Monday, November 17, 2008

ஈழம் கண்ட துயரம்(1)

சிங்களப்படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அங்கேயிருந்த ஐந்து இலட்சம் தமிழ்மக்கள் வெளியேறினார்கள்.உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட இந்தத் துயர வரலாற்றை விளக்கும் மடல் இது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய ஆடு மாடுகள் போல விரட்டி வந்து மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடைக்க இப்போ ஒரு இலட்சம் சிங்களப்படை தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது.

இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னர் எம் மண்ணிலிருந்து
வாழப்போகும்...ஆளப்போகும் இன்றைய தலைமுறைக்கு எம் மண் கொடுத்த விலையிருக்கிறதே...அது பெரிது.எல்லாவற்றையும் எழுத்தில் பொறிக்க முடியாது.வார்த்தைக்குள்ளும் அவை வந்து குந்தாது.

எப்படி எடுத்து விரித்தாலும் அளந்தறியா
"துயர நிலாவரை"
மொழிபெயர்ப்புக் கவிதையைப்போல மூலத்தின் முழுமையும் முகம் காட்டாது.

நாங்கள் சுமந்த துன்பச் சுமையை உங்கள் தோள்கள் அறியாது.அன்று அடித்த எங்கள் இதயத்துடிப்பைக் காடும் கடந்து எவரும் கணக்கெடுக்க முடியாது.கல் அடித்த வேதனை காலுக்குத்தான் தெரியும்.

ஒருநாள் கருத்தரித்த சூரியனை மறைக்க மாரிமழை பெய்யும்.ஐப்பசி மாதம் 30.10.1995 அன்று திங்கட்கிழமைவெய்யோன் படுவான் திசை வாய்க்குள் இரையாகும் வேளை சந்தியா நேரம்...ஐந்து மணி...பேய்கள் வருவதாகப் பேசப்பட்டது.சிங்களப் பிசாசுகள் எம் நிலம் புகுந்து,கோரப்பசிக்குக் குடிசைகள் விழுங்கியபடி. புத்தூர்,சிறுப்பிட்டி,நீர்வேலி,கோப்பாய் என்று விழுங்கியபடி இருபாலைப் பக்கம் எழுவதாய் அறிந்தோம்.பேய்கள் ஏவிய ஏவுகணைகள் ஊருக்குள் உயிர் குடிக்கத் தொடங்கின.நின்று நிதானிக்க நேரமில்லை.அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஆண்டாண்டு காலம் பற்றிப்படர்ந்த சொந்தங்களைப் பிரிந்தோம்.ஊர் வெள்ளம்கூடி ஒரு குளத்தில் நிறைவதுபோல "வலிகாமம்"ஓடிவந்து செம்மணியில் திரண்டது.பொழுது புலரத்தொடங்கியதும் முத்திரைச் சந்தைக்கு மூச்சுத் திணறியது.

செம்மணித் தெருவில் எடுத்தகால் வைக்க இடமின்றி நின்றோம்.பின் ஊர்ந்தோம்.இட்டகாலுக்கும் எடுத்தகாலுக்கும் இடையில் இரண்டங்குல வெளியில் நாங்கள் நடந்தோம்.இல்லை...மெல்ல மெல்ல ஊர்ந்தோம்.பத்து மைல் நீளத்திற்குப் பாம்பென நெளிந்தது சனத்திரளின் வரிசை.தரவின் கடலின்மேல் அவலக் குரல் எழுப்பி ஆட்காட்டிகள் எமக்காகக் கத்தின.

மழை மேகம் விழி பனித்துச் சொட்டுச் சொட்டாகத் தோளில் விழுந்தது.நாங்கள் நடந்தோம்.உள்ளே சின்ன உயிர் சுமந்து வயிறூதிய தாயாரும் வரிசையில்!பக்கவாதத்தால் படுக்கையில் கிடந்த நோயாளிச் சீக்காளரும் வரிசையில்!தள்ளாத வயதில் தடுமாறிய மூப்படைந்த பெற்றோர்,முதியோர்,பூப்படைந்த குருதிப் பெருக்குடன் புதிய குமரிகள், கைத்தடியுடன் காலிழந்தோர்,வெள்ளைப் பிரம்புடன் விழியிழந்தோர்,இன்னும் உயிர்காக்கத் துடித்தோர் எல்லாம் அதே வரிசையில் அணிவகுத்திருந்தோம்.கையில் சுமையுடன் தலையில் சுமையுடன் நெஞ்சில் கனத்த துன்பச் சுமையுடனும் நாவற்குழிப் பாலம் ஏறி நகர்ந்தோம்.

கையில் பிடித்து இழுத்து வந்த முதுமைகள் சில
மூச்சைத் துறந்தன.கரையில் கிடத்தி வந்தோம்.மூச்சுத்
திணறிய சின்னப் பூக்கள் சில பேச்சுக் குரல்
அடங்கிப்போயின.தூக்கியபோது பிள்ளையாகவும் கிடத்தினபோது பிணமாகவும் இறக்கினோம்.

உப்பேரிக்குள் ஒரு பாதை உருவாக்கி இறங்கிய சிலர் கழுத்தளவு நீரில் கரைந்தனர்.சிலர் சேற்றில் அமிழ்ந்து போயினர்.பேரும் தெரியாத அந்தப் புதியவரை யாரும் தேடவேயில்லை.தேடும் நிலையிலும் இல்லை.

பத்து மணிக்கு நிலவு பட்டுப்போக எத்தனை இடர்பட்டோம்!எவருக்கும் எவரையும் தெரியவில்லை.ஒரு கைக்கணக்கில் ஊர்ந்தோம்.
கணவனின் கைப்பிடித்து வந்தவள் இன்னொருவரிடம் இடம் மாறிப் போனாள்.பேச்சுக் குரலில் பின்னர்... இனம் கண்டு பெயர் சொல்லிக் கூவிய குரல்கள் நாவற்குழியையே நடுநடுங்க வைத்தன.

பாலுக்கு அழுதன குழந்தைகளின் வாய்கள்.முலையிருந்தும் முடிச்சவிழ்க்க முடியாமல் தனக்குள் அழுதது தாய்மை.பசிக்குதென்று சொல்லிற்று பிள்ளை.பெற்றவள் வயிறு பற்றி எரிந்தது.பேசாமல் வா எனச் சொல்லி நடந்தாள்.தண்ணீர் கேட்டன தளிர்கள்.என்னதான் செய்ய முடியும்...!கடல் நீரையா காட்டலாம்!காதில் ஏறாத பாவனையில் யாரும் வாயே திறக்கவில்லை.பயணம் தொடர்ந்தது.
"ஊரழுத கண்ணீரால் உப்பேரி ஒரு முழம் உயர்ந்தது."

மழை நீரும் விழி நீரும் கலந்து தமிழீழம் நனைந்தது.போய் ஆறும் இடமின்றிப் புறப்பட்டோம்.எங்கு போய்த் தங்குவது...?வழி நெடுக இதுவே கனத்து அழுதியது மனதை.கொட்டும் மழை,குதறும் குளிர்,கும்மிருட்டு.கையில் சுமை...வயிற்றில் பசி..எனினும் நடந்தோம்.வாழ்வுக்கு அதிபதிகள் மூன்று இரவும் இரண்டு பகலும் முடிய வலிகாமம் வழித்துத் துடைக்கப்பட்டது.

அவ்வளவு சனமும் தென்மராட்சியில் அடைக்கலம் பெற்று ஆறியது.எந்தப் பெரிய துயருற்றோம்.எனினும் தளரவில்லை.வந்த வாழ்வு மீண்டும் துளிர்த்தது.கொட்டில்கள் கட்டக் கம்புகள் தேடினோம்.கிடுகு பறித்தோம்.அங்கங்கே முளைத்தன குடிசைகள்.தலை குனிந்து செல்லும் சிறு கொட்டிலானாலும் கால் நீட்டிப் படுக்க நிலமில்லையானாலும் பேயிடம் பிடிபடாதோர் என்கிற பெருமை எம் தலைமுறை கொண்டது.
(துயரம் தொடரும்)

உயிரைப் பிழியும் உண்மைகள் பதிவிலிருந்து.


ஹேமா(சுவிஸ்)

18 comments:

கானா பிரபா said...

நம் தாயகத்தின் துயர் மிகு வாழ்வை ஆவணப்படுத்தும் விதம் சிறப்பாக இருக்கிறது ஹேமா. தொடருங்கள்


இன்று தான் உங்கள் புதுத்தளம் கண்டேன் வெகு சிறப்பாக இருக்கின்றது, ஆனால் முகப்பில் எம் முன்னோர்கள் (;-))படத்திற்குப் பதில் தாயகத்து நிழற்படத்தை இட்டால் சிறப்பாக இருக்கும்.

மெல்போர்ன் கமல் said...

வணக்கம் ஹேமா அக்கா! என்னை சினிமாத் தொடருக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி! எனக்கு இப்போது நேரம் இல்லை. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகின்றேன்!

மெல்போர்ன் கமல் said...

தமிழீழத்தின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை ஜயாவின் கவி வரிகளை அப்படியே பதிவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கு.

ஈழவன் said...

புதுவை இரத்தினதுரையின் உணர்ச்சிக் கவி வரிகள் இவை ஹேமா!

கோர்வையைப் பிரித்து கவி வடிவில் பதிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

என்னிடம் புதுவை இரத்தினதுரையின் சாரீரத்துடனாக இக் கவி வரிகள் உள்ளன விரைவில் பதிவு செய்கின்றேன்.

ஹேமா, said...

பிரபா,என் புதிய தளத்திற்கு வந்து கருத்தும் தந்தமைக்கு மிக்க நன்றி.முகப்பின் படம் பற்றி யோசிக்கிறேன்.இங்கு தாயகம் மட்டும் பதிவாகாது.அதனால்தான்....

ஹேமா, said...

கமல் நன்றி.நேரம் கிடைக்கும்போது சினிமாத் தொடரைப் பதிவாக்குங்கள்.


ஈழவன் நன்றி உங்களுக்கும்.

கபீஷ் said...

படிச்சு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.

kamal said...

றேடியோஸ்பதி பிரபா அண்ணா, சாரல் தூவும் நம்ம சயந்தன் அண்ணா, சிநேகிதி அக்கா, பண்டைத்தமிழ் மொழி பெயர்க்கும் வசந்தன் அண்ணை, சோமி அண்ணாவிற்குப் பிறகு நாமளும் குரல் பதிவு தொடங்கிட்டமில்ல?????
குரல் பதிவைக் கேட்க கீழே சொடுக்கவும்.

ஹேமா, said...

நன்றி கபீஷ்.மிண்டும் வாருங்கள்.

கமல் தம்பி,கலக்கிறியள் போல வாரன் வாரன் கேக்க.

சயந்தன் said...

கனதியாய் எழுதுகிறீர்கள். சுவிற்சர்லாந்திலிருந்து பதிவர்கள் பெருகுவது மகிழ்ச்சி :)

தமிழன்-கறுப்பி... said...

ஹேமா புதிய தளத்தினூடான உங்கள் பின்னூட்டங்களை ஏற்கனவே வேறெங்கோ பார்த்த ஞாபகம்...ஆனாலும் அப்பொழுது வந்து பார்க்கவில்லை இப்பொழுது வாசிக்கிறேன்...
கனக்க வைக்கிறீர்கள் இந்த துயரங்களை, வரலாற்றை உணர்வுகளோடு ஆவணமாக பதிய வேண்டும் என்பது என்னுடைய ஏக்கமும் தொடர்ந்து பதியுங்கள்...

ஹேமா, said...

வாங்க வணக்கம் சயந்தன்.
நீங்கள்தான் கமலின் சயந்தன் அண்ணாவா?மனதின் கனங்களை குறைக்க எழுத்து ஒரு நல்ல வழி.அடிக்கடி வாருங்கள் சயந்தன்.நன்றியும் கூட.

ஹேமா, said...

வாங்க தமிழன்.என் புதிய தளத்திற்கு உங்கள் முதல் வருகை.நன்றி.எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் ஆவணங்கள் இவைகள்தானே!

த.அகிலன said...

நல்லபதிவுதான் ஹேமா..

//பேயிடம் பிடிபடாதோர் என்கிற பெருமை எம் தலைமுறை கொண்டது.//
ஹா ஹா ஹா ...

குறைவிளங்கப்படாது ஒண்டு கேட்டால் அப்ப எல்லாரும் இராணுவம் இருக்கும்போதே திரும்பி யாழ்ப்பாணம் போனதை என்னண்டு சொல்லுவியள்.. பேயிடம் திரும்பிய குஞ்சுகள் எண்டோ..(தோணிச்சு கேட்டன்)

ஹேமா, said...

//இராணுவம் இருக்கும்போதே திரும்பி யாழ்ப்பாணம் போனதை என்னண்டு சொல்லுவியள்.. பேயிடம் திரும்பிய குஞ்சுகள் எண்டோ//

வணக்கம் அகிலன் வாங்கோ.முதன் முதல் வரேக்கையே எனக்கும் யோசிக்கத் தூண்டிய சந்தேகத்தோட வந்திட்டிங்கள்.நீங்கள் சொன்னதை யோசிச்சால்உண்மைதான்.ஒருவேளை அவர்கள் படுகிற வேதனைக்கு எங்காலும் கொஞ்சம் அமைதி கிடைச்சால் போதும் என்கிற நினைவாயிருக்கலாம்.
அந்த அமைதி அவர்களுக்கு எந்த வழி...யார் தருகிறார்கள்...எவ்வளவு காலத்திற்கு என்கிற கேள்வியில்லைதானே.
இப்படி யோசிக்கலாமோ!

காரூரன் said...

மனத்தின் கனத்தை குறைப்பது வெளிப்பாடு.. அது வார்த்தைகளாய், கவிதைகளாய், கதைகளாய் உப்பு மடச் சந்திக்கு வரட்டும். தொடருங்கள். வாழ்த்தும் அளவுக்கு நான் வளராவிட்டாலும் ஓர் வலய நட்பாய் எனது வாழ்த்துக்கள்.

ஹேமா, said...

வாங்க காரூரன்.நன்றி வாழ்த்துக்களுக்கு.உங்களைப் போல எல்லோருடைய ஆதரவும் வரும் என்ற நம்பிக்கையிலேயே தொடங்கியிருக்கிறேன்.ஊக்கம் தாருங்கள்.நானும் செயல்படுகிறேன்.நன்றி.

இசக்கிமுத்து said...

படிக்கிறபோதே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே, அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். நினைத்து பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது!!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP