Saturday, January 31, 2009

உயிர் காக்கும் படலம்(2)

Friday, January 30, 2009

உயிர் காக்கும் படலம்(1)




உயிர் காக்கும் படலம்.யாராவது பார்த்தீர்களா...படித்தீர்களா?

ஹேமா(சுவிஸ்)

Thursday, January 22, 2009

மீண்டும் மகளாகிறாள்(6)

தியின் சங்கடம் குமாரைச்(டக்சன்)சிந்திக்க வைத்தது.குமாரும் அம்மாவிடமும் இது பற்றி ஆலோசித்தார்.தாயாருக்கு பெரிதான விருப்பம் இல்லை.என்றாலும் "போய் இருந்து பார்த்துவிட்டுப்
பிடிக்கவில்லையென்றால் உடனே வந்துவிடு" என்று அரைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தார்.மூத்த மகன் ஆதலால் தாய் மனம் பிரிவை வேண்டாம் என்றது.குமார் அதைத்தொடர்ந்து அடுத்த நாளே தன் அலுவலகத்திலும் வேலை மாற்றம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.ரதியின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.அதோடு அவள் அம்மா ஆகப்போகிறாள் என்கிற சந்தோஷமும் சேர்ந்துகொண்டது.


அடுத்து மூன்று மாதத்தில் குமாருக்கு வேலை யாழ்ப்பாணம் காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கிளைக்கு மாற்றப்பட்டது.அவள் தன் கணவனுடன் சந்தோஷமாகக் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தாள்.பெற்றோரின் வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீட்டில் இருந்தபடியால் தாய் தங்கையின் உதவியும் நிறையவே கிடைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு.குமாரின் அம்மாவும் 2 மாதத்திற்கு ஒருமுறை வந்து போய்க்கொண்டிருந்தா.இப்படியே வாழ்வில் எந்தவித சலனமும் இல்லாமல் மிகமிகச் சந்தோஷமாக வருடம் நான்கு கடந்து கொண்டிருந்தது.ரதியும் குமாரும் ஜீவா,ரஜீவன் எனும் இரண்டு குஞ்சுகளுக்குப் பெற்றோரும் ஆகிவிட்டனர்.அவர்கள் வாழ்வு இனிக்கும் தேன்கூடாய் ரசிக்கக்கூடியதாய் அழகாய் இருந்தது.


இப்படியிருக்க ஒரு சனிக்கிழமையன்று குமார் தன் சிநேகிதன் வீட்டுக்கு வசாவிளான் போய்வருவதாகச் சொல்லிப் போனார்.போனவர் ஞாயிறு அன்றும் திரும்பி வரவில்லை.காரணம்புரியாமல் இருந்தது.அந்தக் காலகட்டங்களில் இன்றுபோல கைகளில் தொலைபேசி வசதிகள் இல்லை.எனவே சரி அப்படியே தன் சிநேகிதனோடு வேலைக்குப் போய்விட்டு திங்கள் பின்னேரம் வீடு திரும்புவார் என்று காத்திருந்தனர்.


திங்களன்று மதியம்போல குமாரின் வேலை அலுவலகத்திலிருந்து குமார் வேலைக்கு வரவில்லையென்று குமாரைத் தேடிக்கொண்டு வந்தனர்.ரதிக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது.அதன்பின்னர் அம்மாவிடம் ஏதோ ரகசியமாகக் கதைத்தார்கள்.ரதிக்கு ஏதோ விபரீதம் என்று ஓரளவுக்குப் புரிந்துவிட்டது.என்ன்றாலும் மனம் அவலப்பட்டது.அம்மா முழுதாக எதையும் சொல்ல மறுத்தார்.அது ஒன்றுமில்லை என்று மட்டும் சொன்னா.அவள் தன் கணவன் சென்றதையும் அவரத் தேடி வந்தவர்களையும் தொடர்பு படுத்திப் பார்த்துக் குழம்பியிருந்தாள்.அவளது அம்மா தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெதுவாகச் சொன்னார் டக்சனுக்கு ஏதோ அடிபட்டுக் காயமாம்.யாழ்
பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.
வைத்தியசாலையில் இருந்து வந்த செய்தியைத்தான் அலுவலகத்திலிருந்து வந்து சொல்லிவிட்டுப் போனார்கள் என்றா.


அதன் பின் அம்மா ரதியின் ஒன்றுவிட்ட அண்ணன் வீட்டுக்கு வைத்தியசாலை போக உதவி கேட்டுப் போவதாகச் சொல்லிப்போனா.
பிறகு திரும்புகையில் அண்ணா பெரியம்மா என 5-6 சொந்தக்காரருடன் திரும்பி வந்தார்.அப்போது அவளது அண்ணிதான் அவளை மெல்ல ஆறுதல் படுத்தி குமார் இலங்கை இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்துவிட்டார் என்று தகவல் வந்திருக்கிறது என்று என்றாலும் சரிவரத் தெரியவில்லை.அண்ணா போய் அறிந்து வருவார் என்றும் சொல்லிக்கொண்டிருந்தா.ரதி வாய்விட்டுக்
கதறத் தொடங்கிவிட்டாள்.அவளது சிறகுகள் பிய்க்கப்பட்டதுபோல் துடிதுடித்தாள்.உயிர் பறந்துகொண்டிருந்தது.அதன் பிறகு
நடப்பவைகள் தானாகவே நடந்துகொண்டிருந்தது.அவளிடம் அனுமதி எதுவும் கேட்காமலேயே.தந்தி கொடுக்கப்பட்டு அப்பா வந்தார்.மாமி வந்தா.உறவினர்கள் வந்தார்கள்.மாமி தன் மகனின் பிரிவை அதன் அவஸ்தையை சிங்களத்தில் சொல்லிச் சொல்லி அழுதா.எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.ரதியின் கண்ணில் இதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.அவள் மரத்துவிட்டாள்.


எல்லாமே...எல்லாமே நடந்து முடிந்தது. அதில்கூடச் சிக்கல் இருந்தது.
வைத்தியசாலையில் 3 நாளாகியும் உடலைத் தர மறுத்தனர்.காரணம் அவர் விடுதலைப் புலி இயக்கத்தைச் சார்ந்தவராம்.ஏனென்றால் அவர் இராணுவத்தினர் பிடித்துக்கொண்டு போனபோது சிங்களத்தில் உரையாடியிருக்கிறார்.அவரது அடையாள அட்டையில் குமாரலிங்கம் என்கிற அவரது தமிழ்ப் பெயரே காரணம்.பின்னர் அதற்கு எத்தனையோ அத்தாட்சிகள் காட்டியே நான்காம் நாள் உடல் தகனம் செய்யப்பட்டது.


பின்னர் எட்டிய செய்தியின்படி,குமார் வசாவிளான் போனசமயம் ஊரடங்குச் சட்டம் இரவில் அமுலில் இருந்த நேரம்.இந்தச் சமயம் குமார் சிநேகிதர்களோடு கொஞ்சம் கலகலப்பாகவே மெல்லிய போதையில் இருந்திருக்கின்றார்.வீட்டிலிருந்து எதிர்க் கடைக்கு(ஊரடக்குச் சட்ட நேரங்களில் சிலர் வீட்டோடு இருக்கும் கடைகள் என்றால் அவர்கள் வீடுகளில் சாமான்கள் வாங்கலாம்.)ஒழுங்கை எனப்படுகிற சிறு தெருவைக் கடந்திருக்கிறார் சிகரெட் வாங்குவதற்காக.அதே நேரம் ஜீப்பில் வந்த இராணுவத்தினர் ஏற்றிக்கொண்டுபோய் விசாரித்திருக்கிறார்கள்.


குமார் தன்னைச் சிங்களத்திலே அறிமுகப்படுத்தியிருக்கிறார்.தான் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்வதாகவும் சொல்ல, இராணுவத்தினர் வேலை அலுவலகத்தினரோடு தொடர்பு கொள்ள, அவர்கள் குமாரினது அடையாள அட்டையைக் கொண்டு வர அங்கேயே அவர்களுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது.அடையாள அட்டையில் குமாரலிங்கம் நாகலிங்கம் சுத்தமான தமிழ்ப்பெயர்.இந்த மாறாட்டமான பெயரும்,மொழியுமே அவரின் உயிருக்கு எதிரியாய் ஆனது.


சந்தேகத்தின் பெயரில் திரும்பத் திரும்ப அடித்து மிரட்டி சிகரெட்டால் சுட்டு மின்சாரத்தால் உடம்பைப் பொசுக்கி சித்திரவதைப் படுத்திக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.இரண்டாம் நாள் சித்திரவதையின் உச்சக்கட்டத்தில் குமார் தாங்கமுடியாமல் குழறியபடி இருந்த இடத்தைவிட்டு எழும்பி ஓட முயற்சித்திருக்கிறார்.அந்தச் சமயத்தில்தான் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் தொடையிலும் நெஞ்சிலுமாய் இரு சூடுகள் விழுந்திருக்கிறது.இப்படித்தான் அவரது இறப்பின் விளக்கம் அரைகுறையாகத் தெரிய வந்தது ரதி வீட்டாருக்கு.வைத்திய சாலையிலும் குமாரது இரு மணிக்கட்டுக்களிலும் குமார் என்றும்,டக்சன் என்றும் பெயரை எழுதிக் கட்டியிருந்தார்கள்.நடந்தது என்னவோ யாருக்கும் தெரியாது.அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.


22 வயதில் இரண்டு குழந்தைகளோடு ரதி இளம் விதவையாகத் திரும்பவும் தன் பெற்றோருக்கே மகளாகி இருக்கிறாள்.அவளைப் பெற்றவர்களது நிழலே அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் ஆறுதலாக இருக்கிறது.


இந்த இளம் விதவைத் தாய் தன் மகளுக்குச் சொல்லும் தன் கதையாகவே "மீண்டும் மளாகிறாள்"கதையின் ஆரம்பத்தில் "மடி கொஞ்சம் தருவாயா"கவிதையை எழுதியிருந்தேன்.

மடி கொஞ்சம் தருவாயா

********************************
மகளே மகளே...என் செல்வமே
கொஞ்சம் நீ...
அருகே வருவாயா
நான் உன் குழந்தையாகி
உன் மடியில் தவழ்ந்திருக்க!


உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!


ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!


நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!


கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து
என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!


நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்
போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!


நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!


ஹேமா(சுவிஸ்)

மீண்டும் மகளாகிய அந்த ரதி இன்னும் தன் குழந்தைகளோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள் காலத்தின் ஓட்டத்தோடு.


(ரதியின் வாழ்வு தொடர்ந்தாலும்,கதையை இத்தோடு முடிக்கிறேன்.)
ஹேமா(சுவிஸ்)

Sunday, January 18, 2009

விடை தேடும் வாழ்க்கை.


Tuesday, January 13, 2009

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு.

ரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகப் பிரகடனப்படுத்துவோம் என்று சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தலைமை செயலகம் சுவிஸ் பேர்ண் 10.ஜனவரி.2008


தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே (ஜனவரி 14) தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்.


தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!


ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி,தனது பண்பாடு,தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது.இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது.


அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலை பெறும் தமிழ் மொழி,தமிழர் இனம்,தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக்கோடு இலங்கை என்கின்ற தேசத்தை நடுவணாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலகப் பந்தில் ஓரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது.


குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர் கோண்டிரடோஸ்,
எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ்,எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.


இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்கணிப்பீடுகளை தொடக்ககமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் என கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறுபேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள்.


ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் அன்றே பகுத்து வைத்தார்கள். வைகறை,காலை,நண்பகல்,ஏற்பாடு மாலை,சாமம் என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள்.அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள்.அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று பண்டைக் காலத்தில் கணக்கிட்ட தமிழர்கள்,ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.எனவும் நிறுவித் தமக்குரிய ஆண்டை அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி – ஆனி தங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)


காலத்தை அறுபது நாழிகைகைளாகவும்,ஆறு சிறு பொழுதுகளாகவும்,ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டுத் தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு,தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகி (போக்கி) என்று அழைத்தார்கள்.போகி என்பது போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல்.இது தொழிற் பெயர்.புத்தொளி பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.


தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது.சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.


ஒரு இனத்தின் அடையாளம் இன்னோர் இனத்தின் அபார வளர்ச்சியினால் அழிக்கப்படும் என்ற தத்துவக் கோட்பாட்டுக்கு அமைவாகவோ என்னவோ பின்னாளில் வந்த இனங்களின் நாகரீக ஆளுகைக்கு அடிமையாகிய தமிழர் இனம் தனது வாய்வின் கணீப்பீட்டு நாளை புறம் தள்ளி மாற்றார் கணிப்பீடுகளை தனது அடையாளமாக மாற்றிக் கொண்டதன் விளைவாக
தமிழர் புத்தாண்டு புறம் தள்ளப்பட்டது.


எனினும் காலச்சுழற்சியின் வேகத்துக்குள் தன்னினக் கருவைச் சுமக்கும் இனம் தனக்கான தாயகத்தை உருவாக்கியுள்ள சூழலில் தனது தொன்மை மிக்க அடையாளங்களையும் நிலை நாட்ட முற்படுதல் அவசியமாகின்றது.
தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள்.அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டம் வரையறை செய்கின்றது.


இதைக் கவனத்திலெடுத்த ஈழத்தமிழர்கள் ஆண்டின் தைப்பொங்கல் தினமான ஜனவரி மாதம் 14 ம் திகதியை தமது புத்தாண்டுத் தினமாகவும், இருளகன்று இழந்த நிலப்பரப்புக்கள் மீட்கப்பட்டு எமது இனம் நிமிர்வு பெறுவதற்கான விடுதலை ஆண்டாய் மலரவேண்டும் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்ள உறுதி பூண்டுள்ளனர்.இப் புனிதநாளில் நல்லளிப்பு என்ற கைவிசேட நடைமுறையைத் தொடங்கி உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் உயரிய பணியையும் உயிர் மெய்யாக்கியுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே! தமிழ் நாடு அரசும் ‘தை முதல் நாள்தான் தமிழரின் புத்தாண்டுத் தினம் என்பதற்கு இந்த ஆண்டு(2008) சட்ட வடிவம் கொடுத்துள்ளது." எனவே தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்.


"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது தமிழர் நம்பிக்கை.புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும்.மகிழ்ச்சி பொங்கட்டும்.


தைப் புத்தாண்டில் தமிழீழ மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கி துன்பங்கள் தொலைந்து கோடி இன்பங்கள் குவிந்து இளங்காலை பூத்தெழும் கீழ்வானத்தே தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்.அமைதி நிறைந்து புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் தமிழீழ மண்ணின் பொங்கற்பால் பொங்கட்டும்.


தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருநாளில் உலகெலாம் சிதறிய தமிழரெலாம் தமிழீழ மண்ணை மீட்பதற்காய ஒன்றாய் இணைந்திடுவோம்.தமிழர் நாம் விரிந்து கிடக்கும் பூமியில் பரந்து கிடந்தாலும்,தாய் மொழியாம் தமிழைக் காத்து வளர்த்தெடுத்து தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்ந்து தமிழனாய் தரணியெங்கும் தலைநிமிர்ந்து வாழ எங்கள் சுதந்திர பொங்கல் திருநாளை வரவோற்போம்.


சுவிஸ் வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து அனைத்து பொது அமைப்புகளிற்கும் தாய் அமைப்பாய் விளங்கும் தமிழர் பேரவை இத்தைத் திருநாளில் தாயக தமிழக மற்றும் உலகத் தமிழர்களை நோக்கித் தனது உரிமைக் கரங்களை நீட்டுகின்றது.


தமிழர்களே! உலகெலாம் பரந்து கிடக்கும் நாம் பலமாய் இருக்கின்றோம்.எமது பலங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒன்று பட்ட சக்தியாய் உருவெடுக்கும் போது உலகமே எதிர்த்து நின்றாலும் எமது தனிப் பலத்தில் தமிழீழத்தை மீட்டெடுப்போம் என வீட்டுக்கு ஒருவராய் நாட்டுக்காய் எழுவோம்.


ஏழ் கடலைத் தாண்டி எட்டுத்திசை எங்கும் கோலோச்சி வாழ்ந்த இனம் வேரறுந்து வாழும் நிலை மாற்றுவோம்.வீரியத்தின் விழுதுகளை கோலோச்ச அரியணையில் ஏற்றி நிற்கும் அமெரிக்கத் தமிழர்களும்,ஜரோப்பியக் கண்டத்தில் அயராது உழைக்கின்ற உறவுகளும்,உலகத்தின் மூலையில் ஒதுங்கிக் கொண்டாலும் அலைகடலை ஆரத்தழுவும் அவுஸ்ரேலியத் தமிழர்களும்,
ஆர்ப்பரித்து உறவுக்காய் ஆதரவுக்கரம் தரும் ஆபிரிக்கக் கண்டத் தமிழர்களும், ஆசியநாட்டின் பெரும் தமிழர் பரம்பரையும் அவனியில் தமிழருக்கு அங்கீகாரம் தமிழீழம் ஒன்றே என்ற முடிவோடு எமது விடுதலையை நாமே வென்றெடுப்போம் என்ற உணர்வோடு விடுதலைத் தீ மூட்டுவோம்.


எமது தொப்புள்கொடியாம் தமிழக உறவுகளே!


நீங்கள் ஆற்றும் தமிழீழ அங்கீகாரத்திற்கான பணியும் தார்மீக ஆதரவும் உதவிகளும் எங்களுக்கு நம்பிக்கை உணர்வுகளைத் தந்து நிற்கின்றது. இத்தருணத்தில் தமிழீழ மக்கள் சார்பில் உளமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். உங்கள் பணி மேலும் வளர்ந்து உலகத் தமிழர் சக்தியாய் உருவெடுத்து தமிழர்களுக்கான தேசம் மீட்கத் தடைகளைத் தாண்டி கரம் கொடுக்க வேண்டுமென உரிமையுடன் கோரி நிற்கின்றோம்.


தாய் மொழியாம் தமிழை காப்பதற்கும் தமிழர்களின் தாயகத்தை மீட்பதற்கும் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து உணர்வோடும் உறுதியோடும் பணி செய்து பாரினில் தமிழரெலாம் தலை நிமிர்ந்து வாழ வழி சமைப்போம்.


"எங்கள் சமுதாயம் ஏழாயிரமாண்டு திங்கள்போல் வாழ்ந்து செங்கதிர்போல் ஒளிவீசும் மங்காத போர்க்களத்தும் மாளாத வீரர்படை கங்குல் அகமென்றும் காலைப் புறமென்றும் பொங்கி விளையாடிப் புகழேட்டிற் குடியேறித் தங்கி நிலைத்துத் தழைத்திருக்கும் காட்சிதனைக் கண்காண வந்த கலைவடிவே நித்திலமே! பொங்கற்பால் பொங்கிப் பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!""


நன்றி தமிழர் பேரவை சுவிஸ் 11.01.2009
ஹேமா(சுவிஸ்)

Friday, January 09, 2009

வீட்டுக்கு...ஒரு ரோபோ மரம்.

முதன் முதலிலேயே நல்ல ரிசல்ட்!இந்தியாவில் இதுவரை ரோபோ
மரங்கள் தொடர்பான் ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்படவே இல்லை.காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.இயற்கையான் மரங்களைப் போலவே ரோபோ மரங்களுக்கும் வேர் உண்டு.தண்டு,இலை எல்லாம் உண்டு.

மரத்தைப் போலவே உயரமான பிளாஸ்டிக் கம்பங்களை நிறுவி அதன் மேல் பகுதியில் இடைவெளிகளுடன் கூடிய சூரியத் தகடுகள்(சோலார் ப்ளேட்ஸ்)பொருத்தப்படும்.இப்பகுதி மர இலைகளைப் போலச்
செயல்படும்.தண்டுப் பகுதியின் பக்கவாட்டில் துளைகள் மற்றும் சிறுகுழாய்கள் இருக்கும்.இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைட் கலந்த வெளிக்காற்று உறிஞ்சப்படும்.தண்டின் உள் பகுதியில் கல்சியம் ஹைட்ராக்ஸைட் கரைசல் இருக்கும்.இந்தக் கரைசலில் அசுத்தமான கார்பன் டை ஆக்ஸைட் கரைக்கப்படும்.அதே சமயம் மேலேயுள்ள சூரியத் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தண்டில் உள்ள கரைசலில் பாய்ச்சப்படும்.அது வேதி வினைகளைத் தூண்டி கார்பன் டை ஆக்ஸைட்டை கார்பன் ஆக்ஸிஜன் என்று தனித்தனியாகப் பிரிக்கும்.ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் மற்றும் நீராவி ஆகியவை ஆகியவை வாயுவாக ரோபோ மரத்தில் இருந்து வெளியேறிவிடும்.மீதி இருக்கும் கார்பன் நீருடன் கலந்து கார்பானிக் அமிலமாக மாறியிருக்கும்.அந்த கார்பானிக் அமிலம் பூமிக்குள் செலுத்தப்பட்டுவிடும்.இந்த கார்பானிக் அமிலம் இயற்கை உரத்திற்கு ஈடானது.மண்ணுக்குக் கெடுதல் எதுவும் விளைவிக்காது.ஒரே நேரத்தில் மண்ணையும் காற்றையும் காப்பாற்றலாம்.


ஒரு ரோபோ மரம் ஒரு இயற்கை மரம் உறிஞ்சுவதைவிட ஆயிரம் மடங்கு அதிக கார்பன் டை ஆக்ஸைட்டை உறிஞ்சும் திறன் கொண்டது.அதாவது ஒரு ரோபோ மரம் ஆயிரம் இயற்கை மரங்களுக்குச் சமமானது.ஒரு ரோபோ மரம் ஒரு ஆண்டுக்கு 90,000 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி சுத்தப்படுத்தும்.இது ஒரு ஆண்டில் 15,000கார்கள் வெளியிடக்கூடிய கார்பன்டை ஆக்ஸைடின் அளவாகும்.


உலகம் முழுவதிலும் இருந்து ஓராண்டில் வெளியேறும் மொத்தக் கரியமில வாயுவையும் உறிஞ்சி சுத்தப்படுத்த இரண்டரை ரோபோ மரங்களே போதும்.இயற்கையாக ஒரு மரம் பல ஆண்டுகள் வளர்ந்து
முழு வளர்ச்சி அடையும்போதுதான் அதிகம் கார்பன் டை ஆக்ஸைட்டை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடும்.ஆனால் ரோபோ மரம் நட்ட முதல் நாளில் இருந்தே தனது வேலையைத் தொடங்கிவிடும்.பத்து அடி உயர மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்.220 அடி உயர மரத்திற்கு 5 இலட்சம் வரை செலவு பிடிக்கலாம்.நம் நாட்டின் சுற்றுச் சூழல் தன்மைக்கேற்ப மாடல் ரோபோ மரம் உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறோம் என்கிறார் பேராசிரியர்.

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்"என்பது போய் இனி "வீட்டுக்கு ஒரு ரோபோ மரம் வளர்ப்போமே".
(நன்றி ஆனந்தவிகடன்)


ஹேமா(சுவிஸ்)

Saturday, January 03, 2009

கலாசாரம் சொல்லும் நாதஸ்வரம்.

"நாதஸ்வரம்' என்ற வட மொழிச் சொல்லினால் நாம் வழங்கும் தமிழருக்கே உரித்தான சிறப்பான இசைக் கருவி"வங்கியம்'என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டது.சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றக் கதையில் இளங்கோவடிகள் குறிப்பிடும் வங்கியம் நாதஸ்வரமே என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்குகிறார்.தமிழ்நாட்டில் இலங்கையில்,தமிழர் கலாசாரத்தில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவியாக விளங்குவது நாதஸ்வர இசைக்கருவியாகும்.தமிழக மக்கள் பெருமையோடு சொந்தம் பாராட்டுகிற வாத்தியமான நாகஸ்வரம் திருவிழாக்களிலும்,திருமண வைபவங்களிலும், திருக்கோயில் வழிபாடுகளிலும்,
இறைவனின் திருவீதியுலாக்களிலும்,உறுமி மேளம்,நையாண்டி மேளம் போன்ற கிராமிய இசை நிகழ்ச்சிகளிலும் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகிறது. இது 'இராஜவாத்தியம்' என்றும், 'மங்களகரமான வாத்தியம்' என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் யாவற்றிலும் நாகஸ்வர இசையைக் கேட்கலாம்.

நாதசுவரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த
ஓர் இசைக் கருவியாகும்.இது நாதஸ்வரம்,நாதசுரம், நாகசுரம்,நாகஸ்வரம்,நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.

தெய்வீகமான கர்நாடக இசையை இன்றளவும் பட்டிதொட்டி முதல் இசைவிழா வரையும் போற்றிக் காப்பவர்கள் நாகஸ்வரக் கலைஞர்களே.காற்றிசைக்கருவி வகையைச் சார்ந்த இந்த 'நாகஸ்வரம்' மக்களின் அன்றாட வாழ்க்கையில் தினசரி இடம்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகின்றது.இது திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவி. நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைக் கேட்கலாம்.நாதஸ்வரம் என்றும்,நாகசுரம் என்றும் அழைக்கப்படும் இக்கருவி பொதுவாக ஆச்சா மரத்தினால் நரசிங்கன் பேட்டை,தெரெழுந்தூர்,வாஞ்சூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் அதற்கெனவுள்ள ஆச்சாரிகளால் மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது.ஆச்சா மரத்தைவிட ரோஸ்வுட்,பூவரசு,பலாமரம்,
கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் செய்யப்படுகின்றன.
யானைத் தந்தத்தாலும்,உலோகமாகிய வெண்கலத்தாலும் கூட நாதஸ்வரம் செய்யலாம் என்பது நாவலரின் கருத்து. வெள்ளி,தங்கத்தினாலும் அபூர்வமாக அக்கருவி செய்யப் பட்டது.ஆண்டாங்கோயில் வீராசாமி பிள்ளை பொன்னால் ஆன நாதஸ்வரம் வைத்திருந்தார். ஆழ்வார்திருநகரி,திருவாரூர்,கும்பகோணம்,கும்பேசுவரர் கோயில்களில் கருங்கல்லில் செய்யப்பட்ட நாகஸ்வரங்கள் இன்றும் வாசிக்கப்படுகின்றன.தற்கால நாதஸ்வரங்கள் செங்கருங்காலி எனப்படும் ஆச்சா மரத்தினால் செய்யப்படுகின்றன.மரத்தின் வயது நாற்பத்திரண்டு எனில் உத்தமம்.இசைக் கருவி செய்யக் குறிப்பிட்ட ஒரு மரம் உகந்ததா என எளிய சோதனை ஒன்றினால் அறியலாம்.மரத்தை லேசாகச் சீவி நெருப்பில் காட்டினால் தீபம் போல எரிய வேண்டும்.கருகினால் அது கருவி செய்ய ஏற்றதல்ல.


ஏழு விரல்களினால் வாசிக்கப் படுவதால் "ஏழில்' என்றழைக்கப் படும் நாதஸ்வரத்தைப் பற்றிய குறிப்புகள் நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் விரவிக் காணப்படுகின்றன.பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த "சிங்கிராஜ புராண'த்தில் நாதஸ்வரம் பற்றிய விபரங்கள் காணக்கிடக்கின்றன.
பதினான்காம் நூற்றாண்டிலும் அதன் பின்னும் அடிக்கப்பெற்ற கல்வெட்டுகளிலும் எழுதப்பட்ட செப்பேடுகளிலும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.குழல் கருவிகளில் நாதஸ்வரத் திற்குப் பிரதான இடம் உண்டு.கோவில்களில் இறைவன் புறப்படும் காலை அவனுக்கு நேராக முன் நின்று வாசிக்கப்படுவது நாதஸ்வரம் மட்டுமே.சங்கு,நபூரி,
முகவீணை,எக்காளம்,திருச்சின்னம் என்ற கோவிலில் பயன் படுத்தப்படும் வாத்தியங்களெல்லாம் மேளத்துக்குப் பின்புறமோ இறைவன் திருவுருவத்திற்குப் பின்புறமோ தான் இடம் பெறுகின்றன.


ஊமத்தம் பூ வடிவில் காட்சியளிக்கும் இந்த நாதஸ்வரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.இதன் மேல்பகுதி 'உளவு' அல்லது 'உடல்' என்றும்,கீழ்ப்பகுதி'அணைசு' அல்லது 'அணசு' என்றும் அழைக்கப்படும். நாகசுரத்தில் வாசிப்பதற்காக ஏழு விரல் துளைகளைஅமைத்திருப்பர். இதற்கு 'சப்தஸ்வரங்கள்' என்று பெயர். இதில் எட்டாவதாக அமைக்கப்பட்டிருக்கிற துளைக்கு 'பிரம்மசுரம்' என்று பெயர். நாகசுரத்தில் செலுத்தப்படும் கூடுதலான காற்று இதன் வழியாகத்தான் வெளியேறும்.


நாகஸ்வரத்தின் நீளம் பலவாறாக இருக்கும்.மிகப் பழங்காலத்தில் 18.25 அங்குல நீளமாக இருந்தது (சுருதி 4.5 கட்டை).பல மாறுதல்களுக்குப்பின் 1941-ம் ஆண்டில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம்பிள்ளை அவர்கள் முயற்சிகள் பல மேற்கொண்டு 34.5 அங்குல நீளமும் 2 கட்டை சுருதியும் கொண்ட நாகஸ்வரத்தைக் கொண்டுவந்தார். இதை பாரி நாகஸ்வரம் என்பர். நீளம் குறைந்த நாகஸ்வரம் திமிரி எனப்படும்.நீளம் குறைந்தால் ஒலி உரத்து எழும்.சுருதி அதிகம்.நீளம் அதிகமாக இருந்தால் சுருதி குறைவாக இருக்கும்.


ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாகப் பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.நாகசுரக் கருவிகளை
நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.


நாகஸ்வரத்தில் காற்றை உட்செலுத்தி ஊதுவதற்கு உதவுவது 'சீவாளி' (ஜீவஒலி). காவிரிக் கரையில் விளையும் கொருக்கன் புல்லைப் பலவழிகளில் பதனிட்டு சீவாளியைச் செய்வர்.திருவாவடுதுறை, திருவீழிமிழலை,திருவிடைமருதூர் போன்ற ஊர்களில்
சீவாளி செய்யப்படுகின்றன. நாகசுரத்திற்கு சுருதி வாத்தியமாக அண்மைக்காலம்வரை 'ஒத்து நாகசுரத்தையே' பயன்படுத்தி வந்தனர்.இதுவும் நாகசுரம் வடிவிலேயே 2.5 அடி நீளத்தில் மெல்லியதாக இருக்கும்.விரல் துளைகள் இதில் இருக்காது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் நீளம் குறைந்தவை (ஐந்து கட்டை). இவைகளின் சீவாளி பனைஓலையால் செய்யப்பட்டவை.அனசு என்ற அடிப்பாகம் பித்தளையாலானது.

கோயில் பூசைகளிலும்,திருவிழாக்களிலும் நாகஸ்வர இசை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. திருவீதியுலாவில் இறைவனின் புறப்பாட்டிற்கு முன்பாக தவிலில் 'அலாரிப்பு' வாசிக்கப்படும். இது 'கண்ட நடையில்' அமைந்த சொற்கோவையாக இருக்கும்.இதனைத் தொடர்ந்து நாகசுரத்தில் 'கம்பீரநாட்டை'யும் அதன்பின் 'மல்லாரி' ராகமும் வாசிக்கப்படும்.இந்த மல்லாரியை வாசித்தவுடனேயே வெகு தூரத்திலிருப்போரும் கூட திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றதென்பதை அறிந்து கொள்வர்.இத்தகைய மல்லாரி பல வகைப்படும். தேர்த்திருவிழாவின் பொழுது 'தேர் மல்லாரி'யும்,சுவாமி புறப்படும் பொழுது அலங்கார மண்டபத்திலிருந்து யாகசாலைக்கு வரும்வரையிலும் 'பெரிய மல்லாரி'யும் வாசிக்கப்படும்.

இறைவன் யாகசாலைக்கு வந்ததும் தவிலும்,தாளமும் இன்றி நாகசுரத்தில் காப்பி,கானடா,கேதாரகெளளை போன்ற ராகங்கள் வாசிக்கப்படும்.
யாகசாலையிலிருந்து கோபுரவாசல் வழியாக சுவாமி வெளியில் வரும்பொழுது 'திரிபுடை தாளத்து மல்லாரி' வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலில் தீபாராதனை முடிந்ததும்,அந்தந்தத் தெய்வங்களுக்குரிய 'சின்ன மல்லாரி' வாசிக்கப்படும்.அதன்பின்பு காம்போதி,சங்கராபரணம்,
பைரவி,சக்கரவாகம் போன்ற ராகங்களில் ராக ஆலாபனை நடைபெறும். இந்த ராக ஆலாபனை கிழக்கு வீதியிலும்,மேற்கு வீதியில் பாதி வரையும் நடக்கும். அதன் பிறகு ரத்தி மேளமும்,ஆறுகாலத்தில் பல்லவியும் வாசிக்கப்படும்.இவ்வாறு கீழ் வீதியின் நடுப்பகுதி வரையிலும் பல்லவி,
சுரப்பிரஸ்தாரம்,ராகமாலிகை என்று வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலை அடைந்ததும் பதம்,தேவாரம் முதலிய பாடல்கள் வாசிக்கப்படும். தற்காலத்தில் இந்தப் பழைய மரபில் சில மாற்றங்கள் உள்ளன. மல்லாரி முடிந்த பின்பு 'வர்ணம்' என்ற இசை வகையும்,பின்பு சுவாமி கிழக்கு வாசலுக்கு வரும் பொழுது கீர்த்தனை,பதம்,ஜாவளி,தில்லானா,காவடிச் சிந்து போன்ற இசை வகைகளையும் வாசித்து வருகின்றனர்.
வீதியுலா முடிந்து சுவாமி கோயிலுக்குள்ளே நுழையும் பொழுது சுவாமிக்கு 'கண்ணேறு' கழிக்கப்படும். அப்பொழுது தாளத்தோடு தவில் மட்டும் தட்டிக் கொண்டு வருவார்கள்.இதற்குத்
'தட்டுச்சுற்று' என்று பெயர்.பின்பு பதம் அல்லது திருப்புகழ் வாசிப்பர்.பின்பு சுவாமி மூலஸ்தானத்திற்குச் செல்லும் பொழுது 'எச்சரிக்கை' என்னும் இசை வகை வாசிக்கப்படும்.இதற்குப் 'படியேற்றம்' என்று பெயர்.திருக்கோயிலின் பூசைக்கு நீர் கொண்டு வரும்போது 'மேகராகக் குறிஞ்சி' ராகமும், குடமுழுக்கின் பொழுது 'தீர்த்த மல்லாரி' யும் வாசிக்கப்படும்.மடப்பள்ளியிலிருந்து இறைவனுக்குத் தளிகை எடுத்து வரும்போது 'தளிகை மல்லாரி' வாசிக்கப்படும்.இறைவனின் திருக்கல்யாணம் நடக்கும் பொழுது 'நாட்டைக் குறிஞ்சி'யோ 'கல்யாண வசந்த'மோ வாசிக்கப்படும்.பெரிய கோடி வாயிலிலிருந்து தேரடி வரையில் கலைஞர்கள் வாசிப்பது "மிச்ரமல்லாரி".


நாகஸ்வர இசையோடுதான் இறைவனின் நித்திய காலப் பூசைகள் நடைபெறும். ஒவ்வொரு காலப் பூசைகளிலும் என்ன என்ன ராகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது தொன்றுதொட்டு மரபாகவும் பூசை விதிமுறைகளுக்கு அமையவும் அமைக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாகப் பொழுது புலருமுன் நான்கு மணி தொடங்கி
பூபாளம்,பௌனி,மலையமாருதம் வாசிக்க வேண்டும்.உச்சி வேளை எனில் முகாரியும் பூரண சந்திரிகாவும் மாலை ஆறு மணிக்கு மேல் சங்கராபரணமும் பைரவியும் இசைக்கப்படும்.அதே போல விழாக் காலத்தில் இறைவன் உலா வரும் இடத்திற்கு ஏற்பவும் ராகங்கள் வாசிக்கப்படுகின்றன.

நாட்டை ராக ஆலாபனையைத் தொடர்ந்தே இறைவனின் புறப்பாடு நடைபெறும்.சில திருக்கோயில்களில் இந்த இந்த இடங்களில் இன்ன இன்ன ராகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது.சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் திருவிழாவில் பத்துத் தினங்களிலும் அந்தந்த நாட்களில் அந்தந்த ராகங்கள வாசிக்கப்பட வேண்டும் என்ற முறை இன்றும் உள்ளது.வழிபாட்டில் மட்டுமல்லாமல் திருமணம் போன்ற மங்கலச் சடங்குகளின் போதும் வாசிக்கப் படும் நாகஸ்வரம் ஒரு மங்கள வாத்தியமாகும். சடங்குகளிலும் மதவிழாக்களிலும் நம்பிக்கை இல்லாத,இனிய இசையை இசைக்காகவே ரசிக்கும் சுவைஞர்களும் ஒரு முழு நீள நாதஸ்வரக் கச்சேரியை அனுபவிக்கலாம்.பாமரர்களிலிருந்து இசைவாணர்கள் வரை அனைவரது உள்ளங் களையும் உருக்குவது நாதஸ்வர இசை என்பதில் ஐயமில்லை.


கர்நாடக இசையை மிக விஸ்தாரமாக விவரணம் செய்யத்தக்க வாத்தியம் நாகஸ்வரம்தான்.அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்,முசிரி சுப்பிரமணிய ஐயர்,செம்பை வைத்தியநாத பாகவதர், காஞ்சிபுரம்
நைனாபிள்ளை,செம்மங்குடி சிறினிவாச ஐயர்,
ஜி.என்.பாலசுப்பிரமணியம்,மதுரை சோமு போன்ற பல சங்கீத வித்வான்கள் திருவீதியுலாக்களில் இரவு முழுவதும் நாகஸ்வரக் கச்சேரிகளைக் கேட்டே தங்களின் இராக பாவங்களை வளர்த்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்கள்.இது நாகசுரத்தின் மேன்மையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
(டாக்டர் கே. ஏ. பக்கிரிசாமி பாரதி அவர்கள் எழுதிய 'நாகஸ்வரம்' என்னும் கட்டுரையைத் தழுவி எழுதியது.)


ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP