கனவு காணாத மனிதனே இருக்க முடியாது. அது ஒரு தன்னியல்பான நிகழ்வு. மிக அவசியமான நிகழ்வும் கூட.சொல்லப் போனால்,கனவுகள் பல பிரச்னைகளுக்கான தீர்வு, சங்கடங்களை நீக்கும் ஒரு திறவுகோல்.ஆனால் நம்மில் பலர் கனவுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை.சிலரோ கனவுகளுக்கான அர்த்தங்களைத் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்தக் கனவு என்பதுதான் என்ன? அது எப்படி உருவாகிறது? அதன் பொருளை எப்படி உணர்வது?அது தேவைதானா என்பது குறித்ததே இக்கட்டுரை.
நம் மனமானது இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று நனவு மனம் என்று அழைக்கப்படும் வெளிமனம்(Conscious Mind).இன்னொன்று நனவிலி மனம் என்று அழைக்கப்படும் ஆழ்மனம்(Sub-Conscious mind or Un-conscious Mind).நாம் உறங்கும் பொழுது நனவு மனம் ஓய்வெடுக்கிறது.ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது.நனவு மனத்தின் நடவடிக்கைகள் பொதுவாக சொற்களாக,வாக்கியங்களாக வெளிப்படுத்தப் படுகிறது.அதையே சிந்தனை அல்லது எண்ணங்கள் என்கிறோம்.ஆழ்மனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறியீடுகளாகவே வெளிப்படுத்தப் படுகின்றன.இவையே கனவுகள் எனப்படுகின்றன.நனவிலி மனத்தில் தோன்றும் இத்தகைய கனவுகளை நனவு மனத்தின்மூலம் ஆராய நினைப்பது கொஞ்சம் கடினம்.ஏனெனில் இரண்டும் வெவ்வேறு வகையானவை. இது தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ச் செய்யுளை வேறொருமொழியில் மொழிபெயர்க்க முயல்வது போன்றது.
நனவிலி மனமானது ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்பை (Pattern) எதிர்பார்க்கிறது. ஒரு பொருளை தொடர்புடைய மற்றொரு பொருள் மூலம் உணர்த்த முற்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதானால் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது.முடியவும் முடியாது.எடுத்துக்காட்டாக நெருப்பு ஒருவரது கோபத்தையும், சிறை போன்ற இடத்தில் மாட்டிக்கொள்வது,மீளமுடியாத ஏதோ ஒரு சிக்கலில் நம் மனம் மாட்டிக்கொண்டு தவிப்பதையும் உணர்த்தலாம்.
ஏதோ ஒரு மனக்குழப்பத்துடன் படுக்கைக்குச் செல்கிறீர்கள்.பல சமயம் நீங்கள் விழித்தெழுகையில் அக்குழப்பம் தீர்ந்துபோய் விட்டது போல் உணரக்கூடும்.ஆழ்மனம் உங்கள் உறக்கத்தின் பொழுது கனவுகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டி விட்டது.சொல்லப் போனால் ஆழ்மனம் மிகுந்த சக்தியை உடையது.இது குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.நீங்கள் பார்த்தவை,படித்தவை,கேட்டவை,உங்கள் மேல்மனத்தில் நினைத்தவை இவை அனைத்தும் ஆழ்மனத்தில் சேமிக்கப் படுகின்றன.உங்கள் நனவு மனம் சோர்ந்து உறங்குகையில் ஆழ்மனம் இந்தச் செய்திகளைத் தொகுத்துப் பார்த்து நமது சிக்கலுக்கான விடையைக் கண்டறிய உதவுகிறது.
முதலிலேயே சொன்னபடி ஆழ்மனம் இவற்றைப் பல குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்துகிறது.ஆழ்மனத்தின் இந்நிகழ்வினையே நாம் கனவு என்கிறோம்.இது குறித்து சுவையான கதை ஒன்றுண்டு.இன்றைய தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவரான விஞ்ஞானி "சிங்கர் மெரிட்" தம் தையல் இயந்திரத்தில் நூலை ஊசியில் எப்படிக் கோர்த்தால் சரியாக இருக்கும்,இயந்திரம் தடையின்றி இயங்க இயலும் என்பது குறித்து மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டவாறே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாராம்.தூக்கத்தில் அவரை செவ்விந்தியர்கள் சூழ்ந்துகொண்டு நுனியில் துளையுள்ள ஈட்டி கொண்டு குத்த வருவதைப் போல் அவருக்குக் கனவு வந்ததாம்.அவருடைய குழப்பத்திற்கு விடை கிடைத்துவிட்டது.இன்று நாம் பயன்படுத்தும் தையல் இயந்திரங்களில் ஊசியின் முனையில் உள்ள துளையில் நூல் கோர்க்கப் படுவது நாம் அறிந்ததே அல்லவா !

நனவிலி மனமே கனவின் தாய்வீடு ஆகும்.இங்குதான் நமது அடிப்படையான எண்ணங்கள் வலுவடைகின்றன.இங்குதான் நமது உணர்ச்சிகள்,கருத்துகள்,அறிவு அனைத்தும் உருப்பெறுகின்றன.மேல் மனத்தில் தோன்றும் எண்ணம் எதுவாக இருப்பினும் அது முதலில் நனவிலி மனத்தின் வாயிலாக கனவு மூலம் அறிவுறுத்தப் பட்டதாகவே இருக்கும்.ஆனால் நாம் ஒவ்வொன்றையும் பிரித்தறிய இயலாததால் அனைத்தையும் மேல்மனத்தின் சிந்தனைகள்,செயல்பாடுகள் என்றே கருதுகிறோம்.
சிலர் தங்களுக்குக் கனவுகளே வருவதில்லை என்று கூறுவர்.இது உண்மையில்லை.அனைவரும் கனவு காண்பதுண்டு.சிலர் அதை விழித்தபின்னும் நினைவு வைத்திருப்பர்.சிலருக்கு விழிப்பு வருகையில் கனவு கண்டதே மறந்துவிடும்.இதற்கு போதைப்பொருட்கள் உட்கொள்தல்,மது அருந்துதல்,அளவுக்கு அதிக வேலைப்பளு,மன உளைச்சல் இவை காரணமாக இருக்கக் கூடும்.சிலருக்கோ, பிறப்பிலேயே ஏற்படும் ஜீன் கோளாறு காரணமாக தம் கனவுகள் எதுவும் நினைவுக்கு வருவதில்லை.அவ்வளவுதானே தவிர கனவே வராமல் இருக்கும் சாத்தியமே கிடையாது.ஏனெனில் இது மூளையின் ஒரு செயல்பாடு.
தூக்கத்தில் நான்கு நிலைகள் உண்டு.ஒவ்வொரு நிலையும் சுழற்சி முறையில் வரும். இந்த ஒவ்வொரு நிலையும் ஒன்று முதல் ஒன்றரை நேரம் இருக்கும்.அதில் REM (Rapid Eye Movement) என்ற நிலையில் கனவுகள் தோன்றுகின்றன.தூக்கத்தின் பொழுது ஒரு சராசரி மனிதனுக்கு மூன்று முதல் ஐந்து கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.முழுமையான எட்டு மணி நேரத்தூக்கம் ஒருவருக்கு இருக்குமானால் அதில் சராசரியாக இரண்டு மணி நேரம் கனவுகளில் செலவிடப்படுகிறது. ஆனால் எல்லாக் கனவுகளும் விழித்த பின் நினைவுக்கு வரவேண்டும் என்று அவசியமில்லை.
கனவுகள் ஏன் தோன்றுகின்றன என்பதற்குத் திட்டவட்டமான விடை எதுவும் இதுவரை இல்லை.ஆனால் கனவுகள் மூளை புத்துணர்வு அடைய அவசியமான ஒரு நிகழ்வு என அறிஞர்கள் கருதுகின்றனர். நாம் கணிணியில் Defragmentation என்று ஒரு நிரலைப் பயன்படுத்துகிறோமல்லவா? இது சிதறிக்கிடக்கும் கோப்புகளை நமது Hard Disk Drive இல் ஒழுங்கு படுத்தி வைக்க உதவும் நிரல்.இதனால் நமது தேடும் நேரம் குறைகிறது.அதே போல் வேண்டாத கோப்புகளையும்,நிரல்களையும் நீக்கும் சில மென்பொருட்களும் உள்ளன.இச்செயலினையே நமது மூளை தூக்கத்தின் பொழுது மேற்கொள்கிறது.நனவிலி மனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு தகவல்களை ஒழுங்குபடுத்துவும்,தேவையற்றவற்றை நீக்கவும் உதவுகிறது.வெளியில் சொல்ல இயலாமல் நாம் மறைத்து மற்றும் புதைத்து வைத்திருக்கும் கோபம்,துயரம் ஆகியவற்றினை மூளை கனவுகள் மூலமாக விடுவிக்கிறது அல்லது வெளியிடுகிறது. இதனால் மனம் லேசாகின்றது.எவ்வளவு பெரிய துயரமானாலும், அதிர்ச்சியானாலும், நாம் சில நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பிவிட உதவும் செயல்பாடு இதுவே.
நம் மனத்தில் தீராத குழப்பங்கள் விடை தெரியாத வினாக்கள் நிரம்பியிருப்பின் ஒரே கனவானது திரும்பத்திரும்ப வரக்கூடும்.உங்கள் கனவின் பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால் உங்கள் கனவில் வந்த நிகழ்வை அலசாமல் உங்கள் எண்ணங்கள்,நீங்கள் பார்த்த ஏதேனும் நிகழ்வுகள்,நீங்கள் யாருடனாவது போட்ட சண்டை முதலானவற்றை அலசிப்பாருங்கள்.உங்கள் கனவுகளுக்கான பொருள் உங்களுக்குக் கண்டிப்பாக விளங்கிவிடும்.
என்றாலும்....நல்லது நடக்கவும் நல்லவராய் வாழவும் கனவுகள் காண்போம் !
----------------------------------------------------------------
நட்புடன்...முரளி.
வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!