Monday, April 30, 2012

உதவலாம் வாங்கோ !

கவிதை எழுதச்சொல்லி சந்தோஷமாக எழுதின எல்லோருக்கும் விருதும் குடுத்திட்டேன்.

அடுத்து இப்ப ஒரு பெரிய பிரச்சனை.கொஞ்சப் பேருக்கு உதவி கேட்டு வந்திருக்கு.உங்களிடமும் உதவி கேட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன்.முடிந்தவர்கள் முடிந்தளவு விரும்பினமாதிரி உதவி செய்யலாம்.அது எந்த உதவியாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.உதவியதை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்ளுங்கள்.அதன்பின் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறேன்.கீழ்வருபவர்களுக்கே உங்கள் உதவிகள் தேவைப்படுகிறது நண்பர்களே.

அன்புக்கு நன்றி சொல்லிக்கொள்கிறார்கள் இப்போதே !

Tuesday, April 17, 2012

கவிதை தந்த விருது.அன்புடன் ஹேமா!


Saturday, April 07, 2012

கவிதை எழுதலாம் வாங்கோ !

நிறைய நாளாச்சு படத்துக்குக் கவிதை எழுதி.வாங்கோ......வாங்கோ.
இந்த புகைப்படங்களிற்கான உணர்வுகளை எழுத முயற்சி செய்யவேணும் நீங்கள்.10-15 வரிகளுக்குள் அடங்கினால் நல்லது.உணர்வுகள் சிறு கட்டுரையாகவோ,காதல்-சமூக-இயற்கைக் கவிதையாகளாகவோ,சின்னக் கதையாகவோ,ஒரு உரையாடலாகவோ,நகைச்சுவையாகவோ இருக்கட்டும்.பார்ப்போம்...பலரின் பதிவை எதிர்பார்க்கிறேன்.எங்கே பார்க்கலாம்....தொடங்குங்கோ.எல்லோரது எண்ணங்களையும் பதிவில் பதிப்பேன்.நானும் உங்களோடு !

அனைத்துக் கவிஞர்களும் உங்கள் தளங்களில் உங்களது கவிதைகளை பதிவிட்டுக் கொள்ளுங்கள்.இணைந்திருப்பவர்கள் எல்லோருக்கும் என் மகிழச்சி !
பாதை

பாசம்


கணேஷ்...

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் தாய்...
அவள் முகம் பார்த்து
சாப்பிட்டது குழந்தை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனித்தனியே வந்து
ஒன்றி‌ணைந்த பாதைகள்
சேர்த்தன எங்கள் கரங்களை..!
கோர்த்த கரங்கள் பிரிந்தன
இன்னொரு பாதைச் சந்திப்பில்!

உன் வழி உனது என் வழி எனதென
பிரிந்து சென்றவள்
மீண்டும் வரவேயில்லை..
இன்னும் காத்திருப்பில்...
பனி படர்ந்த காலையும்,
சாலையும், தனிமரமாய் நானும்!

வஜீர்அலி(Vazeer Ali)...

மனித நேயம்
===========
வந்த பாதை
மறந்து போக
போகும் பாதை
குழப்பிவிட....
மார்க்கமில்லாத
பயணம் கண்டு
சற்று தயக்கம்...

துபாய் ராஜா...

பாதை !

பெரும்பாதை
பிரிந்திருபாதை
ஆனதோ...

இரு குறும்பாதை
இணைந்தொரு
பரும்பாதை
உருவானதோ...

பார்வைக்கு
புரியாத
ரகசியம்...

பாதைக்காவது
தெரிந்திருப்பது
அவசியம்.

----------------

கல்லும்
கள்ளியும்
காய்ந்த சருகும்
புல்லும்
புதரும்
பூச்சிகளும்
புரியாத மொழியில்
புலம்பித் தீர்த்தன
இணைந்தே வந்து
இடையில் பிரிந்த
இப்பாதை கதையை...


-------------------------

பாசம் !

பட்டினிக் குழந்தைக்கு
பால்நிலா காட்டி
பசியாற்ற முயன்றாள்
பரிதாபத் தாய்...

-----------------

முழுநிலவு
தேயலாம்
என் கண்ணே
பாசப்பசும் பொன்னே
முடிந்திடுமோ
ஆசை அன்னை
நான் உன்மேல்
கொண்ட பாசம்
கடும்நோயால்
கொடும்பாய் விழுந்து
சுடும்பாடை ஏறும்வரை....

மகேந்திரன்...

ஏ..நிலவே!
பால்போன்ற உன்னில்தான்
அழகின் அடைக்கலம் -என
இறுமாப்பு உனக்கு!
இதோ
அமுதூட்டும்
என் அன்னை இருக்கிறாள்!
அதோ ஒரு
கரிய மேகம் வருகிறது
ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!

-----------------------------------

கண்களை அகல விரித்தேன்
வந்த இடம் தெரியவில்லை!
செல்லும் இடம் புலப்படவில்லை!
கண்மூடி தியானித்தேன்
முன்னோக்கிப் பார்த்தால்
இருமுனைப் பாதைகள்
எம்மார்க்கம் சென்றிடினும்
அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!

ஹசீம் ஹாஃபி(haseem hafe)...

பாதை
------
உன் பாதை முடிந்ததென்று
முடங்கிக் கிடந்திடாதே - நீ
பலதிசையும் உற்றுநோக்கிப்பார்
பாதைகளங்கு திறந்திருக்கும்

எதிர்ப்பட்ட பாதைகளோடு - நீ
முனைப்புடன் முன்னேறிப்பார்
முட்களும் கற்களும் - உனக்காய்
வழிவிடக் காத்திருக்கும்

வீறுகொண்டு நடந்துபார்
இமயம் கூட உன் காலடியில்

பாசம்
-----
வானம் விட்டுப்பிரியாத -நிலவு
சூரியனிடம் தஞ்சம்
பாசம் விட்டுப்பிரியாத - தாய்
பிள்ளையிடம் தஞ்சம்

சூரியனாய் மாறும் பிள்ளைகளால்
சுட்டெரிக்கப்பட்ட தாய்களோ
சுடுகாட்டில் இருந்தாலும் - பிள்ளைப்
பாசம் விட்டுப் பிரிந்திடாள்

தனிமரம்(நேசன்)...

பாதை!
-------
விரிந்த தெருக்களில் ஊடே வந்து
விளையாடினாய் இதயத்தில்!
விருப்புடன் கவிதை சொல்ல
விளங்காத காட்டில் பயணித்தோம் !
விழித்த போது விரிந்து கிடக்குது
இருவழிப்பயணமாக நம் காதல்!
அதைச்சொல்லும் இடத்தில் பிரிந்து
நிற்கின்றது இரு மரம்
அதில் ஒரு தனிமரம்
வளர்ந்து குடும்பமாக
மறுபக்கத்தில்
சிறுமரம் உன்னைப்போல
வட்டத்துடன்
இரு பக்கமும் விம்மியழுகின்ற
வட்டக்கல்லாக யாரோ
நான் சொல்லமாட்டேன்
வாழ்க்கைபாதையில்
பிரிந்து விட்டோம் இரு கோடுகள்!

பாசம்!
--------
அதோ பார் வட்ட நிலவு
இதோ பார் என் குட்டி நிலவு
நீயும் சாப்பிடும் போது
அவளுக்கும் ஊட்டிவிடு.

அந்தநிலவு அன்று!
எங்கே அந்த நிலா என் வாழ்நிலா
வாழ்க்கையுலா பால்நிலா பார்க்கவேனும்
நொந்து பின் தொலைந்து தேடிவந்த நிலா
அம்மா சொல்லிய பெட்டைநிலா!
அருகில் இருந்து ஊட்டிய மாமியின்
கரங்களில் பாசத்துடன் ஊட்டுகின்றாள்
இதோ பார் மகளின்பேரன் அந்த நிலவும்
இந்தமாமா நிலவும் தேய்ந்து போவார்கள்
பாசம் தேயாது ஊட்டிவிடுகின்றாள் பாற்கலவை((fromages)!!
இருண்டது என் வானம் வெளிச்சது நிலவாக நீ!

பெட்டை (மகள் யாழ் வட்டாரச் சொல்)

பாதை!

இல்லறம் என்ற அடர்ந்த ஆலமரத்தில்
நல்லறம் கண்டு நடந்துவந்தோம்
நடுவில் குத்துக்கல்லாக குடைய வந்தாள்
முன்னம் இவன் காதலி என்று !
நடுவன் அரசிடம் கேட்கின்றாய்
நாம் பிரிந்து வாழ வேண்டும்
பிரித்துவிடுங்கள்
பாதை மாறிப்போக வேண்டும் என்று !
இடையில் தவிக்கின்றது
நம் உறவில் மலர்ந்த
இரு மழலைப்பூக்கள் எதிரே
மரங்களாக வா சேர்ந்து போவோம்
பாதை பிரியாமல்!
மன்றாடும் கணவன்!

பாதை!

பாலம் கடக்கும் போது
பல காடுகளில் என்னோடு பழகி வந்தாள்.
பாசம், அன்பு காதல் என்று
சொல்லிச் சென்றாள்
எந்த வழி போய் இருப்பாள்!
இந்தக்கல்லில் குந்தியிருக்கின்றேன்!
ஆவியாக
இடையில் ஆமிக்காரங்கள் போல
இரு மரங்கள் பச்சையாக
எதிரே புகை மூட்டம்
வெடிவைத்து பிரித்து விட்டார்கள்
நம் காதல்பாதையை!
கல்லாக கிடக்கின்றேன்
பாதை ஓரம் இதயம் துடிக்க!
உயிர் துறந்து!

பாசம்!

எங்கே அப்பா என்று கேட்கும் மழலைக்கு
எங்கே போனார் முள்ளிவாய்க்காலில்
முண்டியடித்து வந்து நின்றார் முழுநிலவாக
குண்டு வைத்திருக்கின்றான்
பிடித்துத் தள்ளிக் கொண்டு போனார்கள்
இன்னும் நிலவாக இருப்பார்
இருட்டறையில் இப்படித்தான் சொல்லி
சோறு ஊட்டுகின்றேன்
பாவி மகள் நான் பாசமாக
என் பிள்ளைக்கு வட்ட நிலவைக் காட்டி
வரும் தந்தை நிலா என்று.

பாதை!

பேராதனிய பாதை ஓரம் ஒரு குடைக்குள்
பேதம் மறந்து பலவிடயம் பேசி வந்தோம்
லூசு நீ என்றாய் என் தாய்மொழியில்
போடி மகே பொம்பர்த்தினி(என் காதலி)
போட்டுக் கொண்டோம் பல விலங்கு!
இருளாத புகையாக எதிரே
மதவாதம் மொழிவாதம் பிரித்துவிட்டு
இரு மரங்களாக இரண்டு பாதை காட்டியது.
கடல் கடந்தேன் அரபுலம் போனாய் நீ
வட்டக்கல்லால இருக்கின்றாய் நினைவில்!
கடந்து வா சேரலாம் என்கிறபோது
பாதைகள் மாற்றிவிட்டது
முகம் தொலைந்துவிட்டான் அவன் பாதையில்!
உருகின்ற பிரென்சுக் காதலி கைபிடித்து!
கல்லாக இருக்காதே காத்துக்கொண்டு
கைபிடியாரையும் கருணாவன் சமாவெண்ட மாவ !
கல்லாக்கிய நினைவுகளுடன்!

//குறிப்பு->பெம்பர்த்தினி-காதலி என்பார்கள் சகோதரமொழியில் உடரட்டை இனத்தினர்!கருணாவன் சமாவெண்ட மாவ.-தயவு செய்து மன்னித்துவிடு என்னை என்று சொல்வது தமிழில்!(இதுவும் ஒரு கற்பனைதான் கண்டுகொள்ளாதீங்கோ அம்பலத்தார்!

பாசம்!

அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா.(என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.!(உன் மனைவி ஆவாள்)
என்று சொல்லி சீராட்டிய என் மாமி
ஒரு நிலவைப் பெற்றாள் ஒரு காலத்தில்!

அது வளர்ந்து வந்தது பெளர்ணமியில்.
போகும் பாதையில் பாசம் தடுத்தது.
விலக்கிவிட்ட உறவு.
அது வேண்டாம் பேரா வீட்டுக்கு.விட்டுவிடு காதலை !!
இதுவும் ஒரு பாசம் தான் உதறியது அவள் உறவை .
என்றாலும் அந்த நிலவு
தேயவில்லை நினைவலைகளில்!
இன்னும் வெளிச்சம் கொடுக்கின்றது
விடையில்லாத உறவாக!
மச்சாள் பாசமாக!

//குறிப்பு--2
சகோதரமொழியில் இப்படியும் ஒருவர் சொல்லலாம் என்ற கற்பனையே தவிர நான் றொம்ப நல்லவன் .

மகே தோனிய-இதுவும் உடரட்டையின் இன/சாதியின் சொல்லாடல் தனிமரம் தனியாக இதுக்கு பாட்டே போட்டு இருக்கு உன்னையே எப்போதும் நினைக்கின்றேன் என்ற பதிவில்!(இது ஒரு விளம்பரம் கட்டணம் செலுத்தவில்லை!)கற்பனைக்கு உருவம் தேடக்கூடாது இது வேப்பம் தோப்பில் சக்திவேல் சொன்னது அம்பலத்தார் வழி மொழிந்தது !அவ்வ்வ்வ்வ்வ்மிச்சத்துக்கு இரவு வாரன் படலை திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில்!


பாதை!

இந்த மலைகளும் மடுக்களும் நிறைந்த தேசத்தில்
நடந்த களைப்பில் வட்டக்கல்லில் வாடியிருந்தேன்!
எதிரே வடக்கில் இருந்து அகதியாக ஓடிவந்தேன்
சாய்ந்து கொள்கின்றேன் என்று சொன்னாய்
தோள்கொடுத்தேன் தோழி என்றாய் !
பின்......
தாலி தந்தாய் தாரமாக்கினாய்
அன்பில் நீ தங்கம் தான் கணவனே!
அதோ இருமரங்கள் இடையில்!
ஒன்று சொல்லும் யாழ்ப்பாணத்தான்
மற்றமரம் சொல்லும் தோட்டச்சிறுக்கி
விட்டு விடுவம்
எதிரே மறுபாதையில் போவோம்
நாம் பிரதேசவாதம் கடக்கும் புகைகளாக
பாதை தெரிகின்றது தெளிவாக!

பாசம் !

நிலா வட்டமாக இருந்தது
நீ என் அருகில் இருந்த போது
அது நெற்றியில் குங்குமம் பொட்டாக!
இன்று மகனுக்கு சோறு ஊட்டுகின்றேன்
நிலாவாக உன்னைக்காட்டி
உன் தந்தை ஒரு துரோகி என்று
சுட்டவர்கள் முகம் காட்டி
நானும் ஈழத்து பெண்மனிதான் பாசத்துடன்!
வலிக்கின்றது என் வாழ்வு
மகனே நீ இருப்பாய் நெருப்பாக
எனக்கு கொள்ளி போட
ஊர் சொல்லும் உன் அப்பன் துரோகி என்று
நான் சொல்லுகின்றேன் அவன் நல்லவன்
உணர்ச்சிக்கு அடிமையாகாதே
தமிழக அரசியல் போல
நீயும் நாளை தீக்குளிப்பாய் என் அப்பன் துரோகி என்று!
அதுமட்டும் செய்யாதே
என் நிலவே பிள்ளை நிலவே
பார் வெளிச்சத்தை
பால் குடித்துக் கொண்டு
என் மார்பில் இருப்பதும் தமிழ்பால் தான்!

ஐடியாமணி(Ideamani - The Master of All)...

பாதை!

இத்தனை தூரம்
ஒன்றாக வந்துவிட்டு,
இதோ, இப்போது
பிரிந்து செல்கிறோம்
என, எதற்கு
எண்ண வேண்டும்?

இவ்வளவு தூரமும்,
தனித்தனியே வந்தோம்!
இதோ, இணைந்து
செல்லப் போகிறோம்
என, மாத்தியோசிக்கலாமே?

பாதை!

இதோ, எம்
பாதைகள் தனித்தனியே,
பிரியும் நேரம்
வந்தாகிவிட்டது!
உனது பாதையில்
நீ போ....!!

ஆனால்...!
என் பாதையில் நான்
போகப் போவதில்லை!
இங்கேயே மோதிக் கொள்கிறேன்
என் தலையை!

அதோ,
அந்தக் கல்லில்........!!

ஹேமா...

பாதை...
~~~~~~~~~
கிளைகள் உரசும்
காற்றும் கற்றுக்கொண்டது
காதலை அன்றுதான்.

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில்
அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க...

ஒற்றைக் கல்லும்
ஒளித்து வெட்கித்த
அந்த ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க...

பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!

பாசம்...
~~~~~~~~~~
தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத
பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.

கடலைவிட ஆழப்பதிவேன்
அம்மா நீ....
அடியில் தாங்குவாய்
தாங்கியாய்த் தாங்குவேனென
நம்பிக்கை வார்த்தையொன்றை
சொல்லிவிட்டால்!!!

இராஜராஜேஸ்வரி...

பாதைகள் எத்தனையானால் என்ன?

பயணம் என்பது ஒன்றுதானே !

பயணங்கள் அனைத்துமே

பதிக்கும் முதலடியிலேயே

பாங்காய் தானே ஆரம்பிக்கின்றன!

பாசமான உறவுகளாய்

படுத்தாமல் நிழல் தரும் மரங்கள்

பழ்மை மாறாத கனிகளை

பழங்களாய் தந்து

பசி போக்கி இனிமை தந்து

பார் முழுதும் அன்பாய்

பயன் தரும் மரத்தருவாய்

பயிற்றி வாழவேண்டும்

பாரினில் உயரவேண்டும்...!!

அம்பலத்தார்...

பாதை !

சேர்வதும் பிரிவதும்
பாதைகள் மட்டும்தானா
சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதி
விந்தாய் ஜனனித்ததும்
தந்தை உடல் பிரிந்து தாயின் கருவறை சேர்ந்து
தொப்புள்கொடி பிரிந்து வையகம் சேர்ந்து.
வீடு பிரிந்து போராளியாய் சேர்ந்து
போராட்டம் பிரிந்து மீண்டும் வீடு சேர்ந்து
களம் பிரிந்து புலம் சேர்ந்து
இளமை பிரிந்து முதுமை சேர்ந்து
ஆரோக்கியம் பிரிந்து நோய்கள் சேர்ந்து
என் பிரிதலும் சேர்தலும் தொடர்கிறது
ஒன்றுமட்டும் நிஜம்
உயிர் பிரிவதும் மயானம் சேர்வதுமே- என்
இறுதி சேர்தலும் பிரிதலும்!

யோகா அப்பா(Yoga.S.FR..)...
ஏதாவது எழுதுங்கோ என்று அன்பு மகளின் கட்டளைக்கு?அடிபணிந்து சிறிய ஒரு உரையாடல் (நகைச்சுவை?!).

"திருவிளையாடல்"படத்தை நினைவில் கொள்க:அரசனுக்குப் பதில்

அரசி(ஹேமா)அரியாசனத்தில்.
புலவர்கள்;காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்,மற்றும்பலர்.
புலவர் யோகா கவிதையுடன் (உரைநடை) வருகிறார்.


யோகா : வணக்கம்அரசியாரே!

அரசி : வணக்கம் புலவரே!

யோகா : (மனதுக்குள்......சும்மா கொஞ்சம் அங்க,இஞ்ச வார்த்தைகள திருடி வசன நடையில ஒரு தடவ எழுதின உடனே புலவர் போஸ்ட் குடுத்துட்டாங்க!)கவிதையைப் படிக்கண்டுக்களா?

அரசி(ஹேமா) : படிங்க புலவரே!

யோகா : கொங்கு தேர் வாழ்க்கை...............

காட்டான் : புலவரே,இது திருவிளையாடல் இல்ல!

நேசன் : அது வேற,இது வேற!

அம்பலத்தார் : பரவாயில்லை,அதையும் கேட்டுத்தான் பாப்பமே,கன நாளா கேக்கையில்ல!

நிரூபன் : அறளை பேந்துட்டிது!

அரசி(ஹேமா) : சரி,சரி ஆளாளுக்கு ஒவ்வொண்டு சொல்லாதயுங்கோ!அவரும் உங்கள மாதிரி ஒரு புலவர்! தானே?சரி,பிழை இருக்கத்தான் செய்யும்!நீங்க படியுங்க,சா.....பாடுங்க புலவரே!

யோகா : அப்பிடியெண்டா மருதடிப்புள்ளையார் கோயில் மண்டபத்தில"அவர்"குடுத்தத பாடட்டோ?

அரசி : என்னது "அவர்"குடுத்ததோ?

யோகா : இல்லையில்ல,வாய் தடுமாறிச் சொல்லிப் போட்டன்!

காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்:::: இது சரியா வராது!ஆரோ மண்டபத்தில எழுதிக் குடுத்ததை இங்க வந்து பாடவோ?அப்பிடியெண்டால் நாங்களும் பாடுவமே?யோகாப் புலவர் அளாப்பி விளையாடுறார்.இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரேல்லை!!!!!

(ஒட்டுமொத்தமாக புலவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள்.சபை கலைந்தது.அரசியும் களைப்பு மேலிட நிரூபன் இண்டைக்கு உடம்பு மெலிய என்னவோ பத்தியம் சொன்னாரே?அதையாவது செய்து சாப்பிட்டுப் பார்ப்போம் என்று தனக்குள் கூறிக் கொண்டு "அன்னநடை"நடந்து குசினிக்குள் சென்றார்!)

யோகா : (புலம்புறார்)பாத்தியே,பாத்தியே?சொன்னாக் கேக்கிறியா?மண்டபத்தில ஆரோ எழுதிக் குடுத்தத வாங்காத,வாங்காத எண்டு தலை,தலையா அடிச்சனே,கேட்டியா?உனக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்!இப்ப நிக்க இருக்க ஏலாம குறுக்கை,நெடுக்கை நடக்கிறதில என்ன விடியப் போகுது?போ,போய் ஒழுங்கா சொந்தமா ஏதாச்சும் எழுதி, பரிசு கூடவோ,குறைச்சலோ வாங்கப் பார்!வீட்டில அடுப்பு எரிய வேணாமோ????

கவிதை(உரை நடை?)

ஒற்றை வழி ஆகாதென்று இரட்டை வழி ஆக்கினரோ?
இரட்டை வழி பிரிவதற்கும், இரட்டை மரம் காரணமோ?
தப்பித்தேன், ஒற்றைமரம் இருந்திருந்தால்,
நான் தான்!நானே தான் என்று, நேசனும் உரைத்திருப்பார்!

கலை(கருவாச்சி)...

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா!!!


நிலவைக் காட்டி
சோறு ஊட்டும்
தாயிடம் அடம்பிடிக்கிறது
குழந்தை!!
நிலவுக்கும் சோறு ஊட்டச் சொல்லி !!..


வறண்ட கால

முற்களும்,

வசந்த கால பூக்களாய்

மாறு கிறதே !!! ..

பேதை எந்தன் பாதையில் பவனியோ ??!!!

ஆர் அந்த பேதை ???

நேசன் & கலை(கருவாச்சி)...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம்
வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய்
தோள்மீது சாய்ந்து பாசமாக !
இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில்
தெற்கு வழியாக போடி என்றது!
புகைமூட்டம் கண்டது நம் காதல் !
மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம்
காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!

தொலைந்த மொழிகளும்
மௌனமாய் வேடிக்கை காட்ட
வாதத்தில் பிறந்த இனவாதமும்
திசைகளாய் திரும்பி கொள்ள
காதல் பாதையில் சங்கமித்த உள்ளங்களும்
வெறுமையாய் வெற்று நடைப் போட
துணிந்தது உந்தன் இதயம் ...
பதில் இல்லாமல் மருகிய காலம்....
உனக்காய் காத்திருந்த பாதையில்
யாரோ ஒருத்தி எனக்காய் தவமிருக்க
நேசனிடம் கொண்ட நேசமும் நிஜமாக
எந்தன் பாதையில் என்றுமே
ஒரே மரம்
தனிமரம் என்னவளுக்காய் !!!

AROUNA SELVAME...
பாதை...

வாழ்வை நோக்கி
ஓடி வந்தேன்.
விதி காட்டியது
இரண்டு வழி!

பாசம்...

தாயே..
களங்கத்துடன்
தேய்கின்ற
அந்த நிலவினும்
உயர்ந்தவள் நீ!

விச்சு...

பாதை !

வாழ்க்கையில் இரு பாதைகள்
எப்போதும் உண்டு
இரண்டும் ஒன்றாய்த் தோன்றினாலும்
செல்லுமிடம் வெவ்வேறு
ஒன்று இன்பத்துடன் ஆரம்பித்து
துன்பத்தில் முடியும்
மற்றொன்று கஷ்டத்தில் ஆரம்பித்து
மகிழ்ச்சியில் முடியும்
உன் பாதை உன்கையில்...!

அப்பாதுரை...

பாதை!

பாதையோரம்
எந்த ராமனுக்காகக் காத்திருக்கிறாள்
இந்த அகலிகை?

பாசம் !

வளர்பிறை தேய்பிறையைப்
புரிந்து கொண்டது
நிலவு.

T.V.ராதாகிருஷ்ணன்...
பாசம் !

பாட்டி
வடை சுடவில்லை
ஆம்ஸ்ட்ராங்கின்
பாதச்சுவடுகள் அது
அறிவியல் ஊட்டப்படுகிறது
பிஞ்சு மனதிலேயே !

பாதை !

பாதை மாறாமல்
தனிமரமாய் இல்லாது..
வாழ்ந்து பார்
கண்முன் கொட்டிக்கிடக்கும்
ஆயிரம் பாதைகள் !

ஸ்ரீராம்(எங்கள் புளொக்)...

பாதை !

பயணங்களை
பாதைகள்
முடிவு செய்வதில்லை

பாதைகளை வைத்து
பயணங்கள்
முடிவு செய்யப்படுவதில்லை.

சேருமிடம் குறித்து
தெளிவிருந்தால்
பாதைகளின் தரம்
பார்க்கவேண்டியதில்லை

பாதைகளுக்கு
பயண முடிவும்
தெரிந்திருப்பதில்லை

வழியைக் காட்டி
வலிகளைச் சுமக்கும்
பாதைகளின்
தியாகத்தை
உணர்ந்தாரில்லை
பாதைகளைச் சீர் செய்தாருமில்லை.

கடினமான
பாதைகளே
கனவு இலக்குகளை
அடைய உதவுகின்றன !

பாசம் !

காதலுக்கும்
கவிதைக்கும்
களம் ஆகும்,
கனம் சேர்க்கும்
அந்த நிலவைப் பாரடி
என் கண்ணே...

கவிதை சொல்வது
அஞ்ஞானம்
உண்மை சொல்லுது
விஞ்ஞானம்
வெண்மை காட்டும்
நிலவுகள்
உண்மையில்லை
உயிர் வாழும் தன்மை
அதில் இல்லை,
தண்மையுமில்லை

கனவுகளை உடை
கடமையை நினை
காரியத்தில் நனை
வையம் போற்றும் உனை!

பாசம் !

நிலவின் நினைவுகள் போன்றே
பாதைகளில் பயணங்களும்
சுகமானவை.

படங்கள் அருகருகே இருந்தாலும்
அமைக்க முடிவதில்லை
நிலவுக்குப் பாதை!

பாதை !

எல்லா பாதைகளும்
வாழ்வின் ஏதோவொரு
சொல்லாத்
தனிமைச் சோகத்தைச்
சொல்லியே நகர்கின்றன!

மீண்டும் ஒரு
மழை வரலாம்
மரங்கள் துளிர்க்கலாம்
பாதைகள் பசுமையாகலாம்...

கனவிலும்
எதிர்பார்ப்பிலுமே
பாதைகளாய்
நகர்கிறது வாழ்க்கை.

பாதைகள் பல என்றாலும்
பயணம் என்னவோ
ஒன்றுதானே...

பாதைகளுக்குத் தெரிவதில்லை
பயணத்தின் வழியும், வலியும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒற்றை நிலாவும்
'ஒத்தையடிப் பாதை'யும்
கிளரும் உணர்வுகளை,
நட்சத்திரக் கூட்டமும்
நகரத்துச் சாலைகளும்
எழுப்புவதில்லைதான்!

(எனக்கு எப்போதுமே மனதுக்குள் ஒரு கிண்டல் கலந்த நினைப்பு உண்டு... 'ஏதோ ஒரு', 'தான்', வார்த்தைகளைக் கலந்தாலே கவிதையாகி விடுகின்றன...சாதாரண வார்த்தைகளுக்கு நடுவில் இவற்றைப் மடக்கிப் போட்டு கவிதையாக்கி விடலாம் என்று நினைப்பேன்!)


துரைடேனியல்...
பாதை
-----
வாழ்வுப் பாதையா
சாவுப் பாதையாவென
தெரியாமலே
தொடர்கிறேன்

இருத்தலை
நான் விரும்பவில்லை
பயணிக்கவே விரும்புகிறேன்
இருந்து சாவதைவிட
பயணித்து சாவது
கௌரவம்.

பாசம்
-----

பாலருந்த மறுப்பது
ஏனடா கண்ணா?
களங்கம்
நிலவில் மட்டுமில்லை
என் பாலிலும்
உண்டென்று
யாரேனும் உரைத்தனரோ?

உலகில்
கலப்படமில்லாத
ஒரே பொருள்
இதுதானடா
பருகு...
பாலை மட்டுமல்ல
பாசத்தையும்.

வேர்கள்...
பாசம் !

குழந்தையின்
வாயில் அம்மாவின்
அன்பு சோறு
ஏக்கத்துடன் நிலா !
தனக்கு ஒரு
பிடி வேண்டி....!

பாதைகள் !

இருவேறு பாதைகள்
இருவேறு பயணங்கள்
இருவேறு அனுபவங்கள்,படிப்பினைகள்....
ஒன்று அவளுக்கானது..
மற்றொன்று அவனுக்கானது.....
இனி...!
பாதை அவர்களுக்கானது
ஆனாலும்
அனுபவங்கள்,படிப்பினைகள்
வெவ்வேறானவையே....!!

கலா(என் சிங்கை(க)த் தோழி)...

பாதை
=======
பாதைக்கு,
பா..
தை க்க..
பாதையைக் காட்டினாள் சகி
பேதை என்விழியில் தைத்தவைகள்...

கால் தடங்களை வழியில் பதித்ததினால்...
பாதித்து,
பசுமைக்கற்பு களவாடப்பட...
இப்போ..
ஆள் அரவம்{மும்} இன்றி
கைவிட்ட வலியுடன்..
.வழிதெரியாமல் வழியும்!
இதனைக் கண்டு
உயிரிருந்த சிலையும் உணர்வற்று
கல்போல் தெரியும் காட்சியும்!!

பாசம்
======
அது
எவ்வளவு உண்மைப் பாசமுடன்
காடுமேடு பாராமல்,களனிகங்கையை ஒதுக்காமல்
ஏழை வசதி விருப்பொன்றாய்
குடிசை கோபுரம் தரம் ஒன்று என நினைத்துத்
தன் சேவையைப் பொழியும் நிலவுபோலும்....

கதிரவன் பக்கமிருந்தும்
“பட்டுக்” கொள்ளாமல்,
மதியும் கெடாமல்,
பாரம்பரியம் குலையாமல்
தனியொருத்தியாய்ப் பவனிவரும் அழகுபோலும்....

அழகுக்கும்,காதலுக்கும்
பாசத்துக்கும்,உயரத்துக்கும்_அவளை
உவமையென்று வம்புக்கிழுக்கும் கவிஞர்களிடம்
சரண்டையாமல்...சகஜமாய்ப் பழகும்
தாரகை அவள்போல்_என்
சின்னமகளே!
அந்த நிலவைப் பின்பற்று
பாசமுடன் கூட்டிச் செல்வாள் உன் கைபற்றி.

kg gouthaman கௌதம் (எங்கள் புளொக்)...

கடவுள் என் முன் தோன்றினார்.
'படங்களைப் பார்த்து
ஒரே வார்த்தை சொல்லவேண்டும்;
அது எல்லாவற்றிற்கும் பொருந்தவேண்டும்'
என்றார்.....
மண் என்றேன்.
மரம என்றேன்.
நிழல் என்றேன்.
பாதை என்றேன்.
கல் என்றேன்.
கனி என்றேன்.
இருள் என்றேன்.
நிலா என்றேன்.
வெளிச்சம் என்றேன்.
பாசம் என்றேன்.
எதுவும் சரியில்லை என்றார்.
மிகவும் யோசித்துச் சொன்னேன்.
'அம்மா'
'அதே!' என்றார், காணாமல் போனார் கடவுள்!

Seeni சீனி...
பாதை!
-----------
வந்த வழி-
ஒன்னு!

காட்டும் வழி-
இரண்டு!

எது நல் வழி!
அது உன் கையில்!
உனது முடிவில்!

நிலா!
---------
குழந்தைக்கு-
நிலவை காட்டி-
சோறா!?

குழந்தையை-
காண வந்தது-
நிலவா!?

ரெவரி...

பாசம்!

என்
துதி பாடாத
கவிஞன்
எவனும்
இல்லை
என்ற
இறுமாப்பு
எனக்கு..

இருந்தும்
ஒவ்வொரு
முறையும்
தோற்றுப்போகிறேன்
உங்களிருவரிடம்...

சற்றே
தேய்ந்தும்
போகிறேன்..
உங்கள்
பிணைப்புக்கு
முன்...

அடிக்கடி
மறைந்தும்
போகிறேன்
உங்கள்
பாசம்
கண்டு...

புலவர் சா இராமாநுசம்...

பனிமூட்டப் பாதையிலே நீண்டதூரம்
பார்வையிலே காணோமே ஒருவர்கூட
நனிவாட்டும் குளிரோ எதுவோ மேலும்
ஒன்றாக வந்துப்பின் இரண்டும் ஆக
ஊர்விட்டு ஊர்வருவோர் அறிந்து போக
நன்றாக படங்காண வாழ்க வாழ்க!
நடுவிலே மூன்றுமரம் வளமும் சூழ்க!

அமுதூட்ட அம்புலியை அன்னை காட்டி
அல்லி்ப்பூ மழலைக்கு உணவை ஊட்டி
பொழுதாகி அந்திவர மாலை நேரம்
பூக்கின்ற மலர்போன்ற இதழின் ஓரம்
எழுதாத ஓவியமே போன்ற அன்னை
இனிதாக காண்பது,மகிழ்வில் என்னை என்றுமே ஆழ்த்துமே!

கீதா...

பாதை !

கல்லானாலும் கணவனாம்,
புல்லானாலும் புருஷனாம்.
கல்லையும் புல்லையும்
கட்டிக்கொண்டு பட்டபாடு போதும்,
நடக்கப்போகிறேன் நானும் என்வழியில்!

என் தனிவழியில்!

நீளும் பாதையின் முடிவில்
நிறைந்திருக்கலாம் காடோ, மலையோ!
கவலையில்லை,
கல்லினும் மலை உன்னதம்.
புல்லினும் காடு பேரானந்தம்.

தொலைந்துபோகும் சுயத்தினும்
தொலைக்கவிருக்கும் ‘நான்’ சுகம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எந்தக்குதிரை மேலேறி
எந்தத் தேசத்து அரசக்குமாரன்
எந்தப்பாதை வழி வருவானோ?

காத்திருக்கிறேன் காலங்காலமாய்
குத்துக்கல்லென முக்கூடற்பாதையோரம்!

சற்று அமைதியாயிருங்கள்.
களைத்தப் பரியொன்று சாவதானமாய்க்
கால்மாற்றியிடும் குளம்படிச்சத்தம்,
தூரத்துப் பனிமூட்டம்விலக்கி
மெல்ல செவிசேர்வதைக் கவனியுங்கள்.

கும்பிட்டுக் கேட்கிறேன், போய்விடுங்கள்,

அபூர்வமாய் வரும் அரசகுமாரன் அவன்!

எவளுக்கு மாலையிடுவது என்னும் குழப்பத்தில்
ஆழ்த்திவிடாதீர்கள் அவனை!

பாசம் !

பாரம்மா, பார்!
அவள்தான் வெண்ணிலாவாம்!

கவிஞர்கள் பாடுகிறார்களாம்,
காதலர் தேடுகிறார்களாம்,

பாடநூல் அத்தனையிலும்
பள்ளிப்பிள்ளைகள் படிக்கிறார்களாம்.

வானியலில் வேடிக்கைகாட்டி
விஞ்ஞானிகள் வியக்கிறார்களாம்.

அடிக்கடி அலட்டிக்கொள்கிறாள்.

அடி போடி என் தோளில் தவழும்
என் பெண்ணிலாவுக்கு ஈடாவாயோ என்று
எள்ளி நகைத்தபடி
அள்ளிக்கொள்கிறேன்
அழகுநிலா உன்னை!

முகம் சிறுத்து கருமேக முகில் பொத்தி
மழையாய் அழுவாள் பார்,
இன்னும் சற்று நேரத்தில்!

செய்தாலி...
விழிகள்
இரண்டும் குருடல்ல
திசை மாறிய பயணம் விழித்திரையில்
ஆசைக் கருமை

சுய
அகந்தைகளை சுமந்து
மனதின் போக்கில் கால்கள்
குறுக்குப் பாதை அவசரப்பயணம்

பயண
வேகத்தின் கூர்மை
உயிர் துறக்கும் மனிதர்கள்
வழிகள் நெடுக குருதிக்கறைகள்

கோர
கூர்மையுள்ள முட்களற்ற
இளம்பஞ்சு வழித் தடம்
சேரும் இடம் நரகவாசல்

கடந்து
வந்த பாதைகளில்
இடையிடையே உதிர்ந்த பருவம்
முதுமையை உடுத்தியது காலம்

அனுபவம்
போதி மரம்
மதியின் வாசல்தட்டி சொன்னது
நீ பிழையில் நிற்கிறாய்

ஐயகோ
என்ன கோரம்
பிழையுணர்ந்து அழுகிறார்கள்
முன்னால் வந்த மனிதர்கள்

நன்மை
நல்வழிப் பயணம்
கரடு முரடான நீண்டபாதை
உதிர்ந்த பருவவுமாய் மறுபயணம்!

பாஹே...
பாதை !

ஒற்றைத் தனிமரம்
ஓரங்கட்டிக்கொண்ட வாழ்க்கை;
ஒரு காலத்தின் பழங்கனவாய்
சிறிதாகப் பசும்பொற்குவியல்
மறுபக்கம் பாதை நெளிந்து நீள்கிறது
இது -
இலக்கு அறியா மானுடத்தின்
கணக்குப் பிசகும் ஒரே விடை;
காலங் காலமாக இந்தச் சரித்திரமும்
திரும்பி கொண்டுதான் இருக்கிறது -

இருக்கும், வேறு பாதை இல்லை;
தனிமரம் தோப்பாகாததால்
தோப்புக்குள் வானப்ரஸ்தம்
ஒரு தொடர்கதை, முடியும் வரை!

நிலவு !

அரண்மனை உப்பரிகைப் பலகணியிலும்
அன்றாடங் காய்ச்சியின் ஓட்டுக் குடிசையிலும்
அம்மா குழந்தைக்குச் சோறூட்டுவாள் -
அங்கே வெள்ளிக் கிண்ணம்
அதில் பால் அன்னம்.

இங்கே அலுமினிய நெளிசல்
அமுதமாய்ப் பழஞ்சோறு

எதுவானாலும் பாசம், பரிவு
வலிமைச் சேர்க்கும் முலைப்பால் இதுவும் -
ஒளவை வருவாள், இளங்கோ கம்பனும்
பாரதி அதிகம், பசியாறிப் போகும் -
யுக யுகமாக இது ஓர் தொடர்கதை
தொட்டிற் பழக்கம், அகம்புறச் செழுமை.

சத்ரியன்...
நிலா
----
அம்மா,
நிலா பாப்பாவுக்கு
அம்மா இல்லையாம்.
நம்ம
வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போலாம்.

(இவர் இப்பத்தானாம் கவிதை எழுதிப் பழகுறாராம்.)


மோ.சி. பாலன்...

பாதை !

வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..

யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?

இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து...

பாதை!

பாதை தெளிவாகத்தான் இருக்கிறது.
பயணம்தான் கையகப்படவில்லை!

பாதையும் பயணமும் நேர்ப்பட்டாலும்
கோழையாய் மனம் மறுதலிக்கிறது.

வெறுமையாய் கிடக்கும் பாதையாயினும்
பொறுமையாய் காத்துக்கிடக்கிறது காலம்.

வெறுமையும் பொறுமையும் இருந்தாலும்
வறுமையும் சோகமுமாய் கழியுதுகாலம்.

முள்ளாய் கிடக்கும் மரமும் பூத்துக்குலுங்கும்
கல்லாய் கிடக்கும் பாதையும் பூவாய்நிறையும்

முள்ளும் கல்லும் பக்குவமாய் ஆக்கினாலும்
சுயமும் கனமும் இழந்தே கழியுதுகாலம்

நம்பிக்கை ஒளிவீசும் வான்மேகம்
தம்கைநம்பி வாழும் குதூகலம்

பாதையும் பாதையும் இணையும் காலம்
வான்மேகமாய் பொழியும் ஆனந்தகீதம்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP