்பத்துக்கு அதை வளைத்து நிமிர்த்த வேண்டும் என்று திட்டமிட்டால் அந்தக் குழந்தை உங்கள் அன்பான குழந்தையாயில்லை !


“குழந்தைகள் உங்களுடன்
இருக்கலாம்;
ஆனால் அவர்கள் உங்களுக்குச்
சொந்தமானவர்கள் அல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!
உங்கள் சிந்தனைகளைத்
தர வேண்டாம்
அவர்களுக்கென்று சிந்தனைகள்
இருக்கவே இருக்கின்றன”


இது கலீல் கிப்ரான் பாட்டு.

"இதைச் செய்யாதே என்று குழந்தைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்காத பள்ளி.பள்ளிக்குப் பொருந்துமாறு குழந்தைகளைத் திருத்துவதற்கு மாறாக குழந்தைகளோடு பொருந்துமாறு தன்னைத் திருத்தித் திருத்தி அமைத்துக் கொண்ட பள்ளி.ஒவ்வொரு குழந்தையும் ஆர்வம் கொண்டு கல்வியைத் தொடரும் வரை காத்திருந்த பள்ளி.எந்தக் குழந்தைக்கும் தோல்வியுணர்வை வழங்காத பள்ளி."

இப்படியொரு பாடசாலை அமைக்க நினைத்துத் தோல்வியுற்ற நீல் என்பவர்.ஸ்காட்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது (1917) மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார் என்பதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

பணிநீக்கம் செய்யப்பட்டு பள்ளியை விட்டு வெளியேறுகையில் அவர் தன் சின்னஞ்சிறு மாணவர்களுடன் உரையாடுகிறார்:

“நான் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகிறேன் என்பது உங்களுக்குப் புரியுமோ என்னவோ? இருந்தாலும் புரியவைக்க முயற்சி செய்து பார்க்கிறேன்.உங்களுடைய அம்மா அப்பாக்களுக்குப் பிடிக்காததால் நான் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.நான் நல்ல ஆசிரியர் இல்லையாம்.உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து விட்டேனாம்.பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டுப் படம் போடவும் மீன் பிடிக்கவும் விளையாடவும் உங்களைப் பழக்குகிறேனாம்.உங்களுக்குத் தேவையானதைக் கூட நான் சொல்லித் தரவில்லையாம்.

பொலிவியாவின் தலைநகரம் எது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?உங்களுக்குத் தெரியாதல்லவா?இதையெல்லாம் நான் சொல்லித் தரவில்லை அல்லவா?…” இவ்வாறு நீல் பேசிக் கொண்டிருக்கையில் ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?.நீல் பதில் அளிக்கிறார் அது எனக்கே தெரியாது ஜிம்.

பொய்மை கலவாத உரையாடல் இது....
மிக முக்கியமான நிகழ்வொன்று.நிச்சயம் எங்கள் வீடுகளிலும் நடந்திருக்கக்கூடும்.

ஒரு மனநல வைத்தியரும் ஒரு பெற்றோரும் உரையாடும் நிகழ்வு இது !

"நாங்கள் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது எங்கள் 5 வயது மகன் எதிர்பாராமல் கதவைத் திறந்து உள்ளே வந்துவிட்டான்.சுதாகரிக்க முடியாமல் சங்கடப்பட்டுக்கொண்டோம்.என் மனைவி என்னோடு நெருக்கமாகப் படுத்திருந்தாள்.வந்தவன் சும்மாவும் இல்லை."அம்மா என்ன செய்றீங்க நீங்க.இறங்குங்க.நான் அப்பா நெஞ்சில படுக்கவேணும் என்றான்."என்ன செய்ய என்றே தெரியவில்லை என்றார்."

இது என்ன பெரிய விஷயம்."இப்போ இடம் இல்லை.அம்மா குண்டா இருக்கிறா.அவவுக்கு மட்டுமே இந்த இடம் இப்போதைக்குப் போதுமாயிருக்கு."என்று நகைச்சுவையாகச் சிரிச்சுக்கொண்டே சொல்லுங்க.இந்த நேரத்தில் பதற்றம் வேண்டாம்.அதுவே "இவர்கள் இருவரும் ஏதோ தப்புச் செய்கிறார்களோ" என்கிற நினைப்பைக் கொண்டுவரும்.

கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருந்தாலும் பரவாயில்லை டாக்டர்....முழுசா உடலுறவில் இருக்கும்போது படுக்கையறைக்குள் வந்துவிட்டால்......(பகலோ....இரவோ சிலசமயங்களில்.!)

அந்த நேரத்தில் சமாளிப்பது உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்தது.பத்து வயதுக்குக் குறைவாக இருந்தால் ஒரு விளையாட்டாக மாற்றுவதும் சண்டை போடுவதாக காட்டிக்கொண்டு அவனின் திசையை மாற்றுவது உங்களின் திறமை.பத்துக்கு மேற்பட்ட வயதானால் சுதந்திரமாகக் கதைக்க நேரம் கொடுங்கள்.அவன் கதைக்க மறுத்தாலோ அவசரமாக வெளியே ஓடிவிட்டாலோ அவன் குழப்பத்தில் இருக்கின்றான் என்று அர்த்தம்.கூப்பிடுங்கள் விடை என்ன என்று உங்களுக்குத் தெரிந்தாலும் ஏன் என்று கேளுங்கள்.அவன் சொல்லும் பதிலில்தான் பயமோ குழப்பமோ தெரிய வரும்.மெல்ல மெல்லப் புரியவைப்பதும் தெளிவு படுத்துவதும் உங்கள் கெட்டித்தனம்.ஆனால் முக்கியம்.

வெளிநாட்டில் செய்த ஆராய்ச்சியில் பல பெற்றோரிடம் "உங்கள் குழந்தைகளுக்கு என்ன பழக்கவழக்கத்தைக் கற்றுத்தர விரும்புகிறீர்கள்" என்று கேட்கப்பட்டது."எங்களின் கூச்சமோ பயமோ அவர்களுக்கு இருக்கக்கூடாது" என்றார்கள்.செக்ஸ் என்பது கெட்ட விஷயம் என்று உங்கள் மனதில் பதிந்து போயிருப்பதால்தான் பதற்றம் அடைகிறீர்கள் நீங்கள்.முதலில் இதை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்கள் குழந்தை மனநல வைத்தியர்கள்.

ஒரு ஆங்கிலப் படத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.....

நீ...எப்பிடிப் பிறந்தாய் ?

ஒரு ஏஞ்சல் என்னைப் பட்டுத்துணியில் சுற்றி ஒரு பறவையில் அலகில் மாட்டிச்சாம்.அந்தப் பறவை என்னை அம்மா மடியில்கொண்டு வந்து போஓட்டிச்சாம் !

அப்பாடி...இவ்ளோ கஷ்டப்பட்டா நீ பிறந்தியா.என்னை அப்பாவும் அம்மாவும் சேர்ந்துதான் பெத்தாங்க !

Monday, June 13, 2011

முயற்சியின் உயர்ச்சி.

முயற்சி என்கிற கிரியா ஊக்கியைப் பற்றி அறிந்திருக்கிறோமா?எல்லா நல்ல குணங்களும் சிறந்த கொள்கைகளும் முறையான படிப்பறிவு நல்ல சூழல் எல்லாம் அமைந்திருந்தாலும் முயற்சி இல்லாவிட்டால் வாழ்வில் பயன் ஏதுமே இல்லை.

கொஞ்சம் முயற்சி செய்யும் குணத்தை வளர்த்துக் கொண்டால் நல்லது.இழந்தவைகள் இனிக் கிடைக்கப்போவதில்லை.நினைக்கும்போது வேதனையாக இருந்தாலும் புலம்பிக்கொண்டிருக்காமல் (என்னைப்போல) அடுத்த வழி தெரியும் திசையில் நடக்க வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபடுவதே பெருமையையும் வெற்றியையும் தரும்.

எங்களின் மன உறுதியும் முயற்சியின் அளவைப் பொறுத்தே எம் வாழ்வின் வளர்ச்சியும்.

முயற்சி தேவைதான்.அதே சமயத்தில் தன் பலம் மற்றும் அடுத்தவர் பலம் உணர்ந்தே செயற்படுதல் அவசியமாயிருக்கிறது.எங்களின் சக்திக்கு மீறிய செயற்பாடுகள் தரையில் தன் பலத்தை முயற்சித்துப் பார்க்கும் முதலையைப் போன்றது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

முயற்சியின் முழுப்பலனையும் பெறவிரும்பினால் சோம்பலை அறவே ஒழித்துக் கட்டுதல் முக்க்கியம்.(இந்த இடத்தில 3,4 பேர் என்னைக் கலாய்க்க ஓடி வருவினம்.)

முழு முயற்சியுடன் செயல்படும் வழக்கத்தைப் பழகிக்கொண்டால் சோர்வு,ஞாபகமறதி எம்மை விட்டுத் தூரவே போய்விடும்.

சரியான பயிற்சியுடனான முழுமையான முயற்சிக்கு மற்றவர்களின் எந்தச் சூழ்ச்சியும் தடை ஏற்படுத்தமுடியாது.

விதி,நேரகாலம்,அதிக்ஷ்டம்,பயம் என்று புலம்புவதில்லை என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.இப்பிடித்தான் நான்.மனத்தளர்ச்சி இல்லாத முயற்சி விதியையே மாற்றியமைக்கும்ன் சக்தி கொண்டது.சில காலங்கள் தாமதமாகலாமே தவிர நல்லதே நடக்கும்.சத்தியமா நான் சொன்னதெல்லாம் உண்மை.

துயரங்கள் சோர்ந்து போகவேண்டாம்.விடையில்லாத வினாவோ தீர்வேயில்லாத பிரச்ச்னையோ இல்லை.விடைக்கான தீர்வுக்கான முயற்சியை அதிகப்படுத்த துயரங்கள் கைகாட்டி மறைந்துகொண்டேயிருக்கும்.

ஒரு காரியத்திற்காக முயற்சி செய்யும்போது இடையூறுகளால் மனம் தளர்வடையாமல் உறுதி கொண்ட மனம் கொண்டவராய் இருத்தல் அவசியம்.

அனுபவ அறிவு இல்லாத செயல்களில் ஈடுபடும்போது அதைப்பற்றித் தெரிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுவது மிக மிக முக்கியம்.(இதில் நான் நிறையவே அடிபட்டிருக்கிறேன்.)அப்போதான் நிலையான வெற்றி கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல காரியங்களில் கை வைக்காமல் ஒரு செயலில் மாத்திரமே முழுமையாக முயற்சிப்பதால் காலம் தாழ்த்தாமல் வெற்றி கிடைக்கும்.

எத்தனை காலம் சிறப்பாகத் திட்டம் போட்டாலும் அதற்கான செயற்பாட்டின்போது தளராத முயற்சியே சிறப்படைய வைக்கும்.

தளராத முயற்சி எனும் அஸ்திவாரத்தின் மேல் தொடங்கும் நமது வாழ்க்கை பாறை மேல கட்டிய வீட்டைப்போல உறுதியாய் அழகாய் மிளிரும்.(கல்லுப் பாறைக்கு மேல வீடெல்லாம் கட்டேலுமோ எண்டு கேக்கப்படாது...சொல்லிப்போட்டன் )

முயற்சிதான் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கு வழி செய்கிறது. நாம் செய்யும் எல்லா முயற்சிகளிலும் நம்மை நாமே புரிந்து கொள்வது மகத்தானது.நம்மை நாம் புரிந்து கொள்ளாதவரையில் நமக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திகளினால் பயன் எதுவும் ஏற்படாது. பிறப்பு இயற்கையானது போலவே முயற்சியும் நம்முடனேயே இருந்து கொண்டிருக்கிறது.

என் அனுபவம் இவைகள்.எத்தனையோ இடங்களில் மனம் தளர்ந்திருந்தாலும் என் முயற்சியே என்னை ஓரளவு பாதுகாத்து உயர்த்தி வைத்திருக்கிறது.எனக்கு நானே எத்தனயோ தரம் தட்டிக் கொடுத்துச் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
எனக்கு....என் துணிச்சலுக்கு நன்றி....!

ஒரு ஊர்ல (சத்தியமா பாட்டிக் கதை இல்லை.)ஒரு பழ வியாபாரி இருந்தாராம்.அவர் வாழ்க்கையில முன்னேற எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும் கஸ்டமாவே இருந்திச்சாம்.அவரோட மனைவி திட்டிக்கொண்டே இருந்தாவம்.மூன்று பிள்ளைகளும் இருந்திச்சினமாம்.அப்போ ஒரு நாள் தன்ர மூத்த மகனோட தன்ர கவலையை சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தாராம்.அப்ப அவரின்ர மகனுக்கு விளங்கிச்சாம்.

அப்பா பாவம்.அவர் சோர்ந்துபோகேல்ல.எவ்வளவு முயற்சி செய்றார்.ஆனாலும் எங்கட கஸ்டம் கஸ்டமாவே இருக்கு.அதற்காக அவரைச் சோரவிடக்கூடாது எண்டு நினைச்சு அவர்கூடையில இருந்து ஒரு பழத்தைப் பிச்சுக்காட்டி "அப்பா...பாருங்கோ இந்தப் பழத்துக்குள்ள இவ்வளவு விதைகள் இருக்கு.ஆனால் முளைக்கப் போட்டால் எல்லாம் முளைக்குமோ இல்லைத்தானே அதுபோல நாம் முயற்சிக்கிற எல்லாமே வெற்றியாகும் எண்டு நினைக்கிறது சரில்ல.நங்கள் விதைச்சுக்கொண்டேயிருப்போம்.ஏதோ ஒருநாள் நிச்சயமா ஒரு விதை முளைச்சு விருட்சமா ஆகும்.அப்பா கவலைப் படாதேங்கோ.இனி முயற்சிக்கு நானும் கூட உழைப்பேன்"எண்டு சொல்லிச் சமாதானம் சொல்லி ஊக்கப்படுத்தினானாம்.

கதையும் முடிஞ்சுது.காக்காவும் நித்திரையாப் போய்ட்டுது.....!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP