Wednesday, November 16, 2011

மண்வாசனை...கோண்டாவில்.

என்தேசம்.என் ஊர்.
மண் வாசனை அந்தப் புழுதியைச் நாசிக்குள் நுகர்ந்தபடி எழுத நினைக்கிறேன்.கண்ணுக்குக் குளிர்ச்சியாக கிராமுமல்லாமல் நகரமும் அல்லாத ஊர் என் கோண்டாவில்.தோட்டங்கள் சூழ குளிர்ந்த காற்றோடு எப்போதும் கலகலவென்றிருக்கும் அன்று.

காலைப்பொழுது விடிகை மிக ரம்யம்.கோயில் மணியோசை பரவசமாக்க பறவைகளின் காலைக் களிப்பு ஆனந்திக்கும் எங்களையும் சேர்த்து.பறப்பின் படபடப்பும் குஞ்சுக்கு இரை தேடிக் கொடுத்தலும் காலைக்காட்சியின் ஒரு பகுதி.அதிகாலை 4 மணிக்கே கிடுகு வண்டில்களின் டக்டக் சத்தமும் அதை இழுத்துச் செல்லும் காளைமாடுகளின் கழுத்து மணி ஜல்ஜல் ஒசையும் நித்திரையைக் கலைத்தாலும் அந்தத் தாளக்கட்டு ரசனையோடு இசையும்.

இதைவிட மற்றைய ஊர்களில் கேட்கமுடியாத ஒரு விஷேசம் என் ஊரில்.அதாவது நாதஸ்வர தவில் கலைஞர்கள் கூடுதலாக வாழும் இடம் எங்களூர்.அவர்களின் காலைப் பயிற்சியும் ஒரு காலைக்காட்சியாகியிருக்கும்.அதிகாலை 4-5 மணிக்கே தங்கள் கலைகளைப் பயிலும் மாணவர்கள் சாதகம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள்.ஆரம்பப் பயிற்சியாளர்கள் ஸ்வர சரளி வரிசை தொடக்கம் அலங்காரம் கீதம் வரை தாளம் போட்டுச் சத்தமாகப் பாடுவார்கள்.குரல் வளம் தெளிவாகும் என்பார்கள் இதனால்.

நாதஸ்வரப் பயிற்சியாளர்கள் நாதஸ்வரத்தின் அடிப்பகுதித் துவாரத்தைத் துணியால் அடைத்துவிட்டு கீழ் சுருதியில் வாசித்துப் பழகுவார்கள்.தவில் பழகுபவர்கள் தவில்போன்ற அமைப்பிலுள்ள கட்டையில் கைக்கிளி என்று சொல்லப்படும் சிறு கைக்கட்டையால் அடித்துப் பழகுவார்கள்.அதில தொம் தொம் தகா தொம் தொம் திகுதகா என்கிற சொல் டக் டக் என்றே கேட்கும்.மார்கழி மாதக் குளிரில் எழும்பியிருந்து பழகும் இவர்களைவிட நித்திரை கலைந்து கிடப்பவர்களுக்கே கோபம் கோபமாக வரும்.இதனாலேயே இவர்களுக்கென்று தனியாகச் சின்னக் குடில் செய்து கொடுத்திருப்பார்கள்.தூரத்து ஊர்களிலிருந்துகூட பயிற்சிக்காகவே இங்கு வந்து தங்கியிருப்பார்கள் சிலர்.மாலைக்காட்சியிலும் இவர்களது நிகழ்வு தொடரும்.

பூவோடு கூடிய நாருக்கும் மணமுண்டாம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் எனது பக்கத்துஊர் இணுவில்.இங்கேதான் எம் பாரம்பரியக் கலை கலாசாரங்கள் நிறைந்திருக்கின்றன.இணுவிலின் பக்கம் என்பதாலோ என்னவோ கோண்டாவிலும் கலைக்கூடம்தான்.நானும் அதே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.ஆகவே எனக்குத் தெரிந்தமட்டில அகில இலங்கைப்புகழ் நாதஸ்வர தவில் கலைஞர்கள் இங்குதான் 3-4 தலைமுறையாக வாழ்வதாக அறிகிறேன்.காலம் சென்ற வி.ஏ.பாலகிருஷ்ணன் அவர்களும் இங்குதான் வாழ்ந்தார்.இன்னும் புகழ்பெற்ற வரிசையில் நாதஸ்வரத்தில் வெள்ளிவிழாக்கண்ட வி.கே கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்களும்.தற்போது கானமூர்த்தி அவர்கள் காலம் சென்றுவிட்டார்.இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நல்ல தவில் மிருதங்க வயலின் வித்வான்களும் இங்கு இருக்கிறார்கள்.இருந்தார்கள்.எம் வாழ்வின் அவலத்தான் இந்தத் தொழிலிலும் தாக்கம் இருக்கிறது.

இவர்களைவிட ஆரூடம் சொல்பவர்கள்,சமய சிவாச்சாரியர்கள்,கோபுர சிற்பவேலை,நகைகள் செய்பவர்கள்,மரச் சிற்பங்கள் தளபாடங்கள் செய்பவர்கள்,மூலிகை மருத்துவர்கள் என்று நிறைவான அறிஞர்கள் கலைஞர்கள் நிறைந்த ஊர் எனது ஊர்.

என் ஊரின் மண் சிவப்பு நிறமாக இருக்கும்.இதுவும் இணுவில் மண்ணின் பாதியே என்றுதான் சொல்லவேண்டும்.கோண்டாவிலின் முழுப்பகுதியும் சிவப்பு மண் இல்லை.இணுவில் பகுதியைத் தொடும் எல்லைப்பகுதியின் கொஞ்சத் தூரம் மட்டுமே செம்மண்ணாக இருக்கும்.ஒரு நாளைக்கு 2-3 தரம் தலை கழுவிக் குளிக்க வைத்து அம்மாவிடம் அடி வாங்கிய நினவுகள் நிறையவே இந்தச் செம்பாட்டு மண்ணால்.கோண்டாவில் தமிழ்க்கலவன் பாடசாலை.

ஆனால் இதில் பயிர்களின் செழிப்பும் வளர்ச்சியும் அதிகம்.முக்கியமாக மிளகாய் புகையிலை.மிள்காய் புகையிலைக்குக் கோண்டாவில் பெயர்பெற்ற இடமாகும்.
புகையிலையைக் கருவாகக்கொண்டு நிறையச் சுருட்டு ஆலைகள் அதை நடாத்தும் முதலாளிகள் தொழிலாளர் என்று பெரும் பணக்காரரும் இங்கு.நான் அன்று இருந்தபோது வி.பி.ஆர் என்கிற பீடி ஆலை பெயர்பெற்றதாக இருந்தது.

இங்குள்ள சுருட்டு முதலாளிகள் கொழும்பு மலைநாட்ட்டுப் பகுதிகளில் தங்கள் வியாபாரத்தை நன்கு நடாத்தி வந்தார்கள்.1983 யூலைக் கலவரத்தின் பின் இதற்கும் கொஞ்சம் பின்னடைவே என்பார்கள்.நானும் இந்தத் தோட்டங்களுக்குப் மரக்கறி வாங்கப் போயிருக்கிறேன்.வரப்புப் பகுதியில் முளைத்திருக்கும் பலகீரையை எங்களையே பிடுங்கிப் போகச் சொல்வார்கள்.குண்டுக் குண்டாய் நிலம் முட்டிக் காய்த்திருக்கும் கத்தரிக்காய்.வான் பார்க்க நீளம் நீளமாய் நீட்டிமுளைத்திருக்கும் வெண்டைக்காய்.பொலிந்து தொங்கும் பயற்றங்காய்.பாம்புக்குக் கல் கட்டித் தொங்கவிட்டதுபோல புடலங்காய்.ஊடலில் புகுந்திருக்கும் முளைக்கீரை பொன்னாங்காணி என்று தனித் தனிப்பாத்தியில் பசுமையாய் குளிர்ச்சி தரும்.பருப்புக் கலந்து சமைக்கும் பலகீரை எனக்கு மிகவும் பிடிக்கும்.முருங்கை மரமில்லா வீடுகளே இல்லை என்பேன் அப்போ.வாழை மரங்கள் குட்டிகளோடு தென்னை பப்பா எலுமிச்சை என் வீட்டுத்தோட்டமும் வெருளியும் இருப்பார்.அது அந்தக் காலமாகிவிட்டது.நினைவுகள் மட்டும் காலமாகாமல்.

அடுத்து இனிப்பது எங்களூர்க் கிணற்றுத் தண்ணீர்.பக்கத்து ஊர்களில் இருந்துகூட வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள்.விரைவாக பருப்போ அரி்சியோ வெந்துவிடும் என்பார்கள்.அதுவும் மண்பாத்திரத்தில் சமைத்தால் இன்னும் சுவை என்பார்கள்.

இன்னும் கோண்டாவில் உப்புமடச்சந்தி சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (கே.கே.எஸ்) காங்கேசந்துறை வீதியில் சக்தி வாய்ந்த தெய்வமாகும்.வருடத்தில் ஒரு தரம் 10 நாடகள் திருவிழாக் கோலம் காணும் இந்தக்கோவில் ஊரும்தான்.கோண்டவிலை ஒட்டி நந்தாவில் அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது இங்கு திருவிழா ஆடம்பரமும் அட்டகாசமும்.அழகான கேணியும் ஒன்று இங்கு தாமரை மிதக்க.திருவிழாக்கள் கலகலவென்று தெருக்களும்,வீடும் சுத்தமாக இருந்தாலும் அப்பா அம்மாவுக்கு எங்களால் கஸ்டமான நாட்களாகவே இருக்கும்.பாடசாலை போக அடம்பிடிப்போம்.ஐஸ்கிறீம்,கச்சான்,பலூன்,காப்பு,மாலை ஏதோவொன்றுக்கு எப்போதும் அடிபோடுட்டு அடிவாங்காத நாள் இருக்காது.கோண்டாவில் புகையிரத வீதியிலும் ஒரு காளிகோவில்.மீண்டும் வருமா மறைந்த இழந்த அந்த நாட்கள்.கண்கள் மட்டுமே கலங்கிறது தூசே இல்லாத சுத்தமான நாட்டிலும்.

நந்தாவில் என்று சொலப்படுகிற இடம் கோண்டாவிலின் நடுப்பகுதியை பள்ளம் கொண்டதாய் அலங்கரிக்கிறது.நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிறைந்த தோப்புப் பகுதி.இங்கு மரமேறும் சிலரது வீடுகள் தவிர வீடுகள் இல்லை.காதலர்கள் சந்திக்கும் மறைவான பூங்காபோல.சிறுவர்களின் பந்தாடலுக்கு பரந்த பெருவெளி.இளைஞர்களின் சீட்டாட்டம் கள்ளுக் குடியலின் ஆரம்பப் பயிற்சியும் இங்குதான்.பாடசாலை போகாமல் படம் பார்க்கப்போக புத்தங்களைப் பாதுகாக்கும் இந்த நந்தாவில்.

என் அண்ணா இன்னொரு சொந்தமான அவர் வயதுள்ள சிநேகிதரோடு படம் பார்க்கப்போய் காளிகோவில் ஐயா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சொல்லி,தவில் வாரினாலே அந்தப் படத்தின் பாட்டு வரிகளைச் சொல்லிச் சொல்லியே அடி வாங்கினதும் ஞாபகம் வருது.

இங்கு மழைக்காலங்களில் வெள்ளம் ஒரு ஆளை முழுதாக மூடுமளவிற்கு முட்டி வழியும்.சிலசமயங்களில் நீர் நிரம்பி பெரும் தெருவைத் தாண்டும்.மழைநீர் நிரம்பும் காலங்களில் சிடைச்சித் தாவரம் நிறைய வளர்ந்திருக்கும்.தவளையின் இசையோ இரவு இரவாகப் பெரும் கச்சேரிதான்.மீன்கள்,வால்பேத்தைகள் போத்தல்களில் பிடித்து வைத்துக்கொண்டு மீன் வளர்க்கிறோம் என்போம்.பனை மரத்தைப் பாதியாகப் பிளந்து வள்ளம் போலாக்கி தூண்டில் வைத்து மீனும் பிடிப்பார்கள்.

நான் பாடசாலைக்கு நடந்தே போய் வந்திருக்கிறேன்.ஓ...மழைக்காலம் அது பெரிய சந்தோஷம்.தண்ணீருக்கு கல் எறிந்து விளையாடி வீட்டுக்குப் பிந்தியே போய் வெள்ளைச்சட்டை நனைந்து அடி வாங்கி வலிப்பது எங்களுக்குத்தானே தண்ணீருக்கு இல்லையே.தூணில் கட்டி வச்சு கண்ணுக்கு மிளகாய் பூசப்பட்ட காலமும் இருக்கு இந்த நந்தாவில் வெள்ளத்தால்.காலில் சிரங்கு குரங்காய் மாறி....பிறகென்ன !
சிவகுமாரன்.

கோண்டாவில் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று பிரித்தே சொல்கிறார்கள்.எனது ஊர் கோண்டாவில் மேற்கு.கிழக்குக் கோண்டாவில் பலாலி போகும் பெரும் தெருவில் தின்னவேலியோடு சேர்ந்தது.அங்கு முக்கியமாக பல்தொழில்நுட்பக் கல்லூரியும்,பல்கலைக் கழகமும் இருக்கிறது.சிறப்பாக எங்கள் சிவமுமாரன் பிறந்து வளர்ந்த ஊர்.ஒரு நாள் தனியாக யாழ்ப்பாணம் போய் பாலாலி கோண்டாவில் பேரூந்தில் ஏறி என் கோண்டாவிலைக் காணவில்லையென்று தெருவில் நின்று அழுதது ஞாபகம் வகிறது.

எங்களூரில் பனை,தென்னை,மா,பலா,புளி,நாவல்,நெல்லி மற்றும் பூக்கள் பொலியும் மரங்களுக்குக் குறவேயில்லை.என் தங்கை பாடசாலை போகும் வழியில் நாவற்பழக்காலங்களில் நாவல் மரத்தடியில் காலம் கழித்துவிட்டு வீட்டுக்குப் பிந்தியே வருவாள்.அம்மா கேட்டால் ஏதாவது பொய் சொல்லுவாள்.வாய் மட்டும் நாவலாய் மாறியிருக்கும்.பிறகென்ன மாட்டிக்கொண்டு நல்ல அடிதான்.நாவல்மரம்,புளியமரம் சுற்றுவதால் அடிக்கடி படிப்பைக் குழப்பிகொள்வாள்.

எங்களூரில் இந்து,கிறீஸ்தவ,முஸ்லிம் மக்களென ஒற்றுமையாய் சந்தோஷமாய்த்தான் இருந்தோம்.இப்போ நினைத்தாலும் மனம் ஏங்குகிறது.இன்று யாரோ எவரெவரோ எங்கெங்கோ.என் அழகு கலைந்த வீட்டு முற்றம் எனக்காய் காத்திருக்குமோ.துளசிச்செடி ஒற்றைக்கோட்டுக் கோலத்துக்காய் கருகாமல் இருக்குமோ.சாகுமுன் என் ஊரைப் பழைய அழகோடு காண்பேனா.திரும்பவும் எல்லோரையும் காண்பேனா.என் இறப்பாவது என் மண்ணில் நடக்குமா.இப்போதைக்கு இல்லை என்பதே பதிலானாலும் நம்பிக்கையோடு நடப்போம்.எதிர்காலத்திற்காவது பாதை வெட்டி வழி சமைப்போம் !

9 வருடங்களுக்கு முன் வானொலிக்காக எழுதினது.மாற்றம் செய்யாமல் அப்படியே !

27 comments:

நிலாமதி said...

இனிக்கும் ஊர் நினைவுகள் அழகாய் ...சொல்லபட்டு இருக்கிறது பாராட்டுக்கள்

ஸ்ரீராம். said...

மனத்தைக் கனக்கச் செய்த பதிவு. தாய் மண்ணில் பழைய நிலையில் அந்த வீட்டில் வசிக்கும் வாய்ப்பு வருமா என்ற எண்ணமே மனதை கனக்கச் செய்கிறது. நீங்களும் இசைக் குடும்பம் என்பதால் நாதஸ்வரம் தவில் பயிற்சி பற்றியெல்லாம் சொல்லும்போது நுட்பமாகச் சொல்கிறீர்கள்.

Anonymous said...

ஊர் பற்றிய நினைவுகளை நினைக்கும் போதே கண்கள் கலங்குகிறது.. எழுதும் போது .....!

தமிழ் உதயம் said...

வாழ்ந்த மண குறித்து அழகாக. ஆழமாக - ஈர்க்கும் நடையுடன் சொன்னீர்கள். வாசித்து முடித்த போது - பதிவு புலம் பெயர்ந்த அனைவரின் ஒட்டுமொத்த பதிவாக, ஆசையாகப்பட்டது.

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கையோடு நடப்போம்.எதிர்காலத்திற்காவது பாதை வெட்டி வழி சமைப்போம் !

நம்பிக்கை தானே வாழ்க்கை!

ஆழ்ந்த பகிர்வுடன்
மண்வாசனை மணக்கிறது.
மனம் கனக்கிறது.

Angel said...

//.எதிர்காலத்திற்காவது பாதை வெட்டி வழி சமைப்போம் !//
நம்பிக்கைதான் வாழ்க்கை எத்தனை பேரின் நம்பிக்கை நிச்சயம்அது வீணாகாது தோழி.நல்லதே நடக்கும்.


மண் வாசனை ..பதிவு என் மனதை கனக்க வைத்து விட்டதுஉறங்கிக்கொண்டிருந்த பல நினைவுகளை கிளறி விட்டது .
கோண்டாவில் மிகவும் அழகிய இடம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .

Anonymous said...

எத்தனை வருடங்கள் ஆனாலும் சொந்த ஊர் சொந்த ஊர் தான் ஹேமா...

9 வருடங்களுக்கு முன் எழுதினாலும் இன்றும் அது மாறாது...வாசிக்கையில் முதலில் சுகமாயிருந்து...பிறகு மனம் கனக்க வைக்கிறீர்கள்...

//சாகுமுன் என் ஊரைப் பழைய அழகோடு காண்பேனா.திரும்பவும் எல்லோரையும் காண்பேனா.என் இறப்பாவது என் மண்ணில் நடக்குமா//

புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் தோன்றும் கேள்விகள்... ஆசைகள்... கனவுகள்...கோடி...

அவற்றில் எல்லாம் மேல் நிற்பது இந்த மூன்றும் தான்...

கூடிய விரைவில் உங்கள் மண்ணை..மண்ணின் மைந்தர்களை...நீங்கள் காண வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ஹேமா...

காட்டான் said...

வணக்கம் சகோதரி..
அருமையாய் சொல்லி இருக்கீங்க உங்கள் ஊர் பற்றி... இதில் நீங்கள் செய்த அத்தனை செயலையும் நானும் செய்திருக்கிறேன் இன்னும் கொஞ்சம் கூட... ஹி ஹி ஆனா அம்மாவிடம் அடிவங்க மாட்டமே..!! ஏன்னா அவங்க அடிக்க முன்னமே அம்மாவை கையோடு சேர்த்து கட்டி பிடிச்சிடுவோம் டேய் அடிக்கமாட்டேண்டா ஆள விடடான்னு சொல்லும்வரை கட்டிப்பிடி நிக்காது.. என்னை பார்த்து பின்னர் என்ர தம்பியும் இந்த கட்டி பிடி வைத்தியம் செய்தது தனி கதை..

ஊர் நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீங்க அதுவும் எங்கள் கோவில் தேர் திருவிழாவிற்கு வரும் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியை மறக்க முடியுமா?? நீங்கள் கொடுத்து வைச்சவர் இல்லைன்னா இப்படி ஒரு இசை குடும்பத்தில் பிறந்திருக்க முடியுமா? அருமை சகோதரி... வாழ்த்துக்கள்!!

குறையொன்றுமில்லை. said...

உங்க ஊர் நினைவுகளை எங்களையும் ரசிக்க வச்சிருக்கீங்க நல்லா சொல்லி இருக்கீங்க.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பதிவு. ஒன்பது வருடங்களுக்குப் பின்னும் காத்திருப்பில் மாற்றமில்லை. நம்பிக்கை வைப்போம்.

Unknown said...

சொந்த ஊரே சொர்க பூமிதான்
அதை என்றும் மறக்க இயலாது
உங்கள் ஊர் பற்றி மிக அழகாக
எழுதியுள்ளீர்

புலவர் சா இராமாநுசம்

தனிமரம் said...

ஊர் நினைவுகளையும் குறும்புகளையும் ஞாபக நேர்கோட்டில் பதியவிட்டு மனதில் கனதியைத் தந்துவிட்ட பதிவு ஊர் ஞாபகங்கள் எத்தனை வருடம் போனாலும் மனதிற்கு இனிமையே மீள் வாசிப்பு போல் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியின் இசைக்கச்சேரி கேட்ட எங்கள் ஊர் ஞாபகமும் கோண்டாவில் புகையிலை விற்பனையோடு எங்கள் குடும்பத்து இருந்த உறவும் ஞாபகத்தில் வந்து போகின்றது .
நீங்கள் சொல்லும் பகுதி எல்லாம் நானும் பார்ததால் ஊரின் சிறப்பை வழிமொழிகின்றேன்!

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரி .தங்களை மழலைகள் உலகமே மகத்தானது என்னும் சிறப்புத் தொடரைத்
தொடர மிகவும் பணிவன்போடு அழைக்கின்றேன் .உங்கள் ஆக்கத்தைக் காண ஆவலுடன் .மிக்க நன்றி
இன்றைய உங்கள் ஆக்கத்திற்கு என் பாராட்டுகள் .
http://rupika-rupika.blogspot.com/2011/11/blog-post_16.html#comment-form

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்பயிர், இசைப்பயிர் எல்லாம் செழித்த பூமி!உங்கள் பூமி!
கோண்டாவில் பாலகிருஸ்ணன், நாதசுர இசை ,அவர் மறைந்து இத்தனை
வருடமாகியும் காதில் ஒலிக்கிறது.
தங்கள் குடும்பத்தில் இப்போது எவருமே இக்கலையைத் தொடரவில்லையா?

விச்சு said...

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?

Unknown said...

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!
நீங்கள் சொன்னதுபோல இணுவில், கோண்டாவில் நமது பாரம்பரியங்களை அடையாளங்களைத் தொலைத்துவிடாத கிராமங்கள்!
அதுவும் மார்கழிமாத காலைப் பொழுதுகள் மிக ரம்யமானவை!

துபாய் ராஜா said...

ஆழமான, அழுத்தமான பகிர்வு. நமது எல்லோர் மனதுமே சொந்த ஊர் பற்றிய சோக உணர்வுகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்றன.
தங்கள் பதிவைப் படித்ததும் தாய் தின்ற மண்ணே... பாடல்தான் நினைவிற்கு வந்தது.

சத்ரியன் said...

//ம். ஊர் நினைவு.

ஒன்பது வருடங்கள் கழிந்தும் மாற்ற ஒரு சொல்லும் உடன்படாத நிலையே அங்கு நிலவுகிறது என்பதை இறுதி வரியில் உணர்த்தியிருப்பதே,

தாய்மண் மீதான தனியாத தாகத்தைச் சொல்லிப் போகிறது.

’வால்பேத்தைகள்’ என்றால் ’தலைப்பிரட்டை’யா?

ஜெயா said...

ஹேமா கோண்டாவில் மண்வாசனையை நுகர்ந்த படியே பதிவை எழுதி இருக்கின்றது புரிகின்றது.புலம்பெயர் வாழ்வின் காலங்கள் அதிகரித்துக்கொண்டு போகப் போக எங்கள் ஊர் எங்கள் வீடு அங்கே நாம் வாழ்ந்தவாழ்வு என்று ஊர் நினைவுகளும் எம்மை அதிகமாக வாட்டத்தான் செய்கின்றது.

உங்கள் மண்வாசனையை வாசிக்கும் போது எங்கள் மண்வாசனையையும் நுகர்ந்தேன்........

ம.தி.சுதா said...

அக்கா நினைவுகளை மீட்டுவதில் ஒரு சுகம் இருந்தாலும் அது ஆழ்மனதில் முடிவில் ஒரு வலி தருமே அதை ஜீரணிக்க முடியாது...

கீதமஞ்சரி said...

உங்களோடு நானும் கோண்டாவில் வந்து ஊரைச் சுற்றிப் பார்த்தது போலொரு உணர்வு. காலம் மாறும், காயம் ஆறுமென்றே காத்திருக்கும் நம்பிக்கைதானே வாழ்க்கையின் உயிர்நாடி. கலங்காத நினைவுகள், கலங்கவைக்கும் எழுத்துக்கள் ஹேமா.

அப்பாதுரை said...

பழைய நிலைக்கு ஊர் திரும்பும் என்று எதிர்பார்ப்பது நாம் மறுபடி பிள்ளையாய் மாறுவோம் என்று எதிர்பார்ப்பதற்கு இணையாகும் இல்லையா? மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் எங்கிருந்தோ வரும் நிம்மதி நம்மை வியக்க வைக்கும். நிஜமும் இருந்துவிட்டால் நினைவுகளினால் என்ன பயன்?

கோண்டாவில் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இந்த அடி உதை விவகாரம் தான் பயமாக இருந்தது. தூணில் கட்டி கண்ணில் மிளகாய் தடவினார்களா? என்னங்க இது!!!!

Unknown said...

ஊரைப்பற்றி ஊரின் மண்ணைப்பற்றி மற்ற சிறப்புக்கள் பற்றி மிக அழகாக எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரையில். பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

பூவோடு கூடிய நாருக்கும் மணமுண்டாம்

மாய உலகம் said...

கொண்டாவின் மண் வாசனையை உங்கள் பதிவின் மூலமாக நானும் முகர முடிந்தது... மனதில் சிந்தனையுடன் ஒரு வலி தருகிறது சகோ!

நிலாமகள் said...

அது அந்தக் காலமாகிவிட்டது.நினைவுகள் மட்டும் காலமாகாமல்.//

//ஏதோவொன்றுக்கு எப்போதும் அடிபோடுட்டு அடிவாங்காத நாள் இருக்காது//

//என் அழகு கலைந்த வீட்டு முற்றம் எனக்காய் காத்திருக்குமோ.துளசிச்செடி ஒற்றைக்கோட்டுக் கோலத்துக்காய் கருகாமல் இருக்குமோ.சாகுமுன் என் ஊரைப் பழைய அழகோடு காண்பேனா.திரும்பவும் எல்லோரையும் காண்பேனா.என் இறப்பாவது என் மண்ணில் நடக்குமா//

'எண்ண‌ச் சிற‌குக‌ளை எவ‌ர் வெட்டிப் போட்டாலும்
க‌ண்ணில் ப‌ழைய‌ நிலா க‌விபேச‌த் த‌வ‌ற‌வில்லை'

என்ற‌வொரு க‌விஞ‌ரின் க‌விதை வ‌ரிக‌ள் நினைவில் வ‌ருகிற‌து ஹேமா. நினைவில் வாழ்வ‌தே நிறைவாய்...

ஹேமா said...

என் மண் வசனையை நுகர்ந்த அத்தனை உறவுகளுக்கும் என் நன்றிகள்.உங்களை என் மண்ணுக்கு அழைத்துப்போன சந்தோஷம் எனக்கு.வானொலிக்கு எழுதியதைப் பதிவாக்க நினைத்திருந்தேன்.அதைச் செய்துமுடித்த திருப்தியும்கூட !

பாரிஸ் யோகண்ணா...நன்றி உங்கள் வருகைக்கு.கோண்டாவில் பாலகிருஷ்ணன்,கானமூர்த்தி அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.
பெற்றவர்களின் பிரபல்யம் இல்லை.பஞ்சமூர்த்தியின் மகன் குமரன் ஊரில் தகப்பனின் தொழிலைத் திறம்படச் செய்கிறார் !

சத்ரியன்...தலைப்பிரட்டைன்னா என்ன ?தவளையின் முட்டை உடைத்து வெளிவந்த பருவம் வால்பேத்தை.தலைப்பிரட்டையும் அதேதான் என்று நினைக்கிறேன்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP