Monday, April 20, 2009

அகதிகளாக்கப்பட்ட பூர்வீகக் குடியும்-உலக நாடுகளின் இராஜதந்திரப் பயணமும்.

சொந்த நிலத்தில் வாழ்ந்த பூர்வீகக் குடி ஒன்றை நிரந்தர அகதியாக்கி,அதில் அரசியல் இலாபம் தேடும் உலக நாடுகளின் இராஜதந்திரப் பயணம்.
இன்று எல்லா உலக நாடுகளும் ஒருமித்த குரலில் சிறிலங்காப் படையினரால் குறுகிய பிரதேசத்துள் அடக்கப்பட்டுள்ள மக்களை வெளியே வரும்படி கோரிக்கை விடுக்கின்றது.அப்படிக் கோரிக்கை விடுவது சரியா? தமிழ் மக்கள் பகடைகளாக்கப்பட்டு உலக அரங்கில் அரசியல் பொருளாக்கப்பட்டுக் காலங்கள் கழிந்தோடிக் கொண்டுள்ளது.மக்களின் இறப்பு எண்ணிக்கைகள் கணக்கிடப்பட்டுக் கொண்டுள்ளதே தவிர இதுவரை தடுத்து நிறுத்தும் தைரியம் ஒருவருக்கும் வரவில்லை.அல்லது வந்ததாகக் கூட காட்டவில்லை.

ஏதோ தமிழ் மக்கள் தாமாக இவ் சூழ்நிலைக்குள் அதாவது யுத்ததிற்குள் தங்களை இட்டுக் கொண்டதாகக் காட்டி அறிவுரை கூறுவதில் மாத்திரம் எல்லோரும் உள்ளார்களே தவிர மனித உயிர்கள் வீம்புக்காகப் பறிக்கப்படுவது பற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டவர்களாகப் புலம்பெயர் மற்றும் உலகவாழ் தமிழர் தவிர்ந்த ஒருவரையும் இதுவரை காண முடியவில்லை. அதில் சில தமிழர் பேச்சுக்களும் தமிழ் அழிப்புக்குத் துணைபோவதும் நடந்து கொண்டுள்ளது. அவர்கள் வெறும் சுயலாப அரசியல் நடத்தும் அரசியல் ஏதிலிகள் என்பது மக்களுக்கு நன்குதெரியும்.அவர்களுக்கும் நன்கு தெரியும்.

தமிழ் மக்கள் இவ் அவலநிலையை வலிந்து பெற்றுக் கொண்டதாகத் கூறத்தலைப்படும் உலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மிகத் தெளிவாகப் புரிய வேண்டிய விடயம்.தமிழ் மக்கள் எக்காலத்திலும் போரையும் யுத்தத்தினையும் விரும்பியவர்கள் இல்லை.அதை வலிந்து ஏற்றுக் கொண்டவரும் இல்லை.சிறிலங்கா அரசுக்குப் புரியாவிட்டாலும் இந்தியாவின் பல அரசியற் பிரமுகர்கள் மற்றும் கொள்ளை வகுப்பாளர்கள் இதை புரிந்திருப்பார்கள். அதாவது உலகைவிடச் சிறிலங்காவின் யுத்த வெறிபிடித்த அரசியல்வாதிகளை விட இந்தியா சார்ந்தவர்கள் தமிழ் மக்கள் நிலையை புரிந்திருப்பார்கள்.

சிறிலங்கா ஒப்புக்கு கூறிவரும் விடயங்கள் தவிர்ந்து சிறிலங்காவுக்கும் நன்கு தெரியும்.தமிழ் மக்கள் மீது தான் யுத்தத்தினை திணித்துள்ளோமா? இல்லை தமிழ் மக்கள் யுத்தத்தினை விரும்பினார்களா என்று? எனவே யுத்தம் திணிக்கப்பட்டுள்ள ஒரு இனம் சார் மக்களாக இன்று ஈழத்தமிழ் மக்கள் உள்ளார்கள். அந்நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளார்கள். ஈழப்போராட்டத்தின் பக்கங்கள் மிகத் தெளிவாக விட்டுச் சென்ற விடயங்கள் என்ன என்பது தெரிந்தவர்களும் இதைப் புரிந்திருப்பார்கள்.

வன்னியில் யுத்தப்பிரதேசத்தில உள்ள அப்பாவித் தமிழ் பொதுமக்கள் சிறிலங்காப் படையினராலும் சிறிலங்கா அரசினாலும் தமது தேர்தல் வெற்றிகளுக்கும் ஆட்சி நீடிப்புக்கும் பொருளாதார சரிவை மூடி மறைப்பதற்கும் பணயப் பொருளாக வைக்கப்பட்டுள்ள மக்கள் என்பது நாங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.மாறாக உலகம் கூறுவதுபோன்று சிறிலங்கா மற்றும் இந்தியா கூறுவது போன்று அவர்கள் யுத்தப்பகுதியில் அகப்பட்டுள்ள மக்கள் என்னும் பதப்பிரயோகம் முற்றிலும் தவறானது.பிரயோகிக்க முடியாதது.சிறிலங்காவின்,உலகத்தின் அரசியல் இலாபங்களுக்குப் பொருளாதார இருப்புக்கு ஆக்கிரமிப்புக்கு அடகு வைக்கப்பட்டுள்ள மக்கள் அவர்கள் என்பதும் இதில் அடங்கும்.எனவே இதுவரை யுத்தில் சிக்கியுள்ள மக்கள் என்னும் பதத்தின் மூலம் அவர்கள் விழிக்கப்பட்டு வந்தது முற்றலும் தவறு.ஒரு இனம் சார்நத பூர்வீகக் குடிசார்ந்த நிலம் சார்ந்த மக்களாகிய வடபுல சிறிலங்காவின் முற்று முழுதான தமிழர் நிலம் சார்ந்த மக்கள் அவர்கள் அவர்கள் தமது சொந்த நிலத்தில் வாழ விரும்பும் சராசரி மக்கள் தமது சொந்த வளங்களை நுகரும் உரிமையுடைய மக்கள்.இதைச் சர்வதேசம் மறந்துள்ளதா? இல்லை சொந்த நலனுக்காக மறந்ததாகக் காட்டிக் கொள்கின்றதா தெரியவில்லை?

அமெரிக்க அதிபராக ஓபாமா ஆட்சிமேடையில் ஏறும்போது இவ் பூமியில் அனைவரும் வாழும் உரித்து கொண்டவர் என பேசிய விடயம் ஒன்றை இங்கு நினைவு கூரலாம்.
அடுத்தடுத்து அறிவுரைகள் கூறுவதிலும் நீலிக்கண்ணீர் வடிப்பதில் தம்மை விஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதை காட்ட போட்டி போடும் அவர்கள் உலக நாடுகள் சில அடிப்படை விடங்களை மறந்துள்ளார்கள்.அல்லது மறந்தவர்களாக காட்டிக் கொண்டுள்ளார்கள்.

விமர்சனங்கள் கூறுவதும் குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதும் தான் அவர்கள் செய்யும் பிரதான காரியம்.உண்மைகளை புரிந்து நியாயத்தின் படி மனிதாபிமானத்தின் படி நடந்து கொள்ள அவர்கள் தவறுகின்றார்கள் என்பது வெளிப்படை. அதற்கான முற்று முழுதான காரணம் சுயநலம் அதிலும் இந்தியா என்னும் பாரிய தேசத்தின் மிகையளவான தலையீடுகள் என்பதை மறுத்துரைக்க முடியாது.

வன்னிக்குள் யுத்தப்பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்கள் என்னும் பதப்பிரயோகத்தின் மூலம் அந்த மக்களை வேறுபடுத்துவதற்கு சிறிலங்காவுக்கு உலகம் ஒத்து நிற்கின்றது. அவர்களின் பூர்வீக நிலம்.அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம்.அதில் அவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள் யாரால் அகதிகள் என்பதை உலகம் புரிய மறுக்கின்றது.

உலகின் இயற்கை அனர்த்தம் ஒன்று நிகழும் போது மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதன்போதான மக்களின் இறப்புக்கு மக்களின் பாதிப்புக்கு அவ் இயற்கை அனர்த்தம் நடந்த பகுதிசார் மக்களா காரணம்? இல்லை இயற்கையா காரணம்? என்பது இன்று சர்வதேசம் கூறும் கருத்துகளுடன் கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.அதாவது பெரும் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களின் தவறா இல்லை இயற்கையின் தவறா? அச்சந்தர்ப்பத்தில் மக்களை குறை கூறுவது சரியா? அது போல் வன்னியில் இன்று மக்கள் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் சிறிலங்கா அரசின் யுத்த வெறியில் சிக்குண்டு இறக்கின்றார்கள். இது யார் தவறு மக்கள் தவறா இல்லை சிறிலங்காவின் தவறா?எனவே நடவடிக்கை எடுக்க வேண்டியது சிறிலங்கா அரசே தவிர அங்குள்ள மக்கள் இல்லை.

சிறிலங்கா அரசு கூறுவது போன்று தமிழ் மக்களையும் தனது நாட்டுப்பிரஜைகள் தாம் சமமாக நடாத்தும் மக்கள் என்றால் அவர்களை சிறிலங்காவின் மக்கள் என்றல்லவா கூறவேண்டும். அவர்களை ஏன் இன்னும் வடக்கு மக்கள் தமிழ் மக்கள் என்று கூறி வருகின்றது. அவர்களுக்கு வேறுநாட்டு மக்களுக்கு உணவு மற்றும் மருந்து அனுப்புவது போன்று புள்ளிவிபரங்கள் சமர்ப்பித்து திருப்திப்படுத்த பார்க்கின்றது.

இவற்றினை நம்பி அதாவது சிறிலங்காவின் போலி வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளை நம்பிய அல்லது நம்பியதாக காட்டிக் கொண்டுள்ள சர்வதேசம் இந்தியாவின் அறிவுரைக்கு அமைய வன்னியில் சிறிலங்காவின் இந்தியாவின் நலனுக்காக அடகு வைக்கப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறி சிறிலங்கா அரசு கூறிவரும் நலன்புரி நிலையம் என்னும் வதைமுகாமுக்குள் வரும்படி தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்.

உலகின் எந்தச் சட்டத்தில் ஒருவர் வலிந்த யுத்தத்தினை நடத்த அதில் பாதிக்கப்பட்டவர்கள் வலிந்த யுத்தம் நடாத்துபவர் பகுதிக்குள் வரும்படி கூறுவது பதியப்பட்டுள்ளது.இனிப் பதியப்பட இருக்கின்றது.மிகத் தொளிவாகத் தெரியும். இனம் படுகொலை செய்யும் ஒரு அரசை நம்பி வாருங்கள்.ஆனால் உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல.நீங்கள் வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பு என்று உலகின் உள்ள அத்தனை நாடுகளின் கோரிக்கைகள்.இது அவற்றின் ஆழ் மனது கோரிக்கையா இல்லை இந்தியாவின் கோரிக்கைக்கு ஜதிபாடும் அவர்களின் பாவனையா தெரியவில்லை.

ஏதோ சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கொலைகள் நடக்கவில்லை இல்லை நடந்ததும் இல்லை என்பது போல் இந்தியாவின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றது.உலகம் அதற்கு ஒத்து ஊதுகின்றது.கொழும்பில் இருந்த தமிழ் மக்களை இரவோடு இரவாக ஏற்றி தமிழர் பகுதிகளை நோக்கி அனுப்பிய சிறிலங்காவின் பதிவுகளை மறந்து விட்டனவா இவ் நாடுகள் இல்லை தமது நலனுக்காக மறைத்து விட்டனவா?

இன்று சிறிலங்காவின் அரசுக்கும் அவர்களின் யுத்த வெறிக்கும் வால்பிடிக்கும் இந்தியா ஒன்றை சிந்த்துப் பார்க்கவேண்டும்.80 களில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது தமிழ் மக்களை இரண்டாம் தரமாக நடாத்துகின்றது என கருதிய இந்தியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை விடுதலைப் போராட்டமாக ஏற்று கொண்ட இந்தியா இன்று அந்த விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்னும் பதப்பிரயோகத்துக்குள் அடக்கிவிட நினைக்கின்றது.இரண்டு தசாப்தத்திற்கு மேலாக ஏமாற்றப்பட்டு வந்த தமிழ் மக்கள் இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ள வேளையில் இந்தியா மூக்கை நுளைத்து தனது கொள்கையை மாற்றி கொண்டு தமிழின் அழிப்புக்கு துணைபோகின்றது.அதற்கு வெளிநாடுகள் பலவும் ஒத்து ஊதி வருகின்றன.

இந்தியா இன்று தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா நடாததும் போருக்கு உதவுவதற்கு சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது சிந்தித்து பார்க்க வேண்டியது.இதற்கு உதாரணமாக இந்தியாவின் மன்னிப்பு மனப்பான்மைக்கு ஆதாரமாக தற்போதைய இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளார்.இன்று எல்லா உலக நாடுகளும் ஒருமித்த குரலில் சிறிலங்கா படையினரால் குறுகிய பிரதேசத்துள் அடக்கப்பட்டுள்ள மக்களை வெளியே வரும்படி கோரிக்கை விடுக்கின்றது.அதாவது சிறிலங்கா அரசினால் நிர்வகிக்கப்படுகின்ற வதை முகாம்களுக்குள் வந்து அடைபட்டு வருடக்கணக்கில் கிடவுங்கள் என்னும் தொனியில் அவற்றின் அழைப்புக்கள் உள்ளன.இவ்வாறு அழைப்பு விடும் நாடுகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் என்ன.

பிரித்தானியா காலனித்துவ காலத்தில் சிம்பாப்வேயில் குடியேற்றி சிம்பாப்வே பூர்வீகக் குடிகளை அடிமையாக்கி அவர்கள் நிலபுலங்களை பறித்து தனது பிரஜைகளுக்குக் கொடுத்திருந்தது.1980 இல் சிம்பாப்வே சுதந்திரம் அடைந்தபின்னர் ஆட்சிக்கு வந்த முகாபே தொடர்ச்சியாக பிரித்தானியர்களுக்கு எதிரான பழிவாங்கல்களில் ஈடுபட்டு அவர்களின் நிலபுலங்களை எல்லாம் பறித்து எடுத்து அவர்கள் சொத்துக்கள் அற்ற அனாதைகள் ஆக்கிக் கொண்டுள்ளார்.அவ்வாறு துன்பங்களுக்குள் உள்ளான மக்களை ஏன் இன்னும் தனது நாட்டுக்கு திரும்பி வாருங்கள் உங்களுக்கு சிறிலங்கா அமைத்து உள்ளது போன்ற நிவாரணக் கிராமங்களில் குடிசைபோட்டு வாழ விடுகின்றோம் என கேட்கவில்லை.

அமெரிக்காவில் அடிக்கடி ஏற்படும் சுழல் காற்று மற்றும் புயலால் வருடா வருடம் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றார்களே ஏன் அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திப் பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்தும் கோரிக்கையை அமெரிக்கா விடுத்தவில்லை.காட்டுத்தீயால் பாதிக்கப்டும் மக்களை ஏன் அவுஸ்திரேலியா காடுகளை விட்டு விலகி தூரத்தில் குடியமருமாறு கேட்கவில்லை.அது போல் காட்டுத்தீயால் பாதிக்கப்படும் கனடா கேட்கவில்லை.பனிப்பொழிவில் வருடா வருடம் நோர்வேயில் மக்கள் இறக்கின்றார்களே ஏன் அவர்களை நோர்வே வேறு இடங்களில் குடியமாத்தி அவர்களின் உயிர்களை பாதுகாக்க முன் வரவில்லை.

சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நதியைச் சூழவும் வருடா வருடம் பல ஆயிரம் மக்கள் வெள்ளப் பெருக்கால் உயிரிழக்கின்றார்களே ஏன் சீனா அவர்களை அப்புறப்படுத்தி நலன்புரி நிலையங்களில் வைக்கவில்லை.அவர்களை நிரந்தர அகதிகளாக்கி தன்னும் உயிர் காக்க முன்வரவில்லை.வங்காள தேசத்தில் இயற்கை அனர்த்தங்களால் வருடா வருடம் மக்கள் இறக்கின்றார்களே ஏன் அவர்களுக்கு நலன்புரிக் கிராமங்கள் அமைத்து தங்க வைக்க உலகின் தொண்டு நிறுவனங்கள் முன் வரவில்லை.

இவை அனைத்தும் தடுத்து நிறுத்த முடியாத தவிர்க்க முடியாத இயற்கை சீற்றங்கள் சிறிலங்காவினால் நடத்துப்பட்டுக் கொண்டுள்ளது.செய்கையான தமிழ் அழிப்பு போர். இன அழிப்பு போர் அண்மையில் இஸ்ரேலினால் காசா மீது படையெடுக்கும் போது பலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டபோது ஏன் உலக நாடுகள் அவர்களை கோரவில்லை இஸ்ரேலின் பக்கம் வாருங்கள்.பின்னர் போர் முடிய நீங்கள் உங்கள் பிரதேச்த்துள் செல்லலாம் என உபதேசம் செய்யவில்லை.

இதில் இருந்து தமிழ் மக்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.அதாவது உலகில் யுத்தம் இழப்புககள் என்பன புதியவை இல்லை. தமிழ் மக்களுக்கும் இழப்பும் அழிவும் புதியது இல்லை.சிங்களவர்களால் மாதிரம் ஏற்படுத்தப்படும் இழப்புக்களுக்கு அவர்கள் பழக்கப்பட்டவர்கள்.இன்று உலகத்தினால் பல நாடுகளால் மேற் கொள்ளப்படும் மேற் கொள்ள தூண்டப்படும் இழப்புக்கள் அவர்களுக்கு புதிது.தாங்கமுடியாதது.ஓட்டு மொத்த உலகும் ஏன் தம்மை மட்டும் அகதியாக்கி நிரந்தர அகதியாக்கி அதுவும் தமிழ் மக்களாகிய தங்களை பரம எதிரிகளாக இன்று நேற்றல்ல 2000 வருடங்களாக பரம எதிரியாக பார்க்கும் சிங்களவர் கைகளில் கொடுக்க எத்தனிக்கின்றது என்னும் கேள்விகள் கவலைகள் பலமாகி வருகின்றது. இவை இந்தியாவின் விளையாட்டு மட்டுமல்ல அவர்களின் உபதேசம் தான் என்பது புரிந்துள்ள விடயம்.

இந்தியா அதாவது உலகத்தில் சமத்துவம் உள்ள முதல் நாடு எனக் கூறிக்கொள்ளும் நாடு 3 வீதம் மாத்திரமே உள்ள ஒரு சிறுபான்மை இனத்தவர் பிரதமராக உள்ள நாடு எனக்கூறிக் கொள்ளும் நாடு.பல மொழி பல மதம் வாழும் நாடு எனச் சொல்லிக் கொள்ளும் நாடு. காஸ்மீரில் தினமும் மடியும் தன் மக்களை வெளியேற்றி ஏன் நலன்புரி நிலையத்தில் வைக்கவில்லை.நிரந்தர அகதியாக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்ற அறிவுறுத்தல் விடும் அறிக்கைகள் எழுதும் இந்தியா ஏன் தனது நாட்டில் இதைச் செய்யவில்லை. இதை ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு மனித நேயம் மிக்கவனும் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்கள் ஈழத்தின் பூர்வீகக்குடிகள் என ஏற்றுக் கொள்ளும் இந்தியா ஏன் அவர்களை அவர்கள் தாயகத்தில் இருந்து வெளியேறுங்கள்.சிறிலங்கா யுத்தம் நடத்தட்டும் எனக்கூறவேண்டும்.இல்லை சிங்களவர் கூறுவது போன்று தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.வந்தேறு குடிகள் என்றால் கூட இந்தியாவுக்கல்லவா தமிழரை அழைத்துச் செல்ல இந்தியா முனையவேண்டும்.எவ்வாறு எந்த தார்மீக ரீதியில் சிறீலங்காவின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாருங்கள்.அவர்கள் உங்களை அகதியாக வைத்திருப்பார்.அடைத்தும் வைத்திருப்பார்.செய்யக்கூடாத எல்லாம் செய்வார்.எங்கள் உயிரை மட்டும் தருவார். தேவையெனில் புலி எனக்கூறி அதையும் பறிப்பார்.மொத்தத்தில்,உங்கள் அத்தனை விடயங்களையும் சிறீலங்காவிடம் ஒப்படையுங்கள் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் எனக்கூறுவது எந்த வகையில் நியாயமானது.

சிறிலங்காவிடம் ஒப்புக்கு வதைமுகாமில் உள்ள மக்களை விடுவியுங்கள் எனக் கூறி வருகின்றனவே தவிர இன்னும் அது நடந்ததாக இல்லை.எனவே சிறிலங்கா உலகத்தின் மற்றும் இந்தியாவின் சொல்லைக் கேட்கவில்லை.இவ்வாறு இருக்கையில் அவற்றின் பேச்சை நம்பி எவ்வாறு மக்கள் வரமுடியும்.அதுவும் தமது பூர்வீக வாழ்விடம்.சுதந்திர வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் உடைமைகளை விட்டு எவ்வாறு வரமுடியும்.

இது உலகத்தில் என்றும் நடக்காத கொடுமை.இனியும் நடக்கக் கூடாத கொடுமை.சில சுயநல நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்காக ஒரு இனத்தினை அழிக்கும் பாரதூரமான வேலை.பூர்வீகக் குடி ஒன்றை நிரந்தர அகதியாக்கி அதில் அரசியல் இலாபம் தேடும் உலகின் கோரமான இராஜதந்திர பயணம் இவை.

(நன்றி ரகசியா சுகி-லங்காசிறீ)

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

என்ன சொல்வது என்றே புரியவில்லை? எப்படி ஆருதலாக இருக்க முடியும் என்று தெரியவில்லை? .....

Muniappan Pakkangal said...

Poorva kudiyai niranthara adimai aakki-ithu nirantharamaanathu alla.

சரவணன் said...
This comment has been removed by the author.
சரவணன் said...

எல்லாம் இந்தியா செய்த பண உதவி, இராணுவ உதவியால் சிங்கள இராணுவம் தமிழீழ தமிழர்களை கொன்று விட்டது. இந்தியா உதவி செய்யாமல் தனி தமிழீழத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தால், உலக நாடுகள் உதவியுடன் தமிழீழம் மலர்ந்திருக்கும். என்ன செய்வது, என் உள்ளம் குமுறுகின்றது.

போர் நிறுத்ததிற்காக தமிழக மக்கள் எவ்வுளவோ கோரிக்கை விடுத்தும், போரட்டம் நடத்தியும் இந்திய சர்வாதிகார அரசு கொஞ்சம் கூட செவிசாய்க்கவில்லை. நாங்கள் கொடுக்கும் வரிபணத்தைக்கொண்டே எமது இனத்தை அழித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

என்.கே.அஷோக்பரன் said...

இதுக்கு வேற பல காரணங்கள் இருக்கு - தமிழனைப் பற்றி யாரும் கவலைப்படுறதில்லை - ஏனெ்னறால் அவனுக்கு உணர்ச்சியேயில்லை - யோசிச்சுப் பாருங்கோ தமிழனைப் பற்றி தமழனே கவலைப்படாமல் இருந்தால் மற்றவன் கவலைப்பட வேண்டும் என எதிர்பார்க்கவா முடியும்?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP