Tuesday, July 26, 2011

மறக்காத கருப்பு ஆடி.


அவலமும் அவலத்துள் எதிர்ப்பும் இவ்வகையான கணங்களில் உரை நடை தோற்றுப்போகின்றது.ஆனால் கவிதை அந்தக் கணங்களை மீட்டுத்தருகிறது.பாஸில் ஃபெர்னாண்டோ (Basil Fernando) என்னும் சிங்கள வழக்கறிஞர் ஜூலைப் படுகொலைகளின் பல முகங்களைக் கவிதையில் காட்டியிருக்கிறார்.அவருடைய "தார்மீக சமூகம்" என்கிற கவிதை கொலையாளிகள்மீதும் எனதும் அவரதும் சமூகத்தின் மீதுமான பெருங்குற்றச்சாட்டாகும்.

அந்தக் கவிதையைத் தொடர்ந்து அவரெழுதிய மற்றுமொரு கவிதைதான் "ஜூலை 83:மேலும் ஒரு சம்பவம்".இது இன்னுமொரு பெருங்குற்றச்சாட்டு.கவிதையில் வருகிற "மேலும்ஒரு" என்ற தொடர் எழுப்புகிற முரண்நகை மிகுந்த பலம் வாய்ந்தது.அதன் நோக்கமே இத்தகைய முரண்நகையைக் கிளப்புவதுதான்.எனினும் வேறொரு தலைப்பையும் ஒருவர் எண்ணிப் பார்க்க முடியும்.அவலத்துள் எதிர்ப்பு அந்தக் கிழமை இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றிய பாஸில் ஃபெர்னாண்டோவின் கவித்துவ விவரணம் அந்த வாரம் கொல்லப்பட்ட அத்தனை தமிழர்களதும் அவலத்தையும் வலியையும் ஒரு சேர எழுப்புகிறது.அது மட்டுமன்று பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதை சுமத்துகிற குற்றச்சாட்டுள் இன்னுமொரு விடயமும் பொதிந்திருக்கிறது.பயங்கரமான அவலத்தை எதிர்கொள்ளப்போகும் ஒரு தமிழர் வெளிப்படுத்திய அழிக்க முடியாத எதிர்ப்பே அது.
அந்தக் கவிதை.....

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்.

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி
எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர் நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை.

குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால் திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது.

அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.

அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.


இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது.நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம்.வலியுடன் ஆனால் சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை.நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர்.நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது.வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால் உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.‘வெகு சாதாரணமாக’ என்பதை அழுத்திச் சொன்னார்."ஏராளமான சம்பவங்களை நான் பார்த்துவிட்டேன்.போலிஸ்காரர்கள் இவற்றைக் கணக்கிலெடுக்கவே இல்லை."

சம்பவங்களைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கதைப்பதே அந்த நாள்களில் வழமையானதொன்றாக இருந்தது.இந்தச் சம்பவமும் அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது.எனினும் ஒருவருக்காவது இந்தச் சம்பவம் ஆச்சரியத்தைத் தரவில்லை அவருடைய நண்பர்கள் வட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் பற்றிக் கோபமும் துயரமும்தான் இருந்தன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.

ஆனால் என்னுடைய அக்கறையோ அந்த ஊர் பெயர் தெரியாத தமிழ்த் தந்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டிய எதிர்ப்பு பற்றியது.முகம் தெரியாத அந்தத் தமிழரின் ஒரு தந்தையின் மிகுந்த உறுதிவாய்ந்த அந்தச் செயல் வார்த்தைகள் பேசுவதைவிடப் பெரிதும் பலமாகப் பேசிற்று.அவருடைய செயலைவிட மிகக் காத்திரமான எந்த அறிக்கையும் வெளிவர முடியாது.அது ஒரு கிளர்ச்சியின் செயல்.வன்மையான கண்டனம்.மானுடத்தின் மீது பொதுவாகவும் சிங்களவர்மீது குறிப்பானதுமான குற்றச்சாட்டு அது என்றும் சொல்கிறார்.

யூலை 1983...

இனப்படுகொலைகளின்போது தப்பிப் பிழைத்தவர்கள் பாதிக்கப்பட்டோர் கொல்லப்பட்டோரை நினைந்து அழுவோர் ஆகியோரின் நினைவுக் கணங்களில் கொலையாளிகள் பற்றிய எண்ணங்களும் தவிர்க்க முடியாமல் பிணைந்திருக்கும்.எல்லாப் படுகொலைக் காலங்களிலும் கொலையாளிகள் எரியூட்டுவோர் கொள்ளையடிப்போர் எனப் பலதரப்பினர் இருக்கத்தான் செய்வர் இவர்கள் வெறுமனே ‘காடையர்கள்; காட்டுமிராண்டிகள்’ அல்லர்.இனப்படுகொலைகளில் ஈடுபட்டோர் பழியை வேறு யாரிடமாவது சுமத்தி விட்டுத் தாம் விலக நினைக்கிற மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் அரசாங்கத்தின் அடியாள்களாக இருக்கலாம்.ஜூலை83 இல் இத்தகைய வெற்றிக்களிப்பின் கணங்களில் ஒன்றை உள்ளூர்ப் படப்பிடிப்பாளர் ஒருவர் படம் எடுக்க நேர்ந்தது.ஆடை களையப்பட்டு பீதியுடன் இருக்கும் தமிழர் ஒருவரைச் சூழ நின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களையும் மனிதர்களையும் அந்தப் படம் காட்டியது.அந்தத் தமிழர் கொலை செய்யப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கொழும்பு நகரில் பொறள்ளை என்னுமிடத்திலிருந்த பஸ் நிலையத்துக்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில் 24 ஜூலை 1983 திங்கள் கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. அன்றைய நாளைத்தான் ‘கறுப்புத் திங்கள்’ என்று அழைக்கிறார்கள்.ஜூலை 83இன் முதலாவது படுகொலைகளில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும்.இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க.இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர்.படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார்.கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க தெரிவித்தார்.

இனப்படுகொலைகளின்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய குதூகலத்தை ஒட்டுமொத்தமாகவே விசித்திரமான மடத்தனம் என நாம் ஒதுக்கிவிட முடியாது.இன்னொரு சிங்கள நண்பர் சொன்னது இந்தக் கதை.

கண்டி நகரின் பேராதனை வீதிக்கு அண்மையில் ஒரு ‘கௌரவமான’ தெருவில் குடியிருந்தவர் அவர்.ஜூலை 83 படுகொலைகள் கண்டியிலும் பரவலாகவும் கொடூரமாகவும் இடம்பெற்றன.தெருவில் இருந்த தமிழ் வீடுகளைத் தேடிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் அலைந்தது.தமிழ் மூதாட்டி ஒருவர் குடியிருந்த வீட்டை இனங்கண்ட கும்பல் நேரே அங்கு சென்றது. நல்லவேளையாக ஏற்கனவே அந்த மூதாட்டி பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.கும்பல் வீட்டை உடைக்க ஆரம்பித்தது.எனது நண்பரும் கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக அங்கே நின்றார். தமிழ் மூதாட்டியின் வளர்ப்புப் பிராணியான அல்சேஷன் நாயைக் கும்பல் கண்டுபிடித்துவிட்டது.அந்த நாய் துண்டு துண்டாக வெட்டப்பட்டது.கும்பலுக்கு மிகுந்த கொண்டாட்டம்.

பயங்கரவாதம் எனும் போர்வையில் நடாத்திய ஒரு இனப்படுகொலையே 1983இல் நடைபெற்ற நாடு தழுவிய இனக்கலவரம்.கேட்டுப் பெற முடியாததை போராடிப் பெற புறப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு குத்திய முத்திரைதான் பயங்கரவாதம்.ஆனால் ஸ்ரீலங்கா அரசின் ஏவல்படைகள் ஈழ மண்ணில் செய்த அட்டூழியங்களிற்கு முற்றுப்புள்ளி இல்லை.1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்காவின் தனிச் சிங்களச் சட்டம் 1974இல் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்,1983இல் யாழ் நூலக எரிப்பு என்று வளர்ந்து 1983இல் நாடு தழுவிய இனக்கலவரம் ஸ்ரீலங்கா மூர்க்கத்தனமாக நடாத்தப்பட்டது.

1983 யூலை 23இல் திருநெல்வேலியில் 13 ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொரில்லாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர்.யூலை 24இல் இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பில் உள்ள கனத்தை பொது மயானத்தி்கு கொண்டு வரப்படுகிறது.இதன் எதிரொலியாக பொறள்ளையில் ஆரம்பித்த இனக்கலவரம் காட்டுத் தீ போல் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றது.தமிழர்களைக் கண்ட இடத்தில் தாக்கினர்.கொள்ளையடித்தனர் கற்பழித்தனர் தீ வைத்தனர்.அன்றைய ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் ஆதிகாரத்திற்கு அப்பால் நிலைமை கட்டுக்கடங்காது சென்றுவிட்டது. ஏனெனில் அவருடைய அமைச்சர் சிறில் மத்யுவும் இராணுவமுமே இனக் கலவரத்தின் சூத்திரதாரிகள்.ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்பட்ட போதிலும் வாக்காளர் பட்டியலை வைத்து வீடுகள் தொழிற்சாலைகள் கடையை இனவெறிக் கும்பல் இனங்கண்டது.

கொள்ளுப்பிட்டி பொறள்ள,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை என்று கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் 2000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.ஒரு இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் வீடிழந்தனர்.தமிழ் தொழிலதிபர்களான குணரத்தினம்,ஞானம் மகாராஜா போன்றவர்களின் ரெக்ஸரைல்ஸ் பிலிம் வினியோகம் போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றை எரிந்து நாசமாக்கினர்.இதன் மூலம் மாத்திரம் 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும் 1 1/2 இலட்சம் பேருக்கு மேல் வேலையும் இழந்தனர்.இவர்களின் புத்தியற்ற வேலையால் சிங்கள மக்களும் வேலையிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதைவிட மாத்தளை,நுவரேலியா,அநுராதபுரம்,கண்டி என்று தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் வன்முறைகள் நடந்தேறின.

ஸ்ரீலங்கா அரசின் சித்திரவதைக் கூடங்களை வெலிக்கடை,யாழ்க்கோட்டை ஆனையிறவு, பனாகொடை,குருநகர்,மட்டக்களப்பு என்று வரிசைப்படுத்தலாம்.பின் நாளில் குருநகர் இராணுவ முகாமினை தகர்த்து யாழ்/கோட்டை ஆனையிறவு முகாம்களை தாக்கி கோட்டையை முற்று முழுதாக கைப்பற்றினர்.1984இல் இரண்டு தடவைகள் மட்டக்களப்பு சிறை உடைக்கப்பட்டு பல ஈழப் போராளிகள் மீட்கப்பட்டனர்.பலத்த காவலிற்கு மத்தியிலான பனாகொடை முகாமில் இருந்து மகேஸ்வரன் என்ற போராளி தப்பி பனாகொடை மகேஸ்வரன் என்ற புகழ் பெற்றார்.

ஸ்ரீலங்காவிலுள்ள சிறைச்சாலைகளில் மிகப்பெரியது வெலிக்கடை சிறைச்சாலையாகும். இது ஒரு சிலுவை அமைப்பாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.இங்குள்ள சப்பல் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஏ 1,பி 2,சி 3,டி 4 என நான்கு பிரிவுகள் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளன.1983 யூலை மாதம் சி 3 பிரிவில் பிரிவில் பனாகொடை இராணுவ முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 தமிழ் கைதிகளும் பி 2 பகுதியில் 1981 ஏப்பிரல் 5ஆம் திகதி கைது செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை உட்பட ஜெகன்,நடேசதாசன்,சிவபாதம் மாஸ்டர், தேவன் உடன் வேறு சில கைதிகளும் தனித்தனியாகப் பூட்டப்பட்டு இருந்தனர்.இந்த ஆண்டு மேல் மாடிகளிலிருந்தும் சுமார் 600 சிங்கள கைதிகள் பலதரப்பட்ட குற்றங்களிற்காக தண்டிக்கப்பட்டு இருந்தனர்.இங்கு இருந்த தமிழ் போராளிகள் பல காரணங்களிகாக கைது செய்யப்பட்டிருந்தனர்.1981 ஏப்ரல் 5ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை குட்டிமணி ஆகியோரும் 22ஆம் திகதி ஜெகனுடன் பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.1983ஆம் ஆண்டு பெப்பிரவரி 24ஆம் நாள் தங்கத்துரை நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் "நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளல்ல" என்ற வடிவில் வெளியிடப்பட்டது.அவற்றின் சில பகுதிகள்...

"பயங்கரவாதம் கொள்ளை என்கிறீர்கள்.ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடாத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்க முடியாது.அதே ஏவல் படைகள் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு அறியாத இரகசியங்கள் அல்ல.இத்தனை கேவலங்களையும் நடாத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மை பயங்கரவாதிகளாய் சித்தரிக்க கச்சை கட்டியிருப்பதை விட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்."

"பிரிவினை கோருகின்றோம்.நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கிறீர்கள் நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?ஆங்கிலேயரால் திருப்பி ஒப்படைக்கவில்லை.எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம்.யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.இந்நிலையில் தாம் கோருவது விடுதலையேயன்றி துண்டாடல் அல்ல."

"எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகமோ அன்றி பயங்கரவாதமோ என உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை."

"இத்தீவில் வனவிலங்குகளிற்கேனும் ஒரு வில்பத்து,யாஎல,சிங்கராயக்காடு என வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு.ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்கு பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை."

"நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மனநோயாளிகளோ அல்லர்.மாறாக விடுதலையை முன் வைத்துப் போராடும் ஓர் ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்."

"நாம் விடுதலை பெறுவது நிச்சயமான உண்மை.பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச் சட்டங்களும் எம்மை அணுகா.எமது கடமையை முடிந்தவரை செய்த மன நிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் கழிக்கவோ... வேண்டுமாயின் மரணத்தைக் கூட தழுவவோ நாம் தயங்கவில்லை."

இந்நீதி மன்றத்தில் போராளிகளிற்காக புகழ் பெற்ற சட்டத்தரணிகள் சிவசிதம்பரம்,கரிகாலன் ,சந்தியேந்திரா குமாரலிங்கம் போன்றோர் வாதாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஏப்பிரல் 7ஆம் திகதி உமா மகேஸ்வரன் சந்ததியார் ஆகியோரை சந்தித்ததாகவும், இந்தியாவிற்கு தப்ப வைத்ததற்காகவும் டேவிட் அவர்களையும் அதே குற்றங்களின் சந்தேக நபராக டாக்டர் இராஜசுந்தரம் அவர்களால் ஸ்ரீலங்காவின் இரகசிய பொலிஸ் பிரிவினர் கைது செய்திருந்தனர்.இவர்கள் மூலம் காந்தியம் என்ற அமைப்பு உருவாக்கப் பெற்றது.வவுனியாவில் 12 நவீன பண்ணைகள் நடமாடும் வைத்தியசாலைகள் பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள் சிறுவர்களிற்கான பால்,திரிபோசா மா விநியோகம் சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் ஏறத்தாள 5000 மலையக மக்கள் வவுனியா திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களின் குடியமர்த்தப்பட்டனர்.இந்த வேலைத்திட்டங்களின் வருடாந்த வரவு செலவுத்திட்டம் 5,000,000 ரூபாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"சுதந்திரன்" ஆசிரியர் கோவை மகேசன்.தமிழீழ அணியின் தலைவர் டாக்டர் எஸ்.ஏ. தர்மலிங்கம் (75 வயது) சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றத்திற்காக சந்தேக நபர்களாக 1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி விரிவுரையாளர் நித்தியானந்தன்,நிர்மலா நித்தியானந்தன் மற்றும் மதகுருமாரர்கள் சிங்கராயர்,சின்னராயர்,ஜெயகுலராஜாவுடன் மாஸிச எண்ணங்கள் சிந்தனைகள் கொண்டிருந்த பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களோடு தமிழீழப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் துரதிஷ்டவசமாக கைது செய்யப்பட்டவர்கள் பலர்.வெளிநாட்டுப் பயணத்திற்கு 50,000 ரூபா கட்டிய ஜெயதாஸ் ஏஜன்சிக்காரால் தமிழீழப் போராளி என போலீசாருக்கு இணங்காட்டப் பட்டார்.ஐம்பது வயதுடைய பாலசிங்கம் என்பவர் கிணறு வெட்டுவதற்காக வைத்திருந்த டைனமற்றால் கைது செய்யப்பட்டிருந்தார்.வவுனியாவில் நடைபெற்ற இலங்கை விமானப் படையினருக்கு எதிரான தாக்குலின் பின் துவக்கு கடையொன்றினுள் எறியப்பட்டிருந்தது.எந்தத் தொடர்பும் இல்லாத கணேசலிங்கம் (26 வயது) கைது செய்யப்பட்டார்.இவ்வாறு பலருடைய சோகக் கதைகளை வரிசைப்படுத்த முடியும்.

தமது மண்ணின் மைந்தர்கள் ஸ்ரீலங்காவின் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகளாக அடைபட்டு அவர்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அங்காது.15 நிமிடமே வெளியில் வருவார்கள்.மிகுதி 23 மணி 45 நிமிடங்களும் தொடர்ந்து பல நாட்களாக கையில் விலங்குடன் சாப்பாடு கொடுக்காமல்,பின்பு உப்புக்கூடிய சாப்பாடுகளையும் கொடுப்பார்கள். சிறை வளவில் மழை பெய்து நிற்கும் வெள்ளத்தில் உருளச் செய்வார்கள்.தலைகீழாகக் கட்டித் தொங்விட்டு மிளகாய்த்தூள்புகை போடுவார்கள்.இவையெல்லாம் எந்த ஆடையுமின்றி நிர்வாணமாகவே செய்யச் சொன்னார்கள்.உற்றார் உறவினர் பார்க்க அனுமதிவில்லை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக 25.07.1983-ல் பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு நடந்தேறிய இனவெறிக் கொலையே உச்சக்கட்டமானது.

வெலிக்கடையின் சிலுவைக் கட்டடததினுள் பாலித (Location Officer) ஜெஜஸ் (Assistant Cheif Jailer) சமிரத்னா (Jailer) போன்றவர்களின் ஏற்பாட்டின் பெயரில் சிங்களக் கைதிகளை ஆயுதமாக்கி நிராயுதபாணியான தமிழ் கைதிகளின் கதவுப் பூட்டுகள் திறக்கப்பட்டு மண்டைகளைப் பிளந்து,கை கால்கள் வெட்டப்பட்டு,குரல் வளைகள் அறுக்கப்பட்டு, இதயங்களைப் பிளந்து தமிழ் இரத்தம் ஆறாக ஓடியது.இத்தனைக்கும் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்காவின் இராணுவம் வெலிக்கடையைச் சுற்றி தமிழ் போராளிகள் தப்பியோடாமல் காவல் புரிந்து கொண்டிருந்தது.எமது மக்களின் குற்றுயிரான உடல்கள் இழுத்து வரப்பட்டு அங்கிருந்த புத்த விகாரையின் முன்பு இருந்த புத்தரின் முன் போடப்பட்டன.சிங்கள கைதிகளின் வழிபாட்டிற்காக புத்தர் சிலையுடன் கூடிய விகாரை ஒன்று அங்கு அமைந்திருந்தது.
Black Moon - the 1983 riots in Sri Lanka
மரண ஓலங்கள் கத்தி கோடாலி கம்பியால் நிரந்தரமாக நிறுத்தப்பட்டன.
மரணதண்டனையென நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்னபோது குட்டிமணியும்,ஜெகனும் தமது கண்களை கண் பார்வையற்ற தமிழர்களிற்கு வழங்குவதன் மூலம் மலரும் தமிழீழத்தை தமது கண்கள் காணட்டும் என்று தமது இலட்சியக் கனவினைச் சொல்லியிருந்தனர்.அந்தோ பரிதாபம்....உயிருடன் அவர்களின் கண்களைத் தோண்டியெடுத்தனர்.நிர்வாணமாக்கி ஆணுறுப்பை வெட்டினர்.இரத்தத்தைக் சுவைத்துப் பார்த்தனர்.

பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவன் மயில்வாகனம் கைதிகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் ஒளித்திருப்பதைக் கண்ட ஜெயிலர் சமிரத்னா ரத்தம் பீறிட குரல் வளையைப் பதம் பார்த்தான்.சிங்கள கொலைஞர்கள் "ஜெயவேவா" (மகிழ்ச்சி ஆரவாரம்) என்று விசிலடித்துக் கும்மாளம் கொட்டினர்."நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர் கண்டு" என்று இந்நேரத்தில் பாரதியை நினைவுகூராமல் இருக்கத்தான் முடியுமா?

புத்தன் சொன்ன போதனை பொய்யாகிப் போகிறது என் மண்ணில்....!
"அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு ஞானம் வழங்குவதற்காகவே நான் வந்திருக்கிறேன்.உத்தம புருஷனானவன் ஜீவ கோடிகளுக்கு நன்மை புரிவதில் தன்னை இழந்துவிட வேண்டும்.கை விட்டோரை அவன் கைதூக்கிவிட வேண்டும்.இல்லாவிட்டால் அவன் உத்தம புருஷன் ஆகமாட்டான்.ஜீவ காருண்யமே என்னுடைய மதம்.அதனால்தான் இவ்வுலகில் சுகபோகங்களில் வாழ்பவர்களுக்கு அதை அனுஷ்டிப்பது கஷ்டமாக இருக்கின்றது.முக்திக்கான வழி எல்லோர்க்கும் தெரிந்திருக்கின்றது.உயர் குலத்தவனைப் போலவே சண்டாளனும் மூடிவிடுகிறான்.நாணற் குடிசைகளை யானை முறித்து எறிவது போல உங்கள் ஆர்வங்களை ஆசைகளை அழித்து விடுங்கள்.தீமையை அழித்து ஒழிக்கும் அருமருந்தே அறிவாகும்."

கருத்துக்களும் படங்களும் உதவி...இணையம் விக்கிப்பீடியா !

33 comments:

சே.குமார் said...

Neenda pathivu...
padikkum pothu nenjam uraikirathu...

ஹேமா said...

குமார்....பதிவு நீண்டிருக்கிறது.எனக்கும் புரிகிறது.சொல்லவேண்டியதை இடை நிறுத்தப் பிடிக்கவில்லை.இரண்டு பதிவுகளாகப் போடவும் விருப்பமில்லை.கொஞ்சம் பொறுமையோடு படிக்கவேணும் !

சத்ரியன் said...

பெருங்கொடுமை...!

தமிழ் உதயம் said...

முழு பதிவையும் வாசிக்க முடியவில்லை ஹேமா. பெருகி வரும் துயரத்தோடு, கஷ்டமாக உள்ளது - வாசிக்க. மெல்ல மெல்ல தான் வாசிக்க முயல்கிறேன்..

தவறு said...

ஹேமா..வணங்குகிறேன்...துயரத்துடேனே படித்தேன்.மனசு கனக்கிறது....

கவி அழகன் said...

கண்கள் கனக்கிறது

Anonymous said...

அந்த கவிதை கலங்க வைத்துவிட்டது ;-(

ஸ்ரீராம். said...

படிக்கவும் முடியவில்லை. படிக்காமலிருக்கவும் முடியவில்லை. படித்த பின் மனதில் கனம்.

ஜீ... said...

மனது கனக்கிறது! வாசிக்கவே முடியவில்லை...எப்படி உங்களால் எழுத முடிந்ததோ? சில நான் ஏற்கனவே கேள்விப்பட்டது...சில புதிது!
அந்தக்கவிதை என்னமோ செய்கிறது...மனதை பாதித்த சினிமாவின் காட்சிகள் ஓரிரு நாட்கள் அலைக்கழிப்பதைப் போல இதுவும் காட்சியாக விரிந்து....!
பலரைச் சேரவேண்டிய இந்தப் பதிவுக்கு இவ்வளவு நேரமாகியும் தமிழ்மணம் முதல் வாக்கு நான்தான் இடுகிறேன் என்பதிலும் எனக்கு மிக வருத்தமே!

கலா said...

ஹேமா.எனக்கே தெரியாத பலவிடயங்கள படித்துப் புரிந்துகொண்டேன்,
எரிகிற தீயில் எண்ணை வார்பதுபோல்...இருக்கிறது இந்தப் பாதகச் செயல்கள படித்ததிலிருந்து...
மனதும் வலிக்கிறது நினைவும் முன்னோக்கிச் செல்கிறது உன் இடுகையால்.....உன் உழைப்புக்கு நன்றிடா

அமைதிச்சாரல் said...

அந்தக்கவிதையைத்தாண்டி வாசிக்கமுடியலை ஹேமா.. மனசுக்கு ரொம்ப பாரமாயிருக்கு..

மாய உலகம் said...

காரின் கதவை திறந்து குழந்தைகளை எடுத்து மீண்டும் காருக்குள் புகுந்து தீக்குள் அடைக்கலமாகிய அந்த உள்ளங்களும் பிஞ்சு உள்ளங்களும் ரனங்களின் கனமாய் நினைத்தது என்னவோ... அதை பார்த்து வலியின் கவிதாய் .... பிறருக்கு எரிந்த சாம்பலை கூட்டி தள்ளும் வேலையாய் சகஜமாய் பல கொடூரங்கள் அங்கே கொடிகட்டி பறந்திருக்கின்றன... எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அநியாயக்கொடுமைகள் செய்தோரே... பல நல்ல ஆன்மாக்களின் கண்ணீரின் சாபங்களின் தாக்கங்களாய் உங்கள் ஆன்மாக்கள் மேல் பாயும் என்பதை மறவாதீர்... எங்களை போல் எச்சங்களால் கண்ணீரே தர முடிகிறது சகோ

மாய உலகம் said...

//அந்தத் தமிழர் கொலை செய்யப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.//
இது போன்ற விசயங்கள் உலகுக்கு தெரியாமலா இருந்திருக்கும் ... ஏன் மற்ற நாடுகள் அநீதி நடக்கும் இந்நாட்டின் மீது அடக்குமுறையை கையாளவில்லை... ஞாயம் என்பது அவரவர் சாதகத்திற்கேற்ப நடத்திக்கொண்டிருக்கிறது போலும்.. எத்தனையோ இதயங்கள் இது போன்ற சம்பவங்களை மனதில் சுமந்துகொண்டு ஆறாத காயமாய் உள்ளம் வெந்து கொண்டிருக்கின்றனர்.. கொடுமைகள் செய்த ஆரா காயத்தை கொடுத்த கொடூரர்களின் மீது
பதிவு படிப்பவர்கள் நாம் சாபங்களையாவது தூற்றுவோம்..ஒட்டு மொத்த சாபத்துக்கும் கண்டிப்பாக ஒரு நாள் பலன் கிட்டும் ... நமது உறவுகள் அனுபவித்த துன்பங்களை விட மிக அதிக கொடூர துன்பங்கள் அயோக்கியர்கள் அனுபவிக்கட்டும்...

Rathi said...

ஹேமா, ஓர் இனப்படுகொலை என்பதன் அத்தனை அம்சங்களையும் ஒரு நிகழ்வுக்குரியதை மட்டும் ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கும், உழைப்பிற்கும் தலைவணங்குகிறேன்.

ஹேமா, எம்மவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அவற்றில் ஒன்றை தவறுதலாக விட்டுவிட்டீர்கள். சூடாக்கிய இரும்புக்கம்பியை கைதிகளாக்கிய தமிழர்களின் குதத்தினுள் செலுத்துவார்களாம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ஒட்டி வரும் திசுக்களையும், குருதியையும் கூட பார்த்து கெக்கலிக்குமாம் சிங்களக்காடை கூட்டம்.

உங்கள் பதிவொன்றும் என் நெஞ்சை கனக்கவைக்கவில்லை ஹேமா. இதென்ன இப்பவோ இதையெல்லாம் கேள்விப்படவும், பார்க்கவும் செய்யிறம். அன்று ஜெவேவோ உடன் "ஜெய்கோ" இல்லை. இன்று அதுவும் உண்டு. அவ்வளவே.

அண்மையில் ஓர் பதிவர் எழுதியிருந்தார் இந்தியா புறக்கணித்தது, தமிழகம் கண்ணை மூடிக்கொண்டது என்று.

இருந்தாலும் அரசியல் வாதைகள் (எழுத்துப்பிழையல்ல) வெட்கம், ரோஷம் இல்லாமல் எங்களுக்குப் பாடம் எடுப்பார்கள் "மீளிணக்கம்" செய்யுங்கள் இந்த ..... உடன் என்று.

நிலாமகள் said...

குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்

ப‌திவின் செய்திக‌ள் அன‌ல் வாரிக் கொட்டின‌ ம‌ன‌சில். ப‌டிக்க‌வே தாங்க‌வில்லையே ஹேமா... அனுப‌வித்த‌வ‌ர்க‌ளின் வ‌லி... அப்ப‌ப்பா!! ம‌ருந்து, நிவார‌ண‌மெல்லாம் இருக்குமிட‌ம் தெரியுமா யாருக்கேணும்? முடியுமா யாராலும்...?

நிரூபன் said...

அக்காச்சி, காலாதி, காலமாக எம்மோடு தொடரும் அவலத்தை, எத்தனை பதிவிட்டாலும், முற்றாக எழுத்தில் வடிக்க முடியாத படி பல வரலாறுகள் புதைந்து போயிருக்கின்றன சகோ. என்ன செய்ய, தமிழனின் நிலை இது தானே.

உலக சினிமா ரசிகன் said...

மிக நீண்ட காலமாக அனுபவித்து வரும் கொடுமைகளை விளக்க இந்த நீண்ட பதிவு அத்தியாவசியத்தேவை.வரிகளில் இருக்கும் வலிகள் வாசிக்கும் என்னை காயப்படுத்தியது.

“என்று தணியும் உங்கள் சுதந்திர தாகம்?”

அப்பாதுரை said...

மொத்தமாகப் படிக்க முடியவில்லை. விட்டு விட்டுப் படிக்க வேண்டியதாயிற்று.
நீளம் காரணமில்லை. புதைந்திருக்கும் யதார்த்தமும் அசாதாரண பயங்கரமும், நடந்து முடிந்தது என்ற உணர்வை அழுத்தி, கண்முன் நிறுத்தி வலியூட்டின. உங்கள் எழுத்தின் வெற்றி ஒரு புறம் என்றாலும், இனி வரும் நாள் மாறும் என்ற நம்பிக்கை மறுபுறம்.

கீதா said...

கனத்த மனத்துடன் திரும்பிப் போகிறேன் ஹேமா. வடித்த கண்ணீருக்கும், வெடித்த இதயங்களுக்கும் காலம் பதில் சொல்லும் நாள் நிச்சயம் வரும். அதுவரை எழுத்தே ஆயுதம். எண்ணங்களே போராளிகள்!

புலவர் சா இராமாநுசம் said...

சகோதரி!
முழுதும் படிக்க இயலவில்லை
இதை எழுதிய உங்கள் மனம்
என்ன பாடு பட்டிருக்கும்
மேலும் எதுவும் எழுதும்
சக்தி இல்லை மன்னிக்க!

புலவர் சா இராமாநுசம்

காட்டான் said...

ஏன் சகோதரி ஒரு ஈமெயில் போட்டிருக்கலாமே எங்களுக்கு இப்படி ஒரு பதிவ படிப்பதற்கும் தைரியம் வேண்டும்.. யூலை கலவரங்கள் எனது தனிப்பட்ட வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது... ஆனால் இதற்கும் கட்டாயம் ஒரு விடிவு இருக்கின்றது..!? அது என்னவென்றுதான் தெரியவில்லை எங்களுக்கு.. நீண்ட பதிவு என்றாலும் அதை ஒரே பதிவில் இட்டமைக்கு நன்றி.. இப்படியான ஒரு பதிவை தொடராக வாசிக்க காட்டானால் முடியாது..!?
நன்றி....

லெமூரியன்... said...

படிக்கும் போதே ரத்தம் உறைந்து போகிறது ஹேமா...
இந்த கொடுமைகளை அனுபவித்து மாண்டு போனவர்கள் எவ்வளவு ரணத்துடன் தங்களுடைய
கடைசி நிமிடங்களை கண்டிருப்பர்...

இந்த கருப்பு திங்கள் பற்றி வெவ்வேறு புத்தகங்களில் படித்திருக்கிறேன்..
ஆனாலும் ஒவொரு முறையும் படிக்கும்பொழுதும் மனம் ரணமாகி போகிறது ...

vidivelli said...

மனசை உருக்கி பிழிகிறது வரிகள்...
கனத்த இதயத்தோடு படித்துவிட்டுச்செல்கிறேன் அக்கா...
நல்ல பதிவு......

இராஜராஜேஸ்வரி said...

ஒரு கிளர்ச்சியின் செயல்.வன்மையான கண்டனம்.மானுடத்தின் மீது பொதுவாகவும் சிங்களவர்மீது குறிப்பானதுமான குற்றச்சாட்டு அது //

ஈனசெயல்... மனம் ரணமாகிறது.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்புச் சகோதரி,

என்ன சொல்ல.......நெஞ்சு பொறுக்குதில்லை.......தாங்க முடியவில்லை தோழி.......

Kousalya said...

ஹேமா இதை எழுதும் நேரம் உங்கள் உள்ளம் எவ்வளவு துயரபட்டிருக்கும்...?வரிகளின் ஊடே வேதனை சிதறல்கள் !

ஒரு தாயாய் வயிற்றின் வெம்மை உணருகிறேன் தோழி...

பலருக்கு இந்த தொகுப்பு சென்றடைய வேண்டும்மா !

மறக்காத கருப்பு ஆடி ! :(

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...

Rathnavel said...

வேதனையாக இருக்கிறது.
தாங்க முடியவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொடுமை

சி.பி.செந்தில்குமார் said...

வலிகளை பகிர்ந்து கொள்வோம்

ஹேமா said...

எம் வலிகளைப் பகிர்ந்துகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றியும் அன்பும்.என்றும் இதே ஒற்றுமையே வெற்றி தரும் !

சுவாமி said...

வணக்கம் ஹேமா, கருப்பு ஜூலை பற்றிய ஒரு சிறப்பான கட்டுரை. இதனை வருடங்கள் கடந்தாலும், இன்றைய சுழலில் பெரிதாக மாற்றம் ஏதுமில்லை என்றே தோன்றுகிறது. பின்னடைவுகளும், உலகியல் உதாசீனங்களும் வெறுப்பை தந்தாலும், போராட்ட உணர்வை போக்கியதாக தெரியவில்லை. அடக்குமுறைகள் என்றும் விடுதலை உணர்வை வென்றதில்லை! ............. ஒரு சிறு வேலையாக சுவிஸ் வருகிறேன். முடிந்தால் உங்களை சந்திக்க இயலுமா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சகோ... வருத்தமாக இருக்கிறது..
மனதை காயப்படுத்திய பதிவு..

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP