
சாணகமுற்றங்கள் சுத்தமாய் அழகழகான கோலங்களோடு.மனங்களில் குதூகலம்.எல்லோருக்குமே பறவைகளாய் பறப்பதாய் ஒரு நினைப்பு.மழையடித்து ஓய்ந்திருந்த வாரம் அது.
வயல்கள் தோட்டங்களில் நிறைந்த சேறும் சகதியும்.கிணறு முட்டிய மழைநீர்.ஆறுகள் பெருக்கெடுத்தோடுகிறதென்று சொல்லப் பிடிக்கும்.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இல்லை.இரவெல்லாம் தவளைச் சத்தம்.ஓ...அவைகளுக்கும் கொண்டாட்டம்.அடித்த மழையால் பனிக்குளிர் வேறு."எழும்பு எழும்பு"என்கிற சத்தத்தைப் புறக்கணித்து இன்னும் இழுத்துப் போர்த்த வைக்கிறது குளிர்.
என்றாலும் குளிர்ந்த காற்றோடு திடீரென்று தடவும் ஒரு நினைவு.அவளின் அழகு. அவளுக்காக அவளின் விழாவுக்காகவே இத்தனை விழாக்கோலம்.ஊரெங்கும் பூரணகும்பமும் தோரணங்களும்.
ஆமாம் எங்கள் தமிழுக்கு ஒரு விழா.எங்கள் தமிழ் மொழிக்கு ஒரு அங்கீகாரம். சந்தோஷத்தைன் உச்சத்தில் நாங்கள் அனைவருமே."எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு.பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிச்சயம் என்று சங்கே முழங்கு.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா."இளம் பிள்ளைத்தமாய் திரிந்தாலும் தமிழின் எங்கள் மொழியில் பெருமை ஆழப் பதியத் தொடங்கிய கணங்கள் அவை.எனவே அந்தச் சந்தோஷத்திற்காக என்னென்னவெல்லாமோ செய்தோம்.உடம்பெங்கும் எறும்பு ஊர்வதாய் ஒரு உள்ளுணர்வு.ஆனந்தத்தின் எல்லை.பாடினோம் ஆடினோம்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 1974ம் ஆண்டு தையில் நான்காம் அனைத்துலக தமிழாராச்சி மாநாட்டை நடத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டு அத்தனை நிகழ்வுகளும் முழுமையாக நிறைவேற்றப் பட்டிருந்தது.
அந்தத் தருணத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளையும் உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும் நான்.
அந்தக் காலகட்டத்தில் ஸ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சியின் அதிகாரம்.
அவருக்கோ யாழில் இந்த விழாவைக் கொண்டாட விருப்பமில்லை.தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தை இலவசமாக உதவுவதாகச் சொல்கிறார்.தமிழ்ப் பெரியவர்களின் அழுத்தத்தில் யாழில் நடாத்த ஒப்புக்கொண்டாலும் குழப்பும் மனநிலையிலேயே இருந்தது அரசு.
விழாவை நடத்த யாழில் இருக்கின்ற பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டு அரசால் பொறுப்பேற்கப்பட்ட வீரசிங்க மண்டபம்,யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ்.திறந்த வெளியரங்கம்,அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் கூட மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு மறுக்கப்பட்டது.எனவே தனியார் மண்டபங்களைத் தேடி அலைந்தனர்.
எனவே அரசின் இந்த மறுப்புக்களால் ஊடகங்கள் மாநாடு நடைபெறாது என்று அறிவிக்கத் தொடங்கிய சூழ்நிலையில் "1974 தை 3 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக யாழ்.நகரில் இடம்பெறும் என மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் பேரம்பலம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கட்டணம் அறவிடப்படாமலே திரையரங்குகளில் விளம்பரம் செய்தும்,சுவரொட்டிகள் மூலமும் அரசை வென்றனர்.
அந்நிலையில் அரசு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த அறிஞர்களையும் பார்வையாளர்களையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியது.பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதவாறு தமக்குக் கிடைத்த இலங்கை அரசின் அசிங்கத்தை அவர்களும் உலகுக்குப் பறைசாற்றினர்.
இருப்பினும் சென்னையிலிருந்து உலகத் தமிழர் இளைஞர் பேரவையின் தலைவர் டாக்டர் ஜனர்த்தனன் மட்டும் மலேயா சென்று சிங்கப்பூர் விமானம் மூலம் இலங்கையை வந்திருந்தார்.
மாநாடு நடக்கக் குறிப்பிட்ட திகதிக்கு 3 நாட்களுக்கு முன்னம்தான் மாநாட்டை நடத்துவதற்கான அரசின் அனுமதி கிடைத்தது.வண.சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ்.றிமர் மண்டபத்திலும் அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ்.திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் நடைபெற்றன.
3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை மாநாடு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
முடிவடைந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அயல் நாட்டு அறிஞர்களுக்கான வழியனுப்பு விழா மறுநாள் 10 ஆம் திகதி யாழ்.திறந்த வெளியரங்கில் நடைபெறுவதாகவே இருந்தது.ஆனால் அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. யாழ். மாநகர முதல்வர் A.T.துரையப்பாவிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் மட்டுமே திறக்கப்படும் என்று அரங்கின் காப்பாளர் தெரிவித்திருந்தார்.மாநகர முதல்வரையோ சந்திக்க முடியாமலிருந்தது.அவரது இருப்பிடம் அறியப்படாத நிலையில் வீரசிங்கம் மண்டபத்திலே வழி அனுப்பு விழாவை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது.(இந்த மறைவும் அரசின் அழுத்தமே)
வந்திருந்த ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மண்டத்தில் உள்ளடக்க இயலாத நிலையில் மண்டபத்தின் முன்பாக அதற்கும் தெருவிற்கு இடைப்பட்ட நிலத்தில் நிறுவப்பட்ட திடீர் மேடையில் வழியனுப்பு விழா ஆரம்பமாகியது.பார்வையாளர்கள் தெருவிற்கு மறுபக்கத்தில் புல்தரையில் இருந்தபடி நிகழ்ச்சிகளைப் ரசித்துக் கொண்டிருந்தனர். போக்குவரவுக்குத் தெரு மூடப்பட்டிராத போதும் மேடைக்கும் பொது மக்களுக்கும் இடையே பயணிக்க வேண்டாமென்று இரு புறத்தும் பணிபுரிந்த தொண்டர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதன் பேரில் ஊர்திகள் யாவும் மாற்றுப் பாதையையே உபயோகித்தன.
அப்போதான் என்ன ஏது என்று பார்வையாளர்கள் உணரும் முன்னமே கலகம் அடக்கும் பொலிஸார் பார்வையாளர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர்.குண்டாந்தடியடிப் பிரயோகம் செய்து வகை தொகையின்றி கண்ணீர்க் குண்டுகளையும் விசிறி,துப்பாக்கிக் குண்டுகளால் மின் கம்பிகளை அறுந்து விழும்படியாகச் செய்தனர்.
அசம்பாவிதத்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.மின் கம்பிகளில் சிக்குண்ட ஒன்பது தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்களும் பிள்ளைகளும் நெரிசலில் மிதிபட்டுக் காயமடைய நேரிட்டதுடன் அநேகர் உடுத்த உடைகளையும் இழக்க நேரிட்டது.

அந்த இரவில் அப்பாவும் நானுமாய் யாழ் நகருக்குள் நிற்கிறோம்.வானமெங்கும் இரவு கலைத்த மின்சார விளக்குகள்.உயர உயராமான சிகரங்கள்.திரும்பவும் திரும்பவும் சொல்கிறேன் சந்தோஷமாக இருந்தோம்.அத்தனை பேருமே சந்தோஷமாகவே இருந்தோம்.தமிழின் உணர்வோடு கலந்திருந்தோம்.
(சொல்லும்போது குரல் அடைத்து வில்லங்கமாக வெளிவந்தது)எனக்கு இப்போதும் நினைவோடு கண்ணுக்குள் வருகிறது.முகமெல்லாம் அத்தனை சந்தோஷம்.றீகல் தியேட்டர் தாண்டி வீரசிங்கம் மண்டபம் வருகிறோம்.அலையலையாய் ஆண்களும் பெண்களுமாய் மக்கள் அலை.அறிவுஜீவிகள் அறிஞர்கள் கல்விமான்களின் கூடம்.மேடையைத் தலைகள் மறைக்க உன்னி உன்னிப் பார்த்தபடி நிற்கிறேன்.ஒலிபெருக்கியின் சத்தத்தோடு புரிந்துகொள்கிறேன் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று.
அப்போதுதான் என்ன...ஏதோ அறுந்ததாய் நினைக்கிறேன்.எனக்கும் அந்தச் சத்தத்துக்குமான தொடர்பா.சொல்லத் தெரியவில்லை.குழப்பமான உளறலான வார்த்தைகள் தெளிவில்லாமல் கேட்கிறது.சிங்களத்தால் அதட்டல் சத்தமும் கேட்கிறது.ஆனால் புரியவில்லை.அப்பாவின் கையை எட்டிப் பிடிக்கிறேன்.அந்தக் குளிரிலும் அப்பாவின் கை வியர்வையால் பிசுபிசுக்கிறது.
பண்ணைக் கடல் பக்கம் பொலிஸ் நிலையம் இருந்தது.அந்த மக்கள் அலைகளுக்கு காற்றில் ஏதோ செய்தி பரப்புகிறது.இவ்வளவும்தான் இவ்வளவும்தான்.பிறகு என்ன நடந்தது !தமிழைப் பேசுவதன்றி என்ன தவறு செய்தோம்.அதன்பிறகு....எங்கள் தமிழுக்கு ஒரு விழா எடுத்தோம்.
அவ்வளவும்தானே.
ஆனந்தம் அனர்த்தமாய் மாறிக்கொண்டிருந்தது.
மின்சாரம் நின்றது.தொடர்புக் கம்பிகள் அறுந்து விழுகிறது.மின்னி மின்னி நெருப்புத் தனல்கள் வான் நோக்கிப் பறக்கிறது.அமைதியாய் இருந்த அலைகள் இப்போ கொந்தளித்துச் சிதறிக் கலைகின்றன்.
"அப்பு ராசா தம்பி"என்று அப்பா கையை இறுக்கிப் பிடிக்கிறார்.துவக்கு வெடிச்சத்தங்கள் கேட்கிறது.எப்போதாவது வேட்டையாடும்போதோ விசர் நாயைச் சுடும்போதோ கேட்கின்ற அந்தச் சத்தம்தான் அது.இப்போ அது தொடர்ந்து கேட்கிறது.வேட்டைக்காரர்களோ அல்லது விசர் நாய்களைச் சுடுபவர்களோ வந்துவிட்டனர்.வெள்ளை நிறத்தில் குண்டு மழை.கண் எரிகிறது.வெறும் புகைக்கு இப்படிக் கண் எரியாது.வீட்டில் கண்ணூறு நாவூறு என்று செத்தல் மிளகாயும் வேப்பிலையும் போட்டு எரித்து எச்சில் துப்பச் சொன்னபோது எரிந்த கண் எரிவு வேறு.இது வேறு.
கண் திறக்காமலே அப்பா என்னைப் பிடித்தப்படி "ஓடி வா ஓடி வா" என்றபடி ஓட முயற்சிக்கிறார்.கால் அடி எடுத்து வைக்கவே இடம் இல்லை அங்கு.அப்பாவை நான் இழுக்க என்னை அவர் இழுக்க எங்கோ ஒரு குழிக்குள் விழுந்ததாய் விளங்குகிறது.அப்பாவின் கை என்னோடுதான் இன்னமும்.சேறு அப்பிக்கொள்ள நிறையப் பேர் இருந்தோம் அந்தக் குழிக்குள்.மழையும் வெள்ளமும் சேறும் என்று முன்னமே சொல்லியிருந்தேன்.இப்போது விளங்குகிறது.அது குழியல்ல.வெள்ள வாய்க்கால்.
அப்பா அணைத்துக்கொள்கிறார்.எதுவும் சொல்லவில்லை நான்.பயமோடா தம்பி என்று கேட்டாலோ,குளிருதோ என்று கேட்டாலோ,நோகுதோ என்று கேட்டாலோ இல்லை என்றேதான் சொல்லியிருப்பேன்.மனம் முழுக்க வலி.தமிழனாய்ப் பிறந்து தாய்மொழி தமிழுக்கு விழா எடுக்கக்கூட முடியாத தேசத்திலா நாம் பிறந்திருக்கிறோம் என்று.
அந்த இரவு முழுதுமே அவலச் சத்தங்கள் கேட்டு அடங்கிப்போயிருந்தது.நாங்களும் சேறு பூசியபடி அப்படியே இருந்தோம்.விடிந்தது.வெளிச்சத்தில் அடையாளங்கள் கண்டுகொண்டோம்.
யாரோ கை கொடுக்க வெளியில் வந்தோம்.அப்பா நடந்தே போவோம் வீட்டுக்கு என்றார். பதில் ஒன்றுமே சொல்லாமல் அப்பாவின் பின்னுக்கே நடந்தே போனோம் நானும் இன்னும் பலரும்.
யாழ்.பஸ் நிலையம் வரை அடித்து விரப்பட்ட மக்கள் ராணி படமாளிகையில் அடைக்கலம் தேட முற்பட்ட போதும் படமாளிகையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் நிரப்பப்பட்டதாம்.
இரவு முழுதும் அணையாத அரிக்கேன் லாம்போடு அம்மா குந்தியிருந்தா.எங்களைக் கண்டதும்"ஐயோ என்று குழறினா.அன்று தொடங்கிய "ஐயோ" சத்தம்தான் இன்றுவரை ஈழத்தில் தொடர்கிறது.
ஈழத்தில் தமிழர்கள் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியைக்கூட அரசின் தலையீடு இல்லாமல் தாமே சுதந்திரமாக நடத்தமுடியாது என்பதை உலகிற்கு உறுதிப்படுத்திய நிகழ்வாகக்கூட அதை எடுத்துக்கொள்ளலாம்.
உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஜனார்த்தனனைக் கைது செய்வதற்கும் முயற்சி எடுத்ததாம் அரசு.பாதிரியார் உடையில் ஜனார்த்தனன் கொழும்பு சென்றடந்து இந்திய தூதரகம் மூலமாகச் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டாராம்.
"1974 ஜனவரி 10ம் தேதிச்சோகம் தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது.அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும்
உணர்ந்தார்கள்." - பேராசிரியர் ஏ. ஜே. வில்சன்.
[அப்பா சொன்னதும் இணையத்தில் சேகரித்துக்கொண்டதும்.]