Monday, January 10, 2011

திரும்பிப் பார்க்கிறேன்.

பாதை சீராக இல்லை
குறுக்கும் கோணலுமாய்
நினைத்த இடத்தில் திரும்பியும்
நுழைந்து நடந்தும்
சறுக்கியும்
தடுமாறியபடி முடியாமல்
திரும்பிப் பார்க்கிறேன்.
வளைந்து வளைந்து
அழகான
ஒரு பாதையொன்றின்
ஆரம்பமாய் புதுப்பாதை!!!


தொடர்பதிவு எழுதவென்று கௌசி அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்.நன்றி தோழி.நான் 2010தை நான் திரும்பிப் பார்க்கவேணுமாம்.பழையவைகள மறப்பவள் அல்ல நான்.ஆனால் திரும்பிப் பார்க்க ஒரு பயம்.எப்போது கலங்கிய பாதைதான் என்னுடையதாகிறது. துணிச்சலும் தைரியமும் தந்தவிட்டு போராடிக்கொண்டேயிரு என்றும் ஒரு வரியில் முடித்துவிடப்பட்டிருக்கிறது வாழ்வு.

முழு வாழ்வையும் திரும்பிப் பாத்தால் சொல்ல முடிந்தவையும் சொல்ல முடியாதவையுமாய் நிறையவே கதை பேசிச் சிரித்து அழும்.2010 ல் பெரிதாக சொல்ல இல்லை.நாடும் என் மக்களும் இரத்தமும் போரும் முள்வேலியுமாய் முடிவைடந்து இன்று சத்தமில்லா யுத்தத்துக்குள் என் மக்கள்.

போனவருடத்தில்தான் ஊர் போய் வந்தேன் என் மலையடிவாரத்துத் தோழியைக் கண்டேன்.அவளின் மனம் என்னைப் புரிந்துகொண்டாலும் வெறும் புன்னகையோடு மட்டும் என்னை வழியனுப்பி வைத்தது அவள்மேல் எனக்குப் பெருத்த கோவம்.ஆனாலும் அவளை நினைத்து வருந்தாத நாள் இல்லை.

மற்றும் அந்தச் சமயத்தில் போரின் கோரங்களால் நிறைந்த என் தேசத்தைக் காணமுடியாமல் அவதிப்பட்டேன்.அதனால் யாழ் போகவில்லை.என் இரத்த உறவுகள் எல்லோருமே அங்குதான்.தூர இருந்தாலும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டுதான் இருப்பது மட்டும் நின்மதியாக இருக்கிறது.

புலம் பெயர்ந்த எங்களுக்கு இன்னொரு சங்கடமும்.10 - 15 வருடங்களுக்கு மேலாக உறவுகளை விட்டுத் தள்ளியிருக்கும் ஒருவருக்கு ஊரில் தலைமுறை மாற்றங்களால் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொளவதும் நிறைந்த அன்போடு நெருங்கிக்கொள்வதும் கஸ்டமான விஷயம்.எனக்கும்கூட அது மனச் சங்கடத்தையே தருகிறது.அதோடு ஊரிலே புலம் பெயர்ந்து யார் யார் எங்கிருக்கிறார்கள் என்றுகூடத் தெரிவதில்லை.இந்தக் கதை சொல்லத் தொடங்கினால் சொல்லிக்கொண்டே போகலாம்.
விடுங்கள்.

முக்கியமான ஒன்று.அப்பா அம்மாவுக்கு 60ம் கல்யாணம் செய்து பார்த்துச் சந்தோஷப்பட்டோம்.அதன் பிறகு சில என் பிடிவாதகுணத்தால் தற்சமயம் அம்மா என்னோடு கதைப்பதை நிப்பாட்டியிருக்கிறா.இது மிகவும் கஸ்டமாயிருக்கு.காலம் சரிசெய்யும் என்ற நம்பிக்கையோடு நகர்கிறது அகதி தேசத்து வாழ்வு.

சுவிஸ் வாழ்வும் வேலையும் தனிமையும் ஒற்றைச் சிநேகமும் என் அன்புக்காதலன் சச்சின் தரும் முத்தமும் அன்பும் அப்பிடியே மாறாமல் நிறைவோடு.என்ன...அவன் இப்போ கொஞ்சம் வளர்ந்திருக்கிறான்.என்னைக் கவனிப்பது குறைந்து தன் வயதுச் சிநேகிதர்களோடு மட்டுமே விளையாடுகிறான்.ஆனால் புதுமாதிரியான கார் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறான்.அவனுக்காகக் காத்திருக்கிறேன்.

இணையம்...நான் வலைப்பதிவு ஆரம்பித்த காலத்தில் ஏதோ என் கவிதைகளைச் சேமிக்க ஒரு இடம் என்று மட்டுமே சொல்லித் தந்தார்கள்.
ஆனால் அதுவே ஒரு குட்டி உலகமாய் இருக்கிறது இப்போ.இங்கும் நான்,
நீ,ஊழல்,போட்டி,பொறாமை,ஒதுக்கிவைப்பு,முகஸ்துதி,குழுப்போராட்டம் இப்படி ஒரு அரசியலாகவே காண்கிறேன்.

இதற்குள்ளும் நல்ல சில உள்ளங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கிறேன்.குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாருடனும் நெருங்காவிட்டாலும் பின்னூட்டங்கள் அவர்களின் மனங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது.

எனக்கு இங்கு எல்லோருமே சமம்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு.அவரவர் திறமை.எனக்குக் கவிதை என்று வார்த்தைகள் கோர்க்கும் அளவுக்கு ஒரு கட்டுரை எழுதவோ நகைச்சுவையாக எழுதவோ வராது.முயற்சி செய்தும்கூட முடியாமல் போகிறது.எனவே எல்லோர் எழுத்துக்களையும் வாசிப்பேன் ரசிப்பேன்.

இந்த இடத்தில் ஒரு குற்றச்சாட்டும் ஒன்று.நான் தரம்பார்த்து பின்னூட்டம் இடுகிறேனாம்.எனக்கே சிரிப்பாயிருக்கிறது.இயல்பாகவே என்னிடம் அந்தக் குணம் இல்லை.குழந்தையோ பெரியவர்களோ திறமையைப் பாராட்டவும் என் தப்பு ஏதுமென்றால் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டேன்.இங்கு திறமையே தவிர எல்லோருமே சமம்.சிலசமயம் அந்தப் பதிவுக்கேற்றபடி கொஞ்சம் கொண்டலாகச் சொல்லியிருப்பேன்.நல்லதொரு கவிதைக்கு கிண்டலாய் பின்னூட்டம் கொடுக்கமுடியாதுதானே.

இணையம்தான் என் உறவாய் இப்போதெல்லாம்.ஆனால் அதையே நம்பியும் அல்ல வாழ்வு.இதில் ஒன்றை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும்.போன வருடத்திலும்(2010)தமிழ்மண விருது இரண்டாம் இடத்தில் கிடைத்தது.இப்போதும் மூன்றாம் கட்டத் தேர்வு வரைக்கும் என் நான்கு பதிவுகள் வந்திருக்கு.இந்த இடத்தில் மனம் நெகிழ்கிறது.என் சார்பில் என் ஒரு ஓட்டைத் தவிர எல்லாமே யார் என்றுகூடப் பார்க்கமுடியாத என் இணைய உறவுகள்தான்.இந்தச் சமயத்தில் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.

அன்பு என்பது எல்லோருக்குமே பொது.அவரவர்களுக்கேற்றபடி அதன் வடிவம் மட்டுமே மாறியிருக்கும்.ஒன்று கரிசனம்.அடுத்தது கனிவு.பின் பாசம்.மற்றது காதலாய்.

இங்கெல்லாம் சம்பளத்திற்காக வேலை செய்வது தவிர வேலை இடங்களில் நிறைவான அன்பையெல்லாம் எதிர்பார்க்கமுடியாது.என்னிடம் எங்கள் பண்பாடு இங்கும் தொடர்கிறது.
ஏதாவது வீட்டில் பழுதுபட்டால் பார்க்க வருபவர்கள் விளம்பரங்களோடு (தொலைபேசி அட்டை முதல் முட்டை வரை)வந்து வீட்டில் அதைப் பற்றிச் சொல்லிக் களைப்பவர்கள் என்று இந்த நாட்டவர்கள் பள்ளிச் சிறுவர்கள்கூட வருவார்கள்.அவர்களுக்கு ஏதாவது குடிக்கிறீர்களா என்று கேட்பதும் கொடுப்பதும் என் பழக்கம்."தமிழர்களைத் தவிர வேறு யாரும் இப்படிக் கேட்பதில்லை" என்று சொல்வார்கள்.

இதில் என்ன இருக்கிறது.ஒரு மனிதனின் அடிப்படை மனிதாபிமானம்.இந்தப் பழக்கம் இல்லாத ஒருவரைக்கூட யோசிக்க வைத்து நாமும் இப்படி இருக்கவேண்டும் என்று சிலசமயம் மாற்றி வைக்கும்.எமக்காக யார் எம்மை எதிர்பார்த்து யார் என்று மனம் சோர்ந்து இருக்கும் சிலரிடம் காட்டப்படுவதே கரிசனமாகிறது.

தெருவில் வைத்தியசாலையில் மற்றும் பொது இடங்களில் நாங்கள் காட்டும் சிறு சிறு உதவிகள் அன்பு வார்த்தைகள் அந்த இடத்தில் சம்பந்தப்பட்டவரை மகிழ்விக்கும்.மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

இங்கெல்லாம் வயது போனவர்கள் தங்களால் முடிந்தவரை தனியாகவே வாழ்கிறார்கள். முடியாத நிலை வரும்போதுதான் வயோதிப மடங்களுக்குப் போய் இருப்பார்கள்.கைகளில் பொருட்களைக் காவியபடி வருபரைக் காண மனம் என் பெற்றோர்களையே நினைத்துக்கொள்வேன்.நேரமிருக்கிற நேரங்களில் வீடுவரை கொண்டுபோயும் கொடுத்திருக்கிறேன்.சிலர் மறுத்தும் போவார்கள்.மறுத்தாலும்கூட என் மனம் முழுத்திருப்தியாகிவிடும்.அவர் பார்வையில் காணும் அன்பு நெகிழ்ச்சியூட்டும்.

எனவே எல்லோரிடமும் அன்பாய் இருப்போம் !

சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது இதயத்தின் ஓசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது சக்தியின் பிறப்பிடம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள்.அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்.அது வெற்றியின் விலை.

கௌசி ஏதோ சொல்ல நான் ஏதோ புலம்பி முடித்திருக்கிறேனோ !

ஹேமா(சுவிஸ்)

29 comments:

Anonymous said...

முதல் முறை படிக்கிறேன் தங்கள் வலை பூவாய் ... அருமையான வரிகள் உணர்வுகளோடு

கவி அழகன் said...

அக்காச்சி கவலையை விடுங்க உங்களுக்கு நாங்க இருக்கிறம்
நினைவுகள் என்றும் கசப்பானவை
தமிழ் உறவுகள் என்றும் மறவாதவை

தமிழ் அமுதன் said...

பல வரிகள் மனதை வருடுகிறது...!

சத்ரியன் said...

//சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது இதயத்தின் ஓசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது சக்தியின் பிறப்பிடம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள்.அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்.அது வெற்றியின் விலை.//

ஹேமா,

எங்கிருந்து சுட்டீங்களோ தெரியாது. ஆனா ரொம்ப பிடிச்சிருக்கு.

தமிழ் உதயம் said...

ரெம்ப ரெம்ப பிடித்திருக்கிறது இந்த பதிவு.

Anonymous said...

ரொம்ப அழகா உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க ஹேமா!
அன்பின் படிநிலைகளை மிக அழகாக சொல்லிட்டீங்க.. :)
காலம் எல்லாவற்றையும் மாற்றும் ஹேமா!

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சோகம் மாறும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான வரிகள்

ஸ்ரீராம். said...

பிடிவாதமா நீங்கள்? ஆச்சர்யமாக இருக்கிறது. அம்மா சீக்கிரமே பேசட்டும். திரும்பிப் பார்த்த அனுபவம் சுவாரஸ்யமாய், நெகிழ்ச்ச்சியாய்...

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு

அம்பிகா said...

அன்பு ஹேமா!
அருமையான உணர்வு பூர்வமான பதிவு ஹேமா. இதுவும் கடந்து போகும். 2011 சந்தோஷமான ஆண்டாக மலர்ந்திட வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

இரண்டாவது முறையும் வாசித்தேன் புரியாமல் அல்ல ஆழமானப்பதிவு என்பதால்.

எவ்வளவோ விசயத்துக்கு விட்டுக்கொடுத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

அம்மாவிடம் நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்புக்கொண்டே இருங்கள்.

நிலாமதி said...

உங்கள் அறிவூட்டும் வார்த்தைகள் மிகவும் உண்மையானவை. பகிர்வுக்கு நன்றி .2011..மகிழ்சியாக் அமையட்டும்

அன்புடன் மலிக்கா said...

தோழி தாங்கள் திரும்பிபார்த்தவிதம் மிக அருமை. கடந்தவைகளில் கெட்டவைகளை விட்டுவிட்டு நல்லவைகளை நினைவில்கொள்ளுங்கள்.

இனிவரும் காலங்களில் ஆனந்தம் தாண்டவம் ஆடட்டும்..

//இங்கும் நான்,
நீ,ஊழல்,போட்டி,பொறாமை,ஒதுக்கிவைப்பு,முகஸ்துதி,குழுப்போராட்டம் இப்படி ஒரு அரசியலாகவே காண்கிறேன்.//

ஒளிவுமறைவில்லாத எழுத்து நடை அருமை. உண்மையும் அதுதான். இங்கேயும் எல்லாம் புகுந்துவிட்டது என்பது உண்மைதான் தோழி..

வாழ்த்துக்கள்..

நசரேயன் said...

//.நல்லதொரு கவிதைக்கு கிண்டலாய்
பின்னூட்டம் கொடுக்கமுடியாதுதானே//

கொடுக்கலாம்

ஜோதிஜி said...

ஹேமா தொடங்கிய கவிதை நீங்க எழுதியதா? ரொம்பவே கவர்ந்தது. அப்புறம் தரம் பார்த்து பின்னோட்டங்கள் போடாமல் பகிர்வுக்கு நன்றி ஒன்று ஒற்றைச் சொல்லில் முடிக்கச் சொல்கிறார்களா? இதில் உள்ள மொத்தமாக இருக்கும் புலம்பல்களை நான் கோர்த்துப் பார்த்த போது

சென்று வா மகனே வென்று வா...என்று அந்த காலத்தில் போருக்கு அனுப்பிய தாய் நினைவுக்கு வருகின்றது. ஆனால் இன்றும் போருக்குத் தான் ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் பொருள் சேர்க்கும் பொருட்டு ஆசாபாசங்களை உள்ளுற அழுத்தி வைத்துக் கொண்டு செல்ல வேண்டியதாய் உள்ளது.

இழப்புகள் வலிகள், எல்லாவற்றையும் உள்வாங்கிய போது தமிழ்உதயம் சொன்னது தான் என் கருத்தும்.

கவிநா... said...

//சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது இதயத்தின் ஓசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அது சக்தியின் பிறப்பிடம்.
படிக்க நேரம் ஒதுக்குங்கள்.அது அறிவின் ஊற்று.
நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள்.அது வெற்றியின் விலை.//

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நீங்க திரும்பிப்பார்த்ததை படிக்கும்போது, உங்க கூடவே பயணிச்சமாதிரி இருக்குங்க.

2011 நன்றாக அமைய வாழ்த்துக்கள்...

Priya said...

உணர்வுகளை நினைவுகளோடு மிக அழகா.. இயல்பா எழுதி இருக்கிங்க ஹேமா!

yarl said...

என் அன்பு ஹேமா, என்னம்மா சோகம்? 2011 உங்களுக்கு நிறைய மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் மனம் போலவே எல்லாமே நல்லபடியாக நடக்கும். தொடர்ந்து எழுதுங்கள். கலக்கம் வேண்டாம். அம்மாவிடம் நட்பாக இருங்கள். வயதானவர் அல்லவா? I wish u all the best .

ஜெயா said...

துனிச்சலும் தைரியமும் தந்துவிட்டு போராடிக்கொண்டேயிரு என்று ஒரு வரியில் முடித்துவிடப்பட்டிருக்கிறது வாழ்வு.

கடந்து போன 2010ஐ அழகாக திரும்பிப் பார்த்து நினைவுகளை அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.

நினைவுகளை சுமப்பதில் உள்ள சுகம் வேறு எதிலுமே இருக்க முடியாது ஹேமா.......

புலம் பெயர்ந்த எங்களின் சங்கடமான நிலைமையை அழகாக சொல்லி இருக்கிறீங்கள்.15- 20 வருடங்கள் இங்கே இருந்து விட்டு ஆசையாக எங்கள் ஊருக்கு போனால் அங்கே எங்களுக்கு எதுவுமே இல்லை.எல்லாமே எங்கள் கையை விட்டு நீண்ட தூரம் போய் இருக்கு.

2011ல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Kousalya Raj said...

முதலில் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன் ஹேமா...! பதிவு வெளிவந்தவுடன் படித்து விட்டேன்...ஆனால் இத்தகைய பதிவிற்கு ஒற்றை வரியில் சொல்லிவிட்டு செல்ல மனம் வரலபா...

நீங்க ஒவ்வொருமுறை என்னை கௌசி என்று அழைக்கும் போதும் என் மனதிற்கு எவ்வளவு நெருக்கமா உங்களை உணர்வேன் தெரியுமா...? சொல்ல தெரியவில்லை அன்பு தோழி. வெறும் பின்னூட்டங்கள் நம்மிடையே எத்தகைய உறவை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா??

கவிதை எழுதிவிட்டு எங்கே ஹேமா இன்னும் காணுமே என்று என் விழிகளுடன் மனமும் தேடுவது தெரியுமா ?

ஏன் தோழி இத்தனை சோகம்...? அனுபவித்த வலிகளை உங்கள் எழுத்தின் மூலம் உணருகிறேன் தோழி. உங்களுக்குள்ளே எத்தகைய கதைகள் இருக்கும் என்று என்னாலும் புரிந்து கொள்ள முடிகிறது.

//என் பிடிவாதகுணத்தால் தற்சமயம் அம்மா என்னோடு கதைப்பதை நிப்பாட்டியிருக்கிறா//

இதற்கு உங்கள் பிடிவாதம் மட்டுமே காரணம் இல்லை எனக்கு தோன்றுகிறது.

//நான் தரம்பார்த்து பின்னூட்டம் இடுகிறேனாம்.எனக்கே சிரிப்பாயிருக்கிறது.//

குறை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அப்படி எதுவும் இல்லாததால் இதை சொல்லி இருப்பார்கள்...விட்டுத்தள்ளுங்கள் ஹேமா. இப்படி இருப்பதால் தான் அவர்கள் மனிதர்கள்...?!!!

//தமிழர்களைத் தவிர வேறு யாரும் இப்படிக் கேட்பதில்லை" என்று சொல்வார்கள்//

இதுதான் நம் பண்பு...காலத்தையும் தாண்டி வென்று நிற்கும்.

//கௌசி ஏதோ சொல்ல நான் ஏதோ புலம்பி முடித்திருக்கிறேனோ //

சத்தியமா இல்லை ஹேமா....இந்த பதிவின் மூலம் உங்களை நான் இன்னும் அதிகமாய் நெருங்கி இருக்கிறேன் தோழி.

எந்த வித மேல் பூச்சும் இல்லாத, தன்மையான, வேடந்தரிக்காத, இயல்பான, அழகான, அருமையான, மென்மையான, உணர்வான பதிவு.

இந்த வருடம் சந்தோசங்களை மட்டுமே அள்ளி அள்ளி உங்களுக்கு கொடுக்கவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் ஹேமா.

nila said...

அழகான பகிர்வு... வாழ்த்துக்கள் ஹேமா..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வலிகள் நிரம்பிய பாதையில்தான் நாமெல்லோருமே பயணித்தாலும் உங்களின் காயங்கள் ஒப்பிட முடியாத நாடிழந்த கொடுமை ஆறுதல் வார்த்தைகளில் ஆறாதது ஹேமா.

மீண்டும் நம்பிக்கையுடன் நகர்வோம்.நிச்சயம் காலம் நல்ல முடிவை நமக்குத் தரும் என நம்புவோம்.

இந்த ஆண்டில் உங்கள் அன்பு அம்மாவுடனான உறவு மீண்டு மலருவும் ப்ரார்த்திக்கிறேன் ஹேமா.

உடல்நலக் குறைவால் தாமதமாய் வாசிப்பதில் வருத்தம் கொள்கிறேன்.

Anonymous said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதிரி. வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

அப்பாதுரை said...

என்னவோ சொல்லி முடிச்சிருக்கீங்க; இருந்தாலும் சுவையாத் தான் இருக்கு. இரண்டு தடவை படிச்சிட்டேன். கடைசியில் 'அன்பாய் இருப்போம்' பிடித்திருக்கிறது. உங்கள் பெற்றோரைக் கண்டு கொண்டாடி வர நேரம் கிடைத்ததே - அது சாதனை. இன்றைய சின்ன சின்ன வெற்றிகள் நாளைய பெரிய சாதனைகளாகத் தோன்றும் - அதற்காகவேணும் சிறிய வெற்றிகளைத் தேடிக் கொள்ளணும். இந்த வருடம் இன்னும் பல சிறிய வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.

ஸ்ரீராம். said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

எங்கள் அன்பும், பிரார்த்தனைகளும் என்றென்றும் உங்களுக்கானது தோழி...

ராமலக்ஷ்மி said...

பறந்து பறந்து விதை தூவட்டும் ஹேமா, உங்கள் எழுத்துக்கள்! வாழ்த்துக்கள்!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP