Monday, January 23, 2012

பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும்.

நான் நினைக்கிறன் 1974 ம் ஆண்டுப் பகுதியெண்டு.அந்த நேரம் ஸ்ரீமா அம்மாவின்ர (ஸ்ரீமாவோ பண்டாரநாயக)ஆட்சிக்காலம்.காசு கையில இருந்தாலும் சாப்பாட்டுச் சாமான்கள் ஏதும் வாங்கேலாது.பஞ்சம்...பஞ்சம் பசி...பசி.நாங்கள் வீட்ல 5 பேர்.அப்பா கோயில் சேவகம் செய்ற சாதாரண தவில்காரர்.அப்பப்ப கையில கிடைக்கிற காசைக் கள்ளமில்லாம அம்மாட்ட கொண்டு வந்து குடுத்திடுவார்.வெத்திலை போடுறது மட்டும்தான் அவருக்குப் பிடிச்ச கெட்ட பழக்கம்.வெறும் தேத்தண்ணியும் வெத்திலைத்தட்டமும் இருந்தா அவருக்குப் பசிக்காது என்கிறாப்போல.அம்மா பாவம்.அப்பா கொண்டு வந்து குடுக்கிறதைப் பக்குவமா செலவழிப்பா.எங்களை எப்பவும் பட்டினியா விட்டதில்லை.மாதத் தொடக்கத்திலயே அரிசியும்,மாவும் மூட்டையா வாங்கிடுவா.சீனியும் கொஞ்சம்.

ஆனா கையில நக்கிக்கொண்டுதான் தேத்தண்ணி குடிக்கவேணும்.கையில ரேகை அழிஞ்சுபோச்செண்டு கதைச்சுக்கொள்ளுவம்.வீட்ல ஆடு இருந்தபடியா பால்தேத்தண்ணி குடிப்பம்.வீட்ல சின்னதா மரக்கறித் தோட்டமும் அம்மாவும் அப்பாவும் செய்வினம்.அதைவிட வாழை,தென்னை,மாமரம் இருந்தது.அதனால பஞ்சம்தான் எண்டாலும் பசி இல்லாம ஏதோ சாப்பிட்டுக்கொள்ளுவம்.அம்மம்மாவும் தாத்தா கொண்டுவாற கோயில் சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வந்து தருவா.

இப்பிடி இருக்கிற நேரத்திலதான் அந்தப் பஞ்சகாலம்.பஞ்சம் தானா வரேல்ல.நாட்டில கஸ்டத்தாலயும் இல்ல.ஸ்ரீமா அம்மா தமிழருக்கெண்டே தந்தது.தோட்டம் செய்யாதவையெல்லாம் ஒரு மரவள்ளிக்கிழங்கு மரமெண்டாலும் வச்சுத் தண்ணி ஊத்துவினம்.ஏனெண்டா காசு இருந்தாலும் மா,அரிசி,பாண் எல்லாம் வாங்கேலாது.எங்கட புண்ணியம் எங்கட வீட்டுக்குப் பின்னால தங்கமணி அக்காவின்ர ஒன்றுவிட்ட அண்ணா மரவேலை செய்பவர்.அவருக்குப் பலரையும் பழக்கம் இருக்கிறதால சங்கக்கடை சாமியண்ணையை நல்ல பழக்கம்.மா,பாண் அவர்தான் சாமியண்ணட்ட களவா வாங்கித் தாறவர்(தருவார்).

அப்ப மா,பாண் எல்லாம் கூப்பன் (வெட்டிச் சீட்டு,அல்லது சலுகைச் சீட்டு எனப்படுவது.ஒரு பொருளை வாங்கும் போது நுகர்வோருக்கும் தரப்படும் கழிவுக்கான சீட்டு) காட்டுக்குத்தான் தருவினம்.சொல்லப்போனா மரக்கறி தவிர எல்லாச் சாமான்களுமே கூப்பன் காட்லதான் சங்கக்கடையில தான் வாங்கேலும்.

தோட்டத்தில விளையிற செத்தல் மிளகாய்கூடக் கூப்பன்தான்.கூப்பன் இல்லாம இலவசமாக் கிடைக்கிறது பசி...பசி...பசி.வயித்தில அகோர நெருப்பு.கோவமும் கூட.எத்தைனை பேருக்குக் குடுக்காம அவையளின்ர வயித்தில அடிச்சுக் கூடின காசுக்குச் சாமான்களை விப்பினம்.நாங்களும் என்ன செய்றது.ஒரு வீட்டுக்கு குறிப்பிட்ட அளவு மா,பாண் தான் தருவினம்.களவா வாங்கினாத்தான் சமாளிக்கலாம்.காசு இல்லாத ஆ(ட்)க்கள் பாவம்தான்.

எங்கட வீட்லயும் மரவள்ளிக்கிழங்குத் தோட்டம் இருந்தது.காலமைச் சாப்பாடு மரவள்ளிக்கிழங்கா இருக்கும் ஒரு நாளைக்கு.அடுத்த நாளைக்கு இரவுச் சாப்பாடா மாறியிருக்கும்.மத்தியானம் மட்டும் சோறு சமைப்பா அம்மா.மாதத் தொடக்கத்திலதான் மீன்,றால் கிழமையில இரண்டு நாளைக்கு இருக்கும்.ஆட்டிறைச்சியெண்டா மாசத்துக்கு ஒருக்காத்தான்.சிலநேரம் இல்லை.வீட்ல கோழிகள் இருந்தபடியா முட்டை,இறைச்சியும் சாப்பிடுவம்.ஆனாலும் அவைக்கும் சாப்பாடு போடவேணுமே.சிலநேரம் அவைக்கு வருத்தமும் வந்திடும்.மரக்கறிச் சாப்பாடுதான் கூடுதலா சாப்பிடுவம்.நாங்கள் நடுத்தர வர்க்கம் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.

ஒருக்கா இப்பிடித்தான் மாசக்கடைசி.அவிச்ச மா கொஞ்சம்தான் இருந்திருக்குப்போல.அம்மா நல்லாச் சமைப்பா.அதுவும் சின்னமீன் மாங்காய் போட்டுக் குழம்பு(புளி இருக்காது)வச்சாவெண்டா அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவம்.அதுவும் ஆளுக்கொரு மீன்துண்டுதான்.எண்ணித்தான் வாங்கிச் சமைப்பா.அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும் சிலநேரம்.

அப்ப ஒரு நாள் அரிசிமாப் புட்டு அம்மா அவிச்சவ.புட்டுக்கும் மீன்குழம்புக்கும் நல்ல சோக்காய்த்தான் (சுவையாய்)இருக்கும்.அதோட அம்மம்மா கொண்டுவந்த மாம்பழம்.இப்ப நினைச்சாலும் வாயூறுது.என்ர கடைசித் தங்கச்சி ரசனையோட சாப்பிட்டுவிட்டு அம்மா இன்னும் கொஞ்சம் புட்டு வேணும் எண்டு கேக்க,அம்மாவின்ர முகம் மாறினதும் தங்கச்சி வீட்டு நிலைமை தெரியாம அழுததும் இப்பவும் ஞாபகம் இருக்கு.

முக்கியமா நான் சொல்ல நினைச்சது விடியக்காலேல(அதிகாலை) 4-5 மணிக்கு பனிக்குளிர்ல சாமியண்ணைன்ர சங்கக்கடை வாசலில பாம்புபோல வளைஞ்சு நெளிஞ்சு சங்கக்கடை தொடக்கம் மாலா வீடு வரைக்கும் நிக்கிற மனிச வரிசையில இடிச்சு நெரிச்சுக்கொண்டு பாணுக்குக் கியூவில நிக்கிறது.கிழமையில இரண்டுதரம் இந்த மாதிரி நிக்கவேணும்.இதுக்குக் காலேல எங்களை எழுப்பி வெளிக்கிடுத்தி தேத்தண்ணியும் தந்து அனுப்புறது அம்மாவுக்கு பெரிய கஸ்டம்.

நான் இல்லாட்டி தம்பி போகவேணும்.ஒரு வீட்டுக்கு ஒரு பாண் தான்.அதுவும் 5 மணியில போய் கியூவில நிண்டா 6-7 மணிக்கிடையிலதான் பாண் வரும் தருவினம்(தருவார்கள்).சிலநேரம் பிந்தின கியூவில நிண்டா கிடைக்காமலும் போய்டும்.ஏனெண்டா அளவா ஒரு குறிப்பிட்ட அளவுதானாம் ஒவ்வொரு கடைக்கும் எண்டு சாமியண்ணை கத்துவார்.ஆனா களவா சின்னராசண்ணைக்குக் குடுப்பார்.அப்ப இதிலயிருக்கிற அநியாயம் எனக்குத் தெரியேல்ல.சிலநேரம் பாண் கிடைக்காத காலமும் இருக்கு.அப்ப உடன ஒரு மரவள்ளிக்கிழங்குதான்.அதைப் பிடுங்கி அவிச்சுச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போகப் பிந்தியும்போகும்.பஞ்சப்பட்ட காலங்கள் கண்ணை இப்பவும் கலங்க வைக்குது.எங்கட அரசியல் ஒரு மாதிரியாக்கும்.அதாலதான் அப்பிடியெண்டு இப்ப விளங்குது.

பாண்கியூ எண்டு கதைக்கேக்க எல்லாம் ஒரு உருவம் கண்ணுக்க வந்து மறையும்.ஒரு மெலிஞ்சு வயிறு ஒட்டினபடி 45-50 வயசுக்காரர் ஒருத்தர் எனக்கு முன்னால இல்லாட்டி பின்னால நிப்பார் எப்பவும்.அவரின்ர வீடும் நான் போற வாற வழியிலதான் இருக்கு.அவரின்ர அம்மாவோ இல்லாட்டி அக்காவோ ஒரு ஆள் இருக்கிறா அங்க. அவரோட.அது ஒரு கொட்டில் வீடு.பஞ்சம் வயசைக்கூடக் கூட்டித்தான் காட்டினது எங்கட நாட்டில.ஒற்றை வேட்டியோடதான் எப்பவும் நிப்பார்.வெயில் காலமெண்டா சேட்டுப் போடமாட்டார்.வயிறே எரியுது பிறகெதுக்குச் சேட் எண்டு நினைப்பாரோ என்னவோ.வயிறு எக்கி முகத்தில பசி வாடித் தெரியும்.கொஞ்சம் கூனலா இருப்பார்.வெத்தில வாசமடிக்கும் எப்பவும்.பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் தெரிய வந்தது அவர் ஒரு எழுத்தாளர் எண்டு.ஆரையும் விட்டு வைக்கேல்ல ஸ்ரீமா அம்மா காலத்துப் பஞ்சம்.

இப்பிடித்தான் ஒருக்கா எங்களுக்கு முந்தி கியூவில நிண்ட ஒரு வயசுபோன அம்மா ஒரு ஆள் பாண் வாங்கிக்கொண்டு போக போற போக்கில ஒரு ஆள் எத்திப் பறிச்சுக்கொண்டு ஓடினது இப்பவும் ஞாபகம் இருக்கு.அவ றோட்டின்ர கரையில கிடக்கிற மண்ணை அள்ளிப்போட்டு நாசமாப்போனவன் எண்டு திட்டிச் சத்தம்போட்டு அழுதா.பிறகு டக் எண்டு எழும்பி நடக்கத்தொடங்கிட்டா.ஒருவேளை பசி வந்திருக்கும்.இண்டைக்கு முழுக்க என்ன சாப்பாடு பட்டினிதான் எண்டு யோசிச்சுக்கொண்டு போனாவோ என்னவோ.

அவ அழுததை ஆராச்சும் (எவரேனும்)ஓவியர் பார்த்திருந்தா பசி எண்டு தலைப்புப் போட்டுக் கீறியிருக்கலாம்.காலமை வெயிலுக்கும் அவவின்ர கிளிஞ்ச றவுக்கை தெரியாமல் மூடின கந்தல் சீலையும்,கலைஞ்சு பறந்த தலைமுடியும்,பசி நித்திரை தாங்கின கண்ணும்,அவவின்ர வயசும் அப்பிடித்தான் எனக்குத் தெரிஞ்சது ஓவியமான அந்த அம்மா.

நிச்சயம் எனக்கு முன்னால நிண்டவர் எங்காச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதியிருப்பார் என்னைப்போல.எனக்கும் இவ்வளவு நாளும் எழுத்தில எழுதச் சொல்லவேணும் எண்டு நினைக்கேல்ல.இவள் பெடிச்சி எப்பாச்சும் என்னைக் கிளறிக் கிண்டி என் நினைவுகளைக் கொண்டு வந்திடுவாள்.எனக்கு அரசியல் கதைக்க விருப்பம் எண்டாலும் வேணாம் எண்டு எப்பவும் பேசாம இருக்கிறனான்.ஏனெண்டா கதைச்சுப் பி்ரயோசனமில்லை.அதோட நான் நாட்டுக்காக என்னத்தைச் செய்து கிழிச்சுப்போட்டன்.செய்யவெண்டு வந்த பெடியளை,எங்கட செல்லக் குஞ்சுகளை நாசமாப்போன உலக நாடுகள் எல்லாமாச் சேர்ந்து அழிச்சுப்போட்டாங்கள்.

இப்ப ஐ.நா அறிக்கை ஒண்டை வெளில கொண்டு வந்திருக்கு.இத்தனை ஆதாரங்களைக் காட்டினபிறகும் அது தாங்கள் செய்யேல்லையெண்டு இலங்கை அரசாங்கம் கோட்டுச் சூட்டுப் போட்டுக்கொண்டு ஐ.நா சபையில வெக்கமில்லாமச் சொல்லுது.இதில சனல் 4 பிரித்தானியாத் தொலைக்காட்சிக்கு நாங்கள் காலில தொட்டு நன்றி சொல்லவேணும்.குற்றம் செய்தவை தப்பக்கூடாது எண்டு 14.06.2011 அன்றுகூட ஒருமணித்தியால ஈழ அவலத்தின்ர விவரணக் காணொளியொண்டு இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில வெளியிட்டது.

இனி என்ன நடக்குதெண்டு எங்கட எதிர்காலம்தான் சொல்லவேணும்.இனி நாட்டில இருக்கிறவையால எதுவும் செய்ய முடியாது.வெளில இருக்கிற உலகத் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்களாலதான் ஏதேனும் நல்லது நடக்கவேணும்.ஆனால் என்ன எங்கட சனங்களுக்கு அறிவு இருக்கிற அளவுக்கு மனசில ஒற்றுமை இல்லை.போட்டியும் பொறாமையும் நான் நீ என்கிற பேதமும் கிடக்கு.இது நான் அறிஞ்சவரைக்கும் காலகாலமாய் தமிழ்ச் சரித்திரக் கதைகளிலகூட நடந்திருக்கு.அப்ப இது பரம்பரை வியாதிபோல ஒரு வியாதி.மாறாது...திருத்தக் கஸ்டம் !

எப்பிடியோ பாதைதான் மாறியிருக்கே தவிர எங்கட நினைப்புகளும் தேவைகளும் அவலங்களும் பிரச்சனைகளும் மாறேல்ல.சிலநேரம் இன்னும்...இன்னும்...இன்னும்...இன்னும் கனகாலமாகலாம்.ஆனால் நல்லதே நடக்குமெண்டு என்ர நம்பிக்கை.ஆனால் அதைப் பாக்கவோ அதை அனுபவிக்க நான் இருக்கமாட்டன்.அந்த ஏக்கத்தோடதான் என்ர உயிர் இந்த மண்ணில போகும்.சரி பிறந்த மண்ணில சாகிற கொடுப்பினையாலும் எனக்கிருக்கே.கனபேருக்கு அதுவும் இல்லை !

சொல்லக் கேட்டுக் கனகாலம்.இப்போ குளிர்காலத்தில் ஞாபகம் வந்து எழுதவைத்தது.நினைவழியாமல் மீட்டு வைக்கிறேன்.

சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !

41 comments:

Anonymous said...

உங்கள் காலத்தில் விடிவு காலம் கண்டிப்பாய் வரும் சகோதரி...அடி மேல் அடி விழுந்தாலும் நம்பிக்கை இருக்கும் வரை இந்த இனம் அழியாது...
நினைவுச் சுமைகளை இறக்கியதுக்கு நன்றி சகோதரி...

Rathnavel Natarajan said...

மனசு தாங்கவில்லை அம்மா.

விச்சு said...

இதைப்படிக்கிற போதே இவ்வளவு கஷ்டமா இருக்கு. அனுபவித்தவர்களுக்கு அதன் வலியும் வேதனையும் என்றும் மறக்காது. நல்ல காலம் வரும்.

வலையுகம் said...

உங்கள் யாழ்ப்பண தமிழை மிகவும் ரசித்து படித்தேன்

அதே சமயத்தில் சம்பவங்கள் மனதை கனக்க செய்கிறது

பகிர்வுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிரையவே கஷ்டங்கள் அனுபவிதிருக்கீங்க. எல்லாருடனும் பகிர்ந்து கொண்டால் கஷ்டங்கள் பாதியாக குறையும்னு சொல்வாங்க. உங்க கஷ்டங்களும் குறைந்துவிடும்.

தமிழ் உதயம் said...

துயரத்துடனான பதிவு மனதை சங்கடப்படுத்துகிறது.

Anonymous said...

அந்த காலத்தில் பிறக்கவில்லை என்றாலும் அதிகம் அறிந்து வைத்துள்ளேன். சிறிமாவின் மூடிய பொருளாதார கொள்கையால் மரவள்ளி கிழங்குடன் சாம்பலோடு பலநாள் வாழ்க்கை ஓடியதாம் நம்மவர்களுக்கு.. முக்கியமாக விவசாயத்தை நம்பி இருந்தவர்கள் கொஞ்சம் பிழைச்சு கொண்டதாக வீட்டிலேயே சொல்லுவார்கள்..

துரைடேனியல் said...

உங்கள் பதிவைப் படித்ததும் என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கிவிட்டன சகோ. என் சகோதர தேசத்து என் உறவுகள் படும் கஷ்டங்கள் என்று தீருமோ?

கண்ணதாசனின் வரிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன.

கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே

- நிச்சயம் விடியல் பிறக்கும். சிந்திய இரத்தத் துளிகளுக்கு காலம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தையில்லை. நா தழுதழுக்கிறது சகோ.

மகேந்திரன் said...

மனம் கனத்துப் போனது சகோதரி...
ஆனாலும் நீங்கள் இறக்கி வைத்த சுமையை
உணர்வளவில் சிறிதேனும் சுமக்கும் எண்ணத்துடன்...

கனியும் காலமதை எதிர்நோக்கும்
சகோதரன்....

Yaathoramani.blogspot.com said...

மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
சில தவங்கள் வரங்களினன்றியே முடிந்து போவதும்
சில நியாயமான போராட்டங்கள் தீர்வு இன்றியே தொடர்ந்து போவதும்
மாண்புகளின் மீதான நம்பிக்கையை
அழித்துதான போகிறது

Yaathoramani.blogspot.com said...

த.ம 11

Mahi_Granny said...

அந்த பஞ்ச காலம் கடந்து போனது போல் இனிமேல் நல்லவை மட்டுமே நடக்கட்டும்.

Unknown said...

ஈழத்தமிழில் உங்கள் பதிவு
இனித்தாலும் கூறப்பட்ட செய்திகள்
மனதைத் துயரக்கடலில் தள்ளி விட்டது!
இருளுக்குப் பின் ஒளி வந்தே
தீரும்!

சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !

கனக்கும் பகிர்வு..

Geetha6 said...

கண்கள் கலங்கிவிட்டன சகோதரி ! உங்கள் எழுத்து ஆழமாய் பதிந்து விட்டது.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ஹேமா

ஆ.ஞானசேகரன் said...

//சொல்லக் கேட்டுக் கனகாலம்.இப்போ குளிர்காலத்தில் ஞாபகம் வந்து எழுதவைத்தது.நினைவழியாமல் மீட்டு வைக்கிறேன்.//

ம்ம்ம்ம்... உண்மைகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்...

Unknown said...

2014 ஆம் ஆண்டு தனி ஈழம் நிச்சயம் மலரும்,,

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
காலங்களினூடே கடந்து வந்த நினைவுகளை மண் மணம் மாறாத ஞாபக கோர்வைகளாக தொகுத்திருக்கிறீங்க.

விடிவு என்றோ ஓர் நாள் கிடைக்கும் எனும் நம்பிக்கையைத் தவிர எம்மிடம் வேறேதும் இல்லைத் தானே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்போது நான் இளைஞன், வரிக்கு வரி உண்மை. காசிருந்தாலும் பொருள் வாங்கமுடியாத பொருட் தட்டுப்பாடு, கட்டுப்பாடு.
கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் "முருங்கைக் கீரை" பற்றிக் குறிப்பிடும் போது "பஞ்சம் தாங்கி" என எழுதினார். அந்தக் குறியீட்டை யாழ்மக்களை உணரவைத்தவர்- சிரிமாவோ அம்மையாரும் அவர் நிதியமைச்சர்
என். எம். பெரேராவுமே!.
குறோட்னுக்குப் பதில் மரவள்ளி நடவைத்த மகான் என்.எம். பெரேரா!!!!
கிளிநொச்சி, வன்னியில் இருந்த அரிசி யாழ் வரத் தடை. ஆனையிறவு முகாமில் சகல வண்டிகளும் குண்டுக்காகத் சோதிப்பதுடன், அரிசியும் இருக்கா எனச் சோதிப்பார்கள்.
திருமணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு அரிசி வாங்க, கிராமவதிகாரி அத்தாட்சி வேண்டும்.
உணவு விடுதிகளுக்குச் சிறப்புச் சலுகை எனினும் அவர்களுக்குசலுகையால் கிடைக்கும் அரிசி போதுமானதாவதில்லை.
அப்போது சில உணவு விடுதி உரிமையாளர்கள் கையாண்ட யுக்தி, அரிசிக்குத் தானே தடை, சோற்றுக்குத் தடையில்லை என்பதால், காலை முதல் பேருந்தில் கிடாரத்தில் சோறாகவே சமைத்து கிளிநொச்சியில் இருந்து கொண்டு வந்து உணவு விடுதியில் விற்றார்கள்.
பலர் கிளிநொச்சி, வன்னியிலிருந்து அரிசியை மாவாக இடிப்பித்துக் கொண்டு வந்துள்ளனர்.
இவை மறக்கக்கூடிய விடயமல்ல! பணமிருந்தும் பயனில்லை என்பதை உணரவைத்த பஞ்சமது.

நிலாமகள் said...

கூப்பன் இல்லாம இலவசமாக் கிடைக்கிறது பசி...பசி...பசி.வயித்தில அகோர நெருப்பு.கோவமும் கூட.//

அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும் சிலநேரம்.//

ஆரையும் விட்டு வைக்கேல்ல ஸ்ரீமா அம்மா காலத்துப் பஞ்சம்.//

சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !//

விடிவு என்றோ ஓர் நாள் கிடைக்கும் எனும் நம்பிக்கையைத் தவிர எம்மிடம் வேறேதும் இல்லைத் தானே.//

க‌ன‌த்த‌ ம‌ன‌சுட‌ன் துளிர்த்த‌ க‌ண்ணீர் பெருகியோடும்ப‌டி செய்த‌ வ‌ரிக‌ள்...

கீதமஞ்சரி said...

இன்னும் இன்னும் மனசில் தேங்கியிருப்பதையெல்லாம் எழுதுங்க ஹேமா... நெருப்பு அணையக்கூடாது. முடிந்தால் இன்னும் கொஞ்சம் படிப்பவரையும் பற்றிக்கொள்ளட்டும். நிறைய எழுதுங்க. நெஞ்சக்குமுறலைப் பதியுங்க. பின்னால் வருபவர்களுக்கு அவை ஒளியாய் வழிகாட்டட்டும்.

பால கணேஷ் said...

படிச்சிட்டு வரும்போதே கண் கலங்கி அழுதுபோட்‌டேன் தோழி! எத்தனை கஷ்டங்களை அனுபவிச்சிருக்கிறயள். நிச்சயம் இதற்கு நாம் கண் மூடுவதற்குள் ஒரு விடிவைக் காண்போம் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கு. வேறு என்னதான் நம்மால் செய்துவிட ஏலும்? நீங்களெல்லாம் அனுபவிச்ச வலியையும் வேதனைகளையும் மனசால உணர முடியுது! இன்னும் எப்படி என் மன உணர்ச்சிகளை வார்த்தைகளால சொல்றதுன்னு மட்டும் தெரியல!

ஸ்ரீராம். said...

அம்மா சுவையாக சமைத்திருக்கக் கூடாது என்று நினைக்க வைக்கும் பஞ்சம்...நினைத்துப் பார்க்க முடியாத சோகங்கள். யாழ் தமிழ் இனித்தாலும் பதிவின் கரு கண்கலங்க வைக்கிறது.
பாண் என்றால் என்னவென்று தெரியவில்லை.

Asiya Omar said...

நினைவுகளை பகிரும் பொழுது மனது இலேசாகும்.விரைவில் விடியல் வரும்.

காட்டான் said...

வணக்கம் சகோதரி!
நானும் இதை கேள்விப்பட்டிருக்கிறேன். அனுபவித்ததில்லை..

கந்தசாமியை போல நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் விவசாயிகள் பிழைத்துக்கொண்டதாக..!!

ராஜ நடராஜன் said...

ஹேமா!சிறுகதையினூடே வரலாற்றைப் பதிப்பதுவே சிறுகதை இலக்கியத்தில் நிரந்தரமாக இடம் பிடிக்கும்.

யாழ்ப்பாண தமிழ் இலக்கிய வரிசையில் உங்கள் எழுத்து நடை நிச்சயம் இடம் பெறும்.

வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

யோகன் பாரிஸ் பின்னூட்டம் கண்டதும் அவரது சிறுகதையான ஆமிக்கு செய்யது பீடி வாங்கிக் கொடுத்த கதை நினைவுக்கு வந்தது.

இவை போன்ற எழுத்து நடைகளை தக்க வைத்துக்கொள்வோம்.நன்றி.

எஸ் சக்திவேல் said...

>இருக்கு.அவ றோட்டின்ர கரையில கிடக்கிற மண்ணை அள்ளிப்போட்டு நாசமாப்போனவன் எண்டு திட்டிச் சத்தம்போட்டு அழுதா.பிறகு டக் எண்டு எழும்பி நடக்கத்தொடங்கிட்டா.

இவ்வளவும் ஒரு நல்ல சிறுகதை எழுதப்போதும். எழுதுங்கள்.

Anonymous said...

அன்பு சகோதரி ...உங்களை புத்தாண்டு தீர்மானங்கள் ~ ஒரு மாத சுய பரிசீலனை... என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அன்போடு அழைக்கிறேன்...
உங்கள் பதிவில் உங்களுக்கு நெருக்கமான மூவரை இதை தொடர அழையுங்கள்...

அப்பாதுரை said...

படிப்பதற்கு வேதனையாக இருந்தாலும் உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையில் ஒரு இனம் புரியாத நிம்மதியும் தெரிகிறது. பிறந்த மண்ணில் இறக்கும் நிறைவு உங்களுக்குக் கிடைக்கட்டும் என்று சொல்வது தவறாகத் தோன்றுகிறதே..

//அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும்...

நெஞ்சை ஈரமாக்கிய வரிகள்.

ஹுஸைனம்மா said...

//ஸ்ரீமா அம்மா தமிழருக்கெண்டே தந்தது//

:-((( உலகின் முதல் பெண் அதிபர் என்றுதான் இவரைத் தெரியும். இப்படியும் ஒரு பெருமையா இவருக்கு??

ஒவ்வொரு வரியும் கலங்க வைக்கிறது. அம்மா சுவையாக சமைப்பது, தங்கை அழுதது, பாட்டியிடம் பிடுங்கியது.... :-(((


‘பாண்’ என்றால் பிரட்தானே. 70களிலேயே பிரட்டும் இலங்கையில் உணவா? அல்லது ரேஷனுக்காகக் கொண்டுவரப்பட்டதா?

சாந்தி மாரியப்பன் said...

கூடிய சீக்கிரமே கஷ்டங்களெல்லாம் மறையணும்ன்னு பிரார்த்தனை செய்வோம்.

Riyas said...

ஹேமா அக்கா இன்றுதான் இந்த பதிவு படிக்க முடிந்தது.. ஸ்ரீமா அவர்களின் ஆட்சிக்காலத்தில் கடும் பஞ்சம் நிலவியதாக நானும் கேள்விப்பட்டிருகிறேன்..

மரவள்ளிக்கிழங்கு மாத்திரமே அப்போதய உணவாக இருந்திருக்கிறது..

யுவராணி தமிழரசன் said...

சிந்தும் விழி நீரை ஏந்திட இங்கு தோழ்கள் பல இருக்கின்றன அம்மா!! கலங்காமல் காத்திருப்போம் விடியலுக்காக!

ஹேமா said...

என் அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.என் பதிவுகள் கொஞ்சம் இப்பிடித்தான்.என்ன செய்யலாம்.என் வாழ்வியல் இதுதான்.அதோடு இதெல்லாம் சொல்லி வைக்கவேணும் நம் எதிர்காலத்திற்கு.இன்னும் ஈழத்தமிழர் நாம் இன்னும் இயல்பில் இல்லை.இதுதான் உண்மை !

ஸ்ரீராம்...பாண் என்றால் ரொட்டி என்பீர்களா நீங்கள் பிரட்தான் அது !

யோகன் பாரீஸ்,சக்திவேல்,நடா விபரங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி !

புதிதாக என்வலை வந்த யுவராணி தமிழரசனுக்கும் நன்றி !

Admin said...

வருத்தம் விருத்தமாகிறது.. வேறொன்றும் சொல்லத் த்ரியவில்லை.

SELECTED ME said...

///சங்களுக்கு அறிவு இருக்கிற அளவுக்கு மனசில ஒற்றுமை இல்லை.போட்டியும் பொறாமையும் நான் நீ என்கிற பேதமும் கிடக்கு.இது நான் அறிஞ்சவரைக்கும் காலகாலமாய் தமிழ்ச் சரித்திரக் கதைகளிலகூட நடந்திருக்கு.அப்ப இது பரம்பரை வியாதிபோல ஒரு வியாதி.மாறாது...திருத்தக் கஸ்டம்.// நிஜம்

ஜெயா said...

மிகவும் அருமையான பதிவு ஹேமா. நேரம் பற்றாக்குறை காரணமாக அவசர அவசரமாக வாசித்து விட்டு சென்று விடுவேன். ஆனால் இந்தப் பதிவு நாங்கள் அனுபவித்த அந்த கொடுமையான நினைவுகளை அப்படியே மனக்கண் முன் கொண்டு வந்து விட்டது நினைத்துப் பார்த்தாலே கண்கள் கலங்குகிறது. அன்று மரவள்ளிக் கிழங்கு என்றாலே வேண்டாம் என்று அம்மாவிடம் சண்டை போட்ட நாட்கள் எல்லாம் கண் முன்னே கொண்டு வந்து விட்டீங்கள் ஹேமா. இதிலே கொடுமை என்னவென்றால் எதுவுமே புரியாமல் எங்கள் ஊர் வழியாக அழைத்து செல்லப்பட்ட சிறிமாவை நாங்களும் நின்று வேடிக்கை பார்த்தோம்.. இப்பொழுது நினைத்து பார்த்தாலே வேதனையாக இருக்கிறது. அந்த நாட்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்த பதிவுக்கு மிக்க நன்றி ஹேமா....

kankaatchi.blogspot.com said...

தமிழர் படும் துன்பத்தை கண்டு இன்பம் அடைந்த ஸ்ரீமாவோ ஒரு saadist என்பது வெளி உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை
துன்பத்தின் மொத்த உருவமோ ஈழ தமிழர் வாழ்க்கை?
என்று,எப்படி விடிவுகாலம்.?
அமைதி பேச்சும் தோல்வி ஆயுத போராட்டமும் தோல்வி

தமிழ்நாட்டிலும் அடித்தட்டு மக்கள் வாழ்க்கை இதுபோல்தான் இன்னும் இருக்கிறது .என்ன செய்வது?

இங்கு தமிழனே தமிழனுக்கு எதிரி

எப்படியும் காலம் ஒரு நாள் மாறும்

ஆனால் அது எப்போது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.?

ஒற்றுமையின்றி சிதறி கிடக்கும் தமிழின மக்கள் தங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றாக பழகும் உணர்வு வரும் வரை துன்பங்கள் தீர வாய்ப்பில்லை

அந்த நல்ல காரியத்தை கனவாகவே வைத்திருக்க சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளும் மதவாதிகளும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்கள்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP