Friday, June 08, 2012

இசைத் தந்தையின் பிரசவம் !


இசை எளிமையான விஷயம்தான்.ஆனால் அதைச் சிக்கலாக்கியது நாமே என்றார் இசைஞானி இளையராஜா.

ஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சண்டை பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த அரக்கனை எப்படி வீழ்த்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.அதனால் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று வழி கேட்கின்றனர்.'அவனைப் புகழத் தொடங்குங்கள்.ஏனென்றால் ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும்.அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்' என்றார் கிருஷ்ண பரமாத்மா.

Thursday, May 31, 2012

கலர் கலர் கலா...கலர்!

நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டென்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் அனைவரும் பிறக்கும்பொழுதே நமக்கென்று ஒரு கலர்களோடுதான் பிறக்கின்றோம் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டு உங்கள் நிறத்தின் ஸ்பெஷாலிட்டியை,குணநலங்களை அறிந்துகொள்ளலாமே!

எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,நேசன் ப்ரௌண் கலர்,மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர்,கலா நல்ல வெள்ளை,யோகா அப்பா என்ர கலர்,அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?),அதிரா பௌர்ணமிக் கலர்,சத்ரியன்....முழுக்கருப்பு......இப்பிடி.இவை எல்லாரும்தான் உதாரணம் காட்ட எனக்குச் சுலபமாக் சிக்கிச்சினம்.

விச்சுவும் பொது நிறம்போல.(பொது நிறமெண்டா எப்பிடியெண்டு கேக்கப்படாது.பிறகு வாழைப்பழ ரொட்டி சுட்டுக் காட்டேலாது.அப்பிடியே பாக்கத்தான் வேணுமெண்டா தயவு செய்து ஓடிப்போய் அதிரான்ர பதிவில பாருங்கோ.).ஃப்ரெண்ட் கணேஸ் கண்ணாடி போட்டிருக்கிறதால சரியாத் தெரியேல்ல......(இண்டைக்கு இருக்குடி உனக்கு.ஹேமா ஓடிப்போயிடு வேலைக்கு.)

சரி...இவையள் எல்லாரும் கலருகளோட இருக்க .... தங்கட பிகர் எப்பிடிக் கலர்ல இருக்கவேணுமெண்டு தேடுவினம்.தாங்கள் கருப்புக் கண்ணனா இருந்துகொண்டு கல்யாணம் செய்யமட்டும் வெள்ளைப் பொம்பிளை சிவப்புப் பொம்பிளை வேணுமாம்.சத்ரியன் அதுதான் சிங்கப்பூரில கன்னியில்லாத் தீவில ஒற்றைக்காலில விரதம் இருக்கிறதா ஒலி விமலான்ர வானொலியின் இண்டைக்குச் சொன்ன ஃபேமஸ் நியூஸ் !

Friday, May 25, 2012

தமிழர் வாழ்ந்தமைக்கு ஆதாரமான Old Tamil Scriptions/ Inscriptions!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது.அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.....!

’தாமிரபரணி' ஆற்றின் கரையில் 'ஆதிச்சநல்லூர்' என்ற ஊர் உள்ளது.இது ஓர் இடுகாடு.இறந்தவர்களைப் புதைத்த இடம்.இதன் பரப்பளவு 114 ஏக்கர்.இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர்.தாழி என்றால் பானை என்பது பொருள்.இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை 'முதுமக்கள் தாழி' என்றும் ’ஈமத்தாழி’ என்றும் கூறுவர்.

Sunday, May 20, 2012

காலம் கடந்தபின் !

வெந்து வெடித்துக்கொண்டிருந்தான் அகிலன்.

ச்ச....எவ்வளவு பெரிய அவமானம்.அசிங்கம்.நினைக்க நினைக்க அழுகை ஆத்திரம் .... தன்னில் ஒரு அருவருப்பும் கூட அவனுக்கு.

அப்படி...என்னதான் கேட்டுவிட்டேன்.மனதில் உள்ளதை அப்படியே கேட்டேன்.உலகத்தில் யாரும் கேட்கக்கூடாத ஏதாவதா கேட்டேன்.

Wednesday, May 09, 2012

கிராமத்துக் காக்கா காட்டின பாசம் !


அன்பான இனிய பேச்சால் உலகையே கைக்குள் அடக்கலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை.எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சரிவரும் என்றும் சொல்ல முடியாது.ஆகக்குறைந்தது கடுஞ்சொற்களையாவது தவிர்க்கலாம்.ஏனெனில் நல்ல பெயர் எடுக்கப் பல காலம் பிடிக்கும்.ஆனால் இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்கிறது.மனமும் குற்றத்தால் இளைத்துக்கொண்டே இருக்கும்.

Monday, April 30, 2012

உதவலாம் வாங்கோ !

கவிதை எழுதச்சொல்லி சந்தோஷமாக எழுதின எல்லோருக்கும் விருதும் குடுத்திட்டேன்.

அடுத்து இப்ப ஒரு பெரிய பிரச்சனை.கொஞ்சப் பேருக்கு உதவி கேட்டு வந்திருக்கு.உங்களிடமும் உதவி கேட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன்.முடிந்தவர்கள் முடிந்தளவு விரும்பினமாதிரி உதவி செய்யலாம்.அது எந்த உதவியாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.உதவியதை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்ளுங்கள்.அதன்பின் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறேன்.கீழ்வருபவர்களுக்கே உங்கள் உதவிகள் தேவைப்படுகிறது நண்பர்களே.

அன்புக்கு நன்றி சொல்லிக்கொள்கிறார்கள் இப்போதே !

Tuesday, April 17, 2012

கவிதை தந்த விருது.அன்புடன் ஹேமா!


Saturday, April 07, 2012

கவிதை எழுதலாம் வாங்கோ !

நிறைய நாளாச்சு படத்துக்குக் கவிதை எழுதி.வாங்கோ......வாங்கோ.
இந்த புகைப்படங்களிற்கான உணர்வுகளை எழுத முயற்சி செய்யவேணும் நீங்கள்.10-15 வரிகளுக்குள் அடங்கினால் நல்லது.உணர்வுகள் சிறு கட்டுரையாகவோ,காதல்-சமூக-இயற்கைக் கவிதையாகளாகவோ,சின்னக் கதையாகவோ,ஒரு உரையாடலாகவோ,நகைச்சுவையாகவோ இருக்கட்டும்.பார்ப்போம்...பலரின் பதிவை எதிர்பார்க்கிறேன்.எங்கே பார்க்கலாம்....தொடங்குங்கோ.எல்லோரது எண்ணங்களையும் பதிவில் பதிப்பேன்.நானும் உங்களோடு !

அனைத்துக் கவிஞர்களும் உங்கள் தளங்களில் உங்களது கவிதைகளை பதிவிட்டுக் கொள்ளுங்கள்.இணைந்திருப்பவர்கள் எல்லோருக்கும் என் மகிழச்சி !
பாதை

பாசம்


கணேஷ்...

நிலவைக் காட்டி
சோறூட்டினாள் தாய்...
அவள் முகம் பார்த்து
சாப்பிட்டது குழந்தை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனித்தனியே வந்து
ஒன்றி‌ணைந்த பாதைகள்
சேர்த்தன எங்கள் கரங்களை..!
கோர்த்த கரங்கள் பிரிந்தன
இன்னொரு பாதைச் சந்திப்பில்!

உன் வழி உனது என் வழி எனதென
பிரிந்து சென்றவள்
மீண்டும் வரவேயில்லை..
இன்னும் காத்திருப்பில்...
பனி படர்ந்த காலையும்,
சாலையும், தனிமரமாய் நானும்!

வஜீர்அலி(Vazeer Ali)...

மனித நேயம்
===========
வந்த பாதை
மறந்து போக
போகும் பாதை
குழப்பிவிட....
மார்க்கமில்லாத
பயணம் கண்டு
சற்று தயக்கம்...

துபாய் ராஜா...

பாதை !

பெரும்பாதை
பிரிந்திருபாதை
ஆனதோ...

இரு குறும்பாதை
இணைந்தொரு
பரும்பாதை
உருவானதோ...

பார்வைக்கு
புரியாத
ரகசியம்...

பாதைக்காவது
தெரிந்திருப்பது
அவசியம்.

----------------

கல்லும்
கள்ளியும்
காய்ந்த சருகும்
புல்லும்
புதரும்
பூச்சிகளும்
புரியாத மொழியில்
புலம்பித் தீர்த்தன
இணைந்தே வந்து
இடையில் பிரிந்த
இப்பாதை கதையை...


-------------------------

பாசம் !

பட்டினிக் குழந்தைக்கு
பால்நிலா காட்டி
பசியாற்ற முயன்றாள்
பரிதாபத் தாய்...

-----------------

முழுநிலவு
தேயலாம்
என் கண்ணே
பாசப்பசும் பொன்னே
முடிந்திடுமோ
ஆசை அன்னை
நான் உன்மேல்
கொண்ட பாசம்
கடும்நோயால்
கொடும்பாய் விழுந்து
சுடும்பாடை ஏறும்வரை....

மகேந்திரன்...

ஏ..நிலவே!
பால்போன்ற உன்னில்தான்
அழகின் அடைக்கலம் -என
இறுமாப்பு உனக்கு!
இதோ
அமுதூட்டும்
என் அன்னை இருக்கிறாள்!
அதோ ஒரு
கரிய மேகம் வருகிறது
ஒளிந்து கொள்!
பின்னர் ஒரு நாள்
என்னிலும் ஓர் அழகைக்
கண்டேன் என
புலம்பித் தவிக்காதே!!

-----------------------------------

கண்களை அகல விரித்தேன்
வந்த இடம் தெரியவில்லை!
செல்லும் இடம் புலப்படவில்லை!
கண்மூடி தியானித்தேன்
முன்னோக்கிப் பார்த்தால்
இருமுனைப் பாதைகள்
எம்மார்க்கம் சென்றிடினும்
அனுபவங்கள் பலவாகும்!
சற்றே பின்னோக்கினேன்!
எவ்வழியினின்று வந்தாலும்
சேரும் இடம் ஒன்றென!
ஆறுகளும் மதங்களும்
நமக்கு உரைப்பது
இதைத்தானோ?!!

ஹசீம் ஹாஃபி(haseem hafe)...

பாதை
------
உன் பாதை முடிந்ததென்று
முடங்கிக் கிடந்திடாதே - நீ
பலதிசையும் உற்றுநோக்கிப்பார்
பாதைகளங்கு திறந்திருக்கும்

எதிர்ப்பட்ட பாதைகளோடு - நீ
முனைப்புடன் முன்னேறிப்பார்
முட்களும் கற்களும் - உனக்காய்
வழிவிடக் காத்திருக்கும்

வீறுகொண்டு நடந்துபார்
இமயம் கூட உன் காலடியில்

பாசம்
-----
வானம் விட்டுப்பிரியாத -நிலவு
சூரியனிடம் தஞ்சம்
பாசம் விட்டுப்பிரியாத - தாய்
பிள்ளையிடம் தஞ்சம்

சூரியனாய் மாறும் பிள்ளைகளால்
சுட்டெரிக்கப்பட்ட தாய்களோ
சுடுகாட்டில் இருந்தாலும் - பிள்ளைப்
பாசம் விட்டுப் பிரிந்திடாள்

தனிமரம்(நேசன்)...

பாதை!
-------
விரிந்த தெருக்களில் ஊடே வந்து
விளையாடினாய் இதயத்தில்!
விருப்புடன் கவிதை சொல்ல
விளங்காத காட்டில் பயணித்தோம் !
விழித்த போது விரிந்து கிடக்குது
இருவழிப்பயணமாக நம் காதல்!
அதைச்சொல்லும் இடத்தில் பிரிந்து
நிற்கின்றது இரு மரம்
அதில் ஒரு தனிமரம்
வளர்ந்து குடும்பமாக
மறுபக்கத்தில்
சிறுமரம் உன்னைப்போல
வட்டத்துடன்
இரு பக்கமும் விம்மியழுகின்ற
வட்டக்கல்லாக யாரோ
நான் சொல்லமாட்டேன்
வாழ்க்கைபாதையில்
பிரிந்து விட்டோம் இரு கோடுகள்!

பாசம்!
--------
அதோ பார் வட்ட நிலவு
இதோ பார் என் குட்டி நிலவு
நீயும் சாப்பிடும் போது
அவளுக்கும் ஊட்டிவிடு.

அந்தநிலவு அன்று!
எங்கே அந்த நிலா என் வாழ்நிலா
வாழ்க்கையுலா பால்நிலா பார்க்கவேனும்
நொந்து பின் தொலைந்து தேடிவந்த நிலா
அம்மா சொல்லிய பெட்டைநிலா!
அருகில் இருந்து ஊட்டிய மாமியின்
கரங்களில் பாசத்துடன் ஊட்டுகின்றாள்
இதோ பார் மகளின்பேரன் அந்த நிலவும்
இந்தமாமா நிலவும் தேய்ந்து போவார்கள்
பாசம் தேயாது ஊட்டிவிடுகின்றாள் பாற்கலவை((fromages)!!
இருண்டது என் வானம் வெளிச்சது நிலவாக நீ!

பெட்டை (மகள் யாழ் வட்டாரச் சொல்)

பாதை!

இல்லறம் என்ற அடர்ந்த ஆலமரத்தில்
நல்லறம் கண்டு நடந்துவந்தோம்
நடுவில் குத்துக்கல்லாக குடைய வந்தாள்
முன்னம் இவன் காதலி என்று !
நடுவன் அரசிடம் கேட்கின்றாய்
நாம் பிரிந்து வாழ வேண்டும்
பிரித்துவிடுங்கள்
பாதை மாறிப்போக வேண்டும் என்று !
இடையில் தவிக்கின்றது
நம் உறவில் மலர்ந்த
இரு மழலைப்பூக்கள் எதிரே
மரங்களாக வா சேர்ந்து போவோம்
பாதை பிரியாமல்!
மன்றாடும் கணவன்!

பாதை!

பாலம் கடக்கும் போது
பல காடுகளில் என்னோடு பழகி வந்தாள்.
பாசம், அன்பு காதல் என்று
சொல்லிச் சென்றாள்
எந்த வழி போய் இருப்பாள்!
இந்தக்கல்லில் குந்தியிருக்கின்றேன்!
ஆவியாக
இடையில் ஆமிக்காரங்கள் போல
இரு மரங்கள் பச்சையாக
எதிரே புகை மூட்டம்
வெடிவைத்து பிரித்து விட்டார்கள்
நம் காதல்பாதையை!
கல்லாக கிடக்கின்றேன்
பாதை ஓரம் இதயம் துடிக்க!
உயிர் துறந்து!

பாசம்!

எங்கே அப்பா என்று கேட்கும் மழலைக்கு
எங்கே போனார் முள்ளிவாய்க்காலில்
முண்டியடித்து வந்து நின்றார் முழுநிலவாக
குண்டு வைத்திருக்கின்றான்
பிடித்துத் தள்ளிக் கொண்டு போனார்கள்
இன்னும் நிலவாக இருப்பார்
இருட்டறையில் இப்படித்தான் சொல்லி
சோறு ஊட்டுகின்றேன்
பாவி மகள் நான் பாசமாக
என் பிள்ளைக்கு வட்ட நிலவைக் காட்டி
வரும் தந்தை நிலா என்று.

பாதை!

பேராதனிய பாதை ஓரம் ஒரு குடைக்குள்
பேதம் மறந்து பலவிடயம் பேசி வந்தோம்
லூசு நீ என்றாய் என் தாய்மொழியில்
போடி மகே பொம்பர்த்தினி(என் காதலி)
போட்டுக் கொண்டோம் பல விலங்கு!
இருளாத புகையாக எதிரே
மதவாதம் மொழிவாதம் பிரித்துவிட்டு
இரு மரங்களாக இரண்டு பாதை காட்டியது.
கடல் கடந்தேன் அரபுலம் போனாய் நீ
வட்டக்கல்லால இருக்கின்றாய் நினைவில்!
கடந்து வா சேரலாம் என்கிறபோது
பாதைகள் மாற்றிவிட்டது
முகம் தொலைந்துவிட்டான் அவன் பாதையில்!
உருகின்ற பிரென்சுக் காதலி கைபிடித்து!
கல்லாக இருக்காதே காத்துக்கொண்டு
கைபிடியாரையும் கருணாவன் சமாவெண்ட மாவ !
கல்லாக்கிய நினைவுகளுடன்!

//குறிப்பு->பெம்பர்த்தினி-காதலி என்பார்கள் சகோதரமொழியில் உடரட்டை இனத்தினர்!கருணாவன் சமாவெண்ட மாவ.-தயவு செய்து மன்னித்துவிடு என்னை என்று சொல்வது தமிழில்!(இதுவும் ஒரு கற்பனைதான் கண்டுகொள்ளாதீங்கோ அம்பலத்தார்!

பாசம்!

அன்ன பலண்ட ஹந்த!(மேலே பார் நிலவை)
மகே புஞ்சி பானா.(என் சின்ன மருமகன்)
மே பலண்ட மகே தோனிய ( இங்கே பார் ..என் ராஜகுமாரி)
ஒயாகே கானிய.!(உன் மனைவி ஆவாள்)
என்று சொல்லி சீராட்டிய என் மாமி
ஒரு நிலவைப் பெற்றாள் ஒரு காலத்தில்!

அது வளர்ந்து வந்தது பெளர்ணமியில்.
போகும் பாதையில் பாசம் தடுத்தது.
விலக்கிவிட்ட உறவு.
அது வேண்டாம் பேரா வீட்டுக்கு.விட்டுவிடு காதலை !!
இதுவும் ஒரு பாசம் தான் உதறியது அவள் உறவை .
என்றாலும் அந்த நிலவு
தேயவில்லை நினைவலைகளில்!
இன்னும் வெளிச்சம் கொடுக்கின்றது
விடையில்லாத உறவாக!
மச்சாள் பாசமாக!

//குறிப்பு--2
சகோதரமொழியில் இப்படியும் ஒருவர் சொல்லலாம் என்ற கற்பனையே தவிர நான் றொம்ப நல்லவன் .

மகே தோனிய-இதுவும் உடரட்டையின் இன/சாதியின் சொல்லாடல் தனிமரம் தனியாக இதுக்கு பாட்டே போட்டு இருக்கு உன்னையே எப்போதும் நினைக்கின்றேன் என்ற பதிவில்!(இது ஒரு விளம்பரம் கட்டணம் செலுத்தவில்லை!)கற்பனைக்கு உருவம் தேடக்கூடாது இது வேப்பம் தோப்பில் சக்திவேல் சொன்னது அம்பலத்தார் வழி மொழிந்தது !அவ்வ்வ்வ்வ்வ்மிச்சத்துக்கு இரவு வாரன் படலை திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில்!


பாதை!

இந்த மலைகளும் மடுக்களும் நிறைந்த தேசத்தில்
நடந்த களைப்பில் வட்டக்கல்லில் வாடியிருந்தேன்!
எதிரே வடக்கில் இருந்து அகதியாக ஓடிவந்தேன்
சாய்ந்து கொள்கின்றேன் என்று சொன்னாய்
தோள்கொடுத்தேன் தோழி என்றாய் !
பின்......
தாலி தந்தாய் தாரமாக்கினாய்
அன்பில் நீ தங்கம் தான் கணவனே!
அதோ இருமரங்கள் இடையில்!
ஒன்று சொல்லும் யாழ்ப்பாணத்தான்
மற்றமரம் சொல்லும் தோட்டச்சிறுக்கி
விட்டு விடுவம்
எதிரே மறுபாதையில் போவோம்
நாம் பிரதேசவாதம் கடக்கும் புகைகளாக
பாதை தெரிகின்றது தெளிவாக!

பாசம் !

நிலா வட்டமாக இருந்தது
நீ என் அருகில் இருந்த போது
அது நெற்றியில் குங்குமம் பொட்டாக!
இன்று மகனுக்கு சோறு ஊட்டுகின்றேன்
நிலாவாக உன்னைக்காட்டி
உன் தந்தை ஒரு துரோகி என்று
சுட்டவர்கள் முகம் காட்டி
நானும் ஈழத்து பெண்மனிதான் பாசத்துடன்!
வலிக்கின்றது என் வாழ்வு
மகனே நீ இருப்பாய் நெருப்பாக
எனக்கு கொள்ளி போட
ஊர் சொல்லும் உன் அப்பன் துரோகி என்று
நான் சொல்லுகின்றேன் அவன் நல்லவன்
உணர்ச்சிக்கு அடிமையாகாதே
தமிழக அரசியல் போல
நீயும் நாளை தீக்குளிப்பாய் என் அப்பன் துரோகி என்று!
அதுமட்டும் செய்யாதே
என் நிலவே பிள்ளை நிலவே
பார் வெளிச்சத்தை
பால் குடித்துக் கொண்டு
என் மார்பில் இருப்பதும் தமிழ்பால் தான்!

ஐடியாமணி(Ideamani - The Master of All)...

பாதை!

இத்தனை தூரம்
ஒன்றாக வந்துவிட்டு,
இதோ, இப்போது
பிரிந்து செல்கிறோம்
என, எதற்கு
எண்ண வேண்டும்?

இவ்வளவு தூரமும்,
தனித்தனியே வந்தோம்!
இதோ, இணைந்து
செல்லப் போகிறோம்
என, மாத்தியோசிக்கலாமே?

பாதை!

இதோ, எம்
பாதைகள் தனித்தனியே,
பிரியும் நேரம்
வந்தாகிவிட்டது!
உனது பாதையில்
நீ போ....!!

ஆனால்...!
என் பாதையில் நான்
போகப் போவதில்லை!
இங்கேயே மோதிக் கொள்கிறேன்
என் தலையை!

அதோ,
அந்தக் கல்லில்........!!

ஹேமா...

பாதை...
~~~~~~~~~
கிளைகள் உரசும்
காற்றும் கற்றுக்கொண்டது
காதலை அன்றுதான்.

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில்
அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க...

ஒற்றைக் கல்லும்
ஒளித்து வெட்கித்த
அந்த ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க...

பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!

பாசம்...
~~~~~~~~~~
தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத
பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.

கடலைவிட ஆழப்பதிவேன்
அம்மா நீ....
அடியில் தாங்குவாய்
தாங்கியாய்த் தாங்குவேனென
நம்பிக்கை வார்த்தையொன்றை
சொல்லிவிட்டால்!!!

இராஜராஜேஸ்வரி...

பாதைகள் எத்தனையானால் என்ன?

பயணம் என்பது ஒன்றுதானே !

பயணங்கள் அனைத்துமே

பதிக்கும் முதலடியிலேயே

பாங்காய் தானே ஆரம்பிக்கின்றன!

பாசமான உறவுகளாய்

படுத்தாமல் நிழல் தரும் மரங்கள்

பழ்மை மாறாத கனிகளை

பழங்களாய் தந்து

பசி போக்கி இனிமை தந்து

பார் முழுதும் அன்பாய்

பயன் தரும் மரத்தருவாய்

பயிற்றி வாழவேண்டும்

பாரினில் உயரவேண்டும்...!!

அம்பலத்தார்...

பாதை !

சேர்வதும் பிரிவதும்
பாதைகள் மட்டும்தானா
சேர்வதும் பிரிவதும் இயற்கையின் நியதி
விந்தாய் ஜனனித்ததும்
தந்தை உடல் பிரிந்து தாயின் கருவறை சேர்ந்து
தொப்புள்கொடி பிரிந்து வையகம் சேர்ந்து.
வீடு பிரிந்து போராளியாய் சேர்ந்து
போராட்டம் பிரிந்து மீண்டும் வீடு சேர்ந்து
களம் பிரிந்து புலம் சேர்ந்து
இளமை பிரிந்து முதுமை சேர்ந்து
ஆரோக்கியம் பிரிந்து நோய்கள் சேர்ந்து
என் பிரிதலும் சேர்தலும் தொடர்கிறது
ஒன்றுமட்டும் நிஜம்
உயிர் பிரிவதும் மயானம் சேர்வதுமே- என்
இறுதி சேர்தலும் பிரிதலும்!

யோகா அப்பா(Yoga.S.FR..)...
ஏதாவது எழுதுங்கோ என்று அன்பு மகளின் கட்டளைக்கு?அடிபணிந்து சிறிய ஒரு உரையாடல் (நகைச்சுவை?!).

"திருவிளையாடல்"படத்தை நினைவில் கொள்க:அரசனுக்குப் பதில்

அரசி(ஹேமா)அரியாசனத்தில்.
புலவர்கள்;காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்,மற்றும்பலர்.
புலவர் யோகா கவிதையுடன் (உரைநடை) வருகிறார்.


யோகா : வணக்கம்அரசியாரே!

அரசி : வணக்கம் புலவரே!

யோகா : (மனதுக்குள்......சும்மா கொஞ்சம் அங்க,இஞ்ச வார்த்தைகள திருடி வசன நடையில ஒரு தடவ எழுதின உடனே புலவர் போஸ்ட் குடுத்துட்டாங்க!)கவிதையைப் படிக்கண்டுக்களா?

அரசி(ஹேமா) : படிங்க புலவரே!

யோகா : கொங்கு தேர் வாழ்க்கை...............

காட்டான் : புலவரே,இது திருவிளையாடல் இல்ல!

நேசன் : அது வேற,இது வேற!

அம்பலத்தார் : பரவாயில்லை,அதையும் கேட்டுத்தான் பாப்பமே,கன நாளா கேக்கையில்ல!

நிரூபன் : அறளை பேந்துட்டிது!

அரசி(ஹேமா) : சரி,சரி ஆளாளுக்கு ஒவ்வொண்டு சொல்லாதயுங்கோ!அவரும் உங்கள மாதிரி ஒரு புலவர்! தானே?சரி,பிழை இருக்கத்தான் செய்யும்!நீங்க படியுங்க,சா.....பாடுங்க புலவரே!

யோகா : அப்பிடியெண்டா மருதடிப்புள்ளையார் கோயில் மண்டபத்தில"அவர்"குடுத்தத பாடட்டோ?

அரசி : என்னது "அவர்"குடுத்ததோ?

யோகா : இல்லையில்ல,வாய் தடுமாறிச் சொல்லிப் போட்டன்!

காட்டான்,நேசன்,அம்பலத்தார்,நிரூபன்:::: இது சரியா வராது!ஆரோ மண்டபத்தில எழுதிக் குடுத்ததை இங்க வந்து பாடவோ?அப்பிடியெண்டால் நாங்களும் பாடுவமே?யோகாப் புலவர் அளாப்பி விளையாடுறார்.இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரேல்லை!!!!!

(ஒட்டுமொத்தமாக புலவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள்.சபை கலைந்தது.அரசியும் களைப்பு மேலிட நிரூபன் இண்டைக்கு உடம்பு மெலிய என்னவோ பத்தியம் சொன்னாரே?அதையாவது செய்து சாப்பிட்டுப் பார்ப்போம் என்று தனக்குள் கூறிக் கொண்டு "அன்னநடை"நடந்து குசினிக்குள் சென்றார்!)

யோகா : (புலம்புறார்)பாத்தியே,பாத்தியே?சொன்னாக் கேக்கிறியா?மண்டபத்தில ஆரோ எழுதிக் குடுத்தத வாங்காத,வாங்காத எண்டு தலை,தலையா அடிச்சனே,கேட்டியா?உனக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்!இப்ப நிக்க இருக்க ஏலாம குறுக்கை,நெடுக்கை நடக்கிறதில என்ன விடியப் போகுது?போ,போய் ஒழுங்கா சொந்தமா ஏதாச்சும் எழுதி, பரிசு கூடவோ,குறைச்சலோ வாங்கப் பார்!வீட்டில அடுப்பு எரிய வேணாமோ????

கவிதை(உரை நடை?)

ஒற்றை வழி ஆகாதென்று இரட்டை வழி ஆக்கினரோ?
இரட்டை வழி பிரிவதற்கும், இரட்டை மரம் காரணமோ?
தப்பித்தேன், ஒற்றைமரம் இருந்திருந்தால்,
நான் தான்!நானே தான் என்று, நேசனும் உரைத்திருப்பார்!

கலை(கருவாச்சி)...

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடி வா
மலை மேல ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா!!!


நிலவைக் காட்டி
சோறு ஊட்டும்
தாயிடம் அடம்பிடிக்கிறது
குழந்தை!!
நிலவுக்கும் சோறு ஊட்டச் சொல்லி !!..


வறண்ட கால

முற்களும்,

வசந்த கால பூக்களாய்

மாறு கிறதே !!! ..

பேதை எந்தன் பாதையில் பவனியோ ??!!!

ஆர் அந்த பேதை ???

நேசன் & கலை(கருவாச்சி)...

நட்புப்பாதை என்ற போர்வையில் ஒன்றாக வந்தோம்
வட்டக்கல்லில் நிலாவைக் காட்டினாய்
தோள்மீது சாய்ந்து பாசமாக !
இரு மரங்கள் தெரிந்தது !
இந்தவடக்கு வழியால் போடா என்றது தமிழ்
மற்றது சகோதரமொழியில்
தெற்கு வழியாக போடி என்றது!
புகைமூட்டம் கண்டது நம் காதல் !
மொழிகடந்து தூரத்தில் சங்கமிக்கின்றோம் தீயில் !!
வேண்டாம் இனவாதம்
காணிக்கை என் காதல் என்று சொல்லும் இந்தப் பாதை!

தொலைந்த மொழிகளும்
மௌனமாய் வேடிக்கை காட்ட
வாதத்தில் பிறந்த இனவாதமும்
திசைகளாய் திரும்பி கொள்ள
காதல் பாதையில் சங்கமித்த உள்ளங்களும்
வெறுமையாய் வெற்று நடைப் போட
துணிந்தது உந்தன் இதயம் ...
பதில் இல்லாமல் மருகிய காலம்....
உனக்காய் காத்திருந்த பாதையில்
யாரோ ஒருத்தி எனக்காய் தவமிருக்க
நேசனிடம் கொண்ட நேசமும் நிஜமாக
எந்தன் பாதையில் என்றுமே
ஒரே மரம்
தனிமரம் என்னவளுக்காய் !!!

AROUNA SELVAME...
பாதை...

வாழ்வை நோக்கி
ஓடி வந்தேன்.
விதி காட்டியது
இரண்டு வழி!

பாசம்...

தாயே..
களங்கத்துடன்
தேய்கின்ற
அந்த நிலவினும்
உயர்ந்தவள் நீ!

விச்சு...

பாதை !

வாழ்க்கையில் இரு பாதைகள்
எப்போதும் உண்டு
இரண்டும் ஒன்றாய்த் தோன்றினாலும்
செல்லுமிடம் வெவ்வேறு
ஒன்று இன்பத்துடன் ஆரம்பித்து
துன்பத்தில் முடியும்
மற்றொன்று கஷ்டத்தில் ஆரம்பித்து
மகிழ்ச்சியில் முடியும்
உன் பாதை உன்கையில்...!

அப்பாதுரை...

பாதை!

பாதையோரம்
எந்த ராமனுக்காகக் காத்திருக்கிறாள்
இந்த அகலிகை?

பாசம் !

வளர்பிறை தேய்பிறையைப்
புரிந்து கொண்டது
நிலவு.

T.V.ராதாகிருஷ்ணன்...
பாசம் !

பாட்டி
வடை சுடவில்லை
ஆம்ஸ்ட்ராங்கின்
பாதச்சுவடுகள் அது
அறிவியல் ஊட்டப்படுகிறது
பிஞ்சு மனதிலேயே !

பாதை !

பாதை மாறாமல்
தனிமரமாய் இல்லாது..
வாழ்ந்து பார்
கண்முன் கொட்டிக்கிடக்கும்
ஆயிரம் பாதைகள் !

ஸ்ரீராம்(எங்கள் புளொக்)...

பாதை !

பயணங்களை
பாதைகள்
முடிவு செய்வதில்லை

பாதைகளை வைத்து
பயணங்கள்
முடிவு செய்யப்படுவதில்லை.

சேருமிடம் குறித்து
தெளிவிருந்தால்
பாதைகளின் தரம்
பார்க்கவேண்டியதில்லை

பாதைகளுக்கு
பயண முடிவும்
தெரிந்திருப்பதில்லை

வழியைக் காட்டி
வலிகளைச் சுமக்கும்
பாதைகளின்
தியாகத்தை
உணர்ந்தாரில்லை
பாதைகளைச் சீர் செய்தாருமில்லை.

கடினமான
பாதைகளே
கனவு இலக்குகளை
அடைய உதவுகின்றன !

பாசம் !

காதலுக்கும்
கவிதைக்கும்
களம் ஆகும்,
கனம் சேர்க்கும்
அந்த நிலவைப் பாரடி
என் கண்ணே...

கவிதை சொல்வது
அஞ்ஞானம்
உண்மை சொல்லுது
விஞ்ஞானம்
வெண்மை காட்டும்
நிலவுகள்
உண்மையில்லை
உயிர் வாழும் தன்மை
அதில் இல்லை,
தண்மையுமில்லை

கனவுகளை உடை
கடமையை நினை
காரியத்தில் நனை
வையம் போற்றும் உனை!

பாசம் !

நிலவின் நினைவுகள் போன்றே
பாதைகளில் பயணங்களும்
சுகமானவை.

படங்கள் அருகருகே இருந்தாலும்
அமைக்க முடிவதில்லை
நிலவுக்குப் பாதை!

பாதை !

எல்லா பாதைகளும்
வாழ்வின் ஏதோவொரு
சொல்லாத்
தனிமைச் சோகத்தைச்
சொல்லியே நகர்கின்றன!

மீண்டும் ஒரு
மழை வரலாம்
மரங்கள் துளிர்க்கலாம்
பாதைகள் பசுமையாகலாம்...

கனவிலும்
எதிர்பார்ப்பிலுமே
பாதைகளாய்
நகர்கிறது வாழ்க்கை.

பாதைகள் பல என்றாலும்
பயணம் என்னவோ
ஒன்றுதானே...

பாதைகளுக்குத் தெரிவதில்லை
பயணத்தின் வழியும், வலியும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒற்றை நிலாவும்
'ஒத்தையடிப் பாதை'யும்
கிளரும் உணர்வுகளை,
நட்சத்திரக் கூட்டமும்
நகரத்துச் சாலைகளும்
எழுப்புவதில்லைதான்!

(எனக்கு எப்போதுமே மனதுக்குள் ஒரு கிண்டல் கலந்த நினைப்பு உண்டு... 'ஏதோ ஒரு', 'தான்', வார்த்தைகளைக் கலந்தாலே கவிதையாகி விடுகின்றன...சாதாரண வார்த்தைகளுக்கு நடுவில் இவற்றைப் மடக்கிப் போட்டு கவிதையாக்கி விடலாம் என்று நினைப்பேன்!)


துரைடேனியல்...
பாதை
-----
வாழ்வுப் பாதையா
சாவுப் பாதையாவென
தெரியாமலே
தொடர்கிறேன்

இருத்தலை
நான் விரும்பவில்லை
பயணிக்கவே விரும்புகிறேன்
இருந்து சாவதைவிட
பயணித்து சாவது
கௌரவம்.

பாசம்
-----

பாலருந்த மறுப்பது
ஏனடா கண்ணா?
களங்கம்
நிலவில் மட்டுமில்லை
என் பாலிலும்
உண்டென்று
யாரேனும் உரைத்தனரோ?

உலகில்
கலப்படமில்லாத
ஒரே பொருள்
இதுதானடா
பருகு...
பாலை மட்டுமல்ல
பாசத்தையும்.

வேர்கள்...
பாசம் !

குழந்தையின்
வாயில் அம்மாவின்
அன்பு சோறு
ஏக்கத்துடன் நிலா !
தனக்கு ஒரு
பிடி வேண்டி....!

பாதைகள் !

இருவேறு பாதைகள்
இருவேறு பயணங்கள்
இருவேறு அனுபவங்கள்,படிப்பினைகள்....
ஒன்று அவளுக்கானது..
மற்றொன்று அவனுக்கானது.....
இனி...!
பாதை அவர்களுக்கானது
ஆனாலும்
அனுபவங்கள்,படிப்பினைகள்
வெவ்வேறானவையே....!!

கலா(என் சிங்கை(க)த் தோழி)...

பாதை
=======
பாதைக்கு,
பா..
தை க்க..
பாதையைக் காட்டினாள் சகி
பேதை என்விழியில் தைத்தவைகள்...

கால் தடங்களை வழியில் பதித்ததினால்...
பாதித்து,
பசுமைக்கற்பு களவாடப்பட...
இப்போ..
ஆள் அரவம்{மும்} இன்றி
கைவிட்ட வலியுடன்..
.வழிதெரியாமல் வழியும்!
இதனைக் கண்டு
உயிரிருந்த சிலையும் உணர்வற்று
கல்போல் தெரியும் காட்சியும்!!

பாசம்
======
அது
எவ்வளவு உண்மைப் பாசமுடன்
காடுமேடு பாராமல்,களனிகங்கையை ஒதுக்காமல்
ஏழை வசதி விருப்பொன்றாய்
குடிசை கோபுரம் தரம் ஒன்று என நினைத்துத்
தன் சேவையைப் பொழியும் நிலவுபோலும்....

கதிரவன் பக்கமிருந்தும்
“பட்டுக்” கொள்ளாமல்,
மதியும் கெடாமல்,
பாரம்பரியம் குலையாமல்
தனியொருத்தியாய்ப் பவனிவரும் அழகுபோலும்....

அழகுக்கும்,காதலுக்கும்
பாசத்துக்கும்,உயரத்துக்கும்_அவளை
உவமையென்று வம்புக்கிழுக்கும் கவிஞர்களிடம்
சரண்டையாமல்...சகஜமாய்ப் பழகும்
தாரகை அவள்போல்_என்
சின்னமகளே!
அந்த நிலவைப் பின்பற்று
பாசமுடன் கூட்டிச் செல்வாள் உன் கைபற்றி.

kg gouthaman கௌதம் (எங்கள் புளொக்)...

கடவுள் என் முன் தோன்றினார்.
'படங்களைப் பார்த்து
ஒரே வார்த்தை சொல்லவேண்டும்;
அது எல்லாவற்றிற்கும் பொருந்தவேண்டும்'
என்றார்.....
மண் என்றேன்.
மரம என்றேன்.
நிழல் என்றேன்.
பாதை என்றேன்.
கல் என்றேன்.
கனி என்றேன்.
இருள் என்றேன்.
நிலா என்றேன்.
வெளிச்சம் என்றேன்.
பாசம் என்றேன்.
எதுவும் சரியில்லை என்றார்.
மிகவும் யோசித்துச் சொன்னேன்.
'அம்மா'
'அதே!' என்றார், காணாமல் போனார் கடவுள்!

Seeni சீனி...
பாதை!
-----------
வந்த வழி-
ஒன்னு!

காட்டும் வழி-
இரண்டு!

எது நல் வழி!
அது உன் கையில்!
உனது முடிவில்!

நிலா!
---------
குழந்தைக்கு-
நிலவை காட்டி-
சோறா!?

குழந்தையை-
காண வந்தது-
நிலவா!?

ரெவரி...

பாசம்!

என்
துதி பாடாத
கவிஞன்
எவனும்
இல்லை
என்ற
இறுமாப்பு
எனக்கு..

இருந்தும்
ஒவ்வொரு
முறையும்
தோற்றுப்போகிறேன்
உங்களிருவரிடம்...

சற்றே
தேய்ந்தும்
போகிறேன்..
உங்கள்
பிணைப்புக்கு
முன்...

அடிக்கடி
மறைந்தும்
போகிறேன்
உங்கள்
பாசம்
கண்டு...

புலவர் சா இராமாநுசம்...

பனிமூட்டப் பாதையிலே நீண்டதூரம்
பார்வையிலே காணோமே ஒருவர்கூட
நனிவாட்டும் குளிரோ எதுவோ மேலும்
ஒன்றாக வந்துப்பின் இரண்டும் ஆக
ஊர்விட்டு ஊர்வருவோர் அறிந்து போக
நன்றாக படங்காண வாழ்க வாழ்க!
நடுவிலே மூன்றுமரம் வளமும் சூழ்க!

அமுதூட்ட அம்புலியை அன்னை காட்டி
அல்லி்ப்பூ மழலைக்கு உணவை ஊட்டி
பொழுதாகி அந்திவர மாலை நேரம்
பூக்கின்ற மலர்போன்ற இதழின் ஓரம்
எழுதாத ஓவியமே போன்ற அன்னை
இனிதாக காண்பது,மகிழ்வில் என்னை என்றுமே ஆழ்த்துமே!

கீதா...

பாதை !

கல்லானாலும் கணவனாம்,
புல்லானாலும் புருஷனாம்.
கல்லையும் புல்லையும்
கட்டிக்கொண்டு பட்டபாடு போதும்,
நடக்கப்போகிறேன் நானும் என்வழியில்!

என் தனிவழியில்!

நீளும் பாதையின் முடிவில்
நிறைந்திருக்கலாம் காடோ, மலையோ!
கவலையில்லை,
கல்லினும் மலை உன்னதம்.
புல்லினும் காடு பேரானந்தம்.

தொலைந்துபோகும் சுயத்தினும்
தொலைக்கவிருக்கும் ‘நான்’ சுகம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எந்தக்குதிரை மேலேறி
எந்தத் தேசத்து அரசக்குமாரன்
எந்தப்பாதை வழி வருவானோ?

காத்திருக்கிறேன் காலங்காலமாய்
குத்துக்கல்லென முக்கூடற்பாதையோரம்!

சற்று அமைதியாயிருங்கள்.
களைத்தப் பரியொன்று சாவதானமாய்க்
கால்மாற்றியிடும் குளம்படிச்சத்தம்,
தூரத்துப் பனிமூட்டம்விலக்கி
மெல்ல செவிசேர்வதைக் கவனியுங்கள்.

கும்பிட்டுக் கேட்கிறேன், போய்விடுங்கள்,

அபூர்வமாய் வரும் அரசகுமாரன் அவன்!

எவளுக்கு மாலையிடுவது என்னும் குழப்பத்தில்
ஆழ்த்திவிடாதீர்கள் அவனை!

பாசம் !

பாரம்மா, பார்!
அவள்தான் வெண்ணிலாவாம்!

கவிஞர்கள் பாடுகிறார்களாம்,
காதலர் தேடுகிறார்களாம்,

பாடநூல் அத்தனையிலும்
பள்ளிப்பிள்ளைகள் படிக்கிறார்களாம்.

வானியலில் வேடிக்கைகாட்டி
விஞ்ஞானிகள் வியக்கிறார்களாம்.

அடிக்கடி அலட்டிக்கொள்கிறாள்.

அடி போடி என் தோளில் தவழும்
என் பெண்ணிலாவுக்கு ஈடாவாயோ என்று
எள்ளி நகைத்தபடி
அள்ளிக்கொள்கிறேன்
அழகுநிலா உன்னை!

முகம் சிறுத்து கருமேக முகில் பொத்தி
மழையாய் அழுவாள் பார்,
இன்னும் சற்று நேரத்தில்!

செய்தாலி...
விழிகள்
இரண்டும் குருடல்ல
திசை மாறிய பயணம் விழித்திரையில்
ஆசைக் கருமை

சுய
அகந்தைகளை சுமந்து
மனதின் போக்கில் கால்கள்
குறுக்குப் பாதை அவசரப்பயணம்

பயண
வேகத்தின் கூர்மை
உயிர் துறக்கும் மனிதர்கள்
வழிகள் நெடுக குருதிக்கறைகள்

கோர
கூர்மையுள்ள முட்களற்ற
இளம்பஞ்சு வழித் தடம்
சேரும் இடம் நரகவாசல்

கடந்து
வந்த பாதைகளில்
இடையிடையே உதிர்ந்த பருவம்
முதுமையை உடுத்தியது காலம்

அனுபவம்
போதி மரம்
மதியின் வாசல்தட்டி சொன்னது
நீ பிழையில் நிற்கிறாய்

ஐயகோ
என்ன கோரம்
பிழையுணர்ந்து அழுகிறார்கள்
முன்னால் வந்த மனிதர்கள்

நன்மை
நல்வழிப் பயணம்
கரடு முரடான நீண்டபாதை
உதிர்ந்த பருவவுமாய் மறுபயணம்!

பாஹே...
பாதை !

ஒற்றைத் தனிமரம்
ஓரங்கட்டிக்கொண்ட வாழ்க்கை;
ஒரு காலத்தின் பழங்கனவாய்
சிறிதாகப் பசும்பொற்குவியல்
மறுபக்கம் பாதை நெளிந்து நீள்கிறது
இது -
இலக்கு அறியா மானுடத்தின்
கணக்குப் பிசகும் ஒரே விடை;
காலங் காலமாக இந்தச் சரித்திரமும்
திரும்பி கொண்டுதான் இருக்கிறது -

இருக்கும், வேறு பாதை இல்லை;
தனிமரம் தோப்பாகாததால்
தோப்புக்குள் வானப்ரஸ்தம்
ஒரு தொடர்கதை, முடியும் வரை!

நிலவு !

அரண்மனை உப்பரிகைப் பலகணியிலும்
அன்றாடங் காய்ச்சியின் ஓட்டுக் குடிசையிலும்
அம்மா குழந்தைக்குச் சோறூட்டுவாள் -
அங்கே வெள்ளிக் கிண்ணம்
அதில் பால் அன்னம்.

இங்கே அலுமினிய நெளிசல்
அமுதமாய்ப் பழஞ்சோறு

எதுவானாலும் பாசம், பரிவு
வலிமைச் சேர்க்கும் முலைப்பால் இதுவும் -
ஒளவை வருவாள், இளங்கோ கம்பனும்
பாரதி அதிகம், பசியாறிப் போகும் -
யுக யுகமாக இது ஓர் தொடர்கதை
தொட்டிற் பழக்கம், அகம்புறச் செழுமை.

சத்ரியன்...
நிலா
----
அம்மா,
நிலா பாப்பாவுக்கு
அம்மா இல்லையாம்.
நம்ம
வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போலாம்.

(இவர் இப்பத்தானாம் கவிதை எழுதிப் பழகுறாராம்.)


மோ.சி. பாலன்...

பாதை !

வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..

யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?

இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து...

பாதை!

பாதை தெளிவாகத்தான் இருக்கிறது.
பயணம்தான் கையகப்படவில்லை!

பாதையும் பயணமும் நேர்ப்பட்டாலும்
கோழையாய் மனம் மறுதலிக்கிறது.

வெறுமையாய் கிடக்கும் பாதையாயினும்
பொறுமையாய் காத்துக்கிடக்கிறது காலம்.

வெறுமையும் பொறுமையும் இருந்தாலும்
வறுமையும் சோகமுமாய் கழியுதுகாலம்.

முள்ளாய் கிடக்கும் மரமும் பூத்துக்குலுங்கும்
கல்லாய் கிடக்கும் பாதையும் பூவாய்நிறையும்

முள்ளும் கல்லும் பக்குவமாய் ஆக்கினாலும்
சுயமும் கனமும் இழந்தே கழியுதுகாலம்

நம்பிக்கை ஒளிவீசும் வான்மேகம்
தம்கைநம்பி வாழும் குதூகலம்

பாதையும் பாதையும் இணையும் காலம்
வான்மேகமாய் பொழியும் ஆனந்தகீதம்.

Tuesday, March 27, 2012

ஒரு காதல் கதை.

பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க,காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அதிகாலை உங்கள் முற்றத்தில் நின்று பாருங்கள்.

மீசையிலும் தாடியிலும்தான் பிரச்சனை முற்றிப் பிரிந்தோம் என்றால் நம்புவீர்களா.சும்மா ஒரு கதைக்குத்தான் ரவியின் மீசையும் தாடியும்।

ரவி என் வாழ்வின் ஒரு பகுதி.அவன் என் வசந்தகாலம். என் கிளையிலிருந்து உதிர்ந்தாலும் வேரோடு ஒட்டிக்கொண்டவன்.ஆனால் எனக்குள் காலமானவன்.அவன் ஒருகாலம்.நேற்றும் இன்றும் இப்போதும் நாளையும் நாற்பது வருடத்தின் பின்னும் என்னவன் அவன்.அவன் தள்ளினானா நானே தள்ளிப்போனேனா.இன்னும் புரியவில்லை.ஆனால் அவன் என்னவன் என்பதே எனக்கு ஆறுதலான ஒரு விஷயம்.

அந்தக் குளிர்ந்த இரவில் மர அட்டைகளோடு இழுத்துப் பறித்து இரத்ததானம் செய்துகொண்டிருந்தபோதே அவனைச் சந்தித்தேன்.

"நான் இண்டைக்குத்தான் இந்தப்பகுதிக்கு வந்திருக்கிறன்.உங்களை இப்பத்தான் பாக்க்கிறன்.உங்கட பெயரோ....தமிழ்.சொன்னவை.ஆனால் ஆர் எண்டு எனக்குத் தெரியேல்ல.அவையள் சொன்ன ஒரு குறிப்பை வச்சுத்தான் சொல்றன்.இனிக் கொஞ்ச நாளைக்கு என்னை இங்கதான் இருக்கச் சொல்லியிருக்கினம்.அநேகமா உங்கட குறூப்பில உங்களோடதான் இருப்பன் எண்டு நினக்கிறன்."

என்றே என்னுடன் பேசத் தொடங்கியிருந்தான் ரவி.பின்னொருநாள் சொல்லியிருந்தான்."அழகான ஆம்பிளை பாரதி"யென்று நினைத்து ரசித்தபடிதானாம் என்னுடன் பேசத்தொடங்கியதாக.

அவன் அறிவு,ஆணழகு எதையுமே அலட்டிக்கொள்ளவில்லை அப்போ.தெய்வீகம் அது இது எதிலும் நம்பி அலட்டிக்கொள்ளாத நேரமது.பொறுப்புகள் என் தலையில் நிறையவே இருந்தது.ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.அந்தந்தக் காலத்தில் துணையைத் தேடுவது பற்றியும் மனசுக்கு ஒத்துவந்தால் கல்யாணம் வரைக்கும் போகலாம்.இடையில் அலட்டல் இல்லாமல் ஆனால் ஒரு நல்ல நண்பர்களாக இருக்கிறதைப் பற்றி மட்டுமே யோசிச்சால் நல்லது.

கூடிய நேரங்களில் என் சந்தேகங்களுக்கும் சந்தோஷங்களுக்கும் ரவிதான் பக்கதுணையாய் இருந்தான்.சில நேரங்களில் வேணுமென்றே காணாமல் கொஞ்சம் தளருமளவிற்குத் தவிக்கவிட்ட நேரத்தில் அவன் கண்களில் காதலைப் பார்த்தேன்.ஒருநாளைக்கு அவராய்ச் சொல்லட்டும்.

"பூக்கள் மரங்களில் இருப்பதும் அழகுதான் என்பேன்.....ஏன் இருந்தாப்போல சொல்றீங்கள்"என்பான் குறுகுறு கண்களை அகல விரித்தபடி.

ரவி உங்களோட கதைக்கவேணும்...

ஏன் என்ன விஷயம்.ஏதாலும் செய்தி வந்திருக்கோ.இல்லாட்டி வீட்லயிருந்து கடிதம் வந்திருக்கோ.ஆவலாய்....

நானும் ஒண்டு சொல்லவெண்டுதான் இருக்கிறன்.சரி சரி நீங்களே சொல்லுங்கோ முதல்ல.

இது ஒரு அந்தரங்கம்.பெரிய விஷயம்.பிறகு கதைப்பம்.....

பிறகெண்டால்.....!

பிறகுதான் இரவு சாப்பிட்டு நியூஸ் கேட்டபிறகு...மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைக்கவேணும்.அதுக்கும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

தமிழ்...என்ன விஷயம்.இப்ப சொல்லுங்கோவன்.சொல்லாட்டி எனக்கு நித்திரையும் வராதப்பா.

என் வாயிலிருந்து கிளறி எடுக்க ஆசைப்படுகிறான்.ஆனால் அவனே யாருக்காவோ சொன்னதுதான்."சும்மா...தங்கட அன்பை காதலைச் சும்மா சிநேகிதம் என்கிற பெயரால மறைக்கினம்.நாங்கள் அப்பிடியில்லைத்தானே தமிழ்" என்று சிரித்தபடி என் கண்ணை ஆழப்பார்த்தவன்.

வாங்கோ....அந்தக் கல்லடியில இருப்பம்.சாப்பிட்டீங்கள்தானே....என்றபடி எனக்கும் இடம்விட்டு கல்லில் அமர்ந்தாள்.நேரே என் முகம் பார்த்தாள்.நான் தான் கொஞ்சம் திரும்பிக்கொண்டேன்.நிலவை மறைத்துக்கொண்டிருந்து இரட்டைப்பனைபோல இறப்பர் மரம்.ஆனாலும் அவள் முகத்தில் சந்தோஷ வெளிச்சம் காட்டியது நிலவொளி.

"ரவி...நீங்கள் சொன்ன அதே விஷயம்தான்.தள்ளிப்போட எனக்கு விருப்பமில்லை.நட்புக்குள் காதல் ஒளியவேண்டாம்.இரண்டுமே வேணும் எங்களுக்கு.இப்போதைக்கு வெளில சொல்லவேண்டாம்.எங்களுக்குள்ளேயே இருக்கட்டும்.எனக்கு உங்களை நிறையப் பிடிச்சிருக்கு ரவி.உங்களிட்ட சொல்லிவிடவேணுமெண்டு நினைச்சன்.“டக்”கெண்டு சொல்லிப்போட்டன்.நீங்கள் நடுவில ஏதும் சொல்லாதேங்கோ.நான் சொல்லி முடிக்கிறன்.எனக்கு உங்களில நிறைய விருப்பம்.நான் பெரிசா யாரோடயும் பழகிறதில்ல.அப்பிடியே ஒன்றிரண்டு சிநேகிதம்.அதுவேற இது வேற.உங்கட குணம் நடவடிக்கை என் தாத்தாவை ஞாபகப்படுத்து அடிக்கடி.என்னோட ரவி நீங்க என்கிறதில பெருத்த சந்தோஷம் எனக்கு.நிறையக் கற்பனைகள் சேர்த்திட்டன்.உங்கட ஒவ்வொரு அசைவையும் அறிஞ்சு வச்சிருக்கிறன்.நீங்கள் என்னோட இருந்தால் நான் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாயிருப்பன்.இரண்டு பேரின் இலட்சியங்களும் கலையாது.இதில உங்கட விருப்பமும் இருக்கு.இருக்கும் என்கிற நம்பிக்கையும் எனக்கிருக்கு.என்னைப் பிடிக்காமலும் போகலாம்.ஆறுதலா யோசிச்சுச் சொல்லுங்கோ.ஆனால் சாகிற வரைக்கும் எங்கட நட்பு இப்பிடியே இருக்கவேணும்."முகத்தை அழுத்தமாக அவனுள் புதைத்தபடி சொன்னாள்.நித்திரை இல்லாம ஆக்கினதுக்கும் மன்னிச்சுக்கொள்ளுங்கோ என்றாள் சிரித்தபடியே.

சீ...சீ...இதென்ன தமிழ்.உள்ளுக்குள்ளேயே வளரவிடாமல் மனம் விட்டுச் சொன்னது நல்லதாப்போச்சு.நாங்கள் பழகத் தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதகாலமாகியும் சில விஷயங்களை நான் சொல்லாமல் இருந்தது என் பிழைதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.ஆசைகளை நான் வளர்த்துவிட்டிருக்கிறன்போல.எனக்கு என்ன சொல்றதென்றே தெரியேல்ல.எனக்கு ஏற்கனவே என் மச்சாளைப் கல்யாணம் பேசி வச்சிருக்கினம்.அவளும் காத்திருக்கிறாள்.

தமிழின் கண்ணீர் நிலவில் தெறித்தது.துடைத்துவிடத் துடித்தாலும் உரிமையற்று நின்றிருந்தான் ரவி.

சமாளித்த தமிழ்..."திடீரென்று ஒருமாதிரியாயிட்டன் ரவி.இதில ஏதுமில்ல.கேட்டன் என் விருப்பத்தை.நீங்க சொன்னதில ஒரு பிழையுமில்லை.சரி நான் வாறன்.நாளைக்கு சந்திப்பம்" என்று சொல்லிக்கொண்டே போய்விட்டாள் தமிழ்.நிலவு மழைமேகத்தால் இருட்டடிக்கப்படிருந்தது அப்போ.

அடுத்த நாள் எப்பவும்போல ஒழுங்காகவே இருந்தது.

"நல்லா நித்திரை கொண்டீங்களோ...என்றபடி.நானும் நல்லா நித்திரை கொண்டேன்..."நடு இரவுபோல என்னை எறும்பு கடிச்சிட்டுது"... என்று சிரித்தாள்.மெல்லிய திரை விலகி மனங்கள் சுத்தமானதாக உணர்ந்தேன்."இன்று நாங்கள்தானே சமையல் என்றாள்.மரக்கறிகள் வாங்கவேணும்.சந்தைக்குப் போய்ட்டு வருவம்"...என்றாள் எதுவுமே நடக்காததுபோல.

இப்போவெல்லாம் உங்கட மச்சாள் எப்பிடி என்று கிண்டலடிக்கிறவரை இன்னும் நட்போடு நெருக்கமானோம்.சின்னவிரல் காட்டி ஒல்லியென்பான் ரவி.அப்ப கனக்கச் சாப்பிடச் சொல்லுங்கோ.குழந்தை பிறக்கேக்க கஸ்டம்.உடம்பில தென்பு வேணுமெல்லோ என்று நக்கலடிப்பள் தமிழ்.

போட்டோ வச்சிருக்கிறீங்களே என்பாள் ஆவல் ததும்ப.ஒரு நாளைக்குக் காட்றன் என்பான் ரவி.அதோடு சேர்த்து "உங்களுக்கும் ஒரு மாப்பிள்ளை நான் பாத்துத் தரவோ என்பான்.எனக்குத் தெரிய ஒன்றிரண்டுபேருக்கு உங்களில நல்ல விருப்பம் இருக்கு."...மௌனமாய் சிரித்து அடுத்த கதைக்குத் தாவிவிடுவாள் தமிழ்.

அநேகமான பொழுதுகள் ரவியின் அருகாமையோடே கழிந்தது.பிடித்தும் இருந்தது தமிழுக்கு.உயிருக்குள் ஆழப் புதைந்திருந்தான் அவன்.என் ரவி....என் ரவி...என்கிற ஒரு மந்திரம் சாகும்வரை இருக்கும்போல மன அறைக்குள் அழுத்தி எழுதப்பட்டிருந்தது.அதை எவராலும் அழிக்கமுடியாது.கல்யாணத்துக்கு மட்டும்தான் ரவி வேணும்.காதலிக்க அவன் நினைவுகளும் அருகாமையும் அன்பும் போதுமாயிருந்தது தமிழுக்கு.

சில அத்தியாவசியத் தேவைகள் நேரங்கள் எல்லாமே அவன் துணையாக இருந்தான்.

றோட்டில் நடக்கும்போது மதில் எட்டிப் பூப்பறிக்கவும் ஐஸ்கிறீமுக்குமான செல்ல அடத்துக்கெல்லாம் தாயாய் தாங்கினான் ரவி.

ரவி..."கால் உளையுது தூக்கிக்கொண்டு போங்கோ"...என்பாள்.நான் தூக்கிக்கொண்டு போவன்.நீங்கள் சரியென்றால் என்பான்.ஓம்...தூக்குங்கோ....சரியென்று வேணுமென்றே கிட்டப் போவாள் தமிழ்.

"இவ்வளவு குண்டா இருந்தா நானெல்லோ முறிஞ்சுபோவன்..." என்பான்.அதுக்கும்..."ஓ....உங்களுக்கு ஒல்லி ஆட்களைத்தான் பிடிக்குமென்று..." தன்னையறியாமல் சொல்லிவிட முகம் மாறி மௌனமாகிவிடுவான்.பிறகு எதையோ சொல்லிச் சிரிக்கப்பண்ணி மனதுக்குள் அழுதும் விடுவாள்.

எல்லாம்....எல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறது.அசரீரியாய் ரவியின் குரல் மனதின் மெல்லிய இழைகள்மீது தொடர்ந்த அதிர்வோடு.ஒற்றைக் குடைக்குள் எத்தனை நாட்கள் தெருப்பள்ளத்துள் தேங்கிய மழைநீராய் நினைவுகள்.என் மாதவிலக்கின் நேரம்கூட அவன் காய்ச்சும் கசாயம் மருந்தாய் கசத்தாலும் இனிக்க இனிக்கத் தருவான்.என் வயிற்றுவலியில் பங்கு கேட்பான்.மனதில் பதிந்து காதலனாவன் நட்பென்று தள்ளி நின்றவன்.

காலப்போக்கில் தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தான் ரவி.எனக்கு அழகான மீசை பிடிக்கும்.ஏனோ தாடி பிடிக்காது.மீசைக்குழந்தை என்று நக்கலும் அடிப்பேன்.மீசை வெட்டினா கோவம் வரும்.சொல்லாமல் ரசித்திருக்கிறேன் எத்தனையோ நாட்கள்.மீசை இல்லாவிட்டல் ரவி அழகற்றதுபோலவும் கம்பீரம் குறைந்ததுபோலவும் இருக்கும் எனக்கு.எங்கையப்பா உங்கட மீசைக்குழந்தை என்பேன்.புரிந்துகொள்வான்.

"என்ன இது கோலம்.தாடியும் ஆளுமா.ஏன் ஷேவ் பண்ண நேரமில்லையே.முகத்துக்குள்ள இப்பிடி வேர்த்துக்கிடக்கு என்றேன்".

"இல்ல...கனகாலம் தாடி வளர்த்துப் பார்க்க விருப்பம்.அதுதான்.."என்று இழுத்தான் ரவி.

"வேண்டாம் வேண்டாம் வெட்டிவிடுங்கோ.சிங்கம் அசிங்கமா இருக்கிறார் தாடிக்குள்ள..." தாடிக்காக ஒருபெரிய அலசலே நடந்தது.

"சீ...சீ அரிகண்டம்.(அருவருப்பு) பூச்சாண்டி மாதிரி இருக்கிறீங்கள்.நான் பக்கத்தில படுக்கிறதாயிருந்தால் இரவோட இரவா கத்திரிக்கோல் எடுத்து வெட்டிவிட்டிருவன் என்பாள்."

அடுத்து ஏதோ மெலிதாய் முணுமுணுப்பது மட்டும் கேட்கும்."அதுக்குத்தான் நான் கொடுத்து வைக்கேல்லயே" என்று சொன்னதாய் ஒருநாள் சொல்லியிருந்தாள்.

"ரவி...எங்கட ஊர்ப்பக்கம் ஒரு வேலை இருக்கு.நாளன்றைக்கு நான் போகவேணும்.உந்தத் தாடியை வெட்டிப்போட்டு வெளிக்கிட்டு வாங்கோ என்னோட கட்டாயம்.இல்லாட்டி நான் கதைக்கமாட்டன்..."என்றாள்.

"ஒரு வேளை மச்சாள் ஏமாத்திப்போட்டவோ.அப்பிடியெண்டா எனக்கும் சந்தோஷம்தான்.தாடி ஏன் வளர்க்கிறீங்கள் என்றாள் திடீரென.சரி சரி எது எப்பிடி என்றாலும் முதல்ல தாடியை வெட்டுங்கோ..." என்றாள் உரிமையோடு.

"தமிழ்...உந்த உடுப்பில நல்ல வடிவாயிருக்கிறீங்கள்..." என்றான் ரவி.தமிழின் வயிற்றுக்குள் நெருப்புப் பிசைந்து உருண்டையானது.அவள் சிரித்தபடியே தாடியைப் பார்த்தாள்.

"தமிழ்...ப்ளீஸ் கொஞ்ச நாள் ஆகட்டும் வெட்றன்.இப்ப கிடக்கட்டும்.சத்தியமா வேற ஏதாலும் கேளுங்கோ.கொண்டுவந்து தாறன்.தாடியைப் பற்றிக் கதைக்காதேங்கோ."

அன்று அவள் கிராமம் போய் வந்தோம்.அவள் அம்மாவும் தங்கையும் அழுதது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது.சாப்பாடு குழைச்சு உருட்டி அன்பையும் சேர்த்ததாலோ என்னவோ அந்தச் சாப்பாடும் இன்னும் நினைவின் ஓரத்தில்.அதன் பிறகொருநாள்....4 - 5 பேராச் சேர்ந்துதான் தொடங்கினம் கொஞ்சம் கள்ளுக் குடிச்சால் என்று.அதுக்காக வெறிச்சுக் கூத்தாட இல்லை.ஒரு சின்ன ஆசை அவ்வளவுதான்.அதுவும் யாருக்கும் தெரியாம கந்தன் அண்ணைக்குக் காசு குடுத்து வாங்கினம்.எனக்கு இது இரண்டாம் தரம்.பயமும் இருக்கு.கதை வெளில போனால் தொலைச்சுப்போடுவாங்கள் மற்றப் பெடியள்.போத்தில் திறந்து மணம் வரவே வெறிச்சுது.பிறகு வயித்துக்கை போனபிறகு...பனையடியே படுக்கையானது அன்று.

சரியாய்ப்போச்சு.அடுத்தநாள் முகத்தை ஒருமுழத்திற்கு நீட்டி வைத்திருந்தாள் தமிழ்.யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள்.என்னோடு கதைக்காமலே போய்விட்டாள்.

அடுத்து இரண்டு நாட்களின் பின் தமிழின் முகம் சிரிக்கவில்லை.ஆனால் நீளம் குறைந்திருந்தது.எனக்காகக் காத்திருந்தவள்போல....."ரவி உங்களோட கதைக்கவேணும் கொஞ்சம்.பின்னேரமா கல்லடிக்கு வாங்கோ..." என்றபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள்.அவளைப்போலவே மரங்களும் அசைவற்று நின்றன.ஒருவேளை அவளுக்குப் பயந்து அலுங்காமல் நின்றனவோ !

சந்தோஷமாய் ரசிக்கக்கூடியதாய் எதுவும் சொல்லமாட்டாள்.அது தெரியும் ஆனால் உதை விழாமல் இருந்தால் போதுமென்று நினைத்தபடியே கல்லடிக்குப் போக எனக்கு முன்னமேயே ஒரு பத்தகததை வாசித்தபடி ஆனால் என் காலடிச் சத்தத்திற்குக் காது கொடுத்தபடி உட்கார்ந்திருந்தாள் தமிழ்.

அண்டைக்கு ராத்திரி என்ன நடந்தது....சொல்லுங்கோ.

ஒண்டுமில்லை...யே...என்று நான் இழுக்குமுன்....

ஒண்டுமில்லையோ...தலை ஆட்டினதைப் பார்த்தாலே ஏதோ பெரிசா வெடி இருக்கு என்று மட்டும் விளங்கிக்கொண்டேன்.

"ரவி நல்ல பிள்ளை நல்ல பிள்ளையென்று விட்டுக்கொடுக்காமல் பேசுவீங்கள் நேற்று இரவெல்லோ பாத்திருக்கவேணும்.இனி வாழ்க்கையில அவன் இருக்கிற பக்கம் தலை வச்சுப் படுக்கமாட்டீங்களென்று.... என்னைக் கடுப்பேத்திப் பாக்கிறாங்கள்.எனக்கு பதில் ஏதும் சொல்லவே முடியேல்ல.எனக்கு வெட்கமாயிருக்கு ரவி.முகமெல்லாம் சிவந்து கண்ணீரை விழவிடாமல் கண்ணுக்குள் தேக்கி வைத்திருந்தாள்.இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எல்லாம் போச்சு.போங்கோ.எனகென்று ஒரு உறவு மனமார இருந்தது என்று நினைச்சிருந்தேன்.இனி எல்லாமே போச்சு எனக்கு.குட்பை ரவி...."

என்றபடி வேகமாக அந்த இருட்டுக்குள்ளும் வழி பிசகாமல் நடந்து மறந்துவிட்டாள் தமிழ்.என்னை விட்டு என் உறுப்பில் ஏதோ ஒன்று நான் பார்த்துக்கொண்டிருக்கப் பிய்ந்து போனதாய் ஒரு உணர்வு.எங்களுக்குள் இப்படி எத்தனையோ சண்டை வரும் போகும்.ஆகக்குறைந்தது ஒரு கிழமைக்கு மிஞ்சிக் கதைக்காமல் இருக்கமாட்டாள் தமிழ்.ரவி உங்களோடு கதைக்காவிட்டால் எனக்குக்குள் ஏதோ பாரம்போல என்பாள்.காலைமுதல் இரவுவரை என்ன நடந்தது என்று என்னிடம் குழந்தைபோல ஒப்புவிப்பாள்.சிலசமயம் அதனாலேயே சண்டை வந்துவிடும் எங்களுக்குள்.செய்யக்கூடாதது பேசக்கூடாததெல்லம் சொல்லி என்னிடம் பேச்சும் வாங்குவாள்.ஆனாலும் ஒரு திருப்தி அவளுக்கு அது.

அதைப்போலவே ஒரு கிழமைக்குப்பிறகு என்னைக் கண்டதும் வெடுக்கென்று மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு போனவள் அதே வேகத்தோடு திரும்பி வந்து....

"ரவி ஏன் இப்பிடி மாறிட்டீங்கள்.சொல்லச் சொல்ல தாடி வளர்க்கிறிங்கள்.பெடியங்களோட சேர்ந்து தண்ணியடிக்கிறீங்கள்.எனக்கு உங்களில வெறுப்பாய் வருது.அதேநேரம் உங்களைவிட்டுத் தூரமாய்ப் போக விருப்பமுமில்லை.வேணுமெண்டுதான் செய்றீங்கள்போல.நான் தொலைஞ்சுபோறன் ரவி......"

"அதுசரி...ரவி இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணமாயிருப்பனோ...."என்றாள் ஆவல் கண்களுக்குள் ததும்ப.

எனக்கு இப்போ கோபம் வரவில்லை.என்னைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாள் என்று நினைத்தபடியே "சீ...ச்...சீ இல்லை..." என்றேன்.

பக்கத்தில் நெருக்கமாய் வந்தவள்..."என்ன கண் கலங்குது இப்ப..."என்று என் கண்ணைப் பார்த்தபடியே கேட்டாள்.

"இல்லை....இல்லை என்றபடியே எனக்கொரு வேலை இருக்கு தமிழ்.பிறகு சந்திக்கிறேன்..." என்றபடியே போய்விட்டேன்.

அடுத்தநாள் சமையலின்போது..."ஏன் இப்ப என்னோட நிறையக் கதைக்க மாட்டீங்கள்..." என்றாள்.

"இது என்ன வம்பு நீங்களே சண்டை பிடிக்கிறீங்கள்.பிறகு நீங்களே கதைக்காமல் விடுறீங்கள்.பிறகு நீங்களே வந்து கேள்வியும் கேட்டு வைக்கிறீங்கள்..."என்றேன்

"சரி...வாற திங்கட்கிழமை எனக்கு ஒரு விஷேசம்.கோயிலுக்குப் போவம் வாறீங்களே என்னோட..."என்றாள்

"இல்ல எனக்கொரு அலுவல் இருக்கு.கட்டாயமாப் போகவேணும்.நான் வரச் சந்தர்ப்பம் இல்லவே இல்லை தமிழ்...."என்றேன்.

"பொய் சொல்லாதேங்கோ.என்னைத் தவிர்க்கிறீங்கள்.உங்களை உங்களுக்குள்ளேயே மறைக்காதேங்கோ ரவி.கட்டாயம் பாத்திருப்பன் நீங்கள் வரவேணும் என்றபடியே..." நம்பிக்கையோடு போய்விட்டாள்.

அதன் பின் வந்த செவ்வாய் பின்னேரம்தான் என்னைக் கண்டவள் கண் கலங்க ..."ஏன் வரேல்லை கோயிலுக்கு.என்ர பிறந்தநாள் நேற்று..."என்றாள்.

"நேரமில்லை நான் முதலேயே சொல்லிட்டுத்தானே போனேன்..."என்றேன் மிக மிக மென்மையாக.

உடைந்துவிட்டாள் தமிழ்."நீங்கள் சும்மாதான் சொல்றீங்களென்று நினைச்சேன்.எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன்...."என்றபடி ஏதோவெல்லாம் சொல்லிச் சொல்லி சத்தமில்லாமல் அழுதுகொண்டு என் முன்னால் நின்றாள்.

எனக்கு என்ன செய்ய முடியும்.சொல்வதற்கும் ஏதுமிருக்கவில்லை.கையாலாகாதவனாய் அழுவதை நேரில் பார்க்க முடியாமல் நிலத்தைப் பார்த்துகொண்டு மௌனமாய் இருந்துவிட்டேன்

இதன்பிறகுதான் எம் விலகலின் தூரம் அதிகமானது.

தமிழ் இப்போதெல்லாம் என்னோடு கதைப்பது மிக மிகக் குறைவு இல்லையென்றே சொல்லலாம்.ஆனால் பார்வையில் வருத்தமும் வலியும்.

கண்ணில் உயிரற்ற ஒரு புன்சிரிப்பு.சுகம்தானே ரவி என்கிற ஒரு பார்வை.ஒரு முறை சொல்லியிருந்தாள் தமிழ்.

"ரவி உங்கள் பெயரை எழுதும்போதும் சொல்லும்போதும் ஒரு சுகம் எனக்கு என்பாள்.அதேபோல உங்களோடு கோபப்பட்டு மனம் வலித்த நேரங்களில் உங்கள் பெயரைச் சொல்வது உயிரைப் பிய்ப்பதுபோல ஒரு வேதனை..." என்பாள்.அதுபோலவே என் பெயர் சொல்லி சுகம் கேட்பதைத் தவிர்த்துக்கொண்டாள்.

பிறகொருநாள் தாடி எடுத்துவிட்டிருந்தேன்.கண்கள் விரியப் பார்த்தவள்

"இப்பத்தான் நீங்கள் நல்ல வடிவு...."என்றாள்.உயிரற்ற சிரிப்பில் ஒரு அளவு தெரிந்தது.

"ம்..." என்று மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.

இப்போதெல்லாம் தமிழைக் காணும் நேரம் எனக்குள் குழப்பமோ சலனமோ இல்லை.எம் உறவு உடைந்துவிட்டது மட்டும் நிச்சயமாய் உணர்ந்தேன்.மனம் வலித்தாலும் அழவில்லை.

காரணம்தான் என்ன என்பதைத் தேடிக்கொண்டிருந்தேன்.

தாடி வளர்த்து அவள் சொன்னபோது வெட்டாமல் போனதா...!

தண்ணியடித்ததா....!

கோயிலுக்குப் போகாததா....!

இல்லை...இல்லை வேறு ஏதாவதா.....!

இந்த ஏதோ ஒன்றுதான் பிரிவின் விதையாய் இருந்த்திருக்கிறது.அது பின் ஆழப் புதைந்து முளையாய் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

வருடங்கள் தொலைத்த தருணத்தில் இப்போ நினைத்துக்கொண்டிருக்கிறேன் தமிழை.மனதின் இழைகளில் மெல்லிய அதிர்வு !

தமிழின் மனதில் என்னுடையவன் ரவி என்கிற மந்திரம் உணர்வோடு சுவையோடு ஒன்றிவிட்டிருந்தது.காதலோடு இப்போதும் அதே தமிழ் தமிழாக..... !

பனிக்கால அனுபவம் உடல் சிலிர்க்க குளிர்ச்சிதான்.மூக்கின் நுனி விறைக்க, காலுறைகளுக்குள் உடம்பையே புதைக்கும் ஒரு சுகம்.இதுவரை கிடைக்கவில்லையென்றால் இனி வரும் மார்கழிப் பனிக்காலத்தில் கொஞ்சம் அதிகாலைவேளை அதிகாலை உங்கள் முற்றத்தில் நின்று பாருங்கள்.

பனிவளரும் நாடொன்றில் பனி ரசித்தபடி மனம் வேர்க்கும் தமிழைக் காண்பீர்கள் !

Tuesday, March 20, 2012

சங்கிலியும் சித்தப்பாவும்.

ஐடியா மணிக்கும் அதிராவுக்குமான சங்கிலிச் சண்டை முடியாத சண்டையாய்த் தொடருது.அது நிரூவின் பக்கத்திலயும் போட்டு மணியின் மானத்தை இன்னும் வாங்கியாச்சு.இப்பத்தான் தெரியுது அவர் பல்லும் விளக்காத ஒரு ஆள் என்று.அதுதான் அவரின்ர பதிவின் பக்கம் போற நேரம் ஒரே நாத்தம்.என்னடா என்ர வீட்ல எலி இல்லையே எண்டு யோசிச்சன்.இப்பத்தான் விளங்குது எங்கயிருந்து நாத்தம் வந்த்து எண்டு.நன்றி நிரூவுக்கு.இனி மூக்கைப் பொத்திக்கொண்டு போக நினைச்சிருக்கிறன் அவரின்ர பக்கத்துக்கு.வேற ஏதாவது வழி இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கோ.இதில இன்னொன்றும் தெரியுமோ பல்லு விளக்காம இருக்கிறதுக்கு பெரிசா ஒரு காதல் கதையையே சொல்லிட்டார் மணி.நான் என்ன சொல்ல வந்தேனென்றால்.....இவர்களது சங்கிலிக் கதை என் சித்தப்பா ஒருவரை அடிக்கடி ஞாபகப்படுத்துது.அவர் இறந்து 2 வருடமாகிவிட்டது.

எனக்கொரு முருகானந்தச் சித்தப்பா முருகானந்தச் சித்தப்பா எண்டு ஒருத்தர் இருந்தார்.தம்பி எண்டும் ஒரு பெயரும் இருந்தது இவருக்கு.நல்ல தவில் வித்வான்.நல்லாத்தண்ணியடிப்பார்.தண்ணியடிச்சால்தான் அன்பு பெருகி ஓடும்.சேவகங்களுக்குப் போனால் அங்கு சாப்பாடு பார்சல் பண்ணிக் கொடுத்து விடுவார்கள்.நடுச்சாமத்தில் லாந்தர் விளக்குப் பிடிச்சபடி வந்து எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி நல்ல நித்திரையாய்க் கிடக்கும் எங்களையும் எழுப்பி வச்சுக்கொண்டு சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ தூங்கி விழும் எங்களுக்குச் சாப்ப்பாடு தீத்தி விடுவார்.அந்த லாந்தரை கிணத்துக்கட்டில் வைத்துக்கொண்டு இரவு இரவாக உடுப்புத் தோய்ச்சுக் காயவிடுவார்.இப்பிடி நிறைய நகைச்சுவையான நல்ல ஒரு மனிதர்.கெட்ட பழக்கம் சாரயம் குடிக்கிறதுதான்.

அநேகமாக யோகன் பாரிஸ் அவர்களுக்குத் தெரிந்திருக்கும் இவரை.நல்லூரடி முத்திரைச் சந்தையடி நல்லரசு என்பவரின் மகன் இவர்.ஆரம்பகாலத்தில் மூளாய் பாலகிருஷ்ணன் அவர்களிடமும்,பிறகு கோண்டாவில் கானமூர்த்தி அவர்களிடமும் தவில் வாசித்தவர்.இந்த இடையில் அளவெட்டி பத்மநாதன் அவர்களிடம் தவில் வாசித்த காலம்.இங்குதான் அந்தச் சங்கிலிக் கதை......

இவர் குழப்படி என்று நகைகள்,தவில் எல்லாமே பத்மநாதன் அவர்கள் வீட்டில்தான் இருக்கும்.கச்சேரிக்குப் போகும் நேரம் மட்டுமே கைக்குக் கிடைக்கும்.அவரது சம்பளம்கூட சித்தியிடம் நேரடியாகப் பத்மநாதன் அவர்களே வீட்டுக்கு வந்து கொடுத்துப் போவார்கள்.இப்படி இருந்த காலத்தில்தான் சித்தப்பாவுக்கு அபாரமாக மூளை வேலை செய்திருக்கு.இடைக்கிடை சித்தி காசு கொடுப்பா.அதில் மட்டுமே தண்ணியடிச்சுகொண்டு சாமிமாதிரி...நல்ல பிள்ளையாம்.

ஒரு நாள் சித்தி கவனிச்சிட்டு அம்மம்மாவோடு கதைச்சிருக்கிறா."உந்தச் சங்கிலி முந்தி நீளமாவெல்லோ இருந்தது......"எண்டு.கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் விட்டு வச்சிருக்கினம் மனுசனை நம்பி.ஆனால் வர வர உண்மையாவே ஒரு வருஷத்திற்குள் சங்கிலி சின்னனாகிப் போய்க்கொண்டிருந்திருக்கு.பார்த்தால் அதிலுள்ள ஒற்றை ஒற்றை மணியாகக் கழற்றி வித்துக் குடிச்சிருக்கிறார்.ஆனாக் கேட்டால் "இல்ல அது அப்பிடியேதான் முதலும் இருந்தது எண்டு....." எண்டு சொல்லிட்டு அதைப் பற்றி எதுவுமே தெரியாயதுமாதிரிப் போய்விடுவாராம்.

மணி,அதிரா சங்கிலிச் சண்டையில் என் சித்தப்பாவை ஞாபகப் படுத்தினேன்.வெற்றிலை அதிகம் போடுவதாலேயே புற்றுநோய் வந்து எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்.அவரை நினைப்பதில் சங்கடமும் சந்தோஷமும்.நன்றி மணிக்கும் அதிராவுக்கும் !


ஓஷோ ஜோக்.

ஹெர்னி மிக விரைவாக காரை ஓட்டிக் கொண்டுசென்றான்.பின்னால் தொடர்ந்த ட்ராபிக் போலீஸ் ஒருவர் அவனை மறித்து...

'சார், இப்படியா வேகமா ஓட்டுவீங்க உங்க மனைவி இரண்டு மைல்களுக்கு முன்னால காரில் இருந்து விழுந்துட்டாங்க' என்றார்.

'ஒ அப்படியா, நான் கூட எங்கே என் காதுதான் செவிடாயிருச்சோன்னு பயந்து போயிட்டேன்' என்றான்.

Friday, March 16, 2012

எமக்கு இப்போ வேண்டிய இரண்டும்.

தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுக்கிறேன். வெளவாலாய்த் தலைகீழாய்க்கூடப் படுத்துப் பார்க்கிறேன்.மனமும் தொங்குகிறதே தவிர கண்ணுக்குள் எந்த அசைவும் இல்ல.இந்தக் குளிர் தேசத்திலும் என் தேகம் எரிகிறது.இப்போ இருக்கிற மனநிலையில இணையப் பக்கங்களில் வாசிச்சு மனசில பதிஞ்ச கதைகள் இரண்டு சொல்லலாம்போல இருக்கு.

ஒரு ஆசிரியர் தனது மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார்.ஒரு வெள்ளைத் தாளைக் காண்பித்தார்.அந்தத் தாளின் நடுவில் ஒரு சிறிய கரும்புள்ளி வைக்கப் பட்டிருந்தது.தாளை காண்பித்து அதில் என்ன தெரிகிறது என மாணவர்களைக் கேட்டார்.அனைவ‌ருமே ஒரு கரும் புள்ளி தெரிவதாகச் சொன்னார்கள்.ஆசிரியர் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சொன்னார்....

"எனது அன்பு மாணவர்களே .... இந்த தாளில் வெண்மையான மிகப் பெரிய பகுதி உள்ளது.ஆனால் நாம் அதை விட்டு விட்டு கரும்புள்ளியில் மட்டுமே கவனம் கொள்கிறோம்.இது தான் மனதின் இயல்பு.வாழ்க்கையில் எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருந்தாலும் சின்ன சின்ன எதிர் மறையான நெருடல்களிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம்.அதையே நினைத்து மனம் வருந்தி நேர விரயம் செய்கிறோம்."

அதற்காக ஒரு பிரச்சனை வரும் போது அதனை கண்டு கொள்ளாமல் ஜாலியாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை.அந்த பிரச்சனையைச் சந்திக்க வேண்டும்.அதனை வெற்றிகரமாக தீர்க்க வேண்டும்.அதனை வெற்றி கொள்ளும் போது ஒரு சந்தோஷம் ஒரு திருப்தி ஏற்படுகிறதல்லவா அதில் நிலை கொள்ள வேண்டும்.ஆனால் நாம் எப்போதும் எதிர் மறையான எண்ணங்களையே நினைத்து வருந்தி வாழ்ந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறி விடுகிறது.மேலும் மேலும் கவலைகளை உற்பத்தி செய்கிறோம்.

நாம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களைச் சந்திக்காமலில்லை.சந்திக்கிறோம்.ஆனால் எவ்வளவு நேரம் அந்த சந்தோஷத்தில் நிலை கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது.

சரி இதற்கு மாறாக எப்போதும் மகிழ்ச்சியாகக் குதூகலமாக வாழ முடியுமா?கண்டிப்பாக முடியும்.ஏனென்றால் சந்தோஷமானாலும்,துக்கமானாலும் அந்த உணர்வு நமது உள்ளே இருந்து தான் வெளிப்படுகிறது.அதாவது அந்த உணர்வு ஏற்கனவே அங்கு உள்ளது.புறச் சூழ்நிலைகள் வெறும் கருவிகளே.

நாம் எல்லோருமே எப்போதும் நிறைவான சந்தோஷத்துடன்தான் வாழ விரும்புகிறோம்.ஆனால் ஏதோ ஒன்று மாறி ஒன்று மனதிற்குள் புகுந்துகொள்ள எப்போதும் சோகம் தேய்ந்த முகத்துடனும் கவலையுடனுமே நமது வாழ்நாட்கள் ஓடுகின்றன.நம்ம ஐடியா மணி,அதிரா போன்ற ஆட்களைக்கூட அது விட்டு வைப்பதில்லை

நாம் நாளாந்தம் எம்மைக் கடக்கும் எம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.அனைவரும் ஏதோ எதையோ ஒன்றை இழந்தது போல் வெறித்த பார்வையோடு ஏனோதானோவென்று பொய்யாகப் புன்னைகைத்தபடி வாழ்வோடு பறந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

பல நாட்கள்,பல வருடங்கள்,பல பிறவிகளின் பழக்கம் இந்தக் கவலை!என்ன செய்வது கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கலையைத்தான் முழுமையாகக் கற்றிருக்கிறோமோ என்னவோ !

எனவே...அவ்வளவு சீக்கிரம் அகலுமா அது?மேலும் நமது உலகமும் சமூகமும் சந்தோஷத்திற்கு எதிராகவே செயல் படுகிறது.கலகலப்பாகச் சிரித்து விளையாடி மகிழும் குழந்தைகளை மாணவர்களைக் கண்டிக்கிறோம்.புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவன் புத்திசாலியெனப் போற்றப் படுகிறான்.அவன் தன் குழந்தைச் சந்தோஷங்களை தன்னுள்ளேயே அடக்கிப் பெரியவர்களின் திணிப்பில் படிக்கிறான் என்பதை யார் யோசிக்கிறோம்.

ஆனால் உண்மை என்னவெனில் இந்தச் சந்தோஷம்,ஆனந்தம்,குதூகலம்,மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் அனைத்தும் நமது உள்ளத்தில் ஏற்கனவே இருக்கிறது.ஆனால் நாம் தான் எப்போதும் துக்கம் என்னும் உணர்வையே தேர்ந்தெடுத்து விடாப் பிடியாக பின் பற்றி வருகிறோம்.அதுதான் எம்மை வெகு சீக்கிரமாகத் தாக்கும் வைரஸ் என்பதாலா....!

1) "ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?"
"சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"

2) "பேய் 1 : "எதுக்கு இப்படி அலறியடிச்சிட்டு ஓடி ஒளியறே?"
"பேய் 2 : "என் பொண்டாட்டி திடீர்னு செத்து தொலைச்சிட்டா..."


இன்னுமொன்று.....
ஒரு காட்டில் ஒரு ஞானி வசித்து வந்தார்.அவரைக் காணப் பலர் வந்தார்கள்.வந்தவர்களோடு நல்லபடி உரையாடி உபசரித்து அனுப்பி வந்தார் ஞானி.ஒரு நாள் ஒரு சீடன் அவரைப் பார்ப்பதற்காக வந்தான்.அன்று முழுவதும் அவரோடு இருந்தான்.அவருடன் பேசிக் கொண்டிருந்தபோதே இருள் சூழத் தொடங்கிவிட்டது.

சீடன் புறப்பட விரும்பினான்.தடுத்த ஞானி “இரவு இங்கேயே தங்கி நாளை காலையில் புறப்படு” என்றார்.“நான் இன்றிரவே போய்ச் சேர்ந்தாக வேண்டும்” என்றான் சீடன்.நல்லது போய் வா” என்றார் ஞானி.வாசலுக்கு வந்த சீடன் இருளில் போகத தயங்கி நின்றான்.அங்கேயே தங்கவும் மனமின்றி புறப்படவும் துணிவு இன்றிச் சீடன் தடுமாறுவதைக் கண்டார் ஞானி.உடனே அவர் ஒரு விளக்கை அவன் கையில் கொடுத்து “இப்போது புறப்படு” என்றார்.

அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கிளம்பினான் சீடன்.அவன் சிறிது தூரம் நடந்ததும் “நில்” என்றார் ஞானி.சீடன் அப்படியே நின்றான்.வேகமாக வந்த ஞானி வாயால் ஊதி விளக்கை அணைத்தார்.பின்னர் மீண்டும் “புறப்படு” என்றார்.

சீடன் திகைத்தான்.ஞானி சொன்னார்.“இரவல் வெளிச்சம் நெடுந்தூரம் துணைக்கு வராது.உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது.உள்ளே துணிவிருந்தால் வெளியே விளக்குத் தேவை இல்லை.உள்ளே பயம் போகாத வரை உன்னால் முன்னேற முடியாது போ… இதே இருள் இதே பாதை இவை எப்போதும் இங்கேயதான் இருக்கும்.உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்” என்று உபதேச மொழிகளை மொழிந்தார்.

தெளிவடைந்த சீடன் இப்போது உறுதியுடன் நடக்க ஆரம்பித்தான்.எல்லோருக்கும் அகமே விளக்கு.கடைசி வரை அதுதான் வழிகாட்டும்.இரவல் அறிவோ ஒளியோ எப்போதும் துணைக்கு வராது.விதை முளைப்பதற்கான ஆற்றல் விதைக்குள்ளேயே இருப்பதைப் போல் வாழ்க்கையின் வெற்றியும் எங்களுக்குள்ளேயே இருக்கிறது.நம்பிக்கையோடு முன்னேறுவோம்.எம் முன்னால் நம்பிக்கைச் சூரியனின் ஒளி வழிகாட்டலின் துணையும் எப்போதும்...!

துணிவுடன் இருங்கள் - வளமான வாழ்க்கை உங்களுடன்.துணிவுடன் இருங்கள் என்றால் மற்றவர்களை அடக்கி ஆளுங்கள் என்பது பொருள் அல்ல.உங்களை அடக்கி ஆளுங்கள் என்பதுதான் உண்மையான பொருள்.உங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து முன்னேறுங்கள்.எதிர்காலத்தில் வளமான வாழ்க்கை.வேண்டுமானால் உங்களது மனதை அடக்கி நல்லவற்றில் மட்டுமே முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்.

-ஜேம்ஸ் ஆலன்.

Monday, March 05, 2012

ஐடியா மணிக்குப் பொன்னாடை போர்த்துறோம்ல !

பாரிசில் வாழும் மாத்தியோசி புளொக்கின் தலைவர் முன்னாடி ஓட்டை வடை நாரயணன்,நிரூபனின் அல்லக்கை,ரஜீவன் என்கிற பெயரில் பின்னாடி இப்போ ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW (பாருங்கோ மக்களே எங்கயெல்லாம் படிச்சு எத்தனை டிப்ளோமா எண்டு) என்கிற பெயரில் கறுப்புக் கண்ணாடியோடு லாச்சப்பலில் ஒளிந்துகொண்டிருக்கும் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க யோசிச்சிருக்கிறோம்.ஏனென்றால் மிகவும் பயனுள்ள பெண்களுக்கான வீட்டுக்குரிப்புகளை அல்லி வழங்கிருயிருக்கிறார்.

அந்தப் பதிவைப் படிச்ச சந்தோஷத்தில உடம்பு முழுக்க மூளையென்று நினைச்சு தெரியாமல் சொல்லிட்டேன் பொன்னாடை போத்துறன் எண்டு.அதுக்குப்பிறகுதான் தெரியுது அதிராவின் பூனைக்குட்டியாரின்ர 5 பவுண் தங்கச்சங்கிலிக்கு அவர்மேல வழக்கு நடக்குது என்று.ஆனால் அவர்தான் எடுத்தாரென்று ஓரளவு பிடிபட்டும் கிட்டக் கிட்ட வந்தும்.... பிறகு பிடிபடாமல் போறார்.இதில அப்பா யோகா,அம்பலத்தார் ஐயா,காட்டான் மாமா,நிரூ,கந்து,தனிமரம் நேசன் எல்லாரும் சம்பந்தப்பட்டிருபார்கள் என்றே சந்தேகிக்கப்படுகிறார்கள்.அதால அவர்தான் என்று நிரூபிக்க முடியாமல் இணையப் பதிவர் நீதிமன்றம் தடுமாறுகிறது.
இதுதான் அந்தச் சங்கிலியாம்.ஆனா இது 5 பவுணைவிடக் கூடவாயிருக்குமே !

இவர் சங்கிலி எடுத்தவர் என்று நிரூபிச்சிட்டால் நிரூ முள்ளுக்காவடி எடுக்கிறதாய் அதிரா சொல்ல,முள்ளுக் காவடி எடுக்கும் சம நேரத்தில அக்காச்சி அதிராவும் அக்காச்சி ஹேமாவும் அலகு குத்தி பாற் செம்பு எடுப்பீனம் என்று வள்ளி தெய்வானை மேல சத்தியம் செய்து சொல்றேன் என்று நிரூவும் (என்னைக் கேட்காமலேயே ) நேர்திக்கடனை முருகனுக்கு அள்ளிக் குடுக்கிறார்கள்.இப்பிடியெல்லாம் நேர்த்திக்கடன் கடனாக் கிடக்கு.எப்பிடியும் முருகனுக்கு ஆப்புத்தான்.ஏமாந்துதான் போகப்போறார்.அதோட வள்ளிக்கும் தெய்வானைக்கும் சங்கிலி,சேலை என்று பொய்யான லஞ்சம் எல்லாம் ஒருபக்கமும் கிடக்கு.
கருப்புக் கண்ணாடி(கறுப்பு கண்ணாடி சமாதான காலத்தில புதூர் நாகதம்பிரான் கோயில் திருவிழாவில வாங்கின எட்டு வருசம் பழைய கண்ணாடி என்றும்...நப்பி! நீயி...உந்த இடப் பெயர்வுக்கையும் கண்ணாடியை கைவிட மனமில்லாம பொக்கற்றுக்குள் கொண்டு வந்தது எனக்கெல்லோ தெரியும்!என்றும் நிரூ சொல்கிறார்.) இரகசியம் என்னடாவெண்டா காதலிச்சுக் காதலியின் கரைச்சல் தாங்காம ஓடி ஒளிஞ்சு பரிஸ் - லாச்சப்பல் பக்கம் ஒளிஞ்சு இருக்கிறாராம்.இது நான் கேள்விப்பட்டது.ஐடியா http://www.tamilaathi.com/2012/03/blog-post_03.html மணியத்தாரின் இந்தப் பதிவும் சொல்லுது பாருங்கோ.

இனிமே யாருமே காதலிக்காதேங்கோ.காதலிச்சா இதையெல்லாம் மெயிண்டேன் பண்ணவேணும்.இல்லாட்டி காதலி உங்களை மதிக்கமாட்டாளென்று.ஆனா இவரை காதல் செக்சனில இண்டர்போல் போலீஸ் தேடுதாம்.அதுக்குத்தான் கருப்புக்கண்ணாடி.இதெல்லாம் பழைய சிவாஜி,எம்.ஜி.ஆர் படங்களில ஆள் அடையாளம் தெரியாம இருக்க கன்னத்தில ஒரு மச்சம் ஒட்டிவிட்டா ஆள் அடையாளம் மாறும் என்கிறமாதிரித்தான் இந்தக் கருப்புக் கண்ணாடி.

1) ஒட்டுசுட்டாணில ஒண்டிப்புலி சின்ராசு மகள் மேல கை வைச்சு வாங்கி கட்டினது...

2) வட்டக்கச்சி விதானையாரின் பொட்டையை ஏமாத்தினது...

3) கனககுஜலாம்பாள் அப்டீங்கற பொண்ணை லவ் பண்ணும் போது அந்தப் பொண்ணை நிரூ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆயிரம் தேங்காய் உடைக்குறதாகூட வேண்டிக்கிட்டது....

4) ஒருவாட்டி குஞ்சுப் பரந்தனுக்கு போயி தேங்காய் கட்டிக் கொண்டு வாடா என்று ரெண்டு சாக்கு கொடுத்து இவனோட அம்மா அனுப்பி வைச்சா.இந்த நரி...தொதல் கிண்ட தேங்காய் வாங்கி வர கொடுத்தனுப்பிய காசில திருவருட் பிள்ளையார் படமாடத்தில போயி கோணாவில் கவிதாவின் போட்டோவை பிரேம் பண்ணிக் கொண்டு வந்ததோட தேங்காய் வாங்க கொடுத்து அனுப்பிய காசையும் செலவளிச்சுப் போட்டு வந்திட்டுது! இந்த லட்சணத்தில நேர்த்தி வைச்சு இவன் தேங்காய் உடைக்கிறதாவது!

இப்பிடி இப்பிடியே இவரது பிரதாபங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.பிரான்ஸ் பிகருகள் பற்றி துஷி சொல்றதாச் சொல்லிட்டு நட்புப் பாலத்தை இறுக்கிப் பிடிச்சு வைச்சிருக்கிறதுக்காக்கப் பிறகு சொல்லாம விட்டிட்டார் !

இவற்றோடு....இன்னும் இந்தப் பன்னாடையை பர்சனலா அறிந்தவன் என்ற ரீதியில் சொல்றேன்....என்று நிரூ இவரைப் பற்றிச் சொல்வதாவது.....

இவன் ஒரு வசதியான திருடன்! இவன் லோக்கல் திருடன் இல்லை!
கோப்பை கழுவுறான் என்று நீதிபதிகிட்டயே பொய் சொல்லிட்டானே இந்த நாதாரி !

மக்களே இவன் பிரான்ஸில ஒரு மொழி பெயர்ப்பாளரா ஒரு கூலான அறைக்குள் இருந்து ஒர்க் பண்றான்! இவனுக்கு இங்கிபீசு பிரெஞ்சு அத்துப்படி! அதோட இந்த நாயி ஒரு பகுதி நேர ஆங்கில நா(வா)த்தி & எக்கவுண்டன்!

பிரான்ஸில வசதியா இருந்திட்டு,தன் திருட்டை நியாயப்படுத்தக் கோப்பை கழுவுறதா பொய் சொல்றான்!

இதெல்லாம் இவரது காதல் சாகசங்களும் இன்னும் பிறவும்...(இதெல்லாம் சொன்னவர் நாற்றுப் பதிவளர் நிரூ.ஆட்டோ அனுப்பிறதென்றால் அவர் பக்கம் அனுப்பவும்.)

இவ்வளவு பிராதுகள் இவர் பக்கம் இருந்தாலும்....எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளைய அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளாரென்றும் அறியக் கிடைத்துள்ளது.

எனவே இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் இணைய உறுப்பினருமான முன்னாடி ஓட்டைவடை நாரயணன் பின்னாடி ஐடியா மணி அவர்களுக்குச் சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே அவருக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்.இந்த இடத்தில் மன்னிப்போடு ஒன்றும் சொல்லிக்கொள்கிறோம்.அவர் இலண்டனிலதான் வச்சுத்தான் பொன்னாடை போர்த்தச் சொல்லிக் கேட்டவர்.(இதிலயும் நிரூ சொன்னதாவது பன்னாடைக்குப் பொன்னாடையோ என்று.)ஆனா அதிரா தேம்ஸ் நதிக்கரையில டெண்ட் அடிச்சுப் பூனையாரோடு காத்திருப்பதாகப் பிந்திய செய்திகள் கிடைச்சிருக்கு.அது அவ தீக்குளிக்கிறதுக்கோ (தீ அணைக்கிற லாரிக்கும் அறிவிச்சிருக்கிறாவம்)இல்லாட்டி மணியத்தாரைப் பிடிச்சுத் தண்ணிக்குள்ள தள்ளவோ எண்டு இன்னும் சரியாக அறியப்படவில்லை.

எது எப்பிடியானாலும் இவரது எல்லாச் சேவைகளையும் பாராட்டி இன்று அண்ணன் சிந்தனை பொறித்த பொன்னாடையை தமிழீழ தமிழகத்து உணர்வாளர்கள் நாங்கள் போர்த்திக் கௌரவிக்கிறோம்.(மணியத்தாருக்கே இப்ப இனித்தான் அறிவிக்கப்போறோம்.)அத்தனை இணையத் தமிழ் உறவுகளின் வாழ்த்தை அவருக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

நிரூ,ஹேமாவின் ஒருங்கிசைவில் பொ(ப)ன்னாடையோடு காத்திருக்கும் உலக இணையத் தமிழர் ஒருங்கிணைப்புச் சங்கம் !

Sunday, February 19, 2012

இனிப் பயமில்லாம தண்ணியடிக்கலாம் !

நல்லாத் தண்ணியடிக்கிற ஆட்களுக்குத்தான் இந்தப் பதிவு....பாருங்கோ எப்பிடியெல்லாம் யோசிக்கினம்.ஆனாலும் சூப்பரான யோசனை.நல்லாத் தண்ணியடிச்சிட்டு முதுகு குப்பற விழுந்து கிடந்தாலே போதும்.யாரென்றாலும் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டிருவாங்கள்.ஆனால் மறக்காம டீசேர்ட் வாங்கின உடன உங்கட விலாசததை எழுதி வச்சிடுங்கோ மக்களே !

ஆடை உற்பத்தி செய்யும் கம்பனி ஒன்று வித்தியாசமாகச் சிந்தித்ததன் விளைவே இதுவாகும்...ஒருதரம் "ஓ" போட்டு நன்றி சொல்லி வையுங்கோ தண்ணி அடிக்கும் மகான்களே (மகானிகளே) !

இது சத்தியமான உண்மை.அளவுக்கு அதிகமாக தண்ணி அடிச்சிட்டு தெருவழியக் கிடக்கிற அவர்களின் குடும்ப நலன் கருதி வீடு போய்ச் சேரும் நோக்கில் சிறப்பாகத் தயாரிச்ச டீசேர்ட் இதுவாம்...!

அந்த ஆடையில் குறித்த நபரின் பெயர் மற்றும் அவரின் வசிப்பிட முகவரி என்பன குறிப்பிடப்பட்டிருக்கும்...!

அதில் ஒரு குறிப்பு உள்ளது.. "நான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தால் கீழ்க்கண்ட விலாசத்தில் என்னைச் சேர்ப்பிக்கவும்"

ஆடை தயாரிப்பு கம்பனிகள் என்ன விவரமா இருக்கிறாங்கள் என்று பாருங்களேன்.எல்லாம் வியாபார நோக்கம் என்றாலும் நல்லதும் நடக்குதுங்கோ...!!!!

இனிக் கள்ளுக்கடையிலேயே டீசேர்ட்டும் கிடைக்குமாம்...!

Friday, February 10, 2012

ர்ர்ர்ர்ர்ர்....ரெவரி...ராஜ நேசவிருது !

ரெவரி என் அன்புச் சகோதரன் புத்தாண்டுத் தீர்மானங்கள்ன்னு ஒரு தொடர் பதிவு எழுதக் கேட்டிருந்தார்.எனக்கு புத்தாண்டுக்குன்னு தீர்மானம் ஏதுமில்லை.எப்பவும் சந்தர்ப்பம் வரப்போ எல்லாம் நல்லது செய்யணும்.ஆனா இங்க பொதுவான சந்தோஷங்களை கொஞ்சம் கிண்டலா எழுதிப் பார்க்கலாமேன்னு தோணிச்சு.பொருத்தமா இருக்கோ இல்லையோ தெரில.ரெவரிக்கு மதிப்புக் கொடுக்கணும் அவ்ளோதான் இந்தப் பதிவு !

1) உடம்பைப் பார்த்துக்கோங்க..சுவர் இருந்தாத்தான் சித்திரம்.

சித்திரம் வரையிறதாச் சொல்லிட்டு கேலிச்சித்திரம் கீறிட்டா என்ன பண்றதாம் !

2) உடனடிச் சந்தோஷத்துக்காக ஆசைப்படாம அதன் பின் விளைவுகளை யோசிச்சு மனசைக் கட்டுப்படுத்திக்கணும் !

ஒரு பியர் போத்தல் கண்முன்னால இருக்கு.குடிச்சாத்தான் சந்தோஷம்ன்னு மனசு சொல்லிட்டே இருக்கு.வீட்ல போய் உலக்கையால அடி வாங்கிறதப் பத்தி அந்த நேரம் நினைக்க வருமாக்கும் !


3)உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாருக்கும் நம்பிக்கையா விசுவாசமாய் இருங்கள் !

சரி...உண்மைதான்.நாங்க விசுவாசமா இருக்கிறோம்.ஆனா கண்ணு முழிச்சிட்டு இருக்கிறப்பவே இளிச்சவாய்ன்னு நெத்தியில முத்திரை குத்துறாங்கப்பா.அப்புறம் விசுவாசம்...!


4) உங்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள் !

இது ரொம்பவே சந்தோஷம்.ஆனா இவங்ககூடவும் ரொம்ப கவனமா இருக்கணும்பா.இடக்குமுடக்கா கேள்வியெல்லாம் கேக்குறாங்க.அவங்க முன்னால நாங்கதான் பொடிப்பசங்க!


5) பெற்றோரை மதியுங்கள்.அவர்கள் தேவைகளைக் கவனியுங்கள் !

இந்த விஷயத்தில கண்ணும் கருத்துமா இருக்கணும்.நம்ம பிள்ளைங்க பாத்திட்டே இருக்காங்க.தாத்தாக்குக் குடுத்த சாப்பாட்டுத் தட்டைக்கூட தாத்தா ஞாபகம்ன்னு எடுத்து வச்சிட்டு அப்புறமா பெத்தவங்களுக்கே தராங்களாம் !


6)அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பேன் என்று உறுதி சொல்லிக்கொள்ளுங்கள் !

எந்த விஷயத்தில முன்னுதாரணம்ன்னும் சொல்லியிருக்கலாம் !


7) உண்மை கசப்பாய்த்தான் இருக்கும்.பரவாயில்லை.ஏத்துக்கணும் !

அப்பிடியே அரிச்சந்திரன்(சந்திரி)ன்னு பட்டம் தந்திடுவாங்களாக்கும் !


8) என்ன லாபம் வந்தாலும் சரி.சட்டவிரோதமா எதையும் செய்யக்கூடாது !

சட்டவிரோதம்ன்னு எதைச் சொல்றாங்க.அப்பிடின்னு ஒண்ணு இருக்கா.நம்ம பிறந்த நாட்டில எப்பவும் எல்லாரும் எல்லாமே பண்ணலாம்.பண்றாங்க !


9) சமூகத்தில ஏத்த இறக்கம் இல்லாம எல்லாரும் சமமா இருக்க என்னால் என்ன செய்ய முடியும்ன்னு யோசிக்கணும் !

இது பெரிய விஷயமா.கலப்புத் திருமணம் செய்திட்டாப் போச்சு.இல்லன்னா கள்ளுக்கடையில எல்லாரும் சமமாயிடலாம்ன்னு எங்க தாத்தா சொல்லுவார் !


10) ஒருத்தர் நல்லது செய்யப்போக எதையாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுக்கக்கூடாது !

அப்பா...இது பெரிய விஷயம்.நல்லது செய்றவங்களைவிடக் கூட இருக்கிறவங்கதான் தூங்காம யோசிச்சிட்டு இருப்பாங்க.எப்பிடிடா கவுத்துப்போட்டு ஏறி நிக்கலாம்ன்னு.காதைச் சுத்தி மப்ளர் போட்டுக்கோங்க.யார் என்ன சொன்னாலும் ஆமா போடுங்க.உங்களுக்கு என்ன சரின்னு இருக்கோ அதுவழி போங்கப்பா !


11) நம்ம சுற்றுச் சூழலை பாதுகாப்போட வச்சிருக்கணும் !

இவ்ளோ நாட்டுப் பற்று இருந்தா நம்ம வீட்டு அடுப்பில பூனைதான் படுத்திருக்கும்."எரியாத அடுப்பிங்கே பசிக்கிங்கே உணவில்லைன்னு" அதுகூட ஓடிப்போய்டும் !


12) களவெடுக்கக்கூடாது !

ஆனா அம்மா அடுப்படி சீரக டப்பாவுக்குள்ள வச்சிருக்கிற சில்லரை எடுக்கலாமாம் !


13) சொன்ன சொல் மாறக்கூடாது !

யாரும் மாத்தமாட்டாங்கப்பா."அ" வை "ஆ" வன்னான்னு யாராச்சும் சொல்லுவாங்களா !


14) சும்மா இருக்கிறது சுகம்ன்னு யாராச்சும் சொன்னா கேட்டுக்கக்கூடாது !

வடிவேலு சும்மா இருக்கிறதே கஸ்டம்ன்னு சொல்லியிருக்கார்.எல்லாரும் கேட்டிருப்பீங்க !


15)கல்விக்கு எல்லையே இல்லை.எப்பவும் படிச்சுக்கிட்டே மாணவனாய் வாழணும் !

கடைசி வரைக்கும் மாணவனா இருந்தா நாங்க ஆசிரியராகிற இலட்சியம்...!


16) அடுத்த மதத்தை மதிக்கப் பழகிக்கணும் !

எங்க வீட்ல எல்லாச் சாமியும் ஆசாமியும் இருக்கு.நம்புங்க !


17)மத்தவங்க எங்களுக்கு என்னல்லாம் செய்யக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அதை நாங்க மத்தவங்களுக்க்குச் செய்யக்கூடாது !

நினைக்கலாமே தவிர செய்யாமல்லாம் இருக்கமுடியாது.இது ரொம்ப ரொம்பக் கஸ்டம் !


18) அதேபோலவே அவங்க எப்பிடியெல்லாம் மதிக்கணும்ன்னு நினைக்கிறோமோ அதேபோலவே நாங்களும் மத்தவங்களை (உணர்வுக்கும்) மதிக்கணும் !

பொய்யாய்ச் சிரிச்சு பசப்பிப் பேசி அதெல்லாம் மதிப்புத் தரோம்ன்னு கலக்கிடலாம் !


19) உலகின் வளங்களை அள்ளியெடுத்துக்கொண்டு வாழ்வோடு முன்னேறுங்கள் !

அதுசரி...இருந்தாத்தானே அள்ள.எந்த இயற்கையை விஞ்ஞானம்ங்கிற பேரில விட்டு வச்சிருக்காங்க.மரங்கள் அழிப்பு.வானத்தில பூமியில....ஏன் கடலுக்கு நடுவிலகூட ஓட்டை.முன்னேறி மூச்சடைச்சு முக்கால் வயசிலயே போய்ச்சேர்ந்திடவேண்டியதுதான் !


20) யாரையும் கொல்லாதீங்க.வார்த்தைகளால்கூட !

வார்த்தைகளால் அடிச்சவங்க மறந்திடுவாங்க.அடிவாங்கினவங்களுக்குத்தான் காயம் வலிச்சிட்டே இருக்கும்.அப்புறம் அது வடுவா சாகிற வரைக்கும் மறையாது.இதைவிடக் கொல்றது நல்லதுன்னே நான் சொல்றேன் !

என் மூளையைக் கசக்கிப் பிழிஞ்சு வயிறு குலுங்கச் சிரிக்க இல்லாட்டியும் கொஞ்சம் புன்சிரிப்போடயாவது வாசிக்க வச்சிருக்கேனா.பதிவுக்கேத்தமாதிரி பாத்துக் கீத்துப் போடுங்கோ !

இதோடு அன்பான விருது ஒன்றும் ஆன்மீகத் தோழி இராஜராஜேஸ்வரி jaghamani.blogspot.com தந்திருக்கிறார்.குழந்தைநிலாவுக்குத்தான் அந்த விருது.ஆனால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.இப்போ விருதுகள் காலம்.இடைவிட்டு இப்போ விருதுகள் உலாவருகின்றன்.அதுவும் நல்லதுதான் புது இணைய எழுத்தாளர்களுக்கு.தங்கள் அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் எழுதவைக்கும் ஒரு ஊட்டச்சத்துதான் இந்த விருதுகள் !

எனக்குப் பிடித்த விஷயங்கள் 7 சொல்லி இந்த விருதைப் பகிரவேணுமாம் !
எனக்கு என்ன பிடிக்கும்......யோசிக்கிறேன் !

தனிமை பிடிக்கும் !
உலக அதிசயங்கள் கலாசாரங்கள்,இயற்கை மிருகங்களின் வாழ்வியல் பார்க்கப் பிடிக்கும் !
இசை இசை இசை கேட்டுக்கொண்டே........யிருக்கப் பிடிக்கும் !


பகிர்ந்துகொடுக்க மூவர் மட்டுமே !

தனிமரம் http://www.thanimaram.org/
தனசேகரன் http://sekar-thamil.blogspot.com/
துரைடானியல் http://duraidaniel.blogspot.com/

அன்போடு ஏற்றுக்கொண்டு இன்னும் நிறைவாக எழுதக் கேட்டு வாழ்த்திக்கொள்கிறேன் !

உண்மையில் இந்தப் பதிவைப் போட்டுவிட்டு தனிமரம் நேசனிடம் சொல்லலாம் என்று போனேன்.அங்கு எனக்கு விருது காத்திருக்கிறது.எங்கள் மன உணர்வினைக் கண்டு அதிசயித்து அந்த விருதை மிக மிக சந்தோஷத்தோடு இணைத்துக்கொள்கிறேன்.உங்கள் அன்பிற்கு நன்றி நேசன் !

Monday, January 23, 2012

பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும்.

நான் நினைக்கிறன் 1974 ம் ஆண்டுப் பகுதியெண்டு.அந்த நேரம் ஸ்ரீமா அம்மாவின்ர (ஸ்ரீமாவோ பண்டாரநாயக)ஆட்சிக்காலம்.காசு கையில இருந்தாலும் சாப்பாட்டுச் சாமான்கள் ஏதும் வாங்கேலாது.பஞ்சம்...பஞ்சம் பசி...பசி.நாங்கள் வீட்ல 5 பேர்.அப்பா கோயில் சேவகம் செய்ற சாதாரண தவில்காரர்.அப்பப்ப கையில கிடைக்கிற காசைக் கள்ளமில்லாம அம்மாட்ட கொண்டு வந்து குடுத்திடுவார்.வெத்திலை போடுறது மட்டும்தான் அவருக்குப் பிடிச்ச கெட்ட பழக்கம்.வெறும் தேத்தண்ணியும் வெத்திலைத்தட்டமும் இருந்தா அவருக்குப் பசிக்காது என்கிறாப்போல.அம்மா பாவம்.அப்பா கொண்டு வந்து குடுக்கிறதைப் பக்குவமா செலவழிப்பா.எங்களை எப்பவும் பட்டினியா விட்டதில்லை.மாதத் தொடக்கத்திலயே அரிசியும்,மாவும் மூட்டையா வாங்கிடுவா.சீனியும் கொஞ்சம்.

ஆனா கையில நக்கிக்கொண்டுதான் தேத்தண்ணி குடிக்கவேணும்.கையில ரேகை அழிஞ்சுபோச்செண்டு கதைச்சுக்கொள்ளுவம்.வீட்ல ஆடு இருந்தபடியா பால்தேத்தண்ணி குடிப்பம்.வீட்ல சின்னதா மரக்கறித் தோட்டமும் அம்மாவும் அப்பாவும் செய்வினம்.அதைவிட வாழை,தென்னை,மாமரம் இருந்தது.அதனால பஞ்சம்தான் எண்டாலும் பசி இல்லாம ஏதோ சாப்பிட்டுக்கொள்ளுவம்.அம்மம்மாவும் தாத்தா கொண்டுவாற கோயில் சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வந்து தருவா.

இப்பிடி இருக்கிற நேரத்திலதான் அந்தப் பஞ்சகாலம்.பஞ்சம் தானா வரேல்ல.நாட்டில கஸ்டத்தாலயும் இல்ல.ஸ்ரீமா அம்மா தமிழருக்கெண்டே தந்தது.தோட்டம் செய்யாதவையெல்லாம் ஒரு மரவள்ளிக்கிழங்கு மரமெண்டாலும் வச்சுத் தண்ணி ஊத்துவினம்.ஏனெண்டா காசு இருந்தாலும் மா,அரிசி,பாண் எல்லாம் வாங்கேலாது.எங்கட புண்ணியம் எங்கட வீட்டுக்குப் பின்னால தங்கமணி அக்காவின்ர ஒன்றுவிட்ட அண்ணா மரவேலை செய்பவர்.அவருக்குப் பலரையும் பழக்கம் இருக்கிறதால சங்கக்கடை சாமியண்ணையை நல்ல பழக்கம்.மா,பாண் அவர்தான் சாமியண்ணட்ட களவா வாங்கித் தாறவர்(தருவார்).

அப்ப மா,பாண் எல்லாம் கூப்பன் (வெட்டிச் சீட்டு,அல்லது சலுகைச் சீட்டு எனப்படுவது.ஒரு பொருளை வாங்கும் போது நுகர்வோருக்கும் தரப்படும் கழிவுக்கான சீட்டு) காட்டுக்குத்தான் தருவினம்.சொல்லப்போனா மரக்கறி தவிர எல்லாச் சாமான்களுமே கூப்பன் காட்லதான் சங்கக்கடையில தான் வாங்கேலும்.

தோட்டத்தில விளையிற செத்தல் மிளகாய்கூடக் கூப்பன்தான்.கூப்பன் இல்லாம இலவசமாக் கிடைக்கிறது பசி...பசி...பசி.வயித்தில அகோர நெருப்பு.கோவமும் கூட.எத்தைனை பேருக்குக் குடுக்காம அவையளின்ர வயித்தில அடிச்சுக் கூடின காசுக்குச் சாமான்களை விப்பினம்.நாங்களும் என்ன செய்றது.ஒரு வீட்டுக்கு குறிப்பிட்ட அளவு மா,பாண் தான் தருவினம்.களவா வாங்கினாத்தான் சமாளிக்கலாம்.காசு இல்லாத ஆ(ட்)க்கள் பாவம்தான்.

எங்கட வீட்லயும் மரவள்ளிக்கிழங்குத் தோட்டம் இருந்தது.காலமைச் சாப்பாடு மரவள்ளிக்கிழங்கா இருக்கும் ஒரு நாளைக்கு.அடுத்த நாளைக்கு இரவுச் சாப்பாடா மாறியிருக்கும்.மத்தியானம் மட்டும் சோறு சமைப்பா அம்மா.மாதத் தொடக்கத்திலதான் மீன்,றால் கிழமையில இரண்டு நாளைக்கு இருக்கும்.ஆட்டிறைச்சியெண்டா மாசத்துக்கு ஒருக்காத்தான்.சிலநேரம் இல்லை.வீட்ல கோழிகள் இருந்தபடியா முட்டை,இறைச்சியும் சாப்பிடுவம்.ஆனாலும் அவைக்கும் சாப்பாடு போடவேணுமே.சிலநேரம் அவைக்கு வருத்தமும் வந்திடும்.மரக்கறிச் சாப்பாடுதான் கூடுதலா சாப்பிடுவம்.நாங்கள் நடுத்தர வர்க்கம் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.

ஒருக்கா இப்பிடித்தான் மாசக்கடைசி.அவிச்ச மா கொஞ்சம்தான் இருந்திருக்குப்போல.அம்மா நல்லாச் சமைப்பா.அதுவும் சின்னமீன் மாங்காய் போட்டுக் குழம்பு(புளி இருக்காது)வச்சாவெண்டா அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவம்.அதுவும் ஆளுக்கொரு மீன்துண்டுதான்.எண்ணித்தான் வாங்கிச் சமைப்பா.அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும் சிலநேரம்.

அப்ப ஒரு நாள் அரிசிமாப் புட்டு அம்மா அவிச்சவ.புட்டுக்கும் மீன்குழம்புக்கும் நல்ல சோக்காய்த்தான் (சுவையாய்)இருக்கும்.அதோட அம்மம்மா கொண்டுவந்த மாம்பழம்.இப்ப நினைச்சாலும் வாயூறுது.என்ர கடைசித் தங்கச்சி ரசனையோட சாப்பிட்டுவிட்டு அம்மா இன்னும் கொஞ்சம் புட்டு வேணும் எண்டு கேக்க,அம்மாவின்ர முகம் மாறினதும் தங்கச்சி வீட்டு நிலைமை தெரியாம அழுததும் இப்பவும் ஞாபகம் இருக்கு.

முக்கியமா நான் சொல்ல நினைச்சது விடியக்காலேல(அதிகாலை) 4-5 மணிக்கு பனிக்குளிர்ல சாமியண்ணைன்ர சங்கக்கடை வாசலில பாம்புபோல வளைஞ்சு நெளிஞ்சு சங்கக்கடை தொடக்கம் மாலா வீடு வரைக்கும் நிக்கிற மனிச வரிசையில இடிச்சு நெரிச்சுக்கொண்டு பாணுக்குக் கியூவில நிக்கிறது.கிழமையில இரண்டுதரம் இந்த மாதிரி நிக்கவேணும்.இதுக்குக் காலேல எங்களை எழுப்பி வெளிக்கிடுத்தி தேத்தண்ணியும் தந்து அனுப்புறது அம்மாவுக்கு பெரிய கஸ்டம்.

நான் இல்லாட்டி தம்பி போகவேணும்.ஒரு வீட்டுக்கு ஒரு பாண் தான்.அதுவும் 5 மணியில போய் கியூவில நிண்டா 6-7 மணிக்கிடையிலதான் பாண் வரும் தருவினம்(தருவார்கள்).சிலநேரம் பிந்தின கியூவில நிண்டா கிடைக்காமலும் போய்டும்.ஏனெண்டா அளவா ஒரு குறிப்பிட்ட அளவுதானாம் ஒவ்வொரு கடைக்கும் எண்டு சாமியண்ணை கத்துவார்.ஆனா களவா சின்னராசண்ணைக்குக் குடுப்பார்.அப்ப இதிலயிருக்கிற அநியாயம் எனக்குத் தெரியேல்ல.சிலநேரம் பாண் கிடைக்காத காலமும் இருக்கு.அப்ப உடன ஒரு மரவள்ளிக்கிழங்குதான்.அதைப் பிடுங்கி அவிச்சுச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போகப் பிந்தியும்போகும்.பஞ்சப்பட்ட காலங்கள் கண்ணை இப்பவும் கலங்க வைக்குது.எங்கட அரசியல் ஒரு மாதிரியாக்கும்.அதாலதான் அப்பிடியெண்டு இப்ப விளங்குது.

பாண்கியூ எண்டு கதைக்கேக்க எல்லாம் ஒரு உருவம் கண்ணுக்க வந்து மறையும்.ஒரு மெலிஞ்சு வயிறு ஒட்டினபடி 45-50 வயசுக்காரர் ஒருத்தர் எனக்கு முன்னால இல்லாட்டி பின்னால நிப்பார் எப்பவும்.அவரின்ர வீடும் நான் போற வாற வழியிலதான் இருக்கு.அவரின்ர அம்மாவோ இல்லாட்டி அக்காவோ ஒரு ஆள் இருக்கிறா அங்க. அவரோட.அது ஒரு கொட்டில் வீடு.பஞ்சம் வயசைக்கூடக் கூட்டித்தான் காட்டினது எங்கட நாட்டில.ஒற்றை வேட்டியோடதான் எப்பவும் நிப்பார்.வெயில் காலமெண்டா சேட்டுப் போடமாட்டார்.வயிறே எரியுது பிறகெதுக்குச் சேட் எண்டு நினைப்பாரோ என்னவோ.வயிறு எக்கி முகத்தில பசி வாடித் தெரியும்.கொஞ்சம் கூனலா இருப்பார்.வெத்தில வாசமடிக்கும் எப்பவும்.பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் தெரிய வந்தது அவர் ஒரு எழுத்தாளர் எண்டு.ஆரையும் விட்டு வைக்கேல்ல ஸ்ரீமா அம்மா காலத்துப் பஞ்சம்.

இப்பிடித்தான் ஒருக்கா எங்களுக்கு முந்தி கியூவில நிண்ட ஒரு வயசுபோன அம்மா ஒரு ஆள் பாண் வாங்கிக்கொண்டு போக போற போக்கில ஒரு ஆள் எத்திப் பறிச்சுக்கொண்டு ஓடினது இப்பவும் ஞாபகம் இருக்கு.அவ றோட்டின்ர கரையில கிடக்கிற மண்ணை அள்ளிப்போட்டு நாசமாப்போனவன் எண்டு திட்டிச் சத்தம்போட்டு அழுதா.பிறகு டக் எண்டு எழும்பி நடக்கத்தொடங்கிட்டா.ஒருவேளை பசி வந்திருக்கும்.இண்டைக்கு முழுக்க என்ன சாப்பாடு பட்டினிதான் எண்டு யோசிச்சுக்கொண்டு போனாவோ என்னவோ.

அவ அழுததை ஆராச்சும் (எவரேனும்)ஓவியர் பார்த்திருந்தா பசி எண்டு தலைப்புப் போட்டுக் கீறியிருக்கலாம்.காலமை வெயிலுக்கும் அவவின்ர கிளிஞ்ச றவுக்கை தெரியாமல் மூடின கந்தல் சீலையும்,கலைஞ்சு பறந்த தலைமுடியும்,பசி நித்திரை தாங்கின கண்ணும்,அவவின்ர வயசும் அப்பிடித்தான் எனக்குத் தெரிஞ்சது ஓவியமான அந்த அம்மா.

நிச்சயம் எனக்கு முன்னால நிண்டவர் எங்காச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதியிருப்பார் என்னைப்போல.எனக்கும் இவ்வளவு நாளும் எழுத்தில எழுதச் சொல்லவேணும் எண்டு நினைக்கேல்ல.இவள் பெடிச்சி எப்பாச்சும் என்னைக் கிளறிக் கிண்டி என் நினைவுகளைக் கொண்டு வந்திடுவாள்.எனக்கு அரசியல் கதைக்க விருப்பம் எண்டாலும் வேணாம் எண்டு எப்பவும் பேசாம இருக்கிறனான்.ஏனெண்டா கதைச்சுப் பி்ரயோசனமில்லை.அதோட நான் நாட்டுக்காக என்னத்தைச் செய்து கிழிச்சுப்போட்டன்.செய்யவெண்டு வந்த பெடியளை,எங்கட செல்லக் குஞ்சுகளை நாசமாப்போன உலக நாடுகள் எல்லாமாச் சேர்ந்து அழிச்சுப்போட்டாங்கள்.

இப்ப ஐ.நா அறிக்கை ஒண்டை வெளில கொண்டு வந்திருக்கு.இத்தனை ஆதாரங்களைக் காட்டினபிறகும் அது தாங்கள் செய்யேல்லையெண்டு இலங்கை அரசாங்கம் கோட்டுச் சூட்டுப் போட்டுக்கொண்டு ஐ.நா சபையில வெக்கமில்லாமச் சொல்லுது.இதில சனல் 4 பிரித்தானியாத் தொலைக்காட்சிக்கு நாங்கள் காலில தொட்டு நன்றி சொல்லவேணும்.குற்றம் செய்தவை தப்பக்கூடாது எண்டு 14.06.2011 அன்றுகூட ஒருமணித்தியால ஈழ அவலத்தின்ர விவரணக் காணொளியொண்டு இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில வெளியிட்டது.

இனி என்ன நடக்குதெண்டு எங்கட எதிர்காலம்தான் சொல்லவேணும்.இனி நாட்டில இருக்கிறவையால எதுவும் செய்ய முடியாது.வெளில இருக்கிற உலகத் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்களாலதான் ஏதேனும் நல்லது நடக்கவேணும்.ஆனால் என்ன எங்கட சனங்களுக்கு அறிவு இருக்கிற அளவுக்கு மனசில ஒற்றுமை இல்லை.போட்டியும் பொறாமையும் நான் நீ என்கிற பேதமும் கிடக்கு.இது நான் அறிஞ்சவரைக்கும் காலகாலமாய் தமிழ்ச் சரித்திரக் கதைகளிலகூட நடந்திருக்கு.அப்ப இது பரம்பரை வியாதிபோல ஒரு வியாதி.மாறாது...திருத்தக் கஸ்டம் !

எப்பிடியோ பாதைதான் மாறியிருக்கே தவிர எங்கட நினைப்புகளும் தேவைகளும் அவலங்களும் பிரச்சனைகளும் மாறேல்ல.சிலநேரம் இன்னும்...இன்னும்...இன்னும்...இன்னும் கனகாலமாகலாம்.ஆனால் நல்லதே நடக்குமெண்டு என்ர நம்பிக்கை.ஆனால் அதைப் பாக்கவோ அதை அனுபவிக்க நான் இருக்கமாட்டன்.அந்த ஏக்கத்தோடதான் என்ர உயிர் இந்த மண்ணில போகும்.சரி பிறந்த மண்ணில சாகிற கொடுப்பினையாலும் எனக்கிருக்கே.கனபேருக்கு அதுவும் இல்லை !

சொல்லக் கேட்டுக் கனகாலம்.இப்போ குளிர்காலத்தில் ஞாபகம் வந்து எழுதவைத்தது.நினைவழியாமல் மீட்டு வைக்கிறேன்.

சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP