Friday, November 28, 2008

மீண்டும் மகளாகிறாள்(1)

ன் குழந்தைநிலாவில்"மடி கொஞ்சம் தருவாயா"கவிதை பிறந்த கதை
மீண்டும் மகளாகிறாள்.குழந்தைநிலாவில்
"மடி கொஞ்சம் தருவாயா"சந்தேகத்துக்கு உண்டான
கவிதையாயிற்று.அக்கவிதையின் என் நெஞ்சைத் தாக்கிய இன்னும் மறக்கமுடியாத ஒரு சம்பவம்.அந்தக் கவிதைக்குக் கருத்தந்த ஆரம்பகாலக் கதை இது.(எனக்குத் தெரிந்த அமைப்பில் எழுதுகிறேன்.
பிழையிருந்தால் சொல்லித்தாருங்கள்.)
மடி கொஞ்சம் தருவாயா
********************************
மகளே மகளே...என் செல்வமே
கொஞ்சம் நீ...
அருகே வருவாயா
நான் உன் குழந்தையாகி
உன் மடியில் தவழ்ந்திருக்க!


உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!


ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!


நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!



கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து
என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!



நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்

போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!


நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!

ஹேமா(சுவிஸ்)
நான் "உப்புமடச் சந்தி"தொடங்கிய காரரணமே கொஞ்சம் கலகலப்பாகக் கொண்டு செல்லலாம் அல்லது செய்யலாம் என்று.அதற்கு முக்கிய காரணம் கடையம் ஆனந்த்.நான் எப்போதும் கவலையாக இருக்கிறேன் என்கிற குற்றச்சாட்டுத்தான்.ஆனாலும் இங்கும் தொடர்கிறது சோகம்.கலகலப்பும் கலந்தே வரும்.

மீண்டும் மகளாகிறாள்(1)
*******************************************

தியமும் இல்லாமல் மாலையும் இல்லாமல்
மத்திமமான நேரம்.வெளியே மழை சிறிதாகத்
தூறல் போட்டு அழ,பூமாதேவி புளுதி வெப்பத்தை அள்ளி வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.ரதியின் கண்கள் அந்த இயற்கையின் விளையாட்டையும் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாலும் அவள் மனம் மட்டும் அந்த மழைத் தூறல்போல தன் கடந்துபோன நினைவுத் தூறல்களால் நனைந்து கொண்டிருந்தது.அதே நேரம் அவளது மூன்று வயது மகள் ஜீவா கொஞ்சும் மழலைக் குரலால் "அம்மா தம்பி எழும்பிட்டானாம்.கொஞ்சம் பொரிமாவும் தேத்தண்ணியும் வச்சுக்கொண்டு வரட்டாம் அம்மம்மா"என்றபடி அம்மா எனக்கும் தருவீங்களோ என்று அவள் அம்மா சொல்லிவிட்டதையும் சொல்லிவிட்டுத் தனக்கும் தேனீர் தேவை என்பதையும் ஞாபகப்படுத்திவிட்டுப் பூவாகச் சிரித்துத் திரும்புகையில் மீண்டும் தன் கையில் விளையாட்டுப் பொருட்களான
சிரட்டை,தென்னோலை,குரும்பட்டி,ஈர்க்கில் என பொறுக்கி எடுத்தபடி போய்விடுகிறாள்.

அவளின் அம்மாவின் தங்கை அதாவது அவள் சித்தி ரதியின் தங்கை லதா அயலவப் பெண்கள் சிலர் இன்னும் 4-5சிறுவர்கள் கூடிக் களித்து வட்டமேசை மகாநாடு நடத்துமிடம் அந்த வைரவர் கோவிலுக்குப் பின்னால் உள்ள, கிட்டத்தட்ட 60-70 வருடங்களாய் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெரு விருட்சமான வேம்பு மரத்ததடியின் கீழேதான்.அங்கே தம் தம் வயதிற்கு ஏற்றவர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ரதியின் மனம் மட்டும் அவர்களோடு ஒட்டிக் கொள்ளாமல் எதிலும் ஈடுபாடு இல்லாமல் யன்னல் கம்பிகளுக்கூடாக முற்றத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தது.

மழையின் தூறல் இப்போ நின்றுவிட்டிருந்தது.தூறல் புழுதியின் வாசனையும் அந்த அடையாளமும் முற்றத்து மண்ணில் ஆங்காங்கே கோலமாய் வரிகள் போட்டிருந்தன.இது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும் மழைத்தூறல் வந்து போன அடையாளாம்போல ரதியின் மன ஓட்டத்திலும் இருந்து கிளறிக் கோலம் போட்டுச் செல்லும் ஞாபகங்களாய் அந்தச் சம்பவம் புழுதியின் வாசனையாய் வரத் தொடங்கியது.நினைவுகள் கிளற கண்களுக்குள் நீர் குளமாகக் கண்ணும் மனமும் நிரம்பத் தொடங்கியது.நினைவுகள் சிலிர்க்க மனம் பேசத்தொடங்கியது.
"நான் திருமணம் ஆனவளா?நான் கணவன் என்கிற ஒருவனோடு கணவன் மனைவி என்கிற உறவோடு வாழ்ந்தவளா?அல்லது ஏதாவது கனவு கண்டு எழும்பியிருக்கிறேனா?ம்ம்ம்...அப்படி நினைத்தாலும்! அப்படியானால் எப்படி ஜீவா,ராஜீவ்!அவர்கள் என் குழந்தைகள்தானே.ஆமாம் அப்போ இது கனவே அல்ல.உண்மையேதான்.எனக்குத் திருமணமாகி ஒரு அன்பான கணவனுடன் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறேன்.என்று தன் இன்றைய நிலைமையை உண்மை என்று தானே ஒப்புக் கொள்கின்றாள்.

அவளிடம் குழந்தையின் பசிக்குப் பொரிமாக் கேட்ட அவளின் அம்மா அவளை ஏதோ இலேசாக அதட்டிக் கோபித்தபடி,ஆனால் அதேநேரம் அவளைப் பார்த்து அவளுக்குத் தெரியாமல் பரிதாபமாய் பெருமூச்சொன்றை விட்டபடி ராஜீவனுக்கு பொரிமாவும் கொஞ்சம் பிசைந்து எடுத்துக்கொண்டு போச்சிப் போத்தலுக்குள் தேநீரும் விட்டுக்கொண்டு அவளின் தனிமையையைக் கலைக்க நினத்தவளாய்
"ஜீவா இங்க உனக்கும் வச்சிருக்கு" என்று பேத்தியைக் கூப்பிட்டு மீண்டுமாய் "ஜீவா... இங்க உனக்கும் இருக்கு.இதிலயே இருந்து சாப்பிட வேணும்.அங்க எடுத்துக் கொண்டு வாரேல்ல.காக்கா கொத்திப்போடும்.
வந்தியோ உதைதான் விழும்.சாப்பிட்ட பிறகு குசினிக் கதவையும் சாத்திப்போட்டு வரவேணும்.கோழி நுழைஞ்சிடும் என்ன"என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அந்த வேப்பமரத்தடி நோக்கிப் போகிறாள் அவள் அம்மா.ரதியின் விடுபட்ட சிந்தனை மீண்டும் கிடைத்த தனிமையில் பலமாக சுழலத் தொடங்குகிறது.(இன்னும் வருவாள்)

ஹேமா(சுவிஸ்)

18 comments:

Anonymous said...

ஹேமா, said...
கமல்,உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.யாராவது ஒரு சிலரின் காதுகளுக்குளாவது தமிழ் கொஞ்சம் நுழைந்தால் நல்லதுதான்.

அப்புக்குட்டி யாரிட்டையாவது அடி வாங்கப் போறார்.தேவையில்லாம பொம்பிளைகளைப் பற்றி,பிறகு தமிழைப் பற்றி....இதெல்லாம் இப்போ சிலதுகளுக்குத் தேவையில்லாத விஷயமா எல்லோ போச்சு.

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா. அப்புக் குட்டி அடிவாங்கி வாங்கியே பழகி விட்டார். அது சரி நீங்கள் இந்த இடத்தில ''இதெல்லாம் இப்போ சிலதுகளுக்குத் தேவையில்லாத விஷயமா எல்லோ போச்சு''
சொல்ல வாற விசயம் மட்டும் விளங்கவில்லை. கொஞ்சம் புரிய வைக்க முடியுமா???

Anonymous said...

\\உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!\\

:((


\\ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!


நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!


கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து
என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!


நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்
போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!


நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!\\

வலிமை -
வலி
மை(உங்கள் பேனாவில்)

பிழிந்தெடுக்கும் சோகம்.

பெற்ற பிள்ளையினை தாயாய் பார்க்கும் அற்புதும் ஒரு தாய்க்கு மட்டுமே வாய்த்த சத்தியம்

Anonymous said...

ஹேமா,
23 வயது மகனை பறி கொடுத்த தாய் நான்.பிரிவின் கொடிய வலியை முற்றிலும் உணர்ந்தவள்.
சோகம் என்றும் மாராதது.
கார்த்திக்+அம்மா

Anonymous said...

Your post is very emotional. Let's know the other side of life also.
wish more experiences from you,
Deva..

Anonymous said...

superb,

your poems are very nice

Anonymous said...

அழகான கவிதை வரிகள், அதை படிக்கும் பொது மனது கனக்கிறது

Anonymous said...

ஹேமா,
கவிதை ரொம்ப உருக்கமா இருந்திச்சு.
கார்த்திக் அம்மாவுக்கு ஆறுதல்.

Anonymous said...

இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!//////////////////////////





ஆழமான சொற்பிரயோகம்

Anonymous said...

கமல் நீங்களும் அப்புக்குட்டி மாதிரி ஒண்டும் கிண்டல் பண்ணேல்லத்தானே?இப்போ எல்லாம் சுதந்திரம்,தமிழ் என்கிற இரண்டு வார்த்தைகளுமே ஏனோ தானோ எண்டுதான்.சுதந்திரமா அது பிரச்சனையில்லை.எவ்வளவு தேவையோ எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ்,அதுவும் வாயில வாறதைப் பேசி தன் எண்ணத்தை புரிய வைச்சா சரி என்கிற மாதிரி.பெரிசா ஒண்டும் இந்த இரண்டு வார்த்தைகளைப் பற்றியும் கவலைப் படத் தேவையில்லை.அதுதான்.

Anonymous said...

வணக்கம் ஜமால்.முழுக் கவிதையையுமே உணர்வோடு ரசித்திருகிறீர்கள்.மனதின் வலி வரிகளாய்.நன்றி ஜமால்.

Anonymous said...

வணக்கம் கார்த்திக் அம்மா.உங்கள் சோகம் வார்த்தைகளுக்குள் ஆறுதல் சொல்லமுடியாத பாரம்.உங்கள் பக்கம் வந்தேன் மனம் விம்மித் தவிக்க,மிகுதியை வாசிக்க முடியாமல் பாதியோடு வந்து விட்டேன்.கவலை வேண்டாம்.
மீண்டும் வருவேன்.உங்கள் மகன் உங்களோடு என்றும் துணையாய் இருப்பார்.

Anonymous said...

வணக்கம் தேவன்மாயம்.முதல் என் பக்கம் வந்திருக்கிறீர்கள்.
வாருங்கள்.நன்றி.கருத்துக்கும்கூட.

தேவா உங்கள் பக்கம் வந்தேன். உங்களுக்குப் பின்னூட்டம் போட முயற்சித்தேன்.முடியவில்லை.
உங்களது பின்னூட்ட முறை ஏனோ என் கணணியால் போட முடிவதில்லை.உருப்படாதது அணிமா அவர்களுடைய முறையும் அதைப்போலவே.அதுதான் பிரச்சனை.

உங்கள் கவிதை படித்தேன்.சொல்ல முயன்றேன்.
ஆம்!
கல்லூரி நினைவுகளும்
கனாக்கண்ட காலங்களும்
காத்திருக்கும் உயிர்த்தீயை
வாழுகின்ற காலமெல்லாம்...

இந்தப் பந்தியில்
காத்திருக்கும் உயிர்த்தீக்குள்
வாழுகின்ற காலமெல்லாம்.
அல்லது
வாழுகின்ற காலமெல்லாம்,
காத்திருக்கும் உயிர்த்தீக்குள்.
என்று மாற்றிப் பாருங்கள்.கவிதையின் ஆழம் இன்னும் அழகாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

வாங்க நசரேயன்.தங்கள் கனமான கருத்துக்கும் நன்றி.அடிக்கடி வாங்க.

Anonymous said...

நன்றி கபீஸ்.உங்கள் பக்கம் வந்தேன்.அரசியல் பதிவு.ஒன்றும் புரியவில்லை.வந்துவிட்டேன்.

Anonymous said...

வணக்கம் சுரேஷ்.கருத்துக்கும் கூட.என் மற்றைய பக்கத்திற்கும் வாருங்கள்.நன்றி SUREஷ்.

Anonymous said...

Katithayin soham urukkamanathu.

Anonymous said...

''மதியமும் இல்லாமல் மாலையும் இல்லாமல்
மத்திமமான நேரம்.வெளியே மழை சிறிதாகத்
தூறல் போட்டு அழ,பூமாதேவி புளுதி வெப்பத்தை அள்ளி வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.ரதியின் கண்கள் அந்த இயற்கையின் விளையாட்டையும் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாலும் அவள் மனம் மட்டும் அந்த மழைத் தூறல்போல தன் கடந்துபோன நினைவுத் தூறல்களால் நனைந்து கொண்டிருந்தது.//

//ஹேமா! எப்பிடி இருக்கிறீங்கள்?? உண்மையைச் சொன்னால் எனக்கு இன்று தான் நேரம் கிடைத்தது. உங்கள் தொடரைப் படிக்க. ம் ....சும்மா சொல்லக் கூடாது. ஆரம்பத்திலே இயற்கை வர்ணனை, உயர்வு நவிற்சி அணி முதலியவற்றைப் போட்டு இலக்கணத்திலும் உங்களுக்கு நல்ல பரிச்சயம் உள்ளது என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
அது சரி ஹேமா கோர்ன் பிளக்ஸும், சீரியலும் சாப்பிட்டு வாழுற வெளிநாட்டில பொரிமாவை மட்டும் மறக்காது ஊர் நினைவோடு கதையுக்க கொண்டு வந்தது எப்பிடி?? அது சரி சுவிஸில பொரிமா கிடைக்குமா?? அப்பிடி ஏதும் கிடைக்கும் என்றால் அவுஸ்ரேலியாவுக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்கோ..மறக்க வேணாம்..

Anonymous said...

கமல்,இப்போதான் கவனித்தேன்.
உங்கள் பாராட்டுக்கும் நன்றி.நிறையப் படிக்காவிட்டாலும்,என்னவோ எனக்குள் இருக்கும் ஒரு மன அவா அல்லது ஒரு வெறி என்றும் சொல்லலாம்.அதன் வெளிப்பாடுகளே என் எழுத்துக் கோர்வைகள்.
மற்றது கமல்,பொரிமா இப்போதும் எங்கள் வீட்டில் அம்மாவின் பின்னேரச் சாப்பாடு.எனக்கு அந்த ருசி இன்னும் மனசில ஞாபகம் இருக்கு.கமல்,சுவிஸ் கடைகளில் பொரிமா கிடைக்காது.கனடாவில்
"சமபோச"என்று இப்பிடி ஒரு மா கடைகளில் கிடைப்பதாகக் கேள்விப்
பட்டிருக்கிறேன்.உங்களுக்கு வேணுமானால் நான் செய்துதான் அனுப்பவேணும்.அனுப்பவா?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP