Monday, January 04, 2010

ரஜனியின் பூக்கன்றும் பூனைக்குட்டியும்.

புது வருஷம் பிறந்ததால ஏதாச்சும் கொஞ்சம் சிரிப்பாப் பதிவு போடலாம்ன்னு வந்ததால இந்தப் பதிவு.

என் அண்ணி ரஜனி.அவரின் சின்னச்சின்ன நம்பிக்கைகள் என்னைச் சிரிக்க வைக்கும்.அவரோ இது மூடநம்பிக்கை இல்லை என்று வாதாடுவார்.காரணம் தெரியாமலேயே சடங்கு சம்பிரதாயம் சகுனம் என்று என்னென்ன இருக்கோ அத்தனைக்கும் பயந்து வியர்த்து நனையும் ஒரு ஜீவன்.பாவம்.

பலருடைய பதிவுகளில் மூடநம்பிக்கைகள் பற்றிப் பேசும்போது நான் என் அண்ணி பற்றியும் நகைச்சுவையாக சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.அவரைப் பொறுத்தவரை மூடநம்பிக்கை என்றில்லை.ஏதோ ஒரு மனநிலை.அல்லது வீட்டில் பெரியவர்களைப் பார்த்து வளர்ந்த முறை.அதனால் ஏற்படும் பயம் அல்லது தாக்கம்.

ஒரு நாள் வீட்டில் எல்லோருமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.அண்ணாவின் சாப்பாட்டுக்குள் ஒரு பெரிய தலைமுடி.அது அவவினுடையதுதான்.சந்தேகமேயில்லை.
அண்ணா தலைமுடியைச் சாப்பாட்டிலிருந்து பிரித்து எடுத்தார்.உடனே அண்ணி "இங்க தாங்கோ தாங்கோ"என்று வாங்கினா.சரி வாங்கினா குப்பைக்குள்தானே போடுவா என்று பார்த்தால் அண்ணாவின் தலையை(தலைமுடியை)மூன்று முறை சுற்றி தூ தூ என்று மூன்று தரம் துப்பி குப்பைக்குள் போட்டா.

ஏன் அண்ணி என்று கேட்டால் எங்கள் வீட்டில் அம்மா இப்பிடித்தான் செய்வா நானும் செய்கிறேன் என்றார்.சரி பரவாயில்லை.நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்றால் தெரியாது என்கிறா.எல்லோரும் சிர்த்துவிட்டோம்.அவவுக்குத் தன்னைக் கிண்டல் பண்ணுவதாக நினைத்துக் கோபம்தான் வந்தது.காரணம் தெரியாமலே காரியத்தைச் செய்வதிலோ அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டு செல்வதிலோ எனக்கு உடன்பாடில்லை.

இன்னொன்று.என் அண்ணி ஒரு பூங்கன்று வளர்க்கிறா.4-5 வருடங்களாக அது அழகா உயராமா வளர்ந்திருக்கு.2 வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் - அந்தச் சமயத்தில் அவரது அக்கா சுகயீனம் காரணமாகக் காலமாகி 3 வருடங்கள் இருக்கும்."மச்சாள் நேற்றுக் கனவில அக்கா வந்து எனக்குத் தாகமாயிருக்கு.ஏன் எனக்குத் தண்ணி தரமாட்டீங்களாம்.பார் என்ர தொண்டையெல்லாம் வரண்டுபோயிருக்கு என்று கேக்கிறா.இந்தப் பூக்கன்றுக்குப் பக்கத்திலதான் குந்தியிருந்தவ.நானும் இதுக்குத் தண்ணிவிட்டு மூன்று நாளாச்சுத்தான்.
நானும் இப்பத்தான் பாக்கிறன்.அப்ப இது என்ர அக்காதான்"என்றாவே பார்க்கலாம்.எனக்கு என்ன பதில் சொல்ல என்றே வரவில்லை.அந்த நிமிடத்தில் அவவின் நம்பிக்கையும் அக்கா மேல் உள்ள பாசத்தையும்தான் பார்த்து வியந்தேன்.

அண்ணா பிள்ளைகள் வர அவவை வைத்துக் கிண்டல் பண்ணி அழவே வைத்துவிட்டோம்.அந்தப் பூக்கன்றுக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அங்கு யாருக்குமே கிடைப்பதில்லை.இலைகள் கூடப் புழுதி துடைக்கப்பட்டு பளபளப்பாய் பக்கத்தில் மின்சார வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பார் என் அண்ணியின் அக்கா.

இன்னொன்று....இது இன்னும் வேடிக்கை.அண்ணி காலை 5 மணிக்கு வேலைக்குப் போவா.வேலை செய்யும் இடம் அதிக தூரமில்லை.அதனால் அதிகாலையில் 10 நிமிடங்கள் நடந்தே போவா.பல வீடுகள் இருக்கும் உள் ஒழுங்கைப் பகுதியைக் கடந்தே பெருந்தெருவுக்கு வரவேணும்.அங்கேதான் அவ வேலை செய்யும் இடம்.கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஒரே நடைபாதை ஒரே நேரம் போய்வருகிறா.எனவே அந்த நடைபாதையின் நடுவில் நித்தமும் யாரினதோ பூனையொன்று இவவைக் கண்டு பழக்கப்பட்டு இவவின் காலடிச் சத்தம் கேட்டதுமே பக்கம் வந்து உரசி மியாவ் சொல்லிப் போகிறது போல.

அண்ணி சொன்னா "அந்த நேரத்திலயும் தான் நடக்கிற சத்தம் கேட்டதுமே வந்து உரசிக் கதைக்குதாம்.போக விடுதில்லையாம்.பின்னால வருதாம்" என்று.நான் சொன்னேன்."அதுக்கு உங்களை ஒவ்வொருநாளும் கண்டு பழகிப்போச்சு.அதோட அந்த அமைதியான நேரத்தில யாருமேயில்லை.அந்த நேரத்தில உங்களைக் காணேக்க அதுக்கு ஒரு உற்சாகம் சந்தோஷம் என்றேன்."

"இல்ல மச்சாள் அது என்ர முகத்தைப் பார்த்து பார்த்து மியாவ் மியாவ் என்று கத்துது.ஒரு குழந்தைபோல ஏக்கமா என்ர முகத்தைப் பாக்குது.வாலால தடவி தடவி உரசிக் காலடியிலயே இருக்குது.ஒருவேளை அது எங்கட அக்கான்ர மகன் செத்தான்.
அவனாத்தானிருக்கும்.மறுபிறவி எடுத்து வந்திருக்கிறான்போல.அவனுக்கும் என்னை அடையாளம் தெரிஞ்சுபோச்சுது" என்றா கண்ணுக்குள் நிறைந்த பாசத்தோடு.என்ன சொல்ல நான்.கதையாய்க் கேட்டுக்கொண்டிருந்த நான் மறுபிறவி கோகிலன் என்றவுடன் வாயடைத்துப் போனேன்.அண்ணா வந்தார்.பிறகென்ன.இன்னொரு நகைச்சுவைக் கலாட்டாதான் வீட்ல.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்தச் சமயத்தில் "நடந்தது என்ன"என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "ஒரு பாம்பு தங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதாகவும் அதனால் யாருக்கும் ஆபத்து இல்லையென்றும் தங்களது மகன் இறந்த இடத்திலேயே படுத்திருக்கும் என்றும் அது தங்கள் மகனின் மறுபிறவி" என்று ஒரு குடும்பத்தினரின் நம்பிக்கையோடு ஒரு நிகழ்வு.நான் அதையும் இணையத்தில் எடுத்துக் காட்டினேன்.இதன் பிறகும் கேக்கவும் வேணுமோ.இப்போதும் அந்தப் பூனைக்குட்டி என் அண்ணியின் அக்கா மகன் கோகிலனாக உலா வருகிறார்.

ஹேமா(சுவிஸ்)

33 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வித்தியாசமான மனிதர்களும், அவர்களது நம்பிக்கைகளும், சில நேரங்களில் எரிச்சலைத் தந்தாலும், பல நேரங்களில் ரசித்து பகடி செய்யும் வகையிலும் இருக்கின்றது.

நல்ல நகைச்சுவை

Priya said...

//காரணம் தெரியாமலே காரியத்தைச் செய்வதிலோ அடுத்த தலைமுறைக்கு அதைக் கொண்டு செல்வதிலோ எனக்கு உடன்பாடில்லை.//...என‌க்கும்தான்!

ஆனாலும் சில சுவாரஸியமான சம்பவங்களும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது!

வால்பையன் said...

நிறைய பேர் இந்த மாதிரி இருக்காங்க!

thamizhparavai said...

இதுல என்ன நகைச்சுவை வேண்டிக்கிடக்கு.. என்னோட செண்டிமெண்ட்களைப் பார்த்தா இன்னும் மூணு,நாலு பதிவு போட வேண்டியிருக்கும். காலை எழுந்ததிலிருந்து, தூங்கும் வரை மினிமம் 50 செண்டிமெண்டாச்சும் ஃபாலோ பண்ணுவேன்...

குசும்பன். said...

நம்பிக்கயை பார்த்து நகைக்க கூடாது,
கண்ணத்துல போட்டுக்குங்க...
இல்லாட்டி கனவுல நாய் வரும்.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்க்கையே வித்யாசம்

வித விதமான மனிதர்கள்

ஒரே மனதில் வித வித மனிதர்கள்

வித்யாச வித்யாச வாழ்க்கை முறை....!

வித்யாச வித்யாச பேச்சுக்கள்

ஒரே நாளில் பல முகம் காட்டி
வித்யாச வித்யாசமாய் பேசும் மனிதர்கள்...

அட போங்கங்க....!

நசரேயன் said...

நானும் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன் இதே மாதிரி

Anonymous said...

தப்பில்லை. நேசிக்கத்தெரிந்த மனுஷி.

அரங்கப்பெருமாள் said...

//"ஒரு பாம்பு தங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதாகவும்///

நானும் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. காகங்கள் நமது முன்னோர்கள் என எண்ணுவதைப் போல.

கவி அழகன் said...

வித்யாசம் வாழ்த்துக்கள்

லெமூரியன்... said...

ம்ம்ம்........அவங்கவங்களுக்கு ஒரு ஒரு செண்டிமெண்ட்.....!
ரசிச்சி சிரிச்சி பழக வேண்டியதுதான்....!
:-)

S.A. நவாஸுதீன் said...

பாவம் ஹேமா உங்க அண்ணி. செமையா மாட்டிகிட்டாங்க உங்ககிட்ட. நல்ல நகைச்சுவைதான் போங்க

ஸ்ரீராம். said...

வாழ்வை உப்பு சப்பு இல்லாமல் கழிக்காமல் இருக்க இந்த மாதிரி சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் தேவைதான்...வாழ்வை ரசனையோடு பார்க்கிறார். ஒவ்வொரு கணத்தையும் எதோடாவது சம்பந்தப் படுத்தி உயிர்ப்புடன் வாழும் மனுஷி.

ஜெயா said...

ஹேமா உங்கள் அண்ணி மிகவும் பாசமானவர் போல,,உண்மைதான் நான் நடந்து போகும் போது ஒரு குருவி என்னை பாவமாக பார்த்தாலே நானும் என்னை விட்டுப் பிரிந்து போன உறவாக இருக்குமோ என கண் கலங்குவேன்.அண்ணி பாவம் கிண்டல் பண்ணாதீங்க*****

சிநேகிதன் அக்பர் said...

நல்ல அன்பான அண்ணி.

உங்கள் நகைச்சுவை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது ஹேமா.

தமிழ் உதயம் said...

கதை சொல்லும் விதம் அழகு, குழந்தைக்கு கதை சொல்வது போல். ஆற அமர வார்த்தைகளை எடுத்து. முக்கியமாய் மச்சாள் போன்ற வார்த்தை நான் கேள்விபடாதது... பிறரின் மூட நம்பிக்கைகள் நம் மூளையை கெடுக்காத வரை பிரச்சனை இல்லை

பூங்குன்றன்.வே said...

நல்லா இருக்கு ஹேமா.

பித்தனின் வாக்கு said...

// நிறைய பேர் இந்த மாதிரி இருக்காங்க! //
ஆமாங்க வால்பையன் கூட சரக்க மூனு சுத்து சுத்தி அப்புறம்தான் ரவுண்ட் அடிப்பாரு.

பித்தனின் வாக்கு said...

அண்ணியின் நம்பிக்கையை இகழ்ந்த ஹேமாவின் கனவில் எக்ஸார்ஸிட் வரும். பூதம் வரும். நல்ல கட்டுரை ஹேமா. சில நேரங்களில் சில மனிதர்கள் நம்பிக்கை இது. இதில் தான் அவர்கள் வாழ்வு ஓடிக்கொண்டு இருக்கும். எனது பதிவில் வெள்ளியங்கிரி மலை இறுதிப் பதிவில் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன் பார்க்கவும். நன்றி ஹேமு.

சத்ரியன் said...

ஹேமா,
உம்மேல கோவம் கோவமா வருது.

நகைச்சுவை என்பது அடுத்தவர் நம்பிக்கையை மற்றவர்களுடன் சேர்ந்து பகடி செய்வதல்ல..! ( நமக்கு சிரிப்பா இருக்கும். அதே நேரம் அவர்களின் மனம் வதை படாதா?)

வால்பையன் said...

//வால்பையன் கூட சரக்க மூனு சுத்து சுத்தி அப்புறம்தான் ரவுண்ட் அடிப்பாரு.//

:)

ஹேமா said...

//ஆரூரன் விசுவநாதன் ... வித்தியாசமான மனிதர்களும், அவர்களது நம்பிக்கைகளும், சில நேரங்களில் எரிச்சலைத் தந்தாலும், பல நேரங்களில் ரசித்து பகடி செய்யும் வகையிலும் இருக்கின்றது.//

நன்றி ஆரூரன்.அவரவர் நம்பிக்கைகளைக் கலைப்பதல்ல இந்தப் பதிவின் நோக்கம்.கொஞ்சம் அண்ணியை இன்னும் கிண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது மட்டுமே !

::::::::::::::::::::::::::::::::::

//ப்ரியா ... ஆனாலும் சில சுவாரஸியமான சம்பவங்களும் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது!//

நன்றி பிரியா உங்க வருகைக்கு.நீங்கள் எங்களூர்க் காத்தா?

உங்கள் பக்கம் வந்தேன்.கேக்
பிரமாதம்.

:::::::::::::::::::::::::::::::::::

//வால்பையன்...நிறைய பேர் இந்த மாதிரி இருக்காங்க!//

என்ன வாலு...ரொம்ப அடக்கி வாசிச்சிட்டீங்க.

:::::::::::::::::::::::::::::::::

//தமிழ்ப்பறவை ...
இதுல என்ன நகைச்சுவை வேண்டிக்கிடக்கு.. என்னோட செண்டிமெண்ட்களைப் பார்த்தா இன்னும் மூணு,நாலு பதிவு போட வேண்டியிருக்கும். காலை எழுந்ததிலிருந்து, தூங்கும் வரை மினிமம் 50 செண்டிமெண்டாச்சும் ஃபாலோ பண்ணுவேன்...//

அண்ணா க்கு கோவம் வருது பாருங்க.ஒரு பதிவு போடுங்க அண்ணா.எங்க அண்ணிக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.
என்னைப்போல நிறையப் பேர் இருக்காங்கன்னு தைரியமா இருப்பாங்க.

:::::::::::::::::::::::::::::::::

//குசும்பன்.... நம்பிக்கயை பார்த்து நகைக்க கூடாது,
கண்ணத்துல போட்டுக்குங்க...
இல்லாட்டி கனவுல நாய் வரும்.//

முதல் வருகைக்கு நன்றி குசும்பன்.கனவில நாய் வந்திச்சே ! யார்ன்னு கேட்டேன்.செத்துப்போன எங்க தாத்தாவோட தாத்தாவாம் !

ஹேமா said...

//பிரியமுடன்...வசந்த் ...
வாழ்க்கையே வித்யாசம்
வித விதமான மனிதர்கள்
ஒரே மனதில் வித வித மனிதர்கள்
வித்யாச வித்யாச வாழ்க்கை முறை....!
வித்யாச வித்யாச பேச்சுக்கள்
ஒரே நாளில் பல முகம் காட்டி
வித்யாச வித்யாசமாய் பேசும் மனிதர்கள்...
அட போங்கங்க....!//

வசந்து..மாறி வந்தீட்டீங்களா ?கவிதைப் பக்கம் குழந்தைநிலா.

:::::::::::::::::::::::::::::::::::

//நசரேயன் ....நானும் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன் இதே மாதிரி//

ஒண்ணு சொல்லியிருக்கலாம் நசர்.
அண்ணி சந்தோசப்பட்டிருப்பாங்க.

:::::::::::::::::::::::::::::::::

//சின்ன அம்மிணி ... தப்பில்லை. நேசிக்கத்தெரிந்த மனுஷி.//

சின்ன அம்மிணி உங்க வருகை என்னை சந்தோஷிக்க வைக்கிறது.

தப்பு சொல்லல அம்மிணி.
இப்பிடியானவங்களை நினைச்சாலே எப்பிடி இவங்களால எல்லாத்தையும் வாழ்க்கைல ஒரு பகுதியா எடுக்க முடியுதுன்னு அதிசயமா இருக்கு !

::::::::::::::::::::::::::::::::::

//அரங்கப்பெருமாள் ... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. காகங்கள் நமது முன்னோர்கள் என எண்ணுவதைப் போல.//

உண்மைதான் பெருமாள்.எனக்கு என்ன கவலைன்னா...அண்ணியை யாரும் இன்னும் சரியாக் கலாய்க்கல !அவங்களுக்கு தைரியம்தான் குடுக்கிறாங்க !

:::::::::::::::::::::::::::::::::::

நன்றி கவிக்கிழவரே.காணேல்ல எண்டு யோசிச்சா இருக்கிறேன் எண்டு சொல்ல இடைக்கிடை வந்திடுவீங்கள்.
சந்தோஷம்.

ஹேமா said...

//லெமூரியன்...... ம்ம்ம்........அவங்கவங்களுக்கு ஒரு ஒரு செண்டிமெண்ட்.....!
ரசிச்சி சிரிச்சி பழக வேண்டியதுதான்....!//

லெமூரியன்....எங்க ரொம்ப நாளாய்க் காணோம்.சுகம்தானே !

செண்டிமெண்ட் சரி.அது பைத்தியக்காரத்தனமா இருக்கக் கூடாதெல்லோ !

::::::::::::::::::::::::::::::::::

//நவாஸுதீன் ... பாவம் ஹேமா உங்க அண்ணி. செமையா மாட்டிகிட்டாங்க உங்ககிட்ட. நல்ல நகைச்சுவைதான் போங்க.//

என்ன நவாஸ் அண்ணிகிட்ட எங்க அண்ணன் மாடிக்கிட்டாரே !பாவமில்லியா அவர் !

::::::::::::::::::::::::::::::::::

//ஸ்ரீராம்.... வாழ்வை உப்பு சப்பு இல்லாமல் கழிக்காமல் இருக்க இந்த மாதிரி சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் தேவைதான்...வாழ்வை ரசனையோடு பார்க்கிறார். ஒவ்வொரு கணத்தையும் எதோடாவது சம்பந்தப் படுத்தி உயிர்ப்புடன் வாழும் மனுஷி.//

பொழுது போறதே தெரியாது இவங்களுக்கு.ஸ்ரீராம் இன்னும் சொல்லலாம்.பாவம் என் அண்ணி.அழுவாங்க.

::::::::::::::::::::::::::::::::::

//ஜெயா ... ஹேமா உங்கள் அண்ணி மிகவும் பாசமானவர் போல,,உண்மைதான் நான் நடந்து போகும் போது ஒரு குருவி என்னை பாவமாக பார்த்தாலே நானும் என்னை விட்டுப் பிரிந்து போன உறவாக இருக்குமோ என கண் கலங்குவேன்.அண்ணி பாவம் கிண்டல் பண்ணாதீங்க*****//

ஜெயா இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்களைத் தேடினேன்.சுகம்தானே ஜெயா.புத்தாண்டு சந்தோஷமா வந்திருக்குத்தானே.எல்லாம் நல்லதாவே நடக்கும்ன்னு நம்புவோம்.

ஜெயா அண்ணி உங்களுக்கு நன்றி சொல்றாங்க.
தன்னைப் போலவாம் நீங்க !

ஹேமா said...

//அக்பர் ... நல்ல அன்பான அண்ணி.உங்கள் நகைச்சுவை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது ஹேமா.//

அகபர் இன்னும் யாரும் அழவைக்கலியே இன்னும்.
அதான் கவலை.

:::::::::::::::::::::::::::::::::

//தமிழ் உதயம் ... கதை சொல்லும் விதம் அழகு, குழந்தைக்கு கதை சொல்வது போல். ஆற அமர வார்த்தைகளை எடுத்து. முக்கியமாய் மச்சாள் போன்ற வார்த்தை நான் கேள்விபடாதது... பிறரின் மூட நம்பிக்கைகள் நம் மூளையை கெடுக்காத வரை பிரச்சனை இல்லை.//

நன்றி தமிழ்.சிறுகதைகள் எழுதிப் பிரபலமான நீங்கள் சொல்லும்
வார்த்தைகள் என்னை உற்சாகப் படுத்துகிறது.

நீங்கள் சொன்னதுபோல அடுத்தவர்களின் மூட நம்பிக்கைகளைப் பின்பற்றாதவரைக்கும்
எங்களுக்கு ஒன்றுமில்லை.

மச்சாள் என்பதை மதினி, அண்ணி என்பதுபோல.எங்கள் ஊர் வழக்கம்.

:::::::::::::::::::::::::::::::::::
நன்றி குன்றன்.புத்தாண்டு வாழ்த்துகள்.

:::::::::::::::::::::::::::::::::::

//பித்தனின் வாக்கு...
// நிறைய பேர் இந்த மாதிரி இருக்காங்க! //
ஆமாங்க வால்பையன் கூட சரக்க மூனு சுத்து சுத்தி அப்புறம்தான் ரவுண்ட் அடிப்பாரு.//

அதான் வாலு அடக்கி வாசிச்சிட்டுப் போனாரா !இல்லாட்டி பெரிசா முழங்கியிருப்பார் !

//பித்தனின் வாக்கு ... அண்ணியின் நம்பிக்கையை இகழ்ந்த ஹேமாவின் கனவில் எக்ஸார்ஸிட் வரும். பூதம் வரும். நல்ல கட்டுரை ஹேமா. சில நேரங்களில் சில மனிதர்கள் நம்பிக்கை இது. இதில் தான் அவர்கள் வாழ்வு ஓடிக்கொண்டு இருக்கும்.//

வந்திச்சு பூதம்.அனுப்பிச்சு வச்சிருக்கேன் உங்ககிட்ட.நீங்கதானே எனக்கு இப்பிடி எழுதச் சொன்னீங்க!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

கலா said...

ஹேமா ஒவ்வொன்றும் அவரவர்கள்
நம்பிக்கை உங்கள் அண்ணி மட்டுமல்ல...
உலகில் எத்தனையோ பேர்கள்!!

தினமும் நான் காலையில் ஐந்தரை மணிக்கு
{ஓட்டப் பயிற்சி} போகும் போது ஒரு பூனை
தினமும் போகும் பாதையில் நிற்கும்
மியாவ்வ்வ்... சொல்லிப் பக்கம் வரும்
நான் ஒரு{ கலோ} சொல்லிவிட்டு
சென்றிடுவேன்{தொட்டுப் பார்க்கப்
பிடிக்காது}
இனி அதைப் பார்த்தால் உங்கள்
அண்ணி ஞாபகம்தான்.

Anonymous said...

nalla erukunga..
commedyoda alaga eruku..
neriya eluthunga..

nandri valaga valamudan...

Thenammai Lakshmanan said...

எனக்குக் கூட இந்த மாதிரி சில எண்ணங்கள் ஏற்படுறது உண்டு ஹேமா

தமிழ்ப்பெண்கள் said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

நிலாமதி said...

இந்த நூற்றாண்டிலும் மாறாத சில பழக்க வழக்கங்கள் உண்டு........இந்த வருடத்தில் இன்று தான் எழுத முடிந்தது உங்களுக்கு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமாய் இருகிறீங்களா? அடிக்கடி வராவிடாலும் மறக்கவில்லை உங்கள் உறவை. மறக்கவில்லை மனது. நிலாமதி

Muruganandan M.K. said...

மூடநம்பிக்கைகள் என்றால் கோபம் வரும் எனக்கு உங்கள் அண்ணியின் கதைகளைக் படிக்கும் போது அவர் மனத்தில் ஊறியுள்ள பாச உணர்வுதான் மனத்தில் பதிந்தது.

கும்மாச்சி said...

ஹேமா அண்ணியின் நம்பிக்கை அடுத்தவருக்கு இடைஞ்சல் இல்லாத பொழுது ஒன்றும் குழப்பமில்லை.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP