
ஹேமா(சுவிஸ்)
இணுவில் தட்ஷணாமூர்த்தி,இணுவில் சின்னராசா,கைதடிப் பழனி,நாசிமார் கோயிலடி கணேசு.சமா எண்டா அதுதான் மேளச்சமா.அதுதான் கேட்டது எனக்கு இப்ப கொஞ்சம் முன்னால.அவையளை அதில கன நேரம் நிக்க வைக்கவெண்டே பெரிசா மைக் கொண்டு வந்து வச்சிடுவினம்.
தட்ஷணாமூர்தியின்ர வடிவைப் பாக்கவெண்டே பெட்டையள் கூடி நிப்பினம்.அவர்தான் தொடங்குவார் தெரியுமோ.நெஞ்சில மொத்தமா ஒரு சங்கிலி மீன் வச்ச பதக்கத்தோட சிரிச்சபடி மனுஷன் தொடங்கி வைப்பார்.அவரின்ர தவில் மழைபோல கொட்டித் தீர்க்கும். கடல் போல கொந்தளிக்கும் விரல்களில அத்தனை லயம்.பிசகாத தாளம்.கோபமாய் முறைச்சு சிரிச்சு தானே தாளமும் போட்டுக் காட்டித் தன் கலையின் அத்தனை வித்தையையும் கலந்து குழைத்துத் தரும் கலைக் கடவுள் அவர்.
மேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக்கணித வேழமெனத் திகழ்ந்த வித்தகன் என்பார்கள் அவரை.
ஈழத்து மேதை கொடுத்த லயத்தை அப்பிடியே கேட்டு வாங்கிக் கொள்கிறார் இணுவில் சின்னராசா.தடியன் சின்னராசா.கருவல் சின்னராசா எண்டெல்லாம் பேர் வச்சிருக்கிறம் அவருக்கு.மலைபோல பெருத்த உடம்பு.தந்ததை நான் அழகாக இன்னும் அழகாய் மெருகுபடுத்தி வாசிப்பேன் என்பதுபோல தாளக்கட்டோட பிசகாமல் வேர்த்து ஒழுக ஒழுக வாசிக்கிறார்.பக்கத்தில அவரின்ர மகனும் நிக்கிறார் தாளம் போட்டபடி.தட்ஷணாமூர்த்தியை நேர பார்த்தபடி என்னாலயும் ஏலும் என்கிற மாதிரி சிரிச்சபடி வாசிக்கிறார்.நாங்கள் கொஞ்சப் பெடியள் சுத்தி நிண்டு வேடிக்கை பாக்கிறம்.ஆனாலும் ரசிக்கிறம்.சிரிக்கிறம்.தாளம் போட்டும் பாக்கிறம்.ஆனால் அவையள் போடுறது வேற மாதிரிக் கிடக்கு.
விரதம்.பட்டினி சனங்களுக்குப் பசி.எண்டாலும் வெயிலுக்க நிக்குதுகள் மேளச்சமா ரசிச்சபடி.இதை விட்டால் இனி அடுத்த வருசம்தானே.
N.K.பத்மநாதன்
சின்னராசாவைக் கவனிச்சபடி கட்டையான ஒருத்தர்.கருப்புத்தான்.கை துருதுருக்கக் காத்திருக்கிறார் கைதடிப் பழனி.ஞானம் முட்டின தாள லயிப்பு சின்னராசவின்ர வாசிப்பில.அவர் குடுக்க இவர் வாங்கிறதுபோல அப்பிடியே எட்டிப் பிடிச்சுக்கொள்றார் பழனி.வாங்கிய வேகத்தில் தன் திறமையைச் சொல்லாமல் பார்வையாலயே கர்வமாய்ப் பார்த்தபடி வெளுத்து வாங்குகிறார்.தாளம் ஏற ஏற அவரை விட தட்ஷணாமூர்த்தியும் சின்னராசாவும் வித்துவத்தில் திறமையாய் இருந்தாலும் தானும் சளைத்தவரில்லை என்பதைப் புன்னகைத்தபடி தவிலில் சொல்லிக் காட்டியபடி வாசிக்கிறார்.
இது ஒரு சோர்வில்லாத சமர்.தாளத்தை மெட்டுக்குள் அடக்கும் வித்தை.கைமாறும் தாளக்கட்டு தவிலுக்குள்.பசி பறந்திட்டுது.அம்மாகூட வீட்டை போகாம மயங்கியும் விழாமப் பாத்துக்கொண்டிருக்கிறா. பிள்ளையாரப்பா அழகா ரசிச்சபடி இருக்கிறார்.பசிக்கேல்ல அவருக்கும்.
நிலை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்த வேகத்திலயே மேளச்சமா நாச்சிமார் கோயிலடி கணேசு,வாக்கர் கணேசு எண்டு சொல்ற அவரிட்ட போய்ட்டுது.அவர் கால்களை அகல வச்சபடி தாளத்தைக் காலில போட்டுக்கொள்றார்.தாளக்காரருக்கு ஒரு முறைப்பு.தவில் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு வித்தியாசம் காணலாம் வாசிக்கும் தன்மையிலும் தவிலின் நாதத்திலும் கூட.கணேசு வாசிக்கும்போது உடம்பு அசையாது.வெத்திலை வாய் நிறைய எப்பவும் இருக்கும்.கோயில்ல வாசிக்கும்போது மட்டும் இருக்காது.நாசூக்கான வாசிப்பு எனலாம்.
கண்கள் விரிய காது அடைக்க ஆனாலும் தூரமாய்ப் போகாமல் பக்கத்தில நிண்டு பார்ப்போம்.ஒருத்தை ஒருத்தர் போட்டிபோல யாரையாச்சும் தடக்கி விழுத்தவேணும் எண்டுதான் வாசிப்பினம்.யாருமே தாளம் பிசகாம லயம் குழம்பாம வாசிப்பினம்.ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவை இல்லை.வீச்சுக் குறையாத கலைச் செல்வங்கள்.அந்த நாதம் எல்லாம் காற்றில் தொங்கி நிற்கிறது இப்போ.அவர்களும் இல்லை இப்போ.வாரிசுகள் அவர்கள் அளவுக்கு இல்லாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ.........புத்தர் சிலையோ......!!!
இதில் குறிப்பிட்ட கலைஞர்களை விட இவர்கள் காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்.
கோண்டாவில்(மூளாய்) பாலகிருஷ்ணன் சகோதரர்கள்
அளவெட்டி குமரகுரு
இணுவில் கோவிந்தசாமி
அளவெட்டி பாலகிருஷ்ணன்
சட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் - தவில்
காரைதீவு கணேஸ் - நாதஸ்வரம்
சாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம்
அளவெட்டி S.S.சிதம்பரநாதன்
அளவெட்டி M.சிவமூர்த்தி - நாதஸ்வரம்
அளவெட்டி R.கேதீஸ்வரன்
யாழ்பாணம் K.நாகதீபன்.
இணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள்
(இன்னும் அறிந்தவர்கள் பெயர்களிருந்தால் அறியத்தாருங்கள்.)
ஹேமா(சுவிஸ்)
© Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008
Back to TOP