Saturday, November 26, 2011

கற்களை இடிக்கலாம் மனங்களை...!

கல்லறைகளை மட்டுமே சிங்களம் உடைத்தெறிந்தது.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.நம் தங்கத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினமான இன்று இதைத் திறந்து வழிபடத் தொடங்கியது இன்னும் சிறப்பான நாளாக ஆனது !

சுவிஸ்சில் தாயகக்கனவுடன் சாவினை தழுவியவர்களின் நினைவாலயம் திறப்பு.சூரீச்சில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயக விடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது.தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா இனிதே நடாத்தப்பட்டது.

சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தாய் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி,அகவணக்கம்,மலர்வணக்கம்,மலர்வணக்கம்,
தீபவழிபாடு,கவிதாஞ்சலி,எழிச்சிஉரை,வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிற்பாக நடைபெற்றது.
[சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 04:57.57 PM GMT]

நன்றி லங்காஸ்ரீ.

Friday, November 25, 2011

நான் பார்க்கும் குழந்தைகள்.

சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தையொன்று விளையாட ஆரம்பிக்கின்றது.

அப்பொழுது ....

டேய்....உடைத்துவிடாதே.கீழே வை தொடாதே..!

கொஞ்ச நேரத்தின்பின் பார்க்க.....குழந்தை மீண்டும் அந்தத் தட்டைக் கையில் எடுத்துக் கொள்கின்றது.மறுபடியும்...டேய் அதைத் தொடாதே.கத்துவது காதில் விழுகிறதா இல்லையா...!

பிறகும் திரும்பிப் பார்க்க....மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..!

குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும்.அவர்கள் அதனைக் கேட்காத பொழுது மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல் குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்,சிலர் அடிக்க வேண்டும்,சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும் குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். குணாதிசயங்கள் இருக்கும்.இருப்பினும் குழந்தைகளை இப்படித்தான் நடத்த வேண்டுமென்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது.அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும்.நாம் நினைத்தமாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது.திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்.

4. எதிலும் உறுதியாக இருங்கள்.அதையே குழந்தைக்கும் சொல்லிக் கொடுங்கள்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்.

6. அடம் பிடித்து அழுகின்றதா...விட்டு விடுங்கள்.

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கேளுங்கள்.குழந்தையின் தவறுகளையும் மன்னித்து விடுங்கள்.

8. இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.

9. கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்.
இத்தனையும் நம் ஈழக்குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்றால் பெரிதொரு கேள்விக்குறிதான் !

எலும்பும் தோலுமாய் ஒட்டிய வயிறோடு அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு...தமிழச்சி வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் அவல வாழ்வுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்...உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்...எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம் இன்று வெளியில் தெரியா மரணக் கேணியாய் ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புக்களும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன.ஆனால் சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது"ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசிப்பேருக்குக் காது மந்தமாகி விட்டதெனவும்,ராணுவப் பீரங்கிகளின் கொடும் சத்தம் அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டதெனவும்,மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்.

ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும் பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை மனசாட்சியுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.தனிமைப்படுத்தி அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

பசியால் தவித்த பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது ராணுவத்தினரிடம் பிடிபட்டனர்.மொத்தக் குழந்தைகளும் பார்க்க அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி எல்லோரையும் உலுக்கி விட்டது.ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள்.மதிய வேளைகளில் ராணுவத்தினர் வரும்போது,'ஆமி மாமா சோறு போடுங்கோ...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்துவிடும்!

பாவம் பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள் கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும் சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர் அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!

அண்ணன்-தம்பி,அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது.ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனித்தால்...இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும் என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ் இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான் என்கிறார் வேதனை மேலிட.

தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ இதைவிடக் கொடூரம்...!கடந்த இறுதி யுத்தகாலங்களில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கின்றனர்.3000-4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.ரத்தத் தொற்று வியாதிகள் பரவி நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி எப்போது மரணம் என்ற நிலையில் கிடக்கின்றன.12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன."எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது" என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம்.

சிங்களவர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில் இதுநாள்வரை தமிழ்ப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர் அங்கே விபச்சார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுமி ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும் வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக்காகப் போராட கிளம்பிவிடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது 'இனப் படுகொலை' மட்டுமல்ல...'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!

ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன.குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள்.
குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது.அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது.குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை.அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை.குழந்தைகளை அற்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள்.

"குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகளும் கோபமும் விரக்தியும் எந்த அரசியல் சுயநலக் குறிக்கோள்களையும் கொண்டிருப்பதில்லை.அவர்களின் கோபங்கள் எங்கிருந்து ஏன் வருகின்றன என்பதுதான் முக்கியமானது.அழகான குழந்தைகளின் மனவுலகம் பல்வேறு அரசியல்களுக்காக தொடர்ந்தும் சிதைக்கப்படுகின்றன."

அண்மையில் யாழ் நூலகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னணிப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் பரமேஸ்வரன் சேதுராகவன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியாக 194 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டான்.தனது தாய் தந்தையருடன் வருகை வந்த சேதுராகவன் அன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கால்களில் விழுந்து வணங்க மறுத்திருக்கிறான்.

வன்னி யுத்தத்திற்குள் வாழ்ந்து அதிலிருந்து மீண்டு தடுப்புமுகாம் சென்று அங்கிருந்து மீள்குடியேறி சமகால வன்னிச் சனங்கள் வாழும் வாழ்க்கைக்குள் இருந்து வந்த இந்தச் சிறுவன் இன்றைய ஈழத்து மக்களிடத்தில் உள்ள உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறான். அவனிடம் எந்த அரசியலும் இல்லை.தனது எதிர்ப்பு உணர்வை மறைக்கவும் தெரியவில்லை.கல்வி அமைச்சரின் கால்களில் விழுவதற்கு அவன் விரும்பவில்லை என்ற நிலைப்பாடு அரசு மீதான வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது.சிறுவர்களின் வெறுப்பு சாதாரணமானதல்ல.அவை சிறுவர்களின் வெள்ளை மனவுலகத்தில் இருந்து எந்த ஒளிவு மறைவுமின்றி ஏற்படுகின்றது.

அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் இருப்பவனோ அல்ல.வாக்கு அளிக்கின்ற வயதைக் கொண்டவனுமல்ல. போருக்குள் பிறந்து வாழ்ந்ததைத் விட வேறு எதையும் அறியாதவன்.எதற்காக கால்களில் விழ மறுத்திருக்கிறான்?

சேதுராகவனுக்கு பத்து வயதே ஆகிறது.கடந்த 2001 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறான். யுத்த்தில் பிறந்து யுத்தத்தில் வளர்ந்து யுத்தத்தில் படித்துத் தனது வாழ் நாட்கள் முழுவதையும் யுத்த காலத்தில் கழித்திருக்கிறான்.அவன் பார்த்திருந்த காட்சிகள் எல்லாமே யுத்தம்தான்.தமிழன் என்பதனால்தான் சேதுராகவன் கால்களில் விழ மறுத்தான் என்று மட்டும் சொல்லிவிட இயலாது.இது ஒரு குழந்தையின் எதிர்ப்புணர்வு.காயங்களினால் ஏற்க மறுக்கிற எதிர்ப்பு.துயரமும் அழிவும் கொண்ட வாழ்க்கையினால் ஏற்பட்ட உணர்வு.யாரும் அவனுக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.அவனாகவே இதைச் செய்திருக்கிறான்.சேதுராகவனின் மனம் என்பது ஈழத்தின் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் உள்ள மனம்.

ஈழப் போரைக் கடந்த பல குழந்தைகளின் நெஞ்சில் அந்தப் போர்க்காட்சிகள் ஆழமாகப் படிந்திருக்கின்றன.போருக்குப் பிந்தைய இன்றைய வாழ்விலும் அதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்கிறது.அவர்கள் அந்தப் போரின் இறுதி நாட்களைப் பற்றியும் மரணக் காட்சிகளையும் பற்றியும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.போரின் குழந்தைகளாய் நெஞ்சில் படிந்த இந்தக் காயங்களை துடைத்தெறியக் கூடிய வாழ்வை அவர்கள் எட்டவில்லை என்பதுதான் துயரம்.

உலகில் குழந்தைகளின் நலம் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்.போரின் குழந்தைகளாய் பிறந்து வாழும் ஈழக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?அரசாங்கம் ஈழத் தமிழர்களின்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகைளையும் அழிவுகளையும்தான் கட்டவிழ்த்து விடுகிறது.எமது குழந்தைகள் அந்தச் சூழலில் வளர்வதுடன் அதையே தங்கள் முதல் பாடமாக படிக்கிறார்கள்.குழந்தைகளின் மனங்களை வெல்ல இந்த அரசால் முடியவில்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படும் பெரும் செய்தி.

சமாதானம் கொண்டு வரப்பட்ட பூமி என்றும்,பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட தேசம் என்றும் வெற்று அரசியல் வார்த்தைகளைச் சொல்லி ஈழத் தமிழர்களின் வாழ்வுலகத்தை மறுக்கும் அரசியலை செய்யும் பொழுது,ஈழக்குழந்தைகள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதும்,இந்த வடுக்கள் நெஞ்சில் எப்படிப் படிந்திருக்கின்றன என்பதும் எப்பொழுது புரியப்படும்?

ஈழக் குழந்தைகள் நிம்மதியாக வாழும் ஒரு உலகத்தைத் தேடுகிறார்கள்.‘ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள் தங்களோடு எடுத்தே செல்கின்றனர்....!



தோழி...சகோதரி அம்பாளடியாளுக்கு என் நன்றி.அவர் இழுத்த தொடர் சங்கிலி யுத்தபூமியில் வாடும் வாழும் நம் குழந்தைகளையும் நினைக்க வைத்தது.உலகப் பந்தில் எத்தனையோ சந்தோஷங்களோடு எத்தனையோ அறிவியலோடு செல்லக்குழந்தைகளாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் என் தேசத்துக் குழந்தைகளே என் பார்வையில் உடனடியாகத் தெரிந்தார்கள்.மாவீரர் வாரத்தோடு இந்தப் பதிவை இணைப்பதில் மிகுந்த சந்தோஷம்.எமக்காய் விதையுண்ட அத்தனை உயிர்களுக்கும் என் தலைசாய்த்த நன்றியும் வணக்கமும் !

நிறைவான ஈழச் செய்திகள் உதவி இணையம்,கூகிள்.

Wednesday, November 16, 2011

மண்வாசனை...கோண்டாவில்.

என்தேசம்.என் ஊர்.
மண் வாசனை அந்தப் புழுதியைச் நாசிக்குள் நுகர்ந்தபடி எழுத நினைக்கிறேன்.கண்ணுக்குக் குளிர்ச்சியாக கிராமுமல்லாமல் நகரமும் அல்லாத ஊர் என் கோண்டாவில்.தோட்டங்கள் சூழ குளிர்ந்த காற்றோடு எப்போதும் கலகலவென்றிருக்கும் அன்று.

காலைப்பொழுது விடிகை மிக ரம்யம்.கோயில் மணியோசை பரவசமாக்க பறவைகளின் காலைக் களிப்பு ஆனந்திக்கும் எங்களையும் சேர்த்து.பறப்பின் படபடப்பும் குஞ்சுக்கு இரை தேடிக் கொடுத்தலும் காலைக்காட்சியின் ஒரு பகுதி.அதிகாலை 4 மணிக்கே கிடுகு வண்டில்களின் டக்டக் சத்தமும் அதை இழுத்துச் செல்லும் காளைமாடுகளின் கழுத்து மணி ஜல்ஜல் ஒசையும் நித்திரையைக் கலைத்தாலும் அந்தத் தாளக்கட்டு ரசனையோடு இசையும்.

இதைவிட மற்றைய ஊர்களில் கேட்கமுடியாத ஒரு விஷேசம் என் ஊரில்.அதாவது நாதஸ்வர தவில் கலைஞர்கள் கூடுதலாக வாழும் இடம் எங்களூர்.அவர்களின் காலைப் பயிற்சியும் ஒரு காலைக்காட்சியாகியிருக்கும்.அதிகாலை 4-5 மணிக்கே தங்கள் கலைகளைப் பயிலும் மாணவர்கள் சாதகம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள்.ஆரம்பப் பயிற்சியாளர்கள் ஸ்வர சரளி வரிசை தொடக்கம் அலங்காரம் கீதம் வரை தாளம் போட்டுச் சத்தமாகப் பாடுவார்கள்.குரல் வளம் தெளிவாகும் என்பார்கள் இதனால்.

நாதஸ்வரப் பயிற்சியாளர்கள் நாதஸ்வரத்தின் அடிப்பகுதித் துவாரத்தைத் துணியால் அடைத்துவிட்டு கீழ் சுருதியில் வாசித்துப் பழகுவார்கள்.தவில் பழகுபவர்கள் தவில்போன்ற அமைப்பிலுள்ள கட்டையில் கைக்கிளி என்று சொல்லப்படும் சிறு கைக்கட்டையால் அடித்துப் பழகுவார்கள்.அதில தொம் தொம் தகா தொம் தொம் திகுதகா என்கிற சொல் டக் டக் என்றே கேட்கும்.மார்கழி மாதக் குளிரில் எழும்பியிருந்து பழகும் இவர்களைவிட நித்திரை கலைந்து கிடப்பவர்களுக்கே கோபம் கோபமாக வரும்.இதனாலேயே இவர்களுக்கென்று தனியாகச் சின்னக் குடில் செய்து கொடுத்திருப்பார்கள்.தூரத்து ஊர்களிலிருந்துகூட பயிற்சிக்காகவே இங்கு வந்து தங்கியிருப்பார்கள் சிலர்.மாலைக்காட்சியிலும் இவர்களது நிகழ்வு தொடரும்.

பூவோடு கூடிய நாருக்கும் மணமுண்டாம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் எனது பக்கத்துஊர் இணுவில்.இங்கேதான் எம் பாரம்பரியக் கலை கலாசாரங்கள் நிறைந்திருக்கின்றன.இணுவிலின் பக்கம் என்பதாலோ என்னவோ கோண்டாவிலும் கலைக்கூடம்தான்.நானும் அதே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.ஆகவே எனக்குத் தெரிந்தமட்டில அகில இலங்கைப்புகழ் நாதஸ்வர தவில் கலைஞர்கள் இங்குதான் 3-4 தலைமுறையாக வாழ்வதாக அறிகிறேன்.காலம் சென்ற வி.ஏ.பாலகிருஷ்ணன் அவர்களும் இங்குதான் வாழ்ந்தார்.இன்னும் புகழ்பெற்ற வரிசையில் நாதஸ்வரத்தில் வெள்ளிவிழாக்கண்ட வி.கே கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்களும்.தற்போது கானமூர்த்தி அவர்கள் காலம் சென்றுவிட்டார்.இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நல்ல தவில் மிருதங்க வயலின் வித்வான்களும் இங்கு இருக்கிறார்கள்.இருந்தார்கள்.எம் வாழ்வின் அவலத்தான் இந்தத் தொழிலிலும் தாக்கம் இருக்கிறது.

இவர்களைவிட ஆரூடம் சொல்பவர்கள்,சமய சிவாச்சாரியர்கள்,கோபுர சிற்பவேலை,நகைகள் செய்பவர்கள்,மரச் சிற்பங்கள் தளபாடங்கள் செய்பவர்கள்,மூலிகை மருத்துவர்கள் என்று நிறைவான அறிஞர்கள் கலைஞர்கள் நிறைந்த ஊர் எனது ஊர்.

என் ஊரின் மண் சிவப்பு நிறமாக இருக்கும்.இதுவும் இணுவில் மண்ணின் பாதியே என்றுதான் சொல்லவேண்டும்.கோண்டாவிலின் முழுப்பகுதியும் சிவப்பு மண் இல்லை.இணுவில் பகுதியைத் தொடும் எல்லைப்பகுதியின் கொஞ்சத் தூரம் மட்டுமே செம்மண்ணாக இருக்கும்.ஒரு நாளைக்கு 2-3 தரம் தலை கழுவிக் குளிக்க வைத்து அம்மாவிடம் அடி வாங்கிய நினவுகள் நிறையவே இந்தச் செம்பாட்டு மண்ணால்.கோண்டாவில் தமிழ்க்கலவன் பாடசாலை.

ஆனால் இதில் பயிர்களின் செழிப்பும் வளர்ச்சியும் அதிகம்.முக்கியமாக மிளகாய் புகையிலை.மிள்காய் புகையிலைக்குக் கோண்டாவில் பெயர்பெற்ற இடமாகும்.
புகையிலையைக் கருவாகக்கொண்டு நிறையச் சுருட்டு ஆலைகள் அதை நடாத்தும் முதலாளிகள் தொழிலாளர் என்று பெரும் பணக்காரரும் இங்கு.நான் அன்று இருந்தபோது வி.பி.ஆர் என்கிற பீடி ஆலை பெயர்பெற்றதாக இருந்தது.

இங்குள்ள சுருட்டு முதலாளிகள் கொழும்பு மலைநாட்ட்டுப் பகுதிகளில் தங்கள் வியாபாரத்தை நன்கு நடாத்தி வந்தார்கள்.1983 யூலைக் கலவரத்தின் பின் இதற்கும் கொஞ்சம் பின்னடைவே என்பார்கள்.நானும் இந்தத் தோட்டங்களுக்குப் மரக்கறி வாங்கப் போயிருக்கிறேன்.வரப்புப் பகுதியில் முளைத்திருக்கும் பலகீரையை எங்களையே பிடுங்கிப் போகச் சொல்வார்கள்.குண்டுக் குண்டாய் நிலம் முட்டிக் காய்த்திருக்கும் கத்தரிக்காய்.வான் பார்க்க நீளம் நீளமாய் நீட்டிமுளைத்திருக்கும் வெண்டைக்காய்.பொலிந்து தொங்கும் பயற்றங்காய்.பாம்புக்குக் கல் கட்டித் தொங்கவிட்டதுபோல புடலங்காய்.ஊடலில் புகுந்திருக்கும் முளைக்கீரை பொன்னாங்காணி என்று தனித் தனிப்பாத்தியில் பசுமையாய் குளிர்ச்சி தரும்.பருப்புக் கலந்து சமைக்கும் பலகீரை எனக்கு மிகவும் பிடிக்கும்.முருங்கை மரமில்லா வீடுகளே இல்லை என்பேன் அப்போ.வாழை மரங்கள் குட்டிகளோடு தென்னை பப்பா எலுமிச்சை என் வீட்டுத்தோட்டமும் வெருளியும் இருப்பார்.அது அந்தக் காலமாகிவிட்டது.நினைவுகள் மட்டும் காலமாகாமல்.

அடுத்து இனிப்பது எங்களூர்க் கிணற்றுத் தண்ணீர்.பக்கத்து ஊர்களில் இருந்துகூட வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள்.விரைவாக பருப்போ அரி்சியோ வெந்துவிடும் என்பார்கள்.அதுவும் மண்பாத்திரத்தில் சமைத்தால் இன்னும் சுவை என்பார்கள்.

இன்னும் கோண்டாவில் உப்புமடச்சந்தி சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (கே.கே.எஸ்) காங்கேசந்துறை வீதியில் சக்தி வாய்ந்த தெய்வமாகும்.வருடத்தில் ஒரு தரம் 10 நாடகள் திருவிழாக் கோலம் காணும் இந்தக்கோவில் ஊரும்தான்.கோண்டவிலை ஒட்டி நந்தாவில் அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது இங்கு திருவிழா ஆடம்பரமும் அட்டகாசமும்.அழகான கேணியும் ஒன்று இங்கு தாமரை மிதக்க.திருவிழாக்கள் கலகலவென்று தெருக்களும்,வீடும் சுத்தமாக இருந்தாலும் அப்பா அம்மாவுக்கு எங்களால் கஸ்டமான நாட்களாகவே இருக்கும்.பாடசாலை போக அடம்பிடிப்போம்.ஐஸ்கிறீம்,கச்சான்,பலூன்,காப்பு,மாலை ஏதோவொன்றுக்கு எப்போதும் அடிபோடுட்டு அடிவாங்காத நாள் இருக்காது.கோண்டாவில் புகையிரத வீதியிலும் ஒரு காளிகோவில்.மீண்டும் வருமா மறைந்த இழந்த அந்த நாட்கள்.கண்கள் மட்டுமே கலங்கிறது தூசே இல்லாத சுத்தமான நாட்டிலும்.

நந்தாவில் என்று சொலப்படுகிற இடம் கோண்டாவிலின் நடுப்பகுதியை பள்ளம் கொண்டதாய் அலங்கரிக்கிறது.நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிறைந்த தோப்புப் பகுதி.இங்கு மரமேறும் சிலரது வீடுகள் தவிர வீடுகள் இல்லை.காதலர்கள் சந்திக்கும் மறைவான பூங்காபோல.சிறுவர்களின் பந்தாடலுக்கு பரந்த பெருவெளி.இளைஞர்களின் சீட்டாட்டம் கள்ளுக் குடியலின் ஆரம்பப் பயிற்சியும் இங்குதான்.பாடசாலை போகாமல் படம் பார்க்கப்போக புத்தங்களைப் பாதுகாக்கும் இந்த நந்தாவில்.

என் அண்ணா இன்னொரு சொந்தமான அவர் வயதுள்ள சிநேகிதரோடு படம் பார்க்கப்போய் காளிகோவில் ஐயா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சொல்லி,தவில் வாரினாலே அந்தப் படத்தின் பாட்டு வரிகளைச் சொல்லிச் சொல்லியே அடி வாங்கினதும் ஞாபகம் வருது.

இங்கு மழைக்காலங்களில் வெள்ளம் ஒரு ஆளை முழுதாக மூடுமளவிற்கு முட்டி வழியும்.சிலசமயங்களில் நீர் நிரம்பி பெரும் தெருவைத் தாண்டும்.மழைநீர் நிரம்பும் காலங்களில் சிடைச்சித் தாவரம் நிறைய வளர்ந்திருக்கும்.தவளையின் இசையோ இரவு இரவாகப் பெரும் கச்சேரிதான்.மீன்கள்,வால்பேத்தைகள் போத்தல்களில் பிடித்து வைத்துக்கொண்டு மீன் வளர்க்கிறோம் என்போம்.பனை மரத்தைப் பாதியாகப் பிளந்து வள்ளம் போலாக்கி தூண்டில் வைத்து மீனும் பிடிப்பார்கள்.

நான் பாடசாலைக்கு நடந்தே போய் வந்திருக்கிறேன்.ஓ...மழைக்காலம் அது பெரிய சந்தோஷம்.தண்ணீருக்கு கல் எறிந்து விளையாடி வீட்டுக்குப் பிந்தியே போய் வெள்ளைச்சட்டை நனைந்து அடி வாங்கி வலிப்பது எங்களுக்குத்தானே தண்ணீருக்கு இல்லையே.தூணில் கட்டி வச்சு கண்ணுக்கு மிளகாய் பூசப்பட்ட காலமும் இருக்கு இந்த நந்தாவில் வெள்ளத்தால்.காலில் சிரங்கு குரங்காய் மாறி....பிறகென்ன !
சிவகுமாரன்.

கோண்டாவில் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று பிரித்தே சொல்கிறார்கள்.எனது ஊர் கோண்டாவில் மேற்கு.கிழக்குக் கோண்டாவில் பலாலி போகும் பெரும் தெருவில் தின்னவேலியோடு சேர்ந்தது.அங்கு முக்கியமாக பல்தொழில்நுட்பக் கல்லூரியும்,பல்கலைக் கழகமும் இருக்கிறது.சிறப்பாக எங்கள் சிவமுமாரன் பிறந்து வளர்ந்த ஊர்.ஒரு நாள் தனியாக யாழ்ப்பாணம் போய் பாலாலி கோண்டாவில் பேரூந்தில் ஏறி என் கோண்டாவிலைக் காணவில்லையென்று தெருவில் நின்று அழுதது ஞாபகம் வகிறது.

எங்களூரில் பனை,தென்னை,மா,பலா,புளி,நாவல்,நெல்லி மற்றும் பூக்கள் பொலியும் மரங்களுக்குக் குறவேயில்லை.என் தங்கை பாடசாலை போகும் வழியில் நாவற்பழக்காலங்களில் நாவல் மரத்தடியில் காலம் கழித்துவிட்டு வீட்டுக்குப் பிந்தியே வருவாள்.அம்மா கேட்டால் ஏதாவது பொய் சொல்லுவாள்.வாய் மட்டும் நாவலாய் மாறியிருக்கும்.பிறகென்ன மாட்டிக்கொண்டு நல்ல அடிதான்.நாவல்மரம்,புளியமரம் சுற்றுவதால் அடிக்கடி படிப்பைக் குழப்பிகொள்வாள்.

எங்களூரில் இந்து,கிறீஸ்தவ,முஸ்லிம் மக்களென ஒற்றுமையாய் சந்தோஷமாய்த்தான் இருந்தோம்.இப்போ நினைத்தாலும் மனம் ஏங்குகிறது.இன்று யாரோ எவரெவரோ எங்கெங்கோ.என் அழகு கலைந்த வீட்டு முற்றம் எனக்காய் காத்திருக்குமோ.துளசிச்செடி ஒற்றைக்கோட்டுக் கோலத்துக்காய் கருகாமல் இருக்குமோ.சாகுமுன் என் ஊரைப் பழைய அழகோடு காண்பேனா.திரும்பவும் எல்லோரையும் காண்பேனா.என் இறப்பாவது என் மண்ணில் நடக்குமா.இப்போதைக்கு இல்லை என்பதே பதிலானாலும் நம்பிக்கையோடு நடப்போம்.எதிர்காலத்திற்காவது பாதை வெட்டி வழி சமைப்போம் !

9 வருடங்களுக்கு முன் வானொலிக்காக எழுதினது.மாற்றம் செய்யாமல் அப்படியே !

Friday, November 04, 2011

என் கேள்விக்கென்ன பதில்.

உலக சனத்தொகை இப்போ ஏழு பில்லியனானது.உலகிலேயே ஏழு பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது.மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம்.இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளைக் கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும்.இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும்.ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது.

இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும்.தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடுங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரக் காத்திருக்கும்.அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும்.புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடுங்கிப்போட்டுவிடும்.ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்குத் திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது.பழைய நினைவுகள்,பழைய பழக்கவழக்கங்கள்,பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது.பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான ஆயுள் உண்டு.புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது.குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தைப் பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன.கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராணக் கதைகளில் இருக்கிறது.

ஆனாலும் ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதைப் பார்த்தால் ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்கிறது.இந்த 120 ஆண்டுகள் ஒரு மனிதன் உயிர் வாழ முடியும்.அதுவரையில் அவனுடைய ஜாதகப்படி வருகிற தசை – புத்திகள் கணிக்கப்படுகிறது.இப்படி 120 ஆண்டுகள் ஒரு நபர் உயிருடன் இருப்பது என்பது இன்றைய காலத்தில் அதிசயமான விஷயமாக இருக்கிறது.

விஞ்ஞான வளர்ச்சி பல முன்னேற்றங்களை தந்திருந்தாலும் எண்ணற்ற பாதக நிலைகளையும் தந்திருக்கின்றது – தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் – கனிகளில் கூட மருந்துகள் கலங்கப்பட்டு அது மனித உடலுக்குள் சென்றவுடன் விஷத் தன்மையாக மாறி மனிதர்களின் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது.இன்று 30 – 40 வயதுக்குள்ளாகவே பல உடல் கோளாறுகளை மனிதன் தன் உடலில் வரவேற்கிறான்.காரணம் ஆரோக்கியமான உணவு இங்கே யாருக்கும் இல்லை.ஒரு இளநீரை எடுத்துக் கொண்டாலும் அது இயற்கையாக இளநீர் காயாக இருந்து குடிப்பதுதான் ஆரோக்கியம்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது?

அந்த இளநீர் கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதுவும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுச் சந்தைக்கு வருகிறது.அந்த இளநீர் கெடாமல் இருப்பதற்காக அதில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது ஒரு விஷயத்தை நாம் என்றுமே நினைவில் நிறுத்த வேண்டும்.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் பழங்கள் இப்படி எந்த உணவாக இருந்தாலும் அதனை இயற்கை விதித்த குறிப்பிட்ட காலத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.அந்தக் குறிப்பிட்ட காலம் சென்ற உடன் இயற்கையே அந்த பொருட்களை மனிதனுக்கு ஏற்றவை அல்ல என்பதை தீர்மானித்து அழித்துவிடுகிறது.அதாவது கெட்டுப்போகிறது.

நமக்குத் தாயாக இருக்கக் கூடிய இயற்கை நமது உடலுக்கு எது ஏற்றது என்பதை தீர்மானித்துப் படைக்கிறது.பிறகு அந்தப் படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த இயற்கையே அழித்தும் விடுகிறது.காரணம் அந்தப் பொருள் இனி மனிதர்களுக்கு உதவாது என இயற்கை அன்னைக்குத் தெரிகிறது.இவையெல்லாம் இப்படியிருக்க விஞ்ஞானிகள் மனிதன் 150 வருடங்கள் வரை வாழக்கூடிய விதியைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அல்லது பிடிக்கிறார்களாம்.இது நான் நேற்று வானொலியில் கேட்டது.அதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பாளர் யாருக்கெல்லாம் 150-200 வயது வரை வாழ விருப்பம்,ஏன் என்கிற கேள்விகளை நேயர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.எனக்கும் பிடித்திருந்தது.எனவே அதையே நானும் உங்களிடம் கேட்க நினைக்கிறேன்.சொல்லுங்கள் நண்பர்களே.

நீண்ட வருடங்கள் உங்களுக்கு வாழ விருப்பமா ?

ஏன் ?

சொல்லுங்களேன்.....!


என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.நான் வாழ்ந்து எதுக்கு ......!

உதவி இணையம்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP