Saturday, May 22, 2010

சுவாசிப்பதற்கான சுதந்திரம்.

இரவு மெல்லிய மழை.இப்பொழுது விண்ணில் கரிய மேகங்களின் அசைவு.மழை பற்றிய அழகிய திரைப்படம்போல இடையிடையே துளித்துளியாய்....

பூத்திருந்த அப்பிள் மரத்தின் கீழ் நின்று சுவாசித்தேன்.அப்பிள் மரத்தை மட்டுமல்ல. சூழவுள்ள புற்களையும் ஈரம் வழியும் அதன் மினுமினுப்பையும் தான்.காற்றில் பரவியுள்ள இனிய சுகந்தத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.முடிந்தவரை ஆழமாய் உள்ளிழுத்தேன்.என்னுள் முழுவதும் அதன் நறுமணம்.கண்களைத் திறந்தும் மூடியும் சுவாசித்தேன்.என்னுள் மிகுந்த பரவசம் அளித்தவை எதுவெனக் கூறமுடியவில்லை.

இதுதான் நான் நம்புகிறேன்.இந்தத் தனித்த மிகவும் பெறுமதியான சுதந்திரத்தைத்தான். அச்சிறை எம்மிடமிருந்து எடுத்து விடுகிறது இப்பொழுது என்னால் முடிவதைப் போன்ற இயல்பான சுவாசிப்பதற்கான சுதந்திரத்தை.

இப்பூமியின் மீதான உணவு,மது,ஒரு பெண்ணின் முத்தம் இவைகளைவிட இக்காற்றில் எழுந்துள்ள ஈரமான செழுமையான மலர்களின் மணம் இனிமையானது.

மிருகக்காட்சிச் சாலையின் கூடுகள் போன்ற ஐந்து மாடிக் கட்டிடத்தின் ஓரத்திலுள்ள ஒரு சிறிய பூந்தோட்டம்தான் இது என்பது பொருட்டல்ல.

மோட்டோர் சைக்கிளின் படபடப்பு,வானொலியின் இரைச்சல்,ஒலிபெருக்கியின் தொணதொணப்பு எதுவும் கேட்கவில்லை.அதே வேளை ஒரு மெல்லிய மழைக்குப் பின் அப்பிள் மரத்தின் கீழ் புதிய காற்றைச் சுவாசித்தல்.......
இன்னும் சில காலம் நாங்கள் உயிர் வாழலாம் !

மூலம் - அலெக்சாண்டர் சொல்செனிஸ்ரன் (ரஷ்யா)
ஹேமா (சுவிஸ்)

Saturday, May 15, 2010

"பாலாஜி" ன் இதுதானப்பா நடந்தது...ரீமேக்.

ஏனப்பா....ஏன் என்ர குஞ்சைப் போட்டு அடிக்கிற !

அதுசரி ...உங்கட பிள்ளைக்கு ஒண்டெண்டா உடன வந்திடுவியள்.அதுவும் துண்டை முறுக்கித் தோள்ல போட்டுக்கொண்டு.

நீ இஞ்ச வாடாப்பு ராசா...ஏன் கொம்மா இப்பிடிப் போட்டுக் கும்முறா உன்னை?

ஓம்...ஓம்...அப்பிடியே சொல்லிக் கிளிக்கத்தான் போகுது குரங்கு.வாய் மட்டும்தான் வங்காளம்போல...அதுவும் என்னட்ட மட்டும் !

சரி..சரி...இப்ப என்னப்பா நடந்தது அதைச் சொல்லன் நீ .

ஓம் ஓம்....கால் முளைச்சிட்டுதெல்லோ உங்கட நோஞ்சானுக்கு.உங்கால இஞ்சாலயெண்டு அந்த வளைவு மூலை வளவு வரைக்கும் வெளிக்கிட்டுடார் இப்பல்லாம்...துலைஞ்சவன்.

அதுக்கேனப்பா இப்பிடி அலம்புற.சின்னதுகள் எண்டா வீட்டுக்குள்லயே புளுக்கை போட்டுக்கொண்டு உன்ர சீலைக்குள்ளயே கிடக்குமோ.வெளில போய்க் கீய்த்தானே வருங்கள்.நீ ஏன் இந்தப் பாடு படுறயப்பா.

ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது.

சரி...விடு விடு...அவன் கெட்டிக்காரன்.சரியாயிடுவான்.

ஓம்...ஓம் உப்பிடியே சொல்லிச் சொல்லித்தான் கழுதை குட்டிச்சுவர்ல ஏறி நிக்குது.பிறகு உதே வாய் என்னைத்தான் குற்றம் சொல்லும்.வளத்த வளப்பைப் பார் எண்டு.அப்ப கேட்டுக்கொள்றன் உங்களை.

யேய்...கொஞ்சம் சும்மா இரு பாப்பம்.சும்மா முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுற.புத்தி இருக்கோ உனக்கு.நீ ஒரு சென்மம்.

அதெண்டாச் சரிதான்.நான் புத்தி கெட்டவளெல்லோ.இஞ்ச வாருங்கோ.
சொல்லித் தாங்கோவன்.

என்ன....நானும் பாத்துக்கொண்டிருக்கிறன்.சத்தம் உச்சத்தில ஏறிக்கொண்டேல்லோ போகுது.கவனமாயிரு...சொல்லிட்டன்....ஓம்.
சும்மா இருங்கோப்பா.ஏதோ நான் சத்தம் போட்டா அடங்கிற ஆள்மாதிரி.பேசாமப் போங்கோ பாப்பம்.

யேய்...இப்ப வாய் மூடப்போறியோ இல்லையோ.இல்லாட்டி...!

ஓம்...ஓம் என்னத்தைச் சொன்னாலும் அடக்கிப்போடுவியளே...இது உங்கட குடும்பத்துக்கே பழக்கிப்போன ஒண்டெல்லோ...

யேய்....இப்ப என்ன உனக்கு....என்னண்டாலும் என்னோட இருக்கட்டும்.தேவையில்லாமலுக்கு என்ர குடும்பத்தை இழுத்தியெண்டா...
சொல்லிட்டன் ஓம்...

அடப் போங்கோப்பா...உங்கட கும்பத்தைப் பற்றித் தெரியதோ.உலுத்துக் கெட்ட குடும்பம்.என்ர அப்பர் சொன்னதைக் கேக்காம உங்களுக்குப் பின்னாலதான் துலைவன் எண்டு அழுங்கு பிடிச்சுக்கொண்டு வந்த எனக்கு வேணும்....வேணும்....இதுவும் வேணும்.....இன்னமும் வேணும்.

ஓமடி நானும் அப்பிடித்தான்.என்ர தலையெழுத்து.எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக் கிடக்கு.

ஓம்...ஓம் என்னவோ சும்மா கூட்டிக்கொண்டோ வந்தனியள் வந்த மாதிரியல்லோ.எங்கட அப்பரிட்ட விடாப்பிடியா நண்டுபோல நிண்டு 15 பவுண் நகை வாங்கேக்க உங்கட மார் அடிக்கேல்லையோ.

இஞ்ச பார்...சும்மா எல்லாத்துக்கும் எதிர்த்துக் கதைக்காத.வாய் காட்டாத.ஒண்டு வச்சனெண்டா உனக்கு.நல்லா வாங்கப்போற...

ஓம்..ஓம்....அதுக்குத்தானே அப்பர் என்னைப் பெத்து உங்களிட்ட வாய்க்கரிசி போட்டவர்.அடிப்பியள் நீங்கள்.

(ப்ப்ப்ளார்.............)

என்ர ஐயோ...கடவுளே அடிச்சுப் போட்டியளெல்லோ..இவ்வளவு காலமும் இல்லாம கை நீட்ற அளவுக்கு உங்கட கை வளந்திட்டுதெல்லோ.இனியும் இந்த விசரி உங்களோட இருந்தாளெண்டா....நான் போறன் என்ர வீட்டுக்கு.

போடி...போ என்னவோ உவ இல்லாட்டி உலகமே இல்லையாக்கும்.வாழ ஏலாதோ...பெரிய இவவெண்டு நினைப்பு இவவுக்கு.

ஓம் ...இப்ப உங்களுக்குத் தெரியாது.கொஞ்சம் பொறுங்கோ.நாளைக்கு றோட்டில நிப்பியள்...யாரடா ஒரு சொட்டுக் கஞ்சி ஊத்துவினம் எண்டு கிளிஞ்ச சாரத்தோட நிப்பியள் பாருங்கோ...அப்ப தெரியும்.

ஓமடி போடி...நீ இல்லாட்டி ஒரு ஆண்டி மடம்...அரச மரம்...சந்தி மடம்...
கிடைக்காமலே போகும்.

சரி சரி நான் வெளிக்கிடுறன்.ரெண்டொருநாள் செல்ல எங்கட வீட்டுப் பக்கம் "இஞ்சாரப்பா".... எண்டுகொண்டு வருவியள்...சமாதானம் பேசிக்கொண்டு...அப்ப பேசிக்கொள்றன் உங்களை.

ஓ...அப்பிடி ஒரு நினைவிருக்கோ உனக்கு.என்னவோ பூனை கண்ணை மூடிக்கொண்டா பூமியே இருண்டு போகுதெண்டு நினைப்பாம் அதுக்கு.....விளங்கிச்சோ... ஒருக்காலும் நான் உன்ர வீட்டுப்பக்கம் வரன் தெரியுமோ.

அதையும் நான் பாத்துக்கொள்றன்...கொப்பரும் பிள்ளையுமாக் கிடந்து காயுங்கோ....வாறன்.

*******************************************

அம்மா.....அம்மா....அம்மாய்..அம்மா வேணும் எனக்கு.அப்பாய்....அம்மாய்

என்னடா இப்ப உனக்கு.அம்மாய் கொம்மாய் சும்மாய்...அதான்
போட்டாளெல்லோ....உன்னாலதான் எல்லாம் ....இனிமேல்பட்டு அந்தப் பக்கம் அந்தப் பெடியளோட போவியே....எங்கயடா அந்தத் தடி.அறுந்தவள் அதையும் எடுத்து ஒளிச்சுப்போட்டுப் போட்டாளே.இரு....கிளுவங் கம்புதான் உனக்குச் சரி.

டேய் நில்லடா....ஓடினா இன்னும் உதைப்பன்....

(அடி...1...அடி2 3 4 5 6 )

ஐயோ....அம்மா.....அப்பா....அடிக்கிறார்.

பாலாஜி கிட்ட இருந்து என் மொழி அசைவில் எடுத்துப் போட்டது.

ஹேமா(சுவிஸ்)

Wednesday, May 12, 2010

நாடும் சாப்பாடும்.

அந்தந்த நாட்டின் பிரபலச் சாப்பாடுகளை அந்த நாட்டின் கொடிகளாகச் சமைத்திருக்கிறார்கள்.நீங்கள் சாப்பாட்டுப் பிரியர்களா.உங்கள் உங்கள் ரசனைகள் எப்படி ?

சுவிட்சர்லாந்

பிரான்ஸ்

இந்தியா அவுஸ்திரேலியா
ஸ்பெயின்

இத்தாலி
லெபனான்
கொரியா
ஜப்பான்
கிறீஸ்
இந்தோனேசியா
சீனா
பிரேஸில்
வியட்நாம்

மின்னஞ்சல் மூலமாக ரவி தந்தது.நன்றி "ரவி"க்கு.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 04, 2010

படைப்புக்களும் விமர்சனங்களும்.

பதிவுகள் படைப்புக்கள் என்பது ஒரு பிரசவம்.அது முழுமையடைய நிச்சயம் விமர்சனங்கள் பாராட்டுக்கள் அவசியம்.இதை யாருமே மறுக்கமாட்டீர்கள்.ஒரு பதிவின் வெற்றியை அதன் விமர்சனங்களே வெளியில் கொண்டுவருகின்றன.அதுவே அந்தப் படைப்பின் வெற்றி.

ஒரு பார்வையாளன் தன் ரசனையை விரித்துக் கூறுகையில் படைப்பாளி தன்னை தன் எழுத்தை தான் தவறவிட்ட விஷயங்களை உணர்கிறான்.விமர்சகன் என்பவன் பெரிய அறிவாளியாக பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட ஆசைகளைக் காட்டாது பார்க்கும் படைப்புகள் அத்தனைக்கும் படைப்பின் ரசனையோடு விமர்சனம் செய்தல் அவசியமாகும்.படைப்பாளிக்கு விமர்சனமே ஒரு ஆசானாக மாறும் தருணங்களும் இருக்கிறது.

விமர்சனமாவது படைப்பின் சிறப்பை சாதனையை மட்டும் புகழாது அதிலுள்ள குறைகளையும் எடுத்துச் சொல்ல தயங்கக்கூடாது.சில விமர்சனங்கள் நிராகரிப்பின் தொனி இருந்தாலும் கூட படைப்பாளியை அலட்சியப்படுத்துவதாகவோ அவர்களின் மதிப்பைக் குறைகூறுவதாகவோ இருக்காது.விமர்சனமானது ஊக்கம் கொடுப்பதோடு படைப்புகளின் பயனை சமூகம் பெறத்தக்கனவாகவும் உதவும்.

ஒவ்வொரு பதிவும் படைப்பாளியையைப் பொறுத்தமட்டில் முழுமையானதாகவே இருக்கும். பூரண திருப்தியோடுதான் பதிவைப் படைப்பான்.தவறுகளை உணரச் சந்தர்ப்பம் இல்லை. உணரும் தருணங்களில் தவறுகளைத் திருத்தியே பதிவிடுகிறான்.எனவே பதிவு முழுவெற்றியானதே அவனைப் பொறுத்தவரை.

ஆனால் பார்வையாளன் முதலில் ரசிகனாகி நன்மை தீமை பாதிப்பை எண்ணி குறைநிறைகளை சொல்ல நினைத்து விமர்சிக்கிறான்.அது படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் உதவியாகவே அமைகிறது.ஒவ்வொரு கலைக்கும் ஆர்வலர்கள் நிச்சயம் தேவை.அந்த ஆர்வலர்களாக விமர்சகர்கள் இருக்கவேண்டும்.

சும்மா சொல்லும் புகழும் ரசனையும் எந்த விதத்திலும் பயனில்லாதது.
மனதிலும் படைப்புப் பற்றிய சந்தேகமும் நீங்காமல் இருக்கும்.நாம் சில சமயங்களில் சுயசிந்தனையை அடகு வைத்து மற்றவர்களது ரசனைக்கே தலையாட்டுகிறோம்.

"ரசனை என்பது மேதாவித்தனம் சமூக அந்தஸ்தின் அடையாளம் என்றும் கருதப்படும்போது விளைந்த வேடிக்கையில் இதுவும் ஒன்று".

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் ஒரு கண்காட்சியில் ஏராளமான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.ஒரு குறிப்பிட்ட ஓவியத்திற்கு நிறையப்பேர்களின் ரசிப்பில் பாராட்டில் முதற்பரிசும் கிடைத்தது.மேகத்திலிருந்து ஒரு தேவதை வெளிவருவதுபோல இருந்த ஓவியம் அது.அதன்பின் அந்த ஓவியக் கண்காட்சியைப் பார்க்க வந்த ஒருவர் அது தலைகீழாக மாட்டப்பட்டு இருப்பதாக நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தார்.ஓவியத்துடன் வந்த குறிப்புக்களைப் பார்த்த நிர்வாகிகள் உண்மை என ஒப்புக்கொண்டனர்.

எனவே ஒரு விமர்சகன் படைப்பை ரசிக்கிறபோது மற்றவர் கருத்தை விடுத்து தன் கருத்தைச் சுயமாகக் கூர்ந்து கவனித்து உண்மை ரசனையைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் தந்து படைப்பாளிக்கும் முழுமையான தெளிவைக் கொடுக்கலாம்.விமர்சகன் என்பவன் கலை இலக்கியப் படைப்புக்களை அடித்தளமாகக் கொண்டு தனது வாழ்வை விசாரணை செய்துகொள்பவன்.அதன்மூலம் அவனுக்கென்று ஒரு கண்ணோட்டம் உருவாகி வரும். அதையே நாம் விமர்சனக் கோட்பாடு என்கிறோம்.நம் படைப்புக்களை அணுகும் விதத்தை மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

இந்தக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு படைப்புக்கள் வெளியாவதில்லை.படைப்பாளிக்குப் படைப்பே முக்கியமானதாகும்.பார்வையாளனே படைப்பையும் விமர்சனத்தையும் நோக்கவேண்டும்.விமர்சனத்தை மட்டும் முடிவாக எடுக்காமல் கூறப்பட்டுள்ள காரணங்களையும் நோக்க வேண்டும்.

விமர்சனங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு நிறைந்தவை நிராகரிக்கப்படு அதன் சிறிய சாரமே சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இத்தகைய விவாதத்தால் மதிப்பீடுகள் கண்ணோட்டங்கள் உருவாகி மறுக்கப்பட்டு பலபுதிய நுணுக்கங்கள்கூடப் பிறக்கும். எனவே படைப்புக்களுக்கு நடுநிலையான சிறப்பான விமர்சனங்கள் படைப்பாளி உணரவும் பார்வையாளன் துல்லியமாக ரசிக்கவும் வழிகாட்டும்.

ஆனால் ரசிகர்கள் அதுவே இறுதி முடிவாகவும் எடுக்காமல் படைப்பாளியும் தன் படைப்பைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகக் கவலைப்படாமல் தவறுகளத் திருத்திப் படைப்புக்களை வெளிக் கொணரவேண்டும்.இவ்வாறாக ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள கலைப்படைப்புக்கள் ரசனை விமர்சனம் ஆகியவற்றைப் படைப்பாளி பார்வையாளன் விமர்சகன் என்று எல்லோருமே கை கோர்த்தபடி கைக்கொண்டு சிறந்த படைப்புக்களை உருவாக்க வழி சமைக்க வேண்டும்.

எனக்கும் சேர்த்தேதான் இந்த விமர்சனம்.எனக்கும் சரியாக விமர்சனம் செய்யத் தெரிவதில்லை.அதற்காக ஒருவரிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டதாலேயே இந்தக் கண்திறப்பு !

ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP