Thursday, July 07, 2011

குழந்தைகள் குழந்தைகளாக.

நேற்று இரவு சிறுவர்களின் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவர்களின் திறன் என்னை மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களை என்ன பாடுபடுத்தி இந்த நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் பெற்றவர்கள்.சந்தோஷம்தான்.ஆனாலும் பொம்மையும் பந்துமாய் தாங்களே மாறி விளையாடும் இவர்களைப் பொம்மைகளாக்கி சொல்வதைக் கேட்க வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் அற்புதமான சிற்பிகள் அவர்களது குருமார்கள்.அந்தச் சிந்தனையில்தான் தோன்றிய சில விஷயங்கள் இங்கு படித்த...கேட்ட சிலவற்றோடு.

கற்றல் என்பது வெற்றி பெறுதலாய் மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்.மெல்லக் கல்வி தோற்றுப்போய் வெற்றி மட்டுமே இலக்காகிறது.பண்பு குறித்துப் பேசி வந்த பெற்றோரும் ஆசிரியர்களும் இன்று ஆளுமை குறித்துப் பேசுகின்றனர்.ஆளுமை என்பது வெற்றி பெற்றோருக்கான குறியீடு ஆகும்.கதைகளோ கட்டுக் கதைகளோ நிறையச் சொல்வது வெற்றி பெற்றோரைப் பற்றியேதான்.

"என் அண்ணன் மகன் ஆறு மாதத்தில் குப்புற விழாமலேயே தவழ ஆரம்பிச்சிட்டான்."மிகச் சிறிய பருவத்திலேயே வெற்றி தோல்வி குறித்த பேச்சுகள் தொடங்கி விடுகின்றன.

குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிடும் எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன.ஒன்று அறிவின் ஆதிக்கம்,மற்றொன்று பெரியவர்களின் எதிர்பார்ப்பு.

உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றும் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும்,பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

சரி – பிழை கண்டுபிடிக்கும்வரை அவர்களோடு நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்.அபோதுதான் குழந்தைகளை நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறது..

சுவிஸ் நாட்டு உளவியல் நிபுணர் ஜீன் பியாஜெட் (Jean Piaget 1896-1980) பற்றிக் கல்வியாளர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.அவசரம்… வேகம்… முந்துவது போன்ற ரேஸ் மைதானத்து வார்த்தைகள் கல்விக் கூடங்களை வந்து ஆக்கிரமித்தபோது குழந்தை எவ்வாறு சுயமாக படிப்படியாகக் கற்கிறது என்பதை வெற்றிப் பைத்தியங்களுக்கு மண்டையில் அடித்து விளக்கியவர் பியாஜெட்.

பியாஜெட் ஐந்து வயதுச் சிறுமி ஜுலியாவுடன் நடத்திய சிறிய ஓர் உரையாடல் கல்வி உலகின் கவனத்தைப் பற்றிப் பிணித்தது.காற்று உரையாடல் என அது பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

பியா: காற்று எப்படி வருது ஜுலி?

ஜுலி: மரத்தில இருந்துதான் !

பியா: அது எப்படி உனக்குத் தெரியும்?

ஜுலி: மரம் கிளைகளை ஆட்டி அசைக்கக் காத்து வருதே.நான் பாத்திருக்கிறேன் !

பியா: அப்படியா? எனக்குச் செய்து காட்டு!

ஜுலி: பாருங்க இப்பிடித்தான்! (தன் கைகளை அசைக்கிறாள்)

பியா: காத்து வரலயே!…

ஜுலி: ம்ம்! மரம் பெரிசுதானே! அதுக்கு நிறையப் பெரிய கை இருக்கு.அது அசைச்சா காத்து வந்திடும் !

பியா: அப்போ கடல்ல எப்படி ஜுலி காத்து வருது? அங்க மரங்களே இல்லையே!

ஜுலி: ம்ம்ம்! காத்து தரையில் இருந்து கடலுக்குப் போகுது.இல்ல! இல்ல! அது காத்து இல்ல.அலை !

பியாஜெட் ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடல் நடத்தியவர்.பெரிய உலக அறிவுச் செய்திகளை அவர் ஒருபோதும் குழந்தைகளோடு பேசும்போது நடுவில் திணித்துச் சொல்வதில்லை.

வயது வந்தவர்களின் அறிவுலகப் பார்வையின் படி ஜுலியர் சொன்னதெல்லாம் தப்பாக இருந்தாலும்,உண்மையில் அது தப்பு அல்ல என்பது பியாஜெட்டின் கருத்து.எதையும் குழந்தை தன் வழியில் அறியும் முயற்சி இது.

ஜுலி சொன்ன காற்றின் நம்பிக்கைக்குத் தலையாட்டி சரி என்று ஒப்புக் கொள்ளாமலும்,தவறு என்று மறுக்காமலும் பியாஜெட் பேச்சைத் தொடர்ந்தார்.குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும்.வயது வந்தோரின் அவசரத்துக்குக் குழந்தையின் புரிதலைத் திருத்துவதும் சரி செய்வதும் தவறு என்பது பியாஜெட்டின் கருத்து.

தோற்கும் பின்தங்கும் தடுமாறும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள இந்தத் தெளிவும் நிதானமும் தேவை.வயது வந்தோரின் தர்க்க அறிவைக் குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் மேலும் அக் குழந்தைகளிடம் தோல்வியையே திணிக்கிறோம்.குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிறோம்.விம்மிக் குறுக வைக்கிறோம்.

குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பு.குழந்தையை உணர்வில்லாப் பொம்மையாக்கி உங்கள் விருப்பத்துக்கு அதை வளைத்து நிமிர்த்த வேண்டும் என்று திட்டமிட்டால் அந்தக் குழந்தை உங்கள் அன்பான குழந்தையாயில்லை !


“குழந்தைகள் உங்களுடன்
இருக்கலாம்;
ஆனால் அவர்கள் உங்களுக்குச்
சொந்தமானவர்கள் அல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!
உங்கள் சிந்தனைகளைத்
தர வேண்டாம்
அவர்களுக்கென்று சிந்தனைகள்
இருக்கவே இருக்கின்றன”


இது கலீல் கிப்ரான் பாட்டு.

"இதைச் செய்யாதே என்று குழந்தைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்காத பள்ளி.பள்ளிக்குப் பொருந்துமாறு குழந்தைகளைத் திருத்துவதற்கு மாறாக குழந்தைகளோடு பொருந்துமாறு தன்னைத் திருத்தித் திருத்தி அமைத்துக் கொண்ட பள்ளி.ஒவ்வொரு குழந்தையும் ஆர்வம் கொண்டு கல்வியைத் தொடரும் வரை காத்திருந்த பள்ளி.எந்தக் குழந்தைக்கும் தோல்வியுணர்வை வழங்காத பள்ளி."

இப்படியொரு பாடசாலை அமைக்க நினைத்துத் தோல்வியுற்ற நீல் என்பவர்.ஸ்காட்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது (1917) மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார் என்பதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

பணிநீக்கம் செய்யப்பட்டு பள்ளியை விட்டு வெளியேறுகையில் அவர் தன் சின்னஞ்சிறு மாணவர்களுடன் உரையாடுகிறார்:

“நான் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகிறேன் என்பது உங்களுக்குப் புரியுமோ என்னவோ? இருந்தாலும் புரியவைக்க முயற்சி செய்து பார்க்கிறேன்.உங்களுடைய அம்மா அப்பாக்களுக்குப் பிடிக்காததால் நான் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.நான் நல்ல ஆசிரியர் இல்லையாம்.உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து விட்டேனாம்.பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டுப் படம் போடவும் மீன் பிடிக்கவும் விளையாடவும் உங்களைப் பழக்குகிறேனாம்.உங்களுக்குத் தேவையானதைக் கூட நான் சொல்லித் தரவில்லையாம்.

பொலிவியாவின் தலைநகரம் எது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?உங்களுக்குத் தெரியாதல்லவா?இதையெல்லாம் நான் சொல்லித் தரவில்லை அல்லவா?…” இவ்வாறு நீல் பேசிக் கொண்டிருக்கையில் ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?.நீல் பதில் அளிக்கிறார் அது எனக்கே தெரியாது ஜிம்.

பொய்மை கலவாத உரையாடல் இது....
மிக முக்கியமான நிகழ்வொன்று.நிச்சயம் எங்கள் வீடுகளிலும் நடந்திருக்கக்கூடும்.

ஒரு மனநல வைத்தியரும் ஒரு பெற்றோரும் உரையாடும் நிகழ்வு இது !

"நாங்கள் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது எங்கள் 5 வயது மகன் எதிர்பாராமல் கதவைத் திறந்து உள்ளே வந்துவிட்டான்.சுதாகரிக்க முடியாமல் சங்கடப்பட்டுக்கொண்டோம்.என் மனைவி என்னோடு நெருக்கமாகப் படுத்திருந்தாள்.வந்தவன் சும்மாவும் இல்லை."அம்மா என்ன செய்றீங்க நீங்க.இறங்குங்க.நான் அப்பா நெஞ்சில படுக்கவேணும் என்றான்."என்ன செய்ய என்றே தெரியவில்லை என்றார்."

இது என்ன பெரிய விஷயம்."இப்போ இடம் இல்லை.அம்மா குண்டா இருக்கிறா.அவவுக்கு மட்டுமே இந்த இடம் இப்போதைக்குப் போதுமாயிருக்கு."என்று நகைச்சுவையாகச் சிரிச்சுக்கொண்டே சொல்லுங்க.இந்த நேரத்தில் பதற்றம் வேண்டாம்.அதுவே "இவர்கள் இருவரும் ஏதோ தப்புச் செய்கிறார்களோ" என்கிற நினைப்பைக் கொண்டுவரும்.

கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருந்தாலும் பரவாயில்லை டாக்டர்....முழுசா உடலுறவில் இருக்கும்போது படுக்கையறைக்குள் வந்துவிட்டால்......(பகலோ....இரவோ சிலசமயங்களில்.!)

அந்த நேரத்தில் சமாளிப்பது உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்தது.பத்து வயதுக்குக் குறைவாக இருந்தால் ஒரு விளையாட்டாக மாற்றுவதும் சண்டை போடுவதாக காட்டிக்கொண்டு அவனின் திசையை மாற்றுவது உங்களின் திறமை.பத்துக்கு மேற்பட்ட வயதானால் சுதந்திரமாகக் கதைக்க நேரம் கொடுங்கள்.அவன் கதைக்க மறுத்தாலோ அவசரமாக வெளியே ஓடிவிட்டாலோ அவன் குழப்பத்தில் இருக்கின்றான் என்று அர்த்தம்.கூப்பிடுங்கள் விடை என்ன என்று உங்களுக்குத் தெரிந்தாலும் ஏன் என்று கேளுங்கள்.அவன் சொல்லும் பதிலில்தான் பயமோ குழப்பமோ தெரிய வரும்.மெல்ல மெல்லப் புரியவைப்பதும் தெளிவு படுத்துவதும் உங்கள் கெட்டித்தனம்.ஆனால் முக்கியம்.

வெளிநாட்டில் செய்த ஆராய்ச்சியில் பல பெற்றோரிடம் "உங்கள் குழந்தைகளுக்கு என்ன பழக்கவழக்கத்தைக் கற்றுத்தர விரும்புகிறீர்கள்" என்று கேட்கப்பட்டது."எங்களின் கூச்சமோ பயமோ அவர்களுக்கு இருக்கக்கூடாது" என்றார்கள்.செக்ஸ் என்பது கெட்ட விஷயம் என்று உங்கள் மனதில் பதிந்து போயிருப்பதால்தான் பதற்றம் அடைகிறீர்கள் நீங்கள்.முதலில் இதை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்கள் குழந்தை மனநல வைத்தியர்கள்.

ஒரு ஆங்கிலப் படத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.....

நீ...எப்பிடிப் பிறந்தாய் ?

ஒரு ஏஞ்சல் என்னைப் பட்டுத்துணியில் சுற்றி ஒரு பறவையில் அலகில் மாட்டிச்சாம்.அந்தப் பறவை என்னை அம்மா மடியில்கொண்டு வந்து போஓட்டிச்சாம் !

அப்பாடி...இவ்ளோ கஷ்டப்பட்டா நீ பிறந்தியா.என்னை அப்பாவும் அம்மாவும் சேர்ந்துதான் பெத்தாங்க !

38 comments:

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா....நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்து அசந்து போயிருக்கேன். ஆனா...அதுகப்புறம் யோசிக்கககக.....

சத்ரியன் said...

/குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிடும் எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன.ஒன்று அறிவின் ஆதிக்கம்,மற்றொன்று பெரியவர்களின் எதிர்பார்ப்பு.//

புரிகிறது. ஆனாலும், போட்டி உலகத்திற்கு அவர்களை தயார் படுத்த வேண்டியதும் பெற்றோர்களது கடமையாகவே இருக்கிறது.

’சமச்சீர்’ கல்வியை ஆதரித்தாலும், தன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கத்தானே தவிக்கிறோம்.!

Anonymous said...

///குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும்/// ம்ம்ம் உண்மை தான். உதாரணமாக பள்ளியில் படிக்கும் போது கணித பாட ஆசிரியர் கணக்கு தருவார், நாம் அதற்க்கு விடை மட்டும் எழுதினால் அது சரியாக இருந்தாலும் ஒரு வெட்டு தான் விழும். காரணம் அவர் எதிர்பார்ப்பது விடை எப்படி வந்தது (செய்கைவழி)என்று ,

ராமலக்ஷ்மி said...

பகிர்வுகள் யாவும் சுவாரஸ்யம் ஹேமா:)!

கலீல் கிப்ரான் பாட்டு மனதில் நிறுத்த வேண்டியது.

தமிழ் உதயம் said...

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். குழந்தை, குழந்தையாக வாழ முடியாததன் தர்க்கம் வளர்ந்த பிறகு தான் தெரியும். நல்ல பதிவு ஹேமா.

ராஜ நடராஜன் said...

ஜூலி என் தோழி!
வாலி இது உன் சோலி
வா இங்கே பாடு வாழி!


ஹைக்கூ:)

ராஜ நடராஜன் said...

சூப்பர் சிங்கருக்கு ஒரு தமிழ்ப்பெயர் யாராவது சொல்லுங்க பார்க்கலாம்!

குழந்தைகள் உலகம் பிளாக்குகளை விட புத்திசாலித்தனம்:)

ஜெயா said...

கற்றல் என்பது வெற்றி பெறுதலாய் மட்டுமே மாறிவிட்டது இன்றைய கால கட்டத்தில்.உண்மைதான் ஹேமா போட்டி போட்டி என்று போட்டிஉலகத்திற்கான தயார்ப்படுத்தலில் குழந்தைகள் திணறித்தான் போகிறார்கள்..

கண்டிப்பாக எல்லாப் பெற்றோரும் வாசிக்க வேண்டிய பதிவு..... பாராட்டுக்கள் ஹேமா...

சாந்தி மாரியப்பன் said...

கலீல் கிப்ரானின் சத்தியவரிகள் இந்த இடுகையை இன்னும் அலங்கரிக்குது..

Priya said...

சுவாரஸ்யமான பதிவு!

Mahan.Thamesh said...

சுவாரசியமான நல்ல பதிவு சகோ

கலா said...

ஹேமா,ஆராட்சி பிரமாதம்
நல்ல தொகுப்பு
இனிமேலும்,,,,,,,,,அதிகமாகுமே தவிரக்
குறைய வாய்பில்லை ஹேமா,அப்படியானதொரு
உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
பாவம்! பிள்ளைகள் !!

தங்கமே!சூப்பர்சிங்கர் அதை எனக்கு
அனுப்பு ஹேமஸ்......

கவி அழகன் said...

குழந்தைகள் பற்றி சிறப்பான கட்டுரை
சிந்திக்கவைக்கும் விடயம்
வாழ்த்துக்கள்
குழந்தைகளின் உலகை குழந்தைகளே ஆழட்டும்

ஸ்ரீராம். said...

ஒரு சூப்பர் சிங்கர் போட்டி உங்கள் மனதில் சிந்தனைப் புயலைக் கிளப்பி விட்டது ஹேமா. நல்ல கருத்துகள் மழையாய்ப் பொழிந்திருக்கிறீர்கள். கலீல் கிப்ரான் பிரமாதம். கடைசி வரிகளும்!

Kousalya Raj said...

ஹேமா உங்களின் இந்த பகிர்வு மிக முக்கியமான ஒன்று. வரிக்கு வரி ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு பெற்றோராய் புரிந்து கொள்ள வேண்டியவை இவை.


உங்களிடம் அனுமதி பெறாமல் காலையில் என் பஸ்ஸில் இந்த போஸ்டை ஷேர் பண்ணி விட்டேன் ஹேமா :))

ஜெய்லானி said...

நிறைய யோசிக்க வச்சிட்டீங்க :-)

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பு//

ஆம்.அழகானகுழந்தை உலகம். ந்டையும் திணித்து பாரமாக்கக்கூடாது.

Angel said...

சூப்பர் சிங்கர் = அருமை பாடகர் )
கஷ்டப்பட்டு மொழிமாற்றம் செஞ்சுரிக்கேன் !!!!!!!!!!!!!!!!!!
குழந்தை வளர்ப்பு பற்றி அழகா சொல்லியிருக்கீங்க ஹேமா !!!!
கலீல் ஜிப்ரான் வரிகள் அற்புதமான மேற்கோள் .

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள் .

கீதமஞ்சரி said...

குழந்தைகளைப் பற்றிய நல்லதொரு பதிவு. போட்டி நிறைந்த உலகில் குழந்தைகளைத் தயார்படுத்துகிறோம் என்று பல பெற்றோர்கள் தம் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தையும் அவர்களுடைய எதிர்காலத்தையுமே பாழடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும் இப்பதிவை. பாராட்டுகள் ஹேமா.

ரிஷபன் said...

அழகான சிந்தனை ஓட்டம்.
அப்படியே ஆமோதிக்கிறபடி தர்க்க ரீதியான பகிர்வு.

காட்டான் said...

அடடா அருமையான ஒரு பதிவு ஊரில் நான் படிக்கும்போது(ஏன் சிரிக்கிறீங்க காட்டான் பள்ளிகூடம் போனதை என்றோ ஒரு நாள் நிரூபிப்பான்..?) ஒப்படை வழிக்கல்வி  ஒன்று கொண்டு வந்தார்கள் அடுத்த வருடமே அதை எடுத்து விட்டார்கள் அரசியல் கல்வியில் எப்போது இல்லாமல் போகுமோ அப்போதுதான் கல்வி மாற்றமடையும்..

அப்புரம் என்ர மூத்த காட்டான் சொல்கிறான் தான் அம்மாவின் வகுத்துக்குள்ள இருந்துதான் வந்தேன்கிறான் இது மட்டுமா..? வேண்டாம் சகோதரியின் கத்திரிக்கோளில் இந்த வசனங்கள் போய்விடும்.. அதை அவன் சொல்லும் போது அவனுடைய வயது ஐந்து..

ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால்
இங்கு கல்வியை அப்படி சொல்லித்தருகிரார்கள்..
பாரடா காட்டானும் கவிதைகளை இரசிக்கின்றான் ..!? என்னது உப்பு மட சந்திக்கு வத்திட்டேனா..!? அதுதானே பார்த்தேன் நாலு வரியில் முடிக்கிறத சகோதரி நாப்பது வரிக்கு மேல முடிச்சிருக்கேன்னு.. 

காட்டான் குழய போட்டுட்டான்...

அப்பாதுரை said...

'கல்வி தோற்றுப் போய் வெற்றி மட்டுமே இலக்காகிறது' - நிறைய சிந்திக்க வைத்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இது உண்மையென்றாலும் எந்த அளவுக்கு கல்வியின் வளம் குறைந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது சற்று சங்கடமாக இருக்கிறது - தோல்விக்கு நாமும் காரணமாகி விட்டோமே என்று.

படுக்கையறைப் பிரவேசம் சற்று கவனமாகக் கையாள வேண்டியதே. நிறைய உளவியல் ஆலோசனைகள் கிடைக்கின்றன என்றாலும் உண்மையைப் பக்குவமாகச் சொல்லிவிடுவதே நல்லது என்று படுகிறது.

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுகள் சுவாரஸ்யம்.
எல்லாப் பெற்றோரும் வாசிக்க வேண்டிய பதிவு..... பாராட்டுக்கள் ஹேமா.

Riyas said...

மிக அருமையான கட்டுரை ஹேமா அக்கா பதிவிட்டவுடன் இதைப்படித்தாலும் இப்போதுதான் பின்னூட்டமிடுகிறேன்..

மாய உலகம் said...

//ஒன்று அறிவின் ஆதிக்கம்,மற்றொன்று பெரியவர்களின் எதிர்பார்ப்பு.

உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றும் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும்,பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!அவர்களுக்கென்று சிந்தனைகள்
இருக்கவே இருக்கின்றன”//


இது குழந்தைகளைப்பற்றியது தான் ஆனால் குழந்தைகளுக்கான பாடமல்ல ...குழந்தைகளின் பெற்றோர்,ஆசிரியர்கள் & குழந்தைகளை கையாளும் ஒவ்வொரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய மன இயல் பாடம் கற்றுக்கொள்வோம்...

பயனுள்ள பகிர்வு... பாராட்டுக்கள்

உலக சினிமா ரசிகன் said...

பதிவுலகில் குழந்தைகள் நலம் பேணும் மிக முக்கியமான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரி.

மாய உலகம் said...

//ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?.நீல் பதில் அளிக்கிறார் அது எனக்கே தெரியாது ஜிம்.//

குழந்தைகளிடம் பொய் வேண்டாம் என நேரடியாக உணர்த்தி...குழந்தைகளோடு ஒன்றி பகிருங்கள் என்பதை மறைமுகமாக உணர்த்திய பதிவு ...பாராட்டிக்கொண்டேயிருக்கலாம்

Karthick Chidambaram said...

// angelin said...

சூப்பர் சிங்கர் = அருமை பாடகர் )// நிரம்ப கரெக்ட்


/குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிடும் எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன.ஒன்று அறிவின் ஆதிக்கம்,மற்றொன்று பெரியவர்களின் எதிர்பார்ப்பு.//

ஹேமா...நல்ல பதிவு.

தனிமரம் said...

இப்படியான நிகழ்ச்சிகள் சிறுவர்கள் மனதில் வன்மத்தை விதைக்கின்றது தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் அவர்கள் அழும்போது இதுவும் ஒரு கொடுமை தோழி குழந்தைகள் உலகம் கனவுகள் நிறைந்தது அவர்களிடம் என்ஜினியர் டாக்டர் என்று நம் கல்வி தினிக்கும் துயரம் சொல்லி முடியாது!

மோகன்ஜி said...

சாரி ஹேமா! ரோம்ப லேட்டு! குழந்தைகள் உலகம் தனி உலகம். அது மெல்ல மெல்ல விரிவடையவேண்டும்.. மொட்டு தானாகவே இதழ் விரிப்பது போல். அவர்களின் குழப்பங்களை அணுகுவத்தில் நிறையவே மனோதத்துவம் தேவைப் படுகிறது. யோசிக்க வைத பதிவு

Swamy said...
This comment has been removed by the author.
லெமூரியன்... said...

எப்டி இருக்கீங்க ஹேமா??
:) :)
நல்ல விஷயம் பத்தி எழுதியிருக்கீங்க...
குழந்தைகள ஒழுங்கா வளர்க்கிறோம் என்ற போர்வையில்
குழந்தைத் தனம் செய்வது பெரியவர்களே :) :) :)

குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவதே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப் பெரிய
சந்தோசம்...

ஹேமா said...

தவறு...வாங்க வாங்க.ரதிகூட அடிக்கடி பேசுங்க.எல்லாத்துக்கும் கருத்துச்சொல்லிடலாம்.அவங்க இந்தப் பக்கம் வாறதில்ல.
இப்பிடியாச்சும் வம்புக்கு இழுக்கலாமேன்னுதான்....!

சத்ரியா...நம்மவர்களிடம் சில மனநிலைகளை மாற்றமுடியாது !

கந்தசாமி...வாங்க.கணக்கு செய்யும்போது கட்டாயம் செய்கைவழி மனசில படிஞ்சாத்தான் எந்தக் கணக்கையும் கொப்பியடிக்காம நீங்களாவே செய்யமுடியும்.அவர் நல்ல வாத்தியார் !

ராமலஷ்மி அக்கா...வாங்க சந்தோஷம்.கலீல் கிப்ரான் அவர்களின் பாடல்கள் வாழ்வியலை விளங்கிறமாதிரிச் சொல்லுது !

தமிழ்...எங்கே குழந்தைகளின் மூளையை தங்கள் பணத்தோடு எடைபோடுவதாகவே நான் நினைக்கிறேன் !

நடா...எல்லாரும் பாருங்க நடா ஹைக்கூ சொல்லிட்டார் அதுவும் இந்தப் பதிவுக்கு."சூப்பர் சிங்கர்"ன்னா தமிழ்ல "அருமைப் பாடகராம்" நடா.ஏஞ்சல் சொல்றாங்க.
சரியா?பிளாக்குகளைவிட குழந்தைகள் உலகம் புத்திசாலித்தனமா இருக்கும்.
நானும் ரசிச்சிருக்கேன் !

ஜெயா...சுகம்.சுகம்தானே.அடிக்கடி காணமுடிவதில்லை உங்களை.சந்தோஷமா இருங்கோ !

ரத்னவேல் ஐயா...நன்றியும் சந்தோஷமும் !

சாரல்...எனக்கும் மிகவும் பிடிச்சிருக்கு கலீல் கிப்ரானின் பாடல் !

ப்ரியா...வாங்க தோழி.நன்றி !

தமேஷ்...சுவாரஸ்யம் என்பதைவிட இந்தப் பதிவைப் பெற்றோர்கள் உணர்ந்து குழந்தைகளின் உணர்வுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள் !

கலா...உண்மைதான் எங்கள் பொருளாதாரம் பிள்ளைகளின் சந்தோஷத்தைத் தடைபோடுகிறது.நான் அனுப்பி வைத்தேன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பு.
பார்த்திருப்பீர்கள் !

கவி அழகன்..."குழந்தைகளின் உலகை குழந்தைகளே ஆழட்டும்."இப்ப சொன்னது சரி அழகரே.இருக்கிறது வெளிநாடு.
கல்யாணம் செய்தபிறகு அந்தப் பிள்ளைகளைப் படுத்துற பாட்டை நானெல்லோ இங்க பாத்துக்கொண்டிருக்கிறன்.மூச்சு விடக்கூட நேரம்குடுக்காமா இருக்கிற மேலதிக வகுப்புகளுக்கெல்லாம் அனுப்புறீங்க !

ஸ்ரீராம்...நன்றி நன்றி.எனக்கும் மிகவும் பிடித்த பதிவாயிருக்கிறது இது !

கௌசி...பஸ்ஸில போயிடிச்சா என் பதிவு.சந்தோஷம் தோழி !

ஜெய்...உங்க பதிவுகளை விடவா......இந்தப் பதிவு யோசிக்க வைக்குது.சிரிப்புத்தான் !


இராஜராஜேஸ்வரி...இன்றைய குழந்தைகள் உண்மையில் பாவம்.சாப்பாட்டைத் திணிக்கிறார்களோ என்னமோ அடுத்த குழந்தைகளோடு போட்டி போடுவதைத் திணிக்கிறார்கள்.சூப்பர் சிங்கர்ல மட்டுமல்ல.தின வாழ்விலும்கூட !

ஏஞ்சல்...சூப்பரோ சூப்பர் மொழிபெயர்ப்பு.அசத்திட்டீங்க நடாவை !

காஞ்சனா அன்ரி...சந்தோஷம் உங்க பாராட்டுக்கு !

ஹேமா said...

கீதா...பெற்றவர்கள் குழந்தைகளில் அன்பாக இருந்தாலும் தங்கள் உணர்வுக்கு மட்டுமே மதிப்பளித்து குழந்தைகளிடம் வயதிற்கு மீறித் திணிக்கிறார்கள் மூளைக்குள் கண்டதையும் !

ரிஷபன்...நன்றி.ஆமோதித்தாலும் செயல்படுகிறார்கள் இல்லயே பெற்றவர்கள் !

காட்டான்...குழையோட சேர்த்துக் கொஞ்சம் புத்தியையும்தானே போட்டிருக்கிறியள்.இங்கே படிப்புமுறையே வேறு.அந்தந்த வயதில் வாழ்வின் பொறுப்பை அப்படியே படிப்போடு சேர்த்தே கொண்டுபோகிறார்கள்.நாங்கள் எத்தனை வயதுவரை அப்பா அம்மாவுக்குக் கரைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தோம்.
இங்கு அப்படியா நிலமை !

அப்பாஜி...சில சமயங்களில் குழந்தைகள் பெற்றவர்களிடம் பொம்மைபோலப் படும்பாடு சொல்லி மாளாது.என் சிநேகிதிகளின் குழந்தைகளைப் பார்க்கிறேன்.
பாடசாலை,வீடு வர ஆங்கில ஆசிரியர் வருவார்.கணக்கு ஜேர்மன் படிக்க ஜேர்மன் ஆசிரியரிடம் போகவேண்டும்.நடு நாட்களில் தமிழ்,டான்ஸ்,புல்லாங்குழல்,நீச்சல்,டெனிஸ்....ஐயோ...முடியல எனக்கே !

குமார்...வாங்க சந்தோஷம்.
யாராவது ஒருவர் மட்டும் பதிந்தாலே இந்தப் பதிவின் வெற்றி !

ரியாஸ்...கல்யாணத்துக்கு முன்னமே கொஞ்சம் வாழ்வியல் தெரிஞ்சு வைக்கிறது நல்லதுதானே !

மாய உலகம்...உண்மைதான் இது குழந்தைகள் பெயரில் பெரியவர்களுக்கான பதிவு.குழந்தைகளைப் பொய் சொல்லப் பழக்குவதே நாங்கள்தானே.எங்கே எந்தப் பெற்றவர்களாவது இல்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம் !

கார்த்திக்...இருந்திட்டு எங்கேயோ இருந்து வந்திட்டுப் போறீங்க.
சுகம்தானே.சரித்திரத் தொடர் அடுத்ததை எங்கே காணோம் !

நேசன்...சரியாச் சொன்னீங்க.பெற்றவர்கள் தங்கள் கனவை குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.அதுவும் பணம் கூடிவிட்டால் திணிப்பும் கூடும் !

மோகண்ணா...இப்பாச்சும் வந்தீங்களே.சந்தோஷம் !

சுவாமி...வணக்கம் வாங்க.என் பதிவுகளை நிறைய நாட்கள் படித்துவந்தாலும் இன்றாவது சொன்னீர்களே சந்தோஷம்.ஆனலும் ஏதோ ஒரு சோகம் வரிகளில்.
யாரைத்தான் விடுகிறது இந்தச் சோகம்.எங்களுக்குள்தான் எல்லாமே.தொடர்ந்தும் என் பதிவுகளோடு இணைந்திருங்கள்.
சந்திக்கலாம் !

லெமூரியன்...சுகம் சுகம் சுகம்.நீங்களும்தானே.குழந்தைகளைச் சின்ன வயதிலேயே பெரியவர்களாக்குவது நாங்கள்தான்.பிறகு பெருங்கதை கதைக்கிறார்கள்.பிஞ்சிலேயே பழுத்திடிச்சு.குழந்தைகள்போலவா இருக்கு செய்கைகள் என்கிறோம்.தப்பு முழுதும் எங்களிடம்தான் !

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

அருமையான பகிர்வு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP