Wednesday, January 27, 2010

தயங்காமல் பேசுவோம்.(தொடர்)

உடல் நிலை மனநிலை மாற்றங்களுக்கு என்ன சிகிற்சை முறைகள் எடுத்துக்கொள்வது ?

தனிப்பட்ட சிகிச்சைகள் கிடையாது.விட்டமின்கள் மனநல ஆலோசனை உடற்பசிற்சிகள் மூலம் இந்த நிலையைக் கட்டுப்ப்டுத்தலாம்.

பொதுவாக என்ன மாதிரியான மாதவிலக்குப் பிரச்சனைகள் உள்ளன ?

1) குறைந்த அளவு உதிரப்போக்கு.
2) உதிரப்போக்கே இல்லாமை.
3) அதிகப்படியான உதிரப்போக்கு.
4) சுழற்சி முறையில் மாறுதல்.
5) வலியுடன் கூடிய உதிரப்போக்கு.இன்னும் பல...

குறைந்த அளவு உதிரப்போக்கு...

இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம்.மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையின் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப்படுவது.உதாரணத்திற்கு வீட்டிலோ பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும்போது உடல் எடை தடாலென்று குறையும்போது உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது(உ+ம்: அதிக உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது)எண்டார்பின் என்கிற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டைத் தடுக்கலாம்.

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும் ரத்த சோகை வேறு நோய் இருந்தாலும் (உ+ம்:சிறுநீரக வியாதி இதய வியாதி போன்றவற்றினாலும்)உதிரப்போக்குக் குறையலாம்.

சினைப்பையில் PCOD(Poly Cystic Ovarian Disease)என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம்.சிலநேரங்களில் மிகச் சிறிய வயதிலேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்றுவிடலாம்.

இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் ?

முதலில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.ஈஸ்ட்ரோஜன் ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவைக் கணக்கிட வேண்டும்.ஸ்கேன் செய்து கர்ப்பப்பை சினைப்பை அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவர் D&C செய்து கர்ப்பப்பையின் உள் சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார்.

சில குழந்தைகள் 16 அல்லது 18 வயதில்தான் பருவம் அடைகிறார்கள்.இதனால் பிள்ளைபேறு பாதிக்குமா ?சிறு வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு 50 வயதைத் தாண்டித்தான் விலக்கு நிற்குமா ?

உடல்வாகு உணவு வளர்கின்ற சூழ்நிலை குடும்பப் பின்னனி ஆகியவற்றைப் பொறுத்து பூப்பெய்து வயது மாறுபடலாம்.சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும் சிலசமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம்.தாம்தமாகப் பூப்பெய்வதால் பிள்ளைப்பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படப்போவதில்லை.பூப்பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லை.

சிலருக்கு உதிரப்போக்கு 10 நாள்வரை இருந்து தொல்லை கொடுக்கிறதே ...ஏன் ?

பெரிய மனுஷியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை.பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவதும் உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கைதான்.உடல் வளர்ச்சியின்போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம்.சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோ ஏற்படலாம்.இது இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும்.ரத்தப்போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தச் சோகை ஏற்படும்.மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.பூப்புக்கு பின் ஒரு மாதத்திற்குள் பலமுறை வந்தாலும் பலமாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்துவிடும்.

சில பெண்கள் ஆரோக்யமாக உடல் வளர்ச்சி சரியாக இருந்தாலும் பூப்பெய்தாமலே இருந்துவிடுகிறார்களே அதற்குக் காரணம் என்ன ?திருமணமானால் சரியாகிவிடும் என்று சொல்லி அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பது சரியா ?அவர்களுக்குக் குழந்தை பிறக்குமா?இதை அறிய என்ன சோதனை செய்ய வேண்டும் ?

18 வயது தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும்.பியூட்டரி சுரப்பி தைராய்டு சுரப்பி போன்றவை சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு கருமுட்டைகளை உள்ளடக்கிய சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதால் மாதவிலக்குத் தோன்றுகிறது.அது தொடங்கவே இல்லையென்றால் பரிசோதனை அவசியம்.

நாளமில்லாச் சுரப்பிகளில் பாதிப்பு இருப்பின் அவற்றின் காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும்.தாயின் வயிற்றுக்குள் கரு உருவாகும்போதே அதன் சினைப்பை தொடக்கநிலை கருமுட்டைகளை உள்ளடக்கிக்கொண்டு வளர்கிறது.இது பிறவியமைப்பில் வளர்ச்சி பெறாமல் வரிக்கீற்று சினைப்பையாக(Streak Ovary)அமைந்துவிட்டால் செயல்படாமல் போய்விடும்.இதனால் பூப்பெய்துவது இல்லை.

இப்பெண்கள் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டால் மாதவிலக்குத் தோன்றும்.தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 21 நாட்களுக்கு மாத்திரை உண்கொண்டால்தான் மாதவிலக்கு மாதம்தோறும் வரும்.இவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது.சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இல்லாமலும் போகலாம்.

ஆனாலும் இவர்கள் தாம்பத்ய உறவு கொள்ள இயலும்.கர்ப்பப்பை இல்லாமல் யோனிக் குழாயும் இல்லாமல் அந்த இடம் சிறு குழியாக மட்டுமே இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் வடிவமைப்பு ஆப்பரேஷன் செய்துகொண்டால் தாம்பத்ய உறவில் சிக்கல் இருக்காது.

காசநோய் இளம்பிராய நீரிழிவுநோய்(Juvenile Diabetes)ஆகியவற்றால் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு இருந்தாலும் மாதவிலக்கு துளையற்ற கன்னிப்படலம் யோனி குழாய் அடைப்பு இருந்தாலும் உதிரம் வெளிவர இயலாமல் அடைபடும்.இவ்வாறு பூப்பெய்தியும் சூதகம்(Cryptorchidism)மறைந்திருந்து மாதவிலக்கிற்கு தடையேற்படுத்துவதை மறைசூதகம் என்று கூறுவர்.ஆப்பரேஷன் செய்து தடையை அகற்றி வழி செய்வதால் இவர்கள் பூப்பெய்தலாம்.குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு.

மாதாமாதம் விலக்கு முறையாக வந்தாலும் உதிரப்போக்கு ஒருநாள்கூட முழுமையாக இல்லாமல் சிலநாள் சிறுதுளிகளாக மட்டுமே வந்தால் அதனால் குழந்தை பிறக்காமல் போகுமா ?

மாதவிலக்கு ஒழுங்காக வந்து பாலின உறுப்புக்களின் வளர்ச்சி சரியாக இருந்து ஹார்மோம் கோளாறுகளுன் இல்லையென்றால் அரை வாரம் அரைமணிநேரம் என்று எப்படி வந்தாலும் கவலைப் படத் தேவையில்லை.

குறைந்த அளவு உதிரப்போக்கு உள்ளவர்கள் அதனால்தான் உடல் பருமனாகிறது என்றும் குழந்தை பிறக்காது என்றும் நினைக்கிறார்கள்.இரண்டுமே தவறு.பருமனாக இர்ப்பவர்களுக்கு உடலில் உள்ள கொழுப்புச் சத்தால்தான்.(Obesity)மாதவிலக்குக் சொற்பமாக இருக்கிறது.எடையைக் குறைத்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும்.

கர்ப்பப்பை குழாய் அடைப்பில்லை.கருமுட்டை வெடித்து வெளிவருவதில் பிரச்சனை இல்லையென்றால் குறைந்த உதிரப்போக்கு குழந்தை பிறக்கத் தடையாக இருக்காது.

ஆரோக்யமாக இருந்தாலும் சிலருக்கு பூப்பெய்திய நாளிலிருந்தே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் மாதவிலக்கு வருகிறது.இவர்கள் கர்ப்பம் தரிக்க இயலுமா ?வேறு ஏதேனும் தொல்லைகள் ஏற்படுமா ?

மாதாமாதம் விலக்கு வருபவர்களுக்கு ஆண்டுக்கு 12 முறை கருத்தரிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்றால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருபவர்களுக்கு அந்த வாய்ப்பு 4 அல்லது 6 முறைதான் கிடைக்கும்.அதுதான் வித்தியாசம்.வேறு தொல்லைகள் கிடையாது.

முதலில் மாதவிலக்கு சரியாக வந்து...திருமணத்திற்குப் பின் தள்ளித் தள்ளி வர ஆரம்பித்து பின்னர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை அதுவும் மாத்திரை சாப்பிட்டால்தான் வருகிறது என்றால் அதற்குக் காரணம் என்ன ?

ஹார்மோன் குறைபாடுகளால் இவ்வாறு ஏற்படலாம்.சோதனை மூலம் அறிந்து சிகிச்சையால் சரிசெய்யலாம்.சினைப்பை மாதம் ஒரு சினை முட்டையை விடுவிப்பது தடைப்பட்டாலும் சினைப்பையில் சிறுசிறு நீர்மக் கட்டிகள் தோன்றிவிடுகின்றன.இதை 'பலநீர்மக் கோளகக் கருவணுவகம்' (PCO- Poly Cystic Ovary)என்று கூறுவர்.ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

சினைமுட்டை விடுவிப்பைத் தூண்டும்(Ovulation Induction)சிகிச்சையே போதுமானது.அதற்கென உள்ள மருந்துகளை வருடக்கணக்கில் சாப்பிடுவது தவற்.நிரிழிவு நோய்க்கான மெட்ஃபார்மியா(Metformio)மாத்திரைகளாலேயே சரிசெய்ய இயலும்.

நீரிழிவு காசநோய் ரத்தச் சோகை போன்றவை அல்லது கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து பல ஆண்டுகள் சாப்பிட்டு நிறுத்தினாலும் இவ்வாறு நேரிடலாம்.

தொடர்ந்து சரியாக மாதவிலக்கு வரும்போது எங்காவது ஊருக்குப் போகவோ பன்டிகை வருகிரது என்றோ மாத்திரை போட்டு மாதவிலக்கை தள்ளிப் போடுவது இன்று பலருக்குப் பழக்கமாகிவிட்டது.இது சரியா ?இதனால் உடம்புக்குக் கெடுதலா ?

Primol-l போன்ற மாத்திரைகளால் மாதவிலக்கை விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்.அத்யாவசி காரணத்துக்காக எப்போதாவது ஒருமுறை அப்படிச் செய்யலாம்.அடிக்கடி இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவது நல்லதல்ல.ஹார்மோன் சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை என்பது உண்மையா ?

உண்மைதான்.ரத்தச் சோகையிலிருந்தும் அது மீட்கிறது.இம்மாத்திரைகள் அதிக உதிரப் போக்கைக் குறைக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது.

மாதவிலக்குச் சரியாக வந்தபோதிலும் இடைப்பட்ட ஒரு நாளில் வலியுடன் கூடிய சிறுதுளி ரத்தப்போக்கு ஏற்பட்டு மறைந்துவிடுகிறது.பின்னர் எப்போதும்போல வரவேண்டிய நாளில் வந்துவிடுகிறது இது ஏன்?உடம்புக்குக் கெடுதலா?

சில பெண்களுக்கு மாதவிலக்கு தோன்றிய 14 அல்லது 16 வது நாளில் இவ்வாறு ஏற்படும்.இது சினைப்பையில் இருந்து சினைமுட்டை விடும் நாளில் ஏற்படுகிறது.இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை.உடம்புக்குக் கெடுதல் கிடையாது.

30 வதிற்கு மேல் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் ஆப்பரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவதுதான் சரியான வழியா ?

சாதாரண கர்ப்பப்பை கட்டிகளாக இருந்து தொந்தரவு இருந்தால் ஆப்பரேஷன் செய்வது நல்லது.கட்டிகள் இல்லையென்றால் D&C செய்து பார்க்க வேண்டும்.இந்த வயதில்தான் புற்றுநோய் தோன்றும்.பரிசோதனை அவசியம்.எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய் (Cervical cancer)கர்ப்பப்பை கழுத்து உள்வரி ஜவ்வு புற்றுநோய் (Endometrial)ஆகியவை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.எனவே இந்த வயதில் அதிக உதிரப்போக்கு இருந்தால் அனைத்துப் பரிசோதனைகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.வருமுன் காப்பது நல்லது.

வெள்ளை படுதலும் அதனுடன் ரத்தப்போக்கும் ஏற்படக் காரணம் என்ன ?இது நோயின் வெளிப்பாடா ?என்ன சிகிச்சை பெற வேண்டும் ?

பருவ மாற்ற காலத்தில் மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் சினைமுட்டை விடுபடும் போதும்.கார்ப்பக்காலத்திலும் ஹார்மோன்களின் சுரப்பான வெள்ளை படுதல் இருக்கலாம்.இது தவறில்லை.ஆனால் வெள்ளைபடுதல் அதிகரித்தோ நாற்றமுடனோ உதிரம் கலந்தோ இருந்தால் ஆபத்தான விஷயம்.உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெறவேண்டும்.

கர்ப்பப்பை கட்டியினால் உதிரப்போக்கு அதிகமாகுமா ?கர்ப்பப்பை எடுக்க நேரிடுமா ?அதற்கு மாற்றாக வேறு சிகிச்சை உள்ளதா ?

பொதுவாக 50 முதல் 60 சதவிகிதத்தினருக்கு மிகச் சிறிய அளவிலிருந்து (0.5-1cm)பெரிய அளவுவரை பல்வேறு கட்டிகளாக தோன்றுவது நார்க்கழலை(Fibroid)எனப்படும்.இதனால் அதீத உதிரப்போக்கு (Menorrhagia)சூதகவலி (Dysmenorrhoea)ஆகிய தொல்லைகள் இருந்தால் முதலில் D&C செய்து உள்வரி ஜவ்வின் தன்மையை கண்டறிய வேண்டும்.பின்பு மாத்திரைகளால் உதிரபோக்கையும் வலியையும் குறைக்கலாம்.அதையும் மீறி போகும் உதிரப்போக்கு அவரவர் வயதிற்கேற்றவாறு சிகிச்சி அளிக்க வேண்டி வரும்.

1.Myomectomy - கட்டி அகற்றும் அறுவை (இதுகுழந்தை வேண்டுபவர்களுக்குப் பொருந்தும்)

2.Hysterctomy கர்ப்பப்பை அகற்றுபவை (40 வயது தாண்டியவருக்கு)

சமீபகாலச் சிகிச்சைமுறைகளாக...

1.Hysteroscopic Myomectomy

2.Uterine Artery Embolisation ஆகியவை சிலருக்குப் பொருந்தும்.

மாதவிலக்கு முடிவடையும் காலத்தில் (மெனோபாஸ்) உதிரப்போக்கு அதிகமாக இருப்பது சகஜமா ?

இல்லை.அது தவறான கருத்து.மாதவிலக்கு முற்றுப்பருவத்தில் உதிரப்போக்கு அதிகம் இருந்தாலோ அதிக நாட்கள் நீடித்தாலோ குறுகிய காலத்துக்கு ஒருமுறை வந்தாலோ கர்ப்பப்பைக் கட்டிகள் கர்ப்பப்பையில் புற்றுநோய் ஆகியவையாக இருக்கக்கூடும்.45 வய்துக்குமேல் 52 வயதிற்குள்ளாகப் பெரும்பாலும் மாதவிலக்கு நின்றுவிடுகிறது.பலருக்கு அளவில் குறைந்தோ சில மாதங்கள் தள்ளி வந்தோ நிற்கிறது.இதற்கெல்லாம் மாறாக எந்தவித உதிரப்போக்கு பிரச்சனையாக இருந்தாலும் சோதனை செய்துகொள்வது அவசியம்.

இதை வாசித்தனால் பயன் உள்ளதா...சொல்லுங்களேன்.

நிறையப் பேசிட்டேனோ ! இன்னும் பேசலாம் கொஞ்சம் கூச்சம்தான் !

ஹேமா(சுவிஸ்)

14 comments:

Kala said...

ஹேமா முதல் படித்த விடயங்கள் தான்!

தெரிந்தவைகள் தான்!!

என்றாலும் இதைப் படித்தது ,மீண்டும்
ஒரு மீட்பு.

இதைத் தெரியாத,புரியாத ஆண்கள்
சிலபேர் இன்னும் இருக்கக் கூடும்...
நிட்சயமாக இதைப் படித்தும் இருப்பார்கள்

பின்னோட்டம் போடத்தான் தயங்குவார்கள்
என நினைக்கின்றேன்.

இவ்வளவு நேரம் ஒதுக்கி {பதிவுசெய்ய}
பதிவிட்டமைக்கு எல்லோர் சார்பிலும்
நன்றி!நன்றி!! நன்றி!!!

கலா said...

ஹேமா கருணாகரசின் பின்னோட்டத்தில்....

சொல்லியிருக்கிறார் சமைத்துக் கொடுப்பதாக

ஆம் அது நிஐந்தான்

சிவரஞ்சனிக்கு ஏற்ற அருமையான
கணவர்.நானே நேரில் பார்த்திருக்கின்றேன்
அத்தனை கவனிப்பு.

சிங்கையிலிருந்து சிங்கம் ரெடி!!
நீங்க ரெடியா!!??

எங்க பெருமாள் சத்தத்தையே
காணோம்!
நானும் என்று துள்ளி வராமல்....
தள்ளி நின்றால் எப்படி ஜயா!!

சத்ரியா.....பாவம் விட்டுவிடலாம்
ஹேமா நாம கட்டாயப்படுத்த...
அவர் ஊருக்குப் போக....
வேலை எஐமானர் திட்ட....
அதனால்,,....இப் போட்டியில்
விடுவதா? எடுப்பதா?

S.A. நவாஸுதீன் said...

பாராட்டுக்கள் ஹேமா. எத்தனையோ பேர் கூச்சம் காரணமாக கேட்க வெட்கப்படும் அவர்களின் ஐயங்களுக்கு அவர்கள் கேட்க்காமாலே விடை கிடைத்திருப்பது அவர்களுக்கும் சந்தோசம்தான். மீண்டும் பாராட்டுகள்.

D.R.Ashok said...

சமுகம் வாழ்வு - தமிழ்மணம் ஆவார்ட்டுக்கு இப்போவே தயார் ஆகிட்டிங்க போல...

ஸ்ரீராம். said...

Primolute N அதிகம் சாப்பிடுவது ஆபத்து என்று சொல்வார்கள். எங்கள் வீட்டில் அந்த நாட்கள் நெருங்கும்போது காலை பல் தேய்த்தவுடன் பொட்டுக்கடலை ஒரு பிடி சாப்பிடுவார்கள். அதனால் தள்ளிப் போகும் என்று சொல்வார்களாம்.

'நொடுக்கு' சொல்ல வேண்டும் என்று வேறு சொல்கிறீர்கள்!...நான் ஆறாவது ஏழாவது படிக்கும் காலத்திலேயே அம்மாவுக்கு உதவி செய்தவனாக்கும்.

துபாய் ராஜா said...

பேச வேண்டிய விஷயம்தான் ஹேமா.

தொடருங்கள். தொடர்கிறோம்.

Anonymous said...

உபயோகமான பதிவு ஹேமா. மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பதை முடிந்த அளவு தவிர்ப்பதே நல்லது.

நட்புடன் ஜமால் said...

தயங்காமல் பேசுவோம்

இதில் தயங்கவேண்டும் என்ற தயக்கம் எதற்கு, கூச்சம் இருக்கலாம் தயக்கம் வேண்டாம்.

-----------------------

உண்மையில் மிகவும் தேவையான விடயங்கள் தான் ஹேமா.

‘அந்த’ நாட்களில் அதிகப்படியான தோழமையுடன் நடத்துதல் நலம்.

அத்திரி said...

நல்ல பதிவு தொடருங்கள் ஹேமா

sudhakar said...

ஆகா ஹேமு எப்ப ஹேமா எம் பி பி எஸ் ஆனிங்க? கலக்குகின்றீர்கள். நல்ல தகவல்களுடன் கருத்தான பதிவு.
மிகவும் உதிரப் போக்குடைய பெண்கள் பொட்டுக்கடலையும் சக்கரையும் கலர்ந்து பொடி செய்து சாப்பிட்டால் உதிரப் போக்கு குறையும்.
ஹலோ என்னது நாங்க ஹெல்ப் பண்ண மாட்டமா. நாங்க எல்லாம் எங்க வீட்டுப் பெண்கள் எல்லாருக்கும் காய் நறுக்குவதில் இருந்து சுத்தம் செய்வது வரைக்கும் உதவியா இருப்போம். நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நல்லதொரு பகிவு ஹேமா... பாராட்டுகள்


அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஜெயா said...

ஹேமா இது கண்டிப்பாக தயங்காமல் பேசலாம். இதில் என்ன தப்பு? எங்கள் ஊரில் மாதவிலக்கு என்றால் கிணற்றில் தண்ணீர் அள்ள கூடாது என்பார்கள், அதுக்கு நாங்க ஓகே சொல்லுவோம். ஏன் என்றால் வேலை செய்ய அவ்ளோ கள்ளம். ஆனால் அங்க போகாத இங்க போகாத எல்லாம் பிடிக்காது , அது மட்டும் இல்ல எங்கட அம்மம்மா சொல்லுவா தாங்கள் கரித்துண்டால கோடு போட்டு இருந்தாங்க எண்டு , அவ என்ன சொல்ல வந்தா எண்டு புரியுதா? நடக்குமா? நிறய திட்டு வாங்கினோம். ஆனால் எல்லாம் ஒரு மூட நம்பிக்கை என்று அப்போதே தெரியும், அத என்ன தான் கத்தி சொன்னாலும் வீட்டில யார் கேட்டாங்க... இப்போ இங்கே பாடசாலைகளிலேயே எல்லாம் கற்றூக்கொடுப்பதால், நாங்கள் எந்த சின்னப்பிள்ளையிடம் இது பற்றி அறிவுரை சொன்னாலும் எல்லாம் எனக்குத் தெரியும் நீங்க சும்மா இருங்க என்று சொல்லி விட்டுப் போய்கிட்டே இருப்பாங்க..... மிகவும் பயன் உள்ள இந்த பதிவை பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் தயங்காமல் படிக்கலாம் .. வாழ்த்துக்கள் ஹேமா

நசரேயன் said...

பாராட்டுகள் ஹேமா

//இன்னும் பேசலாம் கொஞ்சம் கூச்சம்தான் !//

எந்த கடையிலே கிடைத்து

Jackson said...

தயங்காமல் பேசுவோம் இதில் தயங்கவேண்டும் என்ற தயக்கம் எதற்கு, கூச்சம் இருக்கலாம் தயக்கம் வேண்டாம். ----------------------- உண்மையில் மிகவும் தேவையான விடயங்கள் தான் ஹேமா. ‘அந்த’ நாட்களில் அதிகப்படியான தோழமையுடன் நடத்துதல் நலம்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP