Thursday, September 30, 2010

வெறுத்தலும் வேதனையும்.

நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களுக்கு அது அப்பா அம்மாவாகக்கூட இருக்கலாம்.சங்கடமான கட்டங்கள் வரும்போது நம்மையும் சேர்த்து ஏதேனும் சொல்லிவிடுகிறார்கள்.ஏன் நாம்கூடத்தான் சொல்லிவிடுகிறோம்.நாம் உடனே வேதனைப்படுகிறோம்.அட..சே! எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டார் என்று இந்த ஒரே ஒரு சம்பவத்தை வைத்து முடிவிற்கு வருகிறோம்.

அவர்களும் காலம் முழுதும் அவர்களுக்குக் கீழ்ப்படிவாய் இருந்ததையோ இப்போது தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதையோ உலக அறிவுகளோடு மனம் பக்குவப்பட்டிருப்பதையோ யோசிப்பதில்லை.

மாறாக... மனப்பாதிப்புகளைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை.
நினைப்பதேயில்லை.மனங்கள் கொஞ்சம் தணிந்து ஆறிய பிறகாவது ஏன்...என்ன ஆயிற்று உங்களுக்கு? இப்படியெல்லாம் கோபப்படவே மாட்டீர்கள்! இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லவே மாட்டீர்களே?’என்று கேட்கும் மனநிலை இருப்பதில்லை எமக்கு.எம் கவலையெல்லாம் நாம் அடைந்த பாதிப்பைப் பற்றி மட்டும்தான்.

இதேநேரம் சின்ன வார்த்தையாய் இருந்தாலும் எங்களால் எங்களைப் பெற்று வளர்த்தவர்கள் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பற்றியும் கவலையேயில்லை.

இப்படி நிலைமை மோசமாயிருக்க மனம் விட்டுக் கதைக்கவோ முன்பைப்போல நெருங்கிப் பழகவோ மனம் இணங்காமல் தள்ளி இருத்தலே நல்லதென மனம் ஒதுங்குவது சரியாகுமா.இத்தனை கால அன்பிற்கும் இது எப்படி ஒரு முடிவாகும்!

இந்த இடத்தில்தான் கவனமாக இருத்தல் நல்லது.உறவுகள் பிளவாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.என் அனுபவமும் கூட.எதையும் பெரிதுபடுத்தாமல் அவர்கல் வயதில் பெரியவர்கள்.பேசவோ திட்டவோ உரிமை இருப்பதாய் நினைத்துக்கொண்டு அவர்களை சுகநலம் விசாரித்துப்பாருங்கள்.அழுதேவிடுவார்கள்.

இதில் நன்மைகளும் உண்டு.அவர்களே அவர்கள் தங்கள் பிழையை உணர்ந்து தவிப்பார்கள்.தாங்கள் மனம் நோகப் பேசியும் திரும்பவும் தங்களைத் தேடி வருவதும் தங்கள் மேல் அக்கறைப் படுவதும் இன்னும் இன்னும் அன்பைக் கூட்டும்.மனதை இளக வைக்கும்.

இதைவிட நாங்களும் உன் மனம் நோகப் பேசிவிட்டோம் இனி இப்படி ஏதும் வராது என தங்கள் மனம் விட்டுக் கதைத்து இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டு அன்பை இன்னும் இருமடங்காக்கி நிலைமையை இலேசாக்கிவிடும்.

இப்படியான நல்ல அணுகுமுறைகள் இருக்க நத்தையாய் உள்ளிழுத்துக் கொள்வதும் தொட்டால் சிணுங்கியாய்ச் சுருங்கிக் கொள்வதும் உண்மையான அன்பின் அடையாளங்கள் அல்ல!உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் வாழ்வில் நிச்சயம் இருக்கும்.பகிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயம் எல்லோருக்குமே பயன்படும் !

Friday, September 17, 2010

வேண்டாம் ஒரு மழைநாள்.

இன்று இங்கு மழை.மெல்லக் குளிர்கிறது. போர்வை தேடி நுழைந்துகொண்டுதான் எழுதுகிறேன்.மனம் வெக்கையாய் போர்வை தள்ள நினைத்து விலக்காமல் வெளியே பார்க்கிறேன்.எரிச்சலாய் வருகிறது.இயற்கை அழுவதாய் மழைக்கால இருட்டு மம்மல் இருட்டு ஒரு விதமான சோகத்தையே தருகிறது எனக்கு.

மழையில் நனைவதும்,சேற்றில் விளையாடுவதும் சந்தோஷம் என்றாலும் அந்தக் கருத்த மேகமும்,இடியும்,மின்னலும்,காற்றில் அலையும் மரங்களும்,மரம் விட்டுப் பறக்கும் இலைகளும் எனக்குச் சோகமாகவே படும் சிலநேரங்களில்.இல்லை இல்லையென்று நீங்கள் சொன்னாலும் உணர வைக்கவும் சொல்லவும் எனக்குக் கடினமாகவே இருக்கிறது.

மழை பற்றி அறிந்திருப்பீர்கள்.நிறையவே அறிந்திருப்பீர்கள் குடை தவிர்த்து வெள்ளம் விளையாடிய நினவோடு சந்தோஷம்தான் என்பது உங்கள் கருத்து.ஒரு மழைக்காலத்தில் வெறும் ஒற்றைக்கோட்டுப் பாதை வழியே நடந்து பாருங்கள்.ஒற்றைச் சிட்டுக்குருவியின் சோகம் காண்பீர்கள்.அப்போது சொல்லுங்கள்.

அடர்ந்த மரத்தின்கீழோ,கூரை வீட்டின் கிடுகு சொட்டும் மஞ்சள் நிற மழைநீர் தெறிக்க அந்தத் தாவாரத்திலோ மழைக்காக ஒதுங்கிப் பாருங்கள்.
இன்னும்...இன்னும் தனித்த அந்த மழையின் இருட்டுக்காக ஒரு மெழுகுதிரியையோ மின்சார விளக்கையோ பொருத்திவிட்டுப் பால் விடாத ஒரு வெறும் தேநீரோடு ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள்.அதுவும் சோகமான ஒரு பாடல் அல்லது சோகமான ஒரு நாவலாய் இருந்துவிட்டால் அதைவிடக் கொடுமையான நேரம் இருக்க முடியாது என்பதாய் இருக்கும்.உணரும் சோகம் அதிகமாகவே வலிதரும்.

சோகம் நிறைந்த மழைக்காலங்கள் என் வாழ்வில் தொடர்ந்து வரும் ஒரு உறவுபோல.ஒரு மழைக்காலத்தில்தானாம் நான் பிறந்தேனாம்.ஒருதரம் மழையால் நிரம்பிய கிணற்றுக்குள் விழுந்து மூச்சுத்திணறி விட்ட உயிரை இழுத்து வந்திருக்கிறேன்.ஒரு சந்திப்பும்...ஒரு இறப்பும்...பிரிவுமான தினமும் அதே மழை மேக இருட்டுக்குள்தான்.காடும் மழையும் உறவெனக் கொஞ்சநாள்,வீடும் உறவுமாய் வாழ்ந்தபோதும் கண்கள் மழையாய் பொழிந்த காலங்கள் நிறைய.

வீடு விட்டு உறவுகள் விட்டு மழையென என் மக்கள் பாதையெங்கும் குண்டுகளுக்குள்ளும் குழிகளுக்குள்ளும் நிரம்பிக் கிடக்க,சோவென அடித்த மழையில் என் இனத்தின் இரத்தத்தில் கால் கழுவி ஒருபிடி ஈரமண்ணைத்தானும் கொண்டுவர அனுமதிக்காத சிங்கள இராவணுத்தின் கையை உதறி,அதே மழை நீரில் என் மண்ணைக் கைகழுவி விமானம் ஏறிய நாளும் இதே மழைநாள்தான்.அந்த ஈர உடையைக்கூட மாற்ற மனமற்று மூன்று நாட்களாய் முனகிக் கிடந்து நான் தொலைந்த மழைப்பொழுதுகள் அதிகம்.

என்றாலும் மழை பிடிக்கும்.இங்கே நான் சுவீகரித்துக்கொண்ட சோகம் தவிர மழையும் தூரலும் அதன் சாரலும் களங்கமில்லாத தண்ணீரும் அழகுதான்.மிக மிக அழகு.பச்சைப் பசேல் பூமியும்,ஓடும் வெள்ளமும்,ஒடுங்கி விரைவாய் அடங்கும் பறவைகளும்,குடை மனிதர்களும்,நனைந்த பூனைகளும்,நனையாப் புல் நுனிகளும் அழகு அழகு கொள்ளை அழகு.

எனவே மழை அழகு.கொள்ளை அழகு.அதற்குள் அடைத்து வைக்கப்பட்ட சோகம்தான் சொன்னேன்.என்னை நினைத்தபடி இனி வரும் மழையை அவதானியுங்கள்.சிலிர்த்து சிலிர்த்து மெலிதாய் அழுவதாய் இருக்கும் ஒரு உணர்வோடு தெரியும்.

ஹேமா(சுவிஸ்)

Friday, September 10, 2010

கனவும் நாங்களும்.

கனவு காணாத மனிதனே இருக்க முடியாது. அது ஒரு தன்னியல்பான நிகழ்வு. மிக அவசியமான நிகழ்வும் கூட.சொல்லப் போனால்,கனவுகள் பல பிரச்னைகளுக்கான தீர்வு, சங்கடங்களை நீக்கும் ஒரு திறவுகோல்.ஆனால் நம்மில் பலர் கனவுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை.சிலரோ கனவுகளுக்கான அர்த்தங்களைத் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்தக் கனவு என்பதுதான் என்ன? அது எப்படி உருவாகிறது? அதன் பொருளை எப்படி உணர்வது?அது தேவைதானா என்பது குறித்ததே இக்கட்டுரை.

நம் மனமானது இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று நனவு மனம் என்று அழைக்கப்படும் வெளிமனம்(Conscious Mind).இன்னொன்று நனவிலி மனம் என்று அழைக்கப்படும் ஆழ்மனம்(Sub-Conscious mind or Un-conscious Mind).நாம் உறங்கும் பொழுது நனவு மனம் ஓய்வெடுக்கிறது.ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது.நனவு மனத்தின் நடவடிக்கைகள் பொதுவாக சொற்களாக,வாக்கியங்களாக வெளிப்படுத்தப் படுகிறது.அதையே சிந்தனை அல்லது எண்ணங்கள் என்கிறோம்.ஆழ்மனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறியீடுகளாகவே வெளிப்படுத்தப் படுகின்றன.இவையே கனவுகள் எனப்படுகின்றன.நனவிலி மனத்தில் தோன்றும் இத்தகைய கனவுகளை நனவு மனத்தின்மூலம் ஆராய நினைப்பது கொஞ்சம் கடினம்.ஏனெனில் இரண்டும் வெவ்வேறு வகையானவை. இது தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ச் செய்யுளை வேறொருமொழியில் மொழிபெயர்க்க முயல்வது போன்றது.

நனவிலி மனமானது ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்பை (Pattern) எதிர்பார்க்கிறது. ஒரு பொருளை தொடர்புடைய மற்றொரு பொருள் மூலம் உணர்த்த முற்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதானால் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது.முடியவும் முடியாது.எடுத்துக்காட்டாக நெருப்பு ஒருவரது கோபத்தையும், சிறை போன்ற இடத்தில் மாட்டிக்கொள்வது,மீளமுடியாத ஏதோ ஒரு சிக்கலில் நம் மனம் மாட்டிக்கொண்டு தவிப்பதையும் உணர்த்தலாம்.

ஏதோ ஒரு மனக்குழப்பத்துடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள்.பல சமயம் நீங்கள் விழித்தெழுகையில் அக்குழப்பம் தீர்ந்துபோய் விட்டது போல் உணரக்கூடும்.ஆழ்மனம் உங்கள் உறக்கத்தின் பொழுது கனவுகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டி விட்டது.சொல்லப் போனால் ஆழ்மனம் மிகுந்த சக்தியை உடையது.இது குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.நீங்கள் பார்த்தவை,படித்தவை,கேட்டவை,உங்கள் மேல்மனத்தில் நினைத்தவை இவை அனைத்தும் ஆழ்மனத்தில் சேமிக்கப் படுகின்றன.உங்கள் நனவு மனம் சோர்ந்து உறங்குகையில் ஆழ்மனம் இந்தச் செய்திகளைத் தொகுத்துப் பார்த்து நமது சிக்கலுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறது.

முதலிலேயே சொன்னபடி ஆழ்மனம் இவற்றைப் பல குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்துகிறது.ஆழ்மனத்தின் இந்நிகழ்வினையே நாம் கனவு என்கிறோம்.இது குறித்து சுவையான கதை ஒன்றுண்டு.இன்றைய தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவரான விஞ்ஞானி "சிங்கர் மெரிட்" தம் தையல் இயந்திரத்தில் நூலை ஊசியில் எப்படிக் கோர்த்தால் சரியாக இருக்கும்,இயந்திரம் தடையின்றி இயங்க இயலும் என்பது குறித்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டவாறே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாராம்.தூக்கத்தில் அவரை செவ்விந்தியர்கள் சூழ்ந்துகொண்டு நுனியில் துளையுள்ள ஈட்டி கொண்டு குத்த வருவதைப் போல் அவருக்குக் கனவு வந்ததாம்.அவருடைய குழப்பத்திற்கு விடை கிடைத்துவிட்டது.இன்று நாம் பயன்படுத்தும் தையல் இயந்திரங்களில் ஊசியின் முனையில் உள்ள துளையில் நூல் கோர்க்கப் படுவது நாம் அறிந்ததே அல்லவா !

நனவிலி மனமே கனவின் தாய்வீடு ஆகும்.இங்குதான் நமது அடிப்படையான எண்ணங்கள் வலுவடைகின்றன.இங்குதான் நமது உணர்ச்சிகள்,கருத்துகள்,அறிவு அனைத்தும் உருப்பெறுகின்றன.மேல் மனத்தில் தோன்றும் எண்ணம் எதுவாக இருப்பினும் அது முதலில் நனவிலி மனத்தின் வாயிலாக கனவு மூலம் அறிவுறுத்தப் பட்டதாகவே இருக்கும்.ஆனால் நாம் ஒவ்வொன்றையும் பிரித்தறிய இயலாததால் அனைத்தையும் மேல்மனத்தின் சிந்தனைகள்,செயல்பாடுகள் என்றே கருதுகிறோம்.

சிலர் தங்களுக்குக் கனவுகளே வருவதில்லை என்று கூறுவர்.இது உண்மையில்லை.அனைவரும் கனவு காண்பதுண்டு.சிலர் அதை விழித்தபின்னும் நினைவு வைத்திருப்பர்.சிலருக்கு விழிப்பு வருகையில் கனவு கண்டதே மறந்துவிடும்.இதற்கு போதைப்பொருட்கள் உட்கொள்தல்,மது அருந்துதல்,அளவுக்கு அதிக வேலைப்பளு,மன உளைச்சல் இவை காரணமாக இருக்கக் கூடும்.சிலருக்கோ, பிறப்பிலேயே ஏற்படும் ஜீன் கோளாறு காரணமாக தம் கனவுகள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.அவ்வளவுதானே தவிர கனவே வராமல் இருக்கும் சாத்தியமே கிடையாது.ஏனெனில் இது மூளையின் ஒரு செயல்பாடு.

தூக்கத்தில் நான்கு நிலைகள் உண்டு.ஒவ்வொரு நிலையும் சுழற்சி முறையில் வரும். இந்த ஒவ்வொரு நிலையும் ஒன்று முதல் ஒன்றரை நேரம் இருக்கும்.அதில் REM (Rapid Eye Movement) என்ற நிலையில் கனவுகள் தோன்றுகின்றன.தூக்கத்தின் பொழுது ஒரு சராசரி மனிதனுக்கு மூன்று முதல் ஐந்து கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.முழுமையான எட்டு மணி நேரத்தூக்கம் ஒருவருக்கு இருக்குமானால் அதில் சராசரியாக இரண்டு மணி நேரம் கனவுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் எல்லாக் கனவுகளும் விழித்த பின் நினைவுக்கு வரவேண்டும் என்று அவசியமில்லை.

கனவுகள் ஏன் தோன்றுகின்றன என்பதற்குத் திட்டவட்டமான விடை எதுவும் இதுவரை இல்லை.ஆனால் கனவுகள் மூளை புத்துணர்வு அடைய அவசியமான ஒரு நிகழ்வு என அறிஞர்கள் கருதுகின்றனர். நாம் கணிணியில் Defragmentation என்று ஒரு நிரலைப் பயன்படுத்துகிறோமல்லவா? இது சிதறிக்கிடக்கும் கோப்புகளை நமது Hard Disk Drive இல் ஒழுங்கு படுத்தி வைக்க உதவும் நிரல்.இதனால் நமது தேடும் நேரம் குறைகிறது.அதே போல் வேண்டாத கோப்புகளையும்,நிரல்களையும் நீக்கும் சில மென்பொருட்களும் உள்ளன.இச்செயலினையே நமது மூளை தூக்கத்தின் பொழுது மேற்கொள்கிறது.நனவிலி மனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்துவும்,தேவையற்றவற்றை நீக்கவும் உதவுகிறது.வெளியில் சொல்ல இயலாமல் நாம் மறைத்து மற்றும் புதைத்து வைத்திருக்கும் கோபம்,துயரம் ஆகியவற்றினை மூளை கனவுகள் மூலமாக விடுவிக்கிறது அல்லது வெளியிடுகிறது. இதனால் மனம் லேசாகின்றது.எவ்வளவு பெரிய துயரமானாலும், அதிர்ச்சியானாலும், நாம் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பிவிட உதவும் செயல்பாடு இதுவே.

நம் மனத்தில் தீராத குழப்பங்கள் விடை தெரியாத வினாக்கள் நிரம்பியிருப்பின் ஒரே கனவானது திரும்பத்திரும்ப வரக்கூடும்.உங்கள் கனவின் பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால் உங்கள் கனவில் வந்த நிகழ்வை அலசாமல் உங்கள் எண்ணங்கள்,நீங்கள் பார்த்த ஏதேனும் நிகழ்வுகள்,நீங்கள் யாருடனாவது போட்ட சண்டை முதலானவற்றை அலசிப்பாருங்கள்.உங்கள் கனவுகளுக்கான பொருள் உங்களுக்குக் கண்டிப்பாக விளங்கிவிடும்.

என்றாலும்....நல்லது நடக்கவும் நல்லவராய் வாழவும் கனவுகள் காண்போம் !

----------------------------------------------------------------
நட்புடன்...முரளி.

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP