Thursday, June 02, 2011

நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்.

நிர்மலா விரைவாகத் தேங்காயைத் துருவியெடுக்க நினைக்கிறாள்.துருவலை அவளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.கழன்று கழன்று விழுந்தபடி....!

"இது ஒரு சனியன் திருவலை.எவ்வளவு நாளா நானும் கேக்கிறன் புதுசொண்டு வாங்கித் தாங்கோவெண்டு.கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.சுதா வந்திட்டாளெண்டா தெய்ய தெய்ய எண்டு குதிப்பாள்.எப்பத்தான் இந்தத் திருவலைக்கு விடிவுகாலமோ”என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி “அப்பா இந்தாங்கோ தேத்தண்ணி....கேட்டனீங்களெல்லே"என்று கூப்பிட்டபடி வேலை செய்துகொண்டிருந்தவள் பதில் குரல் வராதபடியால் அடுப்படி கருக்குமட்டை இடுக்கு ஓட்டைக்குள்ளால் கூர்ந்து பார்க்கிறாள்.

மணியத்தார் கிணத்துக் கட்டிலிருந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார்
"அப்பா தேத்தண்ணி கேட்டுப்போட்டு என்ன இஞ்ச வந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறியள்" என்றாள்.ஒண்டுமில்லப் பிள்ளை.அம்மா வந்திட்டாவோ.கொக்காளும் (அக்கா) இண்டைக்குத்தானே வாறன் எண்டவள்.அவள் பின்னேரமாத்தான் வருவாள் (மாலை நேரம்).அவன் ஆனந்த்க்கும் ஏதோ உடம்பு சரில்ல வருத்தமாக்கிடக்கு எண்டவள்.டொக்டரிட்டயும் போய்ட்டு அங்கயிருந்து பஸ் பிடிச்சு வர எப்பிடியும் மாலை சரிஞ்சிடும்.அதுதான் இவன் கண்ணனின்ர ஞாபகமும் வந்திட்டுது.எனக்கென்ன பிள்ளை உங்கட நாலு பேரின்ரயும் யோசனைதானே”என்றார் பெருமூச்சோடு மணியத்தார்.

"சரி இந்தாங்கோ குடியுங்கோ முதல்ல.அம்மா அநேகமா இப்ப வந்திடுவா.
சீட்டுக்காசு குடுத்திட்டு,நாளையான் சமையலுக்கு மிளகாய்த்தூள் இல்ல.இடிக்கவேணும்.அதுக்கும் சரக்குச் சாமான்கள் வாங்கத்தானே போனவ.வெயிலுக்க இராம நிழலாய்ப் பாத்து இருங்கோ.தலைச் சுத்து வந்திடும்.சுதா நெசவால வந்திடுவாள்.நான் கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.பசியோட வந்து என்னைத் திண்டு கை கழுவுவாள்."என்று சொல்லிக்கொண்டே அடுப்படி நோக்கி நடந்தாள் நிர்மலா.

அம்மா கமலமும் தட்டிப் படலையைத் தூக்கித்திறந்து திரும்பவும் சாத்துவது தெரிகிறது.அம்மா வந்திட்டா.அண்ணா சுவிஸ்ல இருந்து உண்டியலில காசு அனுப்பியிருக்கிறார்.முதல் வேலையா சுத்தவர வேலியை இறுக்கமா அடைப்பிக்க வேணும்.துருவலையின் ஞாபகமும் வந்துபோகிறது நிர்மலாவுக்கு.

கமலம் நேராக மணியத்தாரைக் கிணற்றுக்கட்டில் கண்டுவிட்டுக் கிணற்றடிகே வர "என்னப்பா காசு தந்தவங்களே கடையில."என்றாள்.

மணியத்தாரும் "ஓமப்பா ரெண்டரைதான் (2 1/2 இலடசம்) தந்தவங்கள்.மிச்சம் நாளைக்கு வரட்டாம்.எனக்கும் முழுக்காசும் கொண்டுவரப் பயமாக்கிடந்துது.அதுதான் நானும் சரியெண்டு விட்டுப்போட்டு வந்திட்டன்."
என்றார் மணியத்தார்.

நிர்மலாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.அதன் ஏற்பாடுகளுக்குத்தான் மகன் கண்ணன் சுவிஸ்ல இருந்து பணம் அனுப்பியிருந்தான்.மணியத்தாரும் கமலமும் ஐயர், மேளம் ,பந்தல் ,சமையல் என்று திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கதைத்துத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மணியத்தார் பெரிதாகப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி "பாவம் கண்ணனும் ஒருத்தனாய்ப் பிறந்து எங்களுக்காக எவ்வளவு கஸ்டப்படுறான்.படு சுட்டித்தனமா படிச்சுக்கொண்டிருந்த என்ர பிள்ளையை எங்கட நாட்டு நிலைமையாலயும் வீட்டு நிலையாலயும் எங்களோட சேத்து வச்சிருக்க முடியாமப் போச்சு.என்னையும் ஆண்டவன் வேளைக்கு (நேரவேளைக்கு) நோயாளியா ஆக்கிப்போட்டான்.மூண்டு பெட்டைக் குஞ்சுகளையும் பெத்தும் போட்டன்.பாவம் அவன்தான்".என்று வானத்தைப் பார்த்தபடி மனம் நொந்து சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.

”சரியப்பா கனக்க யோசிக்காதேங்கோ.என்ன செய்யிறது எங்கட தலை விதியோ அதுகளின்ர தலைவிதியோ மூண்டு பெட்டையளுக்க தனியனாப் பிறந்திட்டான்.அவனை இஞ்சயும் வச்சிருக்க பயந்துதானே கடனை உடனப்பட்டு காணியையும் ஈடு வச்சு அனுப்பினனாங்கள். அந்தக் கையோட நீங்களும் ஏனோதானோவெண்டு செய்துகொண்டிருந்த வேலையையும் செய்யேலாம படுக்கையில விழுந்த்திட்டியள்.அவன்ர கை அசையிறபடியால்தான் மூத்தவளையும் ஏதோ எங்களால் முடிஞ்சளவுக்குக் கரை சேர்க்கக்கூடியதா இருந்தது.உங்கட டொக்டர் செலவும் எவ்வளவு போயிருக்கும் பாருங்கோ.

அவன் போய் 10-15 வருஷமாகுது.கடன் அடைச்சு காணி மீண்டு அக்காளுக்கும் சீதனமா வீட்டோட காணி,நகை,காசு எண்டு குடுத்துக் கல்யாணம் செய்து குடுத்து இப்ப நிர்மலாவுக்கும் அவன்தானே எல்லாம் செய்யிறான்.பாவம்தான் என்ர பிள்ளை.எங்களால ஓடாய்ப்போகுது.

இதிலயும் ஒண்டு விளங்குதே.நாங்கள் குடுத்து வச்சனாங்கள் எண்டு நன்றியோட அந்த மருதடியானை கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்ளுங்கோ.மற்ற வீட்டுப் பிள்ளைகள்போல வெளிநாடு எண்டு போனவுடன தறுதலையாய்த் திரியாம எங்களை மறந்து போகாம,ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்திட்டன் எண்டு சொல்லாம,பிள்ளை எங்கட நிலவரம்தெரிஞ்சு எங்களோட ஒத்துழைச்சு எங்களிலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கிறான்.

அவனுக்கும் 38 வயசாகுது.நிர்மலான்ர கல்யாணம் முடிய அடுத்த வருஷத்தில சுதாவுக்கும் இவனுக்குமாச் சேத்து எங்கையெண்டாலும் மாத்துச் சம்பந்தம் அமைஞ்சாக்கூடப் பரவாயில்ல.இன்னும் வயசு போகவிடாமலுக்கு கட்டாயமாச் செய்திடவேணும்”.என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தபடியே இருவரும் அந்த இடத்தால் எழும்பி வர சுதாவும் நெசவால் வர மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆயத்தமானார்கள்.

நிர்மலாவுக்கும் திருமணம் பக்கத்துக் காளிகோவிலில் சந்தோஷமாக சுற்றம் சூழலோடு நிறைவேறியது.அவளின் கணவர் ஒரு தபால்நிலையத்து அதிகாரியாக இருந்தார்.அவளும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டாள்.

வருடங்கள் இரண்டு ஆகிவிட்டிருந்தது.சுதாவுக்கு வரன்கள் பார்த்தபடி இருந்தார்கள்.சரியாக இன்னும் அமையவில்லை.இப்படியிருக்க மணியத்தாருக்கும் கமலத்திற்க்கும் மேலதிகமாய் ஒரு ஆசை குடியேறிக்கொண்டிருந்தது.

இரண்டு பெட்டச்சியையும் ஊரோட கட்டிக் கொடுத்தாச்சு.சின்னவளுக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சீதனம் கொடுத்தாலும் பரவாயில்லை.வெளிநாட்டில மாப்பிள்ளை பார்க்கலாம் என்று.இதைப் பற்றிக் கண்ணனிடமும் கலந்து கதைத்தும்விட்டார்கள்.கண்ணனும் தன்னைமீறிய செயலாக இருந்தாலும் பெற்றவர்களின் ஆசையும் தன் கடமையும் என்று சம்மதித்தபடி சரி பார்ப்போம் என்றுவிட்டான்.கண்ணனுக்குள்ளும் ஆயிரம் கனவுகள்.ஆனால் யாரிடம் மனம்விட்டுத் தன் ஆசைகளை எண்ணங்களைச் சொல்லமுடியும்.தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டுமே ஒருகணம் யோசித்துச் சிரித்துக்கொள்வான்.பிறகும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தன் வேலைகளோடு தன்னைக் கரைத்துக்கொள்வான்.

"இரண்டு பெரிய பாரத்தை இறக்கி வச்சு என்ர கடமையைச் சரிவரச் செய்திட்டன்.இனி என்ன தங்கச்சி சுதா மட்டும்தானே.பிறகு எனக்கு என்ன.சுதந்திரமாயிடுவன்.அப்பா அம்மாவையும் கடைசி வரைக்கும் பாத்துக்கொள்ளவேணும்.ம்ம்ம்...எல்லாம் நல்லதாவே நடக்கும்.அநேகமா லண்டனில பாத்திருக்கிற மாப்பிள்ளை சரிவரும் எண்டுதான் நினைக்கிறன்.லல்லி அக்காவுக்கு ஒருக்கா போன் பண்ணவேணும்.

ஞாபகமா கலண்டர்ல எழுதிவிடவேணும்.நாளண்டைக்கு டொக்டர்.அடிக்கடி முள்ளந்தண்டு குடைஞ்சு நோகுது.இந்தக் குளிர் நாட்டில ஐஸ்பெட்டிக்குள்ள இருக்கிற செத்த கோழிபோலத்தானே இங்க எங்கட வாழ்க்கை.எங்கட ஊர் வாழ்க்கை சுவாத்தியம் எல்லாம் எங்களுக்கு எவ்வளவு நல்லாயிருக்கும்.நாரி,மூட்டு,முது,கை,கால் எண்டு எல்லாமே வலிக்குது."

என்று தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடியே 3 1/2 க்கு வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன் பாபுவும் இண்டைக்கு வரப் பிந்தும்.அடுத்த வேலைக்கு 6 மணிக்குப் போகவேணும் என்றபடி ரேடியோவைப் போட்டுவிட்டு சமைக்க ஆயத்தப்படுத்தினான்.

பாபுவும் கண்ணனுமாக ஒரு அறையில் வசிக்கிறார்கள்.ஒத்துப்போகும் புரிந்துகொண்ட ஒரு நல்ல நண்பன்.என்ன....தண்ணியடிச்சுப்போட்டு கொஞ்சம் அரசியல் சினிமா எண்டு உளறுவான்.கண்ணன் தன் களைப்போடு அந்த அறுவையெல்லாம் ம் கொட்டிக் கேக்கவேணும்.இதொண்டுதான் எரிச்சல் வரும் அவனில.

4-5 மாதங்கள் போயிருக்கும்.சுதாவின் திருமணம் சரி என்கிற பேச்சளவில் நின்றுகொண்டிருந்தது.லண்டன் மாப்பிள்ளை என்றவுடன் சீதனம்தான் கூடுதலாகக் கேட்கிறார்கள்.லல்லி அக்கா எப்பிடியும் பேசிச்சமாளிச்சுச் சரிப்பண்ணிடுவா.சுதாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டுது.எப்பிடியும் இதைச் சரியாக்கிடவேணும்.

பழைய லோன் இன்னும் 5 மாசம் கட்டக் கிடக்கு.புது லோன் எடுத்தா அதைக் கழிச்சுத்தான் தருவாங்கள்.பாப்பம்.......சாமாளிப்பம் என்று நினைத்துக்கொண்டவன்.

அன்று வங்கிக்குப் போய் கடன் எடுப்பது பற்றினதான பத்திரங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அப்படியே வைத்தியரிடமும் போய் வந்தான்.இண்டைக்கு லீவு.பாபுவும் நேரத்துக்கு வந்திடுவான்."சொல்ல மறந்த கதை" என்று நல்ல படம் ஒண்டு வந்திருக்கு.கடையில கொப்பி ஒண்டு எடுத்துக்கொண்டு வந்தனான்.பின்னேர வேலை மட்டும்தான்.வந்து சாப்பிட்டு முடிச்சிட்டுப் படம் பாத்திட்டுத்தான் படுக்கவேணும்.

இண்டைக்கு பாபு சமைக்கிறன் எண்டவன்.எனக்கும் முதுகு சரியா வலிக்குது.நல்லா ஐஸ் கொட்டிக்கிடக்குது.சவம் பிடிச்ச ஊர் இது.எங்கட தலைவிதி.நாசம் கட்டினவங்கள் எங்களை ஊரோட நிம்மதியா இருக்கவிடுறாங்களே என்றும் நடுவில்அலுத்துக்கொண்டவன்.....விண்டர் சூவும் (குளிர்காலச் சப்பாத்து) பழுதாப்போச்சு.இந்த வருசம் இதோடயே சமாளிக்கலாம்.அடுத்த வருஷம் வாங்கிக்கொள்ளலாம்.என்று மனதோடு பேசிக்கொண்டே சோபாவில் சாய்ந்தவன் தான் அப்படியே நித்திரையாகிவிட்டான்.

பாபு வந்து கதவைத் திறக்கவே திடுக்கிட்டு விழித்த கண்ணனிடம் பாபு " என்னடா மச்சான் பின்னேர வேலைக்கு நேரமாச்சு.இன்னும் படுத்திருக்கிற."என்றான்.

"ஓமடா மச்சான் அசந்து போனன்." என்றபடி முகத்தைக் கழுவி வெளிக்கிட்டபடியே தன் தங்கையின் திருமணம் பற்றியும்,அதற்காக வங்கியில் கடன் எடுப்பது பற்றிக் கதைத்திருப்பது பற்றியும்,வைத்தியர் முதுகுவலி பற்றியும்,சொல்லிக்கொண்டே வேலை முடித்து வந்து இருவருமாகப் படம் பார்த்துவிட்டுப் படுக்கலாம் என்றும் சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விட்டான்.

பாபு கோழி ஒன்றை ஐஸ்பெட்டிக்குள்ளால் எடுத்து ஊறவிட்டுவிட்டு சமையலுக்குண்டான மற்றைய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் சத்தம்கேட்டுத் திரும்பியவன் போய்க் கொஞ்ச நேரத்திலேயே கண்ணன் திரும்பி வந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.

"என்னடா மச்சான் என்ன நடந்தது"என்று பாபு கேட்கவும்" "இண்டைக்குச் சரியா ஏலேல்ல மச்சான்.குனிஞ்சு நிமிந்து ஒண்டும் செய்ய ஏலாம இருக்கு.முதுகு குடைஞ்சு நோகுது.நாளைக்கு கிறங் (சுகயீனம்) சொல்லிட்டு டொக்டரிட்ட போனாத்தான் நல்லது" என்றபடி படுக்கைக்குப் போய்விட்டான்.

அதே இரவு கண்ணன் வலியால் துடித்துப்போக அவசர அழைப்பு வைத்திய வாகனத்திற்கு தொலைபேசியில் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்த்தான் பாபு வைத்தியசாலைக்குக் கண்ணனை.

அடுத்த நாள் விடிந்தது ஆனால் கண்ணனுக்கு இருளாக.வைத்தியர் சொன்னது அதிர்ச்சியாக்கியது கண்ணனை."இனி ஒரு நாளுக்கு 4-5 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யமுடியாது என்றும்,பாரமான பலமான வேலைகள் எதுவுமே செய்யக்கூடாதென்றும், தொடர்ந்தும் செய்தால் பக்கவாதத்திற்குண்டான அறிகுறிகள் தெரிகிறதென்றும்,பிறகு எழும்பி நடமாடவே முடியாத நிலைமை வந்துவிடுமென்றும்" உறுதியாகத் தெரிவித்தார்.

கண்ணன் தன் 43 வயதின் வாழ்நாடகளில் கடந்த காலத்தில் தன் கடமைகளைச் சரிவரத் தான் செய்துவிட்ட பெருமிதத்தோடு,அதேநேரம் தனதென்ற தன் வாழ்வு தன்னை விட்டுப்போய்விட்ட வேதனையோடு இதை அப்பா அம்மாவுக்குச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையோடும் முற்றிலும் பனியால் மூடப்பட்ட சுவிஸ்ன் உயர்ந்த மலைகளைப் பார்த்தபடியே தானும் மலையாய் மலைத்து நிற்கிறான்.

35 comments:

சத்ரியன் said...

//கண்ணன் தன் 43 வயதின் வாழ்நாடகளில் கடந்த காலத்தில் தன் கடமைகளைச் சரிவரத் தான் செய்துவிட்ட பெருமிதத்தோடு ,அதேநேரம் தனதென்ற தன் வாழ்வு தன்னை விட்டுப்போய்விட்ட வேதனையோடு இதை அப்பா அம்மாவுக்குச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையோடும் முற்றிலும் பனியால் மூடப்பட்ட சுவிஸ்ன் உயர்ந்த மலைகளைப் பார்த்தபடியே தானும் மலையாய் மலைத்து நிற்கிறான்...//

ஹேமா,
குடும்பத்துக்காக உழைச்சிப் போட்டு கடைசியில வருந்தினா எதும் பயனில்ல-ன்னு உணர்த்துது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வாழ்வின் ஏற்ற இறக்கங்களை இலங்கையில் அமர்ந்து அவதானிப்பது போல ஒரு சுஹானுபவம்.

அற்புதமான உரைநடைக்காரி நீங்கள் ஹேமா.

எப்பவுமே உங்களுக்கான என் முதல் மதிப்பெண் உரைநடைக்குத்தான்.

இதிலேயும் பிச்சிட்டீங்கோ.

குடந்தை அன்புமணி said...

அதிக குழந்தைகள் பெற்றால் பெண்ணுக்கு மட்டுமல்ல- கூடப் பொறந்த பொறப்புக்கும் கஷ்டம் என்பதை உணர்த்துகிறதோ...

தமிழ் உதயம் said...

வருத்தத்தோடு, வேதனையோடு கண்ணன் மட்டுமல்ல , நாமும். சுமைதாங்கிகள் சுமை தாங்க முடியாமல். நல்ல கதை.

கவி அழகன் said...

அந்தந்த விடயங்களை அந்த அந்த வயசில செய்திடோனும்

சுந்தரா said...

வெளிநாடுகளில் கண்ணனைப்போல் நிறையப்பேர் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஹேமா.

உங்க எழுத்துநடை ரசிக்கவைத்தது.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை ஹேமா. இதுபோல எத்தனை பேர். முடித்த விதம் வெகு அருமை.

http://rajavani.blogspot.com/ said...

ஹேமா நடுத்தரத்தின் தலைவிதியை அற்புதமா படம் பிடிச்சிருக்கீங்க....

குறையொன்றுமில்லை. said...

மிகவும் நல்லா இருக்கு.உங்க எழுத்து சுவாரசியமா இருக்கு.

நிரூபன் said...

துருவலை அவளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.கழன்று கழன்று விழுந்தபடி....//

வணக்கம், திருவலையா, துருவலையா சரி.,

நிகழ்வுகள் said...

பெருமூச்சு ...

நிகழ்வுகள் said...

///பாபு கோழி ஒன்றை ஐஸ்பெட்டிக்குள்ளால் எடுத்து ஊறவிட்டுவிட்டு/// வெளிநாட்டு வாழ்க்கை + யதார்த்தம் :-)

நிரூபன் said...

நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்,

உங்களின் முதல் முயற்சியில் உருவான சிறுகதை இது என்று நினைக்கிறேன்,

வட்டார மொழி வழக்கோடு அருமையாக வந்திருக்கிறது.
வசன நடையில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், இன்னும் பிரமாதமாக இருக்கும்.

தமிழனாகப் பிறந்தால் தன் வீட்டுப் பொறுப்பினை நிறை வேற்ற ஓடாய்த் தேய்து உழைக்க வேண்டும் என்பது தானே நியதி,
அத்தையக சம்பவத்தின் பின்னரான புலம் பெயர் நிஜ வாழ்க்கையினை உங்களின் கதை சுட்டி நிற்கிறது.

நிகழ்வுகள் said...

///வணக்கம், திருவலையா, துருவலையா சரி.,//// நம்ம ஊர்களில் திருகுவலை என்பார்கள்... எனக்கும் அர்த்தம் சரியாக தெரியாது...

தனிமரம் said...

நல்லா இருக்கு என்று மட்டும் சொல்ல முடியாத நிலை தோழி இதைதானே நாங்களும்  மூடி மறைத்து உள்ளுக்குள் அழுது புலம்பும் வாழ்க்கை! 
 இந்த முள்ளந்தண்டு வேதனை இருக்கே!! அப்பாடா? உறவுகளின் அனுபவமோ!

ராஜ நடராஜன் said...

ஹேமா!கவிதைகள்தான் பிகாசோ என்றேன்.படங்களை அல்ல:)

ஜோதிஜி said...

அடுத்த கதை எப்போது ஹேமா?

நேசமித்ரன் said...

வாதையின் மொழியும் கூட இசையாக வாய்ப்பது சில பறவைகளுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமே எனத் தோன்றுகிறது ஹேமா :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

எழுத்துநடை வெகு அருமை.

Anonymous said...

கதை அருமை. பலரின் வலிகளை சொல்லுகிறது

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமாவின் எழுத்து நடையே சுவராஸ்யம் தான்..

இண்ட்லி என்னாச்சு? இணைக்கவா?

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லில இணைச்சா ஆல்ரெடி அட்டாச்டுன்னு வருது, ஆனா அட்டாச் ஆகல..

பித்தனின் வாக்கு said...

good nalla nadai

Angel said...

உண்மை உண்மை !!! நாங்கள் எத்தனை கண்ணன்களை பார்த்திருக்கிறோம்
எனக்கு தெரிந்த ஒரு கண்ணன்(தெரியாத பல கண்ணன்கள்) தனது சகோதரிக்கு மணமாகததால் தானும்
திருமணம் செய்யாமல் அப்படியே இருக்கிறார் .
அருமை ஹேமா .

எல் கே said...

நேற்றே கமென்ட் போட்டேன். வரவில்லை. எதோ பிரச்சனை . கதை நடை அருமை. பலரின் வாழ்வின் வலிகள் தெரிகிறது

ஸ்ரீராம். said...

அழகிய மொழியில் மனதில் நிற்கும் கதை.

போளூர் தயாநிதி said...

உங்களின் பதிவை கண்டேன் இப்படிப்பட்ட பண்பாட்டு பதிவுகள் தொடர்வது உண்மையில் வரவேற்க தக்கதாக இருக்கும் என எண்ணுகிறேன் ஈழத்தின் வாழ்க்கைமுறைகளை அறிந்து கொள்ள இயலும் இல்லையா?

அப்பாதுரை said...

சோகத்தை ரசிக்க வைக்கும் நடை.
பொருத்தமான தலைப்பு. கனமான கதை.

நிலாமகள் said...

க‌ண்ண‌னுக்காக‌ பெருமூச்செறிவ‌து த‌விர‌ என்ன‌ செய்ய‌ முடிகிற‌து ந‌ம்மால்...?! வாசிப்ப‌வ‌ர்க‌ளை உருக‌ வைக்கும் த‌ங்க‌ள் ந‌டைய‌ழ‌கைப் பாராட்டிக் கொண்டேயிருக்க‌லாம்.

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

கீதமஞ்சரி said...

வாழ்வின் யதார்த்தம் சொல்லும் கதை. உரையாடல் கூடுதல் பலம். கண்ணன் படும் வேதனையைப் பகிரவும் ஆளில்லா அவலம். நிஜம் சுடுகிறது ஹேமா.

இராஜராஜேஸ்வரி said...

கண்ணன் தன் 43 வயதின் வாழ்நாடகளில் கடந்த காலத்தில் தன் கடமைகளைச் சரிவரத் தான் செய்துவிட்ட பெருமிதத்தோடு,அதேநேரம் தனதென்ற தன் வாழ்வு தன்னை விட்டுப்போய்விட்ட வேதனையோடு //

வாழ்வின் வலிகள் வேதனை....

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை.

ஹேமா said...

சத்ரியா...முதல் வருகைக்கு சந்தோஷம்.குடும்பத்துக்காக உழைப்பது கடமையும் சந்தோஷமும்கூட.அதேசமயம் தன் வாழ்வு தொலைந்துகொண்டிருப்பது என்பது வருத்தம்தானே.இது நம் வாழ்வில் பெற்றோர்களின் பேராசையால் வரும் வினை.அதுவும் புலம்பெயர் அகதி வாழ்வில் நிறையவே !


சுந்தர்ஜி...உங்கள் சந்தோஷம் என்னை உற்சாகப்படுத்துகிறது.
தப்புக்களை என் தலையில் குட்டிச் சொல்லுங்கள் !


குடந்தை அன்புமணி...பெற்றவர்கள் பெற்றுவிட்டாலும் தம் நிலையோடு ஆசைகளை வைத்துக்கொண்டால் கூடப் பிறந்தவன் ஓரளவு தப்பிக்கொள்வான் !


யாதவன்...அந்தந்த வயசில செய்யவேண்டிய கடமைகளைப் பெற்றவர்கள்தான் நிச்சயம் கவனிக்கவேணும்.சில பெற்றோர்கள் பணம் வருது என்று பிள்ளையின் வாழ்வைப்பற்றி யோசிப்பதேயில்லை !


சுந்தரா...நன்றி தோழி.


ராமலக்ஷ்மி அக்கா...இது போன்ற நிகழ்வுகள் நான் பார்க்கும் அனுபவம்.


தவறு...இதுபோல நிறையக் கண்ணன்கள் அகதி வாழ்வில் தங்கள் தலைகளை மொட்டையடிக்காமலே மொட்டையாகித் திரிகிறார்கள்.
உங்களுக்காகவே அடுத்த பதிவு வருகிறது !


நிகழ்வுகள்...கந்தசாமி ம்ம்ம்...
எவ்வளவு பெருமூச்சைத்தான் தாங்கும் இந்த பூமி !


நிரூ...இதற்கு முன்னமும் பாருங்கள் என் சிறுகதைப் பகுதி இருக்கிறது.திருவலை துருவலை,
திருகுவலை எல்லாமே சரியென்றே நினைக்கிறேன்.துருவுதல் தூளாக்குதல் என்று பொருள்படுகிறது !


நேசன்...இந்தக் குளிர் நாட்டில் எங்கள் எலும்புகள் ஈடு கொடுக்க மறுக்கிறது.அதோடு கடின வேலைகள்தான் நாரிப்பிடிப்பு, முள்ளந்தண்டு வலிக்குக் காரணம்.குளிர்காலத்தில் உடைகளில் கட்டாயம் கவனமெடுங்கள்.ஓரளவு நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் !


நடா...படம் பிகாசோதான்.கதைக்குக் கருத்து எங்கே ?எதிர்பார்த்தேன் !


ஜோதிஜி...நடாவுக்கு அடுத்ததாக நீங்களும் அப்பிடியே...ம்ம்ம் கோவம்.பெரியவர்களிடம் கருத்துக்கள் நிறைய எதிர்பார்த்து ஏமாந்திட்டேன் !


நேசமித்ரன்...சுகமா நேசன்.
வந்திட்டீங்களா நைஜீரியாவுக்கு.
கவிதையாய் ரசித்த பின்னூட்டம் !


டி.வி.ஆர் ஐயா...அரசியலுக்குள் புகுந்துவிட்டீங்க போல.அடிக்கடி காணமுடியவில்லை !


சிபி...என் எழுத்தை ரசிக்கும் ஒரு காமெடியன் நீங்கன்னு சொல்லலாமா !


பித்தன்...அட....பித்தரே
எங்கப்பா நீங்க !


ஏஞ்சல்...நீங்கள் இலண்டலின் இருப்பதால் இந்தக் கதையின் அனுபவம் நிச்சயமாய் உங்களுக்குத் தெரிந்திருக்கும் !


எல்.கே...இதற்கு முன் உங்கள் பின்னூட்டம் வர்வேயில்லையே.சரி இப்போ வந்திருக்கு.மீண்டும் கருத்துச் சொன்னதுக்கு நன்றி.
அன்புக்கும் !


ஸ்ரீராம்...இப்படியான அனுபவம் கண்டிருக்கிறீங்களா ?வறுமையால் வயது தவறிப்போவது வேறு.பணம் வர வர ஆசையால் ஆவது இந்தக் கதை !


தயா...நிச்சயம்.ஏற்கனவே சில கதைகள் எழுதிருக்கிறேன்.எனக்குக் கவிதை எழுதும் அளவிற்கு கதை எழுத வருதில்லை.என்றாலும் முயற்சிக்கிறேன் !


அப்பாஜி...தலைப்பைப் பற்றி நீங்க மட்டுமே சொல்லியிருக்கிறீங்க.
நன்றியும் சந்தோஷமும் !


நிலா...உங்கள் பாராட்டைப் பார்த்தால் எனக்கும் கதை எழுதக் கொஞ்சம் வருகிறதோ என்பதுபோல எனக்குச் சந்தோஷமாக நினைக்கிறேன் !


கீதா...உண்மைகள் சொல்லப்போனால் வேதனைதாம் நம் புலம்பெயர் வாழ்வு.இதுதான் என் பதிவுகளில் சோகம் அதிகம்.சிரிக்க மறந்தே போனேன் என்றே நினைக்கிறேன் !


இராஜேஸ்வரி...நன்றி தோழி உங்கள் கருத்துக்கு !


குமார்...வந்திட்டீங்களா.சுகம்தானே !

ஹுஸைனம்மா said...

ம்ம்.. தமிழ்நாடு மாதிரி அங்கேயும் வரதட்சணைங்கிற கண்றாவியும் உண்டா!! எனக்கு அதிர்ச்சித் தகவல். (கிடையாதுன்னு நினைச்சேன்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP