Friday, September 17, 2010

வேண்டாம் ஒரு மழைநாள்.

இன்று இங்கு மழை.மெல்லக் குளிர்கிறது. போர்வை தேடி நுழைந்துகொண்டுதான் எழுதுகிறேன்.மனம் வெக்கையாய் போர்வை தள்ள நினைத்து விலக்காமல் வெளியே பார்க்கிறேன்.எரிச்சலாய் வருகிறது.இயற்கை அழுவதாய் மழைக்கால இருட்டு மம்மல் இருட்டு ஒரு விதமான சோகத்தையே தருகிறது எனக்கு.

மழையில் நனைவதும்,சேற்றில் விளையாடுவதும் சந்தோஷம் என்றாலும் அந்தக் கருத்த மேகமும்,இடியும்,மின்னலும்,காற்றில் அலையும் மரங்களும்,மரம் விட்டுப் பறக்கும் இலைகளும் எனக்குச் சோகமாகவே படும் சிலநேரங்களில்.இல்லை இல்லையென்று நீங்கள் சொன்னாலும் உணர வைக்கவும் சொல்லவும் எனக்குக் கடினமாகவே இருக்கிறது.

மழை பற்றி அறிந்திருப்பீர்கள்.நிறையவே அறிந்திருப்பீர்கள் குடை தவிர்த்து வெள்ளம் விளையாடிய நினவோடு சந்தோஷம்தான் என்பது உங்கள் கருத்து.ஒரு மழைக்காலத்தில் வெறும் ஒற்றைக்கோட்டுப் பாதை வழியே நடந்து பாருங்கள்.ஒற்றைச் சிட்டுக்குருவியின் சோகம் காண்பீர்கள்.அப்போது சொல்லுங்கள்.

அடர்ந்த மரத்தின்கீழோ,கூரை வீட்டின் கிடுகு சொட்டும் மஞ்சள் நிற மழைநீர் தெறிக்க அந்தத் தாவாரத்திலோ மழைக்காக ஒதுங்கிப் பாருங்கள்.
இன்னும்...இன்னும் தனித்த அந்த மழையின் இருட்டுக்காக ஒரு மெழுகுதிரியையோ மின்சார விளக்கையோ பொருத்திவிட்டுப் பால் விடாத ஒரு வெறும் தேநீரோடு ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள்.அதுவும் சோகமான ஒரு பாடல் அல்லது சோகமான ஒரு நாவலாய் இருந்துவிட்டால் அதைவிடக் கொடுமையான நேரம் இருக்க முடியாது என்பதாய் இருக்கும்.உணரும் சோகம் அதிகமாகவே வலிதரும்.

சோகம் நிறைந்த மழைக்காலங்கள் என் வாழ்வில் தொடர்ந்து வரும் ஒரு உறவுபோல.ஒரு மழைக்காலத்தில்தானாம் நான் பிறந்தேனாம்.ஒருதரம் மழையால் நிரம்பிய கிணற்றுக்குள் விழுந்து மூச்சுத்திணறி விட்ட உயிரை இழுத்து வந்திருக்கிறேன்.ஒரு சந்திப்பும்...ஒரு இறப்பும்...பிரிவுமான தினமும் அதே மழை மேக இருட்டுக்குள்தான்.காடும் மழையும் உறவெனக் கொஞ்சநாள்,வீடும் உறவுமாய் வாழ்ந்தபோதும் கண்கள் மழையாய் பொழிந்த காலங்கள் நிறைய.

வீடு விட்டு உறவுகள் விட்டு மழையென என் மக்கள் பாதையெங்கும் குண்டுகளுக்குள்ளும் குழிகளுக்குள்ளும் நிரம்பிக் கிடக்க,சோவென அடித்த மழையில் என் இனத்தின் இரத்தத்தில் கால் கழுவி ஒருபிடி ஈரமண்ணைத்தானும் கொண்டுவர அனுமதிக்காத சிங்கள இராவணுத்தின் கையை உதறி,அதே மழை நீரில் என் மண்ணைக் கைகழுவி விமானம் ஏறிய நாளும் இதே மழைநாள்தான்.அந்த ஈர உடையைக்கூட மாற்ற மனமற்று மூன்று நாட்களாய் முனகிக் கிடந்து நான் தொலைந்த மழைப்பொழுதுகள் அதிகம்.

என்றாலும் மழை பிடிக்கும்.இங்கே நான் சுவீகரித்துக்கொண்ட சோகம் தவிர மழையும் தூரலும் அதன் சாரலும் களங்கமில்லாத தண்ணீரும் அழகுதான்.மிக மிக அழகு.பச்சைப் பசேல் பூமியும்,ஓடும் வெள்ளமும்,ஒடுங்கி விரைவாய் அடங்கும் பறவைகளும்,குடை மனிதர்களும்,நனைந்த பூனைகளும்,நனையாப் புல் நுனிகளும் அழகு அழகு கொள்ளை அழகு.

எனவே மழை அழகு.கொள்ளை அழகு.அதற்குள் அடைத்து வைக்கப்பட்ட சோகம்தான் சொன்னேன்.என்னை நினைத்தபடி இனி வரும் மழையை அவதானியுங்கள்.சிலிர்த்து சிலிர்த்து மெலிதாய் அழுவதாய் இருக்கும் ஒரு உணர்வோடு தெரியும்.

ஹேமா(சுவிஸ்)

46 comments:

நட்புடன் ஜமால் said...

அந்த விதமான சோகம் கூட, சில நேரங்களில் நமக்கு துணையாக தெரியும் தனிமையில்

சுந்தர்ஜி said...

அற்புதம் ஹேமா.மழை என் வாழ்க்கையில் தொடர் குறியீடு. என் மனைவியை முதலில் பார்க்கையில்-என் இரு மகன்களும் பிறக்கையில்-என் வேலையை ராஜினாமா செய்த பகலில்-தொழிலுக்கு முடிவெடுத்த இரவில்-வீடு கட்டி உள்நுழைகையில்-என் தொழில் விஸ்தரிக்கையில் என என் வாழ்வின் பல கட்டங்களில் எனக்கு முன் நிற்பவள்.(மழை எனக்குப் பெண் பால்தான்)

ஆனாலும் உங்கள் இடுகையின் அடிநாதமான சோகம் ததும்பும் மழையையும் நான் அநுபவித்திருக்கிறேன்.யாருமற்ற பொழுதுகளில் பெய்யும் மழை பல நினைவுகளைக் கீறக்கூடியதுதான்.

என்னையும் இன்னொரு படைப்புக்கு யோசிக்கவைத்த அழகான பதிவு ஹேமா.பிடியுங்கள் என் நன்றிகளை.

சுந்தர்ஜி said...

உங்கள் இடுகையைப் படித்து மறந்துவிட்டேன். நீங்கள் எழுத விட்டதையும் அந்தக் குழந்தையின் பிஞ்சுமுகம் எழுதுகிறது.பொருத்தமான படத்துக்கு ஒரு பெரிய சபாஷ்.

ராஜவம்சம் said...

உங்கள் என்னங்களில் இருந்து அழகாக சொல்லியிறுக்கிறீர்கள்.

சில விசயங்களில் நமக்கு வெருப்பு ஏற்ப்பட்டால் கடைசி வரை மாராமலேயே இருக்கும் அது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும் நமக்கு அந்த சோகங்களே முதலில் தோன்றும்.

மழை நமக்கும் நம் மண்ணுக்கும் உயிர் போன்றது.

Unknown said...

கடந்த கால கவலைகளைக் கிளறினாலும் இப்பதிவை அழகாய் முடித்துவைதிருக்கிறது.....மழை.அதுதான் மழையின் சிறப்பு.

சௌந்தர் said...

அதே மழை நீரில் என்மண்ணைக் கைகழுவி விமானம் ஏறிய நாளும் இதே மழைநாள்தான்.அந்த ஈர உடையைக்கூட மாற்ற மனமற்று மூன்று நாட்களாய் முனகிக் கிடந்து நான் தொலைந்த மழைப்பொழுதுகள் அதிகம்./////

உங்கள் சோகத்தை கூட அழகா சொல்லி இருக்கீங்க


////நான் பிறந்தேனாம்.ஒருதரம் மழையால் நிரம்பிய கிணற்றுக்குள் விழுந்து மூச்சுத்திணறி விட்ட உயிரை இழுத்து வந்திருக்கிறேன்.///

உங்களுக்கு மழையால் இவ்வளவு நடந்து இருக்கா (:

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான பதிவு.. நன்றி.

விக்னேஷ்வரி said...

ரொம்ப சோகமா இருக்குங்க உங்கள் நினைவுகள். மழையை வெறித்துப் பார்க்கும் வெறுமை நிரம்பிய உங்கள் பார்வையை உணர முடிகிறது.

VELU.G said...

//மனிதர்களும்,நனைந்த பூனைகளும்,நனையாப் புல் நுனிகளும் அழகு அழகு கொள்ளை அழகு.
//

மழை அழகுதான், மழையோடு நணைந்த எல்லாம் அழகுதான்

இந்த இடுகையும் அப்படித்தான்

ஆ.ஞானசேகரன் said...

//ஒரு மழைக்காலத்தில் வெறும் ஒற்றைக்கோட்டுப் பாதை வழியே நடந்து பாருங்கள்.ஒற்றைச் சிட்டுக்குருவியின் சோகம் காண்பீர்கள்.அப்போது சொல்லுங்கள்.//

உண்மை ஹேமா


உங்களின் பகிர்வு சிந்தனையை தூண்டியது

தமிழ் உதயம் said...

மழை, சோகம், இறந்த காலங்கள். மனதை கவ்விப் பிடித்த ஞாபகங்கள். மனதுக்கு பிடித்தது பதிவு.

வால்பையன் said...

//எனவே மழை அழகு.கொள்ளை அழகு.//


ஆம்

ஜெய்லானி said...

ஒரு மழை உங்களை எப்படியெல்லாம் யோசிக்க வச்சிருக்கு மனசுல..!!!

மழை சிலருக்கு வரம் ..சிலருக்கு சாபம்..நாம இருக்கிற இடத்தை பொருத்து அமையுது

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க ஹேமா

Ashok D said...

என்ன சொல்வது என்று தெரியவில்லை ஹேமாஜி... என் வீட்டை கடைசியாய் பிரிந்தபோது என் இருதயமே கணமாகி காதடைத்து உடலே உதறியது... அது நினைவில் வருகிறது...

நீங்கள் நாட்டை விடும்போது எப்படியிருக்கும் என்றும் புரிகிறது...

பதிவை பற்றி சொல்ல வார்த்தைகளுற்று மௌனமாய் போகிறேன்

தமிழ் அமுதன் said...

ஹேமா..!ஹேமா...!!ஹேமா..!!!

அன்புடன் அருணா said...

மழையின் சிறப்பே அதுதான்...நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ அப்படியே கூட வரும்!சிலிர்த்தால் சிலிர்க்க வைத்து...அழுதால் அழ வைத்து...இன்னும் நிறைய!

Mahi_Granny said...

'என்றாலும் மழைபிடிக்கும்.இங்கே நான் சுவீகரித்துக்கொண்ட சோகம் தவிர மழையும் தூரலும் அதன் சாரலும் களங்கமில்லாத தண்ணீரும் அழகுதான் '''. சுவிகரித்துக் கொண்ட சோகத்தை தவிர்த்து விடுங்கள். இனிமேல் எந்நாளுமே மழை அழகு தான்.

நிலாமதி said...

உங்கள் மழைக்கதை சில்லென்று இதமாய் ..நெஞ்சைவருடும் சோகமாய் ...இருக்கிறது.என் கணவன் வீட்டுக்கு முதலில் போகும்போது என்னை அணைத்து குடை பிடித்து
நானும் அவனுமாய் நனைந்த பொழுதுகள்..நினைவூட்டி செல்கிறது

ஜோதிஜி said...

ஹேமா உங்கள் எழுத்தா? இதை இப்படியே தொடர் போலவே கொண்டு போகலாம் போலிருக்கே?

அதிக புத்தகவாசிப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு இருக்கும் எதார்த்தமான நடையழகு.

அப்புறம் எனக்கும் இயல்பாகவே மழையும் மழையில் நனைவதும் பார்ப்பதும் ரசிப்பதும் ரொம்பவே பிடிக்கும். நம்ம மக்களுக்கு கூட தூரலாய் வரும் மழையில் வெளியே ஆட்டம் போட்டுக் கொண்டு நிற்பர்களை அதட்டி உள்ளே அழைத்து வரும் போது எதையே இழந்து எதையோ தேடி ஓடிக்கொண்டுருக்கும் இந்த எதார்த்தங்கள் ரொம்பவே சுடும்.

இங்குள்ள நிலைமை எப்படித் தெரியுமா?

ஜோதிஜி said...

காத்திருந்த மழை வந்தது.
கண்ணீருடன் முதலாளி.
நனைந்து கொண்டே தொழிலாளி.
சாலையில் ஓடிய வெள்ளத்தில்
கவனமாக செலுத்தும்
வாகனமும் பாதசாரிகளும்.

அத்தனை குழிகளும்
மறைந்து போய் நிற்க
யோசித்து நகர்கின்றேன்.

மழையை ரசிப்பதைவிட
வீடு போய் சேர்வதே
இப்போது
எனக்கு முக்கியம்.

ஸ்ரீராம். said...

மழை அழகு. அது போல உங்கள் பதிவும்... அவரவர் அனுபவங்கள் சோகத்துக்கும் சந்தோஷத்துக்கும் காரணமாகின்றன. இனி மழைக் காலங்களில் என் சந்தோஷப் பொழுதுகளில் இருக்கும்போது உங்கள் சோக நினைவுகளையும் நினைவு கூர்வேன் ஹேமா.

Riyas said...

அழகா சொல்லிறிக்கிங்க ஹேமா அக்கா..
நானும் மழைக்காதலந்தான்

//சிலிர்த்து சிலிர்த்து மெலிதாய் அழுவதாய் இருக்கும் ஒரு உணர்வோடு தெரியும்.//

ம்ம்ம்ம்ம்

ஜெயா said...

இயற்கை அழுவதாய் மழைக்கால இருட்டு மம்மல் இருட்டு ஒரு விதமான சோகத்தையே தருகிறது எனக்கு...உண்மை

ஒரு மழைக்காலத்தில் வெறும் ஒற்றைக்கோட்டுப் பாதை வழியே நடந்து பாருங்கள். ஒற்றைச் சிட்டுக்குருவியின் சோகம் கான்பீர்கள். அப்போது சொல்லுங்கள்...நான் சொல்கிறேன் நூற்றுக்கு நூறு உண்மை ஹேமா.....


ஒரு சந்திப்பு ...ஒரு இறப்பு...பிரிவு..வேண்டாம் இந்த மழைநாள்.....

நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கும் பொருத்தமான பிடித்தமான பதிவு.கண்கள் கலங்கியபடி படிக்கிறேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை ஹேமா... உங்களின் இது போன்ற பதிவுகளுக்காகத் தான் உப்புமடச்சந்தியில் காத்திருக்கிறேன்...அன்போடு..

நிலாமகள் said...

//வீடு விட்டு உறவுகள் விட்டு மழையென என் மக்கள் பாதையெங்கும் குண்டுகளுக்குள்ளும் குழிகளுக்குள்ளும் நிரம்பிக் கிடக்க,சோவென அடித்த மழையில் என் இனத்தின் இரத்தத்தில் கால் கழுவி ஒருபிடி ஈரமண்ணைத்தானும் கொண்டுவர அனுமதிக்காத சிங்கள இராவணுத்தின் கையை உதறி,அதே மழை நீரில் என் மண்ணைக் கைகழுவி விமானம் ஏறிய நாளும் இதே மழைநாள்தான்.அந்த ஈர உடையைக்கூட மாற்ற மனமற்று மூன்று நாட்களாய் முனகிக் கிடந்து நான் தொலைந்த மழைப்பொழுதுகள் அதிகம்.//

கசிவுடன் நெகிழ்த்திய பதிவு தோழி...! அந்த மழைக் கால மம்மல் இருட்டுப் போல பதிவு நெடுக ஊடாடியிருக்கும் தங்கள் விம்மலும் வேதனையும் மனசைப் பிழிகிறது.

ஜெயந்தி said...

மழையில மெல்லிய சோகம் இழையோடும் நானும் உணர்ந்திருக்கிறேன். உங்கள் அனுபவங்கள் மனதை ஏதோ செய்கிறது.

சத்ரியன் said...

//சோவென அடித்த மழையில் என் இனத்தின் இரத்தத்தில் கால் கழுவி ஒருபிடி ஈரமண்ணைத்தானும் கொண்டுவர அனுமதிக்காத சிங்கள இராவணுத்தின் கையை உதறி,அதே மழை நீரில் என் மண்ணைக் கைகழுவி விமானம் ஏறிய நாளும் இதே மழைநாள்தான்.//

பெரும் சோகம் !

லெமூரியன்... said...

என்ன ஆச்சிரியம்...!
எனக்கும் இதே போல் ஒரு மனநிலை இருந்திருக்கிறது.ஆனால் இப்போதில்லை......
பொதுவா மழை ரசிப்பேன் எப்பொழுதும். ஆனால் , குளிர்காற்றுடன் கூடிய மண்வாசனை....
மேகங்கள் கருகருவென மாறி..அதிக இடியுடன் கூடிய மின்னலும்....பயந்தபடி ஒலிஎழுப்பி கூடு திரும்பும் பறவைகளும்...
பின்பு வரும் காற்றில் தூவாமல்,சோவென பெய்யும் மழை நேரத்தில் நானும் இதே போன்று உணர்ந்திருக்கிறேன்...
ஒரு வித அமானுஷயமான அமைதியுடன் இனம்புரியாத சோகம் குடியேறும் மனதினுள்...

Anonymous said...

மழை எப்போதுமே சந்தோசம் அப்டிங்கற என்னோட எண்ணத்த மாத்திடுச்சு இந்த பதிவு!

Unknown said...

அன்பின் ஹேமாவுக்கு,
தொடர்ந்து அழுத்தும் வேலைப்பளுவால் உங்கள் பதிவுகளை படித்துவிட்டு ஓட்டு மட்டும் போட்டுவிட்டு போய்விடுகிறேன்.. ஒரே நேரத்தில் மூன்று Projects பார்க்கிறேன்..

நான் என் வலைபக்கத்திலும் தொடர்ந்து மீள் பதிவுகளைத்தான் பதிவேற்றுகிறேன்... ஆனால் நான் பிரபலம் ஆவதற்கு முன் எழுதிய பதிவுகள் என்பதால் யாருக்கும் தெரியவில்லை....

'பரிவை' சே.குமார் said...

அற்புதம்...

உங்கள் சோகத்தை கூட அழகா சொல்லி இருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

படம் கொள்ளை அழகு.

கவி அழகன் said...

சந்தோஷம்
சுப்பெர கதையை கொண்ண்டுபோகிரிங்க

சிங்கக்குட்டி said...

சூப்பர் ஹேமா.

ஒவ்வொரு முறையும் சொல்ல நினைப்பேன், உங்கள் எழுத்து நடை மிக அருமை படிக்கும் போதே, மழை விட்ட மாலை நேரம் போல ஒரு மயக்கம், எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கும் :-).

Anonymous said...

அருமையான எழுத்து நடை. மழைக்காலத்தையும், அதன் நிகழ்வுகளையும் அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள். ஈரத்தின் சோகம் எல்லோரையும் நனைக்கிறது இந்த வார்த்தை வடிப்புகளில்.

thiyaa said...

அற்புதம்

ராமலக்ஷ்மி said...

//எனவே மழை அழகு.கொள்ளை அழகு.அதற்குள் அடைத்து வைக்கப்பட்ட சோகம்தான் சொன்னேன்.என்னை நினைத்தபடி இனி வரும் மழையை அவதானியுங்கள்.சிலிர்த்து சிலிர்த்து மெலிதாய் அழுவதாய் இருக்கும் ஒரு உணர்வோடு தெரியும்.//

உணர்வுகளை அழகாய் வெளிக்கொண்டு வந்த எழுத்து அந்த மழையைப் போலவே அழகு.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவும் சூப்பர்,உங்க லே அவுட்டும் தூள்

ரிஷபன் said...

மழைக்குள் நுழைந்து நனைந்து திரும்பிய உணர்வு.
சோகமோ.. உற்சாகமோ
மழை பிடிக்காத மனிதர் உண்டோ?!

Raja said...

நல்லாயிருக்குங்க...என் சோகத்த மழை என்ன பண்ணுச்சுன்னு எழுதி வச்சிருக்கேன்...நாளைக்கு போஸ்ட் பண்றேன்...

ஹேமா said...

ஜமால்...நன்றி.மழை - சோகம் - தனிமை அதுகூட ஒருசுகம்தான்.அனுபவித்திருக்கிறேன்.


சுந்தர்ஜி...உங்கள் அன்பான நன்றிக்கு நானும் நன்றியோடு என் அன்பைச் சொல்லிக்கொள்கிறேன்.படமும் நான் நினைத்ததுபோலவே கிடைத்தது.
பதிவுக்கு மெருகூட்டியது.சந்தோஷம்.


ராஜவம்சம்...நீங்கள் சொல்வது உண்மைதான்.மழை மண்ணுக்கும் உயிரினங்களுக்கும் தேவையான ஒன்று.நான் மழை எனக்குத் தந்த சோகம் மட்டுமே சொன்னே.
சந்தோஷங்களுமுண்டு.குறைவு.


கலாநேசன்...மழையில் நனைந்த சந்தோஷம் உங்களுக்கு.நன்றி.


சௌந்தர்...மழையில் நடந்த கதை ஏராளம்.இது கொஞ்சம்தான்.


T.V.ராதாகிருஷ்ணன் ஐயா...உங்கள் வருகை எப்போதும் எனக்கு மழைபோல ஒரு சந்தோஷம்.


விக்னேஸ்வரி...உங்கள் வருகையும் எப்போவாவது வந்து விசாரிக்கும் மழைபோல அதிசயம்.


வேலு...நன்றி அன்புக்கு.உங்கள் அழகான தத்துவப் பதிவுகளும் அழகுதான்.


ஞானம்...அன்பின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


தமிழ்...உங்கள் அன்பான வார்த்தை எப்போதும் எனக்கு உற்சாகம் மழைபோல !


வாலு..எனவே மழை எப்பவும் அழகு.


ஜெய்...மழை சிலருக்கு வரம் ..சிலருக்கு சாபம்..நாம இருக்கிற இடத்தை பொருத்து அமையுது.இது நீங்க சந்தேகமில்லாமல்
சொன்ன அற்புத வார்த்தை.


அக்பர்...மழையோடு என் பக்கமாய் ஒதுங்கியதுக்கு நன்றி.


அஷோக்...நீங்கள் வலியைச் சரிவரப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.சொல்லி உணர்வதைவிட அனுபவப்பட்டு உணர்வது அதன் தாக்கத்தைப் புரியவைக்கும்.


ஜீவன் அமுதன்...ஏன் மூன்றுமுறை கூப்பிட்டிருக்கீங்க.மழைச் சத்தத்தில எனக்கு கேக்கல.இப்பத்தான் கேக்குது.வார்த்தைகள் அகப்படவில்லயோ !

அருணா...எங்கே பூங்கொத்து.மழைபெய்யும்போது என்ன மனநிலையில் இருக்கிறோமோ அதுபோலவே மழையை ரசிக்கமுடியும்.


மஹி...மழை நேரம் தனித்து இருக்கையில் வீட்டு ஞாபகமும் வந்தால் சோகத்தைத் தவிர்க்க முடிவதில்லை.என்றாலும் மழைத்துளி முகத்தில் பட்டுத் தெறிக்கையில் அதன் அனுபவமே ஒரு சிலிர்ப்புத்தான்.


நிலாமதி...பார்த்தீர்களா உங்கள் அனுபவமே தனி.
காதலின் சுகம் மழையில்.

ஹேமா said...

ஜோதிஜி...உங்களுக்கும் மழையின் அனுபவங்கள் நிறையவே இருக்கிறது.மழை அடித்துப் பெய்யும்போது பலமாகப் பாடிப்பாருங்கள்.மனதுக்குச் சந்தோஷமாயிருக்கும்.உங்கள் கவிதை சமூக அக்கறை மழையிலும் தெரிகிறது.அந்தக் கவிதையைப் பதிவாகவே போடுங்களேன்.


ஸ்ரீராம்...இனி மழை வரும்போதெல்லாம் என்னை நினைப்பதாய் சொல்லியிருக்கிறீர்கள்.
மறக்கமாட்டீர்கள்தானே !


ரியாஸ்...நீங்களும்
மழைக்காதலன் தானா !


ஜெயா...ரசித்து ரசித்து ஆனால் என்னைப்போலவே சோகநேரத்து மழையோடு நனைந்தபடி பின்னூட்டம்.மழை எப்போதும் சோகம் தராது ஜெயா.எங்கள் மனதின் சோகங்களை எந்த மழையாலும் கரைத்துவிடவும்முடியாது.அது மனதில் அழுந்திவிட்ட
அச்சுக்கள் எம் சோகங்கள்.


நிலாமகள்...ஏனோ அன்றைய மழை என் மனம் இருந்த நிலையில் விம்மலோடு எழுத வைத்தது.


ஜெயந்தி...ரொம்பக் காலத்துக்கு அப்புறமாய் இந்தப் பக்கம்.
வானவில்லோ நீங்க.


சத்ரியா....சோகம் எப்போதும் வெளியில் தெரிவதில்லை.அப்பப்போ வந்து போகும்.நனைக்கும்.
காய்ந்துவிடும்.பழகிப்போச்சு.


லெமூரியன்...மழையின் சப்தங்கள் எப்போதுமே ஒரே மாதிரித்தான்.அதன் வருகை வாசனையும் அப்படித்தான்.எங்கள் மனங்களின் சூழ்நிலைதான் மழையின் ரசனையை மாற்றி வைக்கிறது.எங்கள் சோகத்தை மழைச்சோகமென்று சொல்லிவிடுகிறோம்.சரிதானே !


பாலா....இனி மழை பெய்யறப்போ என்னை நினச்சுக்கோங்க.


செந்தில்...நான் உங்கள் பழைய பதிவுகள் பார்த்திருக்கிறேன்.நீங்கள் மீள்பதிவிட்டதையும் கவனித்துமிருக்கிறேன்.உங்கள் சில பழைய கவிதைகள் இங்கு வானொலியிலும் கேட்டிருக்கிறேன்.


குமார்...மழைக்கும் நன்றி சொல்வோம்.


யாதவன்...ஏன் தமிழ் எழுத்துக்கள் பிழையாக அச்சில் வருகிறது.கவனியுங்கள் கொஞ்சம்.


சிங்கா...உங்களுக்குப் பொறாமையா அதுவும் என்னைப் பாத்தா.இதுதான் நகைச்சுவை.சிலர் என் பக்கமே வருவதில்லை என் எழுத்துப் பிடிக்காமல்.அது தெரியுமா உங்களுக்கு!


ஆனந்த்...கனகாலத்துக்குப் பிறகு உங்கள் நிறைவான பின்னூட்டம் மழைபோலச் குளிர்ச்சி.நன்றி.


தியா...நன்றி சகோதரா.


லஷ்மிக்கா...உங்கள் எழுத்துக்களை எப்போதும் நான் ரசிக்கிறேன்.
அவ்வளவு தெளிவான நடை உங்களது.


செந்தில்குமார்...என் வலைத்தள அமைப்பாளர்களுக்கே உங்கள் நன்றிகள்.உங்கள் பின்னூட்டத்தை இரண்டு தளத்திலும் கவனித்தார்கள்.நன்றியும் சொன்னார்கள்.


ரிஷபன்...அதுதானே மழை பிடிக்காதவர்கள் யார்.படிக்கும் காலத்தில் மழைக்கவசத்தை மறப்பதுபோல வீட்டில் வைத்துவிட்டு மழையில் நனைந்து வருவது வழக்கம்.சேற்றில் விளையாடி கால்முழுதும் சேற்றுப்புண்.இதுவும் மழை அனுபவம்தான்.


ராஜா...உங்கள் மழையிலும் நனைந்தேன்.ஆனல் என் சோகம் அடிமனதில்.அதை எந்த மழையாலும் கரைக்கமுடியாது.அது எபோதும் வெளிவராவிட்டாலும் இப்படித்தான் அப்பப்போ வந்து நனைத்துப் போகும்.

அப்பாதுரை said...

எத்தனை இயல்பாக எழுதியிருக்கிறீர்கள்?! பிரமாதம்.
'கிடுகு' என்றால் என்ன?
மழையின் சோகம் தொலைந்த காதல்களை நினைக்கும் போது மட்டும் புலப்படும். மழை சோகங்களைக் கழுவவும் செய்கிறதே?

ஹேமா said...

அப்பா...சின்னக் குடில்வீடுகள் வேயப்படுவது கிடுகால்தானே.காய்ந்த தேன்னோலையைப் ஊறவிட்டுப் பின்னியெடுப்பதைக் கிடுகு என்போம்.நீங்கள் ஒருவேளை வேறு சொல்வழக்கு வைத்திருப்பீர்களோ என்னவோ !

நிச்சயம் மழை பெய்யும்போது உணர்ந்து பாருங்கள் சோகங்கள் கழுவப்படுவதை !

சி.பி.செந்தில்குமார் said...

பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட தளம் வைத்திருப்பவர்களை நான் கவனித்திருக்கிறேன்,2க்கும் பொதுவான டிசைன் ஏதாவது இருக்கும்.ஆனால் நீங்கள் 2 பிளாக்கையும் அழகாக வித்தியாசப்படுத்தி விட்டீர்கள்

அன்புடன் மலிக்கா said...

சோக விளிம்பிற்க்குள்
சோளியாடியதோ மழை.
மழையின் துளிகள்
மண்ணுக்கு உரம்
பெண்ணுக்கு ஆனதேன் பாரம்..

தோழியே உங்களின் கடந்துபோன வாழ்க்கையின் சுவடுகளை சுமந்துசெல்கிறேன் தோழியாய்..

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP