Saturday, January 03, 2009

கலாசாரம் சொல்லும் நாதஸ்வரம்.

"நாதஸ்வரம்' என்ற வட மொழிச் சொல்லினால் நாம் வழங்கும் தமிழருக்கே உரித்தான சிறப்பான இசைக் கருவி"வங்கியம்'என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டது.சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றக் கதையில் இளங்கோவடிகள் குறிப்பிடும் வங்கியம் நாதஸ்வரமே என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்குகிறார்.தமிழ்நாட்டில் இலங்கையில்,தமிழர் கலாசாரத்தில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவியாக விளங்குவது நாதஸ்வர இசைக்கருவியாகும்.தமிழக மக்கள் பெருமையோடு சொந்தம் பாராட்டுகிற வாத்தியமான நாகஸ்வரம் திருவிழாக்களிலும்,திருமண வைபவங்களிலும், திருக்கோயில் வழிபாடுகளிலும்,
இறைவனின் திருவீதியுலாக்களிலும்,உறுமி மேளம்,நையாண்டி மேளம் போன்ற கிராமிய இசை நிகழ்ச்சிகளிலும் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகிறது. இது 'இராஜவாத்தியம்' என்றும், 'மங்களகரமான வாத்தியம்' என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் யாவற்றிலும் நாகஸ்வர இசையைக் கேட்கலாம்.

நாதசுவரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த
ஓர் இசைக் கருவியாகும்.இது நாதஸ்வரம்,நாதசுரம், நாகசுரம்,நாகஸ்வரம்,நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.

தெய்வீகமான கர்நாடக இசையை இன்றளவும் பட்டிதொட்டி முதல் இசைவிழா வரையும் போற்றிக் காப்பவர்கள் நாகஸ்வரக் கலைஞர்களே.காற்றிசைக்கருவி வகையைச் சார்ந்த இந்த 'நாகஸ்வரம்' மக்களின் அன்றாட வாழ்க்கையில் தினசரி இடம்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகின்றது.இது திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவி. நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைக் கேட்கலாம்.நாதஸ்வரம் என்றும்,நாகசுரம் என்றும் அழைக்கப்படும் இக்கருவி பொதுவாக ஆச்சா மரத்தினால் நரசிங்கன் பேட்டை,தெரெழுந்தூர்,வாஞ்சூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் அதற்கெனவுள்ள ஆச்சாரிகளால் மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது.ஆச்சா மரத்தைவிட ரோஸ்வுட்,பூவரசு,பலாமரம்,
கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் செய்யப்படுகின்றன.
யானைத் தந்தத்தாலும்,உலோகமாகிய வெண்கலத்தாலும் கூட நாதஸ்வரம் செய்யலாம் என்பது நாவலரின் கருத்து. வெள்ளி,தங்கத்தினாலும் அபூர்வமாக அக்கருவி செய்யப் பட்டது.ஆண்டாங்கோயில் வீராசாமி பிள்ளை பொன்னால் ஆன நாதஸ்வரம் வைத்திருந்தார். ஆழ்வார்திருநகரி,திருவாரூர்,கும்பகோணம்,கும்பேசுவரர் கோயில்களில் கருங்கல்லில் செய்யப்பட்ட நாகஸ்வரங்கள் இன்றும் வாசிக்கப்படுகின்றன.தற்கால நாதஸ்வரங்கள் செங்கருங்காலி எனப்படும் ஆச்சா மரத்தினால் செய்யப்படுகின்றன.மரத்தின் வயது நாற்பத்திரண்டு எனில் உத்தமம்.இசைக் கருவி செய்யக் குறிப்பிட்ட ஒரு மரம் உகந்ததா என எளிய சோதனை ஒன்றினால் அறியலாம்.மரத்தை லேசாகச் சீவி நெருப்பில் காட்டினால் தீபம் போல எரிய வேண்டும்.கருகினால் அது கருவி செய்ய ஏற்றதல்ல.


ஏழு விரல்களினால் வாசிக்கப் படுவதால் "ஏழில்' என்றழைக்கப் படும் நாதஸ்வரத்தைப் பற்றிய குறிப்புகள் நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் விரவிக் காணப்படுகின்றன.பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த "சிங்கிராஜ புராண'த்தில் நாதஸ்வரம் பற்றிய விபரங்கள் காணக்கிடக்கின்றன.
பதினான்காம் நூற்றாண்டிலும் அதன் பின்னும் அடிக்கப்பெற்ற கல்வெட்டுகளிலும் எழுதப்பட்ட செப்பேடுகளிலும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.குழல் கருவிகளில் நாதஸ்வரத் திற்குப் பிரதான இடம் உண்டு.கோவில்களில் இறைவன் புறப்படும் காலை அவனுக்கு நேராக முன் நின்று வாசிக்கப்படுவது நாதஸ்வரம் மட்டுமே.சங்கு,நபூரி,
முகவீணை,எக்காளம்,திருச்சின்னம் என்ற கோவிலில் பயன் படுத்தப்படும் வாத்தியங்களெல்லாம் மேளத்துக்குப் பின்புறமோ இறைவன் திருவுருவத்திற்குப் பின்புறமோ தான் இடம் பெறுகின்றன.


ஊமத்தம் பூ வடிவில் காட்சியளிக்கும் இந்த நாதஸ்வரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.இதன் மேல்பகுதி 'உளவு' அல்லது 'உடல்' என்றும்,கீழ்ப்பகுதி'அணைசு' அல்லது 'அணசு' என்றும் அழைக்கப்படும். நாகசுரத்தில் வாசிப்பதற்காக ஏழு விரல் துளைகளைஅமைத்திருப்பர். இதற்கு 'சப்தஸ்வரங்கள்' என்று பெயர். இதில் எட்டாவதாக அமைக்கப்பட்டிருக்கிற துளைக்கு 'பிரம்மசுரம்' என்று பெயர். நாகசுரத்தில் செலுத்தப்படும் கூடுதலான காற்று இதன் வழியாகத்தான் வெளியேறும்.


நாகஸ்வரத்தின் நீளம் பலவாறாக இருக்கும்.மிகப் பழங்காலத்தில் 18.25 அங்குல நீளமாக இருந்தது (சுருதி 4.5 கட்டை).பல மாறுதல்களுக்குப்பின் 1941-ம் ஆண்டில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம்பிள்ளை அவர்கள் முயற்சிகள் பல மேற்கொண்டு 34.5 அங்குல நீளமும் 2 கட்டை சுருதியும் கொண்ட நாகஸ்வரத்தைக் கொண்டுவந்தார். இதை பாரி நாகஸ்வரம் என்பர். நீளம் குறைந்த நாகஸ்வரம் திமிரி எனப்படும்.நீளம் குறைந்தால் ஒலி உரத்து எழும்.சுருதி அதிகம்.நீளம் அதிகமாக இருந்தால் சுருதி குறைவாக இருக்கும்.


ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாகப் பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.நாகசுரக் கருவிகளை
நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.


நாகஸ்வரத்தில் காற்றை உட்செலுத்தி ஊதுவதற்கு உதவுவது 'சீவாளி' (ஜீவஒலி). காவிரிக் கரையில் விளையும் கொருக்கன் புல்லைப் பலவழிகளில் பதனிட்டு சீவாளியைச் செய்வர்.திருவாவடுதுறை, திருவீழிமிழலை,திருவிடைமருதூர் போன்ற ஊர்களில்
சீவாளி செய்யப்படுகின்றன. நாகசுரத்திற்கு சுருதி வாத்தியமாக அண்மைக்காலம்வரை 'ஒத்து நாகசுரத்தையே' பயன்படுத்தி வந்தனர்.இதுவும் நாகசுரம் வடிவிலேயே 2.5 அடி நீளத்தில் மெல்லியதாக இருக்கும்.விரல் துளைகள் இதில் இருக்காது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் நீளம் குறைந்தவை (ஐந்து கட்டை). இவைகளின் சீவாளி பனைஓலையால் செய்யப்பட்டவை.அனசு என்ற அடிப்பாகம் பித்தளையாலானது.

கோயில் பூசைகளிலும்,திருவிழாக்களிலும் நாகஸ்வர இசை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. திருவீதியுலாவில் இறைவனின் புறப்பாட்டிற்கு முன்பாக தவிலில் 'அலாரிப்பு' வாசிக்கப்படும். இது 'கண்ட நடையில்' அமைந்த சொற்கோவையாக இருக்கும்.இதனைத் தொடர்ந்து நாகசுரத்தில் 'கம்பீரநாட்டை'யும் அதன்பின் 'மல்லாரி' ராகமும் வாசிக்கப்படும்.இந்த மல்லாரியை வாசித்தவுடனேயே வெகு தூரத்திலிருப்போரும் கூட திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றதென்பதை அறிந்து கொள்வர்.இத்தகைய மல்லாரி பல வகைப்படும். தேர்த்திருவிழாவின் பொழுது 'தேர் மல்லாரி'யும்,சுவாமி புறப்படும் பொழுது அலங்கார மண்டபத்திலிருந்து யாகசாலைக்கு வரும்வரையிலும் 'பெரிய மல்லாரி'யும் வாசிக்கப்படும்.

இறைவன் யாகசாலைக்கு வந்ததும் தவிலும்,தாளமும் இன்றி நாகசுரத்தில் காப்பி,கானடா,கேதாரகெளளை போன்ற ராகங்கள் வாசிக்கப்படும்.
யாகசாலையிலிருந்து கோபுரவாசல் வழியாக சுவாமி வெளியில் வரும்பொழுது 'திரிபுடை தாளத்து மல்லாரி' வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலில் தீபாராதனை முடிந்ததும்,அந்தந்தத் தெய்வங்களுக்குரிய 'சின்ன மல்லாரி' வாசிக்கப்படும்.அதன்பின்பு காம்போதி,சங்கராபரணம்,
பைரவி,சக்கரவாகம் போன்ற ராகங்களில் ராக ஆலாபனை நடைபெறும். இந்த ராக ஆலாபனை கிழக்கு வீதியிலும்,மேற்கு வீதியில் பாதி வரையும் நடக்கும். அதன் பிறகு ரத்தி மேளமும்,ஆறுகாலத்தில் பல்லவியும் வாசிக்கப்படும்.இவ்வாறு கீழ் வீதியின் நடுப்பகுதி வரையிலும் பல்லவி,
சுரப்பிரஸ்தாரம்,ராகமாலிகை என்று வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலை அடைந்ததும் பதம்,தேவாரம் முதலிய பாடல்கள் வாசிக்கப்படும். தற்காலத்தில் இந்தப் பழைய மரபில் சில மாற்றங்கள் உள்ளன. மல்லாரி முடிந்த பின்பு 'வர்ணம்' என்ற இசை வகையும்,பின்பு சுவாமி கிழக்கு வாசலுக்கு வரும் பொழுது கீர்த்தனை,பதம்,ஜாவளி,தில்லானா,காவடிச் சிந்து போன்ற இசை வகைகளையும் வாசித்து வருகின்றனர்.
வீதியுலா முடிந்து சுவாமி கோயிலுக்குள்ளே நுழையும் பொழுது சுவாமிக்கு 'கண்ணேறு' கழிக்கப்படும். அப்பொழுது தாளத்தோடு தவில் மட்டும் தட்டிக் கொண்டு வருவார்கள்.இதற்குத்
'தட்டுச்சுற்று' என்று பெயர்.பின்பு பதம் அல்லது திருப்புகழ் வாசிப்பர்.பின்பு சுவாமி மூலஸ்தானத்திற்குச் செல்லும் பொழுது 'எச்சரிக்கை' என்னும் இசை வகை வாசிக்கப்படும்.இதற்குப் 'படியேற்றம்' என்று பெயர்.திருக்கோயிலின் பூசைக்கு நீர் கொண்டு வரும்போது 'மேகராகக் குறிஞ்சி' ராகமும், குடமுழுக்கின் பொழுது 'தீர்த்த மல்லாரி' யும் வாசிக்கப்படும்.மடப்பள்ளியிலிருந்து இறைவனுக்குத் தளிகை எடுத்து வரும்போது 'தளிகை மல்லாரி' வாசிக்கப்படும்.இறைவனின் திருக்கல்யாணம் நடக்கும் பொழுது 'நாட்டைக் குறிஞ்சி'யோ 'கல்யாண வசந்த'மோ வாசிக்கப்படும்.பெரிய கோடி வாயிலிலிருந்து தேரடி வரையில் கலைஞர்கள் வாசிப்பது "மிச்ரமல்லாரி".


நாகஸ்வர இசையோடுதான் இறைவனின் நித்திய காலப் பூசைகள் நடைபெறும். ஒவ்வொரு காலப் பூசைகளிலும் என்ன என்ன ராகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது தொன்றுதொட்டு மரபாகவும் பூசை விதிமுறைகளுக்கு அமையவும் அமைக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாகப் பொழுது புலருமுன் நான்கு மணி தொடங்கி
பூபாளம்,பௌனி,மலையமாருதம் வாசிக்க வேண்டும்.உச்சி வேளை எனில் முகாரியும் பூரண சந்திரிகாவும் மாலை ஆறு மணிக்கு மேல் சங்கராபரணமும் பைரவியும் இசைக்கப்படும்.அதே போல விழாக் காலத்தில் இறைவன் உலா வரும் இடத்திற்கு ஏற்பவும் ராகங்கள் வாசிக்கப்படுகின்றன.

நாட்டை ராக ஆலாபனையைத் தொடர்ந்தே இறைவனின் புறப்பாடு நடைபெறும்.சில திருக்கோயில்களில் இந்த இந்த இடங்களில் இன்ன இன்ன ராகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது.சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் திருவிழாவில் பத்துத் தினங்களிலும் அந்தந்த நாட்களில் அந்தந்த ராகங்கள வாசிக்கப்பட வேண்டும் என்ற முறை இன்றும் உள்ளது.வழிபாட்டில் மட்டுமல்லாமல் திருமணம் போன்ற மங்கலச் சடங்குகளின் போதும் வாசிக்கப் படும் நாகஸ்வரம் ஒரு மங்கள வாத்தியமாகும். சடங்குகளிலும் மதவிழாக்களிலும் நம்பிக்கை இல்லாத,இனிய இசையை இசைக்காகவே ரசிக்கும் சுவைஞர்களும் ஒரு முழு நீள நாதஸ்வரக் கச்சேரியை அனுபவிக்கலாம்.பாமரர்களிலிருந்து இசைவாணர்கள் வரை அனைவரது உள்ளங் களையும் உருக்குவது நாதஸ்வர இசை என்பதில் ஐயமில்லை.


கர்நாடக இசையை மிக விஸ்தாரமாக விவரணம் செய்யத்தக்க வாத்தியம் நாகஸ்வரம்தான்.அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்,முசிரி சுப்பிரமணிய ஐயர்,செம்பை வைத்தியநாத பாகவதர், காஞ்சிபுரம்
நைனாபிள்ளை,செம்மங்குடி சிறினிவாச ஐயர்,
ஜி.என்.பாலசுப்பிரமணியம்,மதுரை சோமு போன்ற பல சங்கீத வித்வான்கள் திருவீதியுலாக்களில் இரவு முழுவதும் நாகஸ்வரக் கச்சேரிகளைக் கேட்டே தங்களின் இராக பாவங்களை வளர்த்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்கள்.இது நாகசுரத்தின் மேன்மையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
(டாக்டர் கே. ஏ. பக்கிரிசாமி பாரதி அவர்கள் எழுதிய 'நாகஸ்வரம்' என்னும் கட்டுரையைத் தழுவி எழுதியது.)


ஹேமா(சுவிஸ்)

55 comments:

திகழ்மிளிர் said...

அருமையான ,
சுவையான செய்திகள்

பகிர்ந்துக் கொண்டது

நன்றி

ஹேமா

கே.ரவிஷங்கர் said...

ஹேமா!

ரொம்ப நல்லா இருக்கு.கட்டுரையின்
முதல் சில பகுதிகளில் “நாதஸ்வரம்”
என்றும் பிற் பகுதிகளில் “நாகஸ்வரம்”
என்று வருகிறது.

நாகஸ்வரம் தான் சரி என்று நினைக்கிறேன். அடுத்து திருமணங்களிலும் முக்கிய இடத்தை பெறுகிறது.திருமணத்தின் ஒவ்வொறு கட்டத்திற்க்கும் ஒரு ராகம் வாசிக்கப்படும்.

வாழ்த்துக்கள்!

SUREஷ் said...

எங்களுக்கு தெரிந்தவர்கள் சிக்கல் சண்முக சுந்தரமும், மற்றும் எங்கள் ஊரில் கோவிலில் வாசிப்பவர்களும்.

எங்களுக்கு அவர்கள்தான் நீங்கள் சொன்ன எல்லாமே...

கதியால் said...

"நாயணத்தை எடுத்து கொண்டுவா தம்பி..." என்று எங்கள் ஊர் வித்துவான்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பேச்சு மருவி இது பலவாறாக அழைக்கப்படுகிறது போலும். முன்பெல்லாம் "கட்டைக்குழல்" மற்றும் "நெட்டைக்குழல்" வைத்து வாசிப்போருக்கு இடையில் நிறைய போட்டி இருந்தது. ஆனால் இப்போது எல்லோரும் நீண்ட நாதஸ்வரம் வைத்துதான் வாசிக்கிறார்கள் என தெரிகிறது. நல்ல அருமையான தகவல்கள். அரும் பொக்கிசமான பதிவு. நன்றி.

வண்ணத்துபூச்சியார் said...

சும்மா ஊதி தள்ளிட்டிங்க ஹேமா. சூப்பர்.

ஈழவன் said...

மங்கள இசைக் கருவியானான நாதஸ்வரம் பற்றிய தெரியாத பல விடயங்களைப் பதிவிட்டுள்ளீர்கள், நன்றி ஹேமா.

கபீஷ் said...

நிறைய புதிய தகவல்கள் நாகஸ்வரம் பற்றி. நன்றி பகிர்ந்தமைக்கு

ஆயில்யன் said...

நாதஸ்வரம் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் பெட்டகமாய் இந்த பதிவு இன்று மட்டும் அல்ல என்றும் பயன் அடையும் வகையில் சிறப்பான பணி செய்திருக்கிறீர்கள் நன்றி!

:)

நாகஸ்வரம்?
நாதஸ்வரம் ?

நாதஸ்வரம் சரியான வார்த்தை என்றே நினைக்கிறேன் !

Ravee (இரவீ ) said...

மிக அருமையான - பாதுகாக்க படவேண்டிய பதிவு,
நீங்க குறிப்பிட்டதில் சில ஊர்களில் நான் வளர்ந்து வந்திருந்தாலும், இவ்வளவு விரிவான செய்திகள் தெரியாது - ஹேமாவின் பதிவின் புண்ணியத்தில் - வளர்ந்த தெரு, அரசலாற்றின் தோப்புத்துறவுகள் ,கோவில் மற்றும் ஊர் திருவிழா, என அனைத்தும் கண்முன். "நியாபகம் வருதே - நியாபகம் வருதே" னு முனுமுனுக்க கூட தொடங்கிவிட்டேன் - ஹேமா இந்த பதிவை எனது நண்பர்களுடன் மின்னஞ்சலில் பகிற மனமிரங்கனும்.

ஹேமா, said...

திகழ் நன்றி,புத்தாண்டு சிறப்போடு வருவதில் மிகவும் மகிழ்ச்சி.அடிக்கடி வாருங்கள் திகழ்.

ஹேமா, said...

ரவிஷங்கர்,உங்கள் முதல் வருகைக்கு முதலில் என் வணக்கமும் நன்றியும்.உண்மைதான் ஷங்கர்.
நாதஸ்வரம்,நாகஸ்வரம் எல்லாமே சரி என்று சொல்லப்படுகிறது.
மாறுபட்ட பெயர்களை இணைத்திருக்கிறேன்.

நீங்கள் சொன்னதுபோல திருமணத்திற்கும் அந்தந்தச் சமயங்களில் இராகங்கள் மாற்றப்பட்டு வாசிக்கப்படுகிறது.அதன் விளக்கங்கள் சேகரிக்க முடிந்தால் இனியாவது இதோடு இணைத்துக் கொள்கிறேன்.
நன்றி.

ஹேமா, said...

SUREஷ்,கருத்துக்கு நன்றி.நான் வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையும்,ஷேக் சின்ன மௌலானா அவர்களையும் என் சின்ன வயதில் இலங்கையில் என் தாத்தா வீட்டில் கண்டிருக்கிறேன்.

ஹேமா, said...

வாங்கோ கதியால்.இப்போதும் நாயனம் என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது.நீங்கள் ஈழத்துக் கலைஞர்களை அறிந்திருந்தால் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கலாமே!

ஹேமா, said...

வண்ணாத்தியாரே,அழகாய் வாசித்
திருக்கிறேன் போல இருக்கு.அதுதான் நீங்கள் கூட ரசித்திருக்கிறீர்கள்.
அடிக்கடி பறந்து இந்தப் பக்கமும் வாங்க.உங்கள் பதிவிற்குத்தான் என்னால் பின்னூட்டம் இட முடியாமல் இருக்கிறது.காரணம் உங்கள் பின்னூட்ட முறையை என் கணணி ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே!

வண்ணத்துபூச்சியார் said...

சிறப்பாக வாசித்திருக்கிறீர்கள்.

நானும் மகிழ்ச்சியாய்தான் வாசித்தேன்{படித்தேன்}

பின்னூட்டம் சரியாய்தான் உள்ளது என நினைக்கிறேன்.

Surya
butterflysurya@gmail.com

ஹேமா, said...

ஈழவன் உப்புமடச்சந்திக்கு உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
உங்களுக்குத் தெரிந்த ஈழத்துக் களைஞர்களின் பெயர்களை முடிந்தால் தாருங்கள்.

ஹேமா, said...

கபீஷ்,வாங்க.மேளச்சமா ரசித்தீர்களா?நன்றி.

ஹேமா, said...

ஆயில்யன்,நாதஸ்வரக் கச்சேரி என்றவுடன் ஓடி வந்திட்டீங்களே!நாகஸ்வரம்...நாதஸ்வரம் இரண்டுமே சரியான வார்த்தைகள்
தான்.அடிக்கடி வாங்க ஆயில்யன்.

வண்ணத்துபூச்சியார் said...

Comments இப்போது கூட சரிபார்த்தேன். எந்த மாற்றமும் செய்யவில்லை.

ஏன் உங்களுக்கு மட்டும் என தெரியவில்லை???

ஹேமா, said...

இரவீ கனவில கச்சேரி கேக்கிறீங்களாக்கும்!சரியாப்போச்சு.
யாராவது கரிக்கட்டையால மீசை வச்சிட்டுப் போகப்போறாங்கள்.

இரவீ,இப்போ பதிவு உங்கள் கையில்.நண்பர்களுக்கு அனுப்பி அவர்கள் கருத்தையும் தெரிவியுங்கோ.

ஹேமா, said...

வண்ணாத்தியாரே,திரும்பவும் கச்சேரி கேக்க வந்தீங்களா?சந்தோஷம்.
பின்னூட்டம் மிகப் பொருத்தமாகவே இருக்கு.

வண்ணத்துபூச்சியார் said...

இரவே இனிமை. அதுவும் தனிமை..

இரவு கச்சேரி தனிமையில் இனிமை.

கமல் said...

அப்பாடா.. ஒரு நாதஸ்வரம் பற்றி இத்தனை விடயங்களா?? ஹேமா தகவல்களுக்கும் பதிவுகளுக்கும் நன்றி... நீங்கள் தொடர்ந்தும் இப்படிப் பல்வேறு அறியாத புதுப் புது விடயங்களை எங்களுக்காக உப்புமடச் சந்தியில் தர வேணும்.....

கானா பிரபா said...

நிரம்பிய தகவல்களுடன் அருமையான பகிர்வு ஹேமா, நன்றி

ஹேமா, said...

கமல்,நன்றி.எம் கலை வளங்களை மறக்காமல் தெரிந்ததை பதிவுகளுக்குள் கொண்டு வருவோம்.இனி வரும் தலைமுறை சிலசமயம் "நாதஸ்வரம்"என்றால் என்ன அது என்று கேட்கக்கூடும்.

ஹேமா, said...

நன்றி பிரபா.முதலில் கொஞ்சம் யோசித்தாலும் துணிவோடு பதிவில் இட்டேன்.பிரயோசனமாகவும் எங்கள் எதிகாலத் தளிர்களுக்கும் தேவையான பதிவாயிருக்கும் என்று நம்புகிறேன்.

Tamilish Team said...

Hi hemavathy,
Congrats!
Your story titled 'கலாசாரம் சொல்லும் நாதஸ்வரம்.ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd January 2009 09:00:01 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/23747

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இளம் வயதுடைய நீங்கள் இக்கலை பற்றி எழுதுவது மகிழ்வைத் தருகிறது.
நான் நாதஸ்வரத்தின் பரம ரசிகன்.
தலைப்பைப் பார்த்து ஓடி வந்தேன்.
ஊர்க் கோவில் கச்சேரி ஞாபகம் வந்தது.
தென்னிந்திய புகழ்மிக்க கலைஞர்கள்
1- திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
2-காரைக்குறிச்சி அருணாசலம்
3- நாமகிரிப்பேட்டை கிருஸ்ணன்
4-ஷேக் சின்ன மொலானா
5-மதுரை சேதுராமன் சகோதரர்கள்
6- ஜெய சங்கர்
7-ஷேக் காசிம்
நம் ஈழக் கலைஞர்கள்
என்.ஆர். கோவிந்தசாமி
சாவகச்சேரி பஞ்சாபிசேகன்
இணுவில் பாலகிருஸ்ணன்
அளவெட்டி பத்மநாதன்
கானமூர்த்தி - பஞ்சமூர்த்தி
காரை சிதம்பரநாதன்
கேதீஸ்வரன்
நான் கேட்டு மகிழ்தோர்...
இன்னும் பலருண்டு அறிந்தோர் கூறுவார்கள்.

தென்னிந்தியாவில் கூட இக்கலையை இப்போ ஆதரிப்பார் இல்லை என்பதே உண்மை.
அக் கொடுமை பற்றி தனியாக ஆயலாம்.
ஈழம் போர்ச்சூழல் புரட்டிப்போட்டு விட்டது.
ஆனாலும் ஒரு அற்புதகலையின் சொந்தக்காரர் நாம்...பெருமைப் படவேண்டியது.
நேரமிருப்பின் என் இப்பதிவைப் படிக்கவும்.
http://koodal1.blogspot.com/2006/03/156.html

சே.வேங்கடசுப்ரமணியன். said...

சுவாரசியமான பதிவு.'தட்டுச்சுற்று,'சீவாளி' (ஜீவஒலி) புதிய தகவல்கள்.புத்தகம் எந்த பதிப்பகம் என தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு மேட்டர் கீத இதுல ...

ஹேமா, said...

வணக்கம் யோகன் அண்ணா.முதல் வருகைகும் நன்றி.இன்னும் மீண்டும் நன்றி புத்திமதி சொன்ன பின்னூடத்
துக்கும்.புரிந்துகொண்டொண்டேன்.
இனித் திருத்திக்கொள்வேன்.மிகவும் நன்றி அண்ணா.

யோகன் அண்ணா நீங்கள் மிகுந்த நாதஸ்வர ரசிகர் போல இருக்கு.
பிரபலமானவர்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள்.பாலகிருஷ்ணன் இனுவில் இல்லையாம்.இவர் மூளாய் அல்லது கோண்டாவில் பாலகிருஷ்ணன்.ஒரு விபத்தில் 32 வயதில்(1981)காலமானவராம்.
இன்னும் அளவெட்டியில் குமரகுரு.
இனுவில் சின்னராசா,நாச்சிமார் கோவிலடி கணேஸ்.உங்கள் தகவலோடு நானும் அறிந்து
கொண்டவர்கள் இவர்கள்.தொடர்ந்தும் வரவேணும் அண்ணா.

Ravee (இரவீ ) said...

எனது மின்னஞ்சல் உங்கள் பதிவு முகவரியுடன் சென்றுள்ளது... பார்க்கலாம் யார் யார் வருகிறார்கள் என்று.

கனவே வாழ்க்கை - வாழ்க்கையே கனவு என்றாகிய பிறகு - முழுவதும் மழிக்காத முகத்தில் யாரும் மீசை வைக்கமுடியாது அல்லவா?. (நல்லவேளை மீசையை மழிக்காது இருந்தேன்).

மிக்க நன்றி ஹேமா.

ஹேமா, said...

திரு,வேங்கடசுப்ரமணியன் அவர்களே,முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.நீங்கள் பதிப்பகம் கேட்டிருக்கிறீர்கள்.அறிந்து சொல்ல முயற்சிக்கிறேன்.

ஹேமா, said...

ஜமால்,கச்சேரி கேட்க வந்தீர்களா...கேட்டீர்களா?நன்றி.

ஹேமா, said...

இரவீ,நீங்கள் எப்பாச்சும் அகப்படவி
ல்லைபோல.மீசை இல்லாட்டி என்னவாம்!வால் கட்டலாம்.
தலைமுடி வெட்டலாம்,பொட்டு வைக்கலாம் இப்பிடி இப்பிடி நிறைய இருக்கு கைவசம்.

thaya said...

நாதஸ்வரம் இப்போது ஈழத்திலும் தயாராகிறது
அராலி என்னும் ஊரில் ஒருவரால் இது முயற்சிக்கப்பட்டு
ஈழத்தில் பாவனையில் இருக்கின்றது தயாரித்தவரின் பெயர் அடுத்து வரும்
தகவல் பரிமாற்றத்தில் தர முயல்வேன்

Ravee (இரவீ ) said...

ஹேமா,
வால்கட்டி, முடிய உச்சியில் கட்டி, பொட்டு வச்சு - வாய்க்குள்ள இரண்டு லட்டுவ போட்டு மூடிட்டா; பக்கத்துல ஒரு உண்டியல் வச்சு - இருக்கும் இடத்தை ஆஞ்சநேயர் கோவிலா மாத்திடலாம் :)).

ஹேமா, said...

இரவீ ,சரி...சரி.சிரிச்சு சிரிச்சு நாயனத்துக்குக்கூட கோவம் வந்திட்டுது.
சரி... உங்க மின்னஞ்சல் முகவரி யாருக்கு அனுப்பினீங்க.எனக்கு வரலப்பா!

Muniappan Pakkangal said...

Really a wonderful work for the topic nathaswaram.Congarats for a difficult presentation in an easy manner giving all details.

Ravee (இரவீ ) said...

நீங்க என்ன நாயனத்த வாயில வச்சுகிட்டேவா சிரிச்சீங்க? (அட கற்பனை செய்து பார்க்கவே நல்லாயிருக்கே),
சரி, நண்பர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்(email) உங்கள் பதிவு முகவரியுடன்(URL) மட்டுமே சென்றுள்ளது... :)

ஹேமா, said...

நன்றி முனியப்பன்.கச்சேரி கேட்க நீங்களும் வந்ததுக்கு.

ஹேமா, said...

நன்றி தயா உங்கள் முதல் வருகைக்கு.உங்களுக்குத் தெரிந்த ஆரோக்யமான மேலதிக விபரங்களைத் தருவீர்கள் என் நம்புகிறேன்.

ஹேமா, said...

இரவீ நல்லாத்தான் கற்பனைதான் பண்றீங்க.நன்றி...நன்றி.என் பதிவை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பினதுக்கு.

காரூரன் said...

அம்மாடி, இம்புட்டு விசயம் எழுதியிருக்கீஙக, நானும் இதில் இருந்து கற்றிருக்கின்றேன்.
இப்ப விளங்குது நான் உங்கட மதவிலை ஏன் இருக்க அருகதை இல்லை என்று. ஏதோ உப்பு மடச்சந்தியாலை போன போது எட்டிப் பார்த்தனான். பீ.... பீ.....பீ ... டும்.. டும்..

ஹேமா, said...

காரூரன் நீங்களும் நாதஸ்வரம் பழகியிருக்கிறீகளா?யார் சொன்னது உப்புமடச்சந்தி மதகில இருக்கத் தகுதியில்லையெண்டு!என்ன காரூரன் இப்பிடியெல்லாம் சொல்லிக்கொண்டு!

ஹேமா, said...

http://koodal1.blogspot.com/2006/03/156.html

பாரீஸ் யோகன் அண்ணா,"ஈழத்தில் இசை வளர்ப்பதில் நாதஸ்வர தவில் க்லைஞர்களின் பங்கு"முழுமையாக வாசித்தேன்.மிக மிக அருமையான பதிவு.எத்தனயோ எம் ஈழத்துக் கலைஞர்களைப் பதிவின் வடிவில் தந்திருக்கிறீர்கள்.பாதுகாக்கவேண்டிய ஆவணப் பதிவு அது.காலம் சென்றவர்
களைக்கூட அப்பதிவில் கண்டேன்.

கவின் said...

அருமையக சொல்லி இருக்கிங்க... நாகஸ்வரம் பத்தி இத்தனை தகவலா, நம்பவே முடியலைங்க... சுவாரிசியமாக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்...

மு.வேலன் said...

தகவலுக்கு நன்றி.

ஹேமா, said...

மிக்க நன்றி வேலன் அவர்களே.
உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதமும் ஊக்கமுமே எம்மைப் போன்ரவர்களை வளப்படுத்தும்.இன்னும் வாருங்கள்.

அறிவுமணி, ஜெர்மனி said...

உப்புமடச்சந்திக்கு இது எனது முதல் வருகை.. நாயனம் பற்றிய இப் பதிவு பாதுக்காக வேண்டிய பெட்டகம்.. மற்ற பதிவுகளும் , பாடல் தொகுப்புகளும் அருமை.. அருமை..

தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்...

ஹேமா, said...

நன்றி அறிவுமணி.முதல் வருகைக்கும் கூட.நாதஸ்வரச் சத்ததில் உப்புமடச் சந்திப்பக்கம் வந்திருக்கிறீர்கள்.இனியும் அடிக்கடி வாருங்கள்.

தமிழன்-கறுப்பி... said...

நல்ல பதிவு ஹேமா...
நிறைய தகவல்கள்...

ஹேமா, said...

கவின் வாங்கோ.வந்ததுக்கு நன்றி.உங்களுக்குத்தான் என்னால பின்னூட்டம் போடமுடியேல்ல.கவலை.

ஹேமா, said...

வாங்கோ தமிழன்.நாயனச் சத்தம் கேட்டோ வந்தனீங்கள்.நன்றி.

manimaran said...

மிகவும் பயனுள்ள கட்டுரை.தமிழரின் கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை போற்றிப்பாதுகாப்பதும் அதை இன்றைய இளைய தலைமுறை அறியும் வண்ணம் பதிவிடுவது பாராட்டத்தக்கது.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP