Tuesday, November 11, 2008

பத்திரிகை வாசிப்பின் சுவாரஸ்யம்.

என்ன...புதிய தளம் திரும்பவும் தொடர் விளையாட்டுக்குள் என்று எல்லாரும் யோசிக்கிறது விளங்குது எனக்கு.இது இப்போ பத்திரிகை,புத்தகத் தொடராக இருக்கிறது.ம்ம்ம்...என்ன செய்ய கடையம் ஆனந்த் அவர்களின் திருவிளையாடல் இது.அவரின் 75 ஆவது பதிவில் இப்படி ஒரு விளையாட்டில் என்னை மாட்டி வைக்கவேணும் என்று திருவண்ணாமலை அருணாசலேசுவரருக்கு வேண்டுதலாம்.அதைத்தான் நிறைவேற்றுகிறேன் நான்.இல்லாட்டி சாமி கண்ணைக் குத்தும்.

1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை படிக்க தொடங்கினீர்கள்?

என் அப்பா சினிமா தவிர நிறையப் புத்தகங்கள் பத்திரிகைகள் வாசிக்கும் ஆர்வமுள்வர்.அவர் படித்துவிட்டுப் போடும் புத்தகங்களில் இருந்தே வாசிக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.அந்த நேரத்தில் அரசியல் தவிர்ந்த சினிமா,
சிறுகதைகள்,வட்டம் வட்டமாய் படம் போட்டபடி இருக்கும் தொடர்கதைகள் வாசிப்பேன்.இதைவிடக் குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்பாமல் விடமாட்டேன்.அது பெரிய வேலை மாதிரி எனக்கு.எத்தனையோ நாட்கள் கழிவறையில்கூட கூட்டுச்சேர்ந்திருக்கிறது குறுக்கெழுத்துப்போட்டி.

2)அறிமுகமான முதல் புத்தகம்?

முதல் புத்தகம் 3-4 வயதில் அம்புலிமாமா என்றே நினைக்கிறேன்.நீதிக்கதைகள் நிறைந்த புத்தகம்.இப்போ இப்புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.இப்புத்தகங்கள் அப்பா சேமித்து வைத்திருந்த புத்தகங்கள்.அப்பாவுக்கு ஒரு சபாஷ்.நன்றியும்கூட.புத்தகம் இல்லாமலே அப்பாவின் நெஞ்சே புத்தகம் ஆகி நிறையப் படித்திருக்கிறேன் அவர் நெஞ்சில் படுத்துக் கொண்டு."பித்தா பிறை சூடி"தேவாரம் அவர் நெஞ்சில் படுத்தபடிதான் பாடமாக்கினேன்.இன்றும் ஞாபகம் இருக்கிறது.

3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?

ஓ...அதுவா.பழைய இளமைக்கால ஞாபகங்களைக் கிளறும் கதை இது.கதைப்புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் வந்த வயதில் பள்ளிப் படிப்பும் கூடுதல் கடுமையாக இருக்கும்.என்றாலும் சிநேகிதிகளின் இரவல் புத்தகங்களை(கூடுதலாக ராணிமுத்து) வாங்கிவந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பதால் எனக்குப் பிடிக்காத ஆங்கிலம்,கணக்குப் பாட நேரம் என் சிநேகிதி கலாவும் நானும் பின் கதிரையில் புத்தகத்துக்குள்ளோ கொப்பிக்குள்ளோ நடுவில் வைத்து வாசிப்போம்.ஒரு முறை ஆங்கில ஆசிரியரிடம் அகப்பட்டு அதிபரின் அறையில் 4 மணித்தியாலங்கள் பார்வைப் பொருளாக இருத்தப்பட்டேன்.அடுத்த முறை அகப்பட்டால் அதிபரின் அறையைச் சுத்தம் செய்ய வேண்டி வரும் என்றும் அச்சுறுத்தி அனுப்பப்பட்டேன்.பின்னொரு முறை கணக்கு டீச்சரிடம் அகப்பட்டு 100 கணக்குகள் கொண்ட சிறிய பயிற்சிப் புத்தகம் முழுதும் செய்து அடுத்த நாள் கொடுத்தேன்.கொடுக்கா விட்டால் அடுத்தநாள் 50 கணக்குகள் கூடிவிடுமே!

இதைவிட வீட்டிலும் காலை 5 மணிக்குப் பிள்ளை படிக்கிறாள் என்று அம்மா எழுப்பிவிட்டால் காலை 5 மணியிலேயே புத்தகத்து நடுவில் கதைப்புத்தகம்.2-3 நாட்கள் மாட்டிக் கொண்டேன்.அம்மாவின் தணடனை வித்தியாசம்.முதலில் நல்ல அடி,திட்டு. தனியாகப் படுக்க வேணும்.விரும்பின சாமான்கள் சீக்கிரம் கிடைக்காது.அப்பாவிடம் சொல்லி,அப்பா என்னோடு பேசமாட்டார்.பிறகு மன்னிப்புக் கேக்க வேணும்.இப்படி நிறைய கதைப்புத்தக அவஸ்தை.

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?

நிறையவே உண்டு.செங்கை ஆழியான்,மணியன்,ஜெயகாந்தன்,ரமணிசந்திரன் போன்றவர்களின் கதைகள் நிறைய வாசிப்பேன்.எரிக்கப்பட்ட எங்கள் யாழ் நுலகத்தில் இருந்தும் அப்பா நிறையப் புத்தகங்கள் எடுத்துத் தருவார்.
கடல்புறா,பாரீஸுக்குப் போ, பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள்,மற்றும் ஈழத்து எழுத்தாளைகளுடைய சின்னச் சின்ன புத்தகங்கள்,அர்த்தமுள்ள இந்துமதம,கவிதைப் புத்தகங்கள் என்று நிறையவே வாசிக்கும் பழக்கமிருந்தது.இப்போ மனதில் குழப்பங்கள் கூடி வாசிக்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது.

சரி...சரி போதும்.நல்ல வேளை சினிமாத் தொடர்போல பெ...ரி...சா இல்ல.அதுவரைக்கும் ஆனந்த்க்கு நன்றி.இனி இந்தத் தொடரைத் தொடர் 2-3 பேரை நானும் இழுக்கத்தானே வேணும்.யார்...அது?

1)விக்கி
2)அப்புச்சி(இவரின் பதிவு நம்பிக்கையில்லை)
3)திலீபன்-உண்மைத்தமிழன்
4)உருப்பட்டாத(வன்)து அணிமா
5)விஷ்ணு

ஹேமா(சுவிஸ்)

11 comments:

Anonymous said...

ஹேமா நல்ல எழுதியிருக்கீங்க. குழப்பத்தை விடுங்க. தொடர்ந்து படிங்க.
அடுத்து என்ன தொடர் பதிவு இருக்குன்னு பார்த்தீட்டு வாரேன்.

Anonymous said...

நானும் நிறைய புத்தகம் படிப்பேன், குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆன்மிகமும் படிப்பேன் ம.க.இ.க தோழர்கள் எழுதிய புத்தகங்களையும் படிப்பேன்.கடைசியாக மனம் லயித்து படித்தது கவிஞர் வாலி அவர்களின் "கலைஞர் காவியம்".

Anonymous said...

நல்ல அடி,திட்டு. தனியாகப் படுக்க வேணும்.விரும்பின சாமான்கள் சீக்கிரம் கிடைக்காது.அப்பாவிடம் சொல்லி,அப்பா என்னோடு பேசமாட்டார்.பிறகு மன்னிப்புக் கேக்க வேணும்.இப்படி நிறைய கதைப்புத்தக அவஸ்தை.
//

ஹி...ஹி...ஹி..இப்பவே கண்ணகட்டுதே.

Anonymous said...

நன்றி ஆனந்த்.அன்று மலர்ந்த என் நினைவுகளைத் திரும்பவும் கொண்டு வந்ததற்கு.உண்மையில் இதை எழுதும்போது சம்பவங்களோடே கலந்தே இருந்தேன்.

எப்பிடி...எப்பிடி கண்ணைக் கட்டுதோ உங்களுக்கு.அந்த நேரத்தில எப்பிடி எனக்குக் கண்ணைக் கட்டியிருக்கும்.

Anonymous said...

திலீபன்,உங்கள் பெயரையும் இணைத்துவிடவா?நீங்கள் சினிமா தொடர்போல எழுத மாட்டீர்களோ என்று நினைத்துத்தான் உங்கள் பெயரை இணைக்காமல் விட்டேன்.
சினிமாவைவிட புத்தக ஆர்வம் இருக்கு என்றே நினைக்கிறேன்.
எழுதுங்களேன்.

Anonymous said...

என்னையும் கோர்த்துவிட்டாச்சா....

அவ்வ்வ்வ்.....

Anonymous said...

//பின்னொரு முறை கணக்கு டீச்சரிடம் அகப்பட்டு 100 கணக்குகள் கொண்ட சிறிய பயிற்சிப் புத்தகம் முழுதும் செய்து அடுத்த நாள் கொடுத்தேன்.//
அதுல எத்தனை தப்போ...?
//ஒரு முறை ஆங்கில ஆசிரியரிடம் அகப்பட்டு அதிபரின் அறையில் 4 மணித்தியாலங்கள் பார்வைப் பொருளாக இருத்தப்பட்டேன்//
ஹி..ஹி....ஹோ..ஹோ..ஹி...ஹி... நினைச்சுப் பார்த்தேன்... சிரிப்பை அடக்க முடியலை.
வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல்ல ஒருத்தர் நிப்பாரு தெரியுமா...?!

Anonymous said...

//வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல்ல ஒருத்தர் நிப்பாரு தெரியுமா...?!//

அடக் கடவுளே!
தமிழ்பறவை அண்ணா...இருங்க இருங்க ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்தானே.
நானும் இப்பிடி விழுந்து விழுந்து சிரிக்க ஒரு நாள் வரும்தானே!என் அவஸ்தை உங்களுக்குச் சிரிப்புஎன்ன!

உங்கள் பின்னூட்டம் பார்த்து நான் தனியாக இருந்து பலமாகச் ச்ரித்தேன்.

Anonymous said...

இன்னும் வாசிக்கலாமே ஹேமா.. எனக்கும் அப்படித்தான் குழப்பங்கள் இருக்கிறதால புத்தகத்தில் மனம் ஒன்றுவது கஷ்டமாய் இருக்கிறது, இருந்தாலும் என்னால் முடிந்தவரை வாசிக் வேண்டும் என்பது என் ஆசை..

முக்கியமாய் புத்தகம் வாசிக்க கூடிய சூழல் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது...

Anonymous said...

தமிழன்,நிறையப் புத்தகங்கம் வாசிக்க ஆசைதான்.இங்கு கிடைப்பதும் குறைவாக இருக்கிறது.நேரமும் குறைவாகவே கிடைக்கிறது.
வாசிக்கும் பொறுமையும் போகிறது.

Anonymous said...

அப்புலிமாமா இந்தியாவில் இப்பொழுதும் வந்து கொண்டிருக்கிறது!!

எனக்கும் இது மாதிரியான அனுபவங்கள் நினறய உண்டு!! பள்ளி நினைவுகளை கிலறிவிட்டீர்கள்!!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP