
[நேரக் குறைச்சலால் திடீர்ப் பதிவு.]
ஹேமா(சுவிஸ்)
ஸ்ரீராம்
********
விளையாடுன்னு சொல்லி
பொம்மையைக் கொடுத்தாங்க.
ஆமாம், விளையாட்டுன்னா என்ன?"
"மனிதர்களை
பொம்மையாக மதிக்கும் உலகில்
பொம்மையை வைத்துக் கொண்டு
நான் என்ன செய்வது?"
தமிழுதயம்
**************
தூக்கப்படுவது
குழந்தை பொம்மையாக இருந்தாலும்,
அதை தூக்கும் முறை சரியில்ல.
குழந்தைய இப்படி தூக்குவோம்மா.
பொம்மையாக இருந்தாலும்-
நான் குழந்தையாகவே பார்க்கிறேன் !
ஸ்டார்ஜன்
**************
அன்பே உன்னாலே
நானும் மறந்தேன்
நினைப்பதற்காக
உன்
மறு வருகை எப்போ !!
துபாய் ராஜா
*****************
1)
குழந்தை கை
பொம்மை போல்
குலுக்குகிறாய்
என் மனதை...
அன்பே உன்
முரட்டு அன்பினால்
உலுக்குகிறாய் உயிரெ(ல்)லாம்,
என் உணர்வெ(ல்)லாம்...
2)
காதல் கன்னிப் பேய்
உன்னைக் கண்டு
பிழைத்த எனக்கு
கள்ளமில்லா
பிள்ளைப்பேய்
கண்டென்ன பயம்.
3)
காதல் விளையாட்டில்
நீயொரு பொம்மை
நானொரு பொம்மை
கலங்காதே கண்ணெ
என்னருமை பெண்ணே
காலக்குழந்தை
இணைத்திடும் நம்மை.
4)
ஏதுமறியா குழந்தை
போல் இருந்தாய்
காதலிக்கும் போது...
ஏதும் செய்யமுடியா
பொம்மை ஆக்கினாய்
என்னை கல்யாணத்திற்கு பின் ....
- இரவீ -
************
ருத்ர காளி:
**************
வரண்ட வாடை காற்றின் வேகம் அதிகரித்த அந்தி நேரம்.அலையின் சல சலப்பு அந்தகார இருளை வரவேற்றபடி இருக்க ஒற்றையடி பயணமானாள் வேம்பு.காலத்தின் கோலமா - அவசரத்தின் அல்லோகலமா தெரியாது.அவளது முடிவை நோக்கிய முடிவான பயணம் அது.
அவளின் ஆழ்ந்த பெருமூச்சு.நடையின் வேகமா இல்லை அலையின் ஓலமோ என இனம்கானமுடியா வெப்பமாய்.கோபத்தின் உச்சத்தில் அவள் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருக்க இலக்கை அடையும் வேகம் நடையின் ஒவ்வோரு வினாடியும் கூடிக்கொண்டே இருந்தது.இன்னும் சில வினாடிதான்.அவள் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
ஒற்றைப் பனை மரம்.அதை ஒட்டிப் பாழடைந்தது தெரியாமல் இருக்க அவசரமாய் கூரை வேயப்பட்ட மண்டபம் - நெஞ்சு படபடக்க மண்டபம் நெருங்கலானாள்.பதைபதைப்பு தொத்திக்கொன்டது - அவளின் இதயத் துடிப்புக் குறைவதை அவளே கேட்க முடிந்தது.மெல்ல அடிமீது அடிவைத்து நெருங்கலானாள்.
காலில் சில்லென ஏதோ தட்டுப்படக் கீழே கூர்ந்து கவனித்தாள்.பூக்கள் மற்றும் தென்னங்குருத்தோலை அந்த மண்டபம் சுற்றிலும் சிதறிக் கிடந்தன.மனதை ஆசுவாசப்படுத்த முயன்று கவலை தொத்திக் கொண்டதை உணர்ந்தாள்.வந்த நோக்கம் நிறைவேறாதோ என்ற கவலையும் கூடிக்கொண்டது.
மண்டபத்தின் மதிலை நெருங்கிய நேரம்.காலில் கடினமாய் ஏதோ தட்டுப்பட்டது.இதயத் துடிப்பை நிறுத்திக் கூர்ந்து கவனித்தாள்.பளிச்சிட்ட ஒளியாய் அவள் கண்ணின் முன் பொம்மி வந்து போனாள்.ருத்ர காளி வேஷம் போட வேல்கம்பு கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து இருட்டறையில் கோவித்து நின்றது நியாபகம் வர சிரித்துக் கொண்டே முன்னே இருந்த உடைந்த காவடியில் சொருகி இருந்த வேல்க்கம்பை கையில் எடுத்து முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு வீடு திரும்பினாள்.
ஜெயா
********
கண்மணியே கோவம் ஏன்?
கையில் உள்ள பொம்மை மீதா,
இல்லை....
அதை தந்து விளையாடச்சொன்ன
அன்னை மீதா
உங்க கோவம்?
ஏக்கம் வேண்டாம் செல்லமே,
கோபத்திலும் நீங்க அழகுதான்,
சிரியுங்க....சிரியுங்க
அட சிரியுங்க ****
ஹேமா
**********
உடையில்லா பொம்மை.
அழகிய உடையில்
கோபக் குழந்தை.
குனிந்த முகத்தில்
அழுகையா வெறுப்பா ?
முடியில்...
முத்தால் சோடனை.
பொம்மைக்கும் உடை.
பஞ்சுப் பாதம்
மண்ணில் படாமல்
பவளத்தால் ரதமும் இங்கே.
இல்லாத அம்(ப்)மா(பா)வை
கூட்டி வா என்றால்
எங்கே போவேன் நான் !
Thamizhan
************
அன்னை பூடேயின்
அற்புத வண்ணம் !
களங்கமான உலகில்
கலங்கிய தனிமை!
கையிலே பொம்மை
நெஞ்சிலோ வெறுமை!
பித்தனின் வாக்கு
********************
கோபம் என்பது பாவம் குழந்தாய்
அது வாளில்லா கத்தி போல
சிரித்து மகிழும் உன் முகம்
கறுத்துத் தொங்கியது ஏன்,
ஆத்திரம் என்பது வாழ்வை அழிக்கும்
உன் கையில் உள்ள பொம்மையப் போல
துக்கம் என்பது மகிழ்வைக் கொடுக்கும்
உன் குனிந்த தலை போல.
அக்பர்
*******
பொம்மையை
கையில் திணித்து
என் சந்தோசத்தை
திருடிக்கொண்டு
போனது யார்?
கடையம் ஆனந்த்
********************
1)
யுத்த பூமியில்
விளையாட தலைகள் உண்டு
குனிந்து பார் கண்ணே!
உன்னை இங்கே விட்டு செல்ல
மனமில்லை எனக்கு!
அழைத்து போகவும் வழியில்லை
திக்கற்றவளா நான்...
கண்கள் முடி அழுகிறேன்
கண்ணே போதும் வந்து விடு!
2)
அடங்கவில்லை
பழி தீர்த்த பிறகும்!
8-வது பிறப்பு நீ
கம்ஷன் துரத்துகிறhன்
ஓடிடுவோம்...வா!
ரத்தம் வாடை அடிக்கிறது
இந்த பூமியில்...!
இங்கே நீ பிஞ்சு
எனக்கு நீ நச்சு-என்று
கொக்கரிக்கின்ற கூட்டத்தில்
உன்னை விட்டு செல்ல மனமில்லை
வா...
வந்து விடு....
கலா
******
என் நாட்டு ஒளிவழியில்
இப்படிப் பார்த்தாய்!
பக்கவாட்டில்...
ஒத்தைக் கையால் தூக்கி
உயிர் உள்ள குழந்தைகளைக்
தூரமாய் எறியும் காட்சியை
ஓ..ஓ.. புரிகிறது
இதைத் தான் கண் பார்த்தால்
கை செய்யும் என்பார்களோ!
பார்த்தவுடன்....
பரீட்சித்துப் பார்க்க
இவள் பொம்மையைத்
தூக்கினாள் .....
தூக்கிப் போடும் முன்னே
பார்த்து நினைவுக்கு வர...
பேதலித்துப் போனாளிவள் !
S.A. நவாஸுதீன்
*******************
பெற்றவர்கள் கல்யாணம்
பொம்மை கல்யாணமாய்
பிள்ளை இவளுக்கோ
உண்ணவும்
உறங்க மடியும்
உதவிக்கு சில கதையுமின்றி
வெறும் பொம்மை மட்டுமே
துணையாய் !
கவிதை(கள்)
***************
ராவில் கைப்பிடித்து
காதருகில் கதைபேசி
புகலிடம் தேடா
புதுயுக பொம்மை
தலைகீழாய்
என் வாழ்வைப்போல ...........
ராஜவம்சம்
*************
பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா
ஏதாயினும் வீறுகொள்
நீ வாழப்பிறந்தவள் அல்ல
நம் மண்ணை ஆளப்பிறந்தவள்
உன் கையின் இறுக்கம்
மனத்திடத்தை பறைசாற்றுகிறது
குனிந்து நிற்பது
கோழைத்தனம் மட்டும் அல்ல
பெண் அடிமைத்தனமும் கூட
நிமிர்ந்து நில்
தெளிவாயிரு
நாளைய உலகம் உன் கையில் !
நட்புடன் ஜமால்
*******************
சிரித்த முகத்துடன்
செயலிழந்து கிடக்கின்றாயே
என் ஈழத்து உறவுகள் போல் !
(குழந்தை பொம்மையை பார்த்து சொல்வது)
தியாவின் பேனா
********************
(விழி ... நிமிர்...நட...)
விளையாட்டுப் பொம்மையை
கைப்பிடித்த சிறு பிஞ்சே
உன் இள வயதில் ஏனம்மா
இந்தத் தலைவிரி கோலம்???
உன் கைப்பிடியின் உறுதியில்
தெரிகிறது உன் ஓர்மம்.
கண்ணே உன் உறவுகள்
எங்கேயம்மா???
ஓஓஓஓஓஓ!!!!
நீ நிற்கும் வீதியிலே
படிந்திருப்பது உன்
உறவுகளின் உதிரம் படிந்த
கறைதானோ???
அடுத்தபலி நீயாகவும் இருக்கலாம்
அதற்குமுன்
விழித்துவிடு கண்மணியே...
நிமிர்த்திவிடு குனிந்ததலை.
பலா பட்டறை
*****************
கையில் இரை இருந்தும்
இருபக்கமும் பல் காட்டும்
மந்தி கூட்டம்
கண்டு
உயிர்குழந்தையுனை
தவிக்கவிட்ட
பெரிய குழந்தைகள் அறியுமோ??
பொம்மை எனினும் பத்திரமாய்
நீ காத்த
உன் கை குழந்தை..
ருத்ர வீணை
****************
ஒதுக்கபட்டவள்
சீவி முடி முடிந்து
சிங்கார சிலை போல
காணும் எவர் மனதும்
கவி பாடு - என தோன்றும்
பாவி எவன் மனதும்
பாசம் வைக்கும் போது - வந்து
வேண்டி தொடர்பறுக்கும்
நேசமறு யோசனையில்
பூசி மொழுகி தினம்
புன்னகையில் நிறுத்திவிட
மூடிக் கிடக்குதொரு
முக்காடு மாயன் - மனத்தில்
தேடி கிடைக்குமொரு
திருநாளில் எனப்பார்த்தால்
மேவி மனமுழுதும்
மெத்தனமே - நிறைந்துவிடும்
காற்றும் நின்றுவிடும்
காலமது வந்துவிடும்
வாடி விழுந்ததலை
விண்நோக்கி நிமிர்ந்துவிட்டால்
தேடி வசைமொழிவேன்
வாயடிக்கும் கூட்டத்தினை
கூடி ஒழிதிடுவேன்
கூறு அற்ற வார்த்தைகளை
நாடி நீ வந்து
பூவுலகில் விழுந்த நொடி
மாறிவிட்டதென்று உன்னை
பெற்ற கை உதறியதால்
காரிருள் கண்மறைத்த
காயமது பேயுனக்கு
நேசி நின் திருவுளத்தை
நின்பால் நானிருப்பேன்
பாடம் இதுவென்று
பொம்மையிடம் சொல்லிவிடு...
அரங்கப்பெருமாள்
*********************
”இயலாமை"
நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.
வெறுக்கும் போது என்னை
அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன.
நான் விரும்பும் அந்தச் சித்திரப் பாவை போல.
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.
எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது
எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என அறிந்ததாலோ என்னவோ?
இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
எண்ணங்கள் கவிழ்ந்து நிற்கின்றன.
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.
வாசகனாய் ஒரு கவிஞன்
பனித்துளி சங்கர்
*******************************
எப்பொழுதோ உன்னை பிரிந்துவிட்டேன்.
இருந்தும் உன் நினைவாக
நீ வாங்கித் தந்த இந்த பொம்மையின்
கரம் பிடிக்கும் பொழுதெல்லாம்
ஏனோ தெரியவில்லை.
எனது விழிகள்
என் அனுமதி இன்றி வெக்கதில்
தானாக தலை குனிந்துகொள்கிறது.
SUFFIX
********
உடைந்த பொம்மை
கிடைத்த்தது வழியில்
பத்திரமாய் என்னிடம்
உடைந்த மனது
குனிந்த தலை
தேற்றிடுவார் யாரோ!!