நித்தமும் எத்தனை பேரை வேலை இடங்களில் தெருவில் என்று நிறையப்பேரைச் சந்திக்கிறோம்.எதிர்ப்படும் முகங்களில் குறைந்த அளவு சந்தோஷப் பூக்களே சிரிக்கிறது.மிகுதிப்பேர் எல்லாமே மிகுந்த சிந்தனையும் கேள்விகளும் கவலைகளும் நிரம்பிய முகமாய் அல்லவா தெ(தி)ரிகிறார்கள்.இதில் எல்லோருமே சந்தோஷத்தைத் தேடுபவர்களாக இருக்கிறார்களே தவிர பெரியவன் சின்னவன் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே தெரியவில்லை.எங்கே வாங்கலாம்.என்ன விலை.எங்கு தெரிகிறது.கிடைக்குமா சந்தோஷம்.
இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று.முல்லா வெளிச்சமான இடத்தில் எதையோ தேடிக் கொண்டு இருந்தார்.அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டு உதவ முன் வந்தார்."ஒரு தங்க நாணயம் தொலைந்துவிட்டது" என்றார் முல்லா.அவரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார்.தங்க நாணயம் கிடைக்கவில்லை.நண்பர் முல்லாவைக் கேட்டார்."சரியாகச் சொல்லுங்கள்.இங்கே தான் நாணயத்தைத் தொலைத்தீர்களா?"முல்லா சற்றுத் தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு "அங்கே தான்" என்றார்.நண்பருக்குக் கோபம் வந்து விட்டது."அட முட்டாளே.அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்!" என்று முல்லாவைத் திட்டினார்.பதிலுக்கு முல்லாவும் நண்பரைக் கோபித்துக் கொண்டார்."நீ தான் முட்டாள்.இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா...எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்.அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன் "சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
முட்டாள்த்தனமாக நமக்கு சிரிப்பைத் தந்திருந்தாலும் சந்தோஷத்தைத் தேடும் நாமும் அப்படித்தானே.மனதில் தொலைத்துவிட்டு மற்ற இடங்களில் தேடினால் எப்படி.நாட்டில் போர் என்று ஓடி வந்தோம் உங்களுக்குள் சிலர் பொருள்தேடி ஓடி வெளிநாடுகள் வந்திருப்பீர்கள்.கிடைத்ததா?என்னைக் கேட்டால் இல்லையென்பேன்.எல்லாம் இருந்தும் சந்தோஷம் என் தேசத்தில்தான்.அங்குதான் தொலைத்ததாய் மனம் சொல்கிறது.
சிலசமயங்களில் மனதோடு கதைத்தும் பார்த்திருக்கிறேன்.என்ன வேண்டும் உனக்கு ஏன் அலறுகிறாய்.என்ன கிடைத்தால் சந்தோஷப் பாடல் பாடுவாய்.கஸ்டப்பட்டு கொடுக்க முயற்சியும் செய்திருக்கிறேன்.கொடுத்தால் சிரிக்கிறது.சிரிப்பு சில நாட்களுக்கு மட்டுமே.ஒன்றை நிறைக்க மனம் மற்றொன்று கேட்கும்.அது மட்டும் கிடைத்து விட்டால்....என்று திரும்பவும் புலம்பும்.
அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான்.எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது சந்தோஷம்."மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும் நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது".
மனதிற்கு ரசாயன வித்தை தெரிகிறது.மகிழ்ச்சியாய் இருக்கவும் தெரியும்.அழுது குளறவும் தெரியும்.ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் விஞ்ஞான வித்தை தெரியும்.பிறகு ஏன் இந்த மனம் சோகமாகவே இருக்கிறது?ம்...காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறக்கிறோம்.தவறான செய்திகளை மனதிற்குக் கொடுத்து தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதைத் தவறாகவே வழி நடத்துக்றோம்.
அலமாரி நிறையச் சேலையும் நகையும் இருந்தால்,விடுமுறை என்றால் ஊர் சுற்றினால்,மூக்கு முட்டத் தண்ணியடித்தால்,உன்னால் முடியாவிட்டாலும் கடன் வாங்கியாவது வாழ்வை உயர்த்தினால்,உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழும் உச்சியில் இருந்தால்...இவையெல்லாம் முடியாவிட்டாலும் சந்தோஷமென்று தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால்....!
பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.
100% சந்தோஷம் தாங்கியபடி பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.பிரச்சனையைத் தீர்க்க முடிவதுதான் முடிவில் சந்தோஷம்.தடங்கலே இல்லாமல் கடந்திருக்கிறோமா வாழ்வை.தடங்கலைத் தாண்டி முன்னேறுவது முயற்சியின் சந்தோஷம்.எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும் எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும்தான் திருப்தியான சந்தோஷமாகும்.
எம் பார்வையிலும் வித்தியாசம் வேண்டும்.ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம்.மனமே காரணம்.ரோஜாவில் முள் என்றும்,முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம்.பாதிக்குவளை காலியாக இருக்கிறது என்றும்,பாதிக்குவளை நிறைந்திருக்கிறது என்று திருப்திப்பட்டும் கொள்ளலாம்.இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும் எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை எங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் சந்தோஷமே மகிழ்ச்சியே !
நெஞ்சே நெடுநாளாய்
ஒரு நெருடல் எனக்குள்.
என்னதான் நடந்தது உனக்கு
தனித்துவிடப்பட்ட
கடலின் இரைச்சலாய் ஒரே கூச்சல்.
எனக்கு மட்டுமே கேட்கிறது.
என்னதான் நேர்ந்தது
தனிமையின் வேதனையா
முதுமையின் அவதியா
எதுவானால்தான் என்ன
உனக்கு நீயேதான் துணை
பிறகென்ன தனிமை
நேற்றைய நினைவுகளே
இன்றைய எண்ணங்களின் பலம்.
தனிமைக்கு அது இனிமையே
தனிமை என்ன புதிதா உனக்கு
உறவாய்ப்போன ஒன்றுதானே
உறவென்று உன்னோடு
உள்ளிருந்து உறவாட
உனக்கென்று உயிர்வாழ
பிறந்தவர் யாருமில்லையே
தெரிந்திருந்தும் பிறகேன் அலறல்.
சல்லிக் கற்களைப்போல
தனித்துவிடப்பட்ட குயிலின் சோகம்போல
நாளெல்லாம் பொழுதெல்லாம்
பெரும்குரலெடுத்து ஒப்பாரியாய்
உன் ஓலம் ஓயாமல் ஒலிக்கிறது.
எதைக் கொண்டு வந்தாய்
எதை இழந்தாய்
எதை உனதென்பாய்
எல்லாம் இரவல்தானே
உறவுகளும் இதன்வழியே
யாரோடு இணைந்திருந்தாய்
யாரைவிட்டுப் பிரித்தெடுக்கப்பட்டாய்
பயப்படுகிறாய் வாழ்க்கையைப் பார்த்து
அதனாலேயே அழுகிறாய்.
வேதனைப்படுகிறாய் விரக்தியடைகிறாய்
இரத்தம் சொட்டச் சொட்ட
உன்னைப் பிய்த்து
பதனிட்டுப் பார்த்தனரோ
மௌனத்தின் அம்புகளால்
துளைத்தெடுத்தனரோ
இல்லையென்றால்
சொற்களால் கொன்றனரோ.
சொல்லியழு நெஞ்சே
பாரம் கொஞ்சம் குறையுமே
அப்பா அம்மா அண்ணா அக்கா
பின்பு கணவன் குழந்தைகள் யார்
இவர்கள் தங்கிப் போன வழிப்போக்கரே
உனக்கென்று உன் ஊணோடு உயிரோடு
உள்ளுருகி இன்பத்திலும் துன்பத்திலும்
அன்பு தர யார் என்று அரற்றுகிறாயா
அழு நன்றாய் அழு...
அழ உனக்கு நிறையச் சுதந்திரம் உண்டு
ஆனால் சொல்லியழு.
உன் இதயத்து நரம்பை அறுத்து
வீணைக்குத் தந்தியாக்கிப்
பின் வாசிக்காமல் போனது யார் சொல்லியழு.
நன்மையோ தீமையோ விதி என்ற பெயராலே
எமக்கு வேட்டு வைக்கும் காலமே
கொஞ்சம் நின்று போ.
இதயத்து நரம்புகளை அறுத்த பின்னும்
தன் உறவு தேடியலையும்
நெஞ்சின் சோகம் கேள்.
அகிலத்தின் அத்தனை அவலங்களின்
ஓலங்களை கேட்டலையும் உனக்கு
இந்த நெஞ்சின் நீள் அழுகையும் கேட்கட்டுமே!!! (2000/01/07)
எட்டிப் பறந்த சந்தோஷத்தை எட்டிப்பிடிக்க ஒற்றை வழி !
28 comments:
ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது ஹேமா...நீங்கள் நினைப்பது கிடைக்குமா தெரியாது.ஆனால் கிடைக்கப் பிரார்த்தனைகள் .
>>>இதில் எல்லோருமே சந்தோஷத்தைத் தேடுபவர்களாக இருக்கிறார்களே தவிர
கூடவே நிம்மதியையும்
கண்கள் நெகிழ்கின்றன ஹேமா.
நீங்கள் எழுதியிருப்பது அத்தனையும்
சத்தியம்.
>>>மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான்.
ஆம்.. அது இயற்கையின் நியதி
>>>
சல்லிக் கற்களைப்போல
தனித்துவிடப்பட்ட குயிலின் சோகம்போல
ஹேமா... மனதை பாதித்த வரிகள்
வாழ்வியல் அவலங்களைப்பற்றிய கட்டுரையையும், மனவியல் சார்ந்த சோக கவிதையையும் இணைக்கும் புள்ளியில் ஹேமாவின் மனம் கலங்க வைக்கிறது
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத் தங்கமே என்றொரு பழைய பாடல் உண்டு. சந்தோஷமில்லாமல் செல்வம் இருந்தால் நன்றாக இருக்குமா செல்வம் இல்லாமல் சந்தோஷம் இருந்தால் நன்றாக இருக்குமா அனுபவிக்க முடியுமா? தூங்கக் கூடாது என்று நினைத்தால்தானே அதிக தூக்கம் வருகிறது? அது போல ஒரு வேளை நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டால் சந்தோஷமாக உணர்வோமோ..சந்தோஷம் தேடும்போது சோகம் மிஞ்சினால் சோகம் சொல்வோம் சந்தோஷம் மிஞ்சட்டும்...!
ஹேமா...என்னத்த சொல்ல...தெரியல
//மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும் நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது"//
எல்லாக்கேள்விகளுக்கும் பதிலையும் நீங்களே சொல்லிட்டீங்க ஹேமா..
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை ஹேமா ..
நன்மையோ தீமையோ விதி என்ற பெயராலே
எமக்கு வேட்டு வைக்கும் காலமே
கொஞ்சம் நின்று போ.
இதயத்து நரம்புகளை அறுத்த பின்னும்
தன் உறவு தேடி அலையும்
நெஞ்சின் சோகம் கேள்.
அகிலத்தின் அத்தனை அவலங்களின்
ஓலங்களை கேட்டலையும் உனக்கு
இந்த நெஞ்சின் நீள் அழுகையும் கேட்கட்டுமே!!!
கேட்குமா????
உணர்ந்துக் கொண்டால்.....உலகம் இன்பமயம்!
100% சந்தோஷம் தாங்கியபடி பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.பிரச்சனையைத் தீர்க்க முடிவதுதான் முடிவில் சந்தோஷம்.
இது முற்றிலும் உண்மை! செகம் இழையோடிக்கிடக்கும் உங்கள் பதிவு நெஞ்சை கனக்கச்செய்கிறது ஹேமா!
\\எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும் எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும்தான் திருப்தியான சந்தோஷமாகும்.\\
\\சல்லிக் கற்களைப்போல
தனித்துவிடப்பட்ட குயிலின் சோகம்போல\\
ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது ஹேமா...
100% சந்தோஷம் தாங்கியபடி பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை//
உண்மைதான்
கவிதைகள் நல்லா இருக்கு
ஒரு சொல் ஹேமா.. நல்ல இடுகை.. எதோவொரு பாரத்தை எழுத்தின் மூலம் இறக்கிவைத்தாலே கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்..
‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத்தங்கமே..’ என்ற பாடல்தான் எனக்கு ஞாபகம் வருகிறது. கொஞ்சமாவது சந்தோஷம் கிடைத்தால் தேவலைதான்.. அதற்குதானே அலைகிறோம்.
இருப்பதை நினையாது
இல்லாததை நோக்கி
இருளில் தேடுவதும்
இப்
பொல்லாத உலகத்தே
நில்லாது ஓடியதை
நினைத்தே அழுவதும்
நமது
நித்திய வாழ்க்கை.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
நம்முள் சந்தோசத்தை வைத்துக் கொண்டு வெளியில் தேடுகிறோம்
சிலசமயங்களில் மனதோடு கதைத்தும் பார்த்திருக்கிறேன்.என்ன வேண்டும் உனக்கு ஏன் அலறுகிறாய்.என்ன கிடைத்தால் சந்தோஷப் பாடல் பாடுவாய்.கஸ்டப்பட்டு கொடுக்க முயற்சியும் செய்திருக்கிறேன்.கொடுத்தால் சிரிக்கிறது.சிரிப்பு சில நாட்களுக்கு மட்டுமே.ஒன்றை நிறைக்க மனம் மற்றொன்று கேட்கும்.அது மட்டும் கிடைத்து விட்டால்....என்று திரும்பவும் புலம்பும்.//
கட்டுரையை இரண்டு முறை படித்தேன். சில விடயங்களை அழுத்தமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் சொல்லியிருக்கிறீர்கள். முல்லா கதையினை அருமையான இடத்தில் தூவியிருகிறீர்கள்.
இந் நேரத்தில் மனித மனங்களில் ஏற்படும் ஆசைகள் தானே மனிதனின் நிலை தடுமாறுதலுக்கும் அல்லது போர், காமம், வன்முறைகளுக்கும் காரணமாக அமைகிறது சகோதரி?
எதைக் கொண்டு வந்தாய்
எதை இழந்தாய்
எதை உனதென்பாய்
எல்லாம் இரவல்தானே
உறவுகளும் இதன்வழியே
யாரோடு இணைந்திருந்தாய்
யாரைவிட்டுப் பிரித்தெடுக்கப்பட்டாய்
பயப்படுகிறாய் வாழ்க்கையைப் பார்த்து
அதனாலேயே அழுகிறாய்.//
சகோதரம், எங்களைப் பொறுத்தவரை எதைக் கொண்டு வந்தோமோ இல்லையோ எம் பரம்பரைகள் இந்தப் பூமியில் வாழும் காலம் வரை பொருள் சேமிப்பதையும், எதிர்காலச் சந்ததிக்காக சேமிப்பதிலும், சுறண்டுவதிலும் தானே வாழ்க்கையைச் செலுத்துகின்றன?
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எப்போதும் வேடிக்கை காட்டுகிற மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டால் சுற்றிக் கிடக்கிற சந்தோஷங்களெல்லாம் நம் கிட்ட வரக்கூடும்.
இதுதவிர,விருப்பங்களெல்லாம் நிறைவேறட்டும் என்ற வேண்டுதல்களைத் தவிர நம்மால் வேறென்ன செய்துவிடமுடியும்?
வருவதை துணிவுடன் எதிர் கொள்வோம் ஹேமா, உங்களின் மினஞ்சல் முகவரி கிடைக்குமா?
உங்களின் எழுத்துகள்
சிலவேளை
நிபுணத்துவம்
நிறைந்ததாகவும்
சிலவேளை
சோகத்தில்
இருப்பது போலவும் ...
இது என் எண்ணம்தான்
ஆனாலும்
இதில் நியாயமும்
இருக்க வாய்ப்பு வுண்டு
விடை உங்களுக்குள்ளே
ஒளிந்து கிடக்கிறது
உண்மையான வார்த்தைகள்.
மனம்தான் அனைத்துக்கும் காரணம். இல்லாததை தேடிக்கொண்டு இருக்கிறது. உணர்ந்து விட்டால் உலகம் சொர்க்கம்தான்.
நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை எங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் சந்தோஷமே மகிழ்ச்சியே !
நிச்சயமாய்....
ஹ்ம்ம்...!
சில நேரம் மனதை ஏதோ இனம் புரியா உணர்வு மிகவும் குழப்பி களைப்படைய செய்யும்..
அப்படியான நேரங்களில் இதே போன்று சில யோசனைகள் வந்து பின்பு மனது ஒரு பக்குவ நிலைக்கு வரும்...
அப்படிதான் உணர்ந்தேன் படித்து முடித்த பொழுது..!
:) :)
ரொம்ப நாள்கப்பரம் வர்றேன் உங்கள் தளத்திற்கு....
அருணா...
சிபி...
மதுமிதா...
ஸ்ரீராம்...
ராதாகிருஷ்ணன் ஐயா...
சாரல்...
ஜெயா...
சத்ரியன்...
வடையண்ணா...
அம்பிகா...
சதீஷ்...
பாலாஜி...
சுப்பு தாத்தா...
கார்த்திக்...
நிரூபன்...
சுந்தரா...
யாழ் மங்கை...
தயா...
அக்பர் ஆசியா....
லெமூரியன்...
அத்தனை பேருக்கும் என் மகிழ்ச்சியான நன்றி.என் வாழ்வின் அனுபவங்கள் சந்தித்தவைகள் அதனால் பாதிப்புக்கள் வைத்தே என் பதிவுகள் எல்லாம்.ஆனால் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன்.
என் மின்னஞ்சல் முகவரி>>>
jeenunilach@googlemail.com
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். (மனதிற்கு ரசாயன வித்தை). முல்லா கதையும் யோசிக்க வைத்தது. 'மகிழ்ச்சியாக இரு' செய்திக்கும் கவிதைக்கும் இடையே சுவரிருப்பது போல்...
Post a Comment