Wednesday, July 28, 2010

நாச்சாரம் வீடு.

மூண்டு நாளா ஒரே அடை மழை.இது நாலாம் நாள்.ஈரலித்த காற்றோடு பொழுது விடிகிறது.ஆனால் வானம் வெளித்தாலும் மழையின் அறிகுறியும் கலந்தே.சூரிய வெளிச்சம் வந்தும் சூடாயில்லை பூமி.வளவு முழுக்க மரங்கள் முறிந்த கொப்பும் கிளையும் பழுத்தலும் பச்சையுமாய் ஒரே குப்பை.வேலிகள்கூட பாறி விழுந்துகிடக்கு.வீடு கட்டும் வேலை வேற நடந்துகொண்டிருக்கு.அதனால குழியும் குண்டுமாய்க் கிடக்கு.ஒரு பக்கம் மணலும்,சல்லிக் கல்லும் குவிச்சபடி.இன்னும் சொட்டுச் சொட்டாய் சொட்டும் நீர்த்துளிகள் சொட்டிக் கோடு கிழித்து ஓடி அந்தப் பள்ளங்களை நிரவிக்கொண்டிருந்தது.

தெருவில் 2-3 நாளைக்குப் பிறகு மனிதத் தலைகள் தெரிகின்றன்.திரும்பவும் மழை வரலாம் என்பதால் வேலுப்பிள்ளை அண்ணை கடை வாசலில சனம்.பறவைகளும் உடல் சிலுப்பிச் சந்தோஷச் சத்தம் போட்டபடி குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக்கொண்டிருந்தது.

பிரிந்து கிடந்த மேகங்கள் ஒன்று சேர்ந்துகொண்டிருந்தாலும் வானின் ஒரு மூலையின் அடுத்த அடை மழைக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.அவகாசங்களை அத்தனை உயிரினங்களும் பயன்படுத்திக்கொண்டிருந்தன.அப்படி ஒரு அடை மழை மழை தந்த ஆர்ப்பாட்டத்தை அந்தரத்துச் சூரியன் ரசித்தபடியே சின்னதாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.

ராகுல் வாசலில் ஈரலிப்பாய் இருக்க,நிலம் படாமல் குந்தியபடி வளவை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

"ச்ச....இப்பிடியொரு மழை.வந்தா மனுசரை இப்பிடி நாறடிக்கும்.இல்லாட்டிக் காயவைக்கும்.உலகத்தில் ஒண்டும் ஒழுங்கில்ல.இந்த மழைக்குள்ள எப்பிடி மேசனும் மரவேலை செய்றவையளும் வருவினம்.போக வரக்கூட முடியாம மரங்கள் வேற முறிஞ்சுகிடக்கு.நான்தான் கொஞ்சம் ஒதுக்கிவிடவேணும்."

இது அம்மான்ர நாச்சாரம் வீடு.அம்மா எனக்குத்தான் தந்தவ.அண்ணா அம்மான்ர சொல்லுக் கேக்காம தன்ர எண்ணத்துக்குக் கல்யாணம் செய்துகொண்டு போய்ட்டான்.அப்பா நாங்கள் சின்னனாய் இருக்கேக்கையே மாரடைப்பு வந்து எங்களை விட்டுப் போய்ட்டார்.அம்மாதான் கஸ்டப்பட்டு எங்களை வளர்த்தவ.

அம்மான்ர சீதன வீடு இது.தாத்தாதானாம் சின்னச் சின்னதா சேமிச்சு அம்மம்மான்ர ஆசைப்படி நிறையக் கஸ்டத்தோட கட்டின வீடாம்.அம்மா அடிக்கடி "இது வீடில்லை ராசா.தாத்தா அம்மம்மான்ர கோயில்" எண்டு சொல்லுவா.அவையளும் இந்த வீட்ல இருந்துதான் செத்துப்போனவை.

"அம்மாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல வீட்டை இடிச்சு இப்பத்தைய நாகரீகத்தோட கட்டுறது."

"ஏனப்பு இப்பிடியே வச்சுக்கொண்டு முன்னுக்கு நீ விரும்புற மாதிரிக் கட்டன்.நானும் இதுக்குள்ள கிடந்துதான் சாகவேணும்."

இஞ்சாலப் பக்கம் ஜானுவோ "என்னப்பா மழை வந்தா நாலு அறையும் நனைஞ்சு போகுது.பிள்ளைகளை எந்த நேரமும் கவனிச்சுக்கொண்டு இருக்கேலாது.நான் குசினிக்குள்ள இருக்க அவங்கள் மழைக்குள்ள கூத்தடிக்கிறாங்கள்."

முதல் அம்மா சொன்னபடி முன் பக்கத்திலிருந்து இணைச்சு அழகாக்க நினைச்ச ராகுல்,பிறகு ஏனோ மனம் மாறி இடித்துக் கட்டவே முடிவெடுத்துவிட்டான்.அம்மாவைச் சமாதானப்படுத்தியும் விட்டான்.பாவம் சீதாம்மா.வேறு வழி என்ன அவவுக்கு ?

ஜானு அடுப்பங்கரையில் அலுவலாய் இருந்தாள்.பிள்ளைகள் கணணியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு மாத பாடசாலை விடுமுறை.அதனால் நானும் இரண்டு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு துபாயிலிருந்து வந்திருக்கிறேன்.மழை படுத்துற பாட்டைப் பார்த்தால் வீட்டு வேலையை முடிச்சிட்டுப் போகேலாது போல இருக்கு.

ஜானுவுக்கு காஸ் அடுப்பு வாங்கிக் குடுக்காட்டி என்னத் திண்டு கை கழுவியிருப்பாள். கறண்டும் மழையால நிண்டு நிண்டு வருது.ரெண்டு பிள்ளைகள்,எப்பவும் முனகினபடியே படுத்திருக்கிற அம்மா இதுக்குள்ள பெரிய வளவு வீடு எல்லாத்தையும் எப்பிடித்தான் அவள் கவனிப்பாள்.தொலைபேசியில சொல்லேக்கை நானும் திட்டுவன்.

"பிள்ளைகள் வளர்ந்திட்டினம்.அவையளின்ர வேலைகளை அவையளே செய்யினம்.அம்மாவும் தன் வேலைகளைப் பார்த்துக்கொள்றா.நீ என்ன வெட்டி விழுத்துறாய்" எண்டு.இங்கயிருந்து பார்க்கத் தெரியுது.கொஞ்சம் கஸ்டம்தான்.பாவம்தான் ஜானு.

"அம்மா பசிக்குது" என்று மகனின் குரல் கேக்குது.

"அப்பா எங்கயடா"

"அவர் கேற்றடியில குப்பை அள்ளிக்கொண்டு நிக்கிறார்."

அம்மாவின் குரலும் "பிள்ளை...தம்பி" எண்டு கூப்பிட்டுக் கேக்குது.

ஒற்றை அறையை இப்போதைக்கு வச்சுக்கொண்டு நான் ஜானு பிள்ளைகள் அதுக்குள்ளதான் சமாளிக்கிறம்.அம்மாவை மாட்டுக் கொட்டிலுக்குள்ளதான் கட்டில் போட்டுக் கொடுத்திருக்கு.வீட்டு வேலை முடியிற வரைக்கும்தானே.அம்மா அழ அழ பசுமாட்டையும் ஆட்டுக்குட்டியையும் வித்திட்டன்.நல்ல வேளை இந்த மழைக்குள்ள அதுகளும் நிண்டிருந்தா ஜானுபாடு எவ்வளவு கஸ்டம்.சீதாம்மா கனவில் அந்தப் பசுவும்,அவவின் ஐயாவும் அடிக்கடி வந்து போயினமாம்.அம்மா என்னைக் காணேக்கையெல்லாம் புலம்புறா.

"உங்களுக்கும் ஏலாமப் போச்சு.எப்பிடியம்மா இனி மாடும் ஆடும்..."சமாதானம் சொல்லி முடித்தான் ராகுல்.

பக்கத்து வீட்டு அம்மாச்சி அம்மாவை விசாரிக்கிறா.
"எப்பிடித் தம்பி அம்மா இருக்கிறா.இந்தச் சனியன் பிடிச்ச மழையால வந்து பாக்கவும் முடியேல்ல.பக்குவமாப் பாத்துக்கொள் தம்பி.பாவமது.கொப்பரும் செத்துப்போக உங்களோடயே அதின்ர காலமும் போய்ட்டுது.இனியாலும் அது சந்தோஷமாச் சாகவேணும்.என்னட்ட எல்லாம் சொல்லும்.சொல்லு வாறனாம் எண்டு" என்றபடி ஏதோ சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தா.

"அப்பா.....அம்மா சாப்பிட வரட்டாம்"

"சரி சரி வாறன்.போடச்சொல்லு இப்ப வந்திடுறன்."என்றபடி கை கால் அலம்பிக்கொண்டு சாப்பிட உடகார்ந்தான் ராகுல்.

"என்னப்பா நான் ஒரு விஷயம் சொன்னனான் யோசிச்சீங்களோ" எண்டபடி ஜானு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்.

"ஓமப்பா யோச்சிருக்கிறன்.திடீரென்று ...பாப்பம் செய்யலாம்.இப்ப சாப்பாடு தாரும்."என்று வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான்.

"உங்க...உவரைப் பாருங்கோ.நாங்களே இருக்க இடமில்லாம சமைக்கிறது எங்க சாப்பிடுறது எங்க படுக்கிறது எண்டு தெரியாமல் திண்டாடுறம்.இவரும் வீட்டுக்குள்ள படுக்க வேணுமாம்.அடி...வெளில போ பிறகு சாப்பாடு வைக்கிறன்.அம்மான்ர கட்டிலுக்குக் கீழ ஒரு சாக்குப் போட்டிருக்கிறன்.அது குளிருதாமெல்லோ மாப்பிள்ளைக்கு"

என்று திட்டிக்கொண்டே நாயை வெளியில் துரத்த அது பின் பக்கமாய் ஓடின ஓட்டத்திலே பலமாகக் குரைக்கத்தொடங்கியது.

"ஏனப்பா அடிச்சனியே.பாவம் ஏன் இப்பிடிக் குரைக்குது" என்றபடி பின் பக்கம் போன ராகுல்

"அம்மா....அம்மா ஏனம்மா இங்க வந்தனீங்கள்.எங்களைக் கூப்பிட வேணாமே" சேற்றில் விழுந்துவிட்ட சீதாம்மா எழும்ப முயற்சித்துகொண்டிருந்தா.

"இல்லையப்பு கூப்பிட்டனான்.உங்களுக்குக் கேக்கேல்லையோ என்னவோ.சரி நானே வருவமெண்டுதான் வந்தன்.அந்தச் சருகுக்குள்ள தடி தண்டுகள் கிடந்து தடக்குப் பட்டு விழுந்திட்டன்.எழும்புவமெண்டா வழுக்கி விழுறன்."

"எங்கையெண்டாலும் அடிபட்டுப்போச்சோ"

"இல்லை இல்லை எனக்கு ஒண்டும் ஆகேல்ல.நோகேல்ல.என்னை ஒருக்கா பிடிச்சுக்கொண்டுபோய் விடு.என்ர உடுப்புகளை மட்டும் எடுத்துத் தந்துபோட்டுப் போ."

"சரி உடுப்புகளை மாத்துங்கோ.சாப்பாடு எடுத்துக்கொண்டு வாறன்" என்றபடி பிடித்துக்கொண்டு வந்து விட்டு கொடியில் கிடந்த உடுப்புகளை எடுத்துக் கொடுத்துப் போனான் ராகுல்.

பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.மழையும் பெய்துகொண்டிருந்தது.இரவாக மின்சாரம் தடைப்பட....

"எங்க நெருப்புப் பெட்டி"

"அண்ணா இங்க இரடா பயமாக்கிடக்கு."

"பிள்ளை எனக்கும் மெழுகுதிரி கொண்டு வா பிள்ளை.அப்பிடியே நுளம்புத் திரி இருந்தாலும் கொண்டு வா.நுளம்புக் கடி தாங்கேலாமக் கிடக்கு" எண்டு சீதாம்மாவின் குரலும்.

இருட்டுக்குள் கைத்தொலைபேசியும் அலற ராகுல் பேசத்தொடங்க மேசன் தான் சொன்னார்."எப்பிடியும் 10 நாட்களாவது வேலை செய்யமுடியாதாம்.ஓடர் பண்ணின சீமெந்து வரேல்லையாம்."

ராகுலுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது மழைக்கு மேல.
குளிரும் காற்றும் நுளம்பும் பூச்சிகளுமாய் இருள் விடியத் தொடங்கியது.

ராகுலுக்கு ஜானு சொன்ன யோசனை நல்லதாகவே பட்டது.

"இஞ்சப்பா மழை கொஞ்சம் விட்டிருக்கு.இந்த இடைக்குள்ள பிள்ளைகள் ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தலை மயிரையும் வெட்டிக்கொண்டு,வரேக்க மீனும் மரக்கறிகளும் வாங்கிக் கொண்டு வாறியளே.நாளைக்கு மழை கொஞ்சம் குறையேக்க நிறைய வேலைகள் கிடக்கு.மேசன் வராட்டிலும் நாங்க செய்ய வேண்டியதுகளைச் செய்து வைக்கலாம்."

"சரி நான் கூட்டிக்கொண்டு போய்ட்டு வாறன்.அம்மாவையும் கூட்டிப்போகவேணும்.ராஜன் ஆட்டோ கூப்பிட்டால் உடன வருமோ?"

"ஓம் ஓம் வருவார்.நான் சொல்லி வைக்கிறன்...ஒரு மூன்று மணி போல வரச்சொல்லி."

"சரி...சரி கறிவேப்பிலை கொப்பும் முறிஞ்சுகிடக்கு.அம்மாவுக்குப் பிடிச்ச நல்ல துவையலும்,தக்காளிப்பழச் சொதியும்,சின்னமீனும் பொரிச்சுவிடும் போதும் இண்டைக்கு. நான் வாறன்" என்றபடி பிள்ளைகளோடு வெளியே போனான் ராகுல்.

சீதாம்மாவிடமும் போய்ச் சொன்னான்
"அம்மா வெளிக்கிட்டு நில்லுங்கோ.நான் வந்தவுடன சாப்பிட்டிட்டு டொக்டரிட்ட போய்ட்டு வருவம்."

"ஏனப்பு எனக்கென்ன.நல்லாத்தானே இருக்கிறன்.வேலை வெட்டி செய்யேலாது. விழுந்தெழும்புறன் எண்டா அது எனக்கு வயசு போய்ட்டுது.
இதுக்கு டொக்டரிட்ட போய்க்காட்டி ஒண்டும் செய்யேலாது."

"இல்லையம்மா நேற்றும் விழுந்து போனியள்.சாப்பிட்டிட்டு போய்ட்டு வருவம்." ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்தாள் சீதாம்மா.

ராகுல் வர,எல்லோருமாகச் சாப்பிட்டும் முடிய ஆட்டோவும் வந்தது.ராகுலும் சீதாம்மாவும் புறப்பட சீதாம்மாவின் நாய் சீதாம்மாவை தடவிச் சுற்றிப் போனது.

போகும் வழியில் "ஏனப்பு...எங்கட டொக்டரிட்ட போகாம எங்க போற ?"

"இது வேற டொக்டரம்மா.ஜானு இங்க கதைச்சு வச்சிருக்கிறாள்.காசும் கட்டியிருக்கு.எனக்கும் இங்க நல்லதெண்டு படுது அதுதான்" என்றான்.

கதைத்துக்கொண்டிருக்க ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவை ஆட்டோ ராஜனிடம் "இதிலதான் அண்ணை நிப்பாட்டுங்கோ.நிண்டுகொள்ளுங்கோ நான் வந்திடுவன்."

"இதிலையோ அண்ணை !"எண்டு கேள்விக்குறியோடு பார்த்த ராஜன் நிப்பாட்டினார்.

இறங்கி நடந்தனர் சீதாம்மாவும் ராகுலும்.இவர்களைக் கண்டதுமே முதலே அறிவித்தல் கொடுத்ததுபோல ஒரு தாதி வந்து மிகவும் அன்போடு அணைத்துக் கூட்டிப்போனார்.

தாதியோடு வரவேற்பறையில் இருந்திவிட்டு டாக்டருடன் கதைத்து வருவதாகப் போனான் ராகுல்.சீதாம்மா சுற்றும்முற்றுமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.அழகாகப் பூமரங்களும் புற்தரைகளுமாய் அழகாக இருந்தது சுற்றாடல்.சில வயதானவர்கள் அங்குள்ள கதிரைகளில் காற்றாட இருந்தார்கள்.

ராகுலும் டாக்டரும் வந்தார்கள்."அம்மா இப்போதைக்கு நீங்கள் இங்கதானாம் இருக்க வேணும்.அங்க வீட்லயும் குளிரும் நுளம்புமாய் அவஸ்தைதானே.வீடும் கட்டி முடிய நீங்களும் வரலாம்."சீதாம்மாவின் வாயில் எதுவும் வரவில்லை.மனம் மட்டும் ஏதோ உளறிக் கொண்டிருந்தது.சொன்னாலும் இப்போ கேட்கும் மனநிலையிலும் ராகுல் இல்லை.

சீதாம்மாவைக் கூட்டிப்போனார்கள் நான்கு பேர் இருக்கும் ஒரு அறையொன்றைக் காட்டி."இனி இதுதான் அம்மா உங்கட இருப்பிடம்.உங்கட வயசை ஒத்தவையளும் இருக்கினம்.பொழுதும் போகும்.நாங்களும் அடிக்கடி வந்து பாத்திட்டுப் போவம்தானே.என்ன ஒரு மாசம்தானே."என்றபடி ராகுல் நாளை வருவதாகச் சொல்லி டாக்டருடன் கதைத்தபடியே போய்க்கொண்டிருந்தான்.

மழை திரும்பவும் அடித்துக் கொட்டத் தொடங்கியது.சீதாம்மாவின் மனமும் இடியும் மின்னலும் புயலுமாய் நனைந்துகொண்டிருந்தது.

அடுத்த நாள் உடுப்புகளோடும் ஜானு பிள்ளைகளோடும் வந்து பார்த்துப் போனார்கள்.இரண்டு மூன்று நாளுக்கொருமுறை வந்து போனார்கள்.ஒரு வாரத்தின் பின் தான் சீதாம்மாவுக்குச் சரியாக உணர முடிந்தது அது ஒரு வயோதிபர் மடம் என்று.

இரண்டு நாள்... மூன்று நாள் ...என்று ஒரு வாரமென்று...இப்போ குறைந்தே விட்டது.

இரு வாரத்தின் பின் எல்லோரும் வந்தார்கள்.சீதாம்மா
அழத்தொடங்கிவிட்டா. தான் வரப்போகிறேன் வீட்டுக்கு என்று.பிள்ளைகள் கூட்டிப்போகலாம் என்றார்கள்.இல்லை வீடு சரியாகத் திருத்தப்படட்டும் என்று தவிர்த்துப் போனார்கள்.

பின்னொருநாள் வீடு மழை காரணமாகத் திருத்தப்படவில்லையென்றும் சீதாம்மாவை இங்கேயே இருக்கும்படியும் அடுத்தமுறை தான் வந்து கூட்டிப்போவதாகவும் ஒரு தொலைபேசியில் செய்தி சொல்லிவிட்டு அணைத்துவிட்டான் அன்னை உறவை ராகுல்.

சீதாம்மா இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறா அந்த வயோதிபர் மட வாசலில் குந்தியபடி.யாரும் வருடம் கழிந்தும் வந்தபாடில்லை.ஆனால் சாப்பாடும்,படுக்கைக்கும் பணம் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லி அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

எப்போவாவது ஜானு குழந்தைகள் வந்து பார்த்துப் போனார்கள்.ராகுலும்
3 - 4 மாதத்திற்கொருமுறை தொலைபேசியில் கடமைபோலப் பேசுவான் ஏதாவது.

ஆனால் நாச்சாரம் வீடு பற்றி மட்டும் ஒன்றுமே சொல்லமாட்டான்.
சீதாம்மாவின் மனமோ நாச்சாரம் வீட்டுக்குள்ளேயே அலைந்தது.வீடு முழுதுமாய் இடிக்கப்பட்டதும்,கராஜ் கட்டுவதற்காகத் தாத்தா வைத்த தென்னை மரம்கூட உயிர் விட்டதும் சீதாம்மாவுக்குத் தெரியாமலே போனது.

அதே அடை மழை இன்றும் இன்னும் பெய்துகொண்டிருக்க்கிறது.
சீதாம்மாவின் மனதிலும் கண்களிலும்.

ஹேமா(சுவிஸ்)

33 comments:

'பரிவை' சே.குமார் said...

//அதே அடை மழை இன்றும் இன்னும் பெய்துகொண்டிருக்க்கிறது.
சீதாம்மாவின் மனதிலும் கண்களிலும்.//

kathai neelamaga irunthalum
Manathai thotta kathai...

Unknown said...

கதையில் இருக்கும் உயிரோட்டம் சீதாம்மாவின் மனசு போலவே...

Paleo God said...

ம்ம்.. இன்றும் நடக்கிறதே!

மறைபொருளாக வேறொன்றும் விளங்குகிறது :(

VELU.G said...

வயோதிகத்தின் இயலாமையை பயன்படுத்திக் கொள்வது எவ்வளவு கேவலமான விஷயம். இது இன்றும் கூட நடப்பது தான் அவலம்.

கதை மிகுந்த பாரத்தை ஏற்படுத்தியது

அருமை ஹேமா

சத்ரியன் said...

ஹேமா,

“ நாச்சாரம் வீடு ” மனசுக்குள் அச்சாரம் போட்டு அமர்ந்துக்கொண்டது.

ஜோதிஜி said...

படிக்காதவனை படிக்க வைத்து விட்டீர்கள். சிறுகதையில் உள்ள வட்டார மொழி வழக்கு மனதிற்குள் பேசுவது போல் கற்பனை செய்து பார்த்தேன். தளம் படிப்பதற்கு எத்தனை எதார்த்தமாய் இருக்கிறது.

உரையாடலை எப்போது தனித்தனியாக கொடுங்கள்.

சில இடங்களில் சரியாக வந்துள்ளது.

சிநேகிதன் அக்பர் said...

அழுத்தமாக எழுதுகிறீர்கள் ஹேமா.

ஆ.ஞானசேகரன் said...

அருமை உயிரோட்டம்...... வாழ்த்துகள் ஹேமா....

அம்பிகா said...

\\கதையில் இருக்கும் உயிரோட்டம் சீதாம்மாவின் மனசு போலவே...\\
அருமை.

தமிழ் உதயம் said...

மனது கனத்தது.

நான் விரும்பும் ஈழத் தமிழை வாசித்ததில் மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

//இரண்டு நாள்... மூன்று நாள் ...என்று ஒரு வாரமென்று...இப்போ குறைந்தே விட்டது.//

படித்து மனசு கனத்து விட்டது. கதையா நிஜமான்னு சொல்லமுடியாத வலி மனதில்

Anonymous said...

கதை நடைபெறுமிடம் சரியாக குறிப்பிடாவிட்டாலும் உரைநடையைப்பார்க்கும்போது யாழ்ப்பாணமென்று புரிகிரது.நம்மூரிலும் இப்படியான பெரியவர்களை வயோதிபரில்லத்தில் விடும் கலாச்சாரம் வந்துவிட்டதோ என என்ணும்போது மனது கனக்கிறது.

ராஜவம்சம் said...

எங்கட மனசில பாரத்தஏத்திட்டு போறிக
இதுவே ஒங்கட வேலையா போச்சி.

கதயும் கதக்கின்ற தமுழும் நன்ராதாம் இருக்கு.

பா.ராஜாராம் said...

அருமையாய் வந்திருக்குடா ஹேமா!

ஒரிஜனல் flow பக்கி! :-)

great, go ahead..

சி.பி.செந்தில்குமார் said...

இலங்கைத்தமிழில் உங்கள் நடை வாசிக்க புது அனுபவம்.

Unknown said...

கதை மிகுந்த பாரத்தை ஏற்படுத்தியது

ஸ்ரீராம். said...

முதல் இரண்டு, மூன்று பாராவில் வர்ணனைகள் அருமை.

அணைத்துவிட்டான் அன்னை உறவை ராகுல்."//
ஒரு வரியில் முழுக் கதை. மனதைத் தோட்ட வரிகள். கடைசி வரியும் மனதுள் தங்கி விட்டது.

ராகுலின் மன நிலையை சாதாரண வரிகளிலேயே சொல்லி புரிய வைத்து விட்டீர்கள். கதையின் அழுத்தம் மனதுள் பாரமாய்.

சாந்தி மாரியப்பன் said...

அழுத்தமான அதேசமயம் ஆழமான கதை. நல்ல நடை..

அ.முத்து பிரகாஷ் said...

இலங்கையிலும் கூடவா இந்தக் கொடுமை ...?

அ.முத்து பிரகாஷ் said...

உங்கள் அழகு நடையில் மண் வாசம் வீசுகின்றது ...

Anonymous said...

நல்லா இருக்கு ஹேமா

லெமூரியன்... said...

வணக்கம் ஹேமா..!
படிச்சி முடிக்கும் போது மனசு பாரமாச்சு...!
நமக்கும் இந்த நிலைமைதான் வரும்னு ஒரு நிமிஷம் நினைத்து பார்த்த போதும்...
அப்படி நினைக்க கூட நேரம் ஒதுக்க முடியா வேகமான வாழ்க்கை முறை...
இயந்திரமாகி போனோம்...
அவ்வளவே...!

ரிஷபன் said...

நேர்த்தியான சிறுகதை.. அதுவும் எனக்குப் பிடித்த ஈழத்தமிழில்.. நானும் அதையேதான் கேட்கிறேன்.. அங்குமா?.. மனிதரிடையே தொலைந்து வரும் நேசம் வலுவாய் புலப்படுத்தும் எழுத்தோட்டம்.. வெகுவாய் ரசித்தேன்..

நிலாமதி said...

நெஞ்சை தொட்ட கதை . வயது போக பாசங்களும் குறைந்து விடுமோ என்று எண்ணத்தோன்று கிறது.
காவோலை விழ குருத்தோலை சிரித்ததாம். ஆனால் வசதியாக் வைக்க எண்ணினார்களோ?

கலா said...

வெயிலின் அருமை
நிழலில் தெரியுமென்பதுபோல்....

பெற்றோரை இழந்து அவர்களுக்காக...
அவர்கள் இல்லையே என
ஏங்கும் என் போன்றோர்களுக்கு
தாக்கங்கள் பல இருக்க...


பாரமென்று ஒதுக்குபவர்களும்
அதிகம் பேர் உண்டென்ற நிலையில்...

உங்கள் நிஐக் கரு வெடித்து வெளிவந்த
உயிரோட்டங்கள்...உருகவைக்கின்றன
தோழி!

நிலாமகள் said...

உணவும், உறைவிடமுமே எஞ்சிய வாழ்தலுக்கு மிஞ்சிய வயோதிகத்தின் தனிமைச்சிறை தான் உறவுகள் ஒதுக்கிய 'இல்லம்'. சந்தர்ப்ப சூழல் நெருக்கடித்தாலும் பெற்ற குழந்தைகளைச் சுமந்து கடந்த அக் கொதிபாலை வாழ்வின் வெகுமதி பெரும் மனவலி. கலங்கடித்து விட்டீர்கள் தோழி... தமிழும் நடையும் வெகு இதம்.

எல் கே said...

manam valithathu

ஜெயா said...

ஹேமா இது உண்மைக்கதையாக இருந்தால் எங்கள் ஊரிலும் இந்த முதியோர் இல்லக்கலாச்சாரம் வந்து விட்டதா என்று கொஞ்சம் அதிர்ச்சி தான்.

நாச்சாரம் வீட்டுச் சீதாம்மாவின் கதை மனதைத் தொட்ட கதை. அதுவும் எங்கள் அழகு தமிழில் அப்படியே நாச்சாரம் வீடு கண் முன்னே வந்து போனது........ பாராட்டுக்கள்.

Karthick Chidambaram said...

உங்கள் எழுத்துக்கள் பலமுறை என்னை உள்ளே இழுத்துகொள்கிறது.
கணமான கதைதான் - உங்கள் எழுத்து நடை அருமை.

ஹேமா said...

குமார் ...மிக்க நன்றி நண்பரே முதல் வருகைக்கும் சந்தோஷம்.


செந்தில்...தவழப் பழகும் குழந்தை மாதிரி எழுதப் பழகுகிறேன்.
முன்னமும் 4-5 கதைகள் எழுதியிருக்கிறேன்.கதை என்று ஒப்புக்கொண்டு ரசிச்சிருக்கிறீங்க.
அன்புக்கு நன்றி.


ஷங்கர்...என்ன சொல்றீங்கன்னு புரியுது.நான் நினைக்கிறேன்...
ஜானுல தப்பு சொல்றமாதிரியும் கதை இருக்கு.ஆனா நிலைமையும் கஸ்டமாத்தானே இருக்கு.வீடு திருத்திற வரைக்கும்ன்னு நினைக்கிறாங்க.ஆனா வீடு திருத்தப்படல.
அப்புறம் மனசும் மாறுது !


வேலு...நன்றி நன்றி.


சத்ரியா...எங்க அம்மம்மா வீடு நாச்சாரம் வீடுதான்.கொஞ்சமா மனசில நிழல் மாதிரி ஞாபகம் இருக்கு.அதை எங்க மாமா முழுசா இடிச்சுக் கட்டிடார்.ஆனா அம்மம்மா,தாத்தா செத்த அப்புறம்தான் !


ஜோதிஜி...நீங்க சிறுகதைகள் படிக்கிறதில்லையா !என்னோட கதை படிச்சதா சொல்றீங்க.அதுவே என் கதைக்கு ஒரு
ஊக்கவிரு(ந்)து.இன்னும் எழுதலாம்ன்னு ஒரு தைரியம் வருது.சந்தோஷம்.நன்றியும்.


அக்பர்...உங்க அளவுக்கு இல்லன்னாலும் ஒரு கதையோட்டம் இருக்குன்னு நினைக்கிறேன்.நன்றி.


ஞானம்...நன்றி.சில வார்த்தைகள் யாழ் தமிழில் இருந்தாலும் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.


அம்பிகா..நன்றி தோழி.


தமிழ்...ம்ம்...சிலர் யாழ் தமிழைக் கொச்சைத் தமிழ் என்கிறார்கள்.நீங்கள் என்றும் ரசிக்கிறீர்கள் !


ஜெய்...இல்லை இல்லை இந்தக் கதை நிஜமல்ல என் கற்பனை மட்டுமே !


அனானி...நன்றி.உண்மைதான்.கதை என் கற்பனை.ஆனால் யாழில் முன்பு கைதடியில் மாத்திரமே வயோதிபர் மடம் இருந்ததாக அறிகிறேன்.இப்போ எண்ணிக்கையில் கூடியிருக்கே !


ராஜவம்சம்...சிலநேரம் சந்தர்ப்பம் கூட சதி செய்கிறதுதானே.சிலசமயம் மழை வழிவிட்டு வீடு திருத்தப்பட்டிருந்தால் சீதாம்மா வீடு வந்திருப்பாவோ !


பரா அண்ணா...நன்றி நன்றி.
உங்களைப்போல பெரியவர்களின் பாராட்டு மனசுக்குச் சந்தோஷம்.

ஹேமா said...

சி.பி.செந்தில்குமார்...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


ஸ்ரீராம்...பாராட்டுக்கு நன்றி.தொடர்ந்து தரும் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளே என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது.


சாரல்....எங்க ரொம்ப நாளாக் காணோமே என் பக்கம் !


நியோ...நீங்கள் ஈழத்துக் காற்றா !சந்தோஷம்.பெரிதாக இல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல வயோதிபர் மடங்கள் வளரத் தொடங்குகின்றனவே இலங்கையிலும் !


அம்மிணி...ரசிச்சுப் பாராட்டினதுக்கு நன்றி தோழி.


லெமூரியன்..."நமக்கும் இந்த நிலமைதான்"சரியாகச் சொல்கிறீர்கள்.ஆனால் ஒரு மாற்றம்.நாங்கள் இதை எதிர் பார்த்தே வாழ்கிறோம்.அதனால் அதிர்ச்சியாயோ வேதனையாவோ இருக்காது.அதோடு இன்றைய வாழ்வியலில் பெற்றோர்களைப் பிள்ளைகள் தங்களருகில் வைத்திருப்பதன் சாத்தியக்கூறுகள் குறைந்துகொண்டே வருகிறது.


ரிஷபன்....நீங்கள் சொல்லும் குறைநிறைகளை எதிர்பார்த்தேன்.நன்றி.


நிலா...எங்கே நடுவில ஆளைக் காணோமே.விடுமுறை போயிருந்தீங்களா ?


கலா...நன்றி தோழி.இனி வருங்காலம் எங்களுக்கு இந்த வேதனை இருக்காது.நாங்களாகவே போய் அங்கு இருந்துவிடுவோம்.ஏனென்றால் நிலைமை அப்படித்தான் !


நிலாமகள்....தோழி வயோதிபம் வர உணவும்,உடையும்,படுக்க ஒரு இடமுமே போதுமென்றுதானே நினைக்கிறார்கள் சிலர்.


கார்த்திக்...நன்றி.வேலை அதிகமென்று நினைக்கிறேன்.
அதன் நடுவிலும் ஊக்கம் தரும்
வருகைக்கு நன்றி.


ஜெயா...காணேல்லையே என்று தேடினேன்.சுகம்தானே ஜெயாக்குட்டி.தொடர்ந்த அன்புக்கு நன்றி தோழி.


சி.கார்த்திக் நிறைவான நன்றி உங்களுக்கும்.உண்மையில்
பாராட்டுக்கள் பார்த்து சந்தோசமாயிருக்கு!

thamizhparavai said...

kathai kanakka vaiththathu hema...
pazhakiya kathaiyeninum, solliya vaNNam siRappaaka amainthuvittathu...
aangangae paththi,paaraakkaL piriththup pottal padikka sukamaa irukkum..
adaimazhaiyin nasanasappu ennuL..
keep it up hema...
while i started to read this story, i didnt expect this much from u hema..
nice effort.

க.பாலாசி said...

போட்டியில் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் ஹேமா...

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP