Thursday, November 06, 2008

என் புதிய வலைப்பூவைத் தொடக்கிய சினிமாத் தொடர்...

கவிதைகளாலேயே என் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த என்னை சினிமாத் தொடரில் இழுத்த றக்குவானை நிர்ஷன்,விக்கினேஸ்வரன்(வாழ்க்கைப் பயணம்),மற்றும் தமிழ்பறவை அண்ணா அவர்களுக்கும் என் எரிச்சல் கலந்த நன்றி.பார்த்தவுடன் முதலில் கேள்விகள் சீ...சினிமாவா என்று அலுக்க வைத்தது.
வேலைப்பளு...ஆரவாரமான பெரிய விடுமுறை.நேரம் பொன்னாக இருந்தது.விடுமுறையால் வர வீட்டில் விருந்தினர்.எப்படிக் கணணியில் ...?

நாட்டில் நிலைமை செய்திகளும் மன அலுப்பைத் தர மனம் ஈடுபாடு அற்று.இதோடு என் ஊர் சந்தியின் ஞாபகத்தோடு ஒரு புதிய வலைப்பூ ஒன்று தொடங்கலாம் என்றிருந்தேன்.அதைச் சினிமாத் தொடரோடு தொடங்க யோசித்தே இத்தனை பெரிய நேர இடைவெளி.
இனி...என் உப்புமடச் சந்தியில் பலதையும் பத்தையும் அலசலாம் வாங்கோ.

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ம்ம்ம்...வயது சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் சினிமாவின் பெயர் ஞாபகமிருக்கிறது.நிறம் மாறாத பூக்கள்.யாழ்ப்பாணத் திரை அரங்கில் திரையிடப்பட்டது.திரைஅரங்கின் பெயரும் ஞாபகம் இல்லை,ஆனால் ஒன்று மாத்திரம் ஞாபகம்.படத்தில் சிங்கம்,புலி,கரடி எல்லாம் வரும் என்றுதான் என்னைப் பெற்றோர் கூட்டிச் சென்றார்கள்.சொன்னபடி எதுவும் வரவில்லை.எனது வீறிட்ட அழுகை.ஒரு முறை கிள்ளிப் பார்த்தார்கள்.முடியவில்லை.படம் முடிவதற்கு முன்பே வீடு திரும்பியாச்சு.

2)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

அது 80 பது களின் பிற்பகுதிக் கோவில் வீதி,வாசிகசாலை,பள்ளிக்கூட சந்தி,விளையாட்டு மைதானம்,புறம்போக்கு காணி இவை எல்லாம் சினிமாக் கொட்டகை ஆன காலம்.அப்போது தான் நினைவு தெரிந்த சில சினிமாக்கள் பார்க்க முடிந்தது.எங்கள் வாழ்வில் அது"ஒரு கனாக் காலம்".இது ஒரு பட டைட்டிலாக இருந்தாலும் அது தான் உண்மை.அப்போது பார்த்த ஊமை விழிகள்,கண் சிவந்தால் மண் சிவக்கும்,வீரபாண்டிய கட்ட பொம்மன்,பாலம்
(சரி என நினைக்கிறேன்),ஹொனஸ்ட் நெட் போன்றபடங்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமாக்கள்.

3)என்ன உணர்ந்தீர்கள்?

அந்த வயதில் எதனையும் பெரிதாக உணர்ந்ததாக தெரியவில்லை ஆனால் இப்பொழுது நினைக்கும் போது எதனையோ உணர்ந்தது போல் இருக்கிறது.நிறையத் தவற விட்டது போலவும் இருக்கிறது.

4)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

குருவி.அதற்காக விஜய் இரசிகை அல்ல சகோதரர் கேட்டதற்காக சுவிஸ் கூர் சினிமா அரங்கு சென்றேன்.படம் முடியும் வரை அண்ணன் ஒரு கோயில் என்பதற்காக என்ன கொடுமை சார் இது என்று நொந்தபடி பார்த்தேன்

5)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?

இரண்டாம் தடவையாக கணணியில்"மொழி".உணர்ந்தது உணர்வுகளை பரிமாற மொழி தேவை.ஆனால் அன்பு என்பது உணர்வாக இருந்தாலும் அதற்கு மொழி தேவையில்லை என்பது.

6)மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சிலநேரங்களில் சிலமனிதர்கள்,வீடு,முள்ளும் மலரும்,சிப்பிக்குள் முத்து,
குருதிப் புனல்,மஹாநதி,சேது,ஆட்டோகிராவ்,காக்க காக்க,நந்தா,பிதாமகன்,
வெயில்,கற்றது தமிழ்,அன்பே சிவம்,பருத்தி வீரன் இப்படி பல இதனை விட செருப்பு,பீ போன்ற குறும்படங்கள்.

7)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஈழத்தவருக்கான கை கோர்த்திருக்கும் தமிழ் சினிமா உலகத்தவரின் போராட்டம்.
காப்டன் அடக்கி வாசிப்பது.

8)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

லைட்டிங்,கிராபிக்ஸ்,குசேலன் படத்தில் இறுதிக் காட்சியின் போதான லைட்டிங்,செல்வராகவன் படத்தில்(காதல் கொண்டேன்)லைட்டிங்,சங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ்.எல்லாவற்றையும் விட கற்றது தமிழ் படத்தில் ஸ்ரில் லைட்டிங்.கமல் படங்களில் ஒப்பனைக்கலை.

9)தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது இன்டர்னெட்டில் வெள்ளாடு புல் மேய்வது போல.
சில நேரம் சலனம் சினிமா இதழ்.

10)தமிழ்ச்சினிமா இசை?

அப்பாடா...பின்னுறாங்கள்.ஒரு முறை புகையிரத நிலையம் அருகில் செவ்விந்தியர் மியூசிக் கேட்டேன் வசீகரா அப்படியே தெரிந்தது.வெளி நாட்டு வாழ்வு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.என்றுமே ராஜா ராஜா தான்.சில நேரங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள் அமைதிக்காக... தீயில் விழுந்த தேனா...பூங்காற்றிலே உன் சுவாசத்தைக் கேட்பதுண்டு.ஆனால் என்றுமே இசை ஞானி ராசைய்யா தான்.

11)தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
அதிகம் தாக்கிய படங்கள்?

பெரிதாகப் பார்ப்பதில்லை.ஆனால் சில படங்கள் பார்த்துள்ளேன்.
லகான்,வோட்டர்,சலாம் பொம்பே,அடூர் கோபால கிருஷ்ணன் படங்கள்.ஆங்கிலப் படமான குழந்தைப் போராளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட பிளட் டைமண்ட்.விடு முறையில் இலண்டன் சென்றபோது வாட்டர்லூ சினிமாவில் பார்த்த சிங்கள திரைப்படமான புரஹிந்த கழுவற
(ஒரு பெளர்ணமி இரவில்)போன்றவை குறிப்பிடத் தக்கவை.

12)தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படி எதுவும் இல்லை.

13)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்காலம் தொழிநுட்பத்தில் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.இயக்குனர் இடை வெளி என்பது குறைந்துள்ளது.புதிய சிந்தனைகளுடன் பல இயக்குனர்கள் களம் இறங்குகிறார்கள்.புதிய பல சிந்தனைகள் திரையில் வருகின்றன.ஆனால் ஒரு உதாரணம் சேரனின் ஆட்டோகிராவ்வின் கதாநாயகனை ஒரு பெண்ணாகச் சேரனால் காட்ட முடியாமல் போனது.இன்னும் தமிழ் சினிமா சரியான முறையில் தடம் பதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

14)அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா இல்லாத உலகத்தில் உலகம் பல சகாப்தங்களாக சந்தோசமாகவே இயங்கி வந்துள்ளது.கவலைப் பட பெரிதாக எதுவும் இல்லை.சினிமாவை ஏதாவதொன்று நிரப்பும்.அது தானே உலக நியதி.


இந்தச் சங்கிலித் தொடரைத் தொடர
திலீபனையும்,
ஈழத்துக் களத்துமேடு ஈழவனையும்,

மெல்போர்ன் கமலையும்,
நேரம் கிடைத்தால் நிலாமுகிலனையும் கூப்பிடுகிறேன்.

ஹேமா(சுவிஸ்)

15 comments:

Anonymous said...

புதிய வலைப்பூவில் முதல் பின்னூட்டம் என்னுடையது(...?) எனப் பெருமிதத்துடன் பின்னூட்டுகிறேன்.
ஹேமா...
நீங்கள் தொடர்பதிவு போடுவீர்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை. அதற்கே முதல் நன்றி....
இன்னொரு நன்றி வலைப்பூவை எளிமையாக அமைத்ததற்கு(மாற்றி விடாதீர்கள்). நம் முன்னோர்கள் படத்துடன் அருமையாக உள்ளது.

//கரடி எல்லாம் வரும் என்றுதான் என்னைப் பெற்றோர் கூட்டிச் சென்றார்கள்//
டி.ராஜேந்தர் படத்துக்குப் போயிருக்கணும்.
//ஆனால் இப்பொழுது நினைக்கும் போது எதனையோ உணர்ந்தது போல் இருக்கிறது.நிறையத் தவற விட்டது போலவும் இருக்கிறது//
என் மனநிலையும் அதுதான்.
//கற்றது தமிழ் படத்தில் ஸ்ரில் லைட்டிங்.
//
எனக்கு மிகப் பிடித்த படம் அது.கதை சொல்லும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.
//என்றுமே இசை ஞானி ராசைய்யா தான்.
//
இதுல நான் சொல்றதுக்கென்ன இருக்கு...?!
//சேரனின் ஆட்டோகிராவ்வின் கதாநாயகனை ஒரு பெண்ணாகச் சேரனால் காட்ட முடியாமல் போனது.//
அந்த சமயத்துல இந்தளவுக்கு ஆட்டோகிராஃஃபை மக்கள் ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம்தான். விரைவில் பெண்களின் பார்வையில் படம் வரும் என எதிர்பார்ப்போம்.
//சினிமாவை ஏதாவதொன்று
நிரப்பும்.அது தானே உலக நியதி.//
சுமாராகத் தொடங்கி, ஜனரஞ்சகமாகச் சென்று நீதி தந்து பதிவை முடித்துள்ளீர்கள். சினிமா பற்றிய பதிவுக்கு சினிமா போன்ற ஒரு பதிவு...
//வாதாடலாம் என்றும் நினைக்கின்றேன்.
அது அரசியலோ அல்லது சமூகமோ அல்லது சாதாரண விஷயங்களாகவோ இருக்கலாம்.
மனதிற்குள் கேள்விகளோடு இருக்கும் எந்த விஷயங்கள் ஆனாலும் யார் தலையங்கம் தந்தாலும் பதிவில் இட்டு அலசலாமா?//
கண்டிப்பாகச் செய்யுங்கள். கவிதை தவிர்த்த ஹேமாவின் முகத்தையும் நாங்கள் பார்க்கலாமில்லையா..நானும் கேள்விகளை எழுப்புகிறேன் உங்கள் பதிவுகளுக்காக...வாழ்த்துக்கள்...

Anonymous said...

please provide comment moderation...

Anonymous said...

நன்றி தமிழ்பறவை அண்ணா.உங்கள் வாழ்த்துக்களோடு என் புதிய பதிவுகள் ஆரம்பிக்கின்றன.இனி என் நேரங்களோடு சண்டை போட்டபடி பதிவுகளைத் தொடர முயற்சிக்கிறேன்.
திரும்பவும் நன்றி உங்களுக்கு.

Anonymous said...

நன்றி ஹேமா.
அடிக்கடி உங்கள் வலைப்பக்கம் வந்து எங்கே சினிமாத் தொடர் எனத் தேடி ஏமாற்றமடைந்தேன். அவற்றையெல்லாம் காணாமல்போகச்செய்தது உங்கள் எளிமையான பதிவு.

அதிலும் புதிய பக்கத்தில் தொடங்கியிருக்கிறீர்கள்.

உப்புமடச் சந்திக்கு எனது வாழ்த்துக்கள்.

//இதோடு என் ஊர் சந்தியின் ஞாபகத்தோடு ஒரு புதிய வலைப்பூ ஒன்று தொடங்கலாம் என்றிருந்தேன்.//

ஞாபகங்களைப் பகிருங்கள். என்னதான் இருந்தாலும் சொந்த ஊரில் கால்வைத்தல் அதைவிட சுகம் ஏது?

Anonymous said...

ஹலோ நானும் தான் அழைத்தேன் என் பெயரை விட்டுடிங்க... :((

எனது கண்டனங்கள்...

அருமையான அனுபவம்... வாழ்த்துகள்..

Anonymous said...

ஹேமா புதிய வலைபூவிற்கு என்னுடைய வாழ்த்துகள், கமலை தவிர சினிமாவில் எதையும் ரசிக்க தெரியாதவன் நான்,அதற்காக கமலை மட்டும் ரசிப்பேன் என்பது அர்த்தம் கிடையாது (என்ன கமல் போல் குழப்பவில்லையே). சரி உங்கள் கேள்விக்கு உங்களை போல் பதில் கூறுகிறேன்.
1.ஞாபகம் இல்லை ஆனால் எங்கள் வீட்டிற்கு சித்தி வந்ததால் அவர்கள் கூட்டி கொண்டு சென்ற படங்கள் நீயா? மற்றும் நவகிரக நாயகி.
2.நினைவு தெரிந்து என்பதை விட மிகவும் ரசித்து பார்த்த முதல் படம் காக்கிசட்டை.
3.ஒன்றும் இல்லை அன்று முதல் கமல் ரசிகனாக மாறியதாக உணர்ந்தேன்.
4.ஏகன்,நேற்று பார்த்தேன் உண்மையில் என் வாழ்க்கையில் நான் பார்த்த படங்களில் மிக மோசமான படம்.குருவி நூறு மடங்கு தேவலாம்.
5. கணணியில் பார்த்த அலிபாபா என்ற புதிய திரைப்படம் புதிய கரு மிக வித்தியாசமாக இருந்தது.
6.என்னை மிகவும் அழவைத்த படம் மற்றும் இன்று பார்த்தாலும் கண்ணீர் விட வைக்கும் ஒரு படம் மஹாநதி.கம்யூனிசம் பிடிக்கவிட்டாலும் ஆழ்ந்த கருத்திற்கு மற்றும் கமலுக்காக அன்பே சிவம். சில குறைகள் இருந்தாலும் முதிர்ந்த காதலை அழகாக வெளிப்படுத்திய வேட்டையாடு விளையாடு.
7.சமீபத்தில் நடந்த உண்ணா விரதம் அதில் பேசிய கமல், ரஜினியின் அர்த்தம் பொதிந்த கருத்துக்கள். அதை விட திரைப்பட தொழிலாளர்கள் கொண்டு வந்த மகத்தான தீர்மானம், போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தம்.
8.தசாவதாரத்தில் வரும் முதல் பத்துநிமிட சோழர் மன்னர் காலத்து காட்சி மற்றும் சென்ற ஆண்டு வெளியான பில்லா படத்தின் ஒளிப்பதிவு (அதை நம்பி ஏமாந்து தான் ஏகன் சென்றேன்.)
9.கமல் பற்றி எந்த செய்தி வந்தாலும் கண்டிப்பாக பார்ப்பேன்.
10.தமிழ் சினிமா இசை நன்றாக இருந்தால் ரசிப்பேன். அதிகப்படியான வேகம் கொண்ட பாடல்கள் பிடிக்கும் மிக மெல்லிய இசை கொண்ட பாடல்களையும் பிடிக்கும். உருகுதே மருகுதே மற்றும் அறியாத வயசு இந்தபாடல் சமீபத்தில் என் மனம் கவர்ந்த பாடல். இன்று வரை இந்த பாடல்களுக்கு இசை யார் என்று தெரியாது.
11.உங்கள் கருத்து தான் அதிகம் பார்த்தது இல்லை, யாராவது கண்டிப்பாக பாருங்கள் என்று கூறினால் பார்பேன். அப்படி பார்த்தது முன்னா பாய் எம்.பி.பி.எஸ் மற்றும் தாரே ஜாமீன் பர். அபுதாபியில் இருக்கும் போது ஒரு தெலுங்கு படம் பார்த்தேன், அதன் குறுந்தகடை ஒரு பிரதி எடுத்த பிறகே அதன் உரிமையாளரிடம் கொடுத்தேன். உண்மையில் என்னை கவர்ந்த மிக மெல்லிய காதல் கதை படத்தின் பெயர் "கோதாவரி".
இல்லை
12.சிறப்பாக இருக்கும் தொழில் நுட்பத்தில், கமல் மற்றும் விக்ரம் போல் இன்னும் சில கலைஞர்கள் தோன்ற வேண்டும்.
13.கண்டிப்பாக ஒன்றும் ஆகாது. விதிவிலக்காக சில சமூக சீர்திருத்த படங்களை வெளியிட அந்த ஒருவருடங்களில் முயற்சி செய்யலாம். குறிப்பாக சாதி,மத கொடுமைகளை எதிர்க்கும் படங்கள், ஈழ தமிழர் நிலை, சமுதாய முன்னேற்றம் என்று எடுக்கலாம்.
இன்னும் எனக்கு பிடித்த இரண்டு
பிடித்த பாடல் : - சிப்பி இருக்கு முத்தும் இருக்கு திறந்து பார்க்க நேரம் இல்லை
பிடித்த இசைஅமைப்பாளர் : ரகுமான்
அடுத்த பதிவை எதிர்பார்த்து அன்பு நண்பன்

Anonymous said...

சினிமா வாசனையற்ற என்னையும் உப்புமடச் சந்திக்கு அரட்டையடிக்க கூப்பிட்டமைக்கு நன்றி ஹேமா.

நல்லதொரு புதிய முயற்சி, பாராட்டும் கூட.

எனக்கு சினிமாவில் அவ்வளவு நாட்டமில்லை, சேரனின் படங்கள் என்றால் ரசித்துப் பார்ப்பதுண்டு.

சந்தற்பம் கிடைத்தால் நகைச்சுவைப் படங்களையும் பார்ப்பேன்.

திறனாய்வு செய்யுமளவுக்கு முடியவில்லை ஹேமா, இயலுமான அளவுக்கு முயற்சிக்கின்றேன்.

Anonymous said...

சந்தோஷம்தானே நிர்ஷன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.உண்மையில் எனக்கு "உப்புமடச் சந்தி"என்கிற பெயரைப் பார்க்கவே ஆசையாய் இருக்கு.இனி உங்கள் எல்லோரது ஆதரவோடு நகர்த்த வேணும் பதிவுகளை.

Anonymous said...

ஐயோ விக்கி...விக்கி உண்மையில் கவனிக்கவே இல்லை உங்கள் சினிமாப் பதிவை.ஏன் நீங்களும் சொல்லவில்லையே!தயவு செய்து மன்னிச்சுக்கோங்க விக்கி.

சரி...அதுக்காக ஹலோ என்றா கூப்பிட வேணும்?

வாழ்த்துக்கும் புதிய தள வருகைக்கும் நன்றி.திரும்பவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் விக்கி.

Anonymous said...

சரியாப்போச்சு திலீபன்.
பின்னூட்டத்திலேயே சினிமாப் பதிவா?என்றாலும் உங்கள் சினிமா அனுபவங்களை எனக்கு மட்டும் அறியத் தந்திருக்கிறிங்க.நன்றி.
என்னைப்போல கமல் பைத்தியம்தான் நீங்களும்!

புதியதள வருகைக்கு நன்றி திலீபன்.அடுத்து என்ன பதிவு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

ஈழவன் வாங்கோ.எங்க கன நாளா காணோமே குழந்தைநிலாவிலும்?
என்ன செய்விங்களோ ஏது செய்விங்களோ சினிமாப் பதிவு உங்கள் தளத்தில் களத்துமேட்டில் வரவேணும்.சரியா?

அடுத்த என் "உப்புமடச் சந்தி" பதிவு உங்கள் தளத்தில் இருந்துதான் எடுக்க யோசித்து இருக்கிறேன்.

Anonymous said...

நல்ல பதிவு ஹேமா ...
பல நல்ல தகவல்கள் படித்தேன் உங்கள் இந்த சினிமா பதிவில் ..
அதே போல வலை தளம் அருமை எளிமையாக இருக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள் ...வாழ்த்துக்கள்

அன்புடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

Anonymous said...

நன்றி விஷ்ணு,புதிய தள வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.அடிக்கடி வாங்க...வாங்க.

Anonymous said...

Ur article on tamil cinema is interesting.Pl visit my www.vmtamilcine.com for a tamil hit film.Till this date in 2008 only Anjaathe,Subramaniapuram have crossed the victory margin.Expected films Kuselan,Kuruvi,Sathyam,Vaaranam Aayiram are total flaps.The tamil cinefield needs revamping.

NILAMUKILAN said...

மன்னிக்க வேண்டும் இப்போது தான் உங்கள் உப்பு மட சந்தி இணையத்தை பார்க்க நேர்ந்தது. எப்போதோ என்னை அழைத்துள்ளீர்கள். நான் கவனிக்க வில்லை. இன்னும் இங்கு நான் கண்டுள்ள கேள்விகளுக்கு பதில் எழுதலாமா?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP