Friday, November 25, 2011

நான் பார்க்கும் குழந்தைகள்.

சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தையொன்று விளையாட ஆரம்பிக்கின்றது.

அப்பொழுது ....

டேய்....உடைத்துவிடாதே.கீழே வை தொடாதே..!

கொஞ்ச நேரத்தின்பின் பார்க்க.....குழந்தை மீண்டும் அந்தத் தட்டைக் கையில் எடுத்துக் கொள்கின்றது.மறுபடியும்...டேய் அதைத் தொடாதே.கத்துவது காதில் விழுகிறதா இல்லையா...!

பிறகும் திரும்பிப் பார்க்க....மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..!

குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும்.அவர்கள் அதனைக் கேட்காத பொழுது மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல் குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்,சிலர் அடிக்க வேண்டும்,சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும் குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். குணாதிசயங்கள் இருக்கும்.இருப்பினும் குழந்தைகளை இப்படித்தான் நடத்த வேண்டுமென்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது.அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும்.நாம் நினைத்தமாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது.திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்.

4. எதிலும் உறுதியாக இருங்கள்.அதையே குழந்தைக்கும் சொல்லிக் கொடுங்கள்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்.

6. அடம் பிடித்து அழுகின்றதா...விட்டு விடுங்கள்.

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கேளுங்கள்.குழந்தையின் தவறுகளையும் மன்னித்து விடுங்கள்.

8. இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.

9. கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்.
இத்தனையும் நம் ஈழக்குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்றால் பெரிதொரு கேள்விக்குறிதான் !

எலும்பும் தோலுமாய் ஒட்டிய வயிறோடு அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு...தமிழச்சி வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் அவல வாழ்வுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்...உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்...எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம் இன்று வெளியில் தெரியா மரணக் கேணியாய் ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புக்களும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன.ஆனால் சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது"ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசிப்பேருக்குக் காது மந்தமாகி விட்டதெனவும்,ராணுவப் பீரங்கிகளின் கொடும் சத்தம் அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டதெனவும்,மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்.

ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும் பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை மனசாட்சியுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.தனிமைப்படுத்தி அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

பசியால் தவித்த பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது ராணுவத்தினரிடம் பிடிபட்டனர்.மொத்தக் குழந்தைகளும் பார்க்க அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி எல்லோரையும் உலுக்கி விட்டது.ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள்.மதிய வேளைகளில் ராணுவத்தினர் வரும்போது,'ஆமி மாமா சோறு போடுங்கோ...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்துவிடும்!

பாவம் பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள் கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும் சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர் அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!

அண்ணன்-தம்பி,அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது.ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனித்தால்...இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும் என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ் இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான் என்கிறார் வேதனை மேலிட.

தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ இதைவிடக் கொடூரம்...!கடந்த இறுதி யுத்தகாலங்களில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கின்றனர்.3000-4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.ரத்தத் தொற்று வியாதிகள் பரவி நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி எப்போது மரணம் என்ற நிலையில் கிடக்கின்றன.12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன."எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது" என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம்.

சிங்களவர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில் இதுநாள்வரை தமிழ்ப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர் அங்கே விபச்சார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுமி ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும் வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக்காகப் போராட கிளம்பிவிடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது 'இனப் படுகொலை' மட்டுமல்ல...'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!

ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன.குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள்.
குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது.அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது.குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை.அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை.குழந்தைகளை அற்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள்.

"குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகளும் கோபமும் விரக்தியும் எந்த அரசியல் சுயநலக் குறிக்கோள்களையும் கொண்டிருப்பதில்லை.அவர்களின் கோபங்கள் எங்கிருந்து ஏன் வருகின்றன என்பதுதான் முக்கியமானது.அழகான குழந்தைகளின் மனவுலகம் பல்வேறு அரசியல்களுக்காக தொடர்ந்தும் சிதைக்கப்படுகின்றன."

அண்மையில் யாழ் நூலகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னணிப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் பரமேஸ்வரன் சேதுராகவன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியாக 194 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டான்.தனது தாய் தந்தையருடன் வருகை வந்த சேதுராகவன் அன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கால்களில் விழுந்து வணங்க மறுத்திருக்கிறான்.

வன்னி யுத்தத்திற்குள் வாழ்ந்து அதிலிருந்து மீண்டு தடுப்புமுகாம் சென்று அங்கிருந்து மீள்குடியேறி சமகால வன்னிச் சனங்கள் வாழும் வாழ்க்கைக்குள் இருந்து வந்த இந்தச் சிறுவன் இன்றைய ஈழத்து மக்களிடத்தில் உள்ள உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறான். அவனிடம் எந்த அரசியலும் இல்லை.தனது எதிர்ப்பு உணர்வை மறைக்கவும் தெரியவில்லை.கல்வி அமைச்சரின் கால்களில் விழுவதற்கு அவன் விரும்பவில்லை என்ற நிலைப்பாடு அரசு மீதான வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது.சிறுவர்களின் வெறுப்பு சாதாரணமானதல்ல.அவை சிறுவர்களின் வெள்ளை மனவுலகத்தில் இருந்து எந்த ஒளிவு மறைவுமின்றி ஏற்படுகின்றது.

அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் இருப்பவனோ அல்ல.வாக்கு அளிக்கின்ற வயதைக் கொண்டவனுமல்ல. போருக்குள் பிறந்து வாழ்ந்ததைத் விட வேறு எதையும் அறியாதவன்.எதற்காக கால்களில் விழ மறுத்திருக்கிறான்?

சேதுராகவனுக்கு பத்து வயதே ஆகிறது.கடந்த 2001 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறான். யுத்த்தில் பிறந்து யுத்தத்தில் வளர்ந்து யுத்தத்தில் படித்துத் தனது வாழ் நாட்கள் முழுவதையும் யுத்த காலத்தில் கழித்திருக்கிறான்.அவன் பார்த்திருந்த காட்சிகள் எல்லாமே யுத்தம்தான்.தமிழன் என்பதனால்தான் சேதுராகவன் கால்களில் விழ மறுத்தான் என்று மட்டும் சொல்லிவிட இயலாது.இது ஒரு குழந்தையின் எதிர்ப்புணர்வு.காயங்களினால் ஏற்க மறுக்கிற எதிர்ப்பு.துயரமும் அழிவும் கொண்ட வாழ்க்கையினால் ஏற்பட்ட உணர்வு.யாரும் அவனுக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.அவனாகவே இதைச் செய்திருக்கிறான்.சேதுராகவனின் மனம் என்பது ஈழத்தின் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் உள்ள மனம்.

ஈழப் போரைக் கடந்த பல குழந்தைகளின் நெஞ்சில் அந்தப் போர்க்காட்சிகள் ஆழமாகப் படிந்திருக்கின்றன.போருக்குப் பிந்தைய இன்றைய வாழ்விலும் அதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்கிறது.அவர்கள் அந்தப் போரின் இறுதி நாட்களைப் பற்றியும் மரணக் காட்சிகளையும் பற்றியும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.போரின் குழந்தைகளாய் நெஞ்சில் படிந்த இந்தக் காயங்களை துடைத்தெறியக் கூடிய வாழ்வை அவர்கள் எட்டவில்லை என்பதுதான் துயரம்.

உலகில் குழந்தைகளின் நலம் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்.போரின் குழந்தைகளாய் பிறந்து வாழும் ஈழக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?அரசாங்கம் ஈழத் தமிழர்களின்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகைளையும் அழிவுகளையும்தான் கட்டவிழ்த்து விடுகிறது.எமது குழந்தைகள் அந்தச் சூழலில் வளர்வதுடன் அதையே தங்கள் முதல் பாடமாக படிக்கிறார்கள்.குழந்தைகளின் மனங்களை வெல்ல இந்த அரசால் முடியவில்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படும் பெரும் செய்தி.

சமாதானம் கொண்டு வரப்பட்ட பூமி என்றும்,பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட தேசம் என்றும் வெற்று அரசியல் வார்த்தைகளைச் சொல்லி ஈழத் தமிழர்களின் வாழ்வுலகத்தை மறுக்கும் அரசியலை செய்யும் பொழுது,ஈழக்குழந்தைகள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதும்,இந்த வடுக்கள் நெஞ்சில் எப்படிப் படிந்திருக்கின்றன என்பதும் எப்பொழுது புரியப்படும்?

ஈழக் குழந்தைகள் நிம்மதியாக வாழும் ஒரு உலகத்தைத் தேடுகிறார்கள்.‘ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள் தங்களோடு எடுத்தே செல்கின்றனர்....!



தோழி...சகோதரி அம்பாளடியாளுக்கு என் நன்றி.அவர் இழுத்த தொடர் சங்கிலி யுத்தபூமியில் வாடும் வாழும் நம் குழந்தைகளையும் நினைக்க வைத்தது.உலகப் பந்தில் எத்தனையோ சந்தோஷங்களோடு எத்தனையோ அறிவியலோடு செல்லக்குழந்தைகளாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் என் தேசத்துக் குழந்தைகளே என் பார்வையில் உடனடியாகத் தெரிந்தார்கள்.மாவீரர் வாரத்தோடு இந்தப் பதிவை இணைப்பதில் மிகுந்த சந்தோஷம்.எமக்காய் விதையுண்ட அத்தனை உயிர்களுக்கும் என் தலைசாய்த்த நன்றியும் வணக்கமும் !

நிறைவான ஈழச் செய்திகள் உதவி இணையம்,கூகிள்.

17 comments:

ராமலக்ஷ்மி said...

மனம் பதறச் செய்யும் இடுகை ஹேமா
:(!

சாந்தி மாரியப்பன் said...

சொல்ல வார்த்தைகளே இல்லை ஹேமா :-(

தனிமரம் said...

வெள்ளைப் பூக்கள் மலரட்டும் என்று ஏங்குவதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்.  இன்றைய சூழலில்!

ஸ்ரீராம். said...

எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் குழந்தைகள் குழந்தைகள்தானே...என்ன அக்கிரமம் இது.. மனம் கசிகிறது. சேதுராகவனின் உணர்வுகள் புரிகின்றன. கஷ்டப் படும் இந்தப் பிஞ்சுகளின் கஷ்டம் சீக்கிரம் தீர வேண்டும்.

குறையொன்றுமில்லை. said...

குழந்தைகள் என்றுமே குழந்தைகள் தானே. இந்தக்குழந்தைகளின் கஷ்ட்டங்கள் சீக்கிரமே தீர வேண்டும்.

சத்ரியன் said...

ஹேமா,

இந்த தலைப்பிலான தொடர் பதிவை பலரும் எழுதியிருந்தார்கள். அங்கெல்லாம் பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள்.

உங்கள் கட்டுரையில் நடப்புக்கால , உண்மை பொதிந்த கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கிறது.

படிக்கும்போதெ மனம் என்னென்னவோ உணர்வு நிலைகளை அடைகிறது. கையாலாகத் தனத்தை நினைத்து வருத்துமுறச் செய்கிறது.

இன்றையச் சூழலில், ஒரு கையோசை உலகை அசைக்காது என்ற நிதர்சனத்தை நன்கறிந்திருக்கிறோம்.

மிச்சமுள்ளவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவும், கல்வி, பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள உதவவும், தோல்விக்கு பின் சாம்பல் பூத்திருக்கும் கனலினை அணையவிடாது நினைவுகளை ஊட்டவும்.... இப்படியான தொலை நோக்குடன் தொடர்முயற்சி செய்தால்
ஈழம் மீளும்!

சத்ரியன் said...

இந்த பதிவினை என் வலையிலும் வெட்டி,ஒட்டி பதிவேற்றுகிறேன்.

அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.

Yaathoramani.blogspot.com said...

மலர் தீயில் பொசுங்க்குவதை பார்க்கிற
அவலத்தைப் பார்க்க படிக்க
மனம் கனத்துப் போனது
எப்போது இந்த அவல நிலை மாறும் ?
த.ம 7

அப்பாதுரை said...

இந்தக் குழந்தைகளுக்கு எப்படி உதவி செய்வது? எத்தகைய உதவி உண்மையிலேயே உதவியாக இருக்கும்? இதற்கான நம்பத்தகுந்த அரசியல் சார்பற்ற இயக்கம் ஏதாவது இருக்கிறதா? இது போன்ற விவரங்களைச் சேர்க்க வேண்டுகிறேன். மனம் மிகவும் கலங்கிவிட்டது இதைப் படித்து.

Unknown said...

சகோதரி
காலையில் எழுந்த உடன்
தங்கள் பதிவைப் படித்தேன்
கண்ணீர் கடலில் மிதக்கச்
செய்து விட்டீர்
என்னத்தை எழுத!
எண்ணத்தை எழுத!

புலவர் சா இராமாநுசம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

;((

துரைடேனியல் said...

Ithayam kanakkirathu. Ethavathu seiya thudikkiathu kaigal. Vidiyal eppothu?!!!...
TM 9.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

நிலாமகள் said...

க‌ண்ணெதிரே ஒரு இன‌ அழிப்பு ந‌ட‌க்கிற‌து. 'கையில் ஊம‌ன் க‌ண்ணில் காக்கும் வெண்ணெய் உண‌ங்க‌ல் போல‌'! செய்ய‌ ஏதுமின்றி திகைத்து ப‌ரித‌விக்கிறோம் நாம். ந‌ம் குழ‌ந்தைக‌ளை வ‌ள‌ர்க்க‌ ஆயிர‌ம் ஆய‌த்த‌ங்க‌ள். அப்பாவி ஈழ‌க் குழ‌ந்தைக‌ளின் அவ‌ல‌ம் குற்ற் உண‌ர்வைத் தூண்டும்ப‌டி ப‌திவின் செய்திக‌ள். தீயுள்ளும் துளிர்த்தெழும் சேதுராக‌வ‌ன்க‌ள் த‌ழைக்க‌ட்டும்!

நட்புடன் ஜமால் said...

ஒன்றும் சொல்ல தெரியலை ஹேமா!

Angel said...

படித்ததும் நெஞ்சே வெடித்து போகிறமாதிரி வலி ஹேமா

ஹேமா said...

ஈழக்குழந்தைகளை ஒரு விநாடியாவது கையில் மனதிலேந்திய உங்கள் அனைவருக்கும் அந்தக் குழந்தைகளின் சார்பில் என் நன்றி.

அப்பாஜி...நீங்கள் கேட்டிருக்க்கும் கேள்வி எனக்குள்ளும்.அரசு சார்பற்றை நிறுவனங்கள்,குருகுலம்,கிறிஸ்தவ ஆலயங்கள் என நிறையவே இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார்கள்.நம்பிக்கை என்பது எவ்வளவு என்று சரியாகத் தெரியவில்லை.நான் ஒரு சிறு குழுவோடு இணைந்து உதவி செய்துகொண்டிருக்கிறேன்.நீங்கள் விரும்பினால் அவர்களோடு தொடர்பைத் தருகிறேன்.அவர்கள் முழுமையான குழந்தைகளின் விபரங்களை உங்களுக்குத் தருவார்கள்.எனக்கு அவர்களில் நம்பிக்கை !

சத்திரியன்...மிக்க மிக்க நன்றி.உங்கள் தளத்தில் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டமைக்கு.இதிலென்னவென்றால் என்னைத் தொடரச்சொன்ன அம்பாளடியாளுக்கு இந்தப் பதிவு பிடிக்கவில்லையோ என்னவோ.அவரது கருத்து இங்கில்லை.கவனித்தீர்களா !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP