
சரணைக் கடந்து போன தாமரை தன் நெருங்கிய தோழி வீணாவுடன் மிக சுவாரஸ்யமாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.சற்று நேரத்தில் வீணா அந்த இடம்விட்டுப் போன பிறகு நேரே சரணை நோக்கி வந்தவள் திடீர் என்று கையில் இருந்த புத்தகமொன்றை வேண்டுமென்றே அவன் காலடியில் நழுவவிட்டு இதழோரம் புன்னகை குவித்தவளாய் அவனைத் தாண்டிச் சென்றாள்.இன்னொரு பாடல் தந்து கடந்தது வாசனைத் தாமரை.....!
சரண் மெதுவாகப் புத்தகத்தை கையில் எடுத்தான்.இளம் தாய் ஒரு சிசுவை தழுவும் மென்மை அவன் கைகளில் குடியிருந்தது.அது யாரோ எழுதிய கவிதை தொகுப்பொன்று.புத்தகத்தின் இதழ்கள் வழியே ஒரு கடிதவுறை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.அவசரமாக கடிதவுறையைக் கிழித்து கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் தாமரை தந்த தாபால் உறைக்கு வலிக்குமோ...என்று காதலுக்கு மட்டுமே இருக்கும் ஒரு நேசம் சரணின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குரல் கொடுத்ததில் கடிதத்தை பிரிப்பதற்குள் அவன் கைகளில் தஞ்சமிருந்த கைக்கடிகாரத்தின் சிறிய முள் முப்பது முறை ஓடி மூச்சு வாங்கியது.காற்றில் தவழ்ந்து வந்த பாடலொன்று அந்த முப்பது நொடிகளைத் தாலாட்டியது.
வலிக்காத போராட்டத்தின் இறுதியில் வெற்றியோடு கடிதத்தை பிரித்தான் சரண்."மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உங்கள் மடியில் புரளும் கற்பனை நினைவுகளை அசைபோட்டபடி....என் இதயம் எழுதுகோலுக்குள் இறங்கி வடிக்கும் என் முதல் மடல் இது....!
தாமரையின் முதல் வரிகள் அவள் கவித்துவத்தோடு சேர்த்து அவள் கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்தையும் சரணின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த அவனுக்கும் கவி நிறைந்த பாடலொன்று நினவிற்கு வந்தது.
"என் அன்புக்கு... நீங்கள் என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதனையும்,அதை எத்தனையோ தடவை சொல்ல வந்தும் உங்களால் சொல்ல முடியாமல் போனதனையும் நானறிவேன்"
அதே போல் தான் நானும்... உங்களை என் உயிருக்குள் வைத்து இரண்டு வருடமாக காதலித்தும் உங்களிடம் நேரடியாக சொல்ல முடியாமல் நான் வடித்த கண்ணீர் என் தலையணைக்கு மட்டுமே தெரியும்.என் இதயத்தின் சாவி உங்களிடம் இருக்கும்போது இனியும் அதை பூட்டி வைக்கும் சக்தி எனக்கு இல்லை.மேலும் .....
காதலித்த செய்தியைக் காதலர்க்கு சொல்லாமல் கணவருக்குச் சொன்னவர்கள் வரிசையில் என்னையும் வரித்து இறுக்க எனக்கு விருப்பமில்லை.அதனால் தான் என் இதயத்தை இந்த மடலில் இறக்கி வைக்கிறேன்.
எத்தனையோ பேர் எனக்காகக் காத்திருந்தாலும் என் மனது ஏற்றுக்கொண்டது உன்னை மட்டும் தானடா! இனி நீயே மறுத்தாலும் உன்னை என்னால் மறக்க முடியாது.நீ வேணும்டா செல்லம்...!"
இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
அன்பைக் குழைத்து ஒருமையில் மயக்கியிருந்தாள் தாமரை.பூபாளம் பாடியது சரணின் மனது அவளோடு ....!
வாசித்து முடித்த சரணால் சந்தோஷத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவன் கண்கள் ஆனந்த கண்ணீராய் பூக்களை உதிர்த்தது.கண்களை நீர் மறைக்க கடிதத்தை முத்தமிட்டபடியே கடித உறையைத் திருப்பினான்.
கடிதவுறையின் முன்புறமாக சிவப்பு நிற மையினால் எழுதப்பட்டிருந்த வாசகம் அவன் கண்களில் அப்பொழுதுதான் பட்டது.
"நான் எவ்வளவு முயற்சித்தும் உங்கள் நண்பன் ஆதியைச் சந்திக்க முடியவில்லை.தயவு செய்து உங்களுக்கு முடியுமானால் இந்த கடிதத்தை அவரிடம் சேர்க்கவும்!
அவன் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர்ப் பூக்களில் இப்போ உப்புக் கரிப்பதை உணர்ந்தான் சரண்.
முதல் காதலின் நினைவுகளை அழிக்கும் சக்தி எந்த நிமிஷக் கறையான்களுக்கும் இல்லை என்பதைச் சரண் யாரிடமும் சொல்லவில்லை இதுவரை.
வீட்டிற்குள் பந்து அடித்து விளையாடிக்கொண்டிருந்த மகனிடம்...
மது...வீட்டிற்குள் பந்து அடிக்காதே.ஏதாவது உடைத்தால் உதை வாங்குவாய்.
அவன் மனைவியோ....ம் என்ன இருக்கிறது இங்கு உடைக்க.10 ரூபாயும் பெறாத யாரோ கொடுத்ததாய் திருமணமாகி வந்தபோதே அவன் அறையில் இருந்த அந்தத் தாமரைவடிவ மெழுகுதிரியைத் தவிர.

அந்த மெழுகுத்தாமரை பாடசாலை விழா ஒன்றில் தாமரைக்குக் கொடுக்கவென்றே வாங்கிக் கொடுக்காமல் விட்டது।அதைக் காணும்போதெல்லாம் அந்த விழாவில் தாமரை பாடிய பாடலொன்றும் அது யாருக்கோ பாடியிருப்பாள் என்று நினைத்தாலும், தனக்குத்தானென்று கற்பனையில் மிதந்த நினைவும் எப்போதும் வராமல் போனதில்லை சரணுக்கு!
பாடல்களுக்காகவே இந்தத் தொடரை எழுத விரும்பினேன்.அன்பின் சகோதரி ஆமினாவுக்கு மிக்க நன்றி.எப்போதும் தொடர்களைத் தொடர யாரிடமும் சொல்வதில்லை.
என்றாலும்....பாடல் ரசனையுள்ள.....
சுவாரஸ்யமாக எழுதுவார்கள் இவர்கள்.ரசிக்க விருப்பத்தோடு இவர்களைத் தொடரச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறேன் !