Tuesday, February 24, 2009

என் அன்புக்குரிய நண்பர்களே!

இந்த புகைப்படத்திற்கான உணர்வுகளை பிரசவியுங்கள்.உணர்வுகள் சிறு கட்டுரையாகவோ,கவிதையாகவோ,சிறு கதையாகவோ,ஒரு உரையாடலாகவோ இருக்கட்டும்,பார்ப்போம்...பலரின் பதிவை எதிர்பார்க்கிறேன் எல்லோரது உணர்வும் எழுத்துக்களாக மலரட்டும்.
புகைப்பட நன்றி-google images

ஐயோ சத்தியமா இந்தப் பதிவை நான் போடவே இல்லை.உப்புமடச் சந்திக்குள் இப்போ எல்லாம் எலி உலாவுது.நானே யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.இந்தப்படத்துக்குக் கவிதை!
எலி வந்து பதில் பின்னூட்டம் போடும்.பாருங்களேன்!
ஹேமா(சுவிஸ்)

கமல்
********
பாவம் அவன்!
ஒட்டிய வயிறு
உலர்ந்த ஆடை
ஓரமாய் ஒரு பேப்பருடன்
அகதியாயோ அல்லது
அநாதையாயோ யாருமறியோம்!

நாளைய வாழ்வை நினைத்தபடி
வாழ்வின் வசந்தத்தைத்
தொலைத்து விட்டு
வாழ்வின் நிதர்சனம் நோக்கி
அவன் மட்டும் ஓரமாய்!

நகரம் இருண்டு கிடக்கிறது!
அவன் மட்டும் என்னைப்
போலவே விழித்திருக்கிறான்!

ஹேமா
*********
கூழ் குடித்தாலும்
குடிசைக்குள் வாழ்ந்தாலும்
கூடிக் கிடந்தோம்.
உறவுகள் தொலைத்து
ஊரையும் இழந்து
தெருவோரம்.

நிழல் தரும் மரங்களில்
கிளைகள் இல்லை.
கோவிலுக்குள் கடவுளும் இல்லை
உணவை மறந்த வயிறும் வற்றி.

கிழிந்த பேப்பரில் அரசியல்.
இலாபமற்ற பதிவுகள்.
ஒரு நாள் இலாபம் எனக்கு.
ஒரு நேரமாவது மானம் மறைக்க!!!

இப்னு ஹம்துன்
******************
1)
சொத்து சுகமிழந்தவன்
செய்தித்தாளில் வாசிக்கிறான்
'ஸ்லம் டாக் மில்லியனர்'

2)அடடா!
கிழிந்திருக்கிறதே.........
சுவாரசியமான படைப்பொன்று

SUREஷ்
*********
படிக்கும் வெறி தீரும்மட்டும்
படித்துக் கொண்டே இருப்போம்,
எத்தனை கிளிந்திருந்தாலும்
எங்கே கிளிந்திருந்தாலும்
எதை எழுதியிருந்தாலும்
எப்படி எழுதியிருந்தாலும்.....

கடையம் ஆனந்த்
********************
தன்னிலை மறந்து
ஏதையே தேடி இவனது பயணம்!

கிழிந்து போனது இந்த காகிதம் மட்டுமல்ல
இவன் வாழ்க்கையும் தான்!

உலகம் புரிய வைக்கும் பேப்பருக்கு
இவன் வாழ்வு மறந்து போனது ஏனோ?

உன்னிப்புடன்
நோக்குகிறhன்
நல்ல மனிதர்களை தேடி!

விடுகதையாய்...
இவன் பயணம்!

முனியப்பன்
**************
A man in a different world,A man in a different costume,
Reading news abt another world,The world he has detached from,
Let him remain peacefully in his world,
Since the world in paper is highly cruel.

அமுதா
*********
என்று ஒழியும்
இக்கொடுமைகள்
என்ற கேள்விக்கு கூட
சக்தி இன்றி

கொடுமைகளைக் கூறும்
தாளை மட்டுமே
கிழிக்க முடிந்தது.

சக்தி
*******
பார்வை சரி இல்லை
பயணம் முடியவில்லை
பக்கம் கிழிந்து இருப்பினும்
பார்த்து கொள்கிறேன்
பாரதத்தின் நிலையினை.

ஆதவா
*********
யாசகனின் தாகம்
உணவில் மட்டுமல்ல.
அறிவு கொட்டிக் கிடக்கும்
காகிதத்திலும்...

அ.மு.செய்யது
*******************

பிச்சை போடப்பட்ட
சாம்பார் சாத பார்சல் பேப்பரில்
"காதல் இனிக்கும்;
குபேரனாவாய்"
ராசிபலன் படிக்கும்
பார்வை மங்கிய தாத்தா.

தேவா
*********
படத்துக்குக் கவிதை
என்றவுடன்
படத்தைப்
பார்த்தேன்!!
படித்துக் கிழித்த
நாளிதழ்!
உடுத்திக்கிழித்த
உடை!
படமே ஒரு கவிதை!
பதிவிட்டவர் பெருங்கவிதை!!

‘அகோரி’
***********
1)
இன்று எங்காவது
உணவு பொட்டலம் போடுவார்களா
உணவின்றி உணர்விழந்து
பார்க்கிறார் தாளை
செய்தி இருக்குமா என்று.

2)படி
மடி
குடி
டி (நோ கடி)-நட்புடன் ஜமால்

திகழ்மிளிர்
*************

வசிப்பதோ தெருவிலெனிலும்
பசிக்கோ உணவு இல்லையெனிலும்
நேசிக்கும் தலைவர்களின் வார்த்தைகளை
வாசிக்காமல் எங்களால்
சுவாசிக்க முடியாது.

அபுஅஃப்ஸர்
**************

"நேற்றைய தன்
வசந்த கால வாழ்க்கையை
குப்பைத்தொட்டியில் கிடந்த‌
நாழிதளில்
படித்து மகிழும்
வெற்றிப்பட தயாரிப்பாளர்.

ஷீ-நிசி
**********

நானும் இந்த தாளும்
ஒன்றுதான்...

இருவருமே கிழிந்தநிலையில்....

நானும் நீங்களும் ஒன்றுதான்!!

நான் கிழிந்த தாளைக்கொண்டு,
செய்தி படிக்கிறேன்!

நீங்கள் கிழிந்த ஆளைக்கொண்டு
கவிதை படைக்கிறீர்கள்!

நானும் நீங்களும் ஒன்றுதான்

Thursday, February 19, 2009

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு.

வனுக்கென்ன மகாராஜாதான்.ஏ.ஸி கார் பெரிய வீடு வாசல் பெரிய உத்தியோகம் கூப்பிட்ட குரலுக்கு உடனே பத்து வேலைக்காரர்கள்."ம்ம்ம்..என்கூட தானே ஒன்றாகப் படித்தவன்.ஆனால் நானும் இருக்கிறேனே!இப்படி இந்தக் கேடுகெட்ட அலுவலகத்தில வந்து குப்பை கொட்டவேணும்ன்னு என் தலை விதி"இப்படிச் சிலர் கவலைப் படுவதுண்டு.

வாழ்க்கையில் சிலர் ஏற்றம்,தாழ்வு,கவலைகள் யாருக்குத்தான் இல்லை.எல்லோருக்கும் கவலை இருக்கத்தான் செய்கிறது.பலர் தங்கள் பிரச்சனைகளை - கவலைகளை
வாய்விட்டுப் புலம்பி வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சிலர் தங்கள் கவலைகளை வெளியே காட்டிக் கொள்வதே இல்லை.

கவலை என்பது மனதைக் கொல்லும் ஒரு நோய்.அது அமிலம் போல மனதை மெல்ல மெல்ல அரித்துக் கொல்லும்.
கற்பனையில் இல்லாததை எண்ணி கவலைப்படுபவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள்.
"எனக்கு வேலை கிடைக்காவிட்டால்....
எனக்குத் திருமணம் நடக்காவிடால்....
என்னைக் காதலிப்பவன் என்னைக் கல்யாணம் செய்யாமல் விட்டு விட்டால்....
எனக்குக் குழந்தை பிறக்காவிட்டால்...."
இப்படி வீணான கற்பனைகள் மனதில் அலை அலையாய் எழும்.இதுவே
கவலைகளைக் கருக்கொள்ளச் செய்துவிடும்.

ஒருமுறை மான்செஸ்டர் நகரத்தில் உள்ள பிரபல மருத்துவரான டாக்டர் ஜேம்ஸ் ஹாமில்டன் என்பவரிடம் ஒருவர் வந்தார்."உங்களுக்கு உடம்பு சரியில்லையா?என்ன செய்கிறது'"டாக்டர் கேட்டார்."உடம்பு நன்றாகத்தான் இருக்கிறது டாக்டர்.ஆனால் என் மனசுதான் சரியில்லை"என்றார் வந்தவர்.
"நீங்கள் கவலைப்படாதீர்கள்...சிரிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.உங்கள் கவலை பறந்தே போகும்"என்றார் டாக்டர்.
"சிரிப்பை எப்படி வில்லங்கமாய் வரவைப்பது டாக்டர்"என்றார் கண்களை அகல விரித்தபடி.

இன்று இரவு நம் நகரத்திற்கு நடக்கும் சர்க்கஸ்"க்ரீமால்டி"என்கிற கோமாளி செய்கிற கோமாளி வேலைகளைப் பாருங்கள்.சிரிப்பு தானாகவே வரும்"என்றார் டாக்டர்.

"மன்னியுங்கள் டாக்டர்.அது என்னால் முடியாமல் இருக்கிறது"
"ஏன்"
"அந்தக் க்ரீமால்டி நான் தான்"என்றாராம் டாக்டரிடம் கவலைக்கு மருந்து கேட்டு வந்தவர்.
பிறரைச் சிரிக்க வைப்பதே தொழிலாகக் கொண்டவர்களுக்குக்கூட கவலைகள் இருக்கத்தான் செய்கிறது.

"கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு.காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு"என்பது திரைப்படக் கவிஞரின் உற்சாக வரிகள்.

"கவலைப்படுங்கள்.கண்ணீர் விட்டு அழுங்கள்.ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் கவலைப்படவும் அழவும் நேரம் ஒதுக்கினால் போதும்.தனியறையில் கவலைகளை நினைத்து கண்ணிர் வடியுங்கள்.ஆனால் அந்த ஐந்து நிமிடம் முடிந்த பின் கவலைகளை உதறிவிட்டு புதிய மனிதனாக அறையை விட்டு வாருங்கள்.பின் நாள் முழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்"என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர் ஒருவர்.

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் மன்னன் ஒருவன்.இருந்தாலும் அவன் மனம் கவலைப் பட்டது.வாழ்க்கையில் நின்மதி இல்லை என எண்ணியவன் ஒரு முனிவரிடம் வந்து தனது பிரச்சனையைச் சொன்னான்.

"கவலை நோய் தீரவேன்டும் என்றால் கவலை இல்லாதவனுடைய சட்டையை வாங்கிப் போடு"என்று அறிவுரை கூறினார் முனிவர்.

மன்னர் மாறு வேடத்தில் நாடெல்லாம் அலைந்தான்."கவலை இல்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?"என தேடியவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒருநாள் மாறு வேடத்தில் ஒரு குடிசை அருகே சென்றான்.வீட்டுக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது."அப்பாடா எனக்குக் கவலையே இல்லை.இப்படியே கவலை இல்லாமல் இனிமேலும் இருக்க வேண்டும்"என ஒரு ஏழை தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"அப்பாடாநம் கவலை தீர்ந்தது" என மன்னன் வேகமாக அந்த ஏழையிடம் "நான் உங்கள் மன்னன்.கவலையில்லாத மனிதன் அணியும் சட்டை எனக்கு வேண்டும்.உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்.உன் சட்டையைத் தா"எனக் கேட்டான்.

"மன்னா...உங்களுக்கு என்னால் எதுவும் தரமுடியாது"என்றான் ஏழை

"எவ்வளவு பொன் பொருள் வேண்டும் என்றாலும் தருகிறேன்."

"மன்னா ....என்னிடம் உடம்பில் போட ஒரு சட்டைகூட இல்லை"என்றான் ஏழை.

தனது உடம்பை மறைக்க சட்டை இல்லாதவன் கவலையில்லாமல் வாழ்கிறான்.செல்வச் செழிப்பில் வாழும் மன்னன் கவலையில் வாழ்கிறான்.

மன நிறைவுடன் வாழப் பழகிக் கொண்டால் வாழ்க்கை கவலை இல்லை.பிரச்சனைகளும் குறைந்து மறைந்தே போகும்.

"எங்கள் கைகளுக்குள்தான் எங்கள் சந்தோஷமும் கவலையும்"
"கவலையற்ற இதயம் நீடித்து வாழும்"

ஹேமா(சுவிஸ்)

Monday, February 09, 2009

மருவி வரும் அழகு தமிழ்.

ஆங்கிலேயர் ஆண்ட காலங்களில் தமிழ் மொழிக்கு எந்த ஒரு ஆபத்தும் இருந்ததில்லை.ஆனால் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெயேறிய பின்னர் தான் ஆபத்து வந்திருக்கிறது.எப்படியென்றால் இப்போது தான் தழிழ்ப் படங்கள் ஆங்கிலப்பெயர் கொண்டு வருகின்றன.மேலும் பாடல்கள் கூட ஆங்கில வார்த்தைகள் கலந்து வருகின்றன.கேட்டால் காலத்தின் தேவை என்று சொல்லப்படுகிறது.அது என்ன அப்படியொரு தேவை?தமிழன் தமிழ் தானே பேச வேண்டும் அது என்ன மற்ற மொழிகளில் கலப்பது?


எங்கள் ஊரில் (இலங்கையின் கிழக்குக்கரையில் உள்ள மட்டகளப்பில்)ஏறத்தாள 500 வருடங்களுக்கு முன் வந்து குடியேறிய போர்த்துக்கீச இனத்து மக்கள் வாழ்கிறார்கள்.இன்றும் அவர்கள் தங்கள் வீடுகளிலும் தங்கள் மக்களோடும் பேசும் போது தங்களது மொழியிலேயே பேசுகிறார்கள்.அதாவது எறத்தாழ 500 ஆண்டுகள் தமிழர் மத்தியில் வாழ்ந்தும் ஒரு சமூகம் இன்னமும் தனது மொழியை இழக்கவில்லை.

ஆனால் நாம்"ஒருவர் ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு வருகிறார்.அவரிடம் அவரது நண்பர் ஹீரோ யார்?பைட் எல்லாம் எப்படி?சோங்ஸ் எப்படி?என்று தான் கேட்கிறார்.காதல் என்கிற அழகு வார்தையை கூட லவ் என்று தான் சொல்கிறார்கள்.

தமிழுக்குள் ஆங்கிலம் கலப்பதாலோ என்னவோ தமிழின் பழைய சொற்கள் எத்தனயோ மருவி வருகிறது.என்னைத் தமிழ் மருவும் ஆரோக்யமான தொடர் விளையாட்டுக்கு அழைத்தவர் என் தோழி திகழ்.(இனி என் யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கலக்கிறேன்.)எனக்கு இங்க சரியான குளிர்(கூதல்).அதால உடம்பு சரில்ல.கொஞ்சம் இல்ல...இல்ல நிறைய பிந்தியே பதிவு போடுறன்.நன்றி தோழி திகழ்மிளிர்.

தமிழா! நீ பேசுவது தமிழா...?
தமிழா!நீ
பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...


உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...


வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?


கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?


பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?


தமிழா!நீ பேசுவது தமிழா?
(திரு.காசிஆனந்தனின் கவிவரிகள்)

மரக்கால் - ஆழாக்கு,சுண்டு,கொத்து மரத்தால் செய்யப்பட்ட அன்றைய அளவைகள்.மரக்காலால் அளக்கும் நெல்லின் அளவையை புசல் என்பார்கள்.மரக்கால் (இது பெரிய மரக்கால்,சின்ன மரக்கால் என்று உண்டு) தானியம் அளக்கும் (பெரும்பாலும்) மரத்தால் ஆன கொள்கல அளவை.


கடுக நட ,விரசாய் நட-விரைவாய் வேகமாய்


குசலம் - நலம் விசாரித்தல்


வட்டில் - மரத்தால் செய்யப்பட்ட சாப்பிடும் தட்டு.


மிச்ச சொச்சம் - பொருளோ உணவோ கொஞ்சம் மிச்சம் இருப்பது
எப்பன் - இல்லிப்போல என்றும் யாழ் தமிழில் சொல்வார்கள்.


கவளம் - அம்மா சோறு உருட்டித் தருவது


சிட்டை - சிறு குறிப்புகளோடு எழுதி எடுத்துக்கொள்ளும் காகிதம்

அட்டாளை - பரணைப் போலவே


உறி - உறி என்றால் ஊரில் கிராமங்களில் குசினியில் முகட்டிலே கயிற்றில் கட்டி சாப்பாட்டுச் சாமான்களை இரவில் தொங்க வைத்திருப்பார்கள் பூனை,எலி,கரப்பான் பூச்சிகளிடம் இருந்து சாப்பாட்டுச் சாமான்,தயிர் போன்றவற்றைப் பாதுகாக்க.


அல்லங்காடி - மாலை வேளைகளில் திறக்கும் கடை


திருக்கை - விஷேச காலங்களில் கொடுக்கும் கோவில் பிரசாதம்


சுண்டக்கறி - முந்தைநாள் வைத்த குழம்பை சுண்டக்
காய்ச்சி வறுவலாக்கி எடுத்த கறி.


கூராந்து - (மழை கூராந்து இருக்கு)மழை வரும் நேரத்தில் வானம்
மேகமூட்டமா கறுப்பா இருக்கும்.


பிறத்தி - பின்பக்கம் சொந்தம் அல்லாதது.(அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் பிறத்தி பிறத்திதான்.)


பீத்தல் - ஓட்டை ,கிழிந்த


பிராது - முறையிடுதல்


அக்காள் - அக்கா


அத்தான் - அக்காவின் கணவன்.அன்றைய காலங்களின் தன் கணவனை அத்தான் என்று அழைப்பது வழக்கம்.இப்போ அது இல்லை.
அழகான விடயம் இது.


கடகம் - பனை ஓலையால் செய்யப்பட்ட சின்னதாய் பெரிதாய் பெட்டிகள்.


குஞ்சி - சின்னது(குஞ்சி அக்கா)


செட்டை - பறவைகளின் இறக்கை


வெட்டை - வெறுமையான வெளி


செத்தை - மரம் செடிகளின் குப்பை


பெட்டகம் - மரத்தாலான பெரிய பெட்டி


இறங்குப் பெட்டி - தகரத்தாலான சிறிய பெட்டி


மூக்குப்பேணி - தேநீர் குடிக்கப் பாவிக்கப்பட்டது.
குவளையில் கூராக இருக்கும்.


அரிவரி - முதன்முதல் பாடசாலை வகுப்பு.(முதலாம் வகுப்பிற்கு முன்)


சப்பை ,சப்பட்டை - தட்டையான


சுரும்பு - வண்டு (சுரும்பு குத்திட்டுது)


சும்மாடு - சுமக்கும் போது தலையில் சுத்தி வைத்துக் கொள்ளும் துணி.


கோணிப் பை - சாக்கு


பொட்டு(வேலி) - வேலியில் போகவர ஒரு சிறு புகு வழி.


கதியால் - வேலியை நெருக்கமாகப் போட முளைக்க வைக்கும் பூவரசு, கிளுவை போன்ற மரத்தடிகள்.


முட்டி - நீரைத் தேக்கி வைக்கும் மண்ணாலான பாத்திரம்.


சக்கப் பணிய - சப்பாணி போட்டு தரையில் வசதியாக அமர்ந்திருத்தல்.


விசகேளம் - ஒருவர் இன்னொருவரிடம் மூன்றாம் நபருக்கான செய்தி ஒன்றைச்சொல்லி விடுதல்.


பிளா - கள்ளுக்குடிக்க பனை ஓலையால் பின்னப்பட்டிருக்கும்.

இத்தனை சொற்களும் நான் என் அம்மா,அப்பா,அம்மம்மா,தாத்தா,பாட்டி என் முன்னோர்கள் கதைக்கக் கேட்டது.இப்போ அப்பாவிடமும் கேட்டு அறிந்துகொண்டது.


எனக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.சிலசமயம்
இங்கே எங்கள் வழக்கத் தமிழும் கலந்தே இருக்கிறது என்றே நினைக்கிறேன்.குறை நிறை சொல்லுங்கள்.திருத்திக்கொள்கிறேன்.


என் அம்மம்மா(அம்மாவின் அம்மா)மாதத்தில் ஒரு முறை ஒடியல் கூழ் காய்ச்சி வளவின் பிறத்தில பெரிய மரங்கள் இருக்கு.பிலா,மா,தென்னை,
நாவல்,கொய்யா எண்டு.அங்க எல்லாரும் சுத்தியிருந்து பிலா இலையை மடிச்சுக் கூராக்கி கூழ் குடிப்பம்.இனி அந்தக் காலங்களின் நினைவுகள் மட்டுமே!


ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 03, 2009

சுதந்திர தினம்-நாகரீக உலகிற்கே ஒரு கரிநாள்!

"...இன்று தமிழர்கள் தமிழீழத் தனியரசை அமைத்துப் பிரிந்து போகவேண்டும் என்று விரும்புவதற்கு முன்பாகவே,60 ஆண்டுகளுக்கு முன்பதாகவே,அல்லது 58ஆண்டுகளுக்கு முன்பதாகவே சிங்களதேசம் ‘கோடு’ போட்டு பிரித்து விட்டது..."

பிரிப்பது தமிழர்கள் அல்ல!
பிரித்தது சிங்களமேயாகும்!


2008ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் நான்காம் திகதியானது,சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடாகிய சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர தினமாகும்.தமது முழுமையான சுதந்திரத்திற்காக,மகத்தான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தமிழீழ மக்களுக்கோ அன்றைய தினம் ஒரு கரி நாளாகும்.

காலப் பெரு வெள்ளத்தினூடே,நீச்சலிட்டு வாழுகின்ற மனிதகுலம், படிப்படியாகத் தனது காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையிலிருந்து பரிணாமம் அடைந்து நாகரீகத்திலும், பண்பாட்டிலும் முன்னேறி,மனிதத்தின் உயர் விழுமியங்களைப் போற்றிக் கடைப்பிடிப்பதில் படிப்படியாக வெற்றி பெற்று வருகின்றது.

ஆனால் இந்த மனிதப் பரிணாமத்திலிருந்து முற்றாக முரண்பட்டு, பழைய காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை முறையை நோக்கிப் பின்னோக்கி ஓடுகின்ற ஒரே ஒரு தேசமாகச் சிங்களப் பௌத்தப் பேரினவாத தேசமான சிறிலங்கா விளங்குகின்றது.

கடந்த அறுபது ஆண்டுக் காலத்தில்,காட்டுமிராண்டித் தனத்தை நோக்கிச் சிறிலங்கா பின்னோக்கிச் சென்ற வேகமானது, மனித குலத்திற்கு
வெட்கத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். அதனடிப்படையில், சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர தினம்,தமிழீழ மக்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் ஒரு கரி நாளேயாகும்! உயர் மனித விழுமியங்களுக்கும் ஒரு கரி நாளாகும்!

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளை,
அறுபது ஆண்டுகளுக்கு முன்னரேயே சிங்களத் தலைமைகள் ஆரம்பித்து விட்டன என்பது வரலாற்று ரீதியான உண்மையாகும்.

பின்னாளில் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாகப் பதவியேற்ற
டொன் ஸ்ரீபன் சேனநாயக்கா என்கின்ற D.S.சேனநாயக்கா,பிரித்தானியாவின் ஆட்சிக் காலத்தில்,1930களில் - அதாவது 78 ஆண்டுகளுக்கு முன்னர் - பிரித்தானியாவின் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்திலேயே,அவர் தமிழ்ப் பிரதேசங்களின் உலர் நிலப் பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து விட்டார்.
அதாவது, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரேயே, சிங்களப் பேரினவாதம்,தமிழர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதே வரலாற்று உண்மையுமாகும்.

ஆனால் கடந்த அறுபது ஆண்டுகளில்,சிங்களப் பௌத்தப் பேரினவாதம், தமிழினத்தையும்,தமிழர் தேசத்தையும் அழிப்பதில் காட்டு
மிராண்டித்தனமான முறையிலேயே செயல்பட்டு வந்துள்ளது.மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றாலும்,தமிழ் மொழியுரிமை மறுப்பு,சிங்கள மொழித் திணிப்பு, தமிழர்களுக்கான கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு மறுப்பு,தொடர் சிங்களக் குடியேற்றங்கள் ஊடாக தமிழர்களின் நிலங்களை அபகரிப்பு, தமிழர்களின் பொருளாதாரக் கட்டமைப்பினைச் சீர் குலைப்பு,1956,1958,1961,1977,1981,1983 என்று திட்டமிடப்பட்ட முறையில் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், தமிழினத்திற்கு எதிராக இயற்றப்பட்ட அரசியல் யாப்புக்கள்,தமிழர் தலைமைகளோடு கைச்சாத்திடப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் முறித்தமை, தமிழ் மக்கள் மீதான தொடர் இராணுவ நடவடிக்கைகள்,பொருளாதார,உணவு, மருந்து,போக்குவரத்துத் தடைகள்,அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், செம்மணிப் புதை குழிகள் என்று பட்டியல் முடிவின்றி நீண்டு கொண்டே போகும்.

என்று ஒர் அரசு, தன்னுடைய மக்கள் என்று, தான் சொல்லிக் கொள்பவர்கள் மீதே, திட்டமிட்ட அழிவைக் கொண்டு வருகின்றதோ, அன்றிலிருந்து, அந்த மக்கள் மீது எந்தவிதமான அதிகாரத்தையும் அந்த அரசு பிரயோகிக்க அதற்கு உரிமையில்லை.

இன்று அறுபதாவது ஆண்டுச் சுதந்திர தினம் என்று கூறிக் கொண்டு,அச்சத்தின் ஊடே,சுதந்திரமில்லாத வகையில், தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற சிங்களச் சிறிலங்காவின் வரலாற்றைச் சற்றுக் கவனிப்போம்.

மிகப் பெரிய நம்பிக்கைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு,அதாவது 1948ம் ஆண்டு பெப்ருவரி மாதம் நான்காம் திகதியன்று, காலி முகத் திடலில் டச்சுப் பீரங்கிகள் இருபத்தியொரு வெடி முழக்கங்களைத் தீர்த்துக்கொண்டிருக்கையில் கொழும்பு ரொரிங்டன் சதுக்கத்தில் பிரித்தானிய அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களின் சொந்தச் சகோதரரான டியுக் குளஸ்டர் இலங்கைத் தீவின் (அன்றைய சிலோன்) சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினார்.

பின்னர் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியான டொன் ஸ்ரீபன் சேனநாயக்கா இலங்கையின் அப்போதைய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இலங்கையின் (Ceylon)அன்றைய தேசியக்கொடி, கண்டியின் கடைசி அரசதானியாகிய தமிழ் மன்னன் சிறிவிக்கிரம ராஜசிங்க கொண்டிருந்த கொடியாகும்.

1815ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம்தகிதியன்று கண்டியில் ஆங்கிலேயர்களால் இறக்கி வைக்கப்பட்ட சிங்கக்கொடி,133 ஆண்டுகளுக்கு பின்னர் 1948ம் ஆண்டு,“ஒருங்கிணைந்த இலங்கைக்குரிய கொடியாக” மீண்டும் ஏற்றி வைக்கப்பட்டது.

ஆனால் இந்தச் சிங்கக்கொடி ஏற்றலுக்குப் பின்னால் நடைபெற்ற சம்பவங்கள், அன்றைய சிங்களத் தலைமைகளின் பேரினவாதத்தை அப்போதே பிரதிபலித்துக் காட்டி விட்டன.சுருக்கமாகச் சில விடயங்களைப் பார்ப்போம்.

தனது முன்பாதத்தில் கூர்மையான வாள் ஒன்றை ஏந்தியவாறு உள்ள சிங்கக் கொடியை,இலங்கைத்தீவில் முதலில் நாட்டியவன் விஜயன் என்று மகாவம்சம் கூறுவதாகச் சொல்லப்படுகிறது. பின்னாளில் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தை அடையப் போகின்ற வேளையில் இலங்கையின் தேசியக்கொடியாகச் சிங்கக் கொடியைக் கொள்ளவேண்டும் என்று முதலில் பிரேரணையைக் கொண்டு வந்தவர் மட்டக்களப்புப் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த முதலியார் சின்ன லெப்பை என்பவராவார்.முஸ்லிம் பிரதிநிதியான சின்ன லெப்பை இவ்வாறான பிரேரணையை ஜனவரி 1948ல் கொண்டு வருவதற்கு மூலகாரணமாகப் பின்னணியில் ஜேஆர் ஜெயவர்த்தனா போன்ற சிங்களத் தலைவர்கள் இருந்தார்கள் என்று நம்பப்படுகிறது.

செனட்டர் நடேசன் போன்ற தமிழ்த் தலைவர்கள் “சிங்கக் கொடியானது இலங்கைத் தீவின் சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தேசியக் கொடிக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை” என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக 6ம் திகதி மார்ச் மாதம் 1948ம் ஆண்டு அதாவது முதலாவது சுதந்திர தினக் கொடியேற்றத்தின் பின்பு இலங்கைக்கான தேசியக் கொடியொன்றை முறையாக(!) வடிவமைக்கும் பொருட்டு ஒரு தெரிவுக் குழுவைப் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா நியமித்தார்.

அதில் S.W.R.D. பண்டாரநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவை, J.R. ஜெயவர்த்தனா,T.B. ஜயா,Lalitha ராஜபக்ச,G.G.பொன்னம்பலம்,செனட்டர் நடேசன் ஆகியோர் அங்கம் வகித்தார்கள். இதில் மூவர் பின்னாளில் இலங்கையின் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார்கள் என்பது வேறு விடயம்.

1950ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம்திகதி இந்தக் குழு இலங்கையின் தேசியக் கொடிக்கான தனது பரிந்துரையை அளித்தது. வாளேந்திய சிங்கத்தைக் கொடியில் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்றும், சிறுபான்மை இனத்தவர்களான தமிழரையும்,முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மஞ்சள்,பச்சை வண்ணங்களைக் கொண்ட இரண்டு கோடுகள் மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்தது. இந்தக் குழுவின் பெரும்பான்மையோர் எடுத்த இந்த முடிவுக்கு, செனட்டர் நடேசன் இணக்கம் தெரிவிக்கவில்லை.அதற்கான காரணங்களைத் தெரிவித்த அவர் 15.2.1950 அன்றே ஓர் அறிக்கையையும் வெளியிட்டார்.

இந்தப்புதிய கொடி குறித்தும் அதனூடே சொல்லப்படுகிற சில செய்திகளையும் நாம் சற்று கவனிப்போம்.

வாளேந்திய சிங்கக் கொடியின் நான்கு மூலைகளிலும், பௌத்த மதத்தைக் குறிக்கும் அரசமரத்தின் இலைகள் இருக்கின்றன.ஆனால் சிறுபான்மையினரைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படும் மஞ்சள் பச்சைக் கோடுகள் வாளேந்திய சிங்கத்தோடு சேர்ந்து இருக்கவில்லை.சிங்கம் இருக்கின்ற சதுரத்துக்கு அப்பால் அதற்கு வெளியேதான்,சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாகச் சொல்லப்படுகின்ற இந்த இரு வண்ணக் கோடுகள் இருக்கின்றன.

அதாவது இந்த இரண்டு சிறுபான்மை இனங்களும் சிங்கள தேசத்தின் எல்லைக்கு வெளியே இருப்பதாகவும் அந்த இனங்களைத் தடுத்து நிறுத்தவதற்காகஇ சிங்கம் தன் கையில் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் உருவகப்படுத்தப்படுகின்றது.

இன்று தமிழர்கள் தமிழீழத் தனியரசை அமைத்துப் பிரிந்து போகவேண்டும் என்று விரும்புவதற்கு முன்பாகவே,60 ஆண்டுகளுக்கு முன்பதாகவே,அல்லது 58 ஆண்டுகளுக்கு முன்பதாகவே சிங்களதேசம் ‘கோடு’ போட்டு பிரித்து விட்டது.

தனது தேசியக் கொடியிலேயே கோடு போட்டு பிரித்துக் காட்டிய ஒரே ஒரு தேசம் சிறிலங்காவாகத்தான் இருக்க முடியும்.

பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை 1995ல் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து லட்சம் தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு, சிங்கக்கொடியை யாழில் ஏற்றியதையும், அன்றைய அதிபர் சந்திரிக்கா அம்மையாருக்கு ‘யாப்ப பட்டுனவை’ கண்டியில் பட்டயத்தினூடாகக் கையளித்ததையும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் நாம் நினைவு கூரலாம்.

1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி 'குடியரசுச் சிறிலங்காவாக’ ‘புதிய தோற்றம்’ ஒன்றைக் கொண்டபோது,ஒரு புதிய அரச இலச்சினையை சிறிலங்கா உருவாக்கியது. அதில் வாளேந்திய சிங்கம் உள்ளது. சூரியன் உள்ளது. சந்திரனும் உள்ளது.ஆனால் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இரண்டு வண்ணங்கள் மட்டும் இல்லை.

பிரிப்பது தமிழர்கள் அல்ல! பிரித்தது சிங்களமேயாகும் !

சிறிலங்காவின் தேசியக்கொடிக்கு உள்ளேயே இத்தனை வெறுப்பும், துவேஷமும், பேரினவாதமும் உள்ளதென்பது ஒருபுறம் இருக்கட்டும்.கடந்த 60 ஆண்டு காலப்பகுதியில் அரசியல் ரீதியாகத் தமிழர்களைச் சிங்கள அரசு எவ்வாறு ஒடுக்கி வந்துள்ளது என்பதைப் பட்டியல் இட்டால், அதுவே ஒரு தனிச் சரித்திரமாக நீளும். அடிப்படையான சில விடயங்களை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

பொதுவாக உலகளாவிய அரசியல் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையொன்றைப் பிரித்தானிய சாம்ராஜ்யமும் ஏற்றுக்கொண்டிருந்தது. அதாவது வாக்குரிமையுள்ள பிரிட்டிஸ் தேசங்கள் (மொழி ரீதியாக English, Irish, Scottish, Welsh) போன்றவை,தங்களுடைய பெரும்பான்மை வாக்குரிமை ஊடாகப் பிரிந்து சென்று தனியான,சுதந்திர இறைமையுள்ள நாடாக அமைய விரும்பினால் அதற்குத் தடையில்லை.

உதாரணத்திற்கு 1922ம் ஆண்டு அயர்லாந்து எடுத்த முடிவையும்,ஐரிஸ் குடியரசு உருவானதையும் கூறலாம்.ஆனால் இதேபோல் 1977ம் ஆண்டு தமிழர் தேசம்,ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாகப் பிரிந்து செல்வதற்கான மக்கள் ஆணையைப் பெற்றபோது, அதனைச் சிங்கள அரசு புறம் தள்ளியது.சிங்கள அரசின் அந்தச் செய்கை புதிதான ஒன்று அல்ல. இலங்கை சுதந்தரம் அடைந்த தினத்திலிருந்தே அது அவ்வாறுதான் செயலாற்றி வருகின்றது.

உதாரணத்திற்கு ஒரு விடயத்தைப் பார்ப்போம்.சிறிலங்கா என்கின்ற, இலங்கை என்கின்ற,Ceylon என்று அன்று அழைக்கப்பட்ட தேசம், பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்திடமிருந்து தன்னுடைய சுதந்திரத்தைப் போராட்டம் எதுவும் இன்றி பெறுகிற காலம் அண்மித்த வேளையில்,அதாவது கிட்டத்தட்ட 1944ம் ஆண்டு பகுதியில்,சோல்பரி பிரபு (Lord Soulbury) என்பவரை இலங்கை அரசியல் யாப்பினை சீர்செயற்படுத்தும் குழுவிற்குத் தலைவராக, அன்றைய பிரித்தானிய அரசு நியமித்திருந்தது. சுதந்திர இலங்கைக்கான யாப்பில் அன்று சோல்பர் பிரபு சட்டமாக்கிய (1948) சரத்து 29ன் நான்கு பிரிவுகளை இப்போது கவனிப்போம்.

எந்த ஒரு மதத்தினதும் சுதந்திரமான இயக்கத்தைத் தடைசெய்யும் அல்லது கட்டுப்படுத்தும் சட்ட மூலங்களைச் சட்டமாக நிறைவேற்ற முடியாது.

எந்த ஒரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்தவர் மீது சுமத்தப்படாத பொறுப்புக்களையோ,கட்டுப்பாடுகளையோ இன்னொரு சமூகத்தையோ, மதத்தையோ சேர்ந்தவர் மீது சுமத்தும் சட்டமூலங்களைச் சட்டமாக நிறைவேற்ற முடியாது.

ஒரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் ஏனைய சமூகத்தையோ, மதத்தையோ சேர்ந்தவர்களுக்கு வழங்க மறுக்கும் சட்ட மூலங்களைச் சட்டமாக நிறைவேற்ற முடியாது.

எந்த ஒரு மத நிறுவனத்தின் யாப்பையும், அந்த நிறுவனத்தின் நிர்வாக சபையின் அனுமதியின்றி மாற்ற முனைகின்ற சட்ட மூலங்களைச் சட்டமாக நிறைவேற்ற முடியாது. ஆனால் சோல்பரி பிரபு சட்டமாக்கிய அரசியல் யாப்பின் சரத்து 29 இன் பிரிவுகளைப் பின்னாளில் பண்டாரநாயக்காவின் அரசு மீறியது. சிங்களம் மட்டும் மற்றும் தமிழ் அரச உத்தியோகத்தருக்குச் சிங்கள மொழித் தேர்ச்சியின் அவசியம் என்பது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.இச் சட்டங்கள் தமிழினத்தைப் பலவீனப்படுத்துவதற்காகவே இயற்றப்பட்டன. அத்தோடு சிங்கள இனத்தை மட்டுமே மேம்படுத்துவதற்கான வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு அவை முறையாக அமலாக்கப்பட்டன.

இப்படிப்பட்ட செயற்பாடுகள் மூலம் சிறிலங்கா தான் ‘ஜனநாயகத்துக்குப் புறம்பான ஒரு நாடு’ என்பதை நிரூபித்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாது சட்டத்துக்கும் யாப்புக்கும் புறம்பான அதன் செயற்பாடுகள் மூலமாக, தான் ஓர் ‘இறைமை இல்லாத நாடு’ என்பதையும் அது நிரூபித்து நிற்கின்றது.

இந்தக் கருத்தை நாம் முன்னர் ஒரு முறை தர்க்கித்திருந்தபோதும் இந்தக் கட்டுரைக்கான கருத்துக்களின் முழுமை கருதி சிறிலங்காவின் இறைமை குறித்து மீண்டும் தர்க்கிக்க விழைகின்றோம்.

சிறிலங்காவின் இறைமை(?) குறித்துச் சட்டரீதியாகவும் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கக்கூடும்.

1962ம் ஆண்டு,இலங்கை அரச ஊழியரான திரு கோடீஸ்வரன் என்பவர் சிங்கள மொழித் தேர்ச்சிக்கான பரீட்சைக்குத் தோற்றுவதற்கு மறுத்தார்.அதன் காரணமாக அவருடைய சம்பள உயர்வுகள் தடுக்கப்பட்டன. அதனை எதிர்த்துத் திரு கோடீஸ்வரன் அவர்கள் 1962ம் ஆண்டு, இலங்கை அரசுக்கு எதிராகக் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.சோல்பரி பிரபுவால் இயற்றப்பட்ட அரசியல் யாப்பின் சரத்து 29ன் பிரிவு 2.டீ மற்றும் 2.ஊ க்கு எதிராகச் சிங்கள அரசு கரும மொழிச் சட்டம் உள்ளது என்று திரு கோடீஸ்வரன் வாதிட்டார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ழு.டு.னுந முசநளவநச என்பவர் அதனை ஏற்றுக்கொண்டு ‘சிங்களம் மட்டும்’ சட்டம் என்பதானது அரசியல் யாப்பின் சட்ட வல்லமையின் நோக்கத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர்நீதிமன்றத்தில் இலங்கை அரசு முறையீடு செய்தது.ஓர் அரச ஊழியர் அரசிற்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது என்று காரணம் காட்டிஇ இலங்கை உயர்நீதிமன்றம் இலங்கை அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பை வழங்கியது. ஆனால் திரு கோடீஸ்வரன் அவர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடுத்தார்.

"இந்த வழக்கின் தீர்ப்பு இலங்கை அரசின் யாப்பினை மீறுகின்றதா என்பதனை இலங்கை உயர்நீதிமன்றம் பார்க்க வேண்டும்" என்று இலண்டன் Privy Council தீர்ப்பு வழங்கியது. அதாவது அரசியல் யாப்பினை நீதித்துறை கட்டுப்படுத்த முடியாது என்று இலண்டன் Privy Council கூறியது.

ஆனால் பின்னர் என்ன நடந்தது…………….?

திரு கோடீஸ்வரனின் வழக்கு இலங்கை உயர்நீதிமன்றத்தின் முன் மீண்டும் வரமுடியாமல் போயிற்று.காரணம் 1970ம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காஇ இலண்டன் Privy Council ற்கு மேன்முறையிடும் வழக்கத்தை இரத்துச் செய்தார். அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் சட்டத்துக்கும்,நீதிக்கும் புறம்பாக,1972ம் ஆண்டு இலங்கை அரசின் யாப்பினை மாற்றியமைத்தார்.

1947ம் ஆண்டில் இயற்றப்பட்ட இலங்கை அரசியல் யாப்பை, சிறிமாவோ பண்டாரநாயக்கா 1972ல் முற்றாக மாற்றியமைத்தார்.இதில் தமிழர்களின் பங்களிப்போ,அல்லது ஆதரவோ இருக்கவில்லை.உலக வரலாற்றில் சதி மூலமாகவோ அல்லது புரட்சி மூலமாகவோதான் இவ்வாறு அரசியல் யாப்புகள் மாற்றப்பட்டுள்ளன.அன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் சகல உரிமைகளையும் பறிப்பதற்காக,இலங்கைத் தீவைக் குடியரசாக்கி,அதன் அரசியல் யாப்பையும் மாற்றுகின்ற முயற்சியைச் சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.

இவை மூலம் சிறிலங்கா தன்னுடைய இறைமையைச் சட்டரீதியாகவும் அரசியல் யாப்பு ரீதியாகவும் இழந்து விட்டது.

ஏனென்றால், அன்று இவ்வாறு அரசியல் யாப்பினை மாற்றுவதற்குப் பிரித்தானிய அரசினுடைய Queen in Council இன் அல்லது பிரித்தானிய மகாராணியின் அனுமதியோடு, பிரித்தானியப் பாராளுமன்றம் ஒப்புதல் ஒன்றைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படுகின்ற ஒப்புதலோடுதான்இ சிறிமாவோ பண்டாரநாயக்கா தன்னுடைய அரசியல் யாப்பு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத காரணத்தினால் 1972ம் ஆண்டு சிறிலங்கா அரசு கொண்டு வந்த புதிய அரசியல் யாப்பு என்பதானது சட்டத்துக்கும், நீதிக்கும் புறம்பானது என்பதால் அதற்கு - அதாவது சிறிலங்கா அரசிற்கு - இறைமை என்பது கிடையாது!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் Foremost Constitutional Authority on Commonwelth Consititutions Professor S.A.D Smith என்பவர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இந்த அரசியல் யாப்பைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். வெள்ளையரான பேராசிரியர் S.A.D Smith அவர்கள் சிறிலங்காவின் யாப்பு சட்டவிரோதமானது (ultra vires) என்று அன்றே கண்டனம் தெரிவித்திருந்தார்.

1972ம் ஆண்டிலும்,1978ம் ஆண்டிலும் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டபோது, தமிழர்கள் பங்களிப்பும் தரவில்லை. ஆதரவும் தரவில்லை.

இங்கே ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தனி ஒருவர் (திரு கோடீஸ்வரன்) எழுப்பிய உரிமைப் பிரச்சனைக்காக (அவர் ஒரு தமிழராக இருந்த காரணத்தினால்) சிறிலங்காவின் யாப்பே மாற்றி அமைக்கப்பட்டது இந்த நிலை மேலும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை. நடைமுறையில் இருந்த யாப்பினூடாகச் சட்டரீதியாகப் போராடிப் பெற்ற வெற்றியைப் பறிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய யாப்பு ஒன்றையே சிறிலங்கா அரசு உருவாக்கியது.சிறிலங்கா அரசோடு பேசி எந்தச் சமாதானத் தீர்ப்பைப் பெற்றாலும், அடுத்த சிங்கள அரசு மீண்டும் யாப்பைத் திருத்தி, நிலைமையைப் பழைய பாதாளத்திற்குள் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

சிங்களப் பௌத்தப் பேரினவாதத்திற்குத் தேவைப்படும் பட்சத்தில் சிறிலங்காவின் நீதித்துறை,அரசியல் யாப்பைக கட்டுப்படுத்தும்.ஆனால் அந்த நீதித்துறையின் நீதியரசர்கள் தமது பதவிகளுக்கான சத்தியப்பிரமாணத்தை எடுக்கும்போது‘அரசியல் யாப்பைக் காப்பாற்றுவோம்’என்றுதான் சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள்.

எத்தகைய பெரிய முரண்பாடு இது! பேரினவாதச் சிங்களத் தலைமைகளைப் பொறுத்தவரையில் யாப்போ ஜனநாயகமோ,சட்டமோ,நீதியோ ஒரு பொருட்டல்ல! ஒப்பந்தங்களும்,கட்டமைப்புத் திட்டங்களும் செல்லாக் காசாக்கப்படும்.இலங்கை இந்திய ஒப்பந்தமும், சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பும்,போர்நிறுத்த ஒப்பந்தமும் எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன.

சிறிலங்காவின் தேசியக்கொடி தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது. சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழர்களுக்கு எதிரானதாக இருக்கின்றது. சிறிலங்காவின் சட்டமும்,நீதியும் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக சிறிலங்கா ஓர் இறைமை இல்லாத நாடாக இருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு நாடுதான் தன்னுடைய ‘சுதந்திர தினத்தைக்’ கொண்டாடுகின்றது.

இந்தப் பௌத்தச் சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்தெடுத்தது மட்டுமல்லாமல்,கீழ் மட்டச் சிங்களப் பொது மக்களையும் அடிமைச் சேற்றில்தான் உழல வைத்திருக்கிறார்கள்.தமிழர்களுக்குத் தமக்குச் சுதந்திரம் இல்லை என்பதுவும்,அதற்காகப் போராட வேண்டும் என்பதுவும் தெரியும்.ஆனால் பெரும்பான்மைச் சிங்களப் பொதுமக்களோ தமக்கும் உண்மையான சுதந்திரம் இல்லை என்பதோ அதற்காகப் போராட வேண்டும் என்பதோ இன்னமும் தெரியாமல் இருக்கின்றது.

அதை அவர்கள் அறிந்து, உணர்ந்து போராடத் தொடங்கையில்தான் அவர்களுக்கான புதிய சுதந்திர தினமும்,புதிய தேசியக் கொடியும் அவர்களுக்குக் கிட்டும்.அதுவரை அவர்களுடைய இந்தச் சுதந்திர தினங்கள் (?) அர்த்தமற்றவையேயாகும்.

சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர தினம்,தமிழீழ மக்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் ஒரு கரி நாளேயாகும்! உயர் மனித விழுமியங்களுக்கும் ஒரு கரி நாளாகும்!

(நன்றி சபேசன்,அவுஸ்திரேலியா,2 February 2008)

Sunday, February 01, 2009

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்....

தமிழர் தாயகத்தில் நாளாந்தம் இடம் பெற்று வருகின்ற கோர யுத்தத்தினால் இறந்து மடிகின்ற எங்கள் இரத்த உறவுகளைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துக் கணிப்பினைக் கனடாவைச் சேர்ந்த இராணுவ ஊடகம் ஒன்று மேற்கொள்கின்றது. எங்கள் தாயக உறவுகளின், இரத்த உறவுகளின் உயிர்களினைப் பாதுகாக்க நீங்கள் விரும்பின் உடனடியாக விரைந்து செயற்படுங்கள். உலகங்கெங்கும் பரந்து வாழுகின்ற உறவுகளே! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக 0014162604005 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு எமது உறவுகளைப் பாதுகாக்க விரும்பின் அறிவுறுத்தல் (Option) ஒன்றினை ( 1) அழுத்தவும். காலம் தாமதிக்காமல் உடனே விரைந்து செயற்படவும். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானலும் வாக்களிக்காலம். ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.இந்த விடயத்தை உடனடியக உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்! நேற்று இடம்பெற்ற எறிகணை மற்றும் பல் குழல் உந்துகணைத் தாக்குதலில் (12) பன்னிரண்டு சிறுவர்கள் உட்பட (32) முப்பத்திரண்டு பேர் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அழுத்துங்கள் உங்கள் தொலைபேசிகளை! பதியுங்கள் உங்கள் வாக்குகளை! திறவுங்கள் உலகின் விழிகளை! Hi Every One! please vote for ceasefire in SriLanka. Please dial 0014162604005 and press one. This vote been canadian army media. Please act soon... And pass the message to every one you know. Please...Please vote now and safe our people. Evan last night 32 been killed including 12 kids on ariel bombing.
நன்றி
கம‌ல்

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP