நான் : அடக் கடவுளே கடவுளே
கடவுள் : ஏய் பொண்ணு ஏன் எப்பவும் என்னைக் கூப்பிடுற.என்னைத் திட்டிக்கிட்டே இருக்கே நீ.ஏன் என்னாச்சு.நான் தான் கடவுள்.ரொம்ப காலம் உன் புலம்பல் எல்லாம் பாத்திட்டுத்தான் இப்போ வந்திருக்கேன்.சொல்லு உனக்கு என்ன வேணும்.எல்லாம் நான் தருவேன்.என்னால முடியாதது இந்த உலகத்தில ஒண்ணுமே இல்ல.
நான் : கடவுளா நீங்களா !அப்பிடின்னு ஒருதர் இருக்காரா.உங்களையாவது அதுவும் நான் கூப்பிடுறாதவது.அதுவும் இவ்ளோ திமிரோட.உங்களுக்கே இவ்ளோ திமிர்ன்னா பிறகு எப்பிடி நீங்க படைச்ச மனுஷன் மட்டும் சாதாரணமா இருப்பான்.என்னமோ எல்லாரும் கஸ்டம் வந்தா கடவுளேன்னு சொல்லுவாங்க அதான் நானும் சொல்லிட்டேன்.சத்தியமா இனிமேல் நான் அப்பிடி ஒரு வார்த்தையைச் சொல்லவே மாட்டேன்.தயவு செய்து போய்டுங்க.
கடவுள் : ஏம்மா இவ்ளோ கோவமா இருக்கே நீ.உன் பதிவெல்லாம் பாத்திட்டுத்தான் இருகேன்.எரிச்சல் கோவம்ன்னு வந்தவன் போனவன் ஒருத்தனையும் மிச்சம் விட்டு வைக்காம திட்டிட்டே இருக்க.அப்பிடி என்னதான் உன் மனசில எரிச்சல்.சொல்லு.கூப்பிட்ட குரலுக்கு வரணும்ங்கிறது என் பழக்கம்.கோவம் இல்லாமக் கொஞ்சம் பேசு பறவாயில்ல.மனசுக்கும ஆறுதலா இருக்கும்.உனக்கு ஏதாச்சும் குழப்பமிருந்தாலும் பகிர்ந்துக்கலாம்.வா...இங்க பக்கதில வா.
நான் : அடக் கடவுளே.எனக்கு உங்க கூடப் பேச எதுவுமில்ல.அதோட பிடிக்கல.எனக்கு நேரமும் இல்ல.மனசு அமைதி வேணும்ன்னா நிறையப் பாட்டுக் கேப்பேன்.எனக்கு மனசில படுறதை எல்லாம் எழுதுவேன்.இல்லாட்டி கண்ணை மூடிக்கிட்டு பேசாம படுத்திருப்பேன்.இப்போ நான் நிறைய அலுவலா இருகேன்.நின்மதியாவும் இருக்கேன்.உங்க கூடப் பேசினாத்தான் குழம்பிடுவேன்.எனக்கு நீங்க வேணாம் போயிடுங்க.
கடவுள் : சரி...சரி.நீ சொல்றதெல்லாம் நல்ல விஷயம்தான்.மனசை அமைதியா வச்சிருக்க நிறைய வழிகள் வச்சிருக்க.ஆனாலும் அலுவல் அலுவல்ன்னு சொல்ற.அப்பிடீனா...? அது என்ன உங்க ஊர் பாஷையா?
நான் : என்ன லொள்ளா?அது எங்கட யாப்பாணத் தமிழ்.உங்களுகுத் தெரியாட்டிப் போங்கோ.நானே வாழ்க்கை வெறுத்து சரி உயிர் இருக்கேன்னு வழ்க்கையோடயே சண்டை பிடிச்சு பிடிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்.நீங்கவேற வந்து உயிரை எடுக்கிறீங்க.மனசில என்னமோ ஒரு அவதி.எல்லாம் இருந்தாலும் நின்மதி இல்லாம இருக்கேன்.எனக்கு முடியல கடவுளே.
கடவுள் : சரி ஹேமா யோசிக்காதீங்க.அழவேணாம்.என் கையை இறுக்கிப் பிடிச்சுக்கோங்க.தண்ணி கொஞ்சம் குடிங்க.நான் இருக்கேன்.சரியா.நீங்க சொல்லுங்க.சரி நான் கடவுள் இல்ல.உங்க சிநேகிதன்.உங்க கஸ்டத்தில நானும் பங்கு போட்டுக்கிறேன் சொல்லுங்க.முடிஞ்சா உதவியும் பண்றேன்.இப்பிடி வாங்க பக்கதில.
நான் : சரி நான் பக்கதில எல்லாம் வரல.என்னவோ உதவி பண்றதா சொல்றீங்க.காசு பணம் எதுவும் கேக்கமாட்டீங்கதானே.சரி... அப்படின்னா முதல்லே இதுக்குப் பதில் சொல்லுங்க .... இப்பெல்லாம் வாழ்க்கை ஏன் ஒரு பெரிய சிக்கலா இருக்கு? ஒவ்வொரு படியும் கஸ்டப்படுத்தான் ஏறவேண்டியிருக்கு.போராட்டமா இருக்கு.
கடவுள் : வாழ்க்கையைச் சும்மா அப்படியே விளையாட்டா வாழ்ந்து பாருங்க.ரொம்ப யோசிக்காமா அதைப் பத்தியே நினைச்சு குழப்பமாகாம அலசி ஆராயம விட்டுப் பாருங்க.வாழ்க்கை சுலபமா இருக்கும்.எந்த விஷயத்தையும் பெரிசா ஆக்கவேணாம்.எந்தக் கேள்விக்கும் பதில இருக்கிற மாதிரி வாழ்க்கைக்கும் வழி இருக்கு.
நான் : ஏன் தொடர்ந்த துன்பம் தொடர்ந்த பிரச்சனைகள்ன்னு சந்தோஷங்களைத் தொலைச்சிட்டு அவதிப்படுறோம்?
கடவுள் : இது முக்கியமான ஒண்ணு.வாழ்க்கையை பாத்துப் பயந்து பயந்து அதையே அலசி ஆராய்ஞ்சு கவலைப்படுறதே உங்க வாழ்க்கையா போகுது.அப்போ எப்பிடி சந்தோஷம் உங்க பக்கதில வரும்.முதல்ல சந்தோஷத்தை உங்க பக்கதில வர வழி விடுங்க.
நான் : ம்ம்ம்....நீங்க வேற.அடுத்த நிமிஷம் - அடுத்த வேளை என்ன நடக்கும்ன்னு எப்பிடி ஆகும்ன்னு உலகத்தில என்னென்னவோ எல்லாம் நடந்துகிட்டிருக்கு.எப்பிடி சந்தோஷமா எதையாவது பண்றது.நினைக்கவே பயமாயிருக்கு.
கடவுள் : பாருங்க ஹேமா ,ஒண்ணு ஆவுறதும் அழியறதும்ங்கிறது வாழ்வியலில் தவிர்க்க முடியாத ஒண்ணு.அரசியலில இதெல்லாம் சகஜம்ன்னு சொல்றாப்போல இதுக்கெல்லாம் கவலைப்பட்டா...உங்களுக்குக் கிடைச்சிருக்கிற வாழ்க்கையைச் சரியாக்கிகிட்டு உங்களுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்துகிட்டு போய்கிட்டே இருங்க.
நான் : அட! என்ன கடவுளாரே மனசுக்கு எவ்ளோ கஸ்டமா இருக்கு.உலகம் இடிஞ்சு போகுதுன்னு சொல்றாங்க.இப்போ எல்லாம் ஏரோப்பிளேன் எல்லாம் கண்ட பாட்டுக்கு விழுந்து தொலையுது.எது எப்பிடின்னு எங்க என்ன நடக்குதுன்னு கவலையா இருக்குது.என்ன நீங்க ?
கடவுள் : வேதனை கவலை கஸ்டம் எல்லாம் இருக்கும்தான்.அது அப்ப வந்து அப்பவே போயிடணும்.உங்க மனசில நிலைச்சு நிக்ககிறதுதான் கூடாது.ஆனாலும் அது உங்க விருப்பம்.
நான் : அட என்னைய்யா நீங்க.கஸ்டம் கவலை எல்லாம் நம்ம நம்ம விருப்பம்ன்னா ஏன் நல்லவங்க ஒண்ணும் தெரியாத அப்பாவிங்க எல்லாம் கஸ்டப்படுறாங்க?சந்தோஷமும் எங்க விருப்பம்தானே?
கடவுள் : பாருங்க ஹேமா தங்கத்தைச் சுட்டாத்தான் அழகான நகைகளா ஆகுது.மண்ணைப் பிசைஞ்சு எடுத்து குயவன் சுத்தணும்.அப்பத்தான் அழகா குடம் ஆகும்.அப்பிடித்தா நல்லவங்களுக்கு நிறைய சோதனைகள் வரும்.ஆனா சுலபமா போய்டும்.கசப்பு மருந்து போலத்தான் அவங்க கஸ்டம்.குடிச்சா நோய் மாறிடும்.
நான் : அப்பிடின்ன கஸ்டங்கள் வேணுமா வாழ்க்கையில.அது ஒரு படிப்பினையாவும் இருக்கும்ன்னும் சொல்றீங்க.
கடவுள் : சரியாப் புரிஞ்சுகிட்டீங்க.வாழ்க்கையில பட்டுத் தெளியுறது இருக்கே அது போல ஒரு வாத்தியார் உங்களுக்குக் கிடைக்காது.முதல்ல சோதனையெல்லாம் வச்சு அப்புறம் அழகா பாடம் சொல்லித் தந்து உங்க குழப்பங்களைத் தெளிய வைப்பார் அந்த ஆசான்.
நான் : எல்லாம் சரிதான் ஏன் நாங்க அந்த பிரச்சனைகளுக்குள்ள எல்லாம் அகப்படாம இருக்க முடியாதா கடவுளே?
கடவுள் : பிரச்சினைகள்தான் உங்களுக்குப் பயன் தரும் பாடத்தைச் சொல்லித்தர வேணுங்கறதுக்காக உண்டாக்கப்பட்டத் தடைக் கற்கள்.அதனாலே உங்க மனவலிமை அதிகமாகும்.போராடவும் பொறுத்துக் கொள்ளவும் தெரிஞ்சா உங்க உள் மனசோட பலம் அதிகமாகும். பிரச்சினை இல்லாம இருந்தா இது நடக்காது. உங்களைப் பார்த்து உங்க பின்னாடி வளரும் இளம் சந்ததிகளும் பாடம் படிச்சுக்கும்.சரிதானே.
நான் : என்னவோ சொல்றீங்க.இவ்ளோ ஓடிட்டு இருக்கு உலகத்தில நான் எங்கே போறேன்னே தெரியாம ஓடிட்டு இருக்கேன்.பயமும் பைத்தியமும் பிடிச்சிருச்சுரும் போல இருக்கு எனக்கு.
கடவுள் : நீங்க வெளிப்படையாப் பாத்தீங்கன்னா எங்கே போறோம்னு உங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் மனசை ஒரு நிலைப்படுத்தி நினைச்சுப்பாருங்க! எங்கே போறோம்ன்னு தெரியும்.வெளிப் பார்வைக்கு அது ஒரு கனவு போலத்தான் இருக்கும்! விழிப்பாயிருங்க! கண்ணாலே பார்க்கத்தான் முடியும். இதயத்தாலே மட்டும்தான் உள்ளுணர்வு என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்!!
நான் : சில சமயம் சீக்கிரமா முன்னேற முடியல நினைச்சது நடக்கலங்கிறது சரியான வழிலே போலேங்கறத விட அதிகமா வலிக்குதே! என்ன செய்யறது?மத்தவங்க செய்ற தப்புக்கெல்லாம் கோவம் வருதே...ஏன்?
கடவுள் : முன்னேற்றம்ங்கிறது மத்தவங்க உங்க செயலோட பலன்களை எடை போடறது! திருப்தியா இருக்குதா இல்லயான்னு பாக்கிறது.நீங்க தீர்மானிக்கற விஷயம் என்னன்னா... எங்கே போறோம்னு தெரிஞ்சுக்கறது இன்னும் போய்க்கிட்டே இருக்கோமேங்கிறது சந்தோஷம் தர விஷயம் இல்லையா?மத்தவங்க எப்பிடியும் உங்களைக் கணக்குப் போடட்டும்.நீங்க உங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருங்க.திரும்பிப் பாத்தீங்கன்னா உங்களை நிறுத்திப் பேசிக்கிட்டே இருப்பாங்க.
ம்ம்ம்...மத்தவங்களை ஏன் நீங்க பாக்கிறீங்க.அதுவும் நீங்களே தேடிக்கிற ஒரு கஸ்டம்தான்.அதோட அதன் பலனை அவனே அனுபவிப்பான்.
நான் : அட என்னப்பா நீங்க! ரொம்பக் கஷ்டத்திலே இருக்கறப்போ எப்படி ஊக்கமா வேலை செய்ய முடியும்?எப்பிடி களைக்காம நடக்க முடியும்?அடுத்தவன் செய்ற அசிங்கங்கள் எங்களையும்தானே தாக்குது.எப்பிடி சும்மா இருக்கிறது.தப்புன்னாவது சொல்ல வேண்டாமா?
கடவுள் : எப்பவுமே எவ்வளவு தூரம் போயிருக்கோம் என்ன பண்ணியிருக்கோம்ன்னு பாக்காதீங்க. இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னும் பாக்காதீங்க!உங்களுக்குக் கிடைச்ச பலனைப் பாருங்க!உங்க கைவிட்டுப் போனதைப் பாக்காதீங்க!
அடுத்தவன் விஷயம் நீங்க சொல்றது சரிதான்.நீங்க கொஞ்சம் நின்மதியா இருக்கணும்ன்னா கண்ணைக் கொஞ்சம் மூடித்தான் ஆகணும்.
நான் : கடவுளே உங்களுக்கு மனுஷங்களைப் பார்த்தா ஆச்சரியமா அதிசயமா இருக்கா என்ன?
கடவுள் : ரொம்பவே இருக்கு! கஷ்டப்படற போது என்னப் பார்த்து “எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் அப்படின்னு கேட்கறவங்க சுகப்படற போது இது எப்பிடி எனக்குக் கிடைச்சதுன்னு " கேட்கறதேயில்ல.ஒரு நன்றி கூட இல்லையே.இது எனக்குப் புரியலே!எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு ஆசைப்படறாங்க! ஆனா உண்மை பக்கம் யாருமே இருக்க மாட்டேங்கறாங்க!
நான் : அட சில சமயம் நான் கூடத்தான் “நான் யாரு?” “ஏன் பொறந்தேன்?” இப்படின்னு கேட்கறேன்! இது வரைக்கும் பதிலே கிடைக்கல.
கடவுள் : நீங்க யாருன்னு கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்படாதீங்க.ஆனா நீங்க யாரா இருக்கணும்னு தீர்மானிங்க.இங்கே ஏன் பொறந்தேன்னு கண்டுபிடிக்கறத விடுங்க! பொறந்ததுக்கான காரணத்தை ஆராய்ச்சி பண்றத நிறுத்துங்க!காரணத்தை நீங்களே உருவாக்குங்க.வாழ்க்கை காணாமப் போனதைக் கண்டுபிடிக்கறது இல்லே! புதுசா உருவாக்கறதுதான்! புரிஞ்சுக்கோங்க!
நான் : இவ்வளவெல்லாம் சொல்றீங்களே வாழ்க்கையைச் சிறப்பா வைச்சுக்கறது எப்படி?
கடவுள் : மறந்திடாம உங்களோட இறந்த காலத்தை வருத்தமில்லாம நினைச்சுப் பாருங்க.நிகழ்காலத்தைப் பொறுப்பா தன்னம்பிக்கையோட நடத்துங்க.எதிர்காலத்தை அச்சமில்லாம எதிர்கொள்ளுங்க¡ உங்க ஒவ்வொரு அடியும் சந்தோஷமா இருக்கும்.
நான் : கடைசியா ஒரு கேள்வி! சில சமயம் என் கேள்விகளுக்கெல்லாம் பதிலே இல்லைன்னு நினைக்கிறேன்? சரிதானா?
கடவுள் : இங்கே [வாழ்க்கையில] பதில் அளிக்கப்படாத கேள்விகளே இல்லை! சில கேள்விகளுக்குப் பதிலே இல்லைங்கறதுதான் உண்மை!!
நான் : நிறைய நன்றி கடவுளே !நிறையப் பிரயோசனமா இருந்தது.நான் இப்ப ரொம்பத் தெளிவா இருக்கேன்! ஒருவிதமான புத்துணர்ச்சியோட என் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன்! ஆமா நான் இத்தனை நேரம் உங்ககிட்ட சரியாப் பேசினேனா! விளங்கிச்சா! நான் ரொம்ப குழந்தைத்தனமா நடந்துக்கிட்ட மாதிரி இருக்கே!
கடவுள் : இது தெரிஞ்ச விஷயம்தானே! தப்பு செய்யறதும் உடனே வருந்துறதும் மனுஷங்களுக்கு இயல்பான ஒண்ணுதானே!உங்களை எல்லாம் குழந்தைகள் அப்படின்னு சொன்னாதான் நான் கடவுளா இருப்பேன்.
குழந்தைகள் செய்யற தப்பெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கறது இல்ல!
“ உங்களில உங்க வாழ்க்கையில நம்பிக்கை வையுங்க! நல்லதே நடக்கும்!
அச்சத்தை விடுங்க! ஆக்கம் தானே வரும்!
உங்க சந்தேகத்தை எல்லாம் நம்பாதீங்க! உங்க நம்பிக்கை பேர்லே சந்தேகப்படாதீங்க!வாழ்க்கை ஒரு புதிர்தான்! விடுவிக்கலாம்! பிரச்சினையே இல்ல. தீர்ந்திடும்!
என் பேர்ல நம்பிக்கை வையுங்க!எப்பவும் நண்பனாய் கூடவே இருப்பேன்!!
எப்படி வாழணும்னு தெரிஞ்சா உங்க வாழ்க்கை ரொமப அற்புதமானது! தெரிஞ்சுக்கறதுக்கு முயலுங்க!
பெரிய சாதனை எல்லாம் வலிமையால சாதிக்கல! விடாமுயற்சியாலதான் சாதிச்சிருக்காங்க! நீங்களும் சாதியுங்க! சந்தோஷமா இருங்க! ”
இப்போதைக்கு அவ்வளவுதான்; மறுபடியும் கூப்பிடுங்க.அப்ப நான் வருவேன்.போய்ட்டு வரவா !
ஹேமா(சுவிஸ்) [வாசித்ததும் பகிர்ந்துகொண்டதும்.]