Monday, June 28, 2010

யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு.

1974ம் ஆண்டு தை மாதம்.நினைத்தாலே கண்ணுக்குள் நிறைந்த மாதம்.ஊரெங்கும் கோலாகலம்.வீடெங்கும் திருமணக் கோலம்.
சாணகமுற்றங்கள் சுத்தமாய் அழகழகான கோலங்களோடு.மனங்களில் குதூகலம்.எல்லோருக்குமே பறவைகளாய் பறப்பதாய் ஒரு நினைப்பு.மழையடித்து ஓய்ந்திருந்த வாரம் அது.

வயல்கள் தோட்டங்களில் நிறைந்த சேறும் சகதியும்.கிணறு முட்டிய மழைநீர்.ஆறுகள் பெருக்கெடுத்தோடுகிறதென்று சொல்லப் பிடிக்கும்.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இல்லை.இரவெல்லாம் தவளைச் சத்தம்.ஓ...அவைகளுக்கும் கொண்டாட்டம்.அடித்த மழையால் பனிக்குளிர் வேறு."எழும்பு எழும்பு"என்கிற சத்தத்தைப் புறக்கணித்து இன்னும் இழுத்துப் போர்த்த வைக்கிறது குளிர்.

என்றாலும் குளிர்ந்த காற்றோடு திடீரென்று தடவும் ஒரு நினைவு.அவளின் அழகு. அவளுக்காக அவளின் விழாவுக்காகவே இத்தனை விழாக்கோலம்.ஊரெங்கும் பூரணகும்பமும் தோரணங்களும்.

ஆமாம் எங்கள் தமிழுக்கு ஒரு விழா.எங்கள் தமிழ் மொழிக்கு ஒரு அங்கீகாரம். சந்தோஷத்தைன் உச்சத்தில் நாங்கள் அனைவருமே."எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு.பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிச்சயம் என்று சங்கே முழங்கு.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா."இளம் பிள்ளைத்தமாய் திரிந்தாலும் தமிழின் எங்கள் மொழியில் பெருமை ஆழப் பதியத் தொடங்கிய கணங்கள் அவை.எனவே அந்தச் சந்தோஷத்திற்காக என்னென்னவெல்லாமோ செய்தோம்.உடம்பெங்கும் எறும்பு ஊர்வதாய் ஒரு உள்ளுணர்வு.ஆனந்தத்தின் எல்லை.பாடினோம் ஆடினோம்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 1974ம் ஆண்டு தையில் நான்காம் அனைத்துலக தமிழாராச்சி மாநாட்டை நடத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டு அத்தனை நிகழ்வுகளும் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருந்தது.

அந்தத் தருணத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளையும் உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும் நான்.

அந்தக் காலகட்டத்தில் ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சியின் அதிகாரம்.
அவருக்கோ யாழில் இந்த விழாவைக் கொண்டாட விருப்பமில்லை.தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தை இலவசமாக உதவுவதாகச் சொல்கிறார்.தமிழ்ப் பெரியவர்களின் அழுத்தத்தில் யாழில் நடாத்த ஒப்புக்கொண்டாலும் குழப்பும் மனநிலையிலேயே இருந்தது அரசு.

விழாவை நடத்த யாழில் இருக்கின்ற பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டு அரசால் பொறுப்பேற்கப்பட்ட வீரசிங்க மண்டபம்,யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ்.திறந்த வெளியரங்கம்,அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் கூட மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு மறுக்கப்பட்டது.எனவே தனியார் மண்டபங்களைத் தேடி அலைந்தனர்.

எனவே அரசின் இந்த மறுப்புக்களால் ஊடகங்கள் மாநாடு நடைபெறாது என்று அறிவிக்கத் தொடங்கிய சூழ்நிலையில் "1974 தை 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ்.நகரில் இடம்பெறும் என மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் பேரம்பலம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கட்டணம் அறவிடப்படாமலே திரையரங்குகளில் விளம்பரம் செய்தும்,சுவரொட்டிகள் மூலமும் அரசை வென்றனர்.

அந்நிலையில் அரசு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த அறிஞர்களையும் பார்வையாளர்களையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியது.பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவாறு தமக்குக் கிடைத்த இலங்கை அரசின் அசிங்கத்தை அவர்களும் உலகுக்குப் பறைசாற்றினர்.

இருப்பினும் சென்னையிலிருந்து உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜனர்த்தனன் மட்டும் மலேயா சென்று சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கையை வந்திருந்தார்.

மாநாடு நடக்கக் குறிப்பிட்ட திகதிக்கு 3 நாட்களுக்கு முன்னம்தான் மாநாட்டை நடத்துவதற்கான அரசின் அனுமதி கிடைத்தது.வண.சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ்.றிமர் மண்டபத்திலும் அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ்.திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் நடைபெற்றன.

3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை மாநாடு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

முடிவடைந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அயல் நாட்டு அறிஞர்களுக்கான வழியனுப்பு விழா மறுநாள் 10 ஆம் திகதி யாழ்.திறந்த வெளியரங்கில் நடைபெறுவதாகவே இருந்தது.ஆனால் அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. யாழ். மாநகர முதல்வர் A.T.துரையப்பாவிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே திறக்கப்படும் என்று அரங்கின் காப்பாளர் தெரிவித்திருந்தார்.மாநகர முதல்வரையோ சந்திக்க முடியாமலிருந்தது.அவரது இருப்பிடம் அறியப்படாத நிலையில் வீரசிங்கம் மண்டபத்திலே வழி அனுப்பு விழாவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது.(இந்த மறைவும் அரசின் அழுத்தமே)

வந்திருந்த ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மண்டத்தில் உள்ளடக்க இயலாத நிலையில் மண்டபத்தின் முன்பாக அதற்கும் தெருவிற்கு இடைப்பட்ட நிலத்தில் நிறுவப்பட்ட திடீர் மேடையில் வழியனுப்பு விழா ஆரம்பமாகியது.பார்வையாளர்கள் தெருவிற்கு மறுபக்கத்தில் புல்தரையில் இருந்தபடி நிகழ்ச்சிகளைப் ரசித்துக் கொண்டிருந்தனர். போக்குவரவுக்குத் தெரு மூடப்பட்டிராத போதும் மேடைக்கும் பொது மக்களுக்கும் இடையே பயணிக்க வேண்டாமென்று இரு புறத்தும் பணிபுரிந்த தொண்டர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில் ஊர்திகள் யாவும் மாற்றுப் பாதையையே உபயோகித்தன.

அப்போதான் என்ன ஏது என்று பார்வையாளர்கள் உணரும் முன்னமே கலகம் அடக்கும் பொலிஸார் பார்வையாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர்.குண்டாந்தடியடிப் பிரயோகம் செய்து வகை தொகையின்றி கண்ணீர்க் குண்டுகளையும் விசிறி,துப்பாக்கிக் குண்டுகளால் மின் கம்பிகளை அறுந்து விழும்படியாகச் செய்தனர்.

அசம்பாவிதத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.மின் கம்பிகளில் சிக்குண்ட ஒன்பது தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது.

இனி...அப்பா சொன்னது

அந்த இரவில் அப்பாவும் நானுமாய் யாழ் நகருக்குள் நிற்கிறோம்.வானமெங்கும் இரவு கலைத்த மின்சார விளக்குகள்.உயர உயராமான சிகரங்கள்.திரும்பவும் திரும்பவும் சொல்கிறேன் சந்தோஷமாக இருந்தோம்.அத்தனை பேருமே சந்தோஷமாகவே இருந்தோம்.தமிழின் உணர்வோடு கலந்திருந்தோம்.

(சொல்லும்போது குரல் அடைத்து வில்லங்கமாக வெளிவந்தது)எனக்கு இப்போதும் நினைவோடு கண்ணுக்குள் வருகிறது.முகமெல்லாம் அத்தனை சந்தோஷம்.றீகல் தியேட்டர் தாண்டி வீரசிங்கம் மண்டபம் வருகிறோம்.அலையலையாய் ஆண்களும் பெண்களுமாய் மக்கள் அலை.அறிவுஜீவிகள் அறிஞர்கள் கல்விமான்களின் கூடம்.மேடையைத் தலைகள் மறைக்க உன்னி உன்னிப் பார்த்தபடி நிற்கிறேன்.ஒலிபெருக்கியின் சத்தத்தோடு புரிந்துகொள்கிறேன் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று.

அப்போதுதான் என்ன...ஏதோ அறுந்ததாய் நினைக்கிறேன்.எனக்கும் அந்தச் சத்தத்துக்குமான தொடர்பா.சொல்லத் தெரியவில்லை.குழப்பமான உளறலான வார்த்தைகள் தெளிவில்லாமல் கேட்கிறது.சிங்களத்தால் அதட்டல் சத்தமும் கேட்கிறது.ஆனால் புரியவில்லை.அப்பாவின் கையை எட்டிப் பிடிக்கிறேன்.அந்தக் குளிரிலும் அப்பாவின் கை வியர்வையால் பிசுபிசுக்கிறது.

பண்ணைக் கடல் பக்கம் பொலிஸ் நிலையம் இருந்தது.அந்த மக்கள் அலைகளுக்கு காற்றில் ஏதோ செய்தி பரப்புகிறது.இவ்வளவும்தான் இவ்வளவும்தான்.பிறகு என்ன நடந்தது !தமிழைப் பேசுவதன்றி என்ன தவறு செய்தோம்.அதன்பிறகு....எங்கள் தமிழுக்கு ஒரு விழா எடுத்தோம்.
அவ்வளவும்தானே.

ஆனந்தம் அனர்த்தமாய் மாறிக்கொண்டிருந்தது.

மின்சாரம் நின்றது.தொடர்புக் கம்பிகள் அறுந்து விழுகிறது.மின்னி மின்னி நெருப்புத் தனல்கள் வான் நோக்கிப் பறக்கிறது.அமைதியாய் இருந்த அலைகள் இப்போ கொந்தளித்துச் சிதறிக் கலைகின்றன்.

"அப்பு ராசா தம்பி"என்று அப்பா கையை இறுக்கிப் பிடிக்கிறார்.துவக்கு வெடிச்சத்தங்கள் கேட்கிறது.எப்போதாவது வேட்டையாடும்போதோ விசர் நாயைச் சுடும்போதோ கேட்கின்ற அந்தச் சத்தம்தான் அது.இப்போ அது தொடர்ந்து கேட்கிறது.வேட்டைக்காரர்களோ அல்லது விசர் நாய்களைச் சுடுபவர்களோ வந்துவிட்டனர்.வெள்ளை நிறத்தில் குண்டு மழை.கண் எரிகிறது.வெறும் புகைக்கு இப்படிக் கண் எரியாது.வீட்டில் கண்ணூறு நாவூறு என்று செத்தல் மிளகாயும் வேப்பிலையும் போட்டு எரித்து எச்சில் துப்பச் சொன்னபோது எரிந்த கண் எரிவு வேறு.இது வேறு.

கண் திறக்காமலே அப்பா என்னைப் பிடித்தப்படி "ஓடி வா ஓடி வா" என்றபடி ஓட முயற்சிக்கிறார்.கால் அடி எடுத்து வைக்கவே இடம் இல்லை அங்கு.அப்பாவை நான் இழுக்க என்னை அவர் இழுக்க எங்கோ ஒரு குழிக்குள் விழுந்ததாய் விளங்குகிறது.அப்பாவின் கை என்னோடுதான் இன்னமும்.சேறு அப்பிக்கொள்ள நிறையப் பேர் இருந்தோம் அந்தக் குழிக்குள்.மழையும் வெள்ளமும் சேறும் என்று முன்னமே சொல்லியிருந்தேன்.இப்போது விளங்குகிறது.அது குழியல்ல.வெள்ள வாய்க்கால்.

அப்பா அணைத்துக்கொள்கிறார்.எதுவும் சொல்லவில்லை நான்.பயமோடா தம்பி என்று கேட்டாலோ,குளிருதோ என்று கேட்டாலோ,நோகுதோ என்று கேட்டாலோ இல்லை என்றேதான் சொல்லியிருப்பேன்.மனம் முழுக்க வலி.தமிழனாய்ப் பிறந்து தாய்மொழி தமிழுக்கு விழா எடுக்கக்கூட முடியாத தேசத்திலா நாம் பிறந்திருக்கிறோம் என்று.

அந்த இரவு முழுதுமே அவலச் சத்தங்கள் கேட்டு அடங்கிப்போயிருந்தது.நாங்களும் சேறு பூசியபடி அப்படியே இருந்தோம்.விடிந்தது.வெளிச்சத்தில் அடையாளங்கள் கண்டுகொண்டோம்.
யாரோ கை கொடுக்க வெளியில் வந்தோம்.அப்பா நடந்தே போவோம் வீட்டுக்கு என்றார். பதில் ஒன்றுமே சொல்லாமல் அப்பாவின் பின்னுக்கே நடந்தே போனோம் நானும் இன்னும் பலரும்.

யாழ்.பஸ் நிலையம் வரை அடித்து விரப்பட்ட மக்கள் ராணி படமாளிகையில் அடைக்கலம் தேட முற்பட்ட போதும் படமாளிகையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் நிரப்பப்பட்டதாம்.

இரவு முழுதும் அணையாத அரிக்கேன் லாம்போடு அம்மா குந்தியிருந்தா.எங்களைக் கண்டதும்"ஐயோ என்று குழறினா.அன்று தொடங்கிய "ஐயோ" சத்தம்தான் இன்றுவரை ஈழத்தில் தொடர்கிறது.

ஈழத்தில் தமிழர்கள் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியைக்கூட அரசின் தலையீடு இல்லாமல் தாமே சுதந்திரமாக நடத்தமுடியாது என்பதை உலகிற்கு உறுதிப்படுத்திய நிகழ்வாகக்கூட அதை எடுத்துக்கொள்ளலாம்.

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கும் முயற்சி எடுத்ததாம் அரசு.பாதிரியார் உடையில் ஜனார்த்தனன் கொழும்பு சென்றடந்து இந்திய தூதரகம் மூலமாகச் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம்.

"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது.அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும்
உணர்ந்தார்கள்." - பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்.

[அப்பா சொன்னதும் இணையத்தில் சேகரித்துக்கொண்டதும்.]

Monday, June 21, 2010

இந்த நாய் உண்மையில் என்னதான்....நினைக்கிறது !

ம்ம்...இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல இருக்கே.எனக்கு எவ்ளோ வேலை இருக்கு !


டேய்....கொஞ்சம் மெதுவா நடடா லூசுப் பயலே.உன் பின் பக்கத்தை பாக்க சகிக்கல எனக்கு !


இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு.ஏன் தான் இப்பிடி வாலாட்டிக்கிட்டு திரியறியோ !


ஐயோ...ய்....யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கியேடா !


டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு.உங்கூட சேர்ந்ததாலயோ என்னமோ என்கிட்டயும் ஒரு நாத்தம் !


நீ சைலண்ட்டா நில்லு...நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் !


ஒழுங்க கட்டுடா எருமை.இப்பிடி நின்னா எனக்கு உச்சா போகணும்போல இருக்கு !


ஏம்மா இப்பிடி விழுந்து எழும்புற.இந்தா மருந்து கொண்டு வந்திருக்கேன்.நீ நினைக்கிற மாதிரி இல்ல அவன்.கண்ட பொண்ணுங்க பின்னாலயும் நாயா அலையிறான் !


இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.இதையெல்லாம் அவன்கிட்டயே வச்சுக்கோ !


என்னதான் தேடித் தொலைக்கிற.சீக்கிரமா....சீக்கிரமா.
தண்ணி அடிக்கணும்ல !


இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடுவீங்க....ப்ளீஸ் ப்ளீஸ்!எனக்கு மின்னஞ்சலில் வந்த தமிங்கிலீஷ் மடல்.

Tuesday, June 15, 2010

அப்பா அடிப்பார்.

ஒரு குழப்படிப் பெடியனின்ர அப்பா ஒருத்தர் இருந்தார்.நல்ல அப்பாதான்.கேக்கிறதெலலம் வாங்கிக் குடுப்பார்.சட் புட் எண்டு....நல்லாக் கோவம் வரும் அவருக்கு.எல்லாத்துக்கும் டமார் டுமீல்... எண்டு அடிதான்.கையில கால்ல அடிபட்டு அழுதுகொண்டு வந்தாலும்"ஏண்டா பாத்துக் கீத்து நடக்கிறேல்லையே"எண்டு அதுக்கும் அடிதான்.அதுக்குப்பிறகுதான் மருந்து டொக்டர் எல்லாம்.

இப்பிடி இருக்கேக்க ஒரு நாள் அந்தப் பெடியனுக்கு நல்லாக் கடுமையாக் காய்ச்சல் வந்திட்டுது.பார்த்தா...பெடியனின்ர மேல் தொடையில பெரிய புண் ஒன்று.பெடியனைச் சோதிச்ச டொக்டர் "நாய் கடிச்சதோ தம்பிக்கு"எண்டு கேக்க....."இல்லை"எண்டு சொன்னான்.திரும்பத் திரும்ப அவர் அவனைக் கேக்க அவம்"ஓம்....ஒரு நாள் பள்ளிக்கூடத்தால வரேக்க நாய் கடிச்சிட்டுது "எண்டு உண்மை சொல்லிட்டான்.

"ஏன் வீட்ல சொல்லேல்ல நீ"எண்டு கேட்டதுக்கு "ஐயோ...நான் சொல்லேல்ல.இப்பவும் நீங்க சொல்லாதேங்கோ டாக்டர்.இப்பகூட அப்பா அடிப்பார்"எண்டான் அழுதுகொண்டே.

இதை டாக்டர் சொல்லி அறிந்த அப்பா "கடவுளே என்ர பிள்ளையைக் காப்பாத்துங்கோ"எண்டு குழறி அழுதிட்டார் அந்த அப்பா.

ஆனால் டாக்டரோ...."நாய் கடிச்ச அண்டைக்கே ஊசி போட்டிருக்கவேணும்.இப்ப ஒண்டுமே செய்ய ஏலாது பாருங்கோ"எண்டு கையை விரிச்சிட்டார்.

பெடியனைத் தூக்கிக்கொண்டு கனக்க கனக்க டொக்டரைத் தேடிக் காசையும் செலவழிச்சுக் கொண்டு திரிஞ்சார் அந்த அப்பா.ஆனால் அந்தப் பெடியன் தப்பேல்ல.செத்துப்போனான்.

இங்க நான் சொல்ல வாறதென்னெண்டா அப்பாக்களே அம்மாக்களே கோபப்படுங்கோ.உங்கட பிள்ளைகள்.உங்களுக்கு உரிமை இருக்கு.ஆனால்..பாருங்கோ அளவோட.பிள்ளைகளோட அன்பாயிருங்கோ.பிள்ளைகளோட கனக்கக் கோபப்படாதேங்கோ.சிநேகமாயிருங்கோ.எப்பவும் கைக்குள்ள அணைச்சு வச்சிருங்கோ.பிள்ளைகள் உங்களிட்ட ஒண்டும் ஒளிக்கமாட்டினம்.
சின்ன விஷயம்தான்.அப்பாக்களே அம்மாக்களே....யோசிச்சு நடவுங்கோ.

ஹேமா(சுவிஸ்)

Monday, June 07, 2010

உணர்வும் உப்பும்.

"உப்புப் பெறாத வேலை" என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடுவார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு.மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான்.அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் 'சுவை' என்பதே முதற்பொருள்.
இனிப்பு,கசப்பு,துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன் படுத்தப்படும் உப்பிற்கு 'வெளிளுப்பு' என்று பெயர்.பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு.பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது.தன் உருவம் தெரியா மல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது
'வெளிளுப்பு '.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் 'சம்பளம்'என்ற சொல் பிறந்தது என்பர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள்.அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டு வருவர்.மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும்.இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள்.

உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. "தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது" என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.

பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்பு விளங்கியிருக்கிறது.கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் 'உமணர்' என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்து வுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது.

உப்பு விளையும் களத்திற்கு 'அளம்' என்றும் பெயர்.பெரிய உப்பளங்களுக்கு அரசர் களின் பட்டப்பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.
அவை பேரளம்,கோவளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன.சோழ - பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

'ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி. பி. 1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம்,செல்லூர் என்னும் அநபாய சோழப் பேரளம்,இடையன் குழி என்னும் இராஜேந்திர சோழப் பேரளம்,கூடலூர் என்னும் ராஜநாராயணப் பேரளம்,திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம்,வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன் பேரளம், சூரைக் காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து ,உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்துத் திருவதிகை திரு வீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுதுபடிக்கும் கோயில் சீரமைப் பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன ' என்று...தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் எடுத்துக்காட்டுகிறார்.

போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் உப்பின் விலையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. "நெல்லின் நேரே வெண்கல் உப்பு" என்று பெண் ஒருத்தி விலை கூறி உப்பு விற்பதனைச் சங்க இலக் கியத்தில் பார்க்கிறோம்.சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது.
இன்றைய பொருளாதாரக் கணக்கில் உப்பின் விலை இப்போது உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருந்த தாகக் கொள்ளலாம். உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் 'மரவை' எனப்படும் மரச்சட்டியிலும் "கல்மரவை" எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது.இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன.

யாரோ முரளி என்பவர் அப்பபோ மிஞ்சஞ்சலில் இப்படியான செய்திகளை தந்துகொண்டிருக்கிறார்.

முரளிக்கு நன்றி.

Wednesday, June 02, 2010

கோடரிக் காம்புகள்.

போர் நடந்துகொண்டிருந்த காலத்தின் நடுப்பகுதி.தமிழனின் இரத்தமும் சதையும் காட்டிலும் ரோட்டிலும் காய்ந்து அடையாளம் சொல்லி ,விழி நனைத்து வழி நடத்திக்கொண்டிந்த காலம் அது.

அடர்காடு.மரங்களின் கிளைகளைக் காற்றுத் தடவும் சத்தமின்றி வேறு எதுமற்ற பேரமைதி. சொல்லப்போனால் செத்த தெரு அது.பூச்சி புழுக்களுக்கும் போரின் அழுத்தமும் அவஸ்தையும் இருக்குமோ.காக்கை குருவிகள் கூட புலம் பெயர்ந்திருக்கலாம்.

அங்கு அமைதி கிழித்து ,ஆனாலும் அமைதியாகவே சத்தமில்லாமல் பரபரப்பாக எதையோ செய்துகொண்டிருந்தார்கள் குமரனும் ஈழவனும்.ஈழவன் தெருவுக்கும் பற்றைக்குமாய் பறந்து பறந்து மிதிவெடி வைக்கும் வேலையைத் துரிதமாய் செய்து முடித்துவிட்டு பற்றை பிரித்து பாம்பாய் ஊர்ந்து வந்து சேர்ந்தான் தனக்காய் காவல் காத்துக்கொண்டிருந்த குமரன் அருகில்.

"களைச்சுப் போய்ட்டாயடா மச்சான்.சரியா வேர்க்குது.இந்தா தண்ணி குடி"கொடுக்கிறான் குமரன்.

"பரவாயில்லையடா.பாரன் உவையளை.தங்கட சென்றிக்குப் பக்கதிலயே இப்பிடி மிதிவெடி வெடிக்கும் எண்டு கனவுகூடக் காணாயினம்.சனங்களைக் கொன்று குவிச்சுக் கொண்டிருக்கிறாங்கள் படுபாவியள்.இவங்கட உடம்பில ஒண்டும் மிஞ்சக்கூடாது.எங்கட உயிரை மதிக்காதவங்களுக்கு ஏன் நாங்கள் மட்டும் மதிக்கவேணும்.எங்கட எத்தினை சனங்கள் ஊனமாய்ப் போச்சுதுகள்.படிப்பில்ல பாடமில்லையெண்டு எங்கட பிள்ளையள் காடுவாசாரியாப் போகுதுகள்.போடா....போ.இதில எங்கட உயிர் போனாலும் பரவாயில்லை."

மிதிவெடிகள் - ஆக்கிரமிப்பாளர்களின் அடிமனதைக் கலக்கிடும் போராளிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம்.

டேய்...மச்சான் ஏதாலும் சிலமன்(சத்தம்)கேக்குதோ ?வா போவம்.இனி இதில நிக்க வேணாம்.

வா....வா போயிடுவம்.மழையும் வாறமாதிரிக் கிடக்கு.

அண்ணாந்து பார்த்தான் ஈழவன்.நிலவின் வெளிச்சத்தை மழை மேகம் மறைக்க முயற்சிக்க, முண்டியடித்து தன் வெளிச்சத்தை ஓரளவாவது கொடுப்பேன் என்று அடம் பிடித்ததாக நிலவு மறையாமல் வட்டமாய் தெரிந்துகொண்டிருக்கிறது.ஆனால் இன்னும் முழு நிலவாய் பௌர்ணமியாய் இல்லை.முகில் கூட்டங்கள் இறுக்கிய கைகளாய் ஒன்றையொன்று கெட்டியாய்ப் பிணைந்திருந்தது.எனவே மழை அடர்த்தியாய் அடித்து ஊற்றப்போவதில்லை இப்போதைக்கு.

இருவரும் சற்று வேகமாய் நடந்து பிறகு அமைதியாய் நடக்கத்தொடங்கினர்.

டேய் இனி இவ்விடத்திலயே படுத்திட்டுப் போவம்.அறிவிச்சுவிடு ஒருக்கா.
சரியே.

ம்ம்....சரி எனக்கும் அசதியாக் கிடக்கு என்றான் குமரன்.

அசந்து போனார்கள் அந்தக் குளக்கரையிலேயே இருவரும்.

விடியலின் இனிய இசைகள் மெதுமெதுவாய் கருக்கல் மேடையில் அரங்கேறத் தொடங்கியது. புள்ளினங்கள் பூக்கள் பூக்கும் அழகைத் தாங்கள் மட்டுமே கண்டதாய் தம்பட்டம் அடிகிறதோ கதம்பக் குரலில்.அவ்வளவு மகிழ்ச்சி குரலில்.குளத்தின் அமைதி கலைக்கும் கொக்குகள் படபடவென எங்கோ ஒருமித்துப் பறந்தபடி.

ஈழவன் உசுப்பினான் குமரனை."டேய் மச்சான் எப்பிடித்தான் இப்பிடி நித்திரை கொள்ளுவியோ.எனக்கெண்டா வராதடா.கனவு வந்து வந்து நிம்மதியா படுக்கேலாதடா.அது எப்ப வீட்ல இருந்து வந்தனோ அப்பவே போச்சு.எழும்பு போவம்.பெடியள் பாத்த்துக்கொண்டெல்லே இருப்பாங்கள்."

அது ஈழவன் பிறந்து வளர்ந்த கிராமம்.தன் மண்ணை ரசித்தபடியே நடக்கிறான் ஈழவன். எங்காவது ஒன்றிரண்டு மனித அசைவுகள் தெரிகின்றன.அதுவும் அவசர அவசரமாய்த்தான். அமைதி தொலைத்து அழவே பிறந்த தமிழராய் ஆக்கப்பட்டு கனகாலமாச்சு.

வயசு 18-19 தான் வரும் ஈழவனுக்கு.நம்ப மறுக்கும் உடல்வாகு.O/L படிக்கேக்கையே ஏதோ மன உறுதியோட வந்திட்டான் வீட்டை விட்டு.கடின உழைப்பு.காய்த்த கைகள்.நடு நடுவில கவிதையும் வரும் அவனுக்கு.

அரசியல்வாதி வாறார்
புர்ர்ர்ர்ர் எண்டு காரில
ஏனெண்டு கேக்கிறாய்
பெற்றோல் விலை
ஏறினதைக் கண்டிக்கவாம் !

அம்மா வயோதிபர் மடத்தில
வீட்டு மாடியில
வெளிநாட்டு மீனோட
பேசிக்கொண்டிருக்கிறாராம் மகன்!

ஆனால் பார்வையில் ஒரு தீர்க்கம் கூர்மை.மறைந்தும் மறையாமலும் !

சயனைட்குப்பி...சட்டைக்குள்.இப்போகூட தொட்டுப் பார்த்துக்கொள்கிறான் ஈழவன்.சிரிக்கிறான் குமரன்.

ஏண்டா தொட்டுப் பாக்கிறாய்.நீ விட்டாலும் அது விட்டுப் போகாதடா மச்சான் இனி உன்னை.

சயனைட் - அது அவர்களின் ஆன்மா.உன்னத ஆயுதம்.உயிர் கொடுத்து உத்வேகம் ஊட்டித் தரும் வீர மறவர்களின் தோழன்.

தன் ஊரை ரசித்தபடி நடந்தபடி ஈழவனைக் கடிவாளமிட்டுத் தடுக்கிறது ஒரு நாயின் குரைப்பும் வால் ஆட்டலும்.ஓ....அது அவன் வளர்ந்த வீடு.அவன் வளர்த்த நாய்.அதற்குகூட ஈழவன் என்றே பெயர் வைத்தான்."டேய் எப்பிடியடா உன்னையும் நாயையும் ஈழவன் எண்டு கூப்பிட" என்று அம்மா கூடப் பகிடி பண்ணியிருக்கிறாள்."ஏன் அப்பா சிலநேரம் "ராசாத்தி" எண்டு கூப்பிடுறார்.அது சித்தியின்ர பேரெல்லோ" எண்டு ....வாழ்வின் குடும்ப ஊட்டலில் எவ்வளவு சந்தோஷங்கள்.இழந்தேனா இல்லை இன்னொன்றை இழக்காமல் இருப்பதற்காக ஆயுதம் ஏந்தினேனா!

வீட்டு ஞாபகம் தொண்டை அடைத்து வர கூடவே அம்மாவின் தங்கை அண்ணாவின் ஞாபகமும்.தன்னைப் பெயர் சொல்லாமல் "ராசா" என்றழைத்தபடி மெலிந்த கையால் தலை தடவி உணவு ஊட்டிவிடும் அன்பு கண்ணுக்குள் நிறைய...

குமரன்...அம்மாவைப் பாத்துக் கனகாலமாச்சு.ஒரு சொட்டு நேரம்தான் 5 நிமிஷம் பாத்திட்டு வந்திடுறன்.இதில கவனமா நிண்டு பாத்துக்கொள்ளு.இப்ப வந்திடுவன்.

குமரனைப் பற்றிச் சொல்வதென்றால் ஈழவனின் சிறுவயது சிநேகம்.நாட்டுப் பற்றுள்ள ஆதரவாளன்.தூரத்து உறவினனும் கூட.நம்பிக்கை மிகுந்தவன்.

கருக்குமட்டைப் படலை தள்ளி வீட்டின் முற்றத்தில் கால் வைக்கவே வாழை மரத்தடியில் பாத்திரங்களைச் சாம்பல் போட்டுத் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா "என்ர ராசா" என்றபடி ஓடி வந்து அணைத்துக்கொண்டு "என்ர செல்லம் எவ்வளவு நாளாச்சடா.எப்பிடியணை இருக்கிற" என்றபடி அழத்தொடங்கினாள்.

இதுக்குத்தான் நான் இங்க வாறேல்ல.வந்தா சந்தோஷமா ரெண்டு வார்த்தை பேசிப்போட்டு எல்லாரையும் பாத்திட்டுப் போகவேணும்.
இது ....!

சரி....சரி நான் அழேல்ல.இரு தேத்தண்ணி தாறன் குடி.

இல்லையம்மா நான் ஒரு அவசர அலுவலாய் வந்தனான்.உதால போகேக்க உங்களையும் பாத்திட்டுப் போகலாமெண்டுதான் வந்தனான்.

"இல்லையப்பு என்ர தேத்தண்ணி நான் இன்னும் குடிக்கேல்ல.தங்கச்சியும் அண்ணாவும் குடிச்சிட்டுப் போய்ட்டினம்.நான் பிறகு குடிக்கிறன்.இந்தா இதைக் குடி" என்று ஒரு பித்தளைப் பேணியை தன் முந்தானைத் தலைப்பால் துடைத்தபடி கொண்டு வந்தாள் அம்மா.

அம்மா....உவன் குமரன் வாசலில நிக்கிறான்.அவனுக்கும் குடுங்கோ.என்றபடி அண்ணா, தங்கையைத் தேடத் தொடங்கினான்.

ஈழவன் அப்பா சிறு வயதிலேயே அப்பாவைப் பலி கொடுத்தவன்.அதற்கும் எங்கள் நாட்டுப் பிரச்சனைதான் காரணம்.ஈழவன் இருக்கும் இடத்துக்கும் நகர வைத்தியசாலைக்கும் 10-15 கி.மீ தொலைவு.போவதற்குத் தடை.பாஸ் கிடைக்கவில்லை.பாஸ் கேட்டு ஓடித் திரியவும் அப்பா உயிர் பிரியவும் சரியாக இருந்தது.அப்போ ஈழவனுக்கு 10 வயதுதான் இருக்கலாம்.அண்ணா வேலை தேடிப் போனதாகவும் ,தங்கை பள்ளி போனதாகவும் சொன்னாள் அம்மா.ஏனம்மா படிப்பு ஒரு கேடோ.இருக்கிற நிலைமைல என்று புறுபுறுத்தான் ஈழவன்.

எந்தப் போராட்ட நாடுகளிலும் மனிதத்தை மதிப்பவன் பெரிதும் போராளிகள்தான்.பாசம் நீதி மனிதாபிமானம் நிறைந்தவர்கள்.அதனால்தான் நிராகரிப்பும் ஒதுக்குதலும் ஒவ்வாமையாகிறது. தங்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உயிரையே பணயம் வைத்து தங்களது சுதந்திரந்திற்காகப் போராடுகிறார்கள்.அவர்களும் குடும்பம் பாசம் எனும் பிணைப்புக்குள் கட்டுப்பட்டவர்கள்தான்.உறவுகளைப் பிரிந்து தங்கள் விடுதலைக்காக எத்தனை எத்தனை காலங்கள்...

தேநீர் கொடுக்கப் போன அம்மா கையோடு திரும்பி வந்தாள்.

எங்க தம்பி அங்க குமரன் இல்லையே...

அருகில அங்கால இஞ்சால பாத்தனீங்களே அம்மா...

நீங்க சரியாக் கவனிகேல்லப் போல.அவன் அங்கதான் நிப்பான்.

சரி....சரி நான் வாறன்.இன்னொரு நாளைக்கு வாறன்.தங்கச்சி வந்தோடன சொல்லுங்கோ நான் கேட்டனான் எண்டு.

ராசா ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போவனடா.இப்ப சமைச்சிடுவன்.எத்தினை காலமாச்சு என்ர கையால சாப்பிட்டு நீ !

இல்லையம்மா...எனக்கு நிறைய வேலை கிடக்கு.இதால போகேக்குள்ள உங்களையும் பாத்திட்டுப் போகலாமெண்டுதான் ஒரு எட்டு வந்தனான்.பேந்து ஒரு நாளைக்கு வருவன் தானே.

ஈழவன் சொல்லிக்கொண்டு நிற்கும்போதே அதிர்ந்து திரும்புகிறான்.
இரைச்சலுடன் இராணுவ வாகனம் நிற்கும் கணத்தில் பாரமான பதிவுகளின் கனத்தில் பூவரசச் சருகளின் இறப்பு. துள்ளியெழும்பிய ஈழவனால் சிந்தனை தொடுக்கமுன் கொல்லை,கிணற்றடி என்று பின்வேலி முன்வேலி செத்தைகளுக்கூடாக கண்ணுக்கெட்டிய திசையெல்லாம் இராணுவ நிறங்கள்.அவனையே குறி வைக்கும் ஆயுதங்களும் ஆழப் பார்வைகளும்.

குரனைக் காணேல்ல அம்மா சொன்னதின் விளைவு புரிந்தது ஈழவனுக்கு.
இனத்தையே இனம் காட்டிக்கோடுக்கும் கோடரிக் காம்பு அவனாய் இருந்திருக்கிறான் எங்களோடயே.

குமரன் நல்லதே செய்திருக்கிறாய் என் நண்பா....இனத் துரோகி.

தப்பி ஓடவோ ஒளியவோ இடமுமில்லை நேரமும் இல்லை.

ஓ...இங்கயும் ஒரு கொடுப்பனவு எனக்கு.தீர்மானித்துக் கொண்டே "அம்மா இங்க வாணை.சாப்பிடவெல்லே கேட்டனீங்க.இப்ப கொஞ்ச நேரம் உங்கட மடியில படுத்துக் கொள்றன்."

தாய்க்கு புரியவில்லை."வாடா அப்பு...ஏன் திடீரெண்டு இப்பிடி ஒரு ஆசை".

மடியில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அடங்கவும் இராணுவம் "டோய்"என்றபடி நெருங்கவும் தாயின் வயிற்றைக் கட்டிப்பிடித்தபடியே உடைந்த சயனைட் குப்பியின் ஒருபகுதி கயிற்றில் தொங்க வாயெல்லாம் நீலநிறத்துடன் சுதந்திர தாகத்துடன் மீளாத்துயிலில் ஈழவன்.

மாவீரனின் தாய் யாருக்கும் கிடைக்காத பாக்யத்துடன்...மாவீரன் இறந்தால் செய்தியும், அவனது உடையுமே காணக் கிடைக்கும் தாய்க்கு அந்த மாவீரனே முழுமையாக அவளது பெற்று வளர்த்த மடியிலேயே....

"ஐயோ....ஓ....என்ர ரா.....சா"

இராணும் எதிர்பார்க்காமல் அவர்களைக் கடந்து அந்த அபலைத் தாயின் ஓலம் ஊரை நிறைத்து அடங்குகிறது.ஆனால் சுதந்திர ஓலம் அடங்காமல் இன்னும் வீராவேசத்துடன் !

[போர் முடிந்த கட்டத்தில் ஏன் பழையதைக் கிளறுவதுபோல இப்படி ஒரு கதை என்று கேட்பது புரிகிறது தோழர்களே.இது என் வாழ்வில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு.அடுத்து எதிர்காலத்திற்குச் சேமித்து வைக்கும் ஆவணங்களில் இப்படியான நிகழ்வுகளும் ஒன்று.அடுத்து "ஜெகா" வின் சயனைட் கவிதையும் இந்த நிகழ்வை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.இன்னும் ஒன்று...தமிழ்மணத்தில் சென்ற சில வாரங்களாக் ஈழத்துப் பதிவுகளுக்கு யாரோ மைனஸ் ஓட்டுப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் யாராயிருந்தாலும் நம்மவர்கள் நம் இனம்தானே.அவர்கள் செய்யும் இந்தச் செய்கையும் இந்த நிகழ்வை ஞாபகப்படுத்தி இதை எழுதத் தூண்டியது.இன்னும் போர்க்கால ஞாபகங்கள் இருக்கிறது.இடைக்கிடை வருவதில் தப்பில்லைத்தானே ?]

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP