Thursday, December 04, 2008

மீண்டும் மகளாகிறாள்(2)

தி அப்போ அவளுக்கு வயது பதினாறு தொடங்கிய வேளை.அழகான இளம் பருவச் சிட்டு.மெலிதாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாத அழகு உருவம்.வயதைவிட மீறிய தோற்றமும் நீண்ட கூந்தலுமாய் வலம் வரும் சங்கீத சாமரம்.பார்ப்பவரை சுலபத்தில் கவரும் கருமையான அகல விரித்த அழகான குறுகுறு கண்களும்கூட.இத்தனைக்கும் துடியாட்டம் இல்லாத மென்மையான பெண்.யாரோடும் பேசக் கூடக் கூச்ச சுபாவம் கொண்டவள்.அப்படியே பேசினாலும் பக்கத்தில் நிற்பவர் கூர்ந்து கவனித்தால்தான் அவள் என்ன சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.வீட்டில் தன் அம்மாவுக்கு ஓரளவு ஒத்தாசை புரிவாள்.
மற்றும்படி பள்ளிப் படிப்புத் தவிர முற்றத்துத் துளசிச்செடி,செவ்வந்தி,செவ்வரத்தை,கலர் கலரான குரோட்டன்கள், வானொலி,கதைப்புத்தகங்களோடுதான் அவளது கடிகாரம் நகர்ந்து கொண்டிருக்கும்.அவளை எப்போதும் அவள் வேலைகள் தவிர்ந்த நேரம் தவிர உள் அறைக்குள்தான் காணலாம்.அடுத்த வீட்டிற்குக் கூட ஏதாவது தேவையில்லாமல் போக மாட்டாள்.பக்கத்துவீட்டுத் தங்கமணி அக்கா அவளை விட 4-5 வயதே வித்தியாசமாய் இருப்பார்.அவர்கூட
"ஏன் ரதி நானும் உங்களைப் போலத்தானே எங்கட வீட்லயும் யாரும் இல்ல.அண்ணாவும் காலேல போனா இரவுக்குத்தான் வீட்டுக்கு வாறவர்.நானும் இங்க தனியத்தான்.வரலாம்தானே"என்பார்.என்றாலும் அதற்கும் அவள் ஒன்றுமே சொல்லாமல் மெல்லச் சிரிப்போடு கிணற்றில் தண்ணீரைக் குடத்துள் நிரப்பிக் கொண்டு வந்துவிடுவாள்.இவளிடம் கதை கேட்பதற்காகவே இவளைச் சிலர் கிண்டல் செய்வார்கள்."என்ன ரதி உமக்கு மட்டும் எந்தக் கடையில அரிசி.எத்தனை மீற்றரில சட்டை தைச்சு போடுறனீர்.வாயில் என்ன கொளுக்கட்டையோ"என்று.அதற்கும் சின்னப் புன்னகைதான் பதிலாய் இருக்கும் அவளிடம்.கோபம் கூட வராது.அதை வீட்டில் வந்து குறையாய் சொன்னதும் கிடையாது.அது அவர்களின் சுபாவம் என்று பேசாமல் இருந்து விடுவாள்.வீட்டிற்கு யாரும் வந்தால் கூட வேளியே வந்து பார்ப்பது கிடையாது.வந்திருப்பவர்கள்தான் "ரதி எங்கே" என்று தேடி வந்து சுகம் விசாரித்துப் போவார்கள்.அவளைப் பற்றி அறியாதவர்களுக்கு அவளது அமைதி அகம்பாவமாகவே தெரியும்.

அவளது குடும்பம் நடுத்தரமானது.பெரிதாக என்று எதுவும் இல்லாமல் அதேசமயம் இல்லை என்கிற இல்லாமையும் இல்லாமல் இருந்தது.
அவளுடைய அப்பா இலங்கையின் மலையகப் பகுதியில் ஒரு சாதாரணப் பாடசாலை அதிபர்.அம்மா,அப்பாவின் வருமானத்திற்கேற்ப கட்டுச்
செட்டாகக் குடும்பம் நடத்தும் குடும்பத் தலைவி.அவளுக்கு மூன்று சகோதரர்கள்.ஒரு தம்பி இரண்டு தங்கைகள்.அவளது அப்பா ஒவ்வொரு பாடசாலை விடுமுறை வந்து போவார்.அல்லது இவர்கள் எல்லோருமாக அங்கு போய் வருவார்கள்.ரதி க.பொ.த(11ம் தரம்)சாதாரணம் படித்துத் தேர்வு எழுதிவிட்டுக் பெறுபேற்றுகாகக் காத்திருந்தாள்.அடுத்த தம்பி தங்கைகளும் இவளுக்கு அடுத்த தர வகுப்புக்களில் படித்துக் கொண்டிருந்தார்கள்.படிப்பில் தம்பி மட்டுமே கெட்டிக்காரன்.பெண்கள் மூவரும் சாதாரண நிலையிலேயே படித்துப் புள்ளிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.மேலதிக மாலை நேர வகுப்புக்களுக்குப் போய் படிக்கக்கூடிய வசதியும் வீட்டில் இல்லை.இந்த அறிவே போதும்.
காலாகாலத்தில் நல்லதாக வரன் கிடைத்தால் கல்யாணம் செய்து கொடுப்பதே சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு உண்டான ஒரு தலையெழுத்து.இது ரதியின் வீட்டுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன!ஆனால் அந்த வீட்டில் என்ன இருந்ததோ இல்லையோ அன்பிற்கும் பாசத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவேயில்லை.அப்பாவின் கடிதம் வர இரண்டொரு நாள் பிந்திவிட்டால் போதும்.அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.அவ்வளவு காதல் மிக்க பாசப்பிடிப்பான அப்பா அம்மா.அப்பா வீடு வந்து நிற்கும் விடுமுறை நாட்கள் அத்தனையும் வீடு கோயில்போல தெய்வீகமாய் குதூகலிக்கும்.சமையல் சாப்பாடு எல்லாம் தடல்புடலாய் வேலி கடக்கும்.சினிமா,கோவில் என்று எல்லோருமாகப் போவார்கள்.இன்னுமொன்று ரகசியமாய்.ஏதாவது பொய் சாட்டுச் சொல்லிவிட்டு அப்பாவும் அம்மாவும் மட்டும் விடுமுறை முடிந்து போகுமுன் 3-4 படங்கள் பார்த்துவிடுவார்கள்.(இன்னும் வருவாள்)

ஹேமா(சுவிஸ்)

7 comments:

கவின் said...

தொடருங்கள்,,,,,,,,,,,,,,,

ஹேமா, said...

வாங்கோ கவின்,நன்றி.

தங்கராசா ஜீவராஜ் said...

இயல்பான நடை பாராட்டுக்கள் தொடருங்கள்.....

Muniappan Pakkangal said...

A nice start.

ஹேமா, said...

வணக்கம் ஜீவராஜ்.முதன் முதலாக வந்து கருத்தும் தந்ததற்கும் நன்றி.நேரில் அனுபவித்தவற்றை மனதில் பட்டதுபோல எழுதுகிறேன்.
அவ்வளவும்தான்.

கமல் said...

பெண்மை கொண்ட மௌனம்.. பிரிந்தாலும் நெஞ்சில் சலனம்,.... (எங்கேயோ கேட்ட பாடல் வரி இந்த இடத்திற்குப் பொருந்தும் என்பதால் இடுகின்றேன்.) அது சரி ஹேமா உம்மட வாயுக்கை ஏதாவது கொழுக்கட்டையோ??? என்ன சொல்லும்?? அப்படியே எங்கட யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் கதையில இழையோடுது.. தொடருங்கள்!

ஹேமா, said...

கமல்,சரி...சரி சந்தோஷம்.நான் எழுதுற கதைக்குப் பாட்டுப் பாடவும் ஆள் கிடைச்சாச்சு!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP